logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

R. KARNAN

சிறுகதை வரிசை எண் # 127


புதுக்கோலம்! (- ரா.கர்ணன் -) ============= சீனிராசு வீடு ஒரே கலவரமா கிடந்துச்சு சருத்துப்பட்டி பயலுக வரிஞ்சு கட்டி நிக்கிறாய்ங்க அருவா, கம்பு, கத்தி, கல்லுன்னு கெடச்சத தூக்கிட்டு வந்திருகாய்ங்க எல்லாப்பய கண்ணும் கோவத்துல ரத்தமா செவந்து கெடக்கு “ஏலே…, உஞ்சாவு எங்கையிலதாண்டி…”ன்னு கத்துறான் ஒருத்தன் ஒடடா கதவங்கிறான் இன்னொருத்தன் சொன்ன வேகத்துல பெரிய கல்லு ஒன்னு பூட்டிக்கெடந்த கதவுல டமார்…ன்னு வந்து விழுகுது கெண்டிக்காரப்பட்டி உள்ளூரு ஆளுகளுக்கு என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல…, அவகளும் கூடிட்டாக சீனிராசு வீட்டு முன்னாடி முத்தாலம்மன் கோயில் பூசாரி வேகமா வந்து, “ஏய்.. என்னப்பா வேணும் உங்களுக்கு…, ஊருவிட்டு ஊருவந்து மல்லுக்கு நிக்கிறீக..”ன்னு கேட்டதும், சருத்துப்பட்டிக்கார பயலுகளுக்கு கோவம் கூடிப்போச்சு.. “யோவ்… விசயம் தெரியுமா உனக்கு…?” கூட்டத்துல இருந்த எளந்தாரிப்பய எகிறுறான் “அடுத்தவன் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சிருக்கானய்யா உங்க ஊரு மொல்லமாரிப்பய…” வள்ளுன்னு வந்து விழுகுது வார்த்தை “யாரு.. சீனி..ராசா…?”, பூசாரி சந்தேகத்தோட கேட்க “ஆமா… அந்த வென்ன தான்..”ங்கிறான் இன்னொரு பய.. கெண்டிக்காரப்பட்டி ஆளுகளுக்கு இப்ப தான் விசயம் லேசா புரியுது “யாரு.. வீட்டு.. புள்ள..ய்..யா.. அது…?” பூசாரி பதற்றப்படுறாரு “அந்தா அங்க ஒங்காந்திருக்கானுல்ல, அவம் பொண்டாட்டி” கையைக் காட்டுன திசையில பூசாரி தலையை திருப்புனாரு அங்க தலையை தொங்கபோட்டு குத்தவச்சு ஒக்காந்திருந்தான் முத்துக்காளை மீனாட்சிக்கு முத்துக்காளை தாய்மாமன் சொந்த அக்கா மக… அவளுக்கு காது குத்துனதுல இருந்து.., அவ சடங்கானது வர.. சீரு செஞ்சவன் “ஏலே… முத்துக்காளை..! எம்மவ மீனாட்சி உனக்குத்தான்டா…”ன்னு சொல்லி வச்சிருந்தா அக்காக்காரி இவனும் மீனாட்சி தான் உலகம்ன்னு கெடந்தான் எல்லாம் சொல்லிவச்சது மாதிரியா நடக்குது…? முத்துக்காளை வாழ்க்கையில பெரும்புயல் ஒன்னு புகுந்துச்சு அவனுக்கு தான் அது புயல்…, மீனாட்சிக்கு பூந்தென்றல்! சருத்துப்பட்டி மந்தையம்மன் கோயிலுக்கு ரேடியோ செட்டு போட வந்திருந்தான் சீனிராசு. சீனி சவுண்டு சர்வீஸ்..க்கு அவன் தான் ஓனரு! மந்தையம்மன் கோயிலுக்கு முன்னாடி தான் மீனாட்சி வீடு.. மீனாட்சிய பத்தி சொல்லனும்னா.. செஞ்சு வச்ச சிலை..ன்னு சொல்றதவிட அவ.. பூமியில வந்து பொறந்த சிலை..