logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

K POOBALAN

சிறுகதை வரிசை எண் # 130


நாட்டைத்தேடி........ கரு.பூபாலன் ஏங்க! பெங்களுர் போறீங்க, கார்ல இன்சூரன்சு, ஆர்.சி.புக்கு இருக்கான்னு பாத்துக்குங்க. அப்புறம், ரிசப்சன் பத்திரிக்கைய எடுத்துக்கிட்டீங்களா! ஹெட் லைட், பிரேக்க செக் பண்ணிக்கிங்க. சுகர், பிரஸர் மாத்திரைய டைமுக்கு சாப்பிடுங்க. தண்ணி பாட்டில எடுத்துக்கிட்டிங்களா! உங்க கண்கண்ணாடிய காணோமே, இருங்க எடுத்திட்டு வரேன். வழியில சேலத்தில உங்க பிரண்டு கோபால்சாமி பைபாசில நிற்கிறேன்னு சொன்னாரே, மறந்திராம கூட்டிக்கிட்டு போங்க. சேலம் வரைக்கும் தனியா போறிங்க. கவனமா வண்டி ஓட்டுங்க, தூக்கம் வந்தா, வழியில ஓரமா நிறுத்தி ஒரு மணி நேரம் தூங்கிட்டு வண்டிய எடுங்க. அவ்வளவு தானா? ரிசப்சனுக்கு நீட்டா டிரஸ் பண்ணிட்டு போங்க. பெரிய இடம். காமா சோமான்னு போவாதிங்க. சரி. சரி போயிட்டு வர்ரேன். எனது ஸ்கோடா-சிலேவியா வெள்ளை நிற கார் அவனாசி சாலையில் பறந்தது. எத்தனை வருடங்கள்! கிட்டத்தட்ட 50 வருடங்கள்! இலங்கையிலிருந்து சிதறடிக்கப்பட்ட நாங்கள், நண்பர்கள் இன்று வரை நேரில் சந்திக்காவிட்டாலும் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே ஸ்கூல், ஒரே கல்லூரி என்று வாழ்ந்த நாங்கள், இன்று உலகமெங்கும் பரந்து விரிந்து இருக்கிறோம். பழைய நண்பர்களை இன்று சந்திக்கப் போகிறேன். வண்டி ஓடுவதை விட, என் மனம் வேகமாக பழைய நினைவுகளை நோக்கி ஓடியது. வருடம் 1976 , ராமானுஜம் கப்பலில் நாங்கள் தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கப்பலில் புறப்பட்டோம். ஒரே ஓலம், ஒப்பாரி, அழுகை சத்தம். கரையில் நின்று கை அசைத்தவர்களை பார்த்து அண்ணா, அக்கா, அம்மா என்று கத்திய சப்தம் கப்பலுக்கு கேட்கவில்லை. என்ன வுட்டுட்டு போறிங்களே! இது கடவுளுக்கே அடுக்குமா? அழுது, புரண்டு, களைத்து, மயங்கி பேய் அறைந்த மாதிரி வீழ்ந்து கிடந்தார்கள். விசும்பல் சத்தம் ஆடி அடங்கியது. அங்கே ஒரு கீச்சுக் குரல். காதை கொஞ்சம் நீட்டினேன். அப்பா.....அப்பா நாம ஏன் இந்தியா போறம்? நாமெல்லாம் நாடற்றவர்கள்! இந்தியர்களாம்! அதான் தமிழ்நாட்டுக்கு அனுப்புறாங்க. ஏங்கப்பா. நீங்க எந்த ஊருல பிறந்திங்க. இலங்கையில. நம்ம தாத்தா? இலங்கையில. நான் எங்க பிறந்தேன்? நீயும் இலங்கையில தாம்மா. அப்ப எப்பிடிப்பா, நாம நாடற்றவர்கள்? நம்ம நாடு இலங்கை தானேப்பா? இல்லம்மா, கொள்ளு தாத்தா ஊரு திருச்சி பக்கத்தில் உள்ள பெரம்பலூராம். நாம இந்திய தமிழராம். அப்ப கொள்ளு தாத்தா ஏன் இங்க வந்தாங்க? அந்த காலத்தில் பெரம்பலூருல பஞ்சம் தலை விரித்தாடியது. வேலை வாய்ப்பு இல்ல. கஞ்சிக்காக ஓடாத இடமில்லை. அதுல சாதிக் கொடுமைகள் வேறு , அப்பதான் கூட்டங்கூட்டமா சிலோனுக்கு வேலைக்கு போனாங்க . பிரித்தானியர்களின் காலனி நாடான சிலோன்ல நல்ல வேலை கிடைக்கும். கை நிறைய காசு கிடைக்கும். தேங்காயும், மாசியும் கொட்டி