Rhohithkumar Rajendran
சிறுகதை வரிசை எண்
# 129
புழுக்கம்
அப்பொழுது தான் அவளுக்கு மயக்கம் தெளிஞ்சிருந்தது. கைகள் கயித்துக் கட்டிலின் மேல் குத்துக்காலில் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. கயித்துக் கட்டிலின் கீழுள்ள இடது குத்துக்காலில் அவளின் இடது காலையும் அவளின் வலது காலை கயித்துக் கட்டிலின் வலது குத்துக்காலிலும் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. கத்த முயற்சித்தாள், ஆனால் முடியவில்லை. வாயின் நடுவில் ஒரு துணியை வைத்து கத்த முடியாதது போல் திணித்து அதோடு சேர்த்து கட்டிலின் கயிற்றில் கட்டப்பட்டிருந்தது. அவள் துள்ளிக் கொண்டே இருந்தாள். கட்டில் சற்று ஆடியது “கீச்” என்ற சத்தத்துடன் கொஞ்சமாக நகர்ந்தது. முதுகில் கயிரின் அச்சு திட்டு திட்டாக பதிந்திருந்தது. தலை கயிருடன் இறுக பிணைக்கப்பட்டிருந்தது. நரக வேதனை என்பது இதுதானோ என்று உணர்ந்தாள் அவள். கண்ணில் தண்ணீர் அருவியாக ஊற்றிக் கொண்டிருந்தது. உடல் புழுக்கத்தால் வியர்த்ததா இல்லை மனதின் பயத்தால் வியர்த்ததா என்று தெரியவில்லை. சிகரெட்டின் நாத்தம் அவள் மூக்கில் ஏறியது. அவளுக்கு பரிட்சியம் இல்லாத பல வாசனைகளும் அதனுடன் சேர்ந்து வந்தது.
லேசான காற்று அடித்தது ஓலைகளில் “சர சர” என்று சத்தம் கேட்டது. அதை வைத்து தான் அவள் இருப்பது ஒரு குடிசை என்ற முடிவுக்கு வந்தாள். குடிசையில் இருள் பரவி இருந்தது எந்த ஒரு இண்டு இடுக்குகளிலும் கூட வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை. பயம் மேலும் அதிகரித்தது. லேசான காற்று இதம் தரும் என்று அவள் அவ்வப்போது அவளின் நண்பிகளிடம் கூறினது இப்போது நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த முறை அது பயத்தை மேலும் அதிகரித்தது. குளிக்கும்போது அவளின் உடலைப் பார்த்து ரசிக்காத நாளில்லை ஆனால் இன்று தன் உடல் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து பயந்தாள். அருவருப்புற்றாள். தன் உடலை வெறுத்தாள். ஏன் பயம்? ஏன் அருவருப்பு? ஏன் வெறுப்பு? என்ற கேள்விகளுக்கு அவளிடம் விடை இல்லை. எறும்புகள் அவளின் உறுப்பின் மேல் ஊர்வது போல் உணர்ந்தாள் அது பிரம்மையா? இல்லை உண்மையா? என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசை அது. சுற்றிலும் கரும்பு காடு. கரும்பு வெட்டுக்கு கரும்புகள் தயாராக இருந்தது. வெட்டப்படும் கரும்புகள் அனைத்தும் பக்கத்திலுள்ள கரும்பாலையில் எடுத்துக் கொள்வார்கள். கரும்பு இன்ஸ்பெக்டர் வந்து கரும்பை பார்த்துவிட்டு இது வெட்டுக் தயாராக உள்ளது என்று சொன்னால் மட்டுமே வெட்டுவார்கள். கரும்பு வெட்டுவதற்கும் ஆட்கள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. "நூறு நாள் வேல வந்ததும் வந்துச்சு ஒருத்தரும் வேலைக்கே வரமாட்டிங்குது" என்று காடு வைத்திருப்பவர்கள் அவரவர் ஆதங்கத்தை பொதுவில் கூறி தங்களின் கோவத்தை தீர்த்துக் கொள்வார்கள். கரும்பு அழகாக வரிசைப் படுத்தி நடப் பட்டிருந்தது. ஒவ்வொரு கொத்தயும் கட்டி வைத்திருக்கப்பட்டிருந்தது. சோவை எல்லாவற்றையும் பிடிங்கிவிடப் பட்டிருந்தது. ஆள் ஒசரத்தையும் தாண்டி வளந்து நின்றது கரும்புகள். உப்பு, மண் வெட்டி, கடப்பாரை, போன்றவற்றை அந்த குடிசையில் தான் வைத்திருப்பார் அந்த காட்டின் உரிமையாளர். அவ்வப்போது குடிசையிலேயே தங்க நேரிடும் என்பதால் கயித்துக் கட்டில் ஒன்றை அங்கேயே வைத்திருந்தார்.
