logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

தெரிசை சிவா

சிறுகதை வரிசை எண் # 11


அந்தக் குறிப்பிட்ட நீல நிறத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.  வான நீலமா? மையின் நீலமா?  அல்லது கடலின்  நீலமா?- என்று நீங்கள் அந்த வண்ணத்தைக் கிரகிக்க கேள்வி எழுப்பினால், என்  பதில்  "இல்லை" என்பதுதான்.  அந்த நீலம் அப்படியொரு பிரத்யேக நீலம்.  எப்போதோ, எங்கோ, பார்த்த ஆப்பிள் வடிவக்  குடுவை மீனின் வாலில் அந்த நீலத்தைப்  பார்த்திருக்கிறேன்.  வானம் வெளுத்த நாளில், அடிவான அடுக்கில் "அதே நீலத்தை" சில நிமிடங்கள் ரசித்திருக்கிறேன். சுடுகாட்டு மதிலில் பூத்து மடிந்திருந்த சங்குபுஷ்ப மலர் உடலிலும் அதே நீலத்தைக் கண்டிருக்கிறேன். அதன் பின்பு   அந்த நீல நிறத்தைப் பார்த்தது அவள் கருவிழியில்தான்.  இல்லை...! இல்லவே இல்லை...! கருவிழியென்பது அவளுக்கில்லை.  நீல விழி.  அதுவும் கருநீலவிழி. பெண்களின் மார்பு இடைவெளியில் படுத்துறங்கும் வசதி வாய்த்த சில சொகுசு பூனைகளின் முகத்திலும் இம்மாதிரியான வீரியக் கண்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். வெள்ளை மேகத்தில் தோன்றும் நீல நிலவென, சுண்ணாம்பு சுவற்றில் மழை நீர் குடித்து எழும்பும் வட்ட நிற கறையென, பருவம் துளிர்க்கும் பெண்ணின் அக்குள் நரம்புகளின் நிறமென, பற்பல நினைவுகள் அவள் கண்களைக் காண்கையில். எனக்குத் தெரிந்து மனித சமுதாயத்தில் இம்மாதிரியான விழிகள் வாய்த்திருப்பது  மத்தியதரைகடலைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் தாம்.  "நீலப்பளிங்கென" சற்று வீரியம் ததும்பி நிற்கும் மயக்கும் விழிகள். அமீரகத்தின் காலைநேரத்திற்குரிய பரபரப்பை அலுவலகத்திலும் உணர முடிந்தது. கழிந்த இரண்டு நாட்கள் விடுப்பாகையால் வழக்கத்தைவிட சற்று அதிகமான கூட்டம். மனிதர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். வேலையில் பரபரப்பான மூளையை கணிணியிடம் ஒப்படைத்துவிட்டு, கண்களை மட்டும் அவளுக்கு ஒதுக்கியிருந்தேன். பெரியதொரு பன்னாட்டுத் தூதஞ்சல் நிறுவனத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் அதிகாரியாக இருக்கும் எனக்கு, இது வாடிக்கைதான். குறைதீர்க்கும் அதிகாரியாய் இருப்பதில் சில குற்றப் போதனைகளும் எனக்குண்டு. இயற்கை தீர்மானிக்கும் நிறை குறைகளை, மனிதன் கட்டுப்படுத்த முடியுமாவென்ன? யார் குறைகளை, யார்தான் தீர்த்துவிடமுடியும். வாடிக்கையாளர் சேவை மையத்தில் குறைகளைத் தீர்க்கிறோமோ இல்லையோ, குறையென்று வருபவர்களின் கோபத்தை உள்வாங்கி அவர்களை மட்டுப்படுத்துவதுதான் முதல் வேலை. சொல்லப் போனால் அதுமட்டும் தான் வேலை. இல்லையென்று சொல்லும்போதும், ஆமென்று சொல்லும் போதும் உதடுகளில் ஒரு புன்னகை கட்டாயம் அவசியம். கண்களில் கனிவோ அது சார்ந்த கருணையே தேவை இல்லை. ஆனால் உதடு உதிர்க்கும் "மெல்லிய புன்சிரிப்பு" முகத்திற்குக் கட்டாயம். கூடவே பயன்படுத்தும் வார்த்தைகளில் தெளிந்து