சக்திமான் அசோகன்
சிறுகதை வரிசை எண்
# 12
தீட்டாடு
...........
சிறுகதை
......
சக்திமான் அசோகன்
.......
இன்னும் சற்று நேரத்தில் கூறப்போகும் நாட்டாமை தீர்ப்புக்காக கிராமப் பஞ்சாயத்து கூடியிருக்கிறது.
திட்டாணி முன்பு ஒரு மரத்தில் சேரியைச் சேர்ந்த சாம்பான் என்பவனை தாம்புக் கயிற்றால் கட்டிப் போட்டிருக்கிறார்கள் . அவன் அவமானத்தால் யாரையும் பார்க்க பிடிக்காமல் முகத்தைக் கைகளினால் மூடி அழுதபடி இருக்கிறான் .
நடுத்தர வயது. வெயில் வாட்டி எடுத்த கருப்புத் தோல். சிலுவையில் அறைந்த ஏசுநாதரைப் போல நிற்க திராணி இல்லாமல் சரிந்து கொண்டிருக்கிறான் .
பத்தடி தூரம் தள்ளி , ஒரு கம்பத்தில் கொழுத்த ஆட்டுக்கிடா ஒன்று கட்டப்பட்டு , பயத்தால் கத்திக் கொண்டிருக்கிறது.
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும் , மிரட்சியும் கட்டப்பட்டிருக்கும் இரண்டு ஜீவன்களின் கண்களிலும் தெரிகிறது.
ஒரு பக்கம் குடியானவர்கள். அதன் எதிர் பக்கம் சேரி வாழ் மக்கள்.
நாட்டாமையின் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். யானை வரும் பின்னே ஓசை வரும் முன்னே என்பது போல அவர் அமர்ந்து தீர்ப்பு சொல்லக்கூடிய பரம்பரை பேசும் சிங்கமுக நாற்காலி , நடு நாயகமாக போடப்பட்டுள்ளது. அது சுத்தமாகத் துடைக்கப்பட்டு தும்பைப் பூ போன்ற பட்டுத் துணியால் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது.
இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு சாலை விபத்தில் உயிர் பிழைத்த நாட்டாமை ராஜ குருசாமி( நா..... ர்) உடல் நலம் தேறியபிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம்.
" பட பட " வென்று கொக்குகள் சிறகடித்து பறப்பது போல மக்கள் கூட்டம் அலை அலையாக எழுந்து நின்றபடி கைகூப்பி வரவேற்கிறது.
வருகிறார் . அரிமாவைப் போல நாட்டாமை கம்பீரமாக வருகிறார். மேடைக்கு வந்து எல்லோருக்கும் வணக்கம் செலுத்தி நாற்காலியில் நிமிர்ந்து நேர்கொண்ட பார்வையோடு அமருகிறார்.
நாட்டாமைக்கு சுமார் அறுபது வயது இருக்கும். வாட்டசாட்டமான தேகம். மாசு மருவற்ற வெள்ளை வேட்டி , வெள்ளைச் சட்டை. உள்ளத்தில் தெளிவு. வார்த்தையில் நேர்மை. எதையும் வெளிப்படையாக அணுகும் தன்மை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய துணிச்சல். எல்லோரையும் சமமாகப் பார்க்கக்கூடிய தராசுப் பார்வை. பாரம்பரியமிக்க குடும்பம். நடுநிலை நசுக்கப்படுமோ என்கிற அச்சம் காரணமாக எந்தத் தேர்தலிலும் நிற்காதவர். எந்த அரசியல் கட்சிக்கும் போகாதவர். எல்லோரையும் வசிகரிக்கும் குணம். இவையெல்லாம் சேர்ந்த ஒட்டு மொத்த உருவம் தான் நாட்டாமை.
கழுகுப் பார்வையால் கூட்டத்தைக் கணித்துவிட்டு , குடியானவர் மக்கள் பக்கம் திரும்பி , "உங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்லலாம் " என்று உத்தரவிடுகிறார் நாட்டாமை. .
