RABEEK RAJA
சிறுகதை வரிசை எண்
# 13
பகரம்
இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொண்டு எப்படியும் இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். மிதமான நெரிசல் கொண்ட பேருந்தில் ஏற்ற இறக்கங்களில் அவ்வப்போது இருவருடைய தோள்கள் தான் உரசிக்கொண்டது. அது அரசு பேருந்து என்பதால் பேருந்தை இயக்கும் எந்திரத்தின் ஒலியை தவிர வேறு எந்த அற்புதமும் நிகழவில்லை. அவ்வப்போது நடத்துனர் விசில் ஊதுவது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் மக்கள் ஏறி இறங்குவது ஒரு சாகச விளையாட்டு போலவே இருந்தது.
இதற்கு மேல் தாக்கு பிடிக்கமுடியாது என்பது போல சந்திரன் மௌனத்தை உடைத்தார்.
"இந்தாடி என்னமோ வெறிச்சு பாத்துட்டு உக்காந்திருக்க. எழவா விழுந்துருச்சு!" என உரக்க பேசினார். அது தன் மனைவி சாந்தாவை தவிர யாருக்கும் கேட்காது என நம்பினார்.
சாந்தாவுக்கு கண்ணீர் பொலபொலவென்று கொட்டியதை பார்க்கும் போது சந்திரனுக்கு என்னவோ போலாகிவிட்டது. தன் மனைவியை இவ்வளவு நெருக்கமாக அழுது பார்த்ததில்லை. மூடிய பாத்திரத்தில் ஒரு துளையிட்டு உருட்டியது போல கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நடத்துனர் பயணச்சீட்டுக்கு அருகில் வந்து கொண்டிருந்தது இவருக்கு இன்னும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
நடத்துனர் ஒரு பயணியிடம் சில்லறைக்கு சண்டையிட்டு கொண்டிருந்தார். ஆகவே தன்னருகே வர எப்படியும் மூன்று நிமிடங்கள் எடுக்கும் என்பதால் அதற்குள் சாந்தாவை சமாதானப்படுத்தி விட முடிவு செய்தார். இது ஒரு தற்காலிக சமாதான ஏற்பாடு தான் என்பதை அவர் அறிவார்.
"இந்தா பாப்பா!" மனைவியை பாப்பா என்பது அவரின் உச்சபட்ச கெஞ்சலில் ஆரம்ப அறிகுறி என்பதை சாந்தா அறிவாள்.
"இப்ப என்ன ஆயிருச்சுன்னு உடஞ்சு போய் உக்காந்திருக்க? இதெல்லாம் இப்ப சாதாரணமா போச்சு. எல்லா முடிஞ்சிட்டு புதுமாப்ள கணக்கா திரியிறாங்க!" என்ற சொற்றொடரை முடித்துவிட்டு சமாதானம் வேலை செய்கிறதா என்பதை சாந்தா முகத்தை பார்த்தார். சாந்தா கண்ணீரை துடைத்தாள். இது சமாதானத்திற்கான முதல் அறிகுறி என்பது சந்திரனுக்கு தெரியும்.
"ஷிபா ஆஸ்பத்திரி அடுத்த ஸ்டாப்பு!" என்பதை இறங்காவிட்டால் கொலை செய்யப்பட்டும் எனும் தொனியில் நடத்துனர் ஒரு விசில் சப்தத்திற்கு நடுவே அறிவித்தார். இருவரும் இறங்க தயாரானார்கள். அவர்கள் கூடவே மேலும் நான்கு பேர் இறங்க முற்பட்டது குறித்து சாந்தாவுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.
பேருந்து மெதுவானது. அதுவரை அரவணைத்த தாய் ஒருத்தி கோபமாய் தள்ளிவிட்டது போல பேருந்து திடுக்கிட்டு நின்றது. சாந்தா தடுமாறி சுதாரித்துக் கொண்டு கம்பியை பிடித்து நின்றாள். அவள் போராடிய விதம் சந்திரனுக்கு சிரிப்பை கொடுத்தது. அதையும் கவனித்துவிட்டு சாந்தா முறைப்பாள் என்பது அவருக்கு அத்துப்படி.
