logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

JEGAN M ANTONY

சிறுகதை வரிசை எண் # 134


அண்ணன் என்பவன் **************************** அருளால் செரித்துக்கொள்ளவே முடியவில்லை, அண்ணன் அப்படி பேசியதை?. எத்தனை சாதாரணமா சொல்லிட்டான்?. சொல்!.. நாயைப் போல.. சிலசமயம் வெறிபிடித்து துரத்தும், பழகியதுதானேன்னு நிற்க முடியாது. மல்லுகட்ட புத்தியோ துணைவராது. முடியாவிட்டாலும் ஓடவேண்டியதுதான். சிலசமயம் ஓலமிட்டு..சாமத்தை சாபமாக்கும். அருளையும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குதுரத்தியது.அண்ணன் பாசத்தை சந்தேகித்தது..தன் நிலைமையை அம்பலப்படுத்தியது.. சுயமரியாதையை காயப்படுத்தியது.. எதிர்கொள்ள திராணியில்லை. ஆணவமும் கழிவிரக்கமும் நெருக்க.. விளிம்பில் ஒரு உணர்ச்சி வருமே!..அதை வெறி என்பதா ஞானம் என்பதா தெரியல. "மயிரே போச்சு..வர்றத பார்த்துக்கலாம்னு".. அப்படித்தான்.. அருளுமிருந்தான். மூணாம்மைல் பஸ்டாப்பை ஒட்டியிருக்கும் பெட்டிக்கடை.. வாங்கிய சிகரெட்டில்.. அவனுக்கும் ஒன்றை நீட்டினான்..மணி. எதிர் சுவரிலிருந்த.. "அழகி" போஸ்டரை காட்டி.."பாத்தியா மக்கா..?" என மணி கேட்டதுக்கு..அருள் ஒண்ணுமே சொல்லல."விடு.ல..பார்த்துக்கலாம்..எங்க போயிடப்போறான்..?" அந்த மயிராண்டி என்றதற்கும்.. அருள் ஒண்ணுமே சொல்லல. அருளோட கதை முழுவதும் தெரிந்தவனென்பதால்.. மணி மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. மணி.. மனிதன்..அருளுக்கு நண்பன். இரண்டு பேருக்கும் குலசேகரன்புதூர்.. நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாய பற்றிப்படர்ந்து கிடக்கும் ஒரு அவியல் கிராமம். அடையாளங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாத..சுரணையற்ற மனிதர்கள் வசிக்கும் பெருந்தன்மை ஊர். அருளும் சத்துணவும் இருந்ததால..மணி பத்தாங்கிளாஸ் வரை வந்தான். அப்புறம் சீ..சீ..இந்த பழம் புளிக்கும்தான்..இப்ப கோணத்தில் ஒரு வலைக் கம்பெனில சோலி பாக்கான். அருளோ பாஸானதும் அடுத்தென்ன பண்றதுனு தெரியாம.. ஐ.டி.ஐ..க்குள்ள சாடிட்டான். இருவருக்கும் உள்ள நட்பு..அதபத்தி கேட்டா.. இரண்டுபேரும் ட்யூப்லைட்தான். அந்த அண்டவெளி மௌன குழப்பம்தான் அதுக்கான பதில். குமரி மாவட்டத்துல படித்தவர்களை விட சோலி கம்மி. சோலினா..? விவசாயம் பார்த்துட்டே அரசுசேவை.. விட்டா சேவித்துக்கொண்டே விவசாயம், அதுலயும் டீச்சர் வேலைக்கு ஓட்டுகள் ஜாஸ்தி. வேற படிச்சுட்டு.. புடிக்காம செய்ற விவசாயம், கூலிவேலை, புடிச்சு செய்ற வியாபாரம். மத்தபடி இன்ஜினியரிங், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.. அனாதைகளுக்கு சென்னையோ..