நிற்கும் "கனிவு". பேச்செங்கும் ஒப்பனைத் தெறிக்கும் அன்பும், அது சார்ந்த உபசாரங்களும். பின்புறமாய் யோசித்தால், அறியாத மனிதர்களோடு தெளிவாக உறவாடி நட்பு பாராட்டும் வேலை. நாள்தோறும் புத்தம் புது மனிதர்கள். ஆனால் ஒரே மாதிரியான பிரச்சனைகள். அது தொடர்பான கேள்விகள். என்னுடைய பார்ஸல் ஏன் இவ்வளவு தாமதம்? உங்கள் மூலமாக வந்த பொருள் எப்படி உடைந்தது? இதை பார்சலில் அனுப்பக்கூடாதென்பது எனக்கெப்படி தெரியும்? என்னுடைய பார்சல் ஏற்கனவே திறக்கப்பட்டிருந்தது? அனுப்பிய பார்ஸலில் சிலவற்றை காணவில்லை? வந்த பார்சலை திருப்பி அனுப்புவது எப்படி? பார்ஸலின் வழி "செக்ஸ் டாய்ஸ்" டெலிவரி கிடைக்குமா? - என்பது போன்ற கேள்விகள். இது தவிர வித்தியாசமாய் கூரியரில் நாய், பன்றி, கழுகு அனுப்பலாமா? முள்ளம்பன்றி, ஆமை, முதலை அனுப்பலாமா-வில் தொடங்கி, நகைப்போடு மனைவி, குழந்தையை அனுப்பலாமா? - வரை கேள்விகளைச் சந்தித்திருக்கிறேன். கைக்குட்டையில் எச்சில் தெறிக்க முத்தமிட்டு, இது காய்வதற்குள் அவளிடம் சேர்க்க முடியுமா? - என்று கேட்ட பைத்தியக்காரக் காதலனை அவ்வளவு எளிதாய் மறக்க முடியுமாவென்ன? வாடிக்கையாளராய் வந்தமரும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு உணர்வுகள். ஒவ்வொரு சிந்தனைகள். வந்தமர்பவர் அழகானப் பெண்ணென்றால், எனக்கு இன்னும் உற்சாகம். பேச்சின் நடுவே அவர்களின் உதடுகளையும், கண்களையும் காணும் பேரானந்தம். இப்படியொரு சந்தர்ப்பத்தில் பழக ஆரம்பித்து, மெல்ல மெல்ல நட்பாகி, "நெருக்கமான" பெண் நண்பர்கள் நாலைந்துபேரின் தொடர்பு, இப்போதும் என் அலைபேசியில் உண்டு. அர்ப்பணிப்பு ஏதுமில்லாத கட்டுப்பாடில்லாத அன்பு. வாங்க பழகலாம். புடிச்சா நண்பர்களாகயிருப்போம். ஆரம்ப சந்திப்புகளில் "உணவு" பகிர்வோம். அப்படியே தொடர்ந்தால் வரும் நாட்களில் "உடல்" பகிர்வோம் என்ற ரீதியிலான உறவு. குடும்பமோ, குழந்தைகளோ வேண்டாம். குதூகலமொன்றே குறிக்கோள் -என்பது போன்ற சுகபோக வாழ்க்கை. வெளிநாடுகளில் வேலைப் பார்ப்பதில் இது ஒரு வசதியும் கூட. சொந்த நாட்டில் எங்குச் சென்றாலும் யாரோ நம்மை கவனிப்பது போன்ற பிரமை ஏற்படுவதுண்டு. இங்கு அவரவருக்கு அவரவர் வேலை. அவரவர் தேவைகள். அவரவர் விருப்பம். ஏற்கனவே இருந்த வாடிக்கையாளரின் குறைகளை நிவர்த்தி செய்து, ஆர்வப்பெருக்குடன் அவளை நோக்கி கண் ஜாடை செய்தேன். அடுத்த வரிசை எண் 69 என மின்னணு அறிவிப்பு பலகை காட்ட, நான் எதிப்பார்த்தது போல் அவள் படபடப்புடன் எழுந்து முன்னமர்ந்தாள். அச்சு அசலாய் கோதுமை மாவின் நிறம். நினைத்ததைவிட கொழுத்துத் திரண்ட மார்புகள். சாயமேதும் பூசாத நிர்வாண உதடுகள். தொலைவில் கண்டு ரசித்த அந்த நீலக் கண்கள், கைக்கெட்டும் அருகினில். நேருக்கு நேராய் வெகுநேரம் காணமுடியாத அளவிற்கு கூர் தீட்டியப் பார்வை. கண்களை விலக்கிக் கொண்டேன். கருத்தாய் வேலை செய்யும் பாவனையோடு நடித்துக்கொண்டே இருந்தேன். அவள் வந்தமர்ந்த ஒன்றிரண்டு நிமிடத்தில் மூன்று முறை அவள் கண்களைப் பார்த்து விட்டேன்.  