சிறுகதையின் பெயர் : புரியாதா பேரன்பே !
எழுத்தாளர் : பாலசாண்டில்யன்
அந்தக் கல்யாணப் பெண்ணை விட அவள் அழகு. மயங்கித் தான் போனேன் அவளின் சுண்டி இழுக்கும் பார்வையில். ஏன் அவள் என்னையே பார்க்கிறாள்? நிஜமா? பிரமையா? அவள் உதடுகளில் என் பெயரைப் பார்த்தேன். அந்த இதழும் பூவானது.
மனதில் ஒட்டிக் கொண்ட திடீர் காதல் என் இதயத்தை அசைத்தது. சற்று ஆடிப் போனேன். குல்மொஹர் இதழ் போன்ற அவள் உதடுகள் ஏதோ உச்சரிக்க இதயம் இடம் மாறுவது போல் உணர்ந்தேன்.
பெயர் தெரியா மலருக்கு நான் பெயர் தேடுகிறேன். என் மனதில் உட்கார்ந்த மலரில் ஏற்கனவே வண்ணத்துப் பூச்சிகள் வந்து போக ஆரம்பித்து விட்டன. கண்முன்னே புறாக்கள் பறந்தன என் மனக்கடிதங்களை ஏந்திச் செல்ல. சுற்றிலும் தெரிந்த வேறு எந்த காட்சியும் தெரியவில்லை கண்களுக்கு.
ஜன்னல் கம்பி வழியே நுழைந்து தப்பிக்கும் பூனை போல ஆனது மனம். உடன் அவளை வாயில் கவ்வியபடி. அவள் காட்சியில் இருந்து மறைந்து போனாள். ஒவ்வொரு அறையாக தேடினேன். யாரைத் தேடுகிறீர்கள் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது. புன்னகை பதிலானது.
அதோ சாப்பாட்டு மேசையில் அவள் மெதுவாக ஒரு கேசரித் துண்டை உள்ளே தள்ளியபடி. மிகச் சரியாக எதிர்வரிசையில் எனக்கோர் இடம் கிடைத்தது. நானும் ஒரு கேசரித் துண்டை தள்ளியபடி அவளை உற்று நோக்கினேன். அவள் பார்வை இலை மீது இல்லை. முழுவதுமாக என் மீது தான். விரல்கள் நடுங்கி கேசரி கீழே விழுந்தது.
இதுவரை பார்க்காத நட்சத்திரத்தை நேரில் பார்த்த சமயம் பல நாட்கள் பார்த்த ஒன்றைப் போல மிளிர்ந்தது. அது அவள் கண்கள். நதிக்கரை கூழாங்கல் போல அவள் என்னவள் ஆனாள் அடுத்த சில நாட்களில்.
நான் சைவ உணவகம் பல்வேறு கிளைகளோடு தொடங்கி மிகவும் பிரபலமாகி இருந்தேன். பத்திரிகை மற்றும் டிவிக்களில் எனது பேட்டி வந்தது. எனக்கு பிடித்த எனது பெரிய மற்றும் முதல் கிளையில் தான் நான் அதிக நேரம் செலவு செய்வேன். என்னை அவள் அங்கே பார்த்து இருக்கிறாள் போலும்.
தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து ஒரு நாள் 'இதனை கிளிக் செய்யுங்கள்..ஆச்சரியம் காத்திருக்கிறது' என்று வந்ததை கிளிக் செய்தேன். 'ஹாப்பி பர்த்டே' என்று வந்தது. நானும் தாங்க்யூ என்று பதிலிட்டு சும்மா இருந்தேன். எனக்கு தெரியாது அது அவள் தான் அனுப்பியது என்று.
அவள் ஒரு எதிக்கல் ஹாக்கெர் என்று எனக்கு தெரிய சில மாதங்கள் ஆனது. நிச்சயம் அது பற்றி சொல்லித்தான் ஆக வேண்டும். நான் கிளிக் செய்த அந்த லிங்க் தான் அவளுக்கு என்னோடு கிடைத்த லிங்க். எனக்குத் தெரியாமல் அவள் எனது நகர்தலை கவனித்து இருக்கிறாள். என்னுடைய கால் லாக் அவள் கைவசம். நான் யார் யாரிடம் தொடர்பு கொள்கிறேன், என்ன பேசுகிறேன், எனது லேட்டஸ்ட் போட்டோ எல்லாம் அவளின் வசம் என்று எனக்கு சத்தியமாக தெரியாது.