அங்கு எப்பொழுதும் ஆள் நடமாட்டமே இருப்பது இல்லை. வாரத்துக்கு ஒரு முறை தண்ணி காட்டுவதற்காக மட்டும் அங்கேயே சேகர் தங்குவது வழக்கம். அந்த குடிசையிலிருந்து தார் ரோட்டிற்கு செல்ல அரை கல் தொலைவு செல்ல வேண்டும். அவ்வப்போது ஓரிரு இருசக்கர வாகனங்கள் மட்டுமே அந்த சாலையில் போக வர இருக்கும். கரும்பு ஆளுயரத்திற்கு வளந்திருந்ததால் அந்த குடிசையை யாராலும் கண்டுபிடிக்க கூட முடியாது. வேலிகள் ஏதும் போடாமல் இருந்ததால் மது அருந்துவதற்கு வாகான இடம் அது, யாரும் தொந்தரவும் செய்யா மாட்டார்கள். ஒருமுறை சேகர் தண்ணி காட்டுவதற்காக அங்கே வந்த போது மூன்று பேர் அங்கே மது அருந்துவதை பார்த்து அது கைகலப்பில் முடிந்தது. அதன்பின் வேறுயாரும் அங்கே வருவதில்லை.
குடிசையின் வெளியில் ராமசாமியும் கோவிந்தனும் கையில் சிகரெட்டை வைத்து நின்றுக் கொண்டிருந்தார்கள். ராமசாமியின் ஒரு கையில் சிகரெட்டும் மறு கையில் மதுபானம் கொண்ட கோப்பை இருந்தது. கையிலிருந்த சிகரெட்டை வாயில் வைத்து புகையை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு வாயை "ஓ" என்று சொல்வது போல் திறந்து புகையை வெளியேற்றினான். மறு கையில் வைத்திருந்த கோப்பையை ஒரு மிடறு மட்டும் குடித்துவிட்டு "எங்க டா இன்னும் காணோம்" என்றான் தடத்தைப் பார்த்தபடி. "அதான் நானு பாக்கறேன், வந்தானா சட்டு புட்டுன்னு வேலைய முடிச்சிட்டு போய்டலாமுன்னு" என்று நிறுத்தி விட்டு "வரமாட்டிங்குறானே" என்றான் கோவிந்தன். கோவிந்தன் "இரு உள்ளாரா போய் தேங்கா இருக்கான்னு பார்க்கறேன்" என்றான். "ம்" என்ற சத்தம் மட்டும் வந்தது ராமசாமியின் வாயிலிருந்து. அவன் முகம் புகையின் நடுவே மங்கலாக தெரிந்தது கோவிந்தனுக்கு.
உடனே குடிசையின் தகர கதவை திறந்தான் "கீரீச்" என்ற சத்தம் விட்டு விட்டு வந்தது. அவள் திடுக்கிட்டாள். நெஞ்சிலிருந்து எதோ புரியாத பயம் திடீரென்று அதிகரித்தது. "யாரு யாரு" என்று சொல்வது போல் அவள் சத்தம் இருந்தது ஆனால் அது என்னவென்று சரிவர தெரியவில்லை. அவளின் வாயில் இருந்த கயிறுதான் அதற்கு காரணம். கண்ணீர் சிந்தினாள் அவள். அவன் ஏதும் பேசாமல் அவளின் கட்டிலின் அருகில் சென்றான். குடிசை முழுக்க இருள் பரவியிருந்தாலும் அவனால் அவள் எங்கிருக்கிறாள் என்று ஊகிக்க முடிந்தது. அதற்கு அவள் பேசியதும் ஒரு காரணம். இன்னொன்று அவன் தான் அவளை அங்கே தூக்கி வந்து போட்டான்.