வந்தவள் லேசான சிரிப்புடன் இருந்தாள். கொஞ்சமும் பிழை இல்லாத நீள்வட்ட முகம். பளபளப்பில்லாத தங்க நிற முடிக்கற்றைகளை விரல் கோர்த்து இடப்புறம் ஒதுக்கிக் கொண்டாள். களைத்த ஆனால் கவர்ச்சியான உடம்போடு லேசாக நெளிந்தமர்ந்தாள். நான் நேரடியாக அவள் கண்களுக்குள் விழுந்துக் கொண்டிருந்தேன். அரைகுறையான ஆங்கிலத்தில் ஏதேதோ பேசினாள். பேச பேச குரல் கமறி உடைய, தீடிரென கண்கள் பனித்தது. அழுகையும், கெஞ்சலும், லேசான ஆவேசமும் கலந்த பேச்சு... எனக்கு சற்றும் புரியாத வேற்றுமொழி. பேச, பேச, மீண்டும் அவள் நீலக்கண்களில் கண்ணீர் பொதும்பியது.. மறுபடியும் நான் ஆங்கிலத்தில் வினவ, அவளோ அரைகுறை ஆங்கிலத்தோடு ஏதேதோ பேசினாள். ஏதும் விளங்காத நான், டாக்குமெண்ட்ஸ்... டாக்குமெண்ட்ஸ் என்று கூறி, பணம் எண்ணுவதைப்போல கைஜாடை செய்தேன். ஏதோ புரிந்து கொண்டவளாய், சுதாரித்து குனிந்து, பட்டென்று பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். அவ்விடம் முழுதும் அவள் வாசம் நிரம்பியது போல் தோன்றியது. பெண்களின் கண்களில்தான் கவர்ச்சியின் உச்சம் இருப்பதாக கவிஞர்கள் கூறுவார்கள். எனக்கென்னவோ அதற்கு நிகரான கவர்ச்சி அவர்களின் விரல்களில் மறுதலிப்பதாகத் தோன்றியது. அளவெடுத்து வெட்டிப் பொரித்த "பிரெஞ்ச் பிரெய்ஸ்" போல அழகழகான விரல்கள் அவளுக்கு. பார்த்தவுடன் பற்றிக்கொள்ள வைக்கும் பளிங்கு சிற்பங்கள் போல. ஆவணங்கள் வாங்கும் சாக்கில் அவள் விரலழகில் கிறங்கியிருந்தேன். என் பார்வையின் வீரியம் அவளுக்கு உறைந்திருக்கும் போல. லேசான நடுக்கத்தோடு உடல் குறுகி அப்படியே நாற்காலியில் குனிந்து கொண்டாள். நானும் தன்னிலை உணர்ந்தவனாய் நேர்மைக்குத் தோதான பார்வையோடு, அவள் கொடுத்த காகிதங்களை சரி பார்த்தேன். Aminah Hafsha*** என்று பெயர் தொடர்ந்தது. அவள் விளிப்பெயர் அமீனாவாக இருக்கலாமென்று நானாக நினைத்துக் கொண்டேன். அமீனா என்ற பெயரோடு நான் படித்த சில கதைகள் நினைவுக்கு வந்தன. இப்போது விட்டால் அவளை வர்ணித்து ஒரு கவிதை எழுதவும் தயாராயிருந்தேன். ஆவணத்தில் கீழிருந்த தகவல்களை கணினியில் சரிபார்த்தேன். வரம் வாங்கும் எதிர்பார்ப்போடு, அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். கரெக்ட்தான்... அவள் பெயருக்குத்தான் பார்ஸல் வந்திருந்தது. ஆனால் இவ்விடம் வந்து சேரவில்லை. அதை அவளிடம் அப்படியே ஆங்கிலத்தில் புன்னகையோடு கூறினேன். அவளுக்கு எதுவும் புரிந்ததாகத் தெரியவில்லை. வினோதமான முகபாவத்துடன் என்னையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் எங்கும் அரும்பி நின்ற தயக்கம். கூடவே இருந்த விரல்களின் நடுக்கம், அவள் ஏதோ ஒரு தவிப்புடன் இருப்பதை எனக்குத் தெரியப்படுத்தியது. கவலையோடு அழுது கொண்டிருக்கும் "அப்சரஸ்களை", ஆண்மை திமிர ரசிக்க இயலுமாவென்ன? காமம் குறைந்த "ஒரு கருணை" என் கண்களுக்குள்ளும் எட்டிப் பார்த்தது. பொதும்பிய கண்ணீர் கன்னத்தில் வழிந்து அவள் நெஞ்சத்தை