KARTHIK.K
சிறுகதை வரிசை எண்
# 140
யாத்திரை..
ஏற்கனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி அன்றைய நாளில் வேணி தான் வீராவை தூக்கி வைத்திருந்தாள் . அவளையே யாரேனும் கையில் தூக்கி வைத்து இருந்தாலும் யாரும் பெரிதாய் ஆச்சரியப்பட போவதில்லை ஏனென்றால் அவளும் ஐந்து வயதுகாரிதான்.
மூத்தவள் பேச்சி. அவள் தான் மற்ற இரண்டு பேரையும் வழி நடத்துவாள். அவளுக்கு 10 நாட்கள் முன்பு தான் எட்டாவது வயது பூர்த்தியானது. அதற்காக பெரிதாய் கொண்டாட்டம் எல்லாம் ஒன்றுமில்லை , எல்லா நாளையும் போல் அதுவும் ஒரு நாள் அவ்வளவுதான்.
தினமும் காலையில் செல்லும் யாத்திரைக்காக புறப்பட , குளித்து ஒரு பழைய கெவுனை பேச்சி அணிந்து கொண்டாள் , பாவாடையையும் ஆண் குழந்தைகள் அணியும் உள் பனியனையும் வேணி அணிந்து கொண்டாள் . வீராவுக்காக எந்த உடையும் கிடையாது.
எல்லா நாட்களையும் போல அந்த நாளும் தங்கி இருக்கும் அந்த பிளாட்பாரத்தில் இருந்து கிளம்பும்போது , அந்த செருப்பை யார் போட்டுக் கொள்வது என்ற வாக்குவாதம். வீராவைப் போலவே அந்த செருப்பையும் யார் எப்போது போட வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. நேற்றும் பேச்சி தான் செருப்பு போட்டுக் கொண்டாள். இருந்தும் இன்றும் தான் அக்கா என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவளே போட்டுக் கொண்டாள்.
தங்கியிருக்கும் அந்த பிளாட்பாரத்திலிருந்து புறப்பட்டு நடந்து சென்று கொண்டிருக்கும்போது வழியில் இருக்கும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட பூங்கா ஒன்று இருந்தது. இந்த பூங்காவுக்கு அதிகாலை நேரத்தில் வந்தால் உண்டு கொளுத்த உயிர்கள் உடல் வருந்தாமல் உடற்பயிற்சி செய்வதை காணலாம் .தியானம் என்ற பெயரில் ஏதேதோ செய்யும் சிலவற்றையும் காணலாம்.
ஆனால் இவர்கள் சென்ற நேரம் காலை 11 மணி என்பதால் பெரிதாய் கும்பல் இல்லாமல் வெளிச்சோடி போய் இருந்தது அதைப் பார்த்த வேணி “அக்கா உள்ள போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு போலாந்த” என்று கேட்டாள். பேச்சியும் சரி வா போலாம் என்றாள்.
உள்ளே செல்ல முற்பட்டபோது அந்தப் பூங்கா காவலர் “ஓய் நில்லுங்க” என்றான். வேணி பயந்து விட்டாள் . வேணி முழுவதுமாக இடுப்பை வளைத்து வீராவை தூக்கி வைத்து அவ்வப்போது அவள் மூக்கிலிருந்து வழியும் சளியை துடைத்துக் கொண்டும் வீராவின் முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டும் இருப்பதை பார்த்து சிரித்தான்.
“எங்க இருந்து வரீங்க.. என்ன இந்த நேரத்துல அதுவும். ஸ்கூல் போகலையா” என்று கேட்டான்.
வாயாடி பேச்சி ஸ்கூல்லாம் போகல என்றாள்.
ஏன் என்று கேள்வி எழுப்பினான் அவன்..
போகல அப்பா சேர்க்கல நான் போகல என்றாள்.
அப்படிங்களா மேடம் சரிங்க மேடம் என்றான் அந்தப் பூங்கா காவலன்.
