k.kannammal sridhar
சிறுகதை வரிசை எண்
# 139
(சிறுகதை)..கோடி சிறகுகள் வேண்டும்
பேருந்து நிறுத்தம்..
‘’இன்னும் பத்து நிமிசத்துல தச்ச நல்லூர் வந்துரும்...அதுக்குள்ள இளநீர் தேவையா’’
கணவனின் கேள்விக்கு பதிலாக முறைத்தாள் முத்துமீனா..
‘’சரி..சரி,,,நெற்றிக் கண் திறந்துடாத...வாங்கிட்டு வரேன்’’
என்றபடி இறங்கிப் போனான் நந்தா..
‘’அந்த பயம் இருக்கட்டும்’’என்றபடி உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள் மீனா...அது அதிகாரத்துக்கானதல்ல..அன்புக்கான அடிமைத்தனம் என்று இருவருக்குமே தெரியும்...மணமாகி நான்கு வருடங்களாகி மழலை பாக்கியம் கிட்டவில்லை எனினும் இந்த அன்புப் பசையே அவர்களை ஈர்த்து வைத்து இருந்தது...மதுரையில் தனி ஜாகை...மீனாட்சி அம்மன் சன்னதியில் பொம்மைகடை வைத்து இருக்கிறான் நந்தா...பண்ணை வீடு தச்சநல்லூர்,,,மாமனார் மாமியார் மச்சினர் ஓரகத்தி அவர்களது இரண்டு பிள்ளைகள் ...பத்தும் பத்தாததுக்கு மாமனாரின் அம்மா பவளக்கொடி ஆச்சி...வீட்டின் புயல் மையம்...
‘’நந்தா....தனிக் குடித்தனம் போட்டா பெத்தவாள வந்து பாக்கப்டாதா...ஒரு நடை வந்துட்டுப் போடா...தேடறது’’அம்மாவின் அழைப்பில் அடுத்த பஸுக்குக் கிளம்பி விட்டான் நந்தா மனைவியுடன்...
மீண்டும் பேருந்து வேகமெடுத்தது...
‘’நந்தா...ஊருக்கு வாசனை உண்டோ’’
‘’¬¬உண்டு ¬¬¬¬¬உணர்ந்தவாளுக்கு’’
‘’ம்ம்...மூக்குலயும் முகத்துலயும் வந்து அறையறது’’ஊர் வந்ததும்
இறங்கினார்கள்...
மூக்கையா வந்து நின்று உடமைகளை வாங்கிக் கொண்டான்...வீடு வந்த னர் ..
‘’வாடா நந்தா...வாம்மா’’
வரவேற்பு மணத்தது...ஆச்சி வந்தாள்...பேச்சே இல்லை..பேரனை உச்சி முகர்ந்தாள்...பேத்தியை திருஷ்டி கழித்தாள்...
‘’ஷேமமா இருக்கேளா’’
‘’ஆமா ஆச்சி...நீங்க எப்பிடி இருக்கேள்’’
‘’இருக்கேன்...நாளையும் பொழுதையும் எண்ணின்டு...
‘’முகம் கைகால் அலம்பிண்டு சாப்பிட உக்காருங்கோ’’
முருங்கைக்காய் சாம்பார்,தக்காளி ரசம்,அவியல், வெண்டைக்காய் பச்சடி,பருப்பு,அப்பளம்,நெல்லிக்காய் ஊறுகாய்,கெட்டித்தயிர்...
வாயும் வயிறும் ..நிறைந்தது...மதியம் உண்ட களைப்பு தீர குட்டித் தூக்கம் போட்டு எழுந்து அமரவும் வீட்டில் சலசலப்பு துவங்கவும் சரியாக இருந்தது...
‘’இல்ல ஆச்சி,,,,வேணும்னு செய்யல...’’
‘’நானும் அதைத்தான் சொல்றேன்...வேண்டாம்னுதான் செய்யல’’
‘’ஐயோ..ஆச்சி...இப்ப வார்த்தை விளையாட்டுக்கு நான் தயாரில்ல...வேலை இருக்கு...அந்தாண்டை தள்ளுங்கோ’’
‘’பார்த்தியாடி அரசி...உன் மாட்டுப் பொண்ணு என்னைய வேலை வெட்டி இல்லாதவள்னு ஜாடை பேசறா’’
‘’நான் ஜாடை பேசலையே...நேராத்தானே சொன்னேன்’’
நல்லரசி கையில் பேரக்குழந்தைகளுக்கு பால் எடுத்துக் கொண்டு மவுனமாய் நகர...