நனைத்தது. இருந்தவாக்கில் குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டாள். எப்படியாவது அவளுக்கு உதவ தீர்மானித்தேன். கணிணியை ஆராய்ந்ததில் தலைமை அலுவகச் சோதனைச் சாவடியில் பார்சல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. தொலைபேசியைத் தடவி உரியவரை தொடர்பு கொண்ட போது, கண்காணிக்கப்படும் நாட்டிலிருந்து வந்த பார்சலாகையால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிந்து, அவளிடம் நிலைமையை விவரித்தேன். தொடர்ந்து நான் பேசப் பேச, அவளுக்கு என்ன புரிந்ததோ, என்னவோ, துக்கம் மேலிட அப்படியே நாற்காலியிலிருந்து சரிந்தாள். அந்த இடமே களேபரம் ஆகியது. கூட இருந்த பெண்கள் சிலபேர் அவளை தூக்க, லேசான மயக்கத்திலிருந்தாள். பசி மயக்கமாக இருந்திருக்கலாமென்று எனக்குத் தோன்றியது.அலுவலக காவலர்கள், அவசர மருத்துவ சேவைகள் என சில நிமிடங்கள் நகர, மீண்டும் அவள் இயல்புநிலைக்கு திரும்ப அரைமணிநேரமாகியது. அலுவலகமோ பத்து நிமிடங்களுக்குள் இயல்பாகியிருந்தது. கையில் தண்ணீர் மற்றும் துரித உணவு பாக்கெட்டோடு நானும், அரபி தெரிந்த அலுவலக பெண்ணும் அவளை அணுகினோம். பரஸ்பர விசாரிப்புகளுக்குப்பின், அவளுடைய பார்சல் இன்னும் வரவில்லை. வந்தவுடன் கண்டிப்பாக தொடர்பு கொள்வோம் என்று கூறுமாறு அரபிப் பெண்ணிடம் கூறினேன். அவர்கள் இருவரும் உரையாட ஆரம்பிக்க, அந்த பெண் ஏதேதோ விஷயங்களை கொட்டத் தொடங்கினாள். பற்பல உணர்வுகள் அவள் முகத்தில். பேசிக்கொண்டே அழுதாள். அழுது கொண்டே பேசினாள். என் அலுவலக பெண்ணுக்குள்ளும் சிறிதான சோகம் தொற்றிக்கொண்டது. எனக்கெதுவும் விளங்க வில்லை. அமைதியாக வாய்ப் பார்த்து உட்கார்ந்திருந்தேன். கடைசிவரை நாங்கள் கொண்டு சென்ற எதையும் அவள் சாப்பிடவில்லை. சிலநிமிட உரையாடல்களில் அவள் விடைபெற, என் அலுவலகப்பெண் அவள்நிலையை விவரித்தாள். வந்தவள் சிரியா நாட்டு பிரஜையாம். உள்நாட்டுப்போரில் கணவனை, குழந்தையை, உரியவர்களை இழந்து, அகதியாய் இங்கு வந்து சேர்ந்தவளாம். இக்கட்டான சூழ்நிலையில் இவ்விடம் வந்து ஒரு அரபி வீட்டில் வேலைசெய்து கொண்டிருக்கிறாளாம். மூன்று வாரங்களுக்கு முன்பு அவள் சொந்த தம்பி ஊரில் உயிரோடு இருப்பதை அதிஷ்டவசமாக அறிந்தாளாம். குண்டடியில் சிக்கிய அவளுடைய வீட்டுக் கட்டிடம் அகற்றப்பட்ட போது கிடைத்த அவள் உடைமைகள் சிலவற்றை அவள் தம்பி அனுப்பி இருக்கிறானாம். அதை பெறுவதற்காகத்தான் இங்கு வந்தாளாம் - என்றபோது அவள் மீது ஒரு கனிவும் பாசமும் உண்டானது. வெகு நேரமாய் மனத்திரையில் அவள் முகமே வந்து போனது. ஓய்வறைக்கு வந்து கண்களை மூடிக் கொண்டேன். உள்ளம் ஓயாமல் அலைந்து கொண்டேயிருந்தது. மனதிற்குள் எத்தனை வேதனையோடு அவள் இம்மாதிரியான தொடர்பற்ற ஒரு தேசத்தில் வந்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பார் - என எண்ணிப் பார்த்தேன். ஒரு நாட்டின் மீது மற்றொரு நாடு செய்யும் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தும் விளைவுகள் என் மன