ஓசூரோ.. கோயம்புத்தூரோதான்.. மடங்கள். அருள் கொஞ்சநாள் வலைக்கம்பனி.. "மணி மோட்டார் ஒர்க்ஸ்"னு.. போயிட்டுக்கிடந்தான். வாங்குற சம்பளமெல்லாம் "டைம்பாஸுக்கும்".. சினிமாக்களுக்குமே பத்தல.. பிறகு இசக்கி அண்ணனோட கொஞ்சநாள் சுத்திட்டிருந்தான். இசக்கி அண்ணன் அப்போ வடசேரில.. குழந்தை ரௌடி, மணி மோட்டார் ஒர்க்ஷாப்போட ரெகுலர் கஸ்டமர். அது நாகர்கோவில் டவுன் வயசுக்கு வந்த காலம். வடசேரி, வேப்பமூடுல பெரும்பாலுமாயிருந்தது பழைய ஓடுபோட்ட கடைகள்..பரம்பரை வாடகைதாரர்கள். இடத்துக்காரங்களுக்கு அவற்றை இடிச்சுட்டு காம்ப்ளக்ஸ்கள் கட்டணும். கடையை வச்சிருக்கிறவங்க.. கோர்ட்ல சந்திப்போம்னு பூச்சாண்டி காட்ட.. கடைகளை காலிபண்ண இசக்கி அண்ணனைப்போல ஊச்சாளிகள் களமிறக்கப்பட்டனர். அப்பதான் சின்ன சின்ன வேலைகளுக்கு இசக்கி அண்ணன் அருளையும் கூட்டாக்குவான். அதுவும்.. அவன்.. சுசீந்திரம் பாலத்துல வைச்சு வெட்டுபட்டு செத்ததோட.. முடிஞ்சுப்போச்சி. பெரிய வேலை..பெரிய விலை. அந்தால பயந்துபோய் அருள் பையைத்தூக்கிட்டு சென்னைக்கு போனவன்தான். சிங்காரச் சென்னை..நல்ல தங்காளுக்கு தெரியாத ஊர். சிரமங்களுக்கும் அவமானங்களுக்கும் இடைல அருளை இருக்கவும்.. வைத்தது. நாலு வருசமாச்சு.. ஒரு மோட்டார் மெக்கானிக்கா கரைசேர. சம்பளம்..நாகர்கோவிலில் பெற்றதைவிட அதிகம்.. அதையும் அனுப்பிட்டு.. நண்பர்கள் கேட்டா "அண்ணனுக்குத்தான செய்றோம்".. என்பான். அருள் சென்னைக்கு வந்து ஒண்ணரை வருசமிருக்கும்..அது..அருள் அவனோட அப்பாவின் இருப்பை உணர்ந்து.. இனியாவது அவரை நிம்மதியா வச்சுக்கணும்னு நெனச்சிருந்த காலம். அவரோ! காத்திருக்கவில்லை..பையன் இனிமே பொழச்சுப்பான்னு.. நம்பிக்கை வந்ததும் கிளம்பிட்டார். அப்பாக்களின் ஆன்மாவே அதுதானே!. அருளுக்கோ.. குற்றபோதநோய் பிடித்தது..அண்ணனுக்கு செய்ய ஆரம்பித்தான். இது ஒருபுறமிருக்க.. அப்பாவின் மறைவுக்கு போய்வந்து இரண்டு மூன்று மாதங்கள் கடந்திருக்கும்..ஒருநாள் மணி போன் பண்ணினான். பேச்சுக்கிடையே.. சித்ரா அருளைப்பற்றி விசாரித்ததாக சொன்னான். இதுவரை நடக்காதது நடந்ததும்.. இனி அவள் துணையாய் உடன்வருவதற்கு சம்மதிப்பாள் என்கிற நம்பிக்கை அருளுக்கு துளிர்த்தது. அந்த நினைப்பே அவன் நோய்க்கு மருந்தாய் இருந்தது. ஏனெனில் அவன்தான் சித்ராவை நேசித்தான்.. நேசிக்கிறான். சென்னையில் அவன் புரிகிற தவம் சித்ராவை அசைத்திருக்கிறது.. இனி மெதுவாக வரம்கேட்க வேண்டியதுதான்..என எண்ணினான் அருள். அருள் வரம்கேட்கும் வாய்ப்புக்காக காத்திருக்க.. காலம் சுப்பையா சாரை கொண்டுவந்து சேர்த்தது. இவங்களோட ஜீவி..ங்கற பையன் ஒண்ணா படிச்சான். முன் பெஞ்சுக்காரன், பத்துக்கப்புறம் தந்தை சொல் தட்டாம பக்குவமா அரசு பாலிடெக்னிக்..கையோடு கோயம்பத்தூரிலொரு கம்பெனில சி.என்.சி ஆபரேட்டர் சோலி..