மேடம் என்றதைக் கேட்டு இருவரும் சிரித்தனர் மேடமா ஈஈ.. என்று சிரித்தனர்
சரி உள்ள போங்க. என்றதும் ஓடிச் சென்ற அவர்களிடம் பார்த்து விளையாடனும் கீழே விழுந்துட கூடாது என்று கொஞ்சம் சத்தம் போட்டு கூறினான்.
அங்கிருந்த ஒரு சருக்களை பார்த்ததும் வேணிக்கு அதில் சறுக்கி விளையாட வேண்டும் என்ற ஆசையில் “பேச்சியக்கா தம்பியை கொஞ்சம் பூடியேன் .ஒரே ஒரு வாட்டி இதுல விளையாடிட்டு வரேன்” என்றாள் வேணி.
பேச்சி இவளைப் பார்த்து சிரித்தபடியே சருக்களுக்குப் பின் புறமுள்ள படிக்கட்டில் ஏறி சருக்கினாள். மீண்டும் மீண்டும் அதையே செய்தாள் . பொறுமையை இழந்த வேணி வீராவை நடை பாதையில் போட்டுவிட்டு , முக்காலுக்கு மேல் தண்ணீரும் சில சொட்டு பாலும் சேர்த்து நிரப்பப்பட்ட அந்த பால் டப்பாவை வீராவின் கையில் கொடுத்து விட்டு சருக்கலில் விளையாட சென்று விட்டாள்.
மூன்று முறை கூட சருக்கி முடியாத போதே வீரா அழ தொடங்கி விட்டான் . அழும் சத்தம் கேட்டு என்னமோ ஏதோ என்ற பதட்டத்தில் பூங்கா காவலன் ஓடி வந்தான். வீரா நடைபாதையிலும், வேணி சருக்கல் விளையாடிக் கொண்டும், பேச்சி தூரத்தில் நடனமாடிக் கொண்டே நடந்து கொண்டிருப்பதையும் பார்த்து ஒரு ஆதங்கத்தில் அவர்களை பெத்தவங்களை திட்டி விட்டு , அவன் அறைக்குச் சென்று ஒரு பிஸ்கட் பாக்கெட் எடுத்து வந்து வீராவுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
அதைப் பார்த்த வேணி பக்கத்தில் வந்தாள். அவளுக்கும் இரண்டு பிஸ்கட்டுகள் கொடுத்தான் .அதை குதித்து குதித்து சுற்றி ஒரு நடனமாடிக் கொண்டே சாப்பிட்டாள். சீக்கிரம் தீர்ந்து விடுமோ என்ற பயத்தினாலோ என்னவோ அதையும் அனில் போல கொரித்தாள். அதிலிருந்து ஒரு பிஸ்கட்டை கையில் வாங்கி வைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து பேச்சியும் வந்தாள். சரி கிளம்பு என்றாள் பேச்சி. வேணி வீராவை தூக்கிக்கொண்டு இல்லாத அந்த இடுப்பை வில் போல் வளைத்து இடுப்பில் உட்கார வைத்தாள். பூங்கா காவலரிடம் சொல்லிவிட்டு நடக்க துவங்கினார்கள்.
கொஞ்சம் தூரத்தில் பேச்சியக்கா இந்தா என்று அந்த பிஸ்கட்டை வேணி பேச்சிக்கு கொடுத்தாள். பேச்சி அதை வாங்கி சாப்பிட்டு கொண்டே ஏது என்று கேட்டாள். அந்த பூங்கா கார மாமா கொடுத்தாரு என்றாள் வேணி.
வெயில் பளிச்சுட்டு பொடி சுட ஆரம்பித்தது அவ்வப்போது வழுக்கி கீழே செல்லும் வீராவை கொஞ்சம் தூக்கி தூக்கி இடுப்பில் சரியாக உட்கார வைத்து ஒரு ஒரு அடியையும் சூட்டிற்கு பயந்து பயந்து வைத்தாள்.
அதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே வந்த பேச்சி, வீராவை தன் கையில் கொடுக்கச் சொல்லி கேட்டாள். “இல்ல வேணாம் அப்புறம் நீ என்னைய நாளைக்கு தூக்க சொல்லுவ” என்றாள் வேணி .”இல்ல சொல்ல மாட்டேன் கொஞ்ச தூரம் மட்டும் நான் தூக்கிறேன் குடு” என்றாள் பேச்சி.
“தம்பிய கூட நானே தூக்கிகிறேன் அந்த செருப்பு மட்டும் கொஞ்ச நேரம் தாயேன்” என்று வேணி கூற , பிறகு பேச்சு செருப்பை கழற்றி கொடுத்துவிட்டு வீராவையும் தூக்கிக் கொண்டாள்.
அவர்கள் வந்த சாலையில் சில காரணத்திற்காக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. போவதற்கு இடம் இருந்தால் ஏன் நிற்கப் போகிறார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் பின்னால் நிற்கும் எல்லா வாகனங்களும் ஹாரனை ஒலிக்க விட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்த சத்தத்தில் அங்கு இருந்த எல்லா நாய்களுக்கும் ஏதோ பித்த பிரம்மை பிடித்தது போல அந்த சாலை நடப்பவர்கள் எல்லோரையும் பார்த்தும் குளைத்துக் கொண்டே இருந்தன. அதை பார்த்து பயந்து வேணி பேச்சியின் உடையை பிடித்து ஒரு மாதிரியாக மறைந்து மறைந்து வலதுக்கும் இடதுக்கும் என மாறி மாறி நடந்தாள்.
அந்தக் கடைவீதிகள் நிறைந்த பிரதான சாலையில் நடந்து போகும்போது அந்த கடை வீதியில் இருந்த ஒரு எலக்ட்ரானிக் கடையின் வெளியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு 75 இன்ச் பெரிய டிவியில் கிரிக்கெட் ஓடிக் கொண்டிருப்பதை அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
அது அந்த விளையாட்டு தந்த ஈர்ப்பு இல்லை .அதைப்பற்றி பெரிதாய் தெரிந்து இருக்கவும் வாய்ப்பில்லை .அது அவ்வளவு பெரிய திரையில் அவர்கள் உயர மனிதர்கள் தெளிவாய் தெரிவதை பார்த்து பட்ட ஆச்சரியமாக இருக்கக்கூடும்.
பேச்சியையும்,வேணியையும், பேச்சியின் கையில் வீராவையும் அந்த கடையின் கல்லாப்பெட்டியில் நின்ற ஆள் பார்த்தான். அந்த ஆளின் ஆஜானுபாகுவான உடலும் கிடா மீசையும் பார்த்து கண்டிப்பாக துரத்த போகிறார் என்ற எண்ணத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான்.
இவர்கள் வெளியில் நின்று அந்த டிவியை பார்த்துக் கொண்டிருப்பதை அந்த ஆள் பார்த்துக் கொண்டே இருந்தார். சட்டென அந்த கிரிக்கெட் மாறி கார்ட்டூன் சேனல் ஓடத் துவங்கியது. பேச்சியும் வேணியும் சிரித்துக்கொண்டே அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பேச்சுக்கும் வேணிக்கும் அந்த டிவிக்கும் இடையில் இருந்த கண்ணாடியினால் ஆன அந்த சுவர் போன்ற அமைப்பிற்கு பக்கத்தில் பொருள்கள் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கழட்டி விட்டுச் சென்ற செருப்புகளை அந்தக் கடையில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண் ஒரு பக்கமாக ஒதுங்க வைத்து அந்த இடத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விட்டு சென்றாள். அந்தப் பணிப்பெண் செல்லும்போது பேச்சியையும் வேணியையும் பார்த்து வந்து உட்கார்ந்து பாருங்க என்பது போல் கண்ணால் சமிக்கை காட்டினாள்., ஆனால் , அதை அவள் விருப்பத்தோடு செய்ததாய் தெரியவில்லை.
