தி.வள்ளி
சிறுகதை வரிசை எண்
# 128
மண்ணில் உதிர்ந்த மலர்கள்...
சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது ..குற்றவாளிகள்.. காவலர்கள்... கருப்புக்கோட்டணிந்த வக்கீல்கள் ..சாட்சி சொல்வோர்.. .என கூட்டத்திற்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது.
கிரிமினல் கேஸ் நடைபெறும் அந்த சேம்பரின் முன் ப்ரியாவும் வக்கீலும் நின்று கொண்டிருந்தனர்."என்னம்மா கடைசி நேரத்தில் மாறிட மாட்டியே? உன்னுடைய சாட்சி தான் இந்த கேஸ்ல ரொம்ப முக்கியம்."
"இல்லை"யென தலையாட்டினாள். போலீஸ் வேன் வந்து நிற்க ..அதிலிருந்து இறங்கிய காவலர்கள் அர்ஜுனை இறங்கச் சொன்னார்கள். அவனை உள்ளே அழைத்துப் போக தயாரான அந்த ஒரு வினாடியில் அர்ஜுன், ப்ரியாவை ஆழமாய் பார்க்க..ப்ரியா அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
###################
சில ஆண்டுகளுக்கு முன்...
"ஆண்டாள் பிரியதர்ஷினி
வெட்ஸ்
அர்ஜுன் "
கல்யாண மண்டப வாசலில் பெரிய பேனரில் அர்ஜுனும், ப்ரியாவும் சிரித்துக் கொண்டிருந்தனர் ..அர்ஜுனின் செல்ல தங்கை ரம்யா அங்குமிங்கும் பட்டாம்பூச்சி போல ஓடித் திரிந்து கொண்டிருந்தாள் .அவ்வப்போது மணமகள் அறைக்கு வந்து ப்ரியாவையும் கிண்டல் பண்ண தவறவில்லை .."ஆஹா.. ஆண்டாள்- அர்ஜுன் என்ன பெயர் பொருத்தம் .அர்ஜுனை ஆளவந்த ஆண்டாள் ...அப்ப எங்க அண்ணன் குடுமி உங்க கையில தான்... இல்லையா அண்ணி" என்று சிரித்தாள்.
ஏனோ தெரியவில்லை கள்ளம் கபடம் இல்லாமல், கலகலப்பாகப் பேசும் ரம்யாவை முதல் பார்வையிலேயே ப்ரியாவுக்கு பிடித்துப்போனது. கல்யாணத்துக்கு ரம்யா, ப்ரியா, அர்ஜுன், சிநேகிதர்களும் நிறையபேர் வந்திருந்தனர்.
.
ரம்யாவை ஓரங்கட்டிய சந்தோஷ்," கல்யாண பொண்ண விட நீ ஓவரா அழகாயிருக்க பேபி... கேமராமேன் கேமராவை திருப்பி திருப்பி நீ போற இடமெல்லாம் உன்னை பாலோ பண்ணிக்கிட்டிருக்கான். உன் கிட்ட வந்து பேச கூட முடியல" என்று அலுத்துக் கொண்டான்."
"சீன் போடாதடா.. அம்மா வேற பார்த்துகிட்டே இருக்காங்க. எங்க அண்ணனுக்கு இந்த காதல், கத்திரிக்காய் எல்லாம் சுத்தமா பிடிக்காது. உன்னையும், என்னையும் சேர்த்துப் பார்த்தா செத்தேன். வெட்டிப் போட்டுடுவான் ."
"எப்பா.. சரியான அருவா குடும்பமா இருக்கும் போல .."
"நீ சொன்னாலும், சொல்லாட்டியும் அருவா குடும்பம்தான்டா.. எங்க அத்தை அந்த காலத்துல ஜாதிமாறி காதலிச்சாங்கன்னு எங்கப்பா அந்த பையன் கைய வெட்டினாரு.. உயிரை எடுத்துடுவேன்னு பயமுறுத்துனாரு அவன் ஓடி போய்ட்டான்... எங்க அத்தைய வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு...ஜாதி வெறி பிடிச்சு அலைஞ்சாரு.. அருவாள எடுத்தவருக்கு அரிவாளாலதான் சாவு வந்தது. எவனோ வெட்டிட்டான்."
