logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

பஞ்ச்தர்மா

சிறுகதை வரிசை எண் # 10


வணக்கம் எனது சொந்தக் கற்பனையில் உருவான சிறுகதையினை எழுதியுள்ளேன் இதுவரை எந்த இதழ்களிலும் எந்த வடிவத்திலும் இதுவரை வெளிவரவில்லை என்பதனை உறுதியளிக்கிறேன்.           அப்பாவின் நிழல்     கொளுத்துகிற வெயிலில் வேப்பமரங்கள் துளிர்விடும் சித்திரை மாதம் அது.    பஞ்சண்ணா பனந்தோப்பில் வெட்டிக் குவிக்கப்பட்ட நுங்கு குலைகளை சில்லரையாகவும், மொத்தமாகவும் எண்ணி எண்ணி வாடிக்கையாளர்களிடமும்,வியாரிகளிடமும் பரபரப்பாக விற்றுக் கொண்டிருந்தான் லிங்கம்.      சுற்று வட்டாரத்து கிராமங்களில் இது போன்ற சுவையான நுங்கு எங்கும் கிடைக்காது என்பதால் மூன்று மாதங்களுக்கு வியாபாரம் படுஜோராக நடக்கும்.          அன்றாடம் வாங்கிய நுங்குகளை வியாபாரிகள் மிதிவண்டியிலும், இருசக்கர வாகனங்களிலும்,தலையில் சுமந்தும் அக்கம் பக்கத்து கிராமங்களிலும், நகரங்களுக்கும் சென்று விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார்கள்.    நுங்கு வியாபாரத்தில் நன்கு கைதேர்ந்தவன் லிங்கம்.வாடிக்கையாளர்களிடமும்,வியாபாரிகளிடமுமம் அனுசரணையோடு அணுகுவதில் பாக்குவமடைந்தவன்.அதிகமாக பேரம் பேசுவதில்லை. இல்லையென்றால் அந்த கிராமத்தில் சகல சௌரியங்களோடு மக்களின் அன்போடு  இரண்டு அடிக்கு மாடியில் வாழ முடியுமா?தொழில் நேர்மை.    வியாபரிகளும் நாலு காசு பணம் பார்க்கின்ற வகையில் விலையில் நுங்குகளை கொடுக்கும் எண்ணம் கொண்டவன்.பனந்தோப்பு வைத்தே பங்களா கட்டியவனும் இவனாகத்தான் இருக்க முடியும்.     கருப்பட்டி  வியாபாரம்,பனை ஓலைகளில் விசிறி,கைவினைப் பொருள்கள் செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் திறன்.பனந்தோப்பினை நம்பியே பல குடும்பங்கள் ஜீவிக்கிறது. அந்த ஊரில் லிங்கனுக்கு தனி மரியாதையும் உண்டு.     பஞ்சண்ணா பனந்தோப்பு சுமார் முன்னூறு பனைமரங்கள் கொண்ட தோட்டம் அது.நுங்கு குலை அறுத்தவர்களுக்கும், பனை ஓலை வெட்டியவர்களுக்கும் கூலிப்பணம் கொடுத்து விட்டு "யாப்பா நாளைக்கு நேரமா வந்துடுங்க டவுன்காரர் குட்டியானை வண்டிக்கு ஒரு லோடு நுங்கு கேட்டிருக்கார்" என லிங்கம் மரம் ஏற ஆட்களை அழைத்து வரும் சின்னையாவிடம் கூறினான்.சரி என்பது போல் தலையசைத்தார் சின்னையா.    மரம் ஏறியவர்கள் கிளம்புகையில் சின்னையா இடைமறித்து "என்னப்பா ராமு,பழனி,கந்தா,வேலு நாளைக்கு நேரமா எல்லாரும் வந்துடுங்க, சாப்பாட்டபத்தி கவலை வேணாம் லிங்கய்யா பாத்துக்கிறேன்னுட்டாரு.வெயில் ஏர்றதுக்குள்ள ஒருலோடுக்கு நுங்கு குலை அறுத்திடணும் என்ன?" சரி என ஆமோதித்து அனைவரும் கிளம்பினார்கள்.      லிங்கனின் பதினோரு வயது மகன் நகுலன் நடக்கிற எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.பள்ளி விடுமுறை நாட்களில் அப்பா லிங்கத்தோடே டொழுது முழுவதும் கழிப்பான் அன்று விடுமுறை நாள்.    "அப்பா என்னை எல்லோரும் பனங்காட்டார் பேரன்னு சொல்றாங்களே யாம்பா"என வெகுளித்தானமாய் கேட்டான் நகுலன்.        "அது வுன் தாத்தாவோட பனங்காடு அதனால தான் அப்படி சொல்றாங்க "மகனின் தலை கோதியவாறு லிங்கம் கூறினான்.     "அப்பா நம்ம காட்ல மட்டும் இத்தன பனைமரங்க முளைச்சது எப்படி?"      "இதெல்லாம் தானா முளைக்கள தாத்தா விதைத்தது"    "அப்படியாப்பா! "விழிகள் விரிய ஆச்சர்யமாய் பனந்தோப்பை பார்த்தான்.   