அருணன் (அருணன் கபிலன்)
சிறுகதை வரிசை எண்
# 136
கர்மயோகம்
மாயர்மாமாவை உங்களுக்குத் தெரியுமா? எங்கள் ஊரிலே சிறுபிள்ளைகூட மாயர்மாமாவை அடையாளம் காட்டிவிடும்.. ஆறடிக்குக் குறையாத ஓங்குதாங்கு. கோயில் கருவறை வாசல் துவாரபாலகர்கள் மாதிரியான உடற்கட்டு. கைகள் பீமனின் கதாயுதத்தைப்போலப் பெருத்து இறுகிப்போய் இருக்கும். செம்மண் நிறத்தில் பளிச்சென்று இருப்பார். நெற்றியில் ஒருசிறுகோடாகத் திருமண் தீற்றப்பெற்றிருக்கும். எப்போதும் வெள்ளையாடைதான். தும்பைப்பூ நிறத்தில் மின்னும் அந்தஆடைகள் பார்ப்பவர்களின் கண்களைப் பறிக்கிற வெளிச்சமாய் இருக்கும். அவருடைய உடையில் ஒருசிறுதுளிகூட வேறுஎந்நிறமும் இருக்காது. அளந்து நறுக்கிய அழகான மீசை. கண்கள் எப்போதும் கோவைப்பழத்தைப்போலச் சிவந்துதான் இருக்கும். தடித்துத்தொங்கும் பெரியஉதட்டில் ஒருவசீகரப்புன்னகை ஒட்டியிருக்கும்.
யாரையும் உறவுமுறை வைத்து அழைப்பதுதான் எங்கள் ஊர் வழக்கம். சாதியோ, மதமோ எந்தத்தடையும் கிடையாது. .எல்லாருக்குள்ளும் ஏதோஓர்உறவைத் தலைமுறையாகத் தொடர்ந்துவருகிற பண்பாடு எங்கள் ஊருக்குஉண்டு. தாத்தாகாலத்திலிருந்தே – ஏன் அதற்கும்முன்பிருந்தே மாயர்மாமாவீடு எங்கள் வீட்டுக்கு மாமன்மச்சான் உறவாக வளர்ந்துவந்திருக்கிறது. திருவிழா, பண்டிகைக்காலங்களில் அந்த உறவின் அந்நியோன்யம் புலப்படும். மாமா வீட்டிலிருந்து பொங்கல் சீர்ப்பொருள்களாக அரிசியும் பனைவெல்லமும் கரும்பும் ஒவ்வோராண்டும் வந்துவிடும். அதுபோல தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் எங்கள் வீடுகளில் செய்யப்படும் பண்டங்களை நான்தான் மாமா வீட்டில் கொடுத்துவிட்டு வருவேன்.
மாயர் மாமா வீடு காட்டுக்குள் அடர்ந்து கிடக்கும் ஒரு பூஞ்சோலை. பகல் வேளைகளில்கூட அங்கே வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும். மாமா வீட்டிற்குப்போகிற ஒற்றையடிப் பாதையில் பாம்புகள் சர்வசாதாரணமாகச் சுற்றித்திரியும். தெருவிளக்கு வசதிகள் இல்லாத அந்தக்காலத்தில் அந்தஒற்றையடிப்பாதையில் இரவுநேரத்தில் பெரியவர்களே போகஅஞ்சுவார்கள். ஆனால் எனக்கு அப்படியில்லை. மாயர்மாமா வீட்டுக்குப்போகவேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் தயாராக இருப்பேன். மாமாவுக்கும் அத்தைக்கும் என்மீது அளவுகடந்த பிரியம்.
ஒற்றையடிப்பாதை முடிந்து ஒருபெரிய பொட்டல்வெளியில் மணல்நிறைந்துகிடக்கும். கடைசியில் ஓர்அடுக்குமாளிகைபோல அமைந்திருந்தது மாயர் மாமாவின் வீடு. பொட்டலுக்கு வடப்பக்கம் பெரிய ஆட்டுப்பட்டி. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் சத்தமெழுப்பிக்கொண்டே இருக்கும். தெற்குப்பக்கக் கொட்டிலில் ஆடுகளுக்கான உணவாக மலைபோல இலை, தழைகள். அவற்றிலிருந்து எழுகிற மூலிகைவாசமும், ஆடுகளின் பிலுக்கைகளில் இருந்தெழும் மருந்துவாசனையும் மூக்கைக் குடைந்துவிடும். எனக்கு அந்த வாசம் ரொம்பவே பிடிக்கும். பொட்டலுக்குள் காலடி எடுத்துவைக்கிறபோதே அழைப்புமணியைப்போல ஏழெட்டுநாய்களின் குரைப்பொலி கேட்கத்தொடங்கிவிடும். அதில் அன்றைக்குக் காவல் பொறுப்பிலிருக்கிற இரண்டு நாய்கள் துள்ளியபடி பாய்ந்தோடிவரும். தெரிந்தவர்களுக்கு வரவேற்பும் தெரியாதவர்களுக்கு எச்சரிக்கையுமாக அந்த நாய்கள் சூழ்ந்து கொள்ளும்.