‘’அதானே...நீ என்னிக்கு நியாயம் பேசினே...கள்ள மவுனம் சாதிச்சே காலம் தள்றவாளாச்சே’’
வேகமாய் நடந்த நல்லரசி பால் தம்ளர்களை டங்கென்று ஹால் டேபிளில் வைத்தாள்...புரிந்து கொண்டார் நாவரசன்...
‘’என்ன கலாட்டா’’
‘’ம்ம்...அதுக்கு பஞ்சமாக்கும் உங்க அம்மா இருக்கறச்ச’’
‘’விஷயத்தை சொல்லு’’
‘’உங்க அம்மா புடவை காத்துல முள் செடியில மாட்டிண்டு கிழிஞ்சிடுத்து...அதுக்கு சங்கீதாவுக்கு கிழி விழறது’’
‘’அவோ என்ன செய்வோ’’
‘’புடவையை தோச்சிக் காயப்போட்டது அவதானே’’
‘’சரி’’
‘’சரி இல்லையாம்...செடியாண்ட அவங்க புடவையைக் காயப் போட்டது தப்பாம்...அவளைத் திட்டலேன்னு என் மண்டையும் இடிபடறது’’
கேட்டுக் கொண்டிருந்த முத்து மீனா வாய் விட்டு சிரிக்க...
‘’இப்பிடித்தாண்டியம்மா,,,என் பொழப்பும் சிரிப்பா சிரிக்குது...இந்தம்மா வாயில விழாம எனக்கு நாளும் பொழுதும் நகர மாட்டேங்கறது’’
கையில் காபியுடன் ஹாலுக்கு வந்து அமர்ந்த ஆச்சி சூடு ஆறுவதற்குள் காபியை அண்ணாந்து குடித்து விட்டு...முந்தானையால் வாய் துடைத்தவள்
‘’சர்க்கரை துளி ஜாஸ்தியாப் போயிடுத்து...கிடக்கட்டும்....கேட்டியாடா அரசு...அந்தப் புடவை நம்ப சியாமளா வளைகாப்புக்கு உங்க அத்தை எனக்கு எடுத்துக்குடுத்தது.வெந்தயக் கலர்ல கொம்மங் கரை போட்ட சேலை....இத்தனை காலம் பதவிசா வச்சுண்டு இருந்தேன்...கிழிசல் துணி யாக்கிட்டா உன் மருமக...ஏண்டியம்மா இப்பிடி பண்ணினேன்னு கேட்ட நான் பொல்லாதவளா ஆயிட்டேன்’’
‘’அம்மா,,விடும்மா...வேற எடுத்துக்கலாம்’’
‘’இவாளைப் போல நித்தம் துணிக்கடைக்கு தோப்புகரணம் போடற ஆளா நான்...நல்லது கெட்டதுக்குப் புடவை துணிமணி எடுத்துதானே நமக்குப் பழக்கம்’’
‘’இந்த வேண்டாத பேச்செல்லாம் எதுக்கு..சின்னஜ்சிறுசுகள் ஆசைக்கு எடுத்து உடுத்திண்டு போறதுகள்...கண்டும் காணாமலும் இருங்கோளேன்...எல்லாத்திலையும் மூக்கை நுழைச்சிண்டு’’என்று மாமியாரை வெட்டினாள் நல்லரசி...பெயருக்கு ஏற்றார் போல எல்லோரிடமும் நல்ல பெயர் எடுப்பவள்தான் நல்லரசி......மாமியாரிடம் தவிர...