கிடக்கிறதுன்னு. இடைத்தரகர்களான கங்காணிமார்களின் ஆசை வார்த்தைகளால், கொள்ளு தாத்தாவும், ஒங்க கொள்ளு பாட்டிய கூட்டிகிட்டு சிலோனுக்கு வந்தாராம். அப்ப சிலோன்ல நல்ல சாப்பாடு நல்ல வேலையெல்லாம் கிடைச்சுதாப்பா? அந்த சோகத்த வேற சொல்லனுமா? தலைமன்னாருள்ள இருந்து, இன்று மலையகம்னு சொல்ற, அன்று காடாக இருந்த இடத்துக்கு , கால்நடையாகவே நடந்து சென்றார்களாம். வர்ற வழியிலேயே,கொள்ளு பாட்டிய விசுபாம்பு கடிச்சு இறந்துட்டாங்களாம். இறந்த சடலத்த பொதைக்கனுமுன்னு சொன்னதற்கு அப்பிடியே காட்டுல தூக்கி போட்டுட்டு வா என்று கங்காணி சொன்னானாம். கேள்வி கேட்டதற்கு சவுக்கடியும், உதையும் தான் கிடச்சதாம். பெரம்பலூரிலிருந்து வந்த பாதி பேர் காட்டு வழியில் நடக்கும்போது நோய் நொடியால் பாதிக்கப்பட்டு இறந்தும் போனார்களாம். இந்த மக்கள் தான் , காட்டை அழித்து காப்பி , தேயிலை , ரப்பர் போன்ற பணப்பயிர்களை உருவாக்கித் தந்தார்களாம். அதே மாதிரி நம்ம மக்கள் தொகையும் அன்று அதிகமாகவே இருந்தது. சிங்கள அரசியல்வாதிகள் எங்கே இவர்கள் சனத் தொகையினால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார்களோ என்று நமது ஓட்டுரிமையையும், பிரஜா உரிமையையும் பறித்து நாடற்றவர்கள் ஆக்கியது . அப்பா , நீங்களெல்லாம் சேர்ந்து போராடலயா? அதுக்கு எங்கம்மா அறிவு இருந்திச்சி. எங்கள கேக்காமலேயே இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தம் போட்டுரிச்சு. இவ்வளவு நாள் பிறந்து வளர்ந்த நாட்டவுட்டுட்டு போக எப்படியப்பா மனசு வந்துச்சு? எனக்கு மட்டுமல்ல .இந்த கப்பல்ல உள்ள யாருக்கும் விருப்பம் இருக்காது. பாஸ்போட் முடிய போகுதுன்னு எஸ்டேட்ல பலவந்தமா கப்பலேத்திட்டாங்க. ஆனா ஒன்னு மட்டும் உறுதி. என்னுடைய சாவு எப்ப இருந்தாலும் இந்த மண்ணுல தான் இருக்கனும். சும்மா இருங்கப்பா. நம் ஊர்ல அதான் பெரம்பலூர்ல வீடு, நெலம் ஏதாச்சும் இருக்காப்பா? ஒண்ணுமேயில்லம்மா. இந்திய அரசு ஏதோ புனர்வாழ்வுன்னு உதவி செய்ராங்லாம். அங்கு ஒரு நீண்ட அமைதி. கப்பலுக்குள் தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்று ஒவ்வொரு குடும்பத்தினரையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். கப்பலின் ஒரு மூலையில் ஒரு இளைஞன் கை, கால்களை சுருட்டி ஒரு நத்தையை போல் கிடைந்தான். அட முத்தையா மாதிரி இருக்கானே! தட்டி எழுப்பினேன். ஒரே அலறல் "நா இந்தியாவுக்கு வரல. இந்தியாவுக்கு வரல " நடுநடுங்கி உட்கார்ந்தான். மச்சான் முத்தையா! என்னடா மறந்திட்ட போல , ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அட்டன்ல படித்தோமே. நீ மல்லியப்பு எஸ்டேட் தானே? இரயில்ல ஒன்னா போவமே. விதியை பார்த்தியா? இப்ப ரெண்டு பேருமே இந்தியா போறோம். இப்போது தெம்பாக பேச ஆரம்பித்தான். " மச்சான். எனக்கு இந்தியா போக பிடிக்கல. இங்கு பிறந்த நம் இளமை கால அனுபவங்கள், ஆசைகள் இனி எந்த நாட்டில் கிடைக்கப்போகுது. ரெண்டு வருசத்தில படிப்பு முடிச்ச உடனே எங்க அப்பாவும், அம்மாவும் இறந்துட்டாங்க . அதே எஸ்டேட்ல தேயில தோட்டத்தில அந்த லயன் வீட்ட உட்ர கூடாதுன்னு தோட்ட தொழிலாளியா வேலை செய்தேன். ஆனா , ஒன்னு மட்டும் உறுதி. என்னைக்காவது ஒரு நாள் இந்த மல்லியப்பு மண்ண தேடி வருவேன் .