" ஐயா ! முந்தா நாள். பக்கத்து ஊர்ல அங்காளம்மன் கோயிலில மயானக் கொள்ளை திருவிழா நடந்தது .விடிய விடிய கதாகலாட்சேபம் , நாடகம் நடந்து கொண்டிருந்தது . சுற்றுப்பட்ட கிராம மக்கள் எல்லாம் திரண்டிருந்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேட்டுத்தெரு பொன்னப்ப (நா........ர் ) வீட்டுக்குலதெய்வத்துக்கு நேர்ந்து விட்ட ஆட்டுக்கிடாவை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டான். மறுநாள் ஆளுகளை விட்டுத் தேடியதில சேரியில சாம்பான் குடிசையில இந்தக் கிடா கட்டிக் கிடந்ததைப் பார்த்து நமது ஆளுக அதைப் பிடித்துக் கொண்டு வந்துட்டாங்க. இந்தக் கிடாவையும் திருடுன சாம்பானையும் புடிச்சுகிட்டு வந்து கட்டி போட்டு இருக்கிறோம் .நாட்டாமை தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.
" முதல்ல சாம்பான அவிழ்த்து விடுங்க."
நாட்டாமை உத்தரவிட்டார்.
சொன்னவுடன் சாம்பான் மரத்திலிருந்து விடுவிக்கப்படுகிறான்.
சரிப்பா. சாம்பான் தரப்புல என்ன சொல்லப் போறீங்க ? நாட்டாமை கேட்டார் .
" எசமான் . சாம்பான் ஒடம்பு முடியாம படுத்த படுக்கையா கிடக்கிறார் . ஊரே திரண்டு மயானக் கொள்ளை திருவிழாவுக்கு பக்கத்து ஊருக்கு போனபோது கூட இவர் போகலை . இந்த ஆட்டுக்கிடா ராத்திரி எப்படி அங்கு வந்ததுன்னு தெரியல . பட்டியில இருந்த பொட்ட ஆடுக கூட படுத்திருந்ததை விடியல்ல தான் சாம்பான் சம்சாரம் பார்த்திருக்கு . சத்தியமா சாம்பான் திருடல .
ஆண்டாண்டு காலமா இந்த ஊர்ல இருக்கிறோம். திருட்டுங்கிற பேச்சுக்கே இடமில்ல . எந்த அவப்பெயரும் இல்லாம இத்தனை வருசமாக இருக்கிறோம் .அது நாட்டாமைக்கு நல்லாவே தெரியும். "
" சரிப்பா. ஏதோ ஒரு ஆடு ஒங்க வூட்டுக்கு வந்துடுச்சு. யாரு ஆடுன்னு தெரியல. புடிச்சி பஞ்சாயத்துல ஒப்படைக்க வேண்டியது தானே. "
நாட்டாமை பேசிக்கொண்டு இருக்கும் போதே , குடியானவர் தரப்பிலிருந்து குறுக்கிட்டு,
" திருடுனது மட்டும் இல்ல நாட்டாமை . அந்த ஆட்டுக்கு சாம்பான் பொண்டாட்டி பழைய கஞ்சி, இலை தழை போட்டு அந்தக் கெடாவை சொந்தம் கொண்டாட நினைச்சிருக்கு. அதை நம்ம ஆளுங்க பாத்து இருக்காங்க .
" சாமி ! தப்பா சொல்றாங்க. அந்த கிடாவுக்காக கஞ்சி, இலை தழை , வைக்கல . மத்த ஆடுகளுக்கு வச்சத அந்த கிடா தின்னுருக்கு. திரும்பவும் சொல்றேன் ஐயா ! நாங்க கிடாவை திருடல. திருடியிருந்தா நாங்க ராத்திரியோட ராத்திரியா வெட்டி பங்கு போட்டு சமைத்து சாப்பிட்டு இருப்போம் . எங்க புள்ள தலையில அடிச்சு சொல்றோம். நாங்க திருடல ஐயா. "
" சரிப்பா. மனிதாபிமான அடிப்படையில கஞ்சி வச்சதுல தப்பு இல்ல. உழைக்காம வந்த எதுவும் திருட்டுக்கு சமம். இத நான் சொல்லல .மகாத்மா காந்தி ஐயா சொல்லி இருக்காரு .அதனால அந்த கிடாவ ஒடனே பஞ்சாயத்துல ஒப்படைச்சி இருக்கணும் . ஒப்படைக்காதது குற்றம்.