அத பார்த்துட்டே ஃபாரினுக்கும் ட்ரை பண்ணிட்டு இருந்தான். அவனோட அப்பாதான் சுப்பையா..சார். திட்டுவிளையில் வாத்தியாரா இருக்கிறார். தந்தையும் தனயனும் வேலை விசயமா சென்னைக்கு வந்தப்ப..அருளோட ரூமுக்கு வந்திருந்தனர். செவனேன்னு இருக்காம சுப்பையா சார்..அருள மந்திரிச்சதுல…கூடவே "ஜாம் பஜாருக்கு"..போனான். அது..பாரின் கனவுகளோட சந்தை. சப் ஏஜென்ட்கள்..அடி மாடுகள்..மெயின் ஏஜென்ட்கள் உலவுமிடம். அங்குதான் அருள்.. தூத்துக்குடிகாரருக்கு அறிமுகப்படுத்தப் பட்டான். ஏஜெண்ட்ங்க..அவர்கள் ராஜ்யத்தாலேயே அறியப்படுகிறார்கள்..சொந்த விவரங்கள் காப்புரிமைக்கு உட்பட்டது. தூத்துக்குடிக்காரர் ஒரு சப் ஏஜென்ட்..அவர் எப்படி..? சுப்பையா சாருக்கு அறிமுகம் என்பதெல்லாம் சொல்லப்படவில்லை. ஆனால் இருவரின் பேச்சிலிருந்தும் அருளுக்கு..நீண்டநாள் பழகியவர்களென தோணியது. சுப்பையா சாரோட வரவேற்புரைக்கு பின் தூத்துக்குடிக்காரர் அருளிடம்.. "பாஸ்போர்ட் இருக்கிறதா..?" தம்பி..ன்னு கேட்டதற்கு.. "இல்லணே..இனிமேதா"..னென.. இழுத்தான் அருள். "என்ன தம்பி..?.. விவரம் தெரியாத ஆளா இருக்கியே..?"..ஏஜெண்ட் வீசிய முட்டாளஸ்திரத்தில் விக்கித்துப்போனான் அருள். பின்பு அவரே.. "பரவால்ல…ஒரு மூவாயிரமாகும்..உடனே எடுத்திடலாமென"..களிம்பை நீட்டினார். அதற்கு அருள் கைநீட்ட..ஏஜென்ட் ஜோஸ்யராக மாறிப்போய். வந்திருப்பது சரியான நேரமெனவும்..அருமையான வேல கையிலிருப்பதாகவும்..சொன்னார். "என்ன வேலை..?"..ன்னு அருள் கேட்குமுன்னே.. "நல்ல கம்பனி. சம்பளம் இருபதாயிரம்.. ஓவர்டைம் பாத்தா அதுக்கு மேல வரும்" என்றார். சுப்பையா சாருக்கு தெரிஞ்ச..கொஞ்ச நஞ்ச ஜோஸ்யம் கூட ஜீவி..க்கு தெரியல. பேச்சு இடைவேளையில்.. டீக்கடைக்கு செட்டில் பண்ணிய அருளுக்கு…சிகரெட் ஒரு குறையாயிருந்தது. சார்.. கூட இருக்கவே அடங்கிக்கொண்டு செலவைப் பத்தி கேட்டான். அருள் சாரோட ஆளாயிட்டதால தள்ளுபடி போக ஒரு இலட்சமெனவும்.. அம்பதாயிரம் முன்பணம்..பாக்கி விசாவுக்கு பின்பணமெனவும்..ஏஜெண்ட் உள்ளதை ஒளிக்காம சொல்வதாகச் சொன்னார். அருள் லட்சங்களுக்கு பூச்சியங்களை எண்ணிக்கொண்டிருக்கும் போது..அவரே யோகக்காரி காத்திருக்க மாட்டா..ன்னும், அவரோட சர்வீஸ்ல இதபோல ஒரு வாய்ப்பை இதுக்குமுன் பார்த்ததில்லை..ன்னும் அழுத்திச் சொன்னார். அருள் "விசா வர நாளாகுமாண்ணே..?" என்றதற்கு.."நீ பணத்தை ரெடி பண்ணு.. பாஸ்போர்ட்டும் விசாவும் ஏம்பொறுப்பு" என்றார். சுப்பையா சார்..ஏஜெண்டிடம்..தம்பிக்கு என்றாரா?..தம்பியை என்றாரா?. காதில் விழல…"ஆனால் எப்படியாவது முடிச்சு விடுங்க"..மட்டும் கேட்டது. கூடவே…ஜீவியும்..சரில "பாத்து பத்திரம்" என்று விட்டு.. இருவரும் வந்த வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டனர். அருள்..