ஒரே சத்தம். அங்க பாருங்க இராமேஸ்வரம்! எல்லாரும் கையெடுத்து கும்பிட்டார்கள். கப்பல் கரையை தொட்டது! "சாவு கிராக்கி, வூட்டுல சொல்லிட்டு வந்தியா? வண்டிய பாத்து ஓட்டு" என்ற சத்தத்தில் சுதாகரித்துக் கொண்டேன். சேலத்திற்கு செல்ல இன்னும் 20 கி.மீ.தூரம் உள்ளது . சேலம் பைபாஸில் நின்ற நண்பன் கோபால்சாமியை ஏற்றிக் கொண்டு வண்டி மீண்டும் சீறியது! பெங்களூர் நோக்கி ! ஓசூரில் டீக்காக வண்டியை நிறுத்தி கொஞ்சம் ஓய்வு . மச்சான் கோபால் எப்படி இருக்க? வீட்டில சகோதரி, பசங்க? நீ என்னப்பா பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்‌. பையன் வேற ஐடி கம்பெனி . நீ மட்டும் என்னவாம் ஒன்றிய அரசுல பெரிய உத்தியோகத்தில இருக்கிற. பையனும், பொண்ணும் டெல்லியில பெரிய உத்தியோகத்தில் இருக்காங்க! சரி .... முத்தையாப் பத்தி சொல்லு? உன்னோட கப்பல்ல வந்த முத்தையா எப்படி அமெரிக்கா போனான்? இராமேசுவரம் வந்து இறங்கிய பின்னர் , மண்டப முகாமில் தங்காமல், நேரடியாக அரியலூர் தொழில்பயிற்சி நிலையத்திற்கு சென்று, பற்றாக்குறை உதவித்தொகையும் , உணவு ஒத்துக்கொள்ளாமலும், வெயில் தாக்கு பிடிக்க முடியாமல் தமிழ்நாடு , கேரளா, பெங்களூர் சென்று டீக்கடையிலும், புடவைக்கடையிலும், பழக்கடையிலும் மாறி மாறி வேலை பார்த்து , சமாளிக்க முடியாமல் வெளிநாடு சென்றால் சம்பாரிக்கலாமென்று கனடா, சிங்கப்பூர் கடைசியில் அமெரிக்கா சென்றானாம். பாத்திரம் முதல் பாத்ரூம் கழுவும் வேலைகளையும் செய்தானாம். அமெரிக்காவில் ஒரு அமெரிக்க நண்பர் மூலமாக, சவுதி இந்தியன் ரெஸ்டாரண்ட் ஆரம்பித்து, இன்று பல கிளைகளை ஆரம்பித்து செல்வ செழிப்போடு இருக்கான். இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு தமிழ்பெண்ணை தான் திருமணம் செய்திருக்கான். எப்ப பேசினாலும் இலங்கைக்கு போவனுமின்னு தான் சொல்வான். சரி, அதவிடு. இலங்கை இப்ப எப்பிடி இருக்கு? அரிசி, தக்காளி, பருப்பு எல்லாமே கிலோவிற்கு ஐநூறுக்கு மேலே போயிருச்சாம். நம்ம மலையக மக்களுக்கு சாப்பாடு தான் பிரச்சனையாம் . இன்னும் அதே குறைந்த கூலிதானாம். எப்ப விடியுமோ? அதிகமா கஷ்டப்படறது மலையக மக்கள் தானாம் . ஆமாம் மச்சான் நானும் கேள்விப்பட்டேன் . நாம படிச்ச ஸ்கூல் காலேஜ் இப்ப பெரிய கட்டிடமாச்சாம். போனவருசம் நம்மோட படிச்சானே மணி போயிட்டு வந்து சொன்னான். சின்ன வயசுல நம்ம தேயில தோட்டத்தில பார்த்த காமன் கூத்து, அருச்சுணன் தபசு, பொன்னர்-சங்கர் எல்லாம் ஞாபகம் இருக்கா? மச்சான் அத மறக்க முடியுமா? இரவு 8 மணிக்கு தொடங்கி விடியும் வரை நடக்கும் காமன் கூத்து நிகழ்ச்சி என்றாலே இளவட்டங்களுக்கு ஒரே ஆனந்தம் தான்! நீ கூட அவ பேரு என்ன? சுத்திக்கிட்டே இருப்பியே! டேய் மச்சான் , அவதான்டா இப்போ என் மனைவி சூப்பர்டா! சரி யு.