குரைப்பொலி கேட்டவுடனேயே யாரேனுமொருவர் வீட்டிலிருந்து வெளியில் வந்துவிடுவார்கள். மாயர் மாமா மனசைப்போலவே குடும்பமும் ரொம்பப்பெரியதுதான். ஆறுபிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்த இன்னும்சில சொந்தங்களும் அந்தவீட்டில் வசித்து வந்தார்கள். அதுபோகப் பண்ணையாட்கள் சிலரும் தெற்குப்பக்கத்துக் கொட்டிலுக்கு அருகில் குடிசை போட்டுக்கொண்டு குடியிருந்தார்கள்.
விழாக்காலத்து இனிப்புப் பண்டப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு மாயர்மாமா வீட்டுக்குக் குஷியாகக் கிளம்பிவிடுவேன். பொட்டலின் ஓரத்தில் என்னைப்பார்த்தவுடன் நாய்கள் துள்ளிக்கொண்டு ஓடிவரும். அவற்றிற்காகவே அம்மாவிடம் கெஞ்சிக்கேட்டு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டையும் கொண்டு வருவேன். அதனால் நாய்களுக்கு என்வருகை சந்தோஷமளிக்கும்.
அதனையும் முந்திக்கொண்டு மாயர் மாமாவின் குரல் ஒலிக்கும். ‘ஏலேய் கிறுக்காயி. யாரு வந்திருக்காகன்னு பாரு. ஒங்கண்ணன் மகன் எம்மருகமப்புள்ள பண்டங்கொண்டு வந்திருக்காரு போலருக்கு. போயிக்கூட்டியா’ என்று மனைவியை - விசாலாட்சி அத்தையை நோக்கிக் கூவுவார்.
அவர் சொல்லி முடிப்பதற்குள் அத்தை தழுவிக்கொள்ளுவார். ‘வாங்கய்யா ராசா… எங்கண்ணன் பெத்தசெல்லமே’ என்று உச்சிமோந்து முத்தங்கொடுப்பாள். அத்தையிடமிருந்து வருகிற அற்புதவாசனை, அம்மாவிடம்கூட அனுபவிக்காத சுகமானது அது. காதுகளில் பெரிய தண்டட்டி தொங்கத் தொங்கக் கழுத்தை ஆட்டிஆட்டிச் சாலாட்சி அத்தை பேசுகிற தோரணையே நம்மை மயக்கும்.
அதற்கப்புறம் மச்சான்கள், மாயர்மாமா வீட்டுப் பெண்கள், பண்ணையாட்கள் என எல்லாருமேவந்து குழுமிவிடுவார்கள். மாமா வெளியில் கிளம்பினால்தான் வேட்டிசட்டை உடுத்துவார். வீட்டிலிருக்கிறவேளைகளில் ஒரு பெரியதுண்டைக் கோவணம்போலக் கட்டிக்கொண்டு வேலைகள் செய்வார். தலையில் பெரியஉருமால் இருக்கும். காந்தித்தாத்தா ஒரு படத்தில் கையில் தடியோடு அப்படித்தானே காட்சியளிப்பார்.
வீட்டுக்குத் திரும்புகிறவேளையில் பண்டங்கள் கொண்டுபோன பையில் தேங்காய், பழங்கள், வேர்க்கடலை என என்னென்ன விளைந்திருக்குமோ அத்தனையும் நிரம்பியிருக்கும். பை மட்டுமா மனசுந்தானே….
குட்டியாடுகளைக் கண்டால் எனக்கு ரொம்பப்பிடிக்கும். பொசுபொசுவென்று ஒரு மழலையைப்போலவந்து நம்மை ஒட்டியுராசுகிற சுகத்தை அனுபவித்தர்களுக்கே புரியும். தன்னுடைய சிறுநாக்கை வெளியேதள்ளி கண்கள் பிதுங்கும்படி சன்னமான குரலில் அது எழுப்பும் ஒலியை எந்தஇசைக்கருவியும் அத்தனை எளிதாய்த்தந்துவிடமுடியாது. மாயர்மாமா வீட்டுக்குப்போகிற சமயங்களிலெல்லாம் புதிதாய்ப்போட்ட குட்டிகளைத் தூக்கிக்கொஞ்சுவது வழக்கம். நான் தேடுவதைப் பார்த்ததுமே செல்வம்மச்சான், ‘இந்தா மாப்ளே இது போனவாரம் போட்ட குட்டி‘ என்று அள்ளிவந்து கைகளில் தந்துவிடுவார். கூடவே நாய்களும் சேர்ந்துகொள்ள எத்தனை சுகமாக இருக்கும் அந்த விளையாட்டு? வீடென்றால் அப்படியல்லவா இருக்கவேண்டும். வெறும் மனிதர்கள் மட்டும் நிறைந்தவீட்டை அதனாலேயே எனக்குப் பிடிப்பதில்லை. ஆடு, மாடு, கோழி, நாய், பூனை என்று சகல ஜீவராசிகளும் இருந்தால்தானே நல்ல வசிப்பிடம்? நான் பார்த்த வேறுபல வீடுகளிலும் இந்தஅமைப்புதான் என்றாலும் எங்கள் வீட்டிலோ எங்கள் சுற்றத்தார் வீட்டிலோ அந்த மாதிரியான அமைப்புமுறை இல்லாதது இன்றைக்கும் வருத்தமாகவே உள்ளது.
