எதிர் ரோமக்காரன்
தீபாவளியை வரவேற்கும் விதமாக பெய்திருந்த ஐப்பசி அடைமழை சாலையென்றும் , வீதியென்றும் , பாதையென்றும் பாகுபாடின்றி நனைத்திருந்தது. தொடர் மழையால்
ஈரம் போத்திய காற்று பாச வாசத்துடன் எதிர்ப்படுவோரை தழுவித் தொலைந்தது. விடிந்து வெகுநேரமாகியும் சனநடமாட்டம் அதிகமாக இல்லை. உறக்கம் வராத பெருசுகளும், சில வழுசப்பயல்களும் பார்வதியம்மன் பேக்கரியில் டீ சொல்லிவிட்டு , அன்றைய நாளிதழ்களில் தலை கவிழ்ந்திருந்தனர். அருள்மிகு அரவான் திருவிழாவின் துவக்கமாய் , கம்பம் நடுதலும் , பூச்சாட்டுதலும் நேற்றிரவுதான் ஊருக்குள் நிகழ்ந்திருந்தது. ஊரே ஒரு விழாக் கொண்டாட்ட மனநிலையில்தான் இருந்தது. பேக்கரி வாசலைத் தவிர மற்ற இடங்கள் குப்பை கூளங்கள் மண்டிக்கிடந்தது. தூய்மைப்பணியாளர்கள் இப்பொழுதுதான் கோவில் வாசலைச் சுத்தம் செய்தபடி இருந்தனர், வீதிகளைச் சுத்தம் செய்ய இன்னும் நேரமாகும். வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இரைந்தபடி சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது, சர்ர்ரென பைக்கில் வந்த மருது, நொடிநேரத்தில் அதை நிறுத்திவிட்டு , “ யோவ் , சமாச்சாரம் தெரியுமா? என்று பேக்கரி முதலாளியைக் கேட்டவாறு, ஓரமாய்க் கிடந்த நீல்கமலை இழுத்துபோட்டு அமர்ந்தான்.
“என்னடா, என்ன விஷயம்?
நம்ம சீயான் செத்துட்டான்யா.. ஒருவித பத்தட்டத்துடன் கூறினான்.
“டே ,என்னடா சொல்லுற, நேத்துக் காலம்பர புடிச்சு , முன்னாடி மரத்தடிலதாண்டா படுத்துக் கிடந்தான். ஆச்சர்யத்துடன் கேட்ட முதலாளியை,
“யோவ் , நானென்ன கதையா விடரேன். ஜெண்டா மேட்டுல செத்துக் கிடந்தானாம், கூலிவேலைக்குப் போறவங்க சொல்லி , அவங்க வீட்டுக்கு தகவல் போயிருக்கு, அவிய அண்ணிகாரி , எங்களுக்கு அவங்கூட ஒட்டுமில்ல ஒறவுமில்லன்னு சொல்லிட்டாளாம். மாநகராட்சில அனாதைப்பொணம்னு சொல்லி , பாடிய எடுத்திட்டுப்போக வண்டி வந்திருக்காம்யா. விசனத்துடன் கூறினான்.
அடப்பாவத்த, என்னடா இப்படியாகிப்போச்சு, ம்ம்ம்.. சரி அவன் இருந்து என்ன, இப்படியாச்சும் நிம்மதியாப் போய்ச் சேரட்டும். நீயி போயி பாத்துட்டு வந்தியாடா?
இல்லைய்யா, விசயம் கேள்விப்பட்டு நேரா இங்கதா வர்ரேன். வாய்யா ஒரெட்டுப் பாத்திட்டு வந்தர்ரலாம். கெஞ்சலொடு சொல்லியவனிடம், சட்டையை மாற்றிவிட்டு,
அருகிலிருக்கும் தெரிந்தவரிடம், கால்மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லி அவனுடன் புறப்பட்டார்.
நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் அரவான் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுவது இந்த ஊர் வழக்கம். ஊரில் பெரும்பாலானோர் கோனார் சாதியினர். மாடுகளை வைத்து சொசைட்டிக்கும், வீடுகளுக்கும் பால் ஊற்றும் பால்காரர்கள். சிலர் கிடைத்த வேலைக்கும், சிலர் வியாபரமும் செய்து வந்தனர். இவர்களோடு வேறு சமூகங்களும் ஒன்றிணைந்து வாழ்ந்துவந்தனர். தீபாவளியை விட அரவான் திருவிழாதான் இந்த ஊரில் சமூக சமத்துவ பண்டிகையாக ஆண்டுதோரும் நடைபெற்று வருகிறது. பதினெட்டு ஊர்களில் இருக்கும் மக்களுக்கான திருவிழாவாகும். பாரதப் போரில், பாண்டவர் அணி வெற்றிபெரும் பொருட்டு, அரச வழிவந்த வீரன் ஒருவனை களப்பலியிடவேண்டும். பாண்டவரில் ஒருவனான அர்ஜுனன் வேட்டைக்குச் செல்கையில், வழியில் கண்ட இளவரசி நாகாவுடன் உண்டான காதலால் பிறந்தவர்தான் அரவான் எனவும் , அவன் மற்றவர்களைப்போல் அல்லாமல் சிறந்த வீரனாகவும், எதிர்ரோமம் கொண்டவனாயும் விளங்கியிருக்கிறான். எனவே அவனைக் களப்பலி கொடுக்க முடிவு செய்து, அரவானின் தாயின் விருப்பமாய் அவனுக்கொரு திருமணம் செய்து வைத்து மூன்றாம் நாள் போருக்கு அனுப்பி களப்பலியிட முடிவு செய்திருந்தனர். திருமணம் ஆகி மூன்றாம் நாளே சாகும் ஒரு வீரனைக் கட்டிக்கொள்ள யார் முன் வருவர். எனவே மாயோனே, மோகினி என்னும் பெண் வேடம் பூண்டு அரவானைத் திருமணம் செய்துகொண்டதாகவும், ஊரினுள் ஒரு ஐதீகம் உலவியபடி இருந்தது. இந்த ஐதீகப்படியே, கோனார் சமூகத்தினர் தங்கள் குல இறைவன் மாயோனுக்கு மரியாதை செய்யும் பொருட்டு, ஆண்டுதோரும் இவ்விழாவினைச் சிறப்புடன் நடத்தியபடி இருந்தனர். இதன்படியே இவ்விழாவுக்கு உள்ளூரிலும் , வெளியூரிலும் இருந்து பல திருநங்கைகள் வந்திருந்து அரவானைக் கணவனாக பாவித்து தாலி அணிந்து, அரவான் களப்பலியாகும் மூன்றாம் நாள் அதை அறுத்து தங்களின் நேர்த்திக்கடனை முடித்துச் செல்வர்.
நானும், சுதாகரும், முருகேசனும் வகுப்புத் தோழர்கள். நாங்க்ள் அரசு உதவிபெறும் ஒரு மேனிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஆண்டும், திருவிழா நடைபெறும் அதே வாரத்தில்தான் பள்ளியில் இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும். ஊரே திருவிழாவில் மூழ்கிக்கிடைக்கையில் நாங்கள் மட்டும் மாங்குமாங்கென்று படித்துக்கொண்டிருப்போம். கல்லூரி சென்றபின் ஆசைதீர திருவிழாவில் சுற்றவேண்டுமென முடிவு செய்திருந்தோம். அதன்படி , கல்லூரியில் செமஸ்டர் தேர்வுக்கு படிக்க விடுமுறை அளித்திருந்தனர். எனவே பகலெல்லாம் படிக்கவும், இரவெல்லாம் திருவிழாவில் சுற்றவும் வீட்டில் அனுமதி பெற்றிருந்தோம். திருவிழா என்பதால் ஊருக்குள் மைக் செட் கட்டி, சாமி பாட்டில் துவங்கி சினிமா பாட்டுவரை போட்டு ஒரே இரைச்சலாக இருக்கும். எனவே அமைதியாகப் படிக்க என்ணி நாங்கள் ஊரின் எல்லையில் இருக்கும் ரயில் நிலையத்துக் சென்றுவிடுவோம். எங்களோடு முருகேசனின் உறவினன் தமிழும் வந்து இணைந்துகொள்வான். அவனுக்கு எங்களைவிட ஓரிரு வயது அதிகம். படிப்பும் இல்லை. சிறு வயதில் பெற்றோரை இழந்ததால், முருகேசன் வீட்டில் தங்கி கிடைத்த வேலைக்குச் சென்று வந்தான். அவனுக்கு ஊர் சம்பவம் எல்லாம் அத்துப்படி. சண்ட, தகராரு, வெட்டு, குத்து, காதல் சமாச்சார சம்பவங்களை விசாரித்து விரல் நுனியில் வைத்திருப்பான். நெருங்கிய நண்பர்கள பலர் இருப்பினும் எங்களோடு ஊர் சுற்றுவதில் அலாதிப்பிரியம் அவனுக்கு. இவ்வாராக ஒரு முறை படிப்பதற்காக இரயில் நிலையம் சென்றிருந்தோம். ஸ்டேஷன் மாஸ்டர் , எங்களுக்குப் பரிச்சயமானவர் என்பதால் படிப்பதற்கு பயணிகள் காத்திருக்கும் அறைக்குள் அனுமதிப்பார். 