கட்டிலின் பக்கம் சென்ற கோவிந்தன் குத்து மதிப்பாக அவன் கையை வைத்தான் அது அவளின் இடுப்பு பகுதி. அவன் கை நரணரவென்றிந்தது. அவன் கண்களுக்கு இருட்டு மட்டுமே பிராதானமாக தெரிந்தாலும் அவன் “சொர சொர” கைகளால் அவளை உணர்ந்தான். காமம் அதிகரித்தது அவனுள். அவளின் உடல் கூசிற்று. திடுக்கிட்டு கத்த முயன்றாள். ஆனால் தொண்டை வறண்டு போனது. தொண்டை நன்றாக இருந்தால் கூட அவளால் இப்பொழுது கத்த முடியாது. கோவிந்தன் கை இடுப்பிலிருந்து அவளின் தொண்டைக் குழி வரை தடவினான். பயத்தில் அவளுக்கு மேல் மூச்சு வாங்கியது. அடி வயிறு உள்ளிழுத்து வெளி வந்தது. அவனுக்கு அது ஆர்வமாக இருந்தது இப்படி செய்ய.
"டேய்...வா டா" என்றான் ராமசாமி. முகத்தை சுளித்துக் கொண்டு "ச்ச... இவனொருத்தன், சிவ பூஜையில் கரடி போல" என்று மனதில் நினைத்துக் கொண்டு. "ம்" என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான். அவளை பயம் பிடித்திருந்தது. இங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பது அவளின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் மூளை உன்னால் இங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்று அழுத்தமாக சொல்லியது அதுதான் உண்மை என்று நம்பவும் செய்தாள். இன்று என்னை கற்பழிக்க போகிறார்கள் என்ற பயம் ஒருபுறம் என்றாலும் மறுபுறம் உயிரோட என்னை விட்டுவிடுவார்களா? இல்லை இங்கேயே என்னை கொன்றுவிடுவார்களா? கன்னித்தன்மை போனாலும் போகுது உசுரோட விட்டுட்டா கூட பரவாயில்லை என்றெல்லாம் அவளின் எண்ண அலைகள் ஓடின. இப்படி அவளின் எண்ண அலைகள் அங்கும் இங்கும் ஓட கண்ணிலிருந்து நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருந்தது.
கோவிந்தன் வெளியே கதவை திறந்தான் "கிரீச்" என்ற சத்தம். தகர கதவு கல்லில் பட்டு வந்த சத்தம் காதை பிளந்தது. "டேய்...அறிவு கெட்டவனே...மெதுவா பண்ணுடா...ஆறாவது இந்த சத்தம் கேட்டு வந்தர போறாங்க" ஆவேசமாக மெதுவாக திட்டினான் ராமசாமி. "ஆமாம்மா...இந்த காட்டுக் குள்ள இந்த சத்தம் கேட்டு தான் ஓடியாரங்க..." என்று முணுமுணுத்தான். ராமசாமிக்கு இந்த இடம் மிகவும் பரிட்சயமானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவன் இங்கே தான் தங்கல். இரவு பத்து மணிக்கு வருவான் விடியுமுன் கிளம்பிவிடுவான். ராமசாமி வரும்போது ஒரு பெண்ணையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவான். அந்த ஊரில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வராததைப் போல் பார்த்துக் கொள்வான். அவன் வந்ததும் வண்டியை யாரும் பார்க்காத படி மறைத்து வைக்க ஓர் இடத்தையும் பார்த்து வைத்திருக்கிறான். குடிசைக்கு நடக்கும் பாதையில் வண்டியை விடுவான், குடிசையின் பின்புறம் வண்டி நிறுத்துவதற்காக ஒதுக்கிய இடமோ என்னவோ தெரியவில்லை ஆனால் அந்த இடத்தில் தான் எப்போதும் நிறுத்துவான். ராமசாமி சேகருக்கு பழக்கம் ஆகி ஓர் ஆண்டுக்குள் தான் இருக்கும். இதற்கு முன் மூன்று முறை இங்கு வந்த பழக்கம் அவனுக்கு.