அண்ணனுக்கு அனுப்பயிருந்ததை பாஸ்போர்ட்க்கு கொடுத்துட்டு.. அண்ணனிடம் அம்பதாயிரம் கடன் கேட்டான். நடந்ததை எல்லாம் கேட்டபிறகு.. சார் மேலிருக்கும் நம்பிக்கையில்.. தம்பி நம்பியதை போலவே.. அண்ணனும் பணத்தை எப்படியோ? ஏற்பாடு செய்துகொடுத்தான். நற்பேறாக..அருள்பெயர் அதுவரை போலீஸ்டேசன் வாசலை மிதிக்காததால் பாஸ்போர்ட்டு ரெடியாக...மெடிக்கலும் பாஸாயிட்டான். இனி விசா மட்டும்தான். அருளுக்கு..முதல்தடவையாக ஊருக்கு ஒருவாட்டி போய் வரலாமென்று ஆசைபிறந்தது. அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த மங்களகரமான விக்கிரம ஆண்டு ஆவணி திங்கள் 28ஆம் நாள்..அருளுக்கு செய்தி வந்தது. சித்ராவுக்கு திருமண நிச்சயம் என்று.."இப்ப என்னடா..? பண்றது.. சொல்லு"..ங்கறான்.. போன்ல மணி. அருளுக்கு செத்துடலாமென தோணியது. உள்ளுக்குள் ஏராளம் கேள்விகள்.. இப்ப என்ன அவசரம்..? அந்த தாயோளி மவளுக்கு..! பிறகு ஏன் என்னபத்தி விசாரிச்சா..? சினிமா, குடி, அடிதடின்னு..திரிஞ்சப்ப எல்லாம் ஒரு எழவும் வரலயே..? அருளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை..அழுது கொண்டிருக்கிறான். அருளுக்கு..விடுதலை! என்பது பொய்யெனப்பட்டது. தினம் நிஜத்தோட மல்லுகட்டி..மல்லுகட்டி..அவனைப்பற்றி அவனுக்கே ரொம்ப கேவலமாக இருக்கவே.. உதறிட்டு எங்காவது ஓடிரணும் போலிருந்தது. அருள் நினைத்ததைப்போல எளிதாக இல்லை..எல்லாத்தையும் உதறிவிட்டு ஓடுவது. விசாவுக்காக.. அருள்.. கிட்டதட்ட ஒண்ணரை வருசம் சென்னைக்கும்..ஜாம் பஜாருக்கும் நாயா அலைந்தான். ஒண்ணும் நடந்தபாடில்லை.. இடைப்பட்ட காலத்தில் மணி மூலமாக ஜீவி பாரின் போன செய்தியை அறிந்து..கடுப்பாக இருந்தது..கொடுத்து வைத்தவன் என நினைத்துக் கொண்டான். ஆரம்பத்தில் இரண்டு மூன்று முறை தூத்துக்குடிகாரன் கண்ணுக்கு தட்டுப்பட்ட போது..அருள் விசாவை குறித்து கேட்டதுக்கு.."இதோ!..இப்ப வந்துடும்".. "இன்னும்.. ஒரு வாரத்துக்குள்ள வந்துடும்.." "இதுவரை இப்படி ஆனதில்லை".. "எல்லாம் பேசியிருக்கேன்..இரண்டு மூணு நாள்ல சரியாயிடும்".. என்பதே அவன் பதில்களா இருந்தன. கொஞ்சம் அழுத்திக் கேட்டால். "தம்பி...சந்தேகமா இருந்தா உன் காச வேணா வாங்கிக்கோ".. என்றான். அவ்வாறான சமயங்களில் வண்டிய ரிப்பேர் பார்க்க கொடுத்துட்டு..ஒர்க்ஷாப்பு வந்து வந்துபோகும் கஸ்டமர்கள் முகம்.. அருள் நினைவில் வந்து போனது. நாளாக நாளாக அருளுக்கு தூத்துக்குடிக்காரனை பார்ப்பதே அரிதாகி விட்டது. அவன் வருவதும் போவதும் தலைவரோட அரசியல் டயலாக் மாதிரி ஆகிப்போனது. அதே நாட்களில் அருளைப்போல இன்னும் சிலரும் தூத்துக்குடிகாரனை தேடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் புரிந்து விட்டது. புரோக்கர்கள் மூலம் வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதென்பது..