11 மணி பாசஞ்சர் இரயில் கடந்ததும், மீண்டும் அவர் 3 மணியளவில்தான் வருவார். அவர் வரும் வரை நாங்களே ஸ்டேஷனுக்கு முகாமைபோல் நடந்து கொள்வோம். அன்றும் அவ்வாறே படிக்கச் சென்றபொழுது, பயணிகள் அறை முகப்புச் சுவரின் மேல் யாரோ கரியால் எழுதியிருந்தனர். கொஞ்சம் அருகே சென்று நான்தான் அதைத் தெளிவாகப் படித்தேன். அதில் “ வாடி என்றேன் நீ வாடிவிட்டாய், நீ வாடி விட்டதால் நான் தாடி விட்டேன்” என எழுதியிருந்தது. எங்களுக்கோ அடக்கமுடியாத சிரிப்பு. “ டே, முருகேசா யார்ரா இத எழுதிருப்பா? என்றேன் நான். அதற்கு நம்ம சீயாந்தா எழுதுனது என்று தமிழ் கூறினான். என்னது சீயானா? என ஆச்சர்யப்பட்ட சுதாகரை, மரித்து தமிழு இவுனுகளுக்கு சீயான் கத தெரியாது அதான் வாயப் பொளக்குரானுக என்றான் முருகேசன். நான் சீயானைப் பாத்திருக்கிறேன். நீண்ட நாளாய் வெட்டாத தலை மயிருடன் , அது சடைவிழுந்து தலையெல்லாம் புண்ணாகி , காதுவரை சீழ் வழிந்து ,நடமாடிக்கொண்டு இருப்பார். இரக்க மனம் கொண்டோர் தரும் உணவுகளை உண்டு , சுடுகாட்டு மேடையிலோ அல்லது பயணிகள் அறையிலோ படுத்துக்கொள்வார். அவருக்கு ஒரு ப்ளாஷ் பேக் இருக்கும் என நான் நினைக்கவில்லை. தள்ளிப்போட முடியாத ஆவலுடன் , தமிழு என்னன்னு சொல்லுயா, இன்னைக்குப் படிக்காட்டிக் கிடக்குது, ஆவல்மேலிட தமிழை நச்சரிக்கத்துவங்கினேன். சரி நான் சொல்லுரேன் அதுக்கு நீ எனக்கு எதாச்சும் கைமாரு செய்யனுமே என்றான் அவன். நானும் உனக்கு என்ன வேணுமோ பண்றனய்யா என்றபடி அவனைப் பிடித்து உக்கார வைத்து , பெருகி வரும் வெள்ளத்தை, உள்வாங்கத் துவங்கும் நிலமென அவன் வார்த்தைக்கு காத்திருந்தேன். உடன் என்போலவே சுதாகரும். முருகேசனுக்கு அரசல்புரசலாக முன்னமே தெரிந்திருந்தாலும், அவனும் எங்களுடன் இனைந்துகொண்டது சுவார்ஸ்யத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றது.
சண்முகம் என்பதுதான் சீயானின் , நிஜப்பெயர். வீட்டுக்கு கடைசிப்பையன். பத்தைத் தாண்டாத படிப்பு. அண்ணன் ஒருவன் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளர். அம்மா மட்டும் அண்ணியுடன் பட்டத்தரசியம்மன் வீதியில் வசித்து வந்தான். கிடைத்த வேலைக்குச் சென்று கொண்டு இருந்தவனுக்கு , ஐந்தறிவு உயிரிகள்மேல் அவனுக்கொரு பாந்தம். அப்படிப்பட்ட சூழலில் நண்பனொருவனின் தொடர்பில் எல்லைத்தோட்ட வீதியில் தண்ணி வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் , தனபால் அண்ணனோடு பழக்கம் ஏற்பட்டிருந்தது. அவர் வீட்டில் ஆடு, மாடு, புறா வளர்த்தி வந்தார். இவன் சக சோக்காளிகலான, பல்லு பாபு, நடையான், டக்கர் செல்வம் உட்பட புறா வளர்த்தும் சிலரும் அங்கேதான் நேரங்காலம் பார்க்காமல் இருப்பர். என்நேரமும் புறா பத்திய பேச்சுக்களே நடந்தபடி இருக்கும். வெகுவிரைவில் அவர்களுடன் இவனும் அய்க்யமாகினான். குறிப்பாக தனபால் அண்ணனோடு நெருக்கமானான். ஆடுகலுக்கு மசால் தழை புடிங்கிக்கொண்டு வருவது, மாடுகளுக்கு புண்ணாக்கு, தவிடு கலந்து வைப்பது, புறா, கோழிகளுக்குத் தீவனம் போடுவது, பொழுது விழுந்தால் அவைகளைக் கூண்டுகளில் அடைப்பது உட்பட அனைத்து எடுபுடி வேலைகளையும் கச்சித்தமாக செய்துவந்தான்.தனபாலை ஊருக்குள் தண்ணி வண்டி தனபால் என்றால்தான் அடையாளம் தெரியும். ஊருக்கு குடிக்கும் தண்ணீர் மாநகராட்சி லாரியில் வாரம் ஒருமுரை வீதி கணக்கில் வந்துவிடும், மத்தபடி புழங்கப்புடிக்க உப்புத்தண்ணியைத் தான் நம்பவேண்டியிருக்கும். சிறிய அளவு உணவகம், பேக்கரி, வொர்க்சாப், சில நடுத்தர குடும்பங்கள் தனபாலிடம்தான் வண்டித்தண்ணி வாங்கிக் கொள்வர். ஒரு மூன்று கிலோமீட்டர் தள்ளி முத்தமேடு என்ற இடத்தில் கிணறிலிருந்து நீரை, ஒற்றை எருது பூட்டிய வண்டியில் நிரப்பி, கொண்டுவருவார். வெய்யில் கலத்தைப்போல, மழைதுளி காலங்களில் அவ்வளவு டிமாண்ட் இருக்காது. ஆனால் ஊருக்குள் திருவிழா என்றால், ஒரே நாளில் பத்து நடை அடிக்க வேண்டி இருக்கும், அவ்வாரான ஒரு தினத்தில்தான் அவருக்கு உடம்புக்கு முடியாமல் போக , படுத்து விட்டார். வண்டி பூட்டி தண்ணி நடை அடிக்க ஆளின்றி , வண்டித் தண்ணி வேண்டுவோரிடம் , சமாளிக்க முடியாமல் திணறியபடி இருந்தார் .அப்பொழுது தான் வண்டி பூட்டி தண்ணி நடை அடிப்பதாக தனபாலிடம் சண்முகம் கெஞ்சினான் ,
“ சம்முவா ,நீ தெரிஞ்சுதாம் பேசுரியா?, ஏற்கனவே , மாதாரிப் பையன ஊட்டுக்குள்ள விட்டு புழங்கரியான்னு ஈசு ஈசா கேக்குரானுக, அத நாம் பெருசா எடுத்துக்கல. இப்ப நீ வண்டிய ஓட்டிட்டு போயி தண்ணி உட்டா அவனுக , தண்ணியவே வேண்டான்னு சொல்லிருவானுகலேடா?