ஆனா , அதே நேரத்துல அந்த கிடாவ சாம்பான்தான் திருடிட்டு போனார்னு சொல்றதுக்கு எந்த ஆதாரமும் சாட்சியும் இல்ல. ஏன்னா, அவரு உடம்பு முடியாதவருனு சொல்றீங்க. திருடியிருந்தா ராத்திரியோடு ராத்திரியா வெட்டி கூறு போட்டு சமைச்சிருப்பாங்க. ஆனா அப்படியும் செய்யல.
அதனால ஆதாரம் இல்லாம சாம்பான் மேலே திருட்டுப் பட்டம் கட்டுனதும் குற்றம் . நிரபராதியைத் தண்டிப்பது மிகப்பெரிய குற்றம் . சாம்பானைத் தண்டிக்கிறதும் சிலப்பதிகாரத்தில அப்பாவி கோவலனைத் தண்டிச்சதும் ஒண்ணுதான் .
ஆக இரண்டு தரப்புமே குற்றம் பண்ணி இருக்கீங்க .அதை ரெண்டு பேரும் புரிஞ்சிகிட்டு வருங்காலத்தில இது மாதிரி குற்றம் நடக்காம சமுதாயம் ஒற்றுமையாக இருக்கணும்கிற காரணத்துக்காவ இரண்டு தரப்புக்கும் தண்டனையோ அபராதமோ விதிக்கல. ஆக , அத ரெண்டு தரப்புமே உணர்ந்தா போதும்.
எனவே இந்தக் கெடாவ ஆட்டுச் சொந்தக்காரரான பொன்னையா (நா.....ர் )கிட்ட ஒப்படைக்கிறோம் . சாமிக்கு வேண்டிகிட்ட வேண்டுதல நேர்த்திக்கடன குறையில்லாமல் அவரு செலுத்திக்கலாம். "
நாட்டாமை தீர்ப்பு சொல்லிக் கொண்டிருக்கும் போது ,
" தீர்ப்பை நிறுத்துங்கடா .எனக்கு நேந்துவிட்ட கிடாவுக்கு , கீழ் சாதி வீட்டில பழங்கஞ்சி குடுத்து அந்தப் பட்டில நாள் பூரா வச்சிருந்ததால , அந்த ஆட்டுக்கு தீட்டு புடிச்சுடுச்சு. அது இனி சாமி ஆடு இல்ல . இனிமே அது தீட்டாடு . என் சன்னதிக்கு அத கொண்டு வராத ..சாமி குத்தம் ..தெய்வ நிந்தனைக்கு ஆளாவாத. அந்தக் கிடாவை நான் ஏத்துக்க மாட்டேன். நாட்டாமை ! தீர்ப்பை மாத்திச்சொல்லு"
என்று உச்ச குரலில் , அதட்டும் தொனியில் , நாக்கைத் துருத்தி , கூந்தலைப் பரப்பி , விரித்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சாமியாடி கொந்தளித்தாள் .
நாட்டாமை தீர்ப்பைத் தெறிக்க விட்டாள் . அவசர அவசரமாக
கூட்டத்திலிருந்த நான்கு பெண்கள் அந்த சாமியாடியைக் குண்டாங்கட்டையாக தூக்கிக்கொண்டு ஓடினார்கள். விபூதியுடன் சிலர் எதிரே ஓடி வந்தார்கள்.
ஈ எறும்பு சத்தம் கூட அங்கே இல்லை. அந்த அளவுக்கு மயான அமைதி . சாமியாடி பெண்ணை அங்கிருந்து அகற்றிய பிறகு , நாட்டாமை மௌனத்தைக் கலைத்தார். கோபமின்றி நிதானமாகப் பேசினார்.