சேகர் பெண்கள் விஷயத்தில் படு மோசம். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அவனுக்கு முப்பத்தி மூன்று வயது ஆனால் இன்னும் கலீயாணம் ஆகவில்லை. அவன் பார்வையில் பெண்கள் என்றால் தன்னை சந்தோஷப்படுத்த, சமையல் செய்ய, வீட்டு வேலைகளைச் செய்ய, தன் மனம் கோனாதபடி நடந்துக் கொள்ள என்பது தான் அவன் எண்ணம். சேகருக்கு கூட பிறந்தவர்கள் ஒரு தம்பியும் ஒரு தங்கையும். தம்பியின் மேல் துளியும் பாசம் இல்லை. ஆனால், தங்கையின் மேல் பாசம் அதிகம். தம்பீ வெளியூரில் கண்ணாடி ஜன்னல் வைத்த நிறுவனத்தில் பணிபுரிந்தான். பின் அங்கேயே தன் மனதுக்கு பிடித்த பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டான். அதனால் அவனை வீட்டில் சேர்க்கவில்லை. அவன் காதல் திருமணம் செய்ததால் சேகருக்கு பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. அப்படியே வந்தாலும் பொருத்தம் செரி வரவில்லை என்று ஒதுங்கினார்கள். அதனாலும் கூட அவனுக்கு அவன் தம்பியின் மேல் பெரிதும் கோபம் உண்டாக காரணமாக இருக்கலாம். தங்கை இப்போது தான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள். அவளும் யாரையாவது கூட்டிக் கொண்டு ஓடிவிடுவளோ என்ற பயத்தால் அவர்களின் அப்பா அவளுக்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் தங்கைக்காக பரிந்து பேசி அவள் படிப்பை முடிக்கட்டும் என்று அவளுக்காக வாதாடினான். தனக்கு ஏதும் செரி வரவில்லை என்ற ஏக்கம் அவன் மனதில் எப்போதும் இருக்கும். அப்போது ஒரு முறை அதை மறக்க குடிக்க பார்க்கு சென்றான். அந்த இடத்தில் தான் ராமசாமியை சந்தித்தான். அதிலிருந்து அவனுக்கு பிடித்ததை போல் பெண்களை கூட்டிக் கொண்டு வருவான். அடிக்கடி வந்தால் சந்தேகம் ஏற்படும் என்பதால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டிக் கொண்டு வருவான். என்னதான் ஒரு வருட பழக்கம் என்றாலும் அது வெறும் ஓர் இரவு பழக்கம் மட்டுமே. பெண்களை பற்றி பேசி சிலாகித்துக் கொள்வார்கள். காம வேட்டையில் சேகர் ஈடுபடும்போது ராமசாமி சாராயம் குடித்துக் கொண்டிருப்பான். ஆனால் அளவாக மட்டுமே குடிப்பான். ஒரு முறை அளவுக்கு மீறி குடித்துவிட்டு அவனும் அவன் கூட்டி வந்த பெண்ணும் அடுத்த நாள் இரவையும் அங்கேயே கழித்துவிட்டும் சென்றதுண்டு. என்னதான் ராமசாமி அங்கே சேகருடன் இருந்தாலும் அந்தரங்கமாக பேசினாலும் அவனின் குடும்பம் பற்றியோ அவன் எங்கிருக்கிறான் என்பது பற்றியோ ஏதும் தெரியாது. தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும் அவனிடம் இல்லை. அவனுக்கு செய்யும் வேலைக்கு கூலி கிடைத்தால் போதும் என்பது தான் அவனின் மனநிலையாக இருந்தது. சேகரும் அவனைப் பற்றியும் அவனின் குடும்பத்தைப் பற்றியும் கேட்கவில்லை. சேகரின் வீட்டிலிருந்து இருபது கல் தொலைவில் தான் அவர்கள் காடு இருக்கிறது. அதை விற்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தவன் தான் சேகர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த காட்டை பார்க்க வீட்டிலிருந்து வர வேண்டும் என்பதால் இதை விற்கலாம் என்ற யோசனையைக் கூறினான் சேகர். ஆனால் இது தான் சுயமாக பிடித்த காடு. அதுவும் கலியாணம் ஆகி தனது சேமிப்பில் பிடித்த காடு என்பதால் அதை விற்க அவருக்கு மனம் ஒப்பவில்லை. மறுத்துவிட்டார்.