பேருந்தை விட்டு இறங்கிய போது நேரம் சரியாய் பத்து மணியை காட்டியது. வெயில் அதற்குள் உச்சியை தொட்டது போல வியர்வையை கிளப்பிக்கொண்டிருந்தது.
"நடந்து போயிருவோமா, ஆட்டோ புடிப்பமாடி?" என சந்திரன் சாந்தாவிடம் சொல்லும் போதே பக்கத்திலிருந்த ஆட்டோக்காரன் காதில் அது விழுந்துவிட்டது. குடும்ப ரகசியத்தை நான்குபேர் முன்னிலையில் போட்டுடைத்த சலிப்பில் சாந்தா அவரை பார்த்தாள்.
"இந்தா இருக்குற ஆஸ்பத்திரிக்கு யாராவது ஆட்டோ பிடிப்பங்களா?" என கனலித்த சாந்தாவை பார்த்து ஆட்டோ காரனே குடும்ப விவகாரத்தில் தலையிட வேண்டாம் என விலகிச்சென்றான்.
சாந்தா வசம் இருந்த கனமான கட்டை பையை பறித்து தான் கொண்டு வர எவ்வளவோ முயற்சித்தும் சந்திரனால் முடியவில்லை.
"குடு கொண்டு வர்றேன்!"
சாந்தா அமைதியாக நடந்து வந்தாள்.
"ஆஸ்பத்திரி பாக்கத்தான் பக்கம் மாறி இருக்கு. அது நம்ம வீட்ல இருந்து சந்தை போற தொல இருக்கும் போல!" என இயல்பாய் பேச நினைத்த எந்த ஒரு வார்த்தையும் பலனளிக்கவில்லை. சந்திரனுக்கு கொஞ்சம் கோபமாய் வந்தது.
"நீ இப்படியே அடைச்சுட்டு கெட! நான் எங்கேயாவது போகப்போறே பாரு!" என இறுதி ஆயுதத்தை எய்தார். சாந்தாவிடம் சாந்தமான சமிக்ஞை ஏதும் தென்படவேயில்லை.
சந்திரனுக்கு வயது ஐம்பது. பார்க்கும் யாரும் நாற்பதுக்கு மேல் சொல்ல மாட்டார்கள். நல்ல உயரம். மாநிறம். வீட்டுக்கு அருகில் இருந்த மில்லில் இருபது வருடமாக மேற்பார்வையாளராக இருந்து வருகிறார். வாழ்க்கையில் சபாரி உடையை தவிர வேறு எதையும் அணிந்து கிடையாது. மில்லிலும் அதுதான் சீருடை என்பதால் பணியில் இருக்கிறாரா? அல்லது இயல்பு வாழ்க்கையில் இருக்கிறாரா என்பதை கண்டறிவதே கடினம். மேற்பார்வையாளர் இரவிலும் அதையே தான் அணிவாரா என அக்கம் பக்கத்து வீட்டில் புதிதாய் பழக ஆரம்பிப்பவர்கள் அப்படித்தான் சாந்தாவை கேட்பார்கள்.
சந்திரனின் அத்தை மகள்தான் சாந்தா. சிறுவயதில் பேசி வைக்கப்பட்ட லட்சத்தி சொச்ச நிச்சயதார்த்தங்களில் கல்யாணமாய் முடிந்த ரெண்டாயிரத்து முன்னூறுகளில் இவர்களும் திருமணமும் ஒன்று. திருமணமாகி இருபது வருடங்களாகியும் குழந்தை ஏற்படவில்லை. இந்த மனக்குறையில் கோவில் கோவில்களாக ஏறி இறங்கியதற்கு மத்தியில் சில மருத்துவமனைக்கும் சென்று வந்தார்கள். கோவில் பிரசாதங்களோடு மருத்துவர்கள் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டே இரண்டு வருடத்தை கழித்து விடலாம் எனும் அளவுக்கு சென்றுவிட்டது.