"எங்க அண்ணா அப்படியில்ல ..கோபப்படுவாரு ,திட்டுவாரு ஆனா என்னுடைய ஆசைக்கு எதிராக போக மாட்டாரு" என்றாள் நம்பிக்கையோடு.
கல்யாணம் முடிந்து, புகுந்த வீட்டுக்கு வந்தபின், அத்தை பார்வதிக்கு உதவியாக, ப்ரியா குடும்ப பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.விரைவில் ரம்யாவுக்கு இன்னொரு தாயாகிப் போனாள்.
#################
வருடங்கள் மூன்று ஓடிவிட.. பல மாறுதல்கள்.. ப்ரியா ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானாள். ரம்யாவும் படிப்பை முடித்துவிட்டு, நல்ல வேலையில் சேர்ந்தாள் ..அண்ணியும், அவளும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் நல்ல தோழிகளாக இருந்தார்கள் ..சந்தோஷ்கும் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பளம் வாங்கினான்..
ஒரு நாள் கையில் ஸ்வீட் பாக்ஸ்ஸூடன் வந்த அர்ஜுன்.. "அம்மா நம்ம ரம்யாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குது. பையன் நமக்கு தூரத்து சொந்தம்தான். நல்ல படித்திருக்கிறான். கை நிறைய சம்பளம் வாங்குகிறான். எனக்கு பிடிச்சிருச்சு.. ரம்யாவுக்கு பேசி முடிச்சிடுவோம்" என்றான் சந்தோஷமாக..
"ரொம்ப சந்தோஷம்பா.." என்றாள் பார்வதியம்மா.
ப்ரியா மட்டும் "ஏங்க ரம்யா கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா"
"அவ சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியப் போகுது நாம மாப்பிள்ளையை காண்பிச்சு கல்யாணம் பண்ணச் சொன்னா பண்ண போறா"
ஏனோ ப்ரியா மனது அதை ஏற்றுக் கொள்ளவில்லை கொஞ்ச நாட்களாகவே ரம்யா சந்தோஷைப் பற்றி அதிகம் பேசுகிறாள். அவன் பெயரில் ஒரு ஈர்ப்பு இருக்குமோ சந்தேகம் மனதை அரித்துக் கொண்டிருந்தது.
ரம்யா ஆபீஸிலிருந்து வந்தாள்" ரம்யா.. நாளைக்கு ஆபீஸ் லீவ் போட்டுக்கோ.. உன்ன பொண்ணு பாக்க வராங்க" என்றான்.
"என்ன அண்ணா திடீர்னு இப்படி சொல்றீங்க.. கல்யாணம் இப்ப வேண்டாம் "
"இப்ப பண்ணாம கிழவி ஆன பிறகா பண்ணுவ?"
ரம்யா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு," அண்ணா எனக்கு ஒருத்தர ரொம்ப புடிச்சிருக்கு... நான் அவரை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படுறேன் ."
அதிர்ந்து போனான் அர்ஜுன்...
"சந்தோஷ்னு என் கூட படிச்சவன். எனக்கு அவனை ரொம்ப புடிக்கும். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கு நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டா ... சந்தோஷமா இருப்போம்."
"அவன் என்ன ஜாதிடி? நம்மாட்கள் தானா? நம்மாட்கள் பையன புடிச்சிருக்குன்னு கையை காட்டு.. நான் உடனே பண்ணி வைக்கிறேன்.இவனை நான் கண்டிப்பா ஏத்துக்க மாட்டேன். நீ சொல்ற அந்த பையன் வேத்து சாதி பையன் தானே... நாம எங்க அவன் எங்க... ஏணி வச்சாலும் எட்டாது"
"அண்ணா குத்தி பார்த்தால் ஒரே ரத்தம் தான்.. அவருக்கு வேற கலர் நமக்கு வேற கலரா இருக்கு? .அவர் எந்த ஜாதியா இருந்தா என்ன? அன்பானவர்...அவங்க குடும்பம் ரொம்ப பாசமான குடும்பம்...நான் அவங்க குடும்பத்துக்கு மருமகளா போனால் நிச்சயம் என்ன நல்லா பாத்துப்பாங்க..."