கண்களில் மெதுவாக ஓடத் தொடங்கின. அவள் மீது பெரும் கரிசனம் ஊற்றெடுத்தது. இம்மாதிரியான "நுண்ணுணர்வுகள்" போரை தாங்கிப் பிடித்து நடத்தும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அல்லது அந்நாட்டின் அதிபர்களுக்கும் புரியுமா? என்று சில நிமிடம் யோசித்தேன். மனதளவில் அயற்சியாயிருந்தது. போர் நடக்கும் நாடுகளின் வீடுகளில் "இறப்பு" எப்படி இருக்குமென்று மனதிற்குள் மீண்டும் மீண்டும் கேள்விகள். பலகாலமாய் ஓடித்திரிந்த "வீதிகளில்" ஒளிந்திருக்கும் நிலைமை தோன்றினால்... பயந்து மலைத்த "குழந்தைகள்" கதறி அழுது, கட்டிப்பிடித்துக் கதறினால்... உயிருக்குயிராய் நேசிக்கும் "உறவுகள்" கண் முன்னே வெடித்துச் சிதறினால்... ஆசையாய் வளர்த்த "குழந்தைகள்" அங்கம் தெறிக்கச் சிதறினால்... கட்டி எழுப்பிய "வீடு" ஒற்றை நொடியில் பொடிப்பொடியாய் சிதறினால்... உலகில் நடந்த, நடக்கும் போர்களைப் பற்றிய பலகாட்சிகள் மனத்திரையில் தோன்றி மறைந்தன. என் கால் இடைவெளியில் வெடிகுண்டொன்று வெடிப்பது போல ஒரு பிரமை. திடீரென்று என்னுடைய மனைவியும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள். கைகளில் கட்டுப்படுத்தமுடியாத ஒரு நடுக்கம். கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டேன். **********************வாடிக்கையாளரின் முன்பு வைத்து பிரிக்கப்படவேண்டுமென்று என்ற குறிப்போடு, மூன்று நாட்களுக்கு பிறகு அவள் பார்சல் அலுவலகம் வந்திருந்தது. அவளுக்கு நானே போன் செய்து அரைகுறை அரபியில், ஆங்கிலம் கலந்து தெரிவித்தேன். உடலெங்கும் பொட்டித் தெறிக்கும் உற்சாகத்தோடு, கண்களெங்கும் மாறாத பரிதவிப்போடு அவள் வந்திருந்தாள். இந்த முறை அவள் கண்டிப்பாக மயங்கி விழ மாட்டாளென்று தோன்றியது. மீண்டும் ஒரு முறை அந்த நீலக் கண்களை கண்டு கொண்டேன். இருவரும் பார்சல் இருக்கும் அறைக்குள் நுழைந்தோம். இரண்டு மூன்று கிலோ இருக்கும். சிறிய பார்ஸல்தான். உண்மையான பாசத்தோடு அவள் முன் நீட்டினேன். கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டாள். இப்பொழுதே பிரித்து காட்டவேண்டுமென்று ஆங்கிலத்தில் கூறினேன். மாஷா.. அல்லா... என்று புன்னகையோடு பிரிக்கத் தொடங்கினாள். சிரிய மண்ணின் வாசம் அவ்வறையெங்கும் நிரம்பியது போலிருந்தது. அவள் படித்த பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள். ஒவ்வொன்றையும் புதியதாய் தொடுவதைபோல் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். சில வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி பரிவர்த்தனை கார்டுகள் காட்சிக்குத் தென்பட்டன. அவளின் குடும்ப புகைப்படமொன்றும் பார்வையில் சிக்கியது. போட்டோவில் தெரிந்த அவள் மகனுக்கு அதிகப்படியாய் மூன்று வயதிருக்கலாம். அவள் உணர்ச்சி வசப்படுவது கை நடுக்கத்தில் தெரிந்தது. உணர்வை அடக்கிக் கண் இமைத்து சமாளித்தாள். கடைசியாய் முட நாற்றம் நிறைந்த இரண்டு துணிப்பொட்டலங்கள். மருத்துவமனை கழிவை கடக்கையில் வருமே