தூண்டிலிட்டு மீன் பிடிப்பதைப்போல..என்று. இதற்கிடையில் அண்ணன் வேறு அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருந்தான். சீட்டுக்கட்டு ரம்மிய போலில்லை..வாழ்க்கையோடு விளையாடுவது. இந்த ஆட்டத்தின் போக்கை முழுக்க முழுக்க கடவுளோ..?, இயற்கையோ..?, தலையெழுத்தோ..? அல்லது வேறேதோ..? தீர்மானிக்கிறது. அருளுக்கு இனியும் இந்த ஆட்டத்தை தொடர்வது முட்டாள்தனமென பட்டதால்.. இனி கொடுத்த காசை திருப்பி வாங்கிவிட வேண்டியதுதான்..என்ற முடிவுக்கு வந்தான். ஆனால் எப்படி..?..ஒரே குழப்பம்.. கடவுள் கிட்ட முறையிட்டுப் பார்த்தான். மெயின் ஏஜென்ட்கிட்ட போய் கேட்டுப்பார்த்தான்...அவனோ.."நீ யார்கிட்ட கொடுத்தயோ அவங்கிட்டயே போய் கேளு..அந்த ஆள் சரியில்லாததால..அவன்கூட இப்ப நான் பிஸ்னஸ் பண்றதில்லை"..ன்னுட்டான். அண்ணன்.. சாரிடம்..இந்த விசயத்தை கேட்டது வருத்தத்தில் போய்முடிந்தது. ஒருபுறம்.. அருளோட கதை இவ்வாறு போய்க்கொண்டிருக்க.. மறுபக்கம் ஜீவிக்கோ திருணமே! முடிந்து விட்டது. திருமணத்துக்கு போய் வந்த மணி.. "மக்கா..ஜீவிய..அடையாளமே தெரியல!.. பாரின் சாப்பாடு..பய..பளபளன்னு ஆயிட்டான்..ஒரு மாசம் லீவாம்".. என்றான். போதாதென்று சுப்பையா சார்..மணிட்ட "என்னடே ஒங்காளு பாரின் போய்ட்டானா..?" ன்னு.. கேட்டதாக வேறு சொன்னான். அதை கேட்டதும் அருளுக்கு இன்னும் புழுக்கம் ஏறியது. எல்லாமும் சேர்ந்து அழுத்திக் கொண்டிருந்த சமயத்தில்.. அண்ணனுடைய போன். இயல்பாக முடித்திருக்க வேண்டிய உரையாடல் தான் என்ன செய்ய..?..அருள்.. "சும்மா..நச்சரிக்காதண்ணே"..ன்னு வாய விட்டதும் சண்டையாக மாறிவிட்டது. ஒருவன் பேச்சு மற்றொருவனுடைய ஆணவத்தை உசுப்ப.. அண்ணன்.. தம்பி என்பதை மறந்து..இருவரில்..யார் பெரியவன்..? என்கிற போட்டிக்குள் இருவரும் புகுந்துவிட்டனர். விலக்கி விடுவதற்கு மற்றொருவர் இல்லை. பாவம்!.. போன் என்ன செய்யும்..?. பணம்!.. எப்போதும் மனிதர்களை பிரித்தே வைக்கிறது. யாரையோ கொடுக்கிறவராகவும் யாரையோ பெறுகிறவராகவும் ஆக்குகிறது. கொடுப்பவர்..உயர்ந்தவராகிறார், பெறுகிறவர்..பாவமாகிப் போகிறார். இவை அந்தந்த நேரம் காலம் நடத்துகிற நாடகத்தின் கதாபாத்திரங்கள்.. எல்லோருக்கும் எல்லா பாத்திரத்தையும் போட்டுவிடும்..அது அழகு பார்ப்பதற்கு இல்லை. ஆத்திரத்தில்.. உண்மையை மறந்து இருவரும் அடித்துக்கொண்டிருக்கும் போது..சட்டுன்னு.."உன் காசா இருந்தா சும்மா இருப்பியாடே..?"..ன்னுட்டான் அண்ணன். அவ்வளவுதான்!..அருளோட மனசு அந்த சத்தியத்தை கேட்டதும் சாமியாக உறைந்து விட்டது. அடுத்தென்ன சொல்வது..? அருளுக்கு தெரியவில்லை. ஒருவருக்கு.. செய்யாமல் இருப்பதை காட்டிலும் கீழ்த்தரமான செயல் செய்ததை சொல்லிக் காட்டுவது. அருளோட புத்தி தாமதமாக ஞாபகப்படுத்தியதை எல்லாம் அவனோட மனம் தள்ளிவிட்டு..