‘’அப்பிடித்தானே இருக்கேன் ..ஏதும் பேசாம..வாயில மண்ணைப் போட்டுண்டு...அரிசின்னு அள்ளிப் பாப்பாருமில்லை...உமின்னு ஊதிப் பாப்பாருமில்லை...சோத்துக்குக் கேடு..பூமிக்குப் பாரம்’’
‘’அப்பிடிஎல்லாம் இங்க ஒண்ணும் நடந்துடலை...உங்க வாய்க்குத்தான் நாங்கல்லாம் நடுங்கிண்டு கிடக்கறோம்’’
மகளுக்குத் தலை பின்னி விட்டவாறே,மாமியாரின் மாமியாரை வாரினாள் சங்கீதா..மீனாவும் நந்தாவும் ஒருவரையொருவர் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டனர்...ஆபத்பாந்தவனாய் பவளக்கொடி பாட்டியி ன் ஆருயிர்த்தோழி சித்திரைக் கனி ஆச்சி வந்து அழைக்க,
கொண்டையை இறுக்கிப் போட்டவாறு கதையளக்க வாசலுக்கு விரைந்தாள் ஆச்சி...
‘’அப்பாடா....ரெண்டு மணி நேரம் நிம்மதி...பேரன் பேத்தி எடுத்த பின் னாடியும் மாமியாருக்குப் பயந்து நடக்கணும்னு என் தலை எழுத்து...என்னிக்கு விடியுமோ’’என்று புலம்பியவாறு காபி தம்ளர்களை பொறுக்கி எடுத்துக் கொண்டு உள்ளே போன அம்மாவை யோசனையுடன் பார்த்தான் நந்தா..
இரவு படுக்கையில் பதில் கிடைத்தது...
‘’நந்தா..நாம வேணா பவளக்கொடி ஆச்சியை மதுரைக்கு அழைச்சிண்டு போனா என்ன’’
‘’போலாமே...நாலு நாள்ல திரும்ப வரணும்..ஆச்சியைக் கூட்டியாந்து விட’’
‘’இல்ல..நந்தா..ஆச்சி கடைசி காலம் வரை நம்மாத்துலயே இருக்கட்டும்’’
சிரித்தபடி மனைவியின் கன்னத்தைக் கிள்ளியவன்..
‘’ஆசைப்படலாம்..தவறில்லை..பேராசைபடப்டாது...பழம் தின்னு கொட்டை போட்ட எங்கம்மாவே ஆச்சியை சமாளிக்க முடியாம திண்டாடறா.. .அப்பா..உரலுக்கு ஒருபக்கம்..மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடின்னு ஊமையா உக்காண்டிருக்கார்..இதுல நீ’’என்று வாய் பொத்தி சிரித்து அவள் மீதே விழுந்தான் நந்தா..
‘’சார்வாள்...அந்த சாக்குல உங்க வேலையை நடத்தாதீங்கோ....எனக்கு நம்பிக்கையிருக்கு..நீங்க வீட்டுல பெர்மிசன் மத்ரம் வாங்குங்கோ...மத்ததை நான் பார்த்துக்கறேன்...’’
‘’பெர்மிசன்லாம் தேவையில்ல...இன்பர்மேசன் தந்தாப் போரும்...ஏன்னா...அம்மவும் அண்ணியும் எத்தத் தின்னா பித்தம் தெளியும்னு இருக்கறா...’’
‘அப்போ வேலை ஈஸி’’
ஆனால் மறு நாள் காலை நாடு ஹாலில் நந்தா இந்த விஷயத்தை உடைத்த போது அது அத்தனை எளிதாக இருக்கவில்லை...
‘’எங்கம்மாவைப் பார்த்துக்கறது என்னோட கடமை..அதை உன் தலையில சுமத்தறது நியாயமில்ல..’’
‘’வளர்ந்த பிள்ளை பெத்தவாளுக்கு தோள் குடுக்க வேண்டாமா அப்பா’’
‘’கழிஞ்ச காலமெல்லாம் கழிஞ்சுடுத்து...கடைசி கடைசியா பாட்டியை உங்காத்துக்கு அனுப்பி வச்சு நான் பொல்லாப்பு ஏற்கவா’’என்று நொடித்தாள் நல்லரசி...
மாமியாரை ஆகவும் இல்லை..அதற்காக அவள் தள்ளியும் போய் விடக் கூடாது..என்ன ஒரு பாலிசி...மனதுக்குள் வியந்தான் நந்தா..சம்சார சாகரம் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்..
‘’என் தலையும் உருளும்’’—சங்கீதா முகம் சுண்டினாள் ..
‘’பாவம் மீனா...சின்னப் பொண்ணு..அவளால ஒண்டியா பாட்டியை சமாளிக்க முடியாது’’---சங்கர குமார் சங்கடப்பட்டான்...