திருமணம் ஆனது. முதலிரவு முடிந்தது. ஹனிமூன் முடிந்தது. ஒவ்வொரு சமயமும் எனக்கு பிடித்த கலர், எனக்கு பிடித்த உணவு, எனக்கு பிடித்த பர்பியூம் எல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும். நான் யோசித்ததை விட வியந்து போனதே அதிகம். அவள் என்னை மிகவும் கொள்ளை அடித்தாள். நான் அவள் ஆட்டுவிக்கும் பொம்மை ஆனது எனக்கே தெரியவில்லை.
"நான் இதுவரை காபி குடித்ததில்லை. நீங்கள் போட்டுத் தந்த காபி தான் முதல் முதல் குடித்தது" என்றாள். மயங்கிப் போன நான் எத்தனை அவசரம் என்றாலும் அவளுக்கு என் கையால் காபி போட்டுக் கொடுத்து விட்டே நகர்ந்தேன்.
"உங்கள் மெசேஜில் உங்கள் வாசனை" என்று ஒரு நாள் கவிதை மெசேஜ் அனுப்பினாள். அதில் இருந்து நான் பைத்தியம் போல அவளுடன் சாட் மெசேஜ் நிறைய அனுப்பினேன். சில நேரம் அவள் பார்த்தாலே அவளுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்தேன் நான். பிறகு தான் கொஞ்சம் தெரிந்து கொண்டேன் அவளுக்கு 'மைண்ட் ஹாக்கிங்' கூட தெரியும் என்று. அதுவும் அவள் சொல்லவில்லை.
அவளைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு நேரமே இல்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக என் நிலை இழப்பதைப் பார்த்த என் செகரட்டரி சைக்காலஜி படித்தவள். என்னிடம் சொல்லாமல் அவளே தனது சொந்த முயற்சியில் கண்டுபிடித்து எனக்கு மிகவும் தயங்கித் தயங்கி சில விஷயங்கள் பகிர்ந்தாள். நான் சந்தோஷம் அடையவில்லை. மாறாக அவள் மீது கோபம் கொண்டேன். 'லிமிட் தாண்டாதே' என்று எச்சரித்தேன்.
என் செகரட்டரி இப்படி சில விஷயங்கள் கண்டுபிடித்ததை என்னவள் கண்டுபிடிக்க அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அவளை வேலையை விட்டு தூக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்தாள். அந்த பெண்ணை அனுப்பி வைத்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நடுவே நான் பார்த்த இரண்டு விளம்பரங்கள் எனக்கு என்னவள் எனக்கு கொடுத்த டார்ச்சர்கள் ஒன்றுமே இல்லை என்று சொல்லியது. முதல் விளம்பரம் - "டார்லிங் பஜ்ஜி போடு சாப்பிடலாம்" "கடலை மாவு இல்லை, ஆனியன் இல்லை" இது அவன். "ஸ்விகி பண்ணலாமா?" "ஹூம்" என்கிறான் அவன். காலிங் பெல் சத்தம். கதவு திறந்தால் வெளியே ஒருவன் கையில் கடலை மாவு மற்றும் ஆனியனுடன். அவள் எகத்தாளமாக புன்னகைத்தாள்.
விளம்பரம் இரண்டு - அவன் அவனுக்கு பிடித்த முக்கோண சிப்ஸ் ஒன்றை எடுத்து வாயில் வைக்க "டிடிங்" காலிங் பெல் சத்தம். வெளியே ஸ்விகி ஆளு. கையில் கேரட் போன்ற காய்கறிகளோடு. அவன் சிப்ஸ் பாக்கெட்டை தள்ளி வைத்து விட்டு கேரட் கடித்துக் கொண்டு டிவி பார்த்தான். அவள் அவனை கிண்டலோடு பார்த்தாள்.