தோல்வியை ஒப்புக்கொள்ள வைத்தது. . சரிப்பா!.. "இன்னும் ஒருவாரம்..என் தலய அடகு வச்சாவது..ஓங்காச தந்துடறேன்..தூர நின்னு வாங்கிட்டு போ!".. என்றான். அருளோட.. கோபமெல்லாம் இப்போது தூத்துக்குடிகாரன் மேல வெறியா திரும்பியது. இதுக்கு எல்லாத்துக்கும் காரணம்.. அந்த தேவடியா மவன்.. இனிமேலும் அவனை சும்மா விடக்கூடாது என. மணிக்கு போனப் போட்டான். தூத்துக்குடியிலயே போய் மத்தவனை தூக்குவது என்று முடிவாச்சு.. ஆனால் எப்படி..? ஏஜென்ட் வீட்டை எப்படி கண்டுபிடிப்பது?.."அது என் பொறுப்பு" என்ற மணியின் மனதில்.. ஏற்கெனவே வந்திருந்தான் சேவியர் அண்ணன். யார் சேவியர் அண்ணன்..? கேள்விக்கு முன்னமே அண்ணனை குறித்து.. தன்னோட ஃப்ரெண்ட்..சொந்த ஊர் தூத்துக்குடி..தான் வேலைப்பார்க்கும் வலைக்கம்பனிக்கு.. அடிக்கடி மூலப்பொருட்கள் ஏற்றி வருபவனென.. விவரங்கள் அனைத்தும் மணியால் ஒப்பிக்கப்பட்டது. கூடவே சேவியர் அண்ணன் சூப்பர் டைப்..என்ன ஹெல்ப்..னாலும் பண்ணுவான்கிற.. சான்றிதழும் தரப்பட்டது. எல்லா "எப்படி" களும் அலசப்பட்டு..மணி அனைத்துக்கும் உத்தரவாதம் கொடுத்ததுக்கு அப்புறம்.. முத்தாய்ப்பாக அவனே சொன்னான். "நீ கவலப்படாதே! மக்கா..கிளம்பி மட்டும் வா!..அந்த தாயோளிய கட்டித்தூக்கி கடலுக்குள் கொண்டு போயாவது..காச வாங்கறோம்" என்று. இருவரும் தூத்துக்குடி வந்துசேர்ந்தனர். மூணாம்மைல் பேரூந்து நிறுத்தத்தில் சேவியர் அண்ணனுக்காக காத்துக் கொண்டிருந்தவர்களிடம்..யாரோ ஒரு மனிதன் பிச்சை கேட்க. அருள் கண்டுகொள்ளவில்லை.. மணி ஒருரூபாயை எடுத்துக்கொடுக்க.. பொதுவாக வாழ்த்திட்டு போனான். பக்கத்து சர்ச் மணி பத்துமுறை அடித்துவிட்டு.."ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ" - மத்தேயு 5:41.. என்றுவிட்டு ஓய்ந்தது. அருளுக்கு.. சுவரிலிருந்த சண்முகத்தையும் தனலட்சுமியையும் தெரியாவிட்டாலும்..அவர்கள் தன்னையே பார்ப்பது போலிருந்தது..ஏன்னு தெரியவில்லை. அந்நேரம் சேவியர் அண்ணனும் வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டான். இயல்பாக விசாரிப்புகள்.. முடிந்ததும்..சேவியர் அண்ணன்.."பக்கத்துல தான் வீடு.. பார்ட்டி..உள்ளதான் இருக்கான்" என்றான். மூவருக்கிடையே பெரும்பாலும் மணிதான் பேசுனான். இடையே சேவியர் அண்ணன்.. "இவ்வளவு நடந்திருக்கு..எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..?" என்றதற்கு. மணிதான் என்னவோ?.. சொன்னான். அருளோட அமைதியை பார்த்துட்டு.. சேவியர் அண்ணன்..அருளோட தோளில் கைவைத்தபடி… "ஒண்ணும் யோசிக்காதீங்க தம்பி.. எல்லாம் சரியாவும்" என்றான். அருளுக்கு..