"அடி செருப்பால.. அண்ணனையே எதிர்த்து பேசுறியா? உங்க அப்பா இருந்தா இந்நேரம் வெட்டிப் போட்டுடுவாரு..." என்றாள் அம்மா.
"எதிர்த்து பேசல..என் வாழ்க்கைக்காக பேசுறேன்.. புரிஞ்சுக்கோங்க .."
"நீ அவனை கல்யாணம் பண்ணனும்னு நினச்ச... சொத்தில ஒரு பைசா கிடையாது "
"சொத்து என்னம்மா சொத்து..அன்புதான் பெருசு
உலகத்துல "
அர்ஜுனன் தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு, அமைதியாக " ரம்யா நீ சின்ன பொண்ணு. உனக்கு உலகம் தெரியாது.. அண்ணன் உன் நல்லதுக்கு தான் சொல்வேன். தயவு செய்து நீ நாளைக்கு இந்த பையனை பாரு.. புடிக்கலைன்னா அப்புறம் சொல்லு ..இப்ப உள்ள போ" ஒன்றும் பேசாமல் நகர்ந்தாள் ரம்யா.
வீடே ஒரு கனத்த மௌனத்தில் உறைந்து கிடக்க ..பார்வதி மகள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்தாள். அவள் ப்ரியாவின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள் ..இவ கொடுக்கற இடம் தான் என்று மனதுக்குள் கறுவியவாரே நகர்ந்தாள்..
"அண்ணி.. அண்ணன் அவர் சொல்ற மாப்பிள்ளையைத் தான் கல்யாணம் பண்ணனும்னு பிடிவாதமா சொல்றாரு.. எனக்கு சந்தோஷை தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்கல .."
"அழாத ரம்யா.. நைட் உங்க அண்ணன் கிட்ட பேசி சந்தோஷை பார்த்து பேசுறதுக்கு ஏற்பாடு பண்றேன் ."
" உங்களுக்கு அண்ணனைப் பத்தி தெரியும். அவர் ஒரு முடிவு எடுத்துட்டா அதிலிருந்து மாற மாட்டார். அப்பா மாதிரி
ஜாதிவெறி இவர் மனசிலேயும் ஊறிக் கிடக்கும்னு நினைக்கல.."
அவள் கணிப்பு சரியாகத்தான் இருந்தது. இரவு முழுக்க எவ்வளவோ கெஞ்சியும், அர்ஜுன் தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரவே இல்லை, அர்ஜுனின் இந்த முகம் ப்ரியா இதுவரை பார்க்காதது.ரம்யாவை நினைத்து கவலையாக இருந்தது.
மறுநாள் காலை விடிந்தது .. பார்வதியின் கூக்குரல் கேட்டு அர்ஜுனும், ப்ரியாவும் ஓடிவர " லெட்டர் எழுதி வைச்சுட்டு வீட்ட விட்டு ஓடிட்டா... நம்ம குடியை கெடுத்துட்டாடா ..அவ என் மகளே இல்ல... நாசமா போவா..நல்லாவே இருக்க மாட்டா.."என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்..
அர்ஜுனும், ப்ரியாவும், அதிர்ச்சியில் உறைந்தனர் ..
"பளார்..பளார் "என ப்ரியாவை அறைந்த அர்ஜுன்.." உனக்கு தெரியாமல் இருக்காது...எங்கடி அவ? .."
அவள் பதில் சொல்லுமுன் ...
வாசலில் "அம்மா..." என்ற குரல்... வெளியே மாலையும் கழுத்துமாக ரம்யாவும், சந்தோஷும் ...