மருத்துவம் இவர்களுக்கு ஒரு விளையாட்டாக கூட மாறியிருந்தது. ஒரு மருத்துவமனையில் சந்திரனுக்கு குறை இருப்பதாகவும், இன்னொரு மருத்துவமனையில் சாந்தாவுக்கு குறை இருப்பதாக சொல்லப்பட்டது. ஒருசில மருத்துவமனைகள் மட்டுமே "தங்களுக்கு குறை" இருப்பதாக ஒப்புக்கொண்டது. ஆறு தீபாவளிக்கு முன்பு ஒரு புதன்கிழமை வாக்கில் இனி மருத்துவமனைக்கு செல்வதில் எந்த புண்ணியமும் இல்லை என இருவரும் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதற்கு பதிலாக வெறும் கோவிலுக்கு மட்டும் செல்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. எந்த கேள்வியும் இல்லாமல் எந்த ஒரு டோக்கன் நடைமுறையும் இல்லாமல் கடவுளை சந்தித்து திட்டுவது இவர்களுக்கு ஆழ்ந்த நிம்மதியை கொடுத்திருந்தது.
தூரத்தில் இருந்த மருத்துவமனை கட்டிடம் நெருங்க நெருங்க சாந்தாவின் நெஞ்சில் வெப்பம் அழுத்தியது. நடையில் தளர்வு வெளிப்பட்டது. சந்திரன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. சந்திரன் முன்பு போல இல்லை என்பதற்கு பெரிய உதாரணங்கள் ஏதும் தேவைப்படவில்லை, தன் சபாரி உடையை துறந்து வேட்டி சட்டை அணிந்ததே போதுமானதாக இருந்தது.
சாந்தா தன் கணவனை பார்த்தாள். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதற்குள் அருகில் வந்துவிட்ட சந்திரனின் கைகளை இறுக்க பற்றிக்கொண்டாள். சந்திரனுக்கும் என்ன செய்வது என புரியாமல் நின்று கொண்டிருந்தார்.
சந்திரன் மருத்துவமனை மாடிகளை எண்ணினார். ஒருகட்டத்துக்கு மேல் சூரியன் கண்ணில் பட்டு கூசவே நான்கு அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்ற முடிவில் சாந்தாவின் கைகளை பிடித்துக்கொண்டு மருத்துவமனை வளாகத்தை அடைந்தார்.
வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சீராக நிறுத்தப்பட்டு அதை கண்காணிக்க ஒரு எழுபது வயது ஊழியர் கத்தரிப்பூ ஊதா உடையில் குறுக்கும் நெருக்குமாய் நடந்து கொண்டிருந்தார். அங்கு பூச்செடிகள் பராமரிக்கப்பட்டு பசுமையாக காட்சியளித்தது. அதில் பூக்கள் வண்ண வண்ணமாய் பூத்து குலுங்கியது. சாந்தா அதை பார்த்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்த சந்திரன், "செடி அழகா இருக்குல்ல? வீட்டுக்கு போகும் போது ஒரு கொப்ப உடைச்சு வீட்ல வச்சு பாப்போம்!" என்ற கணவனை பார்த்து மீண்டும் அழுதாள்.
"ஐய! ஏ இப்படி அழுதே சாவடிக்கிற. செத்த நேரம் பேசாம இருவே. வர வேண்டிய இடத்துக்குதானே வந்துருக்கோம்!" என சப்தமாக ஆறுதல் சொன்னவனை அப்படி இப்படியுமாய் ஒரு எட்டு பேராவது வேடிக்கை பார்த்திருக்க வேண்டும். எல்லோரும் அவரவர் பிரச்சினையில் இருந்தார்கள். சாந்தா ஒரு பூவின் மீது கை வைக்க முயன்ற போது எங்கிருந்தோ வந்த ஒரு பெண்மணி அடக்கி வைத்திருந்த வாந்தியை அந்த பூவின் மீது கக்கினாள்.
ரசித்த ஒரே காட்சியின் மீது இவ்வளவு பெரிய அபத்தம் நிகழும் என சாந்தா எதிர்பார்க்கவேயில்லை. உடனடியாக வந்த ஒரு துப்புரவு தொழிலாளி கடுமையாய் திட்டிக்கொண்டே சிதறிய வாந்தியை துடைத்துக்கொண்டிருந்தாள்.
சாந்தா தூங்கிக்கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் சந்திரன் அலறி துடித்து கத்தினார். திடுக்கிட்டு எழுந்த சாந்தாவிற்கு ஒரு வாரம் கழித்துதான் சந்திரனுக்கு மலக்குடல் புற்றுநோய் என தெரிய வந்தது.