நாங்குளிச்சிட்டு புது ட்ரெஸ் போட்டு போறேன் , வண்டிய, நிறுத்திட்டு நின்னுக்கறேன், அவிங்களே வந்து பைப்ப போட்டு தொட்டிய ரொப்பிக்க சொல்லுங்க.
நீ சொல்ரது , சக்கரன்னு எழுதி நக்குனாப்டி இருக்கு, போடா..போயி வேற வேலையப் பாரு என்றபடி படுத்துக் கொண்டார். இவனுக்கு மனம் ஒப்பவில்லை, வீட்டுக்குச் சென்று குளித்து நல்ல உடை மாற்றிவிட்டு வந்து, அவர் அசந்து தூங்குவதை உறுதி செய்துவிட்டு, எருதை வண்டியில் பூட்டி தண்ணி நடைக்கு கிளம்பலானான்.
சண்முகம் நடிகர் ராம்கியின் தீவிர ரசிகன், சின்னப்பூவே மெல்லப்பேசு துவங்கி, அடுத்து வந்த மருது பாண்டியில் தீவிர ரசிகன் ஆகிவிட்டான். ராம்கி போலவெ முடி வெட்டு, நடை ,உடையென ஆழ்ந்துபோனான். எப்பொழுதும் சட்டைக்கு மேலே ஒரு துப்பட்டா, அதுவும் சட்டைக்கு பொருத்தமாக ராம்கி ஸ்டைலில் அணிவது வழக்கமாகிப்போனது. இதே உடையில்தான், வண்டியை ஓட்டிக்கொண்டு முத்தமேடு சென்றான், எருதை அதட்டி தண்ணி விழும் குழாய்க்கு நேராக வண்டியை நிறுத்திவிட்டு, கிணத்துக்காரரை நோக்கிச் சென்றவன்,
“ அய்யா, எம்பேரு சம்முவம், தனபால் அண்ணனுக்கு , மேலுக்குச் சொகமில்லைங்க, அதான் என்னிய தண்ணிக்கு தாட்டி உட்டாருங்க..நானு அவுரு ஊட்ல வேலை செய்ரனுங்க என்றான் பவ்யமாக
ஓஹோ..நீதா அந்த மாதாரிப்பய்யனா, நல்லா நடிகனாட்டாத்தாண்ட சோக்கா இருக்க, இருக்காதா பின்ன, நீயெல்லாம் தண்ணி வண்டி ஓட்டுறதே , ஏரோப்பிளேன் ஓட்டறதுக்குச் சமம். ரொம்ப நெனப்பா திரியாதடா, எதோ தன்பாலோட நல்ல மனசுக்கு உன்ன ஏத்துகிட்டான் , அவங்கப்பங் காலத்தில இருந்தே எங்ககிட்ட இருந்து தண்ணிபிடிச்சு ஊருக்கு ஊத்துறதால , ஒரு மரியாத வச்சிருக்கோம், காப்பாத்திக்க, என்று எகத்தாளம் கலந்த தொனியில் எச்சரித்தார்.
ம்ம்ம், கொட்டிவிட்டு , எருதின் பக்கம் நின்றபடி அதன் கீழ்கழுத்தை நீவி விட்டு, கண்ணுக்குள் இருக்கும் புரை , சிறு தூசுகளை விரலால் நெண்டி நீக்கினான். கண்ணுக்குள் விரல் விட்டதும் எருது முரண்டுபிடிக்க, ஹோவ், ஹோவ்.. முடிஞ்ச்சு, முடிஞ்ச்சு, என்று கொஞ்சியபடி, முதுகை தேய்த்துவிட்டு, பிடிகயிறை சரிசெய்தான், அதற்குள் தண்ணீர் நிறைந்துவிட, மொத நடை செட்டியார் தோட்டத்துக்கு ஊத்திரனும் என மனதில் நினைத்தவாறே எருதை முடிக்கிவிட்டு , சிறு ஓட்டத்தோடு குதித்தேறி வண்டியில் அமர்ந்தான்.