மாயர்மாமா ஆடுகளை வளர்ப்பவர் என்றுமட்டும் நினைக்காதீர்கள். அவருக்கு முக்கியத்தொழிலே வேறு. ஊருக்கு நடுவில் இருக்கிற பள்ளிவாசல் சுவரையொட்டி தென்னந்தட்டி வேய்ந்த ஓர் குடிசை போலான அமைப்பிலிருக்கும் கசாப்புக் கடையில் கறிவெட்டுவதுதான் அவருக்குரியதே. ஆடுகளை மேய்ப்பது, தீனி வைப்பதையெல்லாம் பண்ணையாட்கள் பார்த்துக்கொள்வார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எங்கள் வீட்டின்வழியே தன்னுடைய சைக்கிளின் பின்புறம் ஓர்ஆட்டைக் கயிற்றால்கட்டி அழைத்துச்செல்வார். அவர் சைக்கிளை ஓட்டிக்கொண்டு போனால் அந்தஆடு பின்னாலேயே ஓடும். அதுவோர் ஊர்வலம் போலத்தான் இருக்கும். பக்கத்திலிருக்கிற மணியார் டீக்கடையிலிருந்து, ‘பாரு ஆடு கசாப்புக்கடைக்கு எவ்வளவு சந்தோஷமாப் போகுதுன்னு’ என்று கேலிபேசுவார்கள். பெரும்பாலும் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது ஆட்டை அழைத்துக்கொண்டு போகிற மாமா என்னைப் பார்த்ததும், ‘மாப்ள அம்மாகிட்டச் சொல்லி வையிங்க…. இன்னைக்கு எளங்குருத்தாடு. மத்தியானம் தலைக்கறி கொண்டாறவா?’ என்று சிரித்துக்கொண்டே வம்பிழுத்துப்போவார்.
பள்ளிவாசலருகில் மாயர்மாமாவின் கடையிருப்பதை பால்வாங்கப் போகும்போதுதான் தெரிந்து கொண்டேன். கையில் பால் தூக்கோடுபோன நான் மாயர்மாமா இருப்பதைப் பார்த்ததும் நின்றுவிட்டேன். அவர் தன்தொழிலில் மும்மரமாக இருந்தார். சைக்கிளை நிறுத்திவிட்டு., கட்டியிருக்கும் ஆட்டுக்குட்டியை அவிழ்த்துவிடுவார். பின்னர் தன்னுடைய மடிப்புக்கலையாத வெள்ளைவேட்டியை அவிழ்த்து அந்தச்சாலையின் மூலையில் பத்திரமாக வைத்துவிட்டு, பனியன்உடம்போடு இடுப்பில் ஒருதுண்டைக்கட்டிக்கொள்வார்.
சைக்கிள்கேரியரில் நன்குகூர்தீட்டப்பெற்ற பட்டாக்கத்தி இருக்கும். தன்விரல்களால் தடவிக் கூர்மையை மறுபடியும் பரிசோதிப்பார். அந்தச்சாலைக்குள் இருபெரிய புளியமரத்தின் துண்டங்கள் வட்டவடிவமாய் இடுப்புயரத்துக்கு நிறுத்தப்பட்டிருக்கும். ஹேண்டில்பாரில் தொங்குகிற தூக்குவாளியை எடுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குள் புகுவார். கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டு அந்தத் தூக்குவாளி நிறையத் தண்ணீரைக்கொண்டுவந்து அந்த மரத்துண்டுகளைத் துடைப்பார். அப்புறம் உட்பக்கத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் மண்கலயங்களை எடுத்து அலம்பித் தயாராக வைத்துவிட்டு ஆட்டுக்குட்டியை இழுத்துக் கம்பத்தில் கட்டுவார். கிழக்குத்திசைநோக்கிச் சூரியனைப்பார்த்து ஒருபெரிய கும்பிடுபோடுவார். மனதிற்குள் என்ன சொல்லிக்கொள்வாரோ தெரியாது. உதடுகள் முணுமுணுக்கும். ஏதோமந்திரத்தை உச்சரிப்பதுபோலத் தெரியும். சற்றுநேரம் அமைதியாக அந்தக்கோலத்திலேயே நிற்பார். அப்புறமாக ஆட்டை அழைத்துவந்து ஒரு இலாகவத்தோடு கழுத்தை அறுக்கத்தொடங்குவார். ஆட்டிடம் இருந்து ஒருசிறுமுனகல் வருவதற்குள் அறுத்து முடித்துவிடுவார். அறுவைச்சிகிச்சை மருத்துவரின் நேர்த்தி மாயர்மாமாவிடம் புலப்படும். அதுபோல ஒருதுளி இரத்தமும் தரையில் சிந்தாது அந்த மண்கலயத்தில் பிடித்துக்கொண்டே தலையையும் உடலையும் தனித்தனியாக்கி விடுவார். தான்கொண்டுவந்த வாழையிலைகளைத் தரையில்பரப்பித் தலையை அதன்மீது வைத்துவிட்டு, ஆட்டின் உடற்பகுதியைச் சட்டத்தில் கட்டித் தொங்க விடுவார். மீண்டும் வாளிணுயோடு பள்ளிவாசலுக்குள்போய்த் தண்ணீர் கொண்டுவந்து ஆட்டின் மேல்தோலை உரிக்கவாரம்பிப்பார். இதுவும் வைத்தியர்வேலை மாதிரிதான். கொஞ்சமும் ஆட்டின் தோல்பரப்பு சேதமாகாதபடி கைகளால் இழுத்தும் விரல்களால் தடவித்தடவி இலகுவாக்கிப் பக்குவமாய் உரித்தெடுப்பார். தோலுரிந்து தொங்குகிற ஆட்டின் உள்ளுடம்பைப் பார்க்கிறபோது நம்முடைய மனசுக்குள் என்னென்னவோ தோணும். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
ஒவ்வொருகூறாக அறுத்தறுத்து மேடைக்குக் கொண்டுவருவார். சிறுசிறு துண்டங்களாக நறுக்கத்தொடங்குவார். பள்ளிவாசலுக்குள்போய் தராசுத்தட்டைத் தூக்கிக்கொண்டு வருவதற்குள் பாத்திரங்களோடு கறிவாங்குவதற்குக் கூட்டம் வந்துவிடும். ஆட்டின் உதிரிப்பாகங்களைத் தாங்கள் விரும்புகிற வண்ணம் பெயர்சொல்லிக்கேட்டு அளவுகூறி வாங்கிப்போவார்கள்.