அன்றிலிருந்து பத்து நாள் வீடு திருவிழா போல மாறி இருந்தது. உறவினர்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அந்த பத்து நாள் முடிவில் எட்டி ஹார்லிக்ஸ் பாட்டில்களும் கிலோ கணக்கில் பழங்களும் நிறைந்து கிடந்தது. கூடவே மருத்துவ ஆலோசனைகளும் வெளிப்படையான பிரார்த்தனையில் வீடே தெய்வீகமான காட்சியளித்தது. பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் தான் இப்போது இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள்.
இந்த மருத்துவமனைக்கு வரும் முதல்நாள் முன்பு சந்திரன் கூறியதை வைத்து சாந்தா சண்டையிட்டது தான் இப்போது வரை தொடர்கிறது. "எனக்கு ஒரு வருஷமா வயிறு வலிச்சிட்டுதான் இருக்கு. நான்தான் என்னத்த சொல்றதுன்னு விட்டுட்டேன்!"
எல்லா பரிசோதனை முடிவுகளை பார்த்த மருத்துவர் வழக்கம் போல கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு "இது புற்றுநோயின் நான்காம் நிலை. உடனே சிகிச்சை அவசியம். அந்த சிகிச்சையை உடல் எப்படி ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம். அறிகுறிகள் தெரிந்த உடனேயே சோதனைக்கு உட்படுத்தி சிகிச்சையை ஆரம்பித்திருந்தால் இப்போது போல நிலை கை மீறி போயிருக்காது!" என்றார்.
"நீ முன்னமே சொல்லிருந்தா இந்த நிலைமை வந்துருக்குமா?" என்பதையே அன்று இரவு மட்டும் அறுபது முறை சொல்லியிருப்பாள்.
"ஏண்டி நா என்ன வேணும்னே சொல்லாமயா இருந்தேன். வெறும் வயித்து வலின்னு மாத்திர வாங்கி போட்டேன். எல்லார் மாதிரியும் எனக்கும் சரியாயிரும்ன்னு நினைச்சேன்!" என்ற சந்திரன் கண்களில் எந்த நோயின் சாயலுமே இல்லை.
வெகு நேரம் கணவனை கட்டிப்பிடித்து அழுதவள் அப்படியே தூங்கிவிட்டாள். அது மயக்கமாக கூட இருக்கலாம்.
இருவரும் வலது காலை எடுத்து மருத்துவமனை வரவேற்பறையில் வைக்கும் போது குற்றுருயிறாய் ஒருவரை இறக்கி அங்கிருந்த ஒரு அறையில் சென்று சாத்தினார்கள். அந்த மனிதரை கூட்டி வந்தவர்களுக்கும் வேடிக்கை பார்க்கும் பிற நோயாளிகளுக்கும் இருக்கும் பதற்றத்தில் துளி கூட மருத்துவமனை ஊழியர்களுக்கு இல்லை. தூதஞ்சலில் பெறப்பட்ட பொட்டலத்தை கையெழுத்து போட்டு பெற்றுக்கொள்ளும் சாவகாச தொனியே அதில் இருந்தது.
சாந்தா அங்கிருந்த எல்லோரையும் கவனித்தாள். சிகிச்சையில் முடியையும் தசையையும் இழந்தவர்கள் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். புதிதாய் சிகிச்சைக்கு வந்தவர்கள் சிகிச்சையில் இருந்தவர்களை பீதியுடன் வெறித்துக்கொண்டிருந்தார்கள்.
"பேர் பதிஞ்சிட்டியா?"
....
"ஏண்டி உன்னதான். பேர் பதிஞ்சிட்டியா? நம்பர் எதும் குடுத்தானுங்களா?"
"இப்ப மட்டும் வக்கனையா பேசுங்க. நமக்கு நூத்தி ஏழு!"
சந்திரன் சிரித்தார்.
"இப்ப என்ன சொன்னேன்னு சிரிக்கிறீங்க? இப்ப நம்ம பொழப்புதான் அடுத்து என்னென்னு தெரியாம சிரிச்சிக்கிட்டு இருக்கு!" முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.
"அட இவ ஒருத்தி. எனக்கு எட்டு ராசி நம்பர். அதான் சிரிச்சேன். கவலைய விடு இனி எல்லாமே நல்லாத்தான் நடக்கும்!"