கிணத்துக்காரன் சொன்னதுபோல், அவனுக்கு ஏரோப்பிளேன் ஓட்டுவதுபோலத்தான் பட்டது. நம்மை ஏன் இப்படிப் பேசுகறார்கள், நாம் ஏன் இதை எதிர்த்துப் பேசவில்லை போன்ற கேள்விகள் அவன் மனதில் எழவில்லை. தண்ணி வண்டி மீது ஏறி நின்று எருதை வழி நடத்துவதே அவனுக்கு வான் உயரமாகப் பட்டது.
செட்டியார் தோட்டம் என்றில்லாமல், அங்கிருக்கும் பல தோட்டத்திலும், சப்பைத் தண்ணி கிணற்றுப் பாசனம்தான். முத்தமேட்டுத் தண்ணி ஒன்று மட்டுமே புழங்க புடிக்கச் சௌகர்யப்படும் என்பதால் , தெனம் ஒரு நடை தோட்டத்திற்கு வாங்கிவிடுவர். சண்முகம் நினைத்தபடியே செட்டியார் தோட்டத்திற்கு வண்டியை ஓட்டி வந்திருந்தான், தோட்டக்காரன், தொட்டிக்கு நேராக வண்டியை நிறுத்தி பைப் போட்டுவிட சொன்னான். அவனுக்குத் தன்னை யாரென்று தெரியாதுபோல, என மனதிற்குள் மகிழ்ந்தபடி பைப்பை தொட்டிக்குப் போட்டு விட்டு, காற்று அடைத்துவிடாமலிருக்க, வண்டியின் மேல்மூடியை லேசாக உள்ளங்கையால் தட்டி திறந்து வைத்தான். எருது நகராமலிருக்க வண்டியின் சக்கரம் இரண்டுக்கும் அடியில் கல்லை அணைகொடுத்துவிட்டு, மூத்திரம் பெய்துவர தோட்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் புதருக்கு அருகில் சென்றான். சுற்று முற்றும் பார்த்துவிட்டு பேண்ட் ஜிப்பை அவிழ்க்கும் நேரம் ,
“யாரப்பா அது, பொம்பள புள்ளைக இருக்கிரது கண்ணுக்குத் தெரிலியா?, வந்ததும் தூக்கிபிடிச்சு நிக்கிற.. என்றது ஒரு வயசான குரல். குரலின் கம்பீரத்தில், மூத்திரம் உள்வாங்கிக் கொண்டது. வேற எங்கினாச்சும் போயிக்கலாம் என்றபடி திரும்பி சென்றபோது, “ அய்யோ, பாவம்டி. என்றது ஒரு குரல், கொஞ்சம் சிரிப்பு சத்தங்களும் கூட, குரல் வந்த திசையில் பார்த்தான் அங்கே, புவனா , தனது தோழிகளுடன் நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது. இட்லிக்காரம்மாவின் , ஒரே பேத்தி, மில்லுக்கு வேலைக்குச் செல்கிறாள். இன்னைக்கு வேலைக்குப் போகாம இங்க என்ன பண்றாளுக, மனசுக்குள் நினைத்தபடி, மானம் போச்சே என்று நெற்றியில் அடித்துக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்து, தண்ணி வண்டியை ஓட்டிக்கொண்டு அடுத்த நடைக்குக் கிளம்பினான். அடுத்தடுத்த நடையிலும் யாரும் எதுவும் சொல்ல வில்லை, இருப்பினும் சண்முகம் வண்டி பூட்டிச் சென்ற விசயம் தனபால் காதுகளுக்கு எட்டியது, இன்னைக்கு வரட்டும் அவனை ஒரு வழி பண்றேன் என்று சுத்தியிருக்கும் நபர்களிடம் கொக்கறித்தபடி இருந்தார். அவர்களுக்கு, சண்முகனுக்கு கிடைத்த முக்கியத்துவம் நமக்கு கிட்டவில்லையே என்ற பொறாமையில், தனபாலை ஏத்தி விட்டபடி இருந்தனர். சரியான நேரத்தில் வண்டியோடு வந்த சண்முகன், வண்டியிலிருந்து இறங்கி, எருதையும், வண்டியையும் தனியே பிரித்து, எருதுக்கு , தண்ணி காட்டி , முதுகு கழுத்தை நீவிவிட்டு, சோளப்பூட்டை அதனருகில் போட்டுவிட்டு, தண்ணி வண்டியை அதனிட்த்தில் நிறுத்திவிட்டு, அதன் சக்கரம், பைப் முதலியவற்றை சரி பார்த்துவிட்டு, தனபாலிடம் வந்தான்.