வேணியும் பேச்சியும் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு வீராவை பேச்சி மடியில் அமர்த்திக் கொண்டும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்க அப்போது அந்த வழியாக ஒரு அம்மா வீராவின் வயது இருக்கும் பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றாள். அந்த குழந்தை ஏதோ ஒரு மிட்டாயை சப்பி சாப்பிட்டுக்கொண்டே செல்வதை வீரா பேச்சியின் மடியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இவர்களை தாண்டி சென்ற போதும் பேச்சியின் உடம்புக்கும் கைக்குமான இடைவெளியில் தலையை சாய்த்தபடி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் .இது எதையும் கண்டு கொள்ளாமல் வேணியும் பேச்சியும் அந்த காட்சியின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.
திடிரென்று நேரமாவதை உணர்ந்த பேச்சிக்கு செல்லும் இடம் ஞாபகம் வரவே “எழுந்துருடி நேரமாச்சு சீக்கிரம் வா” என்று வீராவை தூக்கிக் கொண்டு வேணியை கிளப்பினாள். வேணி கிளம்ப மனமில்லாமல் அந்த டிவியையே பார்த்துக் கொண்டிருந்தாள். நடக்கத் துவங்கிய பின்னும் இடைவெளி விட்டுவிட்டு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இதற்கிடையில் டிவியை பார்த்து வேணியும் பேச்சியும் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்து கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து இருந்த அந்த ஆளின் மீசை அவ்வப்போது வளைந்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் நடப்பதை மட்டுமே மும்மரம் காட்டி நடந்தனர்.
ஒரு வழியாய் யாத்திரையின் முடிவில் அந்த கோவிலை வந்தடைந்தனர் . பேச்சி வேகமாக உள்ளே சென்று விட்டாள். வேணி தான் போட்டிருந்த செருப்பை ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்தாள்.
ஏனென்றால் அந்த செருப்பு தான் அவள் காலுக்கு முதலில் கச்சிதமாய் பொருந்தியது. பல மாதங்களுக்குப் பிறகு அவள் போட்ட செருப்பும் அதுதான் .அதை பேச்சி போட்டு போட்டு இப்போது கொஞ்சம் பெரிதாகிவிட்டது . அந்த செருப்பும் கூட ஒரு நாள் இதே இடத்திற்கு வரும் போது தான் ரோட்டில் ஒரு இடத்தில் கிடந்தது. இதுவும் இல்லை என்றால் இன்னொன்று கிடைக்குமா என்பது சந்தேகமே.
வேணி அந்த செருப்பை மறைத்து வைத்துவிட்டு. கால்களை கழுவிக் கொண்டு உள்ளே சென்றாள். அங்கு ஏற்கனவே முப்பது பேருக்கு மேல் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த வரிசையை பார்த்ததும் உச்சகட்ட பசியில் இரு கைகளையும் இடுப்பில் வைத்து பெருமூச்சு விட்டாள். அந்த பத்து நிமிடத்தை பொறுக்க முடியாத வயிறு குடலை உண்ணத் துவங்கி விட்டிருந்தது.பசி மயக்கம் கண்ணை சொருகியது.
வேணி இங்க வா என்று பேச்சி அவள் பக்கத்தில் வேணியை அழைத்தாள். வேணி பொறுமையாய் நடந்து அவள் பக்கத்தில் சென்றாள். சுற்றி இருந்த சிலர் இவர்களைப் பெற்றோர்களை வசிப்பாடிக் கொண்டிருந்தனர்.
“பெத்துவிட்டு அப்படியே போயிடுதுங்க. எனக்கு என்னன்னு. பாத்துக்க முடியலன்னா என்னத்துக்கு பெத்துக்கணும்” என்று.
அனைவரின் கருத்தும் இதுதான். ஆனால் அவரவர், அவரவர் பாணியில் கூறிக் கொண்டிருந்தனர்.
அப்படி பேசிக் கொண்டிருப்பவர்களை நீங்க ஏன் இங்க வந்து கையேந்தனும் உங்களுக்கு யாரும் இல்லையா என்றால் அவர்கள் சொல்லும் கதைக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இருப்பதில்லை.