தண்ணீ முறை நாள் அன்றுதான் எப்போதும் ராமசாமி வருவான்.
எல்லாம் முடித்துவிட்டு அவனும் சந்தோசமாக இருப்பான். விடியும் முன்னரே ராமசாமி கெளம்பிவிடுவது வழக்கம். போன முறை சேகர் "இதெல்லாம் நெறய பேர பாத்தவளா இருக்குது...எனக்குப் புதுசா எளசா வேணும்...அடுத்த முறை அப்பிடி யாரையாச்சும் கொண்டா" என்றான் முழு போதையில். அதற்காகவே இன்று அவன் கேட்டதைப் போல் ஒரு பெண்ணை வழுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்தான். பணம் நிறைய கிடைக்கும் இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பது அவனின் நோக்கமாக இருந்தது. பிரச்சனை வராமல் ஒரு திட்டத்தோடு தான் தூக்கி வருவதற்கு கோவிந்தனை நியமித்தான். கோவிந்தனுக்கு காசு ஏதும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் ஒரு காரணம். வேலையையும் சரியாக அவனே பார்த்துக்கொள்வான். இரவு பத்து மணிக்கு குடிசையில் கையில் சாராய பாட்டிலுடன் எப்போதும் காத்திருப்பான் சேகர். ஆனால், இன்று அதற்கு மாறாக ராமசாமி காத்துக்கொண்டிருந்தான்.
புல்லட் வண்டியின் சத்தம் கேட்டது. சேகர் தான் வருகிறான் என்பது ராமசாமிக்கு தெளிவாக தெரிந்தது. ஒருவர் மட்டும் நடந்து செல்வதற்காக விடபட்ட இடத்தில் அவன் ஓடி எட்டி பார்த்தான். வண்டியை ஒட்டும் விதத்தை வைத்து அவன்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டான். வண்டி பக்கம் வர வர சத்தம் அதிகரித்தது. வண்டி நேராக வராமல் கொஞ்சம் கோணலும் மானலுமாக வந்தது. ராமசாமியின் கால்களுக்கு பக்கத்தில் வண்டியை நிறுத்தினான். "என்ன ராமா, அதுங்காட்டியும் வந்துட்ட போலிருக்குது" என்றான் ராமசாமியை பார்த்தவாறே. சேகர் பேசும்போதே வாயிலிருந்து சாராய வாடை நன்றாக வீசியது. சேகர் தாமதமாக வந்ததற்கு இதுதான் காரணம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். "ஆமாங்க, உங்களுக்காக தா இன்னிக்கு கொஞ்சம் வெரசாவே வந்தேன்னுங்க" என்றான்.
வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு ஒருவர் பின் ஒருவராக இருவரும் குடிசைக்கு சென்றார்கள். சேகரின் கண்கள் சிவந்து இருந்தது. சுயநினைவு இருக்கும்படியாக தான் சாராயம் குடித்து இருக்கிறான். "நீங்க கேட்ட மாதிரியே எளசா பாத்துக் கொண்டாந்து இருக்கரெனுங்க, காசு கொஞ்சம் சேத்தி வேனும்ங்க" என்றான் நேராக சேகரைப் பார்த்தவாறே. இதை எதையும் கண்டுக் கொள்ளாமல் கோவிந்தன் சேகருக்கு அடுத்து நான் தான் உள்ளேச் செல்ல வேண்டும் என்பதற்காக தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான். "செரி டா...கொண்டாந்து இருக்கேன்...எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ" என்றவன் சட்டையை அவிழ்த்தான். புழுக்கம். உடல் முழுதும் வியர்வை. சாராயத்தால் வந்ததா இல்லை காற்று அவ்வளவாக வீசாததால் வந்த வியர்வையா என்று தெரியவில்லை. முண்டாசு பனியன் போடவில்லை. தயாராக தான் வந்திருக்கிறான் போல. ஏனென்றால் சேகரின் உடம்பில் பனியன் போடும் அச்சு தெரிந்தது. இங்கே வருவதற்காகவே தயாராக வந்திருக்கிறான்.