‘’எல்லாம் கிடக்குது..பாட்டியோட விருப்பத்தக் கேட்டுடுவோம்’’
என்று சொல்லி மீனா வாய் திறக்குமுன் ,கையில் தனது இரண்டு பைகளுடன் புடவையை சரி செய்தவாறு வெளிவந்தாள் பவளக்கொடி பாட்டி...அனைவரும் வாயடைத்துப் போக...
‘’கிளம்பலாண்டியம்மா...’’
‘’அம்மா..அம்மா...அங்கெல்லாம் உனக்கு செட்டாகாது’’
‘’ம்ம்..இங்க மட்டும் ரொம்ப ஆறது பாரு..போடா அந்தப்பக்கம்...மாமியாரும் மருமகளுமா என்னைய தேள் கொட்டறாப்புல கொட்டிண்டு இருக்கா...நீ எல்லாத்தையும் பார்த்துண்டு இடிச்சு வச்ச புளியாட்டம் உக்காண்டுதானே இருக்கே...என் பேரன் கூப்பிடறான்...கிளம்பறேன்’’
‘’இல்லம்மா...உனக்கொண்ணும் வயசு பதினாறு இல்ல...வயசான காலத்துல சொந்த ஊர்ல இருக்கறதுதானே நல்லது’’
‘’நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியறது...மதுரை மண்ணுலதான் மண்டையைப் போடணும்னா எழுத்து இருந்தா மாத்தவா முடியும்...கிளம்புடா..நந்தா’’...’’
அப்புறம் எவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க தைரியம் இல்லை..
மாலை போல மூவரும் மதுரை வந்து சேர்ந்தனர்...ரவா உப்புமா கிளறிக் குடுத்தாள் மீனா...சாப்பிட்டு பிரயாணக் களைப்பில் உறங்கி விட்டாள் பாட்டி...
‘’ஏதோ ஒரு வேகத்துல அழைச்சுண்டு வந்துட்டோம்... நல்லபடியா பார்த்துப்போமா’’—மீனா...
‘’எல்லாம் நடக்கும்...தானும் நிம்மதியில்லாம,இருக்கற வாளையும் நிம்மதியில்லாம பண்ணிண்டு இருக்கா..நாம செஞ்சதுதான் சரி...என்னயக் கவனி..வா’’ என்று மனைவியை அருகில் இழுத்தான் நந்தா...
மறுநாள் காலை நந்தா கடைக்கு கிளம்பி விட ஆச்சியும் பேத்தியும் தனித்து விடப்பட்டார்கள்...
‘’காலை சாப்பாடு முடிஞ்சுடுத்து...மதியத்துக்கு என்ன பண்ணப்போறே’’
‘’யோசிக்கணும் பாட்டி’’
‘’நான் பண்ணட்டுமா’’
‘’நீங்களா’’
‘’ஏண்டிம்மா..அப்பிடி கேக்கறே...நீ அரைச்சுக் கரைச்சுக் குடு...ஏத்தி இறக்கிற மாட்டேன்..நேக்கும் பொழுது போனாப்புல இருக்கும்’’
சம்மதம் சொன்ன மீனா வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி காய் கறிகள் நறுக்கி தேவையான உதவிகளை செய்ய...ஒரு மணி நேரத்தில் மணக்க மணக்க சாதம்,வெண்டைக்காய் சாம்பார்,எலுமிச்சை ரசம்,பாகற்காய் பச்சடி,கோஸ் போரியல் அப்பளம் எல்லாம் ரெடி...மதியம் சாப்பாட்டுக்கு வந்த நந்தா அசந்து விட்டான்...
‘’பாட்டி பண்ணினதா...ருசி நாக்குல ஓட்டறது...’’
உண்மைதான்...சாப்பிட்ட மீனாவுக்கு நம் வீட்டில் நாம் சமைக்கும் பொருட்களை வைத்தா பாட்டி இத்தனை அற்புதமாக சமைத்து இருக்கிறாள்.என்ற வியப்பு....பசியும் ருசியும் போட்டி போட அள்ளி உண்டாள்..காலையில் செய்த மீந்து போன சப்பாத்திகளைக் கொண்டு மாலையில் அருமையான ஸ்நாக் செய்து விட்டாள் பாட்டி ...இதுவே தொடர சமையல் அறை தானாகவே பவளக்கொடி பாட்டியின் கைகளுக்கு சென்று விட,அந்தப் பொறுப்பை சந்தோஷமாக செய்தாள் அவள்..