நிச்சயம் புரிந்திருக்கும் என்னுடைய நிலைமை எப்படி என்று.
டிவியில் வீடு விளம்பரம் வந்தால் அவள் என்னை உற்றுப் பார்ப்பாள். அடுத்த வாரத்திற்குள் நான் அவளுக்கு அந்த வீடு வாங்கி கிப்ட் செய்து விடுவேன். அப்படித்தான் வைர நெக்லஸ், விலை உயர்ந்த கார், போன் என்று பலவும் தந்தேன்.
எனக்கே பிடிக்காத ஓரிருவருக்கு கூட வலுவில் அழைத்து பெரிய தொகைக்கு செக் கொடுத்தேன். எதற்கு என்று என்னால் யோசிக்க முடியவில்லை.
என்னுடைய அக்கௌன்ட்ஸ் மேனேஜர் எனது பாங்க் பாலன்ஸ் குறைந்து வருவதை எடுத்துச் சொன்னான். சில செக் திரும்பி வந்ததை கூட எடுத்துச் சொன்னான்.
நான் உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்து ஒரு முறை குதித்தேன். என்னை அழுத்தி கிள்ளி பார்த்தேன். சில விஷயங்கள் புரிந்தது. சிலது புரியவில்லை. தனியாக பாத்ரூம் சென்று முதல் முறையாக அழுதேன். பாக்கெட்டில் இருந்த மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தேன். "ஏன் அழுகிறாய் டார்லிங்?" அழுகை நின்றது. இதயம் நிற்பது போல ஆனது.
அட்வகேட் அமுதா அலுவலகம் போகுமாறு எனது டிரைவரை விரட்டினேன். "அய்யோ" என்று என்னை அறியாமல் அலறினேன். காரணம், எனக்கு முன்பே அவள் அமுதா அலுவலகத்தில் இருந்தாள்.
நான் போனதே 'இப்போது என்ன செய்யலாம்' என்று கேட்க அல்ல. இந்த பூஜாவை, - அதான் இவ்வளவு நேரம் 'அவளாக' இருந்தவளின் பெயர் - எப்படி டிவோர்ஸ் செய்வது என்பதைப் பற்றிப் பேசத்தான்.
நான் ஆரம்பிக்கும் முன்பே அமுதா சொன்னார் "சோம், உங்களுக்கு மூச்சுவல் டிவோர்ஸ் அப்ளிகேஷன் ரெடி செய்து விட்டேன், பூஜா எனக்கு உங்களுக்குள் இருக்கும் எல்லா அசௌகரியங்களை பிரச்சனைகளை விளக்கமாக சொல்லி விட்டாள், எல்லாமே சீக்கிரம் முடித்து விடலாம், கவலை வேண்டாம்" என்றாள்.
நான் இதுவரை பார்த்திராத எனது முதுகை பார்த்தேன். தூளியில் இடும் முன்பு பார்க்கும் குழந்தை முகம் போல எனது முகம் ஆனதை என்னால் கற்பனை செய்ய முடிந்தது. தலை சுற்றியது. கைகால் நடுங்கியது. வாய் குழறியது. "சரி அமுதா மேம்" என்றேன் என்னையும் மீறி. அது தானே ஏற்பாடு.
அதற்குள் அமுதாவின் குரல் "சோம், உங்கள் ஹோட்டல் செயின் நெட்ஒர்க் முழுவதுமே பூஜா பேருக்கு மாற்றிய இந்த டாக்குமென்டில் முதலில் கையெழுத்து போடுங்கள், அதன் பிறகு தான் டிவோர்ஸ் பேப்பரில் பூஜா கையெழுத்து போடுவாளாம்."
நான் பூஜாவைப் பார்த்தேன். என்னை உற்றுப் பார்த்து அவள் அழகாக புன்னகைத்தாள். முதல் முதலில் பார்த்த பொழுது பார்த்த அதே புன்னகை. நீட்டிய இடமெல்லாம் 'சோமசுந்தரம்' என்று கையெழுத்து போட்டேன். பூஜா எனக்கு அப்போது தேவை என்று அறிந்து ஜில்லென்று ஒரு ஸ்பிரைட் கிளாஸில் ஊற்றிக் கொடுத்தாள். ஒரே உறிஞ்சில் குடித்தேன். மூக்கில், கண்ணில் தண்ணீர் வந்தது. ஸ்பிரைட் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது.