அவர்களைப் பார்த்த அர்ஜுனுக்கு வெறி ஏறியது.. ப்ரியா வாசலுக்கு விரைய .."நில்லு எங்கடீ போற? அவங்களை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடவா ..போ உள்ள" என்று கத்தியவன்
" சீ..ஓடுகாலி நாயே ..இவனை கூட்டிட்டு ஓடிடு.. என் கண்ணு முன்னாடி நிக்காத. என்னைக்கு தன்னிச்சையாக முடிவெடுத்தையோ, இனி உனக்கும் இந்த குடும்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது. போடி வெளிய "என்று கத்தினான்,
"ஏங்க.. தயவுசெய்து அவளை மன்னிச்சிடுங்க.. ஏதோ கல்யாணம் பண்ணிட்டா ..அவ நம்ம வீட்டு பொண்ணுங்க "
"எங்க முகத்தில் முழிக்காத போடி ...இந்த குடும்பத்து மானத்தை வாங்கிட்ட.. அப்பா இருந்தா இப்படி வேத்துஜாதி பையனை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னதுக்கு வெட்டி போட்டிருப்பாரு.." என்ற பார்வதி தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.
"வாங்க போவோம்.. இவங்களுக்கு ஜாதி தான் முக்கியம் மனுஷங்க முக்கியம் கிடையாது. "
"ரம்யா நீ போ.. உங்க அண்ணன கோபம் குறைஞ்சதும். உன்னை கூப்பிடுறேன்" என்றாள் ப்ரியா மெதுவான குரலில்..
சந்துரு, " எங்க வீட்டுக்கு போகலாம் ரம்யா " என்றபடி அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அர்ஜுன் கோபத்தில் வீடு ரெண்டு பட்டது. ரம்யாவையும், சந்தோஷையும் திட்டித் தீர்த்த அம்மாவும் மகனும் அலுத்துப் போய் அமைதியானார்கள் .அடுத்த வந்த நாட்கள் அமைதியில் கழிந்தன ..அடுத்த சில நாட்களில் வீடு சற்று இயல்பு நிலைமைக்கு திரும்பியது.
பார்வதி மெதுவாக மருமகளிடம் "அந்த கேடுகெட்டவ கல்யாணத்தை பண்ணிகிட்டுப் போனாளே.. இப்ப எங்க இருக்கா?"
" சந்தோஷ் வீட்லதான் இருக்கிறாங்க அத்தை ."
வீட்டிற்கு தெரியாமல் ஒரு தடவை போய் ரம்யாவை பார்த்து வந்தது தெரிந்தால் பூகம்பமே வெடிக்கும் ..
அர்ஜுன் மெதுவாக ஆரம்பித்தான். "இவளை சின்ன புள்ளையா விட்டுட்டு அப்பாவும் போயிட்டாரு .நான்தான் இவள வளர்த்து மேலே கொண்டு வந்தேன். இன்னைக்கு அவ எல்லாரையும் மறந்துட்டுப் போயிட்டா .."
"அவ உங்களை எப்படி மறப்பாங்க? அவளும் மனசுக்குள்ள மருகிகிட்டிருப்பா... இவ்வளவு பாசத்தை வச்சுகிட்டு எதுக்கு தங்கச்சியை ஒதுக்கிறீங்க? அவங்கள சேத்துக்கிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்..."என்றாள் பயந்துகொண்டே ..
"அன்னைக்கு போடின்னு சொல்லிட்டு இப்ப எந்த முகத்தை வைச்சுகிட்டு அவளை வீட்டுக்கு வான்னு கூப்பிட சொல்ற"
"நீங்க கூப்பிட வேண்டாங்க நான் அவளை வீட்டுக்கு கூப்பிடுறேன்"
"ஆமாண்டா விருந்துக்கு கூப்பிடுவோம்...அப்படியே அவளுக்கு செய்யவேண்டிய சீர்களையும் செஞ்சுடுவோம் " என்றாள்.பார்வதி மனதில் ஓரத்தில் இருந்த பாசம் எட்டிப்பார்க்க..
அர்ஜுன் சம்மதிக்க சந்தோஷத்தோடு ரம்யாவைப் பார்க்க ஓடினாள் ப்ரியா ..