ஏண்டா..நான் ஒன்னு சொன்னா நீ ஒன்னு செய்வியா, தராதரம் இல்லாம உன்னப் பக்கத்துல சேத்ததுக்கு நல்ல மருவாத பண்ணிருக்கடா , யாரக்கேட்டுடா , நீ வண்டிய பூட்டுன.. சூடான வார்த்தைகளை அவனிடம் வீசினார். குழுமியிருந்த சோக்காளிகளுக்கு குழுகுழுவென இருந்தது. சண்முகனோ “ நோம்பி நாளும் அதுவும் தன்னியில்லாமத் தவிக்கிறோம், இவம்பாட்டுக்கு மலந்து படுத்துட்டான்னு, ஊர்க்காரங்க உங்களைப் பேசுனாங்க, காது கொடுத்து கேட்கமுடிலெங்ணா, அதான் இப்படிப் பண்ணிட்டேன், தப்புன்னா , மன்னுச்சுக்கங்க்னு, சாஸ்டாங்கமாக காலில் விழுந்து அழுதான். “ண்ணா, இவன் நல்லா நடிக்கிரானுங்க், இவன வளைச்சு முடிக்கியுடுங்க என்றான் விஷமத்துடன் பல்லு பாபு, அவன் சகாக்களும் அதயே ஆமோதித்தனர்.
“ இங்க பார்ரா சம்முகம், இனிமெ ஊட்டுப்பக்கம் வராத, வந்தின்னா எனக்குக் கெட்ட கொவம் வரும் நீ கெளம்புடா..
“ண்ணா, ஒருதரம் என்ன மன்னிச்சுடுங்னா.. “ மயிராண்டி கெளம்புடான்னா, நாயக் குளிப்பாட்டி நடு ஊட்ல வச்சாலும், பொச்ச நக்கர புத்தி போவாதும்பாங்க, வார்த்தை முடிவதற்குள் கேட்டைவிட்டு வெளியேறி இருந்தான்.
பின்பு வந்த நாற்களிலும், அவரால் வண்டி பூட்ட முடியவில்லை, நல்ல நாயம் பேசிய எவனும் அவருக்கு உதவ வரவில்லை, தனக்குச் சரியாகும்வரை, வேரொரு வண்டிக்காரரை ஏற்பாடு செய்தும், அதுவும் செட் ஆகவில்லை. ஊரினர் திட்டத் துவங்கினர். வேறு வழியில்லாமல், சண்முகத்தை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். ஓடோடி வந்தவன்..” ண்ணா, கூப்டிங்லாமா?, ம்ம், ஆமாண்டா, காலம்பரத்தில இருந்து வண்டிய பூட்டி தண்ணி நடை அடிச்சுக்க, சம்பளம் தாரேன்..பழைய சம்முகானாட்டம் இருக்கக் கூடாது, நீ இப்ப எங்கிட்ட வேலசெய்யுர வேலக்காரன் அம்புட்டுதேன். குதூகலமாய் ஏற்றுக்கொண்டான். வண்டியவும், எருதயும் பராமரிக்கதும் உன்வேல, என்றதும் கண்ணீர்மல்க, இருகரம் கூப்பி நன்றி சொன்னான். ஒரு நாளில் ஆறு நடையென , எருதுக்கும் வண்டிக்கும் சிரமம் தராமல், கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான். சம்பளம் வாங்கி வீட்டில் குடுத்ததுபோக, தனக்குப் பிடித்த எல்லாம் செய்யத் துவங்கினான். இதனிடையே, புவனா வேலை செய்யும் மில்லுக்கு வண்டித் தண்ணி கேட்டு ஆள் அனுப்பியிருந்தார்கள். தனபால் சம்மத்ததுடன் அங்கும் தண்ணி ஊற்றினான். அப்பொழுது, புவனாவை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது, இவன் மற்றவர்களைப்போல் அல்லாமல், ஒரு கதாநாயகத் தோரணையில் வண்டி ஓட்டி வருவதால், புவனாவுக்கு இவன்மேல் ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. மில்லுக்கு தண்ணி ஊற்றும் தருவாயிலும், செட்டியார் தோட்த்திலும், சந்தையிலும் என கிடைக்கும் வய்ப்புகளிலெல்லாம், சந்தித்து காதலைப் பகிர்ந்து மகிழ்ந்திருந்தனர். செந்தூரப் பூவே படம் வந்த புதிதில், தன்னை ராம்கியாகவும், நிரோஷாவை புவனாவாகவும் பாவித்து, கனவில் மிதக்கத் துவங்கினான். நாள்பட்ட சந்திப்பு ஒருனால் அரசல் புரசலாக ஊருக்குள் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியது. எப்படியோ, விசயத்தை மோப்பம் பிடித்துக் கொண்ட பல்லு பாபு வகையறா, தனபாலிடம் இவ்விசயத்தை கண்ணும் , காதும் வைத்து உருப்பெருக்கி விட்டனர். அவரும் தனது சாதி சனத்தை பகைத்துக்கொள்ள வெண்டாம் என முடிவெடுத்து சண்முகத்தை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்.