சட்டையைக் கழட்டி ராமனிடம் கொடுத்தான். கைபேசி மணி ஒலித்தது. யாரென்று பார்த்தான் சரிவர தெரியவில்லை. ராமசாமி பார்த்து கூறினான் யாரென்று. "அம்மாங்க ஐயா" என்றான். "ம்...எடுக்காத" என்று சொல்லிவிட்டு பிறகு உள்ளே நுழைந்தான். கோவிந்தன் சரக்கென்று வந்து "அடுத்து நான் தான் போவேன்" என்றான் அழுத்தமாக. "ம்" என்று மட்டும் சொன்னான் ராமன்.
அவளின் உடம்பில் புழுக்கமும் பயமும் கலந்த வியர்வை அருவியாக கொட்டியது. "என்னடா ராமா கரெண்ட்டு இல்லீயா" என்று உளரியது போல் கேட்டான். "இல்லீங்க ஐயா" என்றான். "இதுக்கு எதுக்கு கரெண்டு" என்று முணுமுணுத்துக் கொண்டான். அவளுக்கு குரல் நன்றாக கேட்கவில்லை. காதுகள் அடைப்பது போல் தோன்றியது. பயம். மேலும் பயம். அதற்கு மேலும் பயம். நெஞ்சில் புதுவித பயம் குடி கொண்டது. அந்த குரலை யாரென்று தேடினாள். அவன் அவ்வளுவு கத்தியும் அவளுக்கு அது மெல்லமாகவே கேட்டது. மனதில் தேடினாள். அவன் வேட்டியை அவிழ்த்தான். உள்ளாடை எதுவும் போடவில்லை. இன்று இங்கு தங்கிவிட்டு அடுத்த நாள் கிணற்றில் குளியலைப் போட்டுவிட்டு கிளம்புவது தான் பழக்கம் அதனால் உள்ளாடை எப்பொழுதும் போடுவதில்லை. மேலுள்ள குண்டு பல்ப் அவன் தலையில் மோதியது.
தள்ளாடிய படியே கட்டிலின் பக்கம் வந்து நின்றான். வெளியிலிருந்து சத்தம் கேட்டது. "என்ன டா" என்றான். ராமசாமி பேசுவது சேகருக்கு புரியவில்லை. கதவை மெல்ல திறந்து "ஐயா அம்மா..." என்று இழுத்தான். "அப்பிடி ஓரமா அத போட்டுட்டு போ" என்றான். ஓரமாக உப்பு மூட்டை ஒன்று இருந்தது அதன் மேல் அதை வைத்துவிட்டு, கதவை மூடிவிட்டு வெளியில் சென்றான்.
கட்டிலின் ஒரு பக்க குத்துக்காலை பிடித்து நின்றான் சேகர். அவன் அந்த கட்டிலை பிடித்த விதம் அவளுக்கு தன்னையே அடித்து நொறுக்குவது போல் தோன்றியது. அவளுக்கு வலது பக்கத்தில் நின்றிருந்தான். மேலுள்ள குண்டு பல்ப் மின்னி மின்னி எரிந்தது. கரெண்ட் வந்ததும் போய்விட்டது போல கண்கள் கூசீற்று. அவளுக்கும் கண்கள் மயமய வென்றிந்தது. பத்து வினாடிகளுக்கு பிறகு பல்ப்பு பிரகாசமாக எரிந்தது. கண்கள் கூசியதை கைகள் வைத்து கண்களை மறைத்தான். மெல்ல கண்களுக்கு ஒளி பலகிற்று. அவள் கண்களை திறந்து திறந்து மூடினாள். இருவரின் கண்களும் வெளிச்சத்திற்கு பழகியது. நேருக்கு நேர் பார்த்தனர்.
அவள் கண்கள் அவளை ஏமாற்றியது என்றே எண்ணினாள். அவனுக்கும் அதே போல தோன்றியது. இருவரும் முழு நிர்வாணமாக நின்றுக் கொண்டிருந்தார்கள். நிர்வாண உடல் அவனுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் ஆனால் இன்று அவனுக்கு பயத்தையும் நடுக்கத்தையும் தன் மேல் அருவருப்பையும் ஏற்படுத்தியது. ஒருவரை ஒருவர் பார்த்து அருவருப்பாக உணர்ந்தார்கள்.
“அண்ணா” என்று கூப்பிடுவதற்கு அவளின் வாய் கூசியது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்