"நாளைக்கு நீயும், சந்தோஷும் கண்டிப்பா நம்ம வீட்டு விருந்துக்கு வரனும்னு அர்ஜுன் சொல்லச் சொன்னாரு" என்று சொல்ல ரம்யாவிற்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. அவ்வளவு எளிதில் அண்ணன் மாறுவார் என்று அவள் நினைக்கவே இல்லை .
விருந்துக்கு வந்த இருவரையும் உட்கார வைத்து பரிமாறினாள் ப்ரியா..சந்தோஷமாக சாப்பிட்டார்கள்.
எல்லாம் முடிந்து, வெத்தலை, பாக்கு, பழம், புடவை, வேஷ்டி,சட்டை எல்லாம் எடுத்து வைத்த பார்வதி
"ப்ரியா இத உன் நாத்தனாருக்கு கொடு...அப்படியே சீர் பாத்திரம் எல்லாம் வாங்கி வச்சிருக்கேன் போகும்போது எடுத்துட்டுப் போகச் சொல்லு ..." நினைத்துப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது ரம்யாவிற்கு.
மறுநாள் நல்ல பட்டு புடவை கட்டிக்கொண்டு, மாமனார் மாமியாரிடம் சொல்லி விட்டு, கிளம்பினார்கள் இருவரும் ..
வீட்டு வாசலில் வந்ததும்.. அர்ஜுன் "ப்ரியா" என்று குரல் கொடுக்க ஆரத்தி தட்டுடன் வந்தாள் ப்ரியா. அவள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்க.. அருகில் வந்தான் அர்ஜுன். ஓங்கி ஆரத்தி தட்டை காலால் உதைத்தான்.. .. தட்டு பறந்து போய் தரையில் விழுந்தது ..என்ன நடக்கிறது என்று உணர்வதற்கு முன் சட்டையின் பின்னால் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து கண்ட துண்டமாய் சந்தோஷை வெட்ட.. துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்தான் சந்தோஷ்..
ஐய்யோ என்று அலறிய ரம்யா.. "அடப்பாவி இப்படி பண்ணிட்டியே.. விருந்துக்கு கூப்பிட்டு இப்படி கொல பண்ணிட்டியே... உன் ஜாதி வெறி உன்னை விட்டுப் போகாதா...நீ எல்லாம் ஒரு ஆம்பளையா . ..நீ நல்லாவே இருக்க மாட்ட... உன்னை கொல்லாம விடமாட்டேன் .. " சந்தோஷ் அருகில் கிடந்த அரிவாளை எடுக்க ரம்யா முனைய அர்ஜுன் அதை எடுத்துக் கொண்டான் ...
"நீ என்னடி என்ன வெட்டுறது.. நான் உன்ன விட்டு வச்சா அது அப்பாக்கு செய்ற துரோகம்" என்று சரமாரியாக தங்கையையும் வெட்டினான்." இப்பதான் அப்பா ஆத்மா சாந்தி அடையும்" என்று சிரித்தான் ..
ரத்த வெள்ளத்தில் அப்படியே சந்தோஷ் மேல் சரிந்து விழுந்த ரம்யா "சந்தோஷ் என்ன மன்னிச்சிடு....." என்று முனகினாள்..
வாழவேண்டிய அந்த பிஞ்சு உயிர்கள் ஜாதி வெறியில் சிக்கி கசங்கி காய்ந்து மண்ணில் உதிர்ந்தன.
ஓவென அலறிய பார்வதி "என்னடா இப்படி பண்ணிட்ட "
"இப்பதான்ம்மா.. அப்பா ஆன்மா சாந்தியடையும். அப்பா இருந்தா என்ன பண்ணுவாரோ...அதைத்தான் நான் பண்ணி இருக்கேன்" என்றான் அர்ஜுன் வெறியோட..." இந்தக் கழுத வேத்துஜாதிப் பையனை கல்யாணம் பண்ணிட்டு எவ்வளவு தைரியமா வந்து நிக்கிறா.. ."
"ரம்ம்ம்ம்யா..." என்று அலறிய ப்ரியா அதிர்ச்சியில் மயங்கினாள்... ப்ரியா கண் விழிக்கும்போது அர்ஜுன் ஜெயிலில் இருந்தான்.