சேவியர் அண்ணன் பேசுவது இசக்கி அண்ணன போலிருந்தது. அந்த சமயத்துக்கு தேவையானதை பேசிக்கொண்டே..ஆளுக்கொரு டீயும் தம்மும் அடித்தபின்பு ஏஜெண்ட் வீட்டை நோக்கி நடந்தனர். வீடு பக்கத்து சந்தில்தான் இருந்தது. சந்துக்கு..இவர்கள் வரது ஏற்கனவே தெரியும் போலும்.. இவர்களைத்தான் முதலில் அனுமதித்தது. அதுவும் ஒருத்தருக்கு பின் ஒருத்தராக. வீட்டு வாசலை அடைந்ததும்.. நமக்கேன் வம்புன்னு பறந்தது சிட்டுக்குருவி ஒண்ணு. சேவியர் அண்ணன் தான்..லேசா திறந்திருந்த மேல்கதவை தட்டியபடி.."ரவியண்ணே..ரவியண்ணே" என்றான். சில நொடிகள் அனக்கம் கழிந்து.. கதவை திறந்த ஏஜெண்ட்.. சேவியர் அண்ணனை பார்த்து.. "ஆமா..நீ..ங்க..?" என்றவாரே மற்ற இருவரையும் பார்த்தான். அருளை பார்த்ததும் புரிந்து போனவனாய்..துக்கம் விசாரிக்க வந்தவங்கள வரவேற்பதைபோல ..அடிகதவையும் திறந்துவிட்டான். "உக்காருங்க" என்ற ஏஜெண்ட் ஓய்வுபெற்ற மூட்டைதூக்குபவரை போலிருந்தான். போஞ்சுபோன தேகத்தை விருப்பமில்லாமல்.. கட்டியிருந்தது சாரம்.. தோளில் குற்றால துண்டு. ஒரு பிளாஸ்டிக் சேரை கூடுதலா அவங்க பக்கம் நகர்த்திவிட்டு..தான் மற்றொன்றில் அமர.. சேவியர் அண்ணனும் மணியும் வயர் சோபாவிலும்..அருள் சேரிலும் அமர்ந்தனர். மணி அறையை கண்களால் அளந்தான்..மைக்கா ஸ்டாண்ட், பிலிப்ஸ் டிவி, மேச, மீன்தொட்டி.. அம்பதாயிரம் தேறுவதற்கு வழியேயில்லை. சுவர்ல கறுப்பு வெள்ளை புகைப்படங்கள்.. ஒன்று சமீபத்தில் ஏஜெண்ட் விதவனானதை சொன்னது. அடுக்களைய தவிர மத்த அறைகளில் அனக்கமில்லை. அருள் ஏஜெண்ட் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க.. சேவியர் அண்ணன் நேரா விசயத்துக்கு வந்தான். "தம்பி மேட்டர் என்னாச்சுங்க..?" என்ற சேவியர் அண்ணனிடம்.. "கூடிய சீக்கிரம் வந்துடும்ங்க".. என்றான் ஏஜெண்ட் சாதாரணமாக. உடனே மணி.."ஏங்க..எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டிருப்பீங்க..?" என்றதற்கு.. "தம்பி.. புரியாம பேசாதீங்க..? எனக்கு மட்டும் ஆசையா என்ன..? அங்க சண்டையும் அதுவுமா இருக்கப்போய்.. கொஞ்சம் லேட்டாயி போச்சு" என்றான் ஏஜெண்ட். "நீங்கதான் அவன் நிலம புரியாம.."மணியை முடிக்கவிடாமல்.. அவன் தொடையில் தட்டிவிட்டு.. சேவியர் அண்ணன்.."அண்ணாச்சி நீங்க பண்றது உங்களுக்கே.. சரீன்னு..படுதா..? சொல்லுங்க, எனக்கும் தூத்துகுடிதான்.. நானும் சிங்கப்பூரு.. மலேசியா எல்லாம் போயிட்டு வந்தவன்தான்..ஒண்ணு புரிஞ்சுக்கிடுங்க.. இங்க யாரும் தகறாறு பண்ணவரல.. கொடுத்தகாச கேட்டு வந்திருக்கான்..அதுக்கு வழிய சொல்லுங்க..? அத விட்டுட்டு பழச பேசிட்டு.. அவன் உங்க பேச்சநம்பி.. இன்னும் எத்தன நாளைக்கி வட்டியகட்டிட்டு இருப்பான்..? ஏற்கனவே அன்னா..இன்னானு..ரெண்டு வருசமாச்சு..இதுக்குமேலயும் முடியாது..