ஏதோ சினிமாக்காட்சியை வாய்பிளந்து பார்க்கிறமாதிரி பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு கையில் பால்தூக்கோடு வந்த வேலையை மறந்துவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தக்காட்சியைப் பலரும்நின்று வேடிக்கை பார்ப்பதால் நான்பார்ப்பதையும் மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால், மாயர்மாமா பார்த்துவிட்டபிறகுதான் அது மிகவும் கேலிக்குரியதாகிப்போனது.
‘ஐய்யய்யோ மாப்புள்ள… நீங்கஎன்ன இங்கநின்னு வேடிக்கபாத்துக்கிட்டிருக்கீங்க. ஆத்தாளுக்குத் தெரிஞ்சா வையுமே. வீட்ல போயிச் சொல்லிப்புடாதீங்க’ என்று முதல்நாள் என்னை அறிவுறுத்தி அனுப்பிவைத்தபோது எனக்குப் புரியவில்லை. ஏனிதைப் பார்க்கக் கூடாது என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் பள்ளிவாசலைக் கடந்து போகிறபோது என்னுடைய கால்கள் இந்தக்காட்சியைக் கண்டதும் நகரமாட்டாமல் நின்றுவிடுவதைத் தடுக்கமுடியவில்லை. இதைக்கவனித்துவிட்ட மாயர்மாமா அதற்கப்புறம் என்னைத் தடுக்கவில்லை. விரட்டவில்லை. மாறாகக் கேலிசெய்யத் தொடங்கினார். ‘என்ன மாப்புள இதஒரு வேடிக்கைன்னு பாத்துக்கிட்டிருக்கீங்க. ஒருவேள ஆசையா இருந்தா அந்தத்தூக்கக் கொண்டாங்க. கால்கிலோ எளங்கறியாப் போடுறேன். வீட்லகொண்டுபோயிக்கொடுத்து ஆத்தாளப் பக்குவமாச்சமைக்கச்சொல்லிச் சாப்பிட்டுப்பாருங்க’ என்பார். இல்லாவிட்டால், ‘மாப்ள தங்கச்சிக்கு சமைக்கத் தெரியாதுங்கிறத மறந்துட்டேன். ஒங்க வீட்ல இதச் சாப்பிடவும் மாட்டீங்கள்ல. எங்கூட வாங்க. அத்தகிட்டச் சொல்லி வக்கணையாச் சமைக்கச்சொல்றேன். சரியா?’ என்று கேலிபேசுவார். அவருக்கும் எனக்குமான இந்த உரையாடல் மற்றவர்களுக்குப் புரிவதற்கு வெகுநாட்களானது. ‘ஏய்… அவுக கவுச்சி சாப்புட மாட்டாகய்யா… ஏதோ சின்னப்புள்ள வெவரம் தெரியாம வேடிக்கை பாத்துக்கிட்டிருக்கு. அவுக அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா வம்பாப்போயிடும். புள்ளைய அடிச்சிரப்போறாக. சொல்லி அனுப்பிவையிங்கப்பா’ என்று கரிசனத்தோடு ஈசுப்புத்தாத்தா பரிந்து பேசியதையும் கேட்டிருக்கிறேன். அவரும் அப்பாவின் நண்பர்தான். அப்பாவிடம் வந்துஇருந்து பேசிவிட்டுப்போகிற பழக்கம்.
‘ஏம்மா… நம்ம வீட்ல ஆடு சாப்பிடமாட்டோமா?’ என்று ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது பூசையறையில் இருந்து எட்டிப்பார்த்து அப்பா பெருங்குரலெடுத்துச் சிரித்தார். அம்மாவின் முகத்திலோ அத்தனை கலவரம். ‘யார்றா ஒன்னய இப்படிக் கேக்கச் சொன்னது?’ என்று விசாரிக்கத் தொடங்கினாள். ‘யாருங் கேக்கச்சொல்லி நாங்கேக்கலம்மா? சும்மா தெரிஞ்சிக்கிறதுக்காகக் கேட்டேன்’ என்று உண்மையைச் சொன்னேன். அம்மா அமைதியானாலும் பதில் சொல்லவில்லை.