#########2###############
அந்த இட்டை கொலை கேஸ் தான் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்தது.. கண்ணால் கண்ட முக்கிய சாட்சியாக அன்று ப்ரியா ஆஜராகிறாள்.கண்ணீருடன் சந்தோஷின் பெற்றோர் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தனர் ..குழந்தை கண்ணனுடன் அமர்ந்திருந்த பர்வதம் குழந்தையை அவள் பார்வையில் படும்படி காட்டி கண்களால் கெஞ்சினாள் ..
எதிரில் கூண்டில் நிற்கும் அர்ஜுனனை ஏறிட்டும் பார்க்கவில்லை ப்ரியா... ஆத்திரத்தோடும், அழுகையோடும், நடந்ததை ஜட்ஜ் முன்பு விலாவாரியாக விளக்கி, தெளிவாக தன்னுடைய சாட்சியத்தை அளித்தாள்.அவளுடைய சாட்சி தெளிவாக, வலுவாக, அர்ஜுனுக்கு எதிராக இருக்க.. தீர்ப்பு என்ன வரும் என்று எல்லோரும் எளிதாக கணிக்க முடிந்தது.
#####################
"இப்போ உனக்கு திருப்தியாடி..இனி என் புள்ளைக்கு ஆயுசு பூரா ஜெயில் தான்... உன் புள்ளைக்கு அப்பன் வேணும்னு கூட நினைக்கலியே...உனக்கு இன்னொரு புருஷன் கிடைப்பான்... இந்த குழந்தைக்கு இன்னொரு அப்பன் கிடைப்பானாடி...உனக்கு இந்த வீட்ல இடமில்லை... போ வெளியில ..." கோபத்தில் கத்தினாள் பர்வதம்.
"எனக்கு இன்னொரு புருஷனும் வேண்டாம்.. என் குழந்தைக்கு இந்த அப்பனும் வேண்டாம்.. இவ்வளவுக்கும் நீங்களும் ஒரு காரணம் அத்தை... மாமா அன்னைக்கு செஞ்ச தப்ப சொல்லி சொல்லி நியாயப்படுத்தி , அவரை ஏத்தி விட்டீங்க..நீங்க அன்னைக்கே அவங்கப்பா செஞ்சது தப்புன்னு அவருக்கு உணர வச்சிருக்கனும். .. உங்க மகனை பத்தி மட்டுமே நினைக்கிறீங்க.. கண்ணீரோட அமர்ந்திருந்த சந்தோஷ்ஷோட அப்பா, அம்மா உங்க கண்ணுல படலையா?"
"தன் விரலை வைச்சு தன் கண்ணைக் குத்தற மாதிரி என்ன வச்சு ரம்யாவை வீட்டுக்கு வரவழைச்சு.. அவங்களை பழி தீர்த்தாரு. நான் அழைச்சுதான் வீட்டுக்கு வந்தா..அந்த குற்ற உணர்வு எனக்கு சாகும் வரைக்கும் போகாது..எனக்காக ஓடி வந்தவளை என் கண்ணு முன்னாடியே பலி கொடுத்துட்டேனே.."
"இப்படிப்பட்ட ஜாதிவெறி பிடிச்ச மனுஷன் எனக்கு புருஷனும் இல்ல..என் குழந்தைக்கு அப்பாவும் இல்ல... இவர பார்த்து வளர்ந்தால் என் மகனும் இவரைப்போலத் தான் வளர்வான் .."
"நான் போறேன்.இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன். என் குழந்தையை தனியா வளர்ப்பேன். பெண்களை மதிக்கிறவனா.. ஜாதிவெறி இல்லாதவனா.. ஒரு நல்ல ஆண்மகனா ஆளாக்குவேன்.."
கையில் குழந்தையுடன்.. தன்னம்பிக்கை பெண்மணியாய்.. மனதில் இருந்த பாரம் விலகியவளாய் வெளியே நடந்தாள் ப்ரியா ...
தி.வள்ளி
திருநெல்வேலி.
Mob: 99449-09487
mail : vallitmk@gmail.com
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்