எஸ்.ஏ. முத்தையா பையன் ரிசப்சனுக்கு யாரெல்லாம் கூப்பிட்டிருக்கான்? குறிப்பிட்ட அளவு தான் . பெங்களூர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரிசப்சன். அழைப்பிதழ் பார்த்திருப்பியே. பையன் யு.எஸ்.ஏயில கம்பெனியில செக்ரட்டரியாம். கட்ட போற பொண்ணு ஒரு அமெரிக்கா காரியாம் .லவ் மேரேஜ் தான். நம்ம எல்லோருக்கும் அங்கேயே தனித் தனி ரூம் போட்டிருக்கான். ஒரு ரூம்க்கு 8000 + ஜி.எஸ்.டி யாம்‌! நம்மளோட படிச்சு, பழகிய நண்பர்களுக்கு மட்டும் தான். ஆஸ்திரேலியாவிலிருந்து குணசேகரன், லண்டனிலிருந்து நீலவர்ணன், ஜெர்மனிலிருந்து செல்வநாதன், கனடாவிலிருந்து சங்கரலிங்கம் , அந்தமானிலிருந்து லாரன்ஸ், மாலத்தீவிலிருந்து ராஜாங்கம் , மொரிசியசிலிருந்து முகமது மற்றும் முத்தையாவோட யு.எஸ்.ஏ. பிரண்ட்ஸ். ஏகப்பட்ட செலவாகுமே! அவனுக்கென்ன? பெரிய தொழிலதிபர்! சொத்துக்கு அளவே இல்லை. பெரிய ஆளாயிட்டான்பா! ரிசப்சன் முடிந்து பொண்ணும், மாப்பிள்ளையும், ஹனிமூனுக்கு சுவிட்சர்லாந்து போறாங்களாம். முத்தையா, தமிழ்நாடு, ஸ்ரீலங்கா போயி , அப்புறமா யு.எஸ்.ஏ. போறானாம். சரி லேட்டாயிடுச்சு 5.30 குள்ள பெங்களூர் போகனும். 6.01 லிருந்து 8.00 மணி வரை தான் ரிசப்சன். ஓசூரிலிருந்து கூகுள் அக்கா மேப்பின் வழிகாட்டுதலோடு வந்து நட்சத்திர ஹோட்டல் முன் கார் நின்றது. செக்யூரிட்டி செக் முடிந்து பத்தாவது மாடிக்கு பவ்வியமாக இரண்டு இளம் அழகிகள் அழைத்துச் சென்றார்கள். ஹால் களை கட்டியிருந்தது. மெல்லிசை காதுகளை தடவிக் கொண்டிருந்தது. லைட் ஊதா கலரில் மின்னொளி வீசியது! சொர்க்கமே வந்துவிட்டது போல கலர் கலராக ஒவ்வொருவரும் அழகி போட்டியில் நடப்பது போல அசைந்து கொண்டிருந்தார்கள். மச்சான் முத்தையா எங்கடா? பாரு நம்மள பாத்துட்டு ஓடி வரான்! கல்லூரியில் படித்த, பார்த்த ஞாபகம். எலும்பும் தோலுமாக இருந்த முத்தையாவா இவன்? தொப்பையோடு கோட்டும் சூட்டுமாக மல்லிகை வாசனை மணக்க அப்படியே கட்டி அனணத்ததில் எங்கே என் எலும்புகள் முறிந்து விடுமோ என்றிருந்தது! இருவர் மட்டுமல்ல, எங்கள் நண்பர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் முட்டியது . எத்தனை ஆண்டுகள் நாம் பிரிந்து, 50 வருடம் இருக்குமா? நாம் படித்து விட்டு வேலையில்லாமல் தேயிலை காட்டுக்கு வேலைக்கு போனது , மகாவலி கங்கையில் குளித்து ஆட்டம் போட்டது‌. உடரட்டமெனிக்கே ரயிலில் எல்லாரும் குறும்புகள் செய்தது இவையெல்லாம் ஒவ்வொன்றாய் மனதில் அசை போட்டது . இன்று முத்தையாவை பார்க்கும் போது அவன் சொன்னது ஞாபகம் வந்தது .