ஒருநாள் பால்வாங்கி வருவதற்குத் தாமதமாகும் காரணத்தை அறிவதற்காக என்னைத் தேடிவந்தவள் மாயர்மாமாவின் பக்கத்தில் நின்றுகொண்டு ஆடறுப்பதைப் பார்த்ததும் ஆடிப்போய்விட்டாள். ‘மாப்ள ஆத்தாவந்து நிக்குதுபாரு. எதுனா பேசுனா கண்டுக்காத. நான் அப்பவே சொன்னேன். இதயெல்லாம் வேடிக்க பாக்காதய்யான்னு கேட்டீரா’ என்று என்னை அனுப்பிவைத்தார். அம்மா இருபதடிக்கு அந்தப் பக்கமாய் மூக்கை முந்தானையால் பொத்தியபடி என்னை எரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் சரியான பூசை. அழுதுகொண்டே ‘எனக்கென்ன தெரியும்? ஏதோ வேடிக்கைன்னுதான் போயிநின்னு பாத்தேன். நம்ம மாமாதானே அங்க இருந்தார். அவரு செய்யிறததானே பாத்தேன். என்னைய ஏன் அடிக்கிறீங்க’ என்று முறையிட்டேன். அப்பாதான் குறுக்கிட்டு ‘அவனுக்குப் புரியவையி. அடிக்காத…. இல்லாட்டி அவனாப் புரிஞ்சிக்க விடு’ என்று சமாதானப்படுத்தினார். அந்தப் புரியவைத்தல் என்றால் என்ன என்பதை அப்புறமாகத்தான் தெரிந்துகொண்டேன்.
‘நம்ம அதையெல்லாம் சாப்பிடக்கூடாது. சாப்புடுற எடத்துலயும் நிக்கக்கூடாது. இம்மாதிரி அதுகள வெட்டுற எடத்துலயும் நிக்கக்கூடாது. நம்ம சாமிக்கு ஆகாது. சாமி கோச்சுக்கும்’ என்று விளக்கினாள். அது எனக்குப் போதுமானதாக இல்லை. ‘மாயர்மாமாவும் நம்ம சாமியத்தானே கும்புடுறாரு. நெத்தியில திருமண் சாத்தியிருக்காரே’ என்று எதிர்க்கேள்வி கேட்டேன். எக்காரணத்தினாலும் சாதிவேறுபாடுகளை என் மனத்தில் விதைத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனால் சாமர்த்தியமாக, ‘அவுக வழக்கம் அப்படி. அவங்க சாப்பிட்டாலும் நம்ம நாராயணன் ஒண்ணுஞ்செய்ய மாட்டாரு. ஆனா நாம சாப்பிடக்கூடாதுன்னு சத்தியம் செஞ்சு குடுத்துருக்கோம்’ என்று அம்மா புரியவைக்க முயற்சித்தாள். எனக்கு மேலும் குழப்பமாகத்தான் இருந்தது.
ஆனாலும் வேடிக்கை நின்றபாடில்லை. அப்பா கண்டுகொள்ளாதே என்றார். வற்புறுத்துவது அவருக்குப் பிடிக்காது. தாமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்.
அம்மா வாசலில் கோலம்போட்டுக்கொண்டிருந்த ஒருநாள் காலைவேளையில் நான் திண்ணையில் உட்கார்ந்து எப்போதும் போலப் படித்துக் கொண்டிருந்தேன். மாயர்மாமா ஆட்டோடு ஊர்வலம் போனார். என்னைப்பார்த்ததும் அவருக்குக் கிண்டல் செய்யவேண்டும்போலத் தோணியிருக்கவேண்டும். ‘மாப்ள கொஞ்சம் ஒத்தாசைக்கு வரீகளா?’ சிரித்துக்கொண்டே கேட்டார். அம்மாவுக்கும் வேடிக்கையாகப் பட்டது போலும். அதற்கப்புறம் என்னை எதுவும் சொல்லவில்லை.
வளர்ந்தபோதில்தான் சைவம், அசைவம் என்கிற பாகுபாடுகளையெல்லாம் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். என் தேடல் அழுத்தமானபோது அப்பாதான் ‘சத்தியசோதனை’ புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். ‘இது பெரியமனுசங்க படிக்கிற புத்தகமாச்சே… இதக்கொண்டுபோயி இந்தச் சின்னப்புள்ள கையில குடுத்தா படிச்சிருவானா’ என்று பாட்டி கேட்டாள். அப்பா, ‘பெரிய மனுசங்களா ஆகவேண்டிய எல்லாரும் படிக்கிற புத்தகம்தான். படிக்கட்டும். புரிஞ்சிக்கட்டும்’ என்றார்.