" சாமியாடி என்னை எச்சரித்து , பயமுறுத்தி தீர்ப்பை மாத்துனு சொன்னதுக்காக தீர்ப்பை மாற்ற முடியாது .சொன்னது சொன்னதுதான்.
ஒரு ஆட்டுக்கிடா சேரியில போயி கஞ்சியைக் குடிச்சி அங்க இருந்த ஆடுகளோட விளையாண்டதால அந்த ஆடு தீட்டாடுன்னு சாமியாடி சொன்னதுதான் தப்பு. அது தப்பு மட்டுமல்ல சமுதாயக் குற்றம். இயல்பு நிலையக் கெடுத்து சமுதாய அமைதியக் குலைக்கிறது தண்டிக்ககூடிய குற்றம். இது படைச்ச கடவுளுக்கு சாமியாடியால ஏற்படுத்தப்பட்ட அவப்பெயர். ஒண்ணா இருக்கிற சமுதாயத்தை எதையாவது சொல்லி கிளப்பி விட்டு அவங்கள எதிரி ஆக்கி சண்டை மூட்டி விட்ட சாமியாடி செஞ்ச குற்றத்தை மன்னிக்க முடியாது. அது தண்டனைக்குரிய குற்றம். அதனால சாமியாடி செஞ்ச குற்றத்துக்காக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். ஒரு மாதக் காலத்திற்குள் பஞ்சாயத்தில் கட்ட வேண்டும்.
அது மட்டுமல்ல இனிமே ஊருக்குள்ள எந்த மதத்தை , சாதிய சேர்ந்தவர்களும் தங்க மதத்தை பரப்புவதற்காக பொய்யான நம்பிக்கைய மக்கள்கிட்ட சொல்லி அமைதியா இருக்கிற ஊர போர்க்களமா மாத்துறத இந்த பஞ்சாயத்து ஏத்துக்காது. அந்த ஆளுங்கள ஊரை விட்டு கடத்துறதுக்கும் இந்தப் பஞ்சாயத்து அஞ்சாது. அதனால சாமியாடி தீட்டாடு ன்னு சொன்னத ஏத்துக்க முடியாது. ஆட்டுலயோ மனுசன்லேயோ தீட்டு கிடையாது.
நேர்ந்துவிட்ட கிடாவை சாமியே தீட்டுன்னு ஒதுக்கி , ஏத்துக்கலைன்னா யாரும் ஒன்னும் செய்ய முடியாது. ஆனா தெய்வம் இங்கே வந்து ஏதும் சொல்லல. சாமியாடிதான சொன்னாங்க. அவங்க தெய்வத்தோட ஏஜென்டு இல்ல அதுக்கு எந்த ஆதாரமும் இல்லை ஆதாரம் இல்லாத எதையும் யாரும் இந்த சபையில பேச முடியாது . சாமியாடி சொன்னத சாமி சொன்னதா ஏத்துக்க எந்த ஆதாரமும் கிடையாது .
சாம்பான் வீட்டு கஞ்சிய அந்த ஆடு குடிச்சதால தீட்டுனு சொல்ற சாமியாடி நம்ம புள்ளையார் கோயில் குருக்கள் வீட்டுக் கஞ்சிய அந்த ஆடு குடிச்சிருந்தா அது தீட்டுனு சொல்லுமா . ?
படைப்பில மேல்சாதிக்கு மூணு இருதயமும் நாலு மூளையும் அஞ்சு சிறுநீரகமும் இல்ல. எல்லாருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கு. எல்லாரும் ஒன்னு தான் . எல்லாரும் சமம். அதில வேற்றுமை இல்ல. அப்படி இருக்கும் போது மனுசன்ல எப்படி வேற்றுமை இருக்க முடியும். ?
தீட்டுனு சொல்றதெலாம் ஒரு சாரார் பிழைப்புக்காக உருவாக்கிக்கிட்ட கற்பனை. அதை ஏத்துக்க முடியாது.