செந்தூரப்பூவே படத்தில் தனது ஆதர்ச நாயகனின் காதலை சேர்த்துவைக்க வரும் கேப்டன் போல யாரும் இல்லையே என சண்முகம் ஏங்கிக்கிடந்தான். அந்நேரம் புவனா தனக்கு வீட்டில் வேறு ஒருவரை திரும்ணம் செய்துவைக்க முயற்சிப்பதால், உடனடியாக சந்திக்க வேண்டும் எனவும் , ஜெண்டாமேட்டுக்கு அதிகாலையில் வரச்சொல்லியும் தகவல் அனுப்பியிருந்தாள். ஜெண்டாமேட்டு மண்தான் அரவான் சாமியின் திருநீராகும். சாமிக்கு தேங்காய்பழம் சாத்திய பின் பூசாரி தரும் திருநீரில் அந்த மண் கலந்திருக்கும். அந்த இடத்திற்குத்தான் புவனா வரச்சொல்லி இருந்தாள். சூரியன் தன் இரவுப்போர்வையை விலக்கும் முன்னமே அங்கு புவனாவுக்காக காத்திருந்தான், அவளும் தனது தோழியுடன் அங்கே வந்திருந்தாள்.
“ நல்லாருக்கியா புவனா?. குரல் கம்மியது சண்முகனுக்கு ,
“ நீயில்லைன்னா, நான் செத்திருவண்டா, என்ன எங்கையாச்சும் கூட்டிட்டு, போயிருடா.. என்னால முடில, ஹும்ம்ம்..ஆஆ என வெடித்து அழுதாள்..
முன்பேச்சு ஏதுமின்றி இருவரும் , ஆரத்தழுவி, அழுதனர், சுவாசத்தை அடைத்திருந்த கவலைக்கல் மெல்ல கரையத்துவங்கியது இருவரிடமும். இவ்விடத்தில் நெடுநேரம் நின்று பேசமுடியாது என்பதை இருவரும் அறிந்து இருந்தனர். எனவே, இருவரின் முடிவுப்படி நாளையே ,ஊரைவிட்டு செல்வதென்றும், அதிகாலை, 5 மணிக்கு வரும் பாசஞ்சரில் கிளம்புவதென்றும் முடிவானது.
அதிகாலை 5 மணிக்கு இரயில் நிலையம் இவ்வளவு பேரமைதியுடன் உறங்கிக்கொண்டிருக்கும் என்பதை சண்முகன் அறிந்ததில்லை, ஒருவித பதட்டம், பயம் கலந்து இதயம் துடிப்பதை அவனே உணரமுடிந்தது. ரயிலேரிட்டா போதும், பின்பு எல்லாம் சரியாகிவிடும் என்று அவனுக்கு அவனே ஆறுதல் அடைந்துகொண்டான். நாம போன பின்னாடி, அம்மா என்ன பண்ணுவா, அண்ணன் என்ன நினைப்பான், போன்ற இவ்வளவு நாள் இல்லாத பெரும் பதற்றம் உடலுக்குல் ஊடுருவியது. துணி எடுத்து வந்திருந்த பையைக் கொஞ்சம் இறுகப்பற்றிக்கொண்டான். தூரத்தில் யாரோ, முக்காடிட்டு வருவதுபோல தோன்றியது, அவன் நின்றுகொண்டிருந்த இடத்தின் அருகிலிருந்த வேப்பமரத்தில் உறங்கிகொண்டிருந்த பறவைகள் கத்தத் துவங்கின, அதே போல அருகிருக்கும் மரங்களில் இருந்தும் கீச்சுச் சத்தங்கள், அது என்ன என்று பார்க்க முனைகையில் கண நேரத்தில் மரத்திலிருந்து, பத்து பதினைந்து பேர் குதித்து சண்முகனைச் சுற்றி வளைத்திருந்தனர். அதிலொருவன் பல்லு பாபு , அவந்தான், இவர்கள் ஊரைவிட்டு ஓடிப்போவதை மோப்பம் பிடித்து ஊராரிடம் தெரிவித்தவன். மொத்தக் கூட்டத்திலிருந்த ஒருவனின் குரலுக்கு ஒப்ப சரமாரியாக சண்முகனைத் தாக்கத் துவங்கியிருந்தனர். “ எச்சக்கல நாயே.. நீ மினுக்கீட்டு திரீரப்பவே தெரியும்டா,, எங்கூட்டு சோத்துல கைவைப்பீன்னு, எல்லாம் இந்த தனபாலச் செருப்புல போடணும் அவங்குடுத்த எடம்தான,..” தண்ணி வண்டி ஓட்ரானாக்கும்னு பாத்தா, தண்டெழுப்பிட்டு சுத்தீட்டு இருந்திருக்கான்..அவஞ்சாமானத்த அத்தெரிங்கடா, மாதாரி நாயிக்கு எங்க்கூட்டுப்புள்ள கேக்குதோ .. வஞ்சம் தோய்ந்த வார்த்தைகளோடு ஈவிரக்கமற்ற சரமாரி தாகுதலி நிலைகுலைந்து போனான். சண்முகன் அய்யோ, அம்மா என்ன விட்டுடுங்க , வலி தாங்கல என்றெல்லாம் கெஞ்சவில்லை , கதரவில்லை. புவனாவின் மேலான காதல் அவனுக்கு எதையும் தாங்கும் ஒரு கம்பீரத்தைத் தந்து இருந்தது உண்மை. உச்சகட்ட தாக்குதலுக்கு இடையில்,
“ டேய்.. இருங்கடா அவன் செத்துகித்துப் போறான் என்றார் ஒரு பெரியவர்.