"ஏ வாயில நல்லாவுல வருது. உங்களுக்கு ஒண்ணுன்னா நா எங்க போறதுன்னு தெரியாம உக்காந்துருக்கேன். நீங்க டோக்கனை பாத்து சிரிச்சிட்டு இருக்கீங்க. எல்லா தலையெழுத்து!"
அந்த மருத்துவமனை பெரிதாக இருந்தாலும் கூட்டம் வருவதை பார்க்கும் போது அரசு மருத்துவமனை போலவே இருந்தது. இருக்கை இல்லாதவர்கள் தயக்கமே இல்லாமல் தரையில் உட்கார்ந்து கொண்டார்கள். கூட்டத்தில் இருவருக்கும் உட்கார இருக்கை கிடைத்ததே பெரிய சாகசமாக இருந்தது.
"எங்க போறீங்க?" கையை பிடித்து இழுத்தாள்.
"ஒண்ணுக்கு போறேண்டி. நீ வேணாம்ன்னு சொன்னா போகல!"
"போய்ட்டு சீக்கிரம் வாங்க. எங்கேயாவது நின்னு வேடிக்கை பாத்திட்டு நிக்காதீங்க!"
"ஆமா, திருவிழாவுக்கு வந்துருக்கோம். சும்மாருடி!"
கோவிலுக்கே கூட முடி இறக்காத மனிதனை கேசமின்றி உருக்குலைந்த கோலத்தை கற்பனை செய்து பார்க்கவே சாந்தாவுக்கு பயமாக இருந்தது. கூடவே ஓங்காரமிட்டு வாந்தி எடுத்த பெண்ணின் முகம் இன்னும் பதைபதைப்பை கூட்டியிருந்தது.
வரவேற்பறை பெண்மணி காதில் தொலைபேசியை வைத்துக்கொண்டே எதிரில் நிற்பவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். பெரும்பாலும் அந்த பெண்ணின் ஒரே பதில் "வெயிட் பண்ணுங்க!" "உக்காருங்க!" என்பதாகவே இருந்தது. காத்திருக்கும் நோயாளிகளை விட உடன் இருந்தவர்கள் முகத்தில் இன்றே சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அழைத்து செல்லும் அவசரம் தெரிந்தது.
சந்திரன் உட்காந்திருந்த இருக்கையில் வேறு ஆட்கள் உட்காராமல் இருக்க சாந்தா ஒரு கட்டை பையை அதன் மீது நியமித்து இருந்தாள். இடமில்லாத ஆட்கள் கட்டை பையையும், அதன் மீது கை வைத்திருந்த சாந்தாவையும் ஒருசேர பார்த்துவிட்டு சென்றார்கள். அவளுக்கு கணவன் மீது இன்னும் கோபம் வந்தது. இன்னும் ஒருசில நிமிடங்கள் மட்டுமே இடத்தை கைப்பற்றி வைக்க முடியும் என தோன்றியது. நடக்கவே திரணியற்ற பெண் தள்ளாடி நடந்து வந்தாள். சாந்தா தன் பையை எடுத்து கீழே வைக்க வேண்டியதாகிவிட்டது.
பத்து நிமிடங்கள் கழித்து தான் சந்திரன் வந்தார். கூடவே மெலிந்த தேகம் கொண்ட ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். யாரும் தெரிந்தவர்களாக இருக்கக்கூடும் என நினைத்தாள். சந்திரன் மனைவியை தொலை தூரத்தில் இருந்து அறிமுகம் செய்து வைத்தார். சாந்தாவுக்கும் இங்கிருந்து சிரித்து வைத்தாள். கூடவே இடம் பறிபோன நிலை குறித்து கண்களால் சொன்னாள். அதையெல்லாம் சந்திரன் கண்டுகொள்ளவேயில்லை.
என்ன விஷயமா இங்க வந்துருக்கோம்ன்னு இந்த மனுஷனுக்கு கொஞ்சமாவது கூறு இருக்கா? என மனதிற்குள் வைந்தாள். எல்லா பையையும் இருக்கையில் வைத்துவிட்டு சந்திரனை நோக்கி சென்றாள். அவரோடு பேசிக்கொண்டிருந்தவர் சென்றுவிட்டார்.