ஒரு நாள் இந்த மல்லியப்பு எஸ்டேட் துரை மாதிரி நானும் வரவேன் என்று . ஆமாம். இன்று எனக்கு முத்தையா ஆஜானுபாகுவான துரையாகத்தான் தெரிகிறான். எல்லாமே நேரப்படி நடந்து முடிந்தது. எல்லாருமே சாப்பிட்டு 8.30 க்குள் அவரவர் ரூமிலும், வெளியே செல்பவர்களும் சென்று விட்டு பின்னர், எங்கள் நண்பர்கள் குழுவைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. மச்சான்களே! வாங்க நம்ம மினி ஹாலுக்கு போகலாம். அது நமக்கு மட்டும் தான். மினி ஹாலின் மின்னொலியில் அரைகுறையான வெளிச்சத்தில் அமர்ந்தோம். விதவிதமான உணவுகள் ! கலர் கலரான பாட்டில்கள் ! மதுபானங்கள்! கிளாஸ்களின் மோதலும், நண்பர்களின் நக்கலும் ரம்மியமாகத்தான் இருந்தது. முத்தையா அமெரிக்க குடியுரிமை பெற்றதும் சங்கரலிங்கம் கனடா குடியுரிமை பெற்றதும், நாங்கள் அனைவரும் இப்போது வசிக்கும் நாடுகளிலேயே குடியுரிமை பெற்றது பற்றியும், தங்கள் வாழ்க்கையில் முன்னேறியது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். சரி கோபால் இங்குள்ள முகாமிலுள்ள அகதிகள் நிலை எப்படி? 30-40 வருடம் இங்கேயே பிறந்து, படித்து இலங்கையை பற்றி தெரியாத முகாமிலுள்ள பிள்ளைகளின் நிலைமை ? ஆமாம், அது ஒரு கேள்விக் குறிதான்! நாம் எப்படி நமது இளமை பருவத்தை இலங்கையில் தொலைத்து விட்டு அந்த நினைவுகளோடு, நாடுகளைத் தேடி அலைந்தோமே! அப்படித்தான் இந்த அகதிகளும். இடையிடையே கிளாஸ்களின் மோதல் ஒலித்துக் கொண்டிருந்தது! பிறந்தது முதல் ஒரு நாட்டில் வசித்து, வாழ்ந்து, காதலித்த தன் நாட்டிலிருந்து 25 வயதில் உங்களை துரத்தினால் உங்கள் மனம் எப்படி இருக்கும் ? இது முத்தையா . உலகத் தலைவர்களே! உங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகடா ஆக்காதீர்கள்! அவரவர் வாழ்ந்த, பிறந்த தேசத்திலே நிம்மதியாக வாழ அனுமதியுங்கள்! எல்லா உரிமைகளையும் எல்லோருக்கும் சமமாக கொடுங்கள், நீங்கள் இன ,மொழி ,சாதி பாகுபாட்டால் பலரை தூரத்தியபோது கடலில் படகுகளில் கரைந்து போனவர்கள் ஏராளம். இரவு மணி இரண்டு. அனைவரும் அவரவர் அறைகளில் அடைக்கலமானோம். மறுநாள் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் கண்ணீர் மல்க பிரிந்தோம். அடுத்த ஒரு பயணமாக, நாம் இளமைக்கால வாழ்க்கை வாழ்ந்த சிறிலங்காவிற்கு பயணம் செய்வோம் என்று உறுதி பூண்டோம். நம் இறுதிக் காலம் இலங்கையில் இருந்தால் மகிழ்ச்சியே ! மச்சான்களே! ஊருக்கு போனவுடன் போன் பண்ணுங்க, நான் தமிழ்நாட்டுக்கு சென்று திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாளையும், பழனி முருகனையும் தரிசித்து விட்டு ஒரு மாத இலங்கை வாசம். பின்னர் அமெரிக்கா செல்லப் போகிறேன்-இது முத்தையா ஒரு மாதத்திற்கு பின்னர் வாட்சப் செய்தி வந்தது . இலங்கை மல்லியப்பு தோட்டத்தில் பிறந்தவரும் , அமெரிக்க பாஸ்போட்டை கொண்டவருமான முத்தையா என்ற தொழில் அதிபர் மகாவலிகங்கை ஆற்றின் கரையில் ஒரு கையில் பாஸ்போர்ட்டும் , மறுகையில் ஒரு கைப்பிடி மண்ணையும் பற்றிக்கொண்டு இறந்து கிடந்தார். உயிரற்ற உடலை எந்த நாட்டுக்கு அனுப்புவது என்று காவல்துறை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது!

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.