logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

KUPPUSAMY N

சிறுகதை வரிசை எண் # 137


மாறாது ஊரே ஒன்று திரண்டு வேடிக்கைப் பார்க்கிறது. எல்லோருடைய கண்களும் இமைக்க மறந்து பானையையே பார்த்துக் கொண்டு இருக்கு. எப்படா இந்தப் பானை சுத்தும் வாயில் சிறு முனுமுனுப்பு, ஆத்தா மகமாயி நல்ல வார்த்த சொல்லு. ஆனியில் மழை வந்தா ஆடியில வெத போடுவோம். பருவம் தவறாம பக்குவமா வெள்ளாம வீடு வரும். பானை சுத்தனும், சுத்தர சுத்துல பானைத் தண்ணி பளீர்னு கொட்டனும். அங்க எல்லோருடைய வேண்டுதலும் இது ஒன்னுதான். இலுப்ப மரத்தடியில ஆண்டுக்கு ஒருமுறை இந்த மழைசடங்கு நடக்கும் மூனுபேர் பானையைக் குனிந்து பிடித்துக் கொள்வார்கள். பானையில மூனு கிணற்று நீர், சில்லறைக் காசுகள், போடப்பட்டு ஆற்றுமணல் மேல் பானையை வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்வார்கள். பானையைப் பிடித்திருக்கும் மூன்று நபர்களும் ஒரே பேரில் இருப்பார்கள், வயதும் கூட ஏறக்குறைய ஒன்றாக இருக்கனும் என்பது ஐதீகம். அந்த சுற்றுவட்டார மக்கள் இந்தச் சடங்கைக் காண ஒன்று கூடி மரத்து நிழலில் வட்டமாக நின்று விடுவார்கள். இளவட்டங்கள் சிலர் மரத்து மேல ஏறி நின்னு பார்ப்பாங்க. ஊர் நாட்டாமை எல்லா நடைமுறைகளையும் முன்ன நின்னு பார்த்து பரபரப்பாக செய்துகிட்டு இருந்தாரு. அந்த நேரத்தில் பச்சையப்பன் வந்தார் என்ன நாட்டாமை கோயில் கதவ திறந்து பூசையைத் தொடங்கலாமா என்றார். தொடங்க உங்கள எதிர்ப்பார்த்துத்தான் இத்தன நேரம் காத்திட்டு இருக்கோம். சாவியக் குடுங்க என்று கையை நீட்டினார். பச்சையப்பன் தனது மடியில் கை வைத்து அட நா வீட்டுக்குப் போவல… வயக் காட்டுல தண்ணீர் பாய்ச்சுட்டு அப்படியே இங்க வந்துட்டன். யாராவது வீட்டுக்கு வேகமா போயி சாவி வாங்கியாரச் சொல்லுங்க. ஏம்மா மகேஸ்வரி நீ போனா எடுத்துட்டு வந்துரலாம். சாவி டேபிள் மேலேதான் இருக்கு ஓட்டமா போயி வரியா… சரிங்க மாமா… நான் உங்க தம்பியையும் கூட்டி போரேன் அவரு வண்டியில போனா இன்னும் சீக்கிரமா… வந்துரலாம்… அதுவும் சரிதான். முனியா செத்த வண்டியில உம் பொண்டாட்டியும் நீயும் போயி சாவிய வாங்கியாந்துருங்க… அண்ணி இல்லாகாட்டி டேபிள் மேல தான் இருக்கும், நீங்களே வீட்ட தொறந்து எடுத்துட்டு வாங்க சீக்கிரம். முனியனும் மகேஸ்வரியும், பச்சையப்பன் வீட்டு கூட்டாளிகள் வெளியூரில் இருந்து கை குழந்தை கௌதமை தூக்கிக் கொண்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் தான். சொந்த அண்ணன் தம்பி போல் முறை வைத்து பேசி பழகி வருகிறார்கள். கௌதம் பெங்களுரில் இப்போது வேலை பார்க்கிறான். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவான். முனியன் மகேஸ்வரி இருவரும் பச்சையப்பன் வீட்டிற்குப் பக்கத்தில் புதிதாக மாடி வீடு கட்டிக் கொண்டு வசதியாக வாழ்கிறார்கள். பச்சையப்பன் வீட்டிற்குச் சொந்தமான நிலத்தில் வேலை பார்த்தே அவர்கள் தங்கள் வாழ்நாளை நகர்த்திக் கொண்டார்கள். கௌதம் கூட பெரியப்பா, பெரியம்மா என்று முறை வைத்து அழைப்பதும், குருமூர்த்தி பாலச்சந்திரனை அண்ணன்கள் என்று கூப்பிடுவதும் வழக்கமானது. குருமூர்த்தி, பாலச்சந்திரன் இருவரும் பச்சையப்பன் பிள்ளைகள் நன்றாகப் படித்துவிட்டு அவர்கள் சென்னையில் வேலை பார்க்கிறார்கள். முனியன் வண்டி விரைந்து வந்து வீட்டின் அருகே நின்றது. வீடு திறந்துதான் கிடந்தது ஆனால் யாருமே இல்லை. குரல் கொடுத்தார்கள் அக்கா… அக்கா… என்று தோட்டத்துப் பக்கம் இருந்து அஞ்சலையின் குரல். மகேசு குளிச்சுட்டு வந்துடரேன் நீ போ… பின்னாடி வரேன். இல்லக்கா… மாமா சாவிய வாங்கியார சொன்னாங்க… ஓ… அதுவா… டேபிள் மேல இருக்கா… பாரு… இருந்தா எடுத்துட்டுப் போ…. சரிக்கா…. டேபிள் மேல பார்த்தாள் சாவி இருந்தது. எடுத்துக் கொண்டு திரும்ப மனம் இல்லாமல் நின்றாள். அஞ்சலையின் கழுத்து செயின் காசுமாலை ரெண்டும் கூடவே இருந்தது… அதைப்பார்த்ததும் அவளது கை அவளையும் மீறி அதை எடுத்து மடியில் மறைத்துக் கொண்டது. ஆனால் கால்கள் நகரவில்லை. மனம் மட்டும் தேள் கொட்டிய குரங்கு போல குதித்தது. இந்த உலகத்தில் யாருதான் உத்தமர்கள் வாய்ப்பு கிடைக்காதவரை எல்லோரும் நல்லவர்கள். வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அதுதான் வளர்ச்சி… அப்படிப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் அவர்கள் எப்படி முன்னேற முடியும்… என்று கணக்குப் போட்டாள்… திரும்பி நடந்தாள்… முனியன் வண்டியைக் கிளப்பினான்… வண்டி கூட்டத்தை நெருங்கும் போது சொன்னாள். ஏங்க… நான் சாவி எடுக்கும் பொது கூடவே… அஞ்சலையோட காசுமால செயின் ரெண்டையும் சேர்த்து எடுத்து வந்துட்டேன்… ஓ… அப்படியா… சரிசரி விடு… வெளிய காட்டிக்காத எவன் நம்ம கேக்கப் போறான்… குளித்துவிட்டு வந்த அஞ்சலை நகைகளைக் காணாமல் தவித்தாள்…! செய்வதறியாது ஓட்டமும் ஒரு நடையுமாக தாவித் தாவி இலுப்பை மரத்தடிக்கு வந்தாள்… அவள் பச்சையப்பனைக் கூட பார்க்கவில்லை மகேஸ்வரியிடம் தான் கேட்டாள் என்ன பழக்கம் இது இத்தன காலம் இல்லாம, நாங்க என்ன அப்புடியா உன்ன நடத்தினோம்… கூட பொறந்த பொறப்பா தான பார்த்துக்கிட்டோம். வேலக்காரங்கள எங்க வைக்கனுமோ அங்க வைக்கனும்னு காட்டிப்புட்டிங்க. மகேஸ்வரிக்கு கோவம் பீறிட்டு வந்தது. என்னைத் திருடினு சொல்லறயா என்று கத்தி கூப்பாடு போட்டாள். அவ்வளவுதான், ஊரார் சுதாரித்துக் கொண்டார்கள்… ஓ…ஓ… அப்படியா!... அஞ்சலை எதுவுமே புரியாம… ஏதோ! பேசுதேனு நாங்க பார்த்தோம்… நீயாவே திருடி என்று சத்தம் போடுற என்ன? அஞ்சல நடந்தது மரகதத்தின் வார்த்தைகள் கூட்டத்தைக் கவர்ந்தது. என்னோட காசுமாலை, செயினு டேபிள் மேல கழட்டி வச்சிட்டுக் குளிக்கப் போனேன். இடையில வந்தவ இவ மட்டும்தான் இப்பக் காணோம்… மகேஸ்வரி கூச்சலிட்டாள். என்னம்மா இது வீடு தொறந்து கெடந்தா… யாராவது எடுத்துப் போவ மாட்டாங்களா… இத பாரு… இங்க அந்தப் பழக்கம் யாருக்கும் கெடையாது. நீ எடுக்கலனு சொல்லு ஆனா மத்தவங்க மேல பழி போடாத. அதற்குள் யாரோ போலிசுக்கு சொல்லி விட போலிசு