அவனக் கொல்லாம இப்படியெ விட்டுர்ரதா.. நீ அக்கட்டால போ பெருசு..
கொத்துயிரும், கொலை உயிருமாய்க் கிடக்கும் ஒருவன் முன்னே , இவர்கள் பேசிக்கொண்டு இருந்தது வன்மத்தின் உச்சமெனப் பட்டது.
அவன் அப்படியே கிடக்கட்டும், தலைவரும் , பெரிய ஊட்டுக்காரரும் வரட்டும் இவன என்ன பண்லாம்னு ஒரு வார்த்த கேட்டர்லாம் , என்றது பெருசு. அதற்குள் அவர்களே கோவில் பூசாரியொடு அங்கே வந்திருந்தனர். சவமெனக் கிடந்த சண்முகத்தை விளக்கு வெளிச்சத்தில் கொண்டு வந்து கிடத்தினர்.. மூவரும் அவனை ஒரு புழுவெனப் பார்த்தனர், பூசாரி மட்டும் கொஞ்சம் நெருக்கமாய், அவனருகில் சென்று ரத்தம் தோய்ந்த அவன் சட்டையை விலக்கி அவன் மார்பினைப் பார்த்து, திடுக்கிட்டவராய், தலைவரையும், பெரிய வீட்டுக்காரையும் தனியே அழைத்து ஆலோசனை செய்து விட்டு வந்து , “ டேய்.. தம்பிகா, இவன இப்படியே விட்ரலாம்டா,, நம்ம புள்ளையை நாம் சரி பண்ணிக்கலாம், இனி அவன் வேலை செய்து பிழைக்க முடியாது, இவனக் கொன்னு நாம சாமிகுத்தம் பண்ணிக்க வேணாம் ,,எல்லாரும் போங்க.. என்றார். பூசாரியின் வார்த்தையையே வழிமொழிந்தனர் மற்ற இருவரும். அதோடு, காவல்துறை அதிகாரியை அழைத்து, நிலைமையைச் சொல்லி இவனை அவர்களிடம் ஒப்படைப்பது என்றும் முடிவாகியது. பெண் சம்பந்தப்பட்ட சிலர்மேல் பேருக்காய் வழக்கு பதியப்பட்டு, சில மாதத்தில் அது முடித்தும் வைக்கப் பட்டது. சண்முகன் பெரிய ஆசுபத்திரியில் இருந்து ஒரு மாத கால சிகிச்சை முடிந்து வருகையில், புவனாவை வேரு ஒருவருக்கு கட்டிவைக்க முயன்று, அவள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவனை வீட்டுக்குள் சேர்க்கக்கூடாது என்ற ஊராரின் உத்தரவின் பெயரில், வீட்டிலிருப்பவர்கள் அவனை சேர்க்க வில்லை என்றும்..அதனாலேயே அவன் பைத்தியமாகி சுற்றித்திரிந்து இறந்துபோனான் என்றும் தமிழ் சொல்லி முடிக்க , அவர்களை எப்படியாச்சும் சேர்த்திருக்கலாம் என்ற எண்ணம் மனதுக்குள் உலவியது. கதை கேட்டதில் நேரம் ஆனதே தெரியவில்லை.. வீட்டுக்குக் கிளம்பினோம். வழியில் பார்வதி அம்மன் பேக்கரி வந்ததும் , முருகேசன் டீ சாப்பிடலாம் என்றான். நால்வரும் உள்ளே சென்று டீ சொல்லிவிட்டு அமைதியாக இருந்தோம், கடை முழுவதும் , இறந்துபோன சீயானைப் பற்றியே ஆட்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அதிலொருவர்,” என்ன மொதலாளி, சீயானப் போயி கடைசியாப் பாத்திட்டு, அஞ்சலி செலுத்திட்டு வந்தீங்களாம்.. கேள்விப்பட்டேன் என கேலித் தொனியில் கேட்டார், “ அடப் பின்ன நம்ம கட முன்னாடியே ரொம்ப வருசமா கெடக்குறவன், அதான் மனசு கேட்கல, போயிப் பாத்திட்டு வந்துட்டேன்..அதுல , பாரு அவனுக்கு நம்மல போல இல்லாம, எதுத்தெசல மசுரு மொளச்சிருக்கியா.. நா, இத்தன நாளா இத கவனிக்கல..என்றதும், டீ குடித்துக் கொண்டிருந்த நாங்கள் நால்வரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
............................................................................................................................................................................. மகிவனி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்