அதனால நீங்க எப்படி வாங்கினீங்களோ..அப்படி திருப்பிக் கொடுங்க.. அதான் அதுக்குள்ள மரியாதை.. அதைவிட்டு இனிமேலும் விசா கிசான்னு இழுத்துட்டு இருக்கது வீணா பிரச்சனையில போய்தான் முடியும்". என்றான். ஏஜென்ட் துண்ட எடுத்து வாயதொடச்சிகிட்டு.. "ஏங்க நா..என்னவோ கைய புடிச்சி பாரினுக்கு வா.. வான்னு இழுத்த மாதிரி சொல்றீங்க..இப்ப வந்து காச கொடுன்னு மிரட்டுறீங்க..விளையாட்டா இது". என்றபடியே அருள நோக்கி.."என்ன தம்பி நானா உன்கிட்ட வா.. வா..ன்னேன்". என்றதும்தான் தாமதம்.. "ஆமா!..யா நான்தான்.. வந்தேன்..ஆனா.. என்ன சொல்லி வாங்குன..? நீ சொன்ன மயித்த செஞ்சியா..? யோவ்!..உனக்கு கொஞ்ச..மே..னும் மனசாட்சி இருக்கா..? அருளோட ஆத்திரத்தை இடை மறித்த ஏஜெண்ட். கைய நீட்டி.."ஏய்..மரியாதையா பேசு..யோவ்..கீவ்னணா..நல்லா இருக்காது பாத்து".... பதிலுக்கு..அருளும் கைய நீட்டிகிட்டே.. "உனக்கென்ன..ல மரியாதை பிராடுபய..ஒன்னப்போய்.. அண்ணே!.. அண்ணேன்னு..சே!..நீயெல்லாம்…இங்கப்பாரு..நீ..என்ன மயித்த.. பண்ணுவனு எனக்கு தெரியாது..எனக்கு எங்..காசு வந்தாகணும்..இப்பவே!".. ன்னு முன்னால நகர. மணி..ஊடாக.."தயளி காச வேங்கி தின்னுட்டு என்னென்னவோ பேசிட்டிருக்க".. ன்னுட்டு எந்திரிச்சவனை.. சேவியர் அண்ணன் பிடிச்சு அழுத்திட்டே அவன் எந்திரிச்சு இருவரையும் நெருங்குவதற்குள்.. ஏஜெண்ட்.. அருளோட நீட்டிய விரல தட்டியதும்..சட்டுனு அருள்..சடார்.. சடார்னு அவன் சென்னிலேயே.. ரெண்டு போடு..போட்டுட்டு.."ஒன்ன"..என்றபடியே..இடதுகையால் அவங்கழுத்த பிடிக்கப்போக.. ஏஜெண்ட் எழுந்து பின்னால போய் காலால் எத்த..மிதி.. சாரத்தில் சிக்கி..எழுந்துவந்த சேவியர் அண்ணன் மேல் விழுந்ததில் அவன் தடுமாறினான்.. அருள்.."தாயோளி".. ன்னுட்டு..ஓங்கி ஏஜெண்டோட வயித்துல..ஒரு..மிதி குதங்கிபோய் மல்லாக்க சரிந்த ஏஜெண்டின் நெஞ்சிலே மறுபடியும் மிதிக்க காலை தூக்கினான்.. அவ்வளவுதான்.. வெட்டுக்கிளிபோல வந்து விழுந்தாள்..ஏஜெண்ட் நெஞ்சுமேல.. "அண்ணே!..எங்கப்பாவ.. விட்டுறுணே! அண்ணே!..எங்கப்பாவ.. விட்டுறுணே அண்ணே! ஒண்ணும் பண்ணி..ராதண்ணே"! ன்னு..ஏஜெண்ட் மேல் கவுந்துகிடந்து கதறுகிறாள்.. முகமில்லை அவளுக்கு.. தலைகுனிந்து நிற்கிறான்.. அந்தரத்திலிருக்கும் அவன் பாதத்துக்கு கீழே..நைட்டி விலகிய தோள்பட்டை..பிரா பட்டி.. முழுவுடலும் கதறுகிறது.. அவ்வளவுதான்…… அலங்கோலமாக கிடந்த அவளோட கதறலை மட்டும் தூக்கிக்கொண்டு அருள் விடுவிடுன்னு வெளியேறிட்டான். விளிம்பில் மனிதர்களுக்கு ஒரு உணர்ச்சி வருமே "மயிரே போச்சு!..வர்றத பார்த்துக்கலாம்னு!"... அப்படித்தான் இருந்தது.. அருளோட நடை.. அப்போது. ஜெகன் மா ஆன்டணி அபுதாபி 02.04.2023

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.