சாந்தா ஆரம்பிக்கும் முன்பே சந்திரன் பேசினார். "பேசிட்டு இருந்தேனே யார்ன்னு தெரியுமா?"
சாந்தாவுக்கு கோபம்தான். எதற்கும் தெரிந்து வைத்துக்கொள்வோமே என கேட்டாள்.
"இவருக்கும் என்னோட பிரச்சினை தான்!"
சாந்தா எதுவும் பேசவில்லை.
"இன்னொரு விஷயம் தெரியுமா? இவரு இங்க ரெண்டரை வருஷமா வந்து போய்ட்டு இருக்காரு!"
"அதுக்கென்ன இப்ப!"
"கூறு இல்லாம கேக்காதடி. நா இன்னும் ஆறு மாசத்துல செத்து போயிருவேன்னு யாரோ சொன்னதா சொல்லி அழுது ஒப்பாரி வச்சிட்டு இருந்தியே. இப்பபாரு கண்ணுக்கு முன்னயே ஒரு மனுசன் வருஷகணக்குல நடமாடிக்கிட்டு திரியிறாரு!" சந்திரனின் குரலில் சாந்தாவுக்கு ஒரு ஆறுதல் கிடைத்த உற்சாகம் அதிலிருந்தது. சாந்தாவுக்கு மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது. சந்திரன், "ஓ ஆனந்த கண்ணீரா?" என சிரித்தார்.
"இந்தா அந்த கட்டப்பையை எடுத்திட்டு போய் உக்காருங்க. நா நிக்கிறேன்!" என்றாள் சாந்தா.
"சூப்பர்வைசர் என்னைக்குடி உக்காந்துருக்கான். நீ போய் உக்காரு!" என மீசையை முறுக்கினார்.
"டோக்கன் நம்பர் இருபத்தி ஏழு"
வரவேற்பு பெண்மணி உரக்க கத்தினாள்.
சந்திரன் "எப்படியும் சாயங்காலம் ஆகும் போல. வர்றியா ஒரு டீ சாப்பிட்டு வந்துருவோம்!" சாந்தா முறைத்தாள்.
"எதுக்கெடுத்தாலும் முறைக்காதா!"
"எனக்கு வேணாம். நீங்க வேணா சாப்பிட்டு வாங்க!"
"அப்படி பளிச்சுன்னு சொல்லு. டீ வேணாம்னா சம்சா வாங்கிட்டு வரவா? வரும்போது பாத்தேன்; சூடா போட்டுட்டு இருந்தாங்க!" சாந்தா தலையில் வைத்து குனிந்தாள். இரண்டொரு நொடியில் அவள் நிமிர்ந்த போது சந்திரன் தூரத்தில் சென்று கொண்டிருந்தார்.
சாந்தாவுக்கு தற்போது அழுவது ஒன்றே ஆறுதலாகப்பட்டது.
"டோக்கன் நம்பர் நாப்பது வாங்க!" சாந்தாவை இடித்தபடியே இரண்டு பேர் குரல் வந்த திசையை நோக்கி சென்றார்கள்.
வெளியில் ஆம்புலன்ஸ் சப்தம் இறைந்து கொண்டே இருந்தது.
"டோக்கன் நம்பர் அம்பது!"
சந்திரன் வந்தார்.
"எவ்வளவு நேரம்? அதுக்குள்ள இருபது டோக்கன் போயிருச்சு பாருங்க!"
"இங்க டீ நல்லாருக்கு!"
"சிகரெட் புடிச்சீங்களா?" வழக்கமாய் புகைப்பதுதான் இதுவரை கேட்காத சாந்தா இன்று புதிதாய் கேட்டாள்.
"ஆமா, என்ன புதுசா கேக்குற!"
"உங்களுக்கு எதாவது இருக்கா? இந்த நிலைமையிலும் குடிச்சே ஆகனுமா?"
"இனிமே குடிக்க முடியாதுன்னு தான் இப்ப கடைசியா குடிச்சேன். ஒம்மேல சத்தியம்!" என அப்பாவியாய் சொன்ன சந்திரனை பார்க்கும் போது மீண்டும் அழுகை வந்தது.