ஒரு வழியாக பக்கத்தில் வந்த பேச்சியும் வேணியும் அந்த பாக்குமர தட்டை வாங்கிக்கொண்டு சுடச்சுட இருந்த சாப்பாட்டை வாங்கிய போது சூடு தாங்க முடியாமல் கையை வேக வேகமாக மாற்றி மாற்றி பிடிப்பதை பார்த்து பரிமாறுபவர் “ டேய் தம்பி இன்னும் இரண்டு தட்டு குடு” என்று கேட்டு வாங்கி அந்த தட்டுகளுக்கு அடியில் இன்னொரு தட்டை வைத்து “பத்திரமா கொண்டு போய் உட்கார்ந்து சாப்பிடு குட்டி” என்று சொல்லி அனுப்பினார்.
சூட்டில் இருந்து கிளம்பி ஆவி வீராவின் கண்ணில் பட்டு வீரா கண்ணை கசக்க துவங்கினான். கொஞ்சம் ஆரி மேலே ஏடு போல மாறி இருந்த சோற்றை வலித்து சாப்பிட துவங்கினாள் வேணி. பேச்சி சாப்பாட்டை மைய நசுக்கி குலைத்து வீராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் கொடுத்துக் கொண்டே அவளும் சாப்பிட்டாள்.
பாதி வயிறு நிரம்பியதுமே முகம் பளிச்சிட்டு ஒளிரத் துவங்கியது. ஒரு பருக்கை சோறு இல்லாமல் சாப்பிட்டு முடித்தனர் . சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டு வீராவின் வாயை முகத்தோடு சேர்த்து துடைத்து விட்டாள் பேச்சி.
பேச்சி வைத்திருந்த ஜவ்வுத்தால் பையை எடுத்துக் கொண்டு போய் சோறு போடும் இடத்திற்கு மீண்டும் சென்று இரு பைகளில் வாங்கிக் கொண்டாள். அது இரவுக்கான உணவாக இருக்கலாம்.
வாங்கிக்கொண்டு அங்கிருந்து வந்த வழியிலேயே அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்பாரத்திற்கு சென்றார்கள். காலையில் எப்படி தொடங்கினார்களோ அதே போல் செருப்பை பேச்சியும் வீராவை வேணியும் எடுத்துக் கொண்டனர். பேச்சி அந்த சோறு வாங்கிய பைகளை தூக்கிக்கொண்டு வந்தாள்.ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்படியே நடந்து அந்த பிளாட்பாரத்தின் மிக அருகில் வந்து விட்டனர்.
அன்னைக்கு மட்டும் அப்படி நடக்காம இருந்திருந்தா, நான் என் பொண்டாட்டிய என் உடல் தேவைக்கு தனியா கூப்பிடாம இருந்திருந்தா, எங்கேயும் போகாம எப்பவும் தூங்குற இடத்திலேயே தூங்கி இருந்தா , அந்த காரை ஓட்டி வந்தவன் போதையில் இல்லாம இருந்திருந்தா , தறிகெட்டு வந்த அந்த காரை நான் பார்த்து சுதாரிச்சிருந்தா , இதுல ஒன்னு சரியா நடந்து இருந்தா கூட என் பொண்டாட்டி கண்ணம்மா உயிரோட இருந்திருப்பா . என் காலு ரெண்டும் நல்லா இருந்திருக்கும் . தலைவிதி இது எதுவுமே இல்லாம இந்த நிலைமைக்கு போயிட்டனே என்று ஒரு ஆள் இரண்டு கால்களும் இல்லாமல் அந்த பிளாட்பாரத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தான்.
இப்படி வாழ்பவர்கள் எல்லோரின் நிலையும் மிக மிக மோசமாக தான் உள்ளதா என்ற எண்ணம் தோன்றி மறைவதற்குள்ளேயே வேணி வீராவை தூக்க முடியாமல் தூக்கிப் போய் கொடுத்துவிட்டு அப்பா என்று அந்த ஆளை அணைத்தாள்.
முற்றும்…. கார்த்திக் கிருஷ்ணன்..
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்