ஆட்டுக்கறியைத் தின்றுவிட்டு பட்டபாடு, என்னைப்போலவே அவர் வீட்டில் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்று தொடர்ச்சியாக எனக்குச் சம்பந்தமானதாவே இருந்த காரணத்தால் அப்புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டேன். அப்புறம் சைவம், அசைவம் பற்றிய புரிதல் வந்து விட்டது. காந்தியைப்போல ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்தாலென்ன என்றெல்லாம் தோன்றியது. ஆனால், அதற்குத் தைரியமேயில்லை. மாயர்மாமா சொல்லுகிறமாதிரி, ‘ஆசப்பட்டாப்போதுமா மருமகரே… அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்யா… நீரு நெனைச்சாலும் இந்தருசி ஒமக்கு ஒட்டாது. ஆனா என்னமோ அதிசயமா நீருதான் வேடிக்கை பாக்குறீரு’ என்பது எத்தனை சரியான உண்மை. ஆடும், மரணமும் மரணத்திற்குப் பின்னான உடற்கூறுகளின் விற்பனையும் வாங்கிப்போகிறவர்கள் வீட்டில் நடக்கிற விருந்தும் எல்லாமே என்னை வேடிக்கை பார்க்கத்தூண்டின. ஊரிலே நடக்கிற கல்யாணவீடுகளுக்கு அப்பா கூட்டிப்போகிறபோது எங்களுக்குத் தனியாகக் குளிர்பானங்கள் கொடுப்பார்களேதவிர, விருந்துக்குக் கூப்பிடத் தயங்குவார்கள். அப்பாமீது அவ்வளவு மரியாதை. அதற்காக எக்கல்யாணத்துக்கும் போகாமலும் இருக்கமாட்டார். அம்மா அப்பக்கமே திரும்பமாட்டாள் என்றாலும் அதற்கு வெறுப்பு காரணமில்லை. அவளுக்கு அவ்வாசனை ஒத்துக் கொள்வதில்லை போலும். கல்யாண விருந்து வாசனை என்னையும் கூட ஏதோ பண்ணத்தான் செய்யும். ஆனாலும் அப்பாவோடு சேர்ந்து ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டேன். சைவவிருந்தாக இருந்தால் அப்பா என்னையும் சாப்பிடச்சொல்லிவிடுவார். பாகுபாடு பார்க்கக்கூடாது என்பார். அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்பதில் அவருக்கு அத்தனை அக்கறை. அப்பா பெரியாழ்வாரையும் பேசுவார். பெரியாரையும் பேசுவார். ‘உனக்கு – உன் மனதுக்கெது சரியோ அதைத் துணிச்சலாகச்செய். அதைவிடத் துணிச்சலான காரியம் அதை மறைக்கவோ மறுக்கவோ செய்யாமலிருப்பது. அதுதான் வாழ்க்கைத் தத்துவம். காந்தி அதைத்தான் கடைப்பிடித்தார். மகாத்மா ஆனார். நீயும் கைக்கொள்’ என்று உபதேசித்தார்.
எப்படியோ மாயர்மாமா என் மனத்துக்குள் இந்தச்சம்பவங்களின் மூலமாக நீங்காத இடம்பிடித்து விட்டார். அதைவிடவும் முக்கியமான ஒரு சம்பவமும் நடந்ததே. கர்மயோகம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது எனக்குப் புரியாமல் அப்பாவிடம் கேட்டேன். அப்பாவிடம் கேட்டேன். ‘ஏன்பா கர்மயோகம்கிறது எல்லாருக்கும் சாத்தியமா? இந்தக்காலத்துல கர்மயோகம் பண்றவங்க யாராச்சும் இருக்காங்களா?’…. அவர் சிரித்துக்கொண்டார். ‘ஏன் இல்லை… ஒங்க மாயருமாமாவே நல்லசாட்சிதானே… அவரவிடப் பெரிய கர்மயோகின்னு இந்தஊர்ல யாரக் காட்டமுடியும்?’ என்று பதில் சொன்னார். எனக்கு அந்தப்பதில் புரியவில்லை. ‘மாயர் மாமா கர்மயோகம் பண்றாரா…. அவரு கசாப்புக்கடையில்ல வச்சிருக்காரு. ஆட்டஅறுத்துக் கறிவிக்கிறவரு கர்மயோகியா?’ என்று அதிசயித்துப்போய்க்கேட்டேன். ‘இத அவர்கிட்டயே போயிக்கேளு’ என்று அனுப்பிவைத்தார்.
மாயர்மாமா வீட்டுக்குப் புறப்பட்டேன். எத்தனை வளர்ந்திருந்தாலும் அவ்வீட்டுக்குப் போகிறபோது சிறுகுழந்தையாகி விடுவேனே… ஆனால் அன்று என்னால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. வீடே சோகமாக இருந்தது. எப்போதும் வந்தழைத்துச்செல்லும் நாய்கள்கூட சற்றே ஒதுங்கியிருந்தன. அத்தைவந்து வரவேற்கவில்லை. அவளைக் காணவில்லை. மாமா பட்டியில் நின்றிருந்தார். அவரைச்சுற்றிப் பண்ணையாட்கள் இருந்தார்கள். மாமாவின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவர்மடியில் ஒரு சிறியஆட்டுக்குட்டி கிடந்தது. அது கிடக்கிறவிதத்தைப் பார்த்தால் அதற்கு உயிரில்லை என்பதைப்போலத்தான் தெரிந்தது. என்ன விவரம் என்று தெரியவில்லை. மாமா மெதுவாக அதனைத் தடவிக்கொடுத்துக்கொண்டே அந்த ஆட்டுக்குட்டியை மரியாதைகளோடு புதைத்துவிடும்படி கூறினார். அப்படிக் கூறியபோது அவர் நாத்தழுதழுத்தது ஆச்சரியமாக இருந்தது. ஆட்டுக்குட்டி செத்துப்போனால் அழுகிறாரே… ஒருநாளைக்கு ஒன்று என்று வெட்டிக் கூறுபோடுகிற மாயர்மாமாவா அழுவது?
இறந்துபோன தன்குழந்தையைத் தூக்கித்தருவதைப்போல ஆட்டுக்குட்டியைப் பண்ணையாட்களிடம் தந்துவிட்டு என்னை அழைத்துக் கொண்டு கூடத்துக்கு வந்தார் மாயர்மாமா. ரொம்பநேரம் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. மாமா வீட்டில் அந்தஅமைதி சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தது.