"நம்ம கேட்டத எதையும் குடுக்காத கடவுள் வியாதியை மட்டும் அள்ளி குடுத்துட்டானே. இனி என்ன பண்ண போறோம்ன்னு நினைச்சா நெஞ்சே பதருது!"
"இனி டாக்டர நா மட்டும் வந்து பாத்துட்டு போறேன். நீ வீட்லயே இரு. எப்பப்பாரு அழுதுகிட்டே!" வெறுப்பாய் தலையை தடவினார்.
"ஆமாமா டோக்கனை போட்டுட்டு நீங்கபாட்டுக்கு டீ குடிக்க வெளிய நின்னுட்டு வந்துருவீங்க. யாருக்கு தெரியும், இங்கேதான் வந்துருக்கீங்கன்னு!"
"டோக்கன் நம்பர் எழுபத்தி நாலு!"
மருத்துவரை பார்த்துக்கொண்டு ஆட்கள் சென்றாலும் கூட்டம் அப்படியே இருப்பது போல தெரிந்தது. வரும்போது காலியாக இருந்த மருந்தகத்திலும் கூட்டம்.
வெகுநேரத்திற்கு பிறகு இருவருக்கும் அருகருகே அமரும் இருக்கை கிடைத்தது. "டோக்கன் நம்பர் எம்பத்தி எட்டு!"
ஒரு பெண்மணி அதிருப்தியுடன் முனகிக்கொண்டே வந்தாள். வந்தவள் சாந்தாவிடம், "பேசண்ட் மட்டும்தான் டாக்டர பாக்க முடியுமாம். கூட வந்தவங்க வெளிய நிக்கணுமாம். கூட ஆள் வந்தாத்தானே என்னனு தெரியும். என்ன உலகத்துல இல்லாத அதிசயமான டாக்டர்ன்னு தெரியல!" என்றபடி சாந்தாவின் பதிலை எதிர்பாராமல் பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்.
சாந்தாவிற்கு இது மற்றொரு அதிர்ச்சியாக இருந்தது.
"இங்க நீங்கதான் டாக்டரை பாத்து பேசணும். உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு எல்லாத்தையும் ஒண்ணுவிடாம அவர்கிட்ட சொல்லுங்க!" என சிறுகுழந்தைக்கு பாடம் கற்பிப்பது போலவே உபதேசம் செய்தாள்.
"டோக்கன் நம்பர் நூத்தி நாலு!"
"நா என்ன சின்ன புள்ளையா எத்தனை டாக்டர பாத்துருக்கோம். நீ புலம்பாம பேசாம இரு. எல்லாத்தையும் நா பாத்துகிறேன்!"
"கடவுள் இன்னும் என்னென்ன சோதனையை ஒழிச்சு வச்சிருக்கான்னு தெரியல!" என இருகைகளையும் மேலே தூக்கி வணங்கினாள்!"
"டோக்கன் நம்பர் நூத்தி ஏழு!"
அவ்வளவு நேரம் காத்திருந்த ஆதங்கத்தில் "நாங்கதான்!" என்று உரக்க கூறினாள். அழைத்த பெண் வித்தியாசமாக பார்த்தாள். சந்திரனை விரைவு படுத்துவதாக எண்ணி சாந்தா அவரை முன்னோக்கி லேசாய் தள்ளி விட்டாள். சந்திரன் சிரித்தபடி மருத்துவரின் அறைக்கு சென்றார்.
அவர் பின்னால் சென்றால் மருத்துவரை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா? என அறையின் உள்ளே செல்ல உத்தேசிக்கும் சாந்தாவின் நோக்கத்தை புரிந்துகொண்ட செவிலி அவளை தொடாமலேயே வெளியில் பிடித்து தள்ளினாள்.
சாந்தா ஒரு மருத்துவ ஆலோசனை பெயர் பலகைக்கு அடியில் இருந்த இருக்கையில் உட்காந்தாள். உண்மையில் கூட்டம் குறைந்துவிட்டதா அல்லது குறைந்தது போல உணர்வா என தெரியவில்லை. அவள் அற்புதத்துக்கு காத்திருந்தாள்.