‘’பாட்டி...அம்மா ஆத்துலயும் இது போல முடிஞ்சதை செஞ்சுண்டு சந்தோஷமாக இருக்கலாமில்லையா..என்னத்துக்கு அத்தனை ஆர்ப்பாட்டம்’’மீனா கேட்க நினைத்த கேள்வியை ஒரு நாள் இரவில் நந்தா கேட்டே விட்டான்...
‘’பேஷா செய்வேனே...இங்க மீனா செய்யறாப்புல சமையல் பண்றவாளை தனியே விட்டு ஒதுங்கி நிக்கணும்..அதை விட்டு லொடுக்கு லொ டுக்குன்னு வந்து யோசனை சொல்றேன் பேர்வழின்னு ஏதானும் குழப்பிடறது..அப்புறம் பாட்டி பதட்டத்துல பதம் தவற விட்டுட்டான்னு என் மேல பழியைத் தூக்கிப் போடறது..அதான் சமையல்ல தலை போடறதே இல்ல’’என்று விளக்கம் வந்தது..
ஒ...ஈகோ இடித்து இருக்கிறது..இல்லையா பின்னே...அவள் அனுபவம் என்ன..அறிவென்ன...
பயந்தது போலலல்லாமல் வாழ்க்கை வண்டி சுமூகமாக ஓட,மீனாவுக்கு ஒரு ஐடியா தோன்றியது....பாட்டியின் கை வண்ணத்தை உலகறிய கொண்டு போனாலென்ன...இப்பொழுத்தான் தொழில் நுட்பம் உதவுமே...தாமதிக்காமல் ஒரு யு டியுப் சேனல் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினாள் மீனா...பாட்டிக்கு விபரங்களை விளக்கினாள் ..
‘’நான் சமையல் பண்றச்சே அதை படம் பிடிச்சு நாலுபேருக்கு போட்டு காண்பிக்கபோறே ...அவ்ளோதானே...செய்யேன்...என்னையக் கட்டையில கொண்டு போட்டு எரிக்கத்தானே போறா..அதுக்கு முன்னால நாலு பேருக்கு எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டுப் போறேனே...நமக்குத் தெரிஞ்ச நல்ல செய்திகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டுட்டுப் போறதுதான் ஜென்ம சாபல்யம்’’
இது போதாதா மீனாவுக்கு...ஜெட் வேகத்தில் வேலைகளைத் தொடங்கினாள்...வீடியோ எடுப்பது,எடிட்டிங்,அப்லோட் என் எல்லாவற்றையும் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்...சேனலுக்கு பெயர் வைக்க வேண்டுமே...
மிக யோசித்து ‘’பவளக் கோடி பதார்த்தங்கள்’’எனப் பெயரிட முடிவு செய்து பாட்டியிடம் சொல்ல...அவள்
‘’என்னடி இது கொடி செடினுட்டு...மாடர்னா ஏதானும் வையேன்’’
பலத்த ஆலோசனைகளுக்குப் பின்னர் ‘’நெல்லை கிச்சன்’’என்று முடிவாயிற்று...முதலில் இனிப்பில் துவங்கலாம் என்பதால் திரட்டுப்பால் செய்து காட்டினாள் பாட்டி...வீடியோ முழுக்க பாட்டியின் கைகள் மட்டுமே தெரியும்...பின்னணியில் மீனாவின் செய்முறை விளக்கம்..வீடியோ முடிவில் பாட்டி காட்சி தந்து டிப்ஸ் தருவாள்...எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் சென்றது வியுஸ்..க்லைக்ஸ் ..சப்ஸ்க்ரைப்...என உற்சாகம் தந்தது..தொடர்ந்து குழந்களுக்கான உணவுகள்,பருவமடைந்த சிறுமிகளுக்கான சத்துணவுகள், கர்ப்பிணிகள்,குடும்பத்தலைவிகள்,முதியோர்,என் தனித் தனி வீடியோக்கள்...பாட்டியின் டிப்ஸ் கேட்பதெற்கென்றே ஒரு கூட்டம் அலைமோதியது..