வந்தது மகேஸ்வரி மறைத்து வைத்திருந்த நகைகள் பிடிபட்டன. அவளும் முனியனும் கையும் களவுமாகப் பிடிபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டனர். விசயம் கேள்விப்பட்ட கௌதம் கடுங்கோபத்தோட ஊருக்கு வந்தான். வரும்போது தான் பணியாற்றும் கம்பெனியில் இருந்து ஆசிட் பாட்டிலையும் ஒன்று எடுத்து வந்தான். தன் தாயையும், தகப்பனையும் போலிசில் பிடித்துக் கொடுத்தவர்கள் நன்றி மறந்தவர்கள் எத்தனை ஆண்டு காலம் இவர்களுக்கு இருவரும் உழைத்துக் கொட்டினார்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு போலிசில் பிடித்துக் கொடுக்க எப்படி மனசு வந்தது. கல்நெஞ்சம் படைத்தவர்கள். இனி அவர்களது நெஞ்சை இந்த ஆசிட் வீசி கரைக்கிறேன் பாரு. அவங்க ஓடம்பே! இந்த ஆசிட்ல ஒன்னுமில்லாம ஆகிடும். அவ்வளவு வீரியம். இருங்க இதோ! வர்றேன். சிதைச்சுப்புடறேன் உங்களை என்று பஸ்ல உறங்காமலேயே கருகினான் கௌதம். விடியற்காலை ஊருக்கு வந்து சேர்ந்தான். ஊரில் அவ்வளவாக இன்னும் யாரும் எழுந்து வெளியில் வரவில்லை. ஒன்று இரண்டு பேர்தான் எழுந்து நடமாடினார்கள்… பெண்கள் சிலர் மாட்டு சாணத்தைக் குழைத்து வாசலில் தெளித்துக் கொண்டு இருந்தார்கள். காலை நேரத்தில் இளங்காற்றில் அந்த மனம் கிராமத்து வாசத்தை எங்கும் பரப்பியது. கருக்கலில் தென்பட்ட கௌதமை ஓரிருவர் அடையாளம் கண்டு பேசினார்கள். அவனிடம் வெளிப்படையாகவே சிலர் என்னா கௌதமு ரெண்டுபேரும் இப்படி செய்யலாமா? என்றனர்… அந்த வார்த்தைகள் அவனை இன்னும் கோபப்படுத்தியது. அவனைப் பொறுத்தவரை அந்த இருவர் பச்சையப்பனும் அஞ்சலையும்தான். இரவு முழுவதும் உறங்காது இருந்த மயக்கமும் ஊரார் வார்த்தைகளும் கௌதமை வெறிக்கொண்டு நடக்கச் செய்தன. நேரே பச்சையப்பன் வீட்டிற்குச் சென்ற கௌதம் உறங்கி எழ ஆயத்தமாகிக் கொண்டிருந்த அஞ்சலை, பச்சையப்பன் இருவர் மீதும் தன் கையில் வைத்திருந்த ஆசிட்டை வீசினான். உட்காந்திருந்த அஞ்சலை மீது அதிக ஆசிட் பட்டது. அவள் அருகில் படுத்திருந்த பச்சையப்பனுக்குக் கொஞ்சம் குறைவாகவே பட்டது. ஆனால் இருவரும் அலறிக் கத்தினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கௌதம் ஓடி விட்டான். அஞ்சலையின் முகம், கழுத்து, காது, தலைமயிர் என எல்லாம் வெந்துக் கருகிப்போனது. அவள் எச்சில் விழுங்கவும், மூச்சுவிடவும் கூட முடியாமல் தவித்தாள்… பிரசவ வலியைத் தவிர வேறொரு வலியை அவள் கண்டதில்லை, திருமணம் ஆன நாளிலிருந்து… இப்போது இது என்ன வலியா? இல்லை… இல்லை… எரிச்சல்… அதைவிட வேறு ஏதாவது வார்த்தை உண்டா? அவளால் அழமுடியவில்லை… எதுவுமே முடியவில்லை… பச்சையப்பன் மார்பினில் ஆசிட் பட்டதும், அது கொப்புளம் கொப்புளமாகத் திரண்டது நரம்புகளில் சுண்டி இழுப்பது போன்ற வலி, காற்றுப்பட்டால் கூட எரிச்சல் அதிகரிக்கின்றது. காலை நேரத்துக் குறிர்காற்று அவரை சுண்ணாம்பு சூளையில் சுட்டது… ஊரார்தான் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார்கள். சிகிச்சைப் பலனின்றி முதல்நாளே இறந்து