‘என்ன மாமா? நீங்கதானே ஆட்ட வெட்டுறீங்க… அப்பவுந்தானே ஆடுங்க சாகுது. அப்போல்லாம் அழுகல… ஆனா குட்டியாடு செத்துப்போனதுக்கு அழுகுறீங்களே…அந்த ஆட்டையும் பொதைக்கச் சொல்லீட்டிங்க… ஏன் கசாப்புக் கடைக்குக் கொண்டுபோயி வித்திருக்கலாம்ல’ என்று கேட்டேன். என்னைப்பார்த்துச் சிரித்தார். துக்கக் கசப்பான சிரிப்பது. ‘ஏம்மாப்புள எப்பவுமே குட்டியாட்ட எடுத்துக் கொஞ்சுவீங்களே… குட்டிஆடு செத்துப்போச்சுன்னு ஒங்களுக்கு வருத்தமில்லயா?’ என்று என்னைக்கேட்டார். ஆமாம்… எப்படி மறந்துபோனேன்? வளர்ந்துவிட்டேனா? குட்டியாட்டைக் கொஞ்சுகிற சுகத்தை மறந்துவிட்டேனா? அது இறந்துபோன துயரம் ஏன் என்னைப் பற்றவில்லை? தினம்தினம் ஆடுகள் அறுபடுவதைப் பார்த்து அதன் மரணம் எனக்குச் சகஜமாகி விட்டது. ஆனால், மாமாவுக்கு – தினம் தினம் ஆட்டைக் கழுத்தில் கத்தி வைத்து அறுக்கிற அவருக்கு? எனக்குள் எதுவெதுவோ பளிச்சென மின்னியது.
‘மாப்ள ஆட்ட வெட்டறது, வெட்டிக்கறியாக்கி விக்கிறது என் தொழில். ஆனா வளக்கிறது என்னோட வாழ்க்கை. அதுகளக் கண்ணும் கருத்துமா வளர்த்து ஆளாக்கணும். ஒலகத்துல பொறந்த எல்லா உசுரும் ஒருநாளு சாகப்போகுது. அதனால நான் பண்றது கொலையில்லை. அது என்னோட தொழில். தொழில்தர்மம். ஆனா என்னோட வாழ்க்கையில ஒரு புள்ளையச் சாகக்குடுத்துப்புட்டா என்ன வலிவருமோ அந்தவலி ஒருஆட்டுக்குட்டி செத்துப்போனாலும் எனக்குவரும். நானாக்கொல்றது வேற… காப்பாத்த முடியாமச் சாகவிடுறது வேற… கொல்ல முடிஞ்ச எனக்குக் காப்பாத்துற சக்திய அவன் குடுக்கல பாத்திகளா?’ என்றார்.
‘எனக்குச் சோறும் கறியும் குடுக்கிற இந்தாடுங்கதான் தெய்வம். தன்னோட உயிரைக்குடுத்து என்னோட உயிர என்னோட குடும்பத்தோட உயிரக்காப்பாத்துது. அத மொறையாக்காப்பாத்தலன்னா நானென்ன மனுசன்? கேட்டீகளே…. இதக்கசாப்புக் கடைக்குக் கொண்டுபோகக்கூடாதான்னு… எப்படிக் கொண்டுபோக முடியும். அதுதான் கொலை. நீங்கதான் பாத்திருப்பீங்களே…. காலங்காத்தாலே பட்டியில பூந்து இன்னிக்கு நீதான்னு ஒருஆட்டைக் கண்டுபிடிச்சு அதுகிட்ட வேண்டிக்கிடுவேன். என்னோட வயித்துக்காக ஒன்னைப் பலிகுடுக்கிறேன். எங்குடும்பம் நல்லாஇருக்கணுங்கிறதுக்காக ஒன்னய ஒங்குடும்பத்த விட்டுப்பிரிக்கிறேன். என்ன மன்னிச்சிருன்னு வேண்டிக்கிட்டுத்தான் ஆட்டக் கசாப்புக்கடைக்குக் கூட்டிப்போவேன். அங்கபோயும் வெட்டுறதுக்கு முன்னாலே அவனைப்பாத்து, ‘யப்பா எல்லாம் ஓஞ்செயலு… ஆட்டோட கழுத்தவெட்டுற கத்திக்கும் ஆட்டுக்கும் எப்படிச்சம்பந்தமில்லையோ அதுமாதிரித்தான் அறுக்கிற எனக்கும் சம்பந்தமில்லை. எல்லாம் ஒம்பொறுப்பு. நீதான் பொறுத்துக்கணும். இந்தஆடு பலபேருக்கு இன்னைக்குச் சாப்பாடாப்போகுது. அதனால இதக்கொலயா நெனைச்சுக்காம இரையா நெனைச்சுக்கன்னு சொல்லிட்டுத்தான் வெட்டுவேன். கணக்குக்குமேல தேவையில்லாம ஆட்ட வெட்டினது இல்லை. அதுவும் சாப்பாட்டுக்குத்தான். எந்தஆட்டையும் நோய்நொடின்னு விட்டதுமில்லை… நீங்கள்லாம் இதுகளச் சாப்பிடாமா இருக்கிறது ஒருநோன்புன்னா, நாங்க வேண்டிக்கிட்டுச் சாப்புடுறது ஒருநோன்பு. அந்தக் குட்டியாடு ரொம்பப்பாவம். எம்மேல ரொம்பப்பாசம். பண்ணையாளுங்க தீனிபோட்டாலும் சாப்பிடாது. நான்வந்து குலைய அதுவாயில காட்டுனாதான் திங்கும். என்னநோவுன்னு தெரியல… ஒழுங்காப் பலிகுடுக்கலயான்னு தெரியல. இனிமேத்தான் யோசிச்சணும்’ மேல்நோக்கிப் பார்த்தவாறு மேவாயைத் தேய்த்துக்கொண்டே பேசினார்.