ன்னு சொல்லலாம் அரைக்கிலோ சதைக்கூட அநாவசியமா கிடையாது அம்புட்டு கச்சிதமா களையா இருப்பா… கருப்பழகி அவ சிரிப்புல கிறுகிறுத்து கெடந்தாய்ங்க… சருத்துப்பட்டி எளந்தாரி பயலுக… முத்துக்காளைக்குன்னு முடிவானதால மூச்சுகாட்டாம இருந்தாய்ங்க இல்லாட்டி முட்டிமோதியிருப்பாய்ங்க! மந்தையம்மன் கோயிலுக்கு வாசத்தண்ணி தெளிக்கிறது, கோலம்போடுறது எல்லாம் மீனாட்சி தான். திருவிழா நேரத்துல மட்டுமில்ல , எப்பயும் அவதான் கோலம்போடுவா, கோயில் பக்கத்துல வீடுங்கிறதால, வீட்டு வாசல்ல கோலம்போடுறப்ப, கூடவே கோயிலுக்கும் சேர்த்து போடுவா. இது அவ வழக்கமா செய்யுறது.. அப்படி வாசத்தெளிக்க வந்தப்ப தான்.., மீனாட்சியை சீனிராசு பாத்தான்.. சீனிராசையும் சும்மா சொல்லக்கூடாது,, வாட்ட சாட்டமான ஆளு.. யாரையும் ஏறெடுத்து பாக்காத மீனாட்சி.., அன்னக்கி அவன அப்படியொரு பார்வை பாத்தா.. அந்த பார்வையில செதஞ்சே போயிட்டான் பாவம்.. புடுச்ச மனசு ரெண்டும் லேசுல விட்டு விலகுமா..? பேசி… பழகிட்டாக... வாசத்தெளிக்க வந்தவ.., கடைசியில வாழ்க்கை துணையா வாரேன்னுட்டா திருவிழா முடிஞ்சுச்சு.. சந்திப்பு தொடர்ந்துச்சு அங்கயும், இங்கயும் இவக சந்திச்சு பேசுன விஷயம் மெல்ல கசிஞ்சு, முத்துக்காளை காதுக்கு போச்சு... சும்மா.. இருப்பானா...?. மீனாட்சி வீடு அன்னக்கி ரெண்டுபட்டு போச்சு… “என் வாழ்க்கையில குறுக்க வாரவன் எவனாயிருந்தாலும் வெட்டுவேன்.., குத்துவேங்கிறான்...” ஒருவழியா அவன சமாதானப்படுத்தி, அடுத்த முகூர்த்தத்திலேயே மீனாட்சிக்கும், முத்துக்காளைக்கும் கல்யாணம்..ன்னு, பெரியவக கூடி தேதி குறிச்சாக… மீனாட்சி விருப்பத்தை யாரும் கேக்கல… “பொட்டக் கழுதகிட்ட என்னத்த கேக்குறது?, கல்யாணம் ஆனா.. எல்லாம் சரியாப்போயிரும்”ன்னு சொன்னாக.. மனசு நொந்து, கலங்கிக்கெடந்தா பாவம்… பட்டாளத்தை கொண்டு வந்து எறக்குன மாதிரி, மீனாட்சி வீட்டச் சுத்தி ஆள வச்சானப்பா.. முத்துக்காளை. அவகளுக்கு தெரியாம அங்கிட்டு, இங்கிட்டு ஒரு அடிகூட நகர முடியாது... அப்புறம் என்ன செய்ய…? வாழ்ந்தா சீனிராசோட தான்..னு வைராக்கியமா இருந்தவ கழுத்துல, குறிச்ச தேதியில வலுக்கட்டாயமா தாலியக்கட்டிட்டான் முத்துக்காளை… கழுத்துல முத்துக்காளை கட்டுன தாலியோடவும், மனசுல சீனிராசு நெனப்போடவும் வாழ முடியுமா..? துடிச்சா பாவம் மீனாட்சி… கட்டாயத் தாலி கழுத்துல கணத்து கெடந்துச்சு… அழுது ஓஞ்சவ.., அஞ்சாவது நாளு ஒரு முடிவுக்கு வந்தா.. கொஞ்ச நேரத்துல… மீனாட்சியைக் காணாம முத்துக்காளை வீடே கதிகலங்குது. அங்கயும் இங்கயும் தேடுறாக... ஒவ்வொரு வீட்டு கதவையும் போயி தட்டுறாக… ஊரு எல்லையில இருக்குற கெணத்துல போயி எட்டி பாக்குறான் ஒருத்தன் நாலுபேரு கம்மாக் கரைக்கு ஓடுறாய்ங்க… அங்க இருக்குற ஆலமரத்துல நாண்டு.. கீண்டு செத்துட்டாளா..