போனாள் அஞ்சலை… பச்சையப்பன் உயிருக்குச் சேதமில்லை, பிழைத்துக் கொண்டார். குருமூர்த்தியும், பாலசந்திரனும் ஓடி வந்தார்கள். பெற்ற தாயிக்காக அழுதார்களா… தந்தைக்கு அழுதார்களா… அழுதார்கள். தாயிக்குக் கடமை முடித்து பச்சையப்பனை மேல் சசிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துப் போனார்கள். (போலீஸ் கௌதமைத் தேடியது) அவனன் வேலை பார்த்த பெங்களுரூ கம்பெனிக்குக் கூட சென்று விசாரித்துப் பார்த்தர்கள். அவன் அங்கு கூட வரவில்லை. போலிசுக்குப் பயந்தோ! பிழைப்புத் தேடியோ அவன் எங்கோ போய்விட்டான். அவன் மனதிற்கோ, அறிவுக்கோ உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லை. அவனைப் பொருத்த அளவில் அவன் செய்தது சரிதான். தன் தாய் தந்தையைக் காட்டிக் கொடுத்த கல்நெஞ்சம் படைத்தவர்களைச் சிதைத்து விட்டோம். அந்த பழிவாங்கும் குணம் பரவசம் ஆனது. அடுத்தது என்ன? என்பது பற்றி அவன் நினைக்கவில்லை… ஓடினான்… ஓடினான்… உணர்ச்சிப் பெருக்கில்… ஓடினான்… எங்கு செல்கிறோம்… ஏன் செல்கிறோம்… பயந்தா… இல்லை இல்லை… வேறு…! நாம் நினைத்தது நடந்துவிட்டது. அதுபோதும்… என்ன நடந்து விட்டது. ஆசிட் வீசிவிட்டோம்… வலியில் அவர்கள் இருவருமே துடித்தார்கள்… அலறினார்கள்… அப்படி ஒரு அலறலை நாம் கேட்டதில்லை அது ஒரு மரண ஓலம்…அதைவிட பெரிது… உடலின் உறுப்புகள் எல்லாம் ஒன்று கூடி ஓலமிட்டது அதைக் கேட்டாகிவிட்டது. அது போதும்…! கௌதம்! கௌதம் கௌதம்! அவனா! அவனா! இப்படிச் செய்தான். அடப்பாவி! ஊரெல்லாம் இதே பேச்சு.! ********* வருசம் ஒன்று ஆகிவிட்டது. பச்சையப்பன் சென்னையிலேயே இருந்துவிட்டார். இந்த ஆண்டு ஊர் மழைத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்று ஊரார் பல போர் போன் செய்தார்கள். அஞ்சலைக்கும் தெவசம் கும்பிட வேண்டும். ஊருக்குப் போய்வர பச்சையப்பன் ஆசைப்பட்டார். குருமூர்த்தி பாலச்சந்தர் இருவருமே ஒப்புக் கொண்டார்கள். சரிப்பா… உங்க விருப்பம் எதுவோ அது போலவே செய்யலாம். அம்மா தெவசத்துக்கு ஊரில் உள்ள சனங்களுக்குச் சோறு போடனும். எப்போதும் பல பேருக்குப் பசியாத்திப் பழக்கப்பட்டவங்க! அவங்க நினைவு நாள்ல அத செய்யனும். குருமூர்த்தி உணர்ச்சிவசப்பட்டான். மூவரும் ஊருக்குப் போனார்கள். வீட்டிற்குப் போவாமல் நேரே அஞ்சலையைப் புதைத்த இடத்திற்குச் சென்று வழிபட்டார்கள். பிறகு சிறைசாலைக்குச் சென்று முனியனையும், மகேஸ்வரியையும் பார்த்து உங்களை ஜாமீனில் எடுக்க ஏற்பாடு செய்திருக்கு. நாளைக்கு நீங்க வெளிய வந்துடலாம். அம்மாவுக்கு தெவசம் அதுல கட்டாயம் நீங்க வந்து கலந்துக்கனும். அங்கு சாப்பிடனும் சித்தி என்று பாலச்சந்தர் மகேஸ்வரியிடம் கூறினான்… மூவரும் புறப்பட்டு ஊரின் மாரியம்மன் கோயில் அருகே வந்தனர். சொந்தக் காரில்தான் மூவரும் வந்தார்கள். சிவப்பு காலர் கார். நேரே வந்து இலுப்பைப் மரத்து நிழலில் நின்றது. விசயம் தெரிந்து எல்லோரும் ஓடி வந்தார்கள். அண்ணே நல்லா இருக்கீங்களா! மாமா எப்படி இருக்கீங்க என்று ஆளாளுக்கு