அதே "முடநாற்றம்". அவளோ சங்கோஜமின்றி அவற்றை திறந்து காட்டினாள். ஒன்றில் பயன்படுத்திய சில நகைகள். மற்றொன்றில் மண்ணு போல ஏதோ ஒன்று. அவ்வளவுதான். அத்தனையும் பார்த்து முடிக்கையில் அவளுக்குள் உணர்வு நிரம்பியிருந்தது. நிறைய காற்றை உள்ளிழுத்து பெருமூச்செறிந்தாள். நான் சரியென்று கண்ணசைக்க, சான்றிதழ்களை, வங்கி ஆவணங்களை ஒவ்வொன்றாய் எடுத்து, கைப்பையில் வைத்துக் கொண்டிருந்தாள். நானும் பெருமிதத்தோடு நின்று கொண்டிருந்தேன். கடைசியாய் அத்துணிப்பொட்டலங்களை எடுக்கையில், ஏதோ கண்டு உணர்ந்தவளாய் சட்டென்று நிலை குலைந்தாள். அடக்கி வைத்த "அணை நீர் வெள்ளம்" திறக்கையில் ஆர்பரிப்பதைப்போல, அவளுக்குள் ஒரு உணர்வு பிரவாகம். பொட்டலங்கள் இரண்டையும் தட்டி விட்டு "பெரும் கூச்சலோடு" அலற ஆரம்பித்தாள். அலுவலக நண்பர்கள் மொத்தமாய் சூழ்ந்து கொள்ள, அவள் யாரையும் கவனிப்பதாகத் தெரியவில்லை. அப்படியே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். நிறைய இந்திய திரைப்படங்கள் பார்த்து வளர்ந்ததால், துணியில் பொதிந்த தன் நாட்டு மண்ணைப் பார்த்து அவள் கதறியிருப்பதாய் நான் நினைத்துக் கொண்டேன். அல்லது அவர்கள் அணிந்த நகைகளை பார்த்ததால் இருக்குமோ? வெகுகாலத்திற்கு பிறகு குடும்ப போட்டோவை கண்டதினால் இருக்கலாம். குறுக்கு வெட்டில் சிந்தித்தேன். எதுவாக இருந்தால் என்ன? அழட்டும். துக்கம் குறைய வேற என்ன செய்ய முடியும். கூடிய நண்பர்களை விலக்கி விட்டு, அவளுக்கு தனிமையை உறுதியளித்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் "அலறல்" சக்தி குறைந்து, சிணுங்கல்களாக மாறியிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது விசும்பல்களாகும். "பெரும் துக்கம்" நீர்த்துப் போக இதை விட வேறு வழியேது. நான் எதிர்பார்த்தது போலவே சிறிதுநேரத்தில் "தன்னிலை" உணர்ந்திருந்தாள். என் கரங்களை பற்றி அரபியில் "சுக்ரன்" என்றாள். நன்றி என்று அர்த்தம். கண்கள் பனிக்க இது என் கடமையென்றேன். மெதுவாகச் சிரித்தாள். துணிப்பொட்டலங்களை கையிலெடுத்து... கண்ணீர் மல்க... "எப் னில் ... ஜவாரிப்பி" - என்றாள். அத்துணிப்பொட்டலங்களின் முட நாற்றம் மூக்கைத் துளைத்தது. லேசாக விலகிக் கொண்டு, வாட்... - என்றேன். மை சன்... ஜவாரிப்பி... - என்றாள். ஜவாரிப்பி??? வாட் இஸ் தட்... - என்றேன். ஒரு வேளை மகனின் அஸ்தியாக இருக்குமோ? மனதிற்குள் சினிமாத்தன சிந்தனைகள். அவள் மீண்டும் கண்ணீர் மல்க "ஜவாரிப்பி... மை சன்" - என்றாள். எனக்கு விளங்காதது அவளுக்குப் புரிந்தது. சட்டென்று என் காலில் விழுந்து, ஷுவுக்குள் இருந்த சாக்ஸை காட்டினாள். மீண்டும் "மை சன்... ஜவாரிப்பி" - என்றாள். எனக்கு அது விளங்கியது. இரத்தம் குடித்து முட நாற்றம் நிறைந்த அந்த துணிப்பைகள், அவள் மகன் பயன்படுத்திய சாக்ஸுகள்.என்னை மீறி ஊறிய அழுகையை, சில நிமிடங்கள் என்னால் நிறுத்தவே முடியவில்லை. - தெரிசை சிவா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.