ன்னு பாக்க… கடைசியில துப்பு கெடைக்குதய்யா.., அவ சீனிராசு வீட்டுல இருக்கா..ன்னு “எஞ்..சாமி.. முத்துக்காளை… நம்ம கண்ணுல மண்ண அள்ளி போட்டுட்டு போயிட்டா...டா களவாணி சிறுக்கி…”ன்னு, அவன கட்டிப்புடுச்சு அழுகுறா மீனாட்சியோட ஆத்தா… “ஏலே.. அவன வெட்டி சாய்ச்சிட்டு, புள்ளைய தூக்கிட்டு வரனும்டா”..ன்னு அருவா.. கம்போட கிளம்புன பயக தான், சீனிராசு வீட்டு முன்னாடி இப்ப முறுக்கிட்டு நிக்கிறாய்ங்க.. நேரம் ஆக.. ஆக.. பயலுக கோவம் இன்னும் கூடுது.. “நாங்க என்ன கேணப்பயலுகளா”..ன்னு வேகமா கதவை எட்டி மிதிக்கிறான் முத்துக்காளை சினேகிதன்… கொஞ்ச நேரத்துல ஜன்னல் கதவு மட்டும் திறக்குது… மீனாட்சி நிக்குறா… பவுர்ணமி நிலவு மாதிரி.. “அடியே.. ஆத்தா.., வீரபாண்டி கோட்டை மாதிரி இருந்த உம்புருசன் ஒடஞ்சு கெடக்கான்டி.., நடந்தது நடந்துபோச்சு.., கை, காலுல சேறுபட்டா கையையும், காலையும் வெட்டியா போடுறோம்…, கழுவிட்டு போறதில்லயா.., ஊருசனம் மொத்தமும் உனக்காக வந்திருக்கோம்… உம்மேல பட்ட சேத்த கழுவிட்டு வந்திரு புள்ள..”ன்னா மீனாட்சியோட அப்பத்தா கெழவி… மீனாட்சி ஒன்னும் பேசல.. அமைதியா இருந்தா… “வந்திரு தாயி…”ன்னு திரும்பவும் கெழவி கூப்பிட்டதும்.. மீனாட்சி பேச ஆரம்பிச்சா.. “கை, காலுல்ல சேறுபட்டா கழுவிறலாம்…, மனசுல மணக்குற சந்தனத்த எப்படி கழுவ முடியும்.”ன்னு... சொன்னா பாவம்… “அடியேய்.. உங்கப்பன் சீக்குல கெடந்து போனதும், எந்தம்பி தாண்டி நமக்கு கஞ்சி ஊத்துறான். அத புரிஞ்சுக்க மொதல்ல”. மீனாட்சியோட ஆத்தா நியாயம் பேசுனா… கஞ்சி ஊத்துனதுக்காக காலம் முழுக்க காலுக்கடியில கெடன்னா எப்படி ஆத்தா..,ன்னு சொல்லி ஓ..ன்னு அழுகுறா மீனாட்சி… “இப்ப உம்மாமனுக்கு என்னடி பதில் சொல்லப்போற..”ன்னு கேட்டா கூட்டத்துல இருந்த இன்னொரு கெழவி... “ஆயிரம் ரூவா செலவழிச்சு ஆட்டுக்கறி வாங்குனாலும், புடிக்காம தின்னா வாந்தி தான் எடுக்கனும். ஆயிரம் ரூவா கறியாச்சே..ன்னு கக்குன கறியை திரும்ப எடுத்து திங்கவா முடியும்..”ன்னா மீனாட்சி.. இதக் கேட்டதும் “ஏலே… முத்துக்காளை… உன்ன கக்கிட்டாளாம்..டா”..ன்னு மார்ல ஓங்கி ஓங்கி அடிச்சு அழுதா… மீனாட்சியோட ஆத்தாக்காரி… என்ன நெனச்சான்..னு தெரியல…, எந்திரிச்சு விறுவிறுன்னு கிளம்பிட்டான் முத்துக்காளை.. “இதுக்கு மேல என்ன..ய்யா.. இருக்கு”ன்னு.., அவங்கூட வந்தவகளும் கிளம்பிட்டாக… அவன் பின்னாடியே… அம்புட்டு நேரம் தொறக்காத கதவு.. இப்ப மெல்ல தொறக்குது.. வாசல்ல ஏற்கெனவே போட்ட கோலம் அழிஞ்சுகிடக்க… குளிர குளிர தண்ணி தெளிச்சு… புதுக்கோலம் போட்டா மீனாட்சி! - ரா. கர்ணன் -

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.