‘’பாருங்கோ...அம்மினிக் கொழுக்கட்டை எப்பிடி இருக்கணும்னா,புதுப்பொண்ணு மாதிரி மினு மினுன்னு ...கையில அழுத்திப் பார்த்தா அவ கன்னம் போல மென்மையா இருக்கணும்...அதுல கடுகு கறிவேப்பிலை அவ கொஞ்ச நாள் புக்காத்துல ஒட்டாம அலைவாளோ இல்லியோ அது போல அங்கொண்ணும் இங்கொண் ணுமா இருக்கணும்...ஆனா தேங்காய் புருஷன் பெண்டாட்டி போல ஈஷிண்டு இருக்கனும்...அவாளை ஒரு தட்டுல நெறக்க அடுக்கி,சீர்த்தட்டு மாதிரி மேசையில வச்சேள்னா...தட்டு காலி...கூடவே உங்க மாமியாரோட பேரும் காலி...சின்னப் பொண்ணு என்ன அழகா பட்சணம் செஞ்சிருக்காள் னு அந்தப் பெயரை நீங்க தட்டிண்டு போயிடுவேள்..என்ன நாஞ் சொல்றது...புரியறதோன்னோ’’
பாட்டியின் தெளிவான சமையல் குறிப்புகள்,மாறாத அளவுகள்,பிசகாத கணிப்புகள்,மீனாவின் உழைப்பு,ஆர்வம் எல்லாமாக சேர்ந்து குறுகிய காலத்தில் மில்லியன் வியுஸ் கூடவே வருமானமும் கிடைத்தது...’’
‘’போற காலத்துல நேக்கு என்னத்துக்குடி வருமானமும் வெகுமானமும்...பக்கத்துல ஏதானும் குழந்தைகள் ஹோம் இருக்கானு பாரு...நம்ம குடும்பத்துல எல்லாரது பிறந்த நாளைக்கும் பிள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு போட சொல்லி பணமும் விபரங்களும் குடுத்துட்டு வருவோம்...தர்ம்மம் தலை காக்கும்’’
அப்படியே செய்தார்கள்...இப்பொழுது ஊரிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தால் அதனை எடுத்துப் பேசுவதற்குக்கூட பாட்டிக்கு நேரமிருப்பதில்லை...ஓரிரு வார்த்தைகளோடு சரி...வேலை வெட்டி இல்லாத மனம்தானே வம்புக்கு அலைகிறது...ஆயிற்று...ஒரு வருடங்கள் உருண்டோடி விட்டது...
தச்சநல்லூரில் நல்லரசுவின் குடும்பம் பாட்டியை வைத்து பிரபலமாகி விட்டது...
‘’கலக்காறாளே பாட்டி’’
‘’நித்தம் என்ன குழம்பு வைக்கிறதுன்னு யோசிச்சே நமக்கு மண்டை காய்கிறது..பாட்டி வரைடியா அசத்தறாளே’’’
‘’நேந்திரம்பழம் ரெசிபீஸ் போட சொல்லுங்கோளேன்’’
‘’இப்ப நாங்க வேற எந்த சமையல் சேனலும் பார்க்கறதில்ல..ஒன்லி நெல்லை கிச்சன்..அதிலேயே எல்லாமிருக்கே...வேறோண்ணைத் தேடுவானேன்’’
‘’ம்ம்..எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும்..நம்மாத் துலேயும் கிழங்கள் இருக்கே...ஊரை இழுத்து உலையில போட்டுண்டு...’’
நல்லரசு தனது மனைவியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வறுத்து எடுத்தார்..
‘’பார்த்தியாடி...என்னமோ நீ சோறு போடலைன்னா எங்கம்மா பட்டினி கிடந்து போய் சேர்ந்துடுவாள்னு நினைச்சே..அவ இப்ப ஊருக்கே சோறு போட்டுண்டு இருக்கா...கை சுத்தம் வாய் சுத்தம் இருக்கறவா எங்கனாலும் கொடி கட்டிப் பறப்பா...நல்ல குட்டி சுவராப் பார்த்து முட்டிக்கோ...எங் கம்மா கெட்டி..என் மருமக சுட்டி’’’’..’’