சாந்தாவை யாரோ தொட்டது போல இருந்தது. அது இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தை. அதன் தாய் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாள். எந்த குழந்தையை பார்த்தாலும் அள்ளிக்கொண்டு முத்தமிடும் சாந்தாவுக்கு அன்று ஆயிரம் தடைகள். மீண்டும் அந்த குழந்தை சாந்தாவின் வளையல்களில் கையை பிடித்து இழுத்தது. அப்போது தான் குழந்தையின் கைகளை கவனித்தாள். ஊசி மருந்துகள் ஏறிய தலும்புகள் தெரிந்தது. கடவுளே என அவள் மனம் பதைபதைத்து போனது.
"என்னமா குழந்தைக்கு?" என்றாள் அந்த தாயிடம்!
"இரைப்பை கேன்சர். ஆறுமாசமா ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு!" என்ற குழந்தையின் தாய் ஏறக்குறைய இதை ஆயிரம் முறை சொல்லியிருப்பாள் போல தெரிந்தது.
சாந்தா வேறு எதுவும் கேட்கவில்லை. குழந்தையை வாங்கினாள். அது அழகாக சிரித்து விட்டு சாந்தாவின் மூக்குத்தியை தொட முயற்சித்தது.
அந்த தாயே தொடர்ந்தாள், "நாலு வருஷத்துக்கு அப்புறம் பிறந்த குழந்தை. மொத பிறந்தநாள் கொண்டாடி ஒரு வாரத்துல இருந்து நான் ஆஸ்பத்திரியும் வீடுமா அழைஞ்சிட்டு இருக்கேன். குழந்தை பிறந்ததும் வெளிநாட்டுல இருந்து வந்த வீட்டுக்காரர் குழந்தைக்கு இப்படின்னு வந்ததும் திரும்ப சம்பாதிக்க போயிட்டாரு!" குழந்தை சாந்தாவின் கழுத்தை கட்டிக்கொண்டு வேறு எதையோ கவனித்துக்கொண்டிருந்தது.
"ஒருநிமிசம் குழந்தையை பாத்துக்கங்க. பாத்ரூம் போய்ட்டு வந்துறேன்!" என சாந்தாவின் பதிலை கூட எதிர்பாராமல் சென்றாள்.
சாந்தா குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டாள். குழந்தை அவளின் வாயில் தன் விரலை வைத்து அதை திறப்பது ஒரு விளையாட்டு போல செய்து வந்தது. செய்த பாவத்துக்கும் வியாதிக்கும் சம்பந்தமே இல்லாதது போல அவளுக்கு தோன்றியது. இல்லாவிட்டால் இந்த குழந்தைக்கு ஏன் இந்த சோதனை என நினைத்துக்கொண்டாள். குழந்தையை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். குழந்தையும் அவளது நெஞ்சிடுக்கில் தன்னை பொருத்திக் கொண்டது. பல வருடமாக ஏங்கிய உணர்வை ஒரே நொடியில் அடைந்தது போல இருந்தது அவளுக்கு!
ஒரு நிமிடம் கடந்திருக்கும் போது அந்த குழந்தை ஏதோ பேசியது போல இருந்தது. சாந்தா குழந்தையை தன் மார்பிலிருந்து மீட்டெடுத்து முகத்துக்கு நேராய் வைத்து கொஞ்சினாள். "என்ன வேணும் அழகுக்கு?" என முகத்தை ஆட்டியவாறு கேட்டாள். குழந்தை அவளை அழுத்தம் திருத்தமாய் சொல்லியது, "அம்மா!"
"இருவது நாளைக்கு ஒருதடவை மருந்த ஊசி வழியா ஏத்துவங்களாம். ஒன்னும் பயப்பட வேணாம்னு சொன்னாரு!" என மருத்துவரை பார்த்துவிட்டு வந்து பேசிய சந்திரனிடம் சாந்தா எதுவும் பேசவில்லை.
"என்ன நான் பேசிட்டே இருக்கேன். பேசவே மாட்ற?"
"இனிமே எல்லாமே நமக்கு நல்லதாதான் நடக்கும்!" என்ற சாந்தாவை புரியாமல் பார்த்தார். பின் நெஞ்சில் சாய்ந்து "நா அம்மாவாயிட்டேன்" என அவள் விசும்பியது சந்திரனுக்கு காதில் விழவில்லை!
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்