கல்யாணம் , காதுகுத்து , மஞ்சள் நீராட்டு இப்படி விசேசங்களில்ல பிரியாணி விருந்து நடத்துறோமே அந்த ஆடு கோழி எங்கிருந்து வாங்கப்படுது ?அதற்கு சாதி மத தீட்டு இல்லையா ? அதில எல்லாம் இல்லாத போது இங்கே எப்படி ஆடு தீட்டாடு ஆகும் ?
ரத்த வங்கில சேமிக்கற ரத்தத்துல சாதி மதம் தீட்டு இருக்குதா ? யாராச்சும் பாக்கிறோமா
அங்கெல்லாம் இல்லாத தீட்டு இங்கே எப்படி வந்தது
ஒங்களுக்கெல்லாம் தெரியும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நடந்த கார் விபத்தில என்னோட ரத்தம் எல்லாம் சிந்தி உயிரு பிழைக்கணும்னா யாராவது ரத்தம் கொடுக்கணும்னு சொன்னப்ப என் குரூப் ரத்தம் கிடைக்காம நம்மாளுக தேடி அலைஞ்சாங்க அப்போ சேரியில இருந்து சாம்பானுடைய பொண்ணு ரத்தமும் மருதன் சம்சாரம் பொன்னி ரத்தமும் எனக்கு சேரும்னு சொன்ன ஒடனே அந்த ரெண்டு பேரும் ஓடோடி வந்து ரத்தம் கொடுத்து என்ன காப்பாத்துனாங்க. என் உடம்பில ஓடுற ரத்தம் கூட வேறு சாதி ரத்தம் தானே அப்படின்னா நானும் தீட்டாடு தான.
பணத்துல தீட்ட பாக்கறோமா. உண்டியல் காசுல தீட்டு இருக்கா. தீட்டு சாதி மதம் இதெல்லாம் சாமி உருவாக்கல. சாமி எல்லாரையும் ஒரு வயித்து பிள்ளைகளாக தான் பாக்குது. அதுல எந்த வித்தியாசம் இல்ல. நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே அப்படின்னு கடவுளையே கேள்வி கேட்ட நக்கீரன் பரம்பரையில வந்தவங்க நாம.. நாம சாமியை நம்புறோம் ஆனா சாமியாடிய நம்பல அவங்க நம்மள உருவாக்கினவங்க அல்ல. அவங்க நமக்கு பங்காளிங்க அதனால அந்த பங்காளி சண்டை நடந்துகிட்டு தான் இருக்கும். அவங்களால தான் பிரச்சனையே. அதைப் பத்தி கவலைப்படாம ஜனங்க ஒத்துமையா இருக்கிறதுக்கு ஊரு வளர்ச்சிக்கு என்ன நல்லது செய்யனுமோ அதை நாம செஞ்சுக்கிட்டே இருப்போம். ஒண்ணா இருப்போம் எல்லோரும் நல்லா இருப்போம். நாம இந்தியாவுக்கே எடுத்துக்காட்டா இருப்போம் .
இந்தப் பஞ்சாயத்தை முடிச்சு வைக்கிறேன்.
ரொம்ப சந்தோசம். இத்துடன் பஞ்சாயத்து கலையலாம். எல்லாருக்கும் வணக்கம்.
நாலா திசையிலும் மக்கள் கலைந்து போய்க் கொண்டிருந்தனர்.
" யப்போவ் ! என்னா துணிச்சலு .என்னா தகிரியம். ! இது மாதிரி ஊருக்கு ஒரு நாட்டாமை இருந்தா போதும்யா " என்ற ஒரு பெரியவரின் குரல் ஊர் முழுவதும் பரவியது. .
அதுவரை இருட்டில் தத்தளித்த கிராமம் மின்சாரம் வரவே தெரு விளக்குகள் ஒளியைச் சிந்தி மக்களுக்கு வழி காட்டின.
அந்த வெளிச்சம் வெள்ளை வேட்டியும் , வெள்ளைச் சட்டையும் அணிந்த நாட்டாமையைப் போல பளிச் னு இருந்தது . அதில் கறையும் இல்லை . கரையும் இல்லை.
..................
முற்றும்.
...................
சக்திமான் அசோகன்
9445104404
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்