‘’இருக்கட்டுமே..நேக்கென்ன..எங்கேயோ நன்னா இருந்தா சரி’’என்று தனது வயிற்று எரிச்சலை சிரமப்பட்டு வெளிக்காட்டாது நகர்ந்தாள் நல்லரசி...ஆனால் ஒரு விடியலில் அவர்களுக்கு இடி போல செய்தி வந்து சேர்ந்தது...பவளக்கொடி பாட்டி காலமாகி விட்டாள் என...வீட்டினரை விட ஊர்க்காரர்கள் அதிகம் கலங்கினார்கள்...தாங்களும் அஞ்சலி செலுத்த வருவோம் என சுமார் ஐம்பது பேர் கிளம்ப..வேறு வழியின்றி ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்தார் நல்லரசு...அனைவரும் மதியம் போல மதுரை வந்து சேர்ந்தனர்..
காவி நிறப் புடவையில் நெற்றிக்கு இட்டு கண்ணாடி போட்டு துளசி மாலையுடன் ஆழ் கடல் அமைதியில் சயனம் கொண்டிருந்தாள் பாட்டி...
.பெண்கள் கட்டி அழ...நல்லரசு அமைதியாக அம்மாவின் தலைமாட்டில் அமர்ந்தார்..
‘’அம்மா மீனா...என்னம்மா நடந்தது’’
‘’நேத்து ராத்திரி வரை நார்மலா தான் பாட்டி இருந்தா...எப்பவும் காலை யில நாலு மணிக்கே எழுந்து அன்னிக்கு செய்ய வேண்டிய ரெசிபியை செஞ்சு பார்ப்பா...அதுக்குள்ளே தயாரிப்பு வேலைகளை செய்வா..அப்படித்தான் எழுந்துண்டா..அஞ்சு மணிக்கு என்னைய எழுப்பி என்னவோ போல இருக்கு..ஒருவாய் காப்பி உங்கையால போட்டுக் குடேன் அப்பிடின்னா...நானும் போட்டு குடுத்தேன்...மடமடன்னு குடிச்சுட்டு எந்தலையில கை வச்சி நீ கோடி வருஷம் நன்னா இருக்கணும் அப்பிடின்னு சொல்லிட்டு என் மடியிலேயே சாஞ்சுட்டா...அவ்ளோதான்..’’என்று சொல்லி அழுதாள் மீனா’’
‘’அழாதம்மா..என் தாய்க்கும் தாய் நீ..அவளோட கடைசி காலத்தை அர்த்தமுள்ளதாகவும் அழகாவும் மாத்திக் குடுத்த மந்திரம் நீ’’என்றார் அழுதார் நல்லரசு...
மாலையில் பாட்டியின் நல்லடக்கத்தில் அவள் சம்பாதித்த நட்புகள்,இல்லக் குழந்தைகள்,குடும்பத்தினர்,ஊர்க்காரர் என் சுமார் ஐநூறு பேர் கலந்து கொள்ள,பவளக்கொடி பாட்டி பிறவிக்கு பெரும்பயன் சேர்த்து விட்டு பெரும் பயணம் மேற்கொண்டாள்...
ஆயிற்று..பாட்டி இறந்து பத்து நாள் காரியமும் முடிந்தது...மீனாதான் துவண்டு தவண்டு விழுகிறாள்...உணவில்லை...உறக்கமும் இல்லை...சங்கீதாவின் அண்ணி நர்ஸ்...அவளே மீனாவைப் பரிசோத்தித்து விட்டு
‘’அழுதது போதும்..எல்லாரும் சிரிங்க...மீனா பிள்ளை யண்டிருக்கா’அனைவரும் மகிழ்ச்சியில் துள்ள,மீனா மாலைக்குள் சிரிக்கும் பவளக் கோடி பாட்டியின் நிழற்படத்தை கைகளால் தொட்டுத் தடவி ஓவென அழுதாள்...
‘’பவளக் கோடி ஆச்சியே பிள்ளையா வந்து பிறக்கப் போறா’’
‘’என்னது..இன்னொரு பவளக் கொடியா’’
கூட்டம் கொக்கரித்து சிரித்தது...
ஆக்கம்
(நிறைவு) கண்ணம்மாள் ஸ்ரீதர்
தூத்துக்குடி. Phone9025205675
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்