பகவத்கீதையில் ‘கொல்பவனும் நானே… கொல்லப்படுபவனும் நானே’ என்கிற வரிகள் எனக்குள் ஓடிக்கொண்டிருந்தன. இன்னும் என்னென்னவோ கர்மயோகத்தில் படித்துப்புரியாமலிருந்த ஸ்லோகங்களெல்லாம் மாயர்மாமாவின் இவ்விளக்கத்தில் புரிபடத்தொடங்கின.
‘மாப்புள, கொன்னாப்பாவம் தின்னாப்போச்சுன்னு சொல்லுவாங்களே… அதுதான் உண்மை. சாப்பாட்டுக்குன்னு செய்யிறது என்னைப் பொறுத்தவரைக்கும் கொலையில்லை. எல்லா விலங்குகளும் தன்னோட பசிக்கு வேட்டையாடுற மாதிரித்தான் மனுசங்களும் ஒழுங்கோட தன்னோட இருக்கிற விலங்குகளைப் பசிக்காகவும் ருசிக்காகவும் தின்னுபழகிட்டாங்க. அதுவேணாம்னு சிலபேரு வெலகிக்கிட்டாங்க. அதுஒரு பெரியவிஷயமேயில்லை. ஆனா, தன்னை நம்பியிருக்கிற அந்த ஜீவனைக் காப்பாத்த முடியல்லன்னா அதுதான் பெருங்கொலை. நான் ஆட்டவெட்டுறபோது பாத்தீங்களா…. எந்த ஆட்டையும் துடிக்கவிடமாட்டேன். கண்ணச்சிமிட்டுற நேரத்துல கதறாம வெட்டிப்புடுவேன். அது அந்த ஜீவனுக்கு மோட்சம். யாராவது வெட்டித் திங்க ஆசப்பட்டா நானு அப்படிப் பலியாகுறதுக்குத் தயாரா இருப்பேன். ஒருஉசுரோட பசிதீருதுன்னா இன்னொரு உசுருபோறது தப்பில்ல. ரெண்டு உசுருகளுக்கும் சம்மதமாகணும். வேறயாரும் அதுல தலையிடுறதுக்கு உரிமையில்லை. ஒன்னைய வெட்டித்திங்கத்தெரிஞ்ச எனக்கு உருவாக்கமுடியலை. அதுக்குப்பதிலா ஒன்னோட குடும்பங்குட்டிகள நல்லாப்பாத்துக்கிறேன்னு மன்னிப்புக் கேட்டுக்குடுவேன். அதுதானே நம்மாள முடிஞ்சது…. என்னவோ மாப்புள இதெல்லாம் சொல்லணும்னு தோணுச்சு. ஏதோதோ பேசிக்கிட்டே போறேன். அப்பா சொகமா இருக்காகளா…. என்ன விஷயமா இந்தப் பக்கம் வந்தீக..?’ என்று விசாரிக்கத் தொடங்கினார்.
கர்மயோகிக்கான விளக்கத்தை அவரிடம் நான் கேட்கவில்லை. அப்பாவிடம் பேசியதையும் அவர் அனுப்பி வந்ததையும் சொல்லவில்லை. என்ன சொல்ல? எல்லாம்தான் விளங்கி விட்டதே… இன்னும் கேட்டால் நிறையச்சொல்லுவார் போலிருந்தது. ஆனால் அதற்கு இது சமயமில்லை என்று உணர்ந்தேன்.
பொட்டலில் இப்போது நாய்கள் குரைக்கத் தொடங்கின. அத்தை வந்து கொண்டிருந்தாள். மாயர் மாமா வழக்கம் போல, ‘ஏலேய் கிறுக்காயி. யாரு வந்திருக்காகன்னு பாரு. ஒங்கண்ணன் மகன் எம்மருகமப் புள்ள வந்திருக்காரு. அவுகவீட்ல கறிச்சோறு கெடையாதாம். நம்மவீட்ல சாப்டலாம்னு வந்துருக்காரு… சீக்கிரம் பண்ணிவையி’ என்று கேலிபேசினார். சற்றுமுன்னால் ஏற்பட்ட துயரத்தின் சாயல் அந்தக்குரலில் துளியும் தெரியவில்லை. அத்தை ஏதோ முணுமுணுத்து அவரைத் திட்டியபடியே என்னை மலர்ச்சியோடு வரவேற்றாள்.
அந்தக் கர்மயோகியைக் கைகூப்பி வணங்கிவிட்டு நான் ஒரு தெளிவோடு வீட்டுக்குத் திரும்ப எழுந்தேன். இன்னும் அவரிடம் கேட்பதற்கு எவ்வளவோ இருக்கின்றனவே…..
- சொ. அருணன்
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்