அமுதா, "சோம், உங்கள் பார்ம் ஹவுஸ், பாங்க் எப் டி, எல்லாமே பூஜாவுக்கு மாற்றிடவும் நீங்கள் சைன் போட்டு விட்டீர்கள். எல்லாமே படித்தீர்களா? மாதாமாதம் நீங்கள் ஐந்து லட்சம் ரூபாய் பூஜாவிற்கு லிவிங் அலவன்ஸ் தர வேண்டும், மற்றபடி பூஜா அடாப்ட் செய்துள்ள இரண்டு பூனைகள் மற்றும் நாய்களுக்கு ஆகும் மாத செலவையும் தர வேண்டும், உங்கள் இரண்டு காரையும் அவர்களுக்கு தர வேண்டும்."
"அவ்வளவு தானா?" என்ற என்னை பூஜா பார்க்காமல் தவிர்த்தாள்.
வெளியே வந்து பார்த்த போது என்னுடைய டிரைவர் பூஜாவுக்கு கார் கதவைத் திறந்து விட்டான். நான் கூப்பிடாமல் ஒரு ஓலா ஆட்டோ வந்து என் முன்னால் நின்றது. என்னை அறியாமல் பர்ஸை எடுத்து திறந்து பார்த்தேன். சில ஐநூறு ரூபாய் நோட்டுகளும் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளும் இருந்தன. ஆட்டோ டிரைவர் "சார் எனக்கு ஏற்கனவே மேடம் பணம் கொடுத்து விட்டார்கள்" என்று எனது மௌனம் கலைத்தான்.
"வண்டி எங்கே போகிறது?" என்று கேட்டேன். "சார் எங்க சொல்லுறீங்களோ அங்க போகலாம் சார்" என்றார். ஒரு செகண்ட் யோசித்தேன். ஆட்டோ டிரைவர் முகத்தை திருப்பி என்னை பார்த்தார். "பீச் தானே?" என்றார். "நோ" இவனும் எப்படி என் மனதை அப்படியே சொல்கிறான்..?
உழைப்பாளர் சிலை அருகே என்னை இறக்கி விட்டது ஆட்டோ. "இனி நீ ரொம்ப உழைக்க வேண்டும்" என்று அந்த சிலைகள் என்னைப் பார்த்து சொன்னது. மாலை ஆறு இருக்கும். ஒரு ஜோசியக் கிழவி கையில் கோலுடன் என்னை நோக்கி வந்தாள். "சாமி, கைய நீட்டுங்க". நானும் நீட்டினேன். அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் என் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
"உன்னுடைய கெட்ட காலம் முடிந்தது. இந்தா இந்த நரிக்கொம்பை எடுத்துக் கொண்டு போய் கடலில் போடு. ஐநூறு ரூபாய் கொடு". என்றாள். நான் ஏதோ சாவி கொடுத்த பொம்மை போல செய்தேன்.
புதிய நட்சத்திரங்களைப் பார்க்க புதிய இருட்டையும் பார்க்க வேண்டும். என் பாரத்தைக் குறைக்க மணல் மீது படுத்தேன். அன்று ஏனோ வானத்தில் நட்சத்திரம் ஏதும் இல்லை. இன்று என் காதலி என்னைச் சாப்பிட்டாள். நான் காற்றை மட்டும் சாப்பிட்டு பசியாறினேன். நாளை எப்படியோ ?
ஆராதனா, ரோஜா என்று இனி யார் எதிர் வந்தாலும் நான் பார்க்க மாட்டேன் என்று நினைக்கும் போதே நான் என் வீட்டு தோட்டத்து திண்ணையில். அருகே மீண்டும் பூஜா….!!
"இன்றும் மழை வருமா?
நேற்று மழையில் நனைந்த ஒரு பித்து மனம்"...
.ஆமாம் இப்போது எனக்கு கவிதை ஒண்ணு தான் கேடு ...
*-----------------------------------------------------------*
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்