முறை வைத்து விசாரித்தார்கள். பச்சையப்பன் ஊராரின் வார்த்தைக்கு சிரித்தவாரே! எல்லோருக்கும் பதில் சொன்னார். முகத்திலும் மார்பிலும் ஆசிட் பட்ட ரணம் தழும்பேரி இருந்தது. சிரிப்பில் தெரியாத தழும்பு குரலில் தெரிந்தது. குரல் சிலபோது கம்பியது. அங்கிருந்து புறப்பட்டார்கள். வீட்டில் பழைய நினைவுகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. அஞ்சலை! அஞ்சலை! வாய்விட்டு கூவினார். பிள்ளைகள் ஓடி வந்து பிடித்துக் கொண்டார்கள். அப்பா! அப்பா… என்ன ஆனது ம்… வாங்க படுங்க… என்று இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டார்கள். இரவில் உறக்கம் வரவில்லை… பழைய நினைவுகள் வந்து வந்து நிம்மதியைக் குலைத்தது. அந்த இரவு அவர்களுக்கு மிக நீண்டதாய் இருந்தது. விடிந்ததும் சிறைச் சாலைக்குச் சென்று முனியனையும் மகேஸ்வரியையும் முறைப்படி அழைத்து வந்தார்கள். அவர்கள் எல்லோரும் இலுப்பை மரத்தடிக்குத்தான் முதலில் வந்தார்கள். மழைச் சடங்கு தொடங்கி பம்பை இசையோடு உரத்தக் குரலில் பாடினார்கள். பானையைப் பிடித்து இருந்த மூவரும் சுற்றி வந்து விழுந்தார்கள். பச்சையப்பன் பாடத்தான் முன்வந்தார். ஆனால் முடியவில்லை. ஆதலால் மனசில் உள்ளதைப் பேசினார். இந்த காசுமாலை, கழுத்துச் செயின் ரெண்டையும் மகேஸ்வரி எடுத்துக்கிடட்டும்… என்று கோயில் மேடை மீது வைத்தார். என்னோட வீட்டக்கூட அவங்க பராமறிச்சு வரட்டும். நான் சென்னைக்குப் போறேன் பிள்ளைகளோட இருந்துக்கறேன் என்று கூறிவிட்டு… இன்னைக்கு எல்லாரும் இந்தச் சடங்கு முடிந்து இங்கேயே சாப்பிட்டு பசியாறிப் போகணும். இது என்னோட, எங்க பிள்ளைகளோட வேண்டுதல் என்று கையெடுத்துக் கும்பிட்டார். கூட்டத்தில் சலசலப்பும்… ஒருவித தவிப்பும் ஒரு சேர இருந்தது. இலை போடப்பட்டது. வரிசை வரிசையாக ஆண்கள் பெண்கள் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்… முனியன் மகேஸ்வரி இருவருமே சாப்பிட அமர்ந்தார்கள். ஆனால் சாப்பிட முடியாமல் தவித்தார்கள். ஜெயிலில் தான் உணவு பிடிக்கவில்லை. இங்குமா… இல்லை இல்லை உடல் பசியை விட மனசாட்சி பெரிது. அது எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். காலம் தான் இதை மறக்கச் செய்யனும், மறக்குமா! நினைவுகளில் தேங்கியது மாறுமா! கையில் உணவைப் பிசைந்தாள் மகேஸ்வரி… கைக்குழந்தையோடு பிழைப்புத் தேடி வந்த நினைவு… அஞ்சலை ஆசையோடு வாம்மா! யாரு நீ… பசியாரு என்று சோறு போட்டாளே அந்த நினைவு வந்தது… சோற்றை வாயில் வைக்க முடியாமல் தவித்தாள். இடது கை மட்டும் அவளின் மடியைப் பாதுகாப்போடு பிடித்திருந்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • P.gurumoorthi Avatar
    P.gurumoorthi - 1 year ago
    சிறுகதை இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்த உங்கள் படைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

  • Kisoth Kumar Avatar
    Kisoth Kumar - 1 year ago
    அருமையான கதை தொகுப்பு ஐயா..........!!!