'ஆமாம்'என்பது போல் தலையசைத்தான் லிங்கம். "அப்பா நான் உங்களுக்கு வீட்டுக்கு போய்  சாப்பாடு  எடுத்து வரேன்"என சொல்லி வேகமாக ஓடினான் நகுலன்.      "டேய் ஓடாதடா மெதுவா பார்த்துப் போ"லிங்கம் கத்தினான்.   காதில் வாங்காதவனாய் டுர்...டுர்..டுர்ர்ர் என சத்தமிட்டு ஓடிப்போனான்.பனந்தோப்பிற்கும் லிங்கம் வீட்டிற்கும் சற்று தொலைவு தான்.    பனை ஓலைகளினால் வேயப்பட்டிருந்த கொட்டகையில் அமர்ந்து தலை சாய்த்தான். இருபதாண்டுகள் பின்னோக்கி நினைவலைகளை ஓட விட்டான்.லிங்கம் மனம் கனக்க ஆரம்பித்தது.                கோழி கூவாத விடியற்காலை பஞ்சண்ணன் சாக்கு மூட்டையில் சேகரித்து வைத்திருந்த பனங்கொட்டைகளை தலையில் சுமந்து கொண்டு எதுவும் விளையாத வானம் பார்த்த வறண்ட பூமியான தனது தரிசு நிலகாட்டிற்கு சென்றார்.இருள் விலகாத நிலையிலே இருந்தது அப்பொழுது பறவைகள் இரை தேட றெக்கைகள் விரிக்காத நேரம் அது.ஏற்கனவே காடுமுழுவதும் ஒரு வார உழைப்பில் குழி தோண்டி பதப்படுத்தி வைத்திருந்த குழிகளில் ஒவ்வொரு பனங்கொட்டையாக போட்டு மண்ணை நிரப்பி மூடினார்.வியர்வை மேனியை நனைத்தது அசதியாக இருந்த போதும் மனத்தெம்போடு எடுத்த காரியத்தை முடித்தாக வேண்டும் என்ற வேட்கையில் காடு முழுவதும் பனங்கொட்டை விதைகளை ஊன்றிவிட்டார். அதிகாலைச் சூரியன் முகம் காட்டியது வியர்வையை துண்டில் துடைத்துக் கொண்டு சூரியனை நோக்கி இருகை கூப்பி கும்பிட்டார் பஞ்சண்ணன்.           தூக்கு வாளியில் பழைய சோற்றை கையில் எடுத்துக் கொண்டு தோளில் புத்தகப் பையினை மாட்டிக் கொண்டு வந்த லிங்கம் "அப்பா கஞ்சி கொண்டாந்திருக்கேன் குடிச்சிட்டு வேலை செய் ப்பா" என்றவாறே வேப்பமரத்து கிளையில் தூக்கு வாளியினை மாட்டி விட்டு "அப்பா பள்ளிக்கூடம் போய்யிட்டு வரேம்பா' என சொல்லியவன் விறு விறுவென ஓட்டமும் நடையுமாய் சென்றான் லிங்கம்.   தண்ணியில்லாத தரிசு நிலத்தில் விதைத்தாலும் விளைச்சல் உழுததிற்கும் உழைப்பிற்கும் ஏற்ற வெள்ளாமை வருவதில்லை. அக்கம் பக்கத்து கழனிகளில் தென்னைமரங்களும்,மாமரங்களும் செழுமையாக வளர்ந்துள்ளதைப் பார்த்து பஞ்சண்ணன் மனதில் பெரும் ஏக்கம் தான்,கிணறு வெட்டி வயலாக்க வேண்டும் என்ற பெரிய எண்ணம் இருந்தாலும் வறுமை நிலை வாட்டி வதக்கியதால் என்ன செய்ய முடியும் மனதோடு புதைத்துக் கொண்டு வாழத்தான் நேர்கிறது.     வேப்ப மரத்தில் மாட்டியிருந்த தூக்கு வாளியினை எடுத்து அமர்ந்து அதில்  இருந்த பழைய சோற்றையும்,பச்சைமிளகாயையும் கடித்துக்கொண்டு உப்பில்லாத கஞ்சியினை மளமளவென குடித்து விட்டு வரப்பு சுற்றிலும் முள் வேலி போட்டுக் கொண்டிருந்த பஞ்சண்ணனை நோக்கி ,அண்டை வாயல்கார ஆறுமுகம் கேலியாக       "பனங்கொட்டைகள காடு முழுசும் விதைச்சிட்ட போலிருக்கே"     "ம்...தண்ணியில்லா தரிசு நிலத்துல தென்னையா நடமுடியும் அதான் பனைய விதைச்சிருக்கேன்" சலிப்பாய் சொன்னார் பஞ்சண்ணன். "பத்து தென்னங்கன்று நட்டு ரண்டு நாளைக்கு ஒருக்க பத்து குடம் ஊத்தி காப்பாத்துனா நறுக்குணு சில வருசத்துல பலன் பார்க்கலாம்.பனைய வெச்சிருக்க உம் மவனும், பேரனும் தான் பலன் அடைய முடியும் " என தெற்றுப்பல் காட்டி நகைத்தார் ஆறுமுகம். " வச்சவங்கலே பலனடையணும்ன்னு இல்ல நம்ம சந்ததிங்க பலன் அடஞ்சா சந்தோசம் தானே" "ஆமாம் இதுக்கு எதுக்கு வேலி பலமா போட்டுக்கிட்டு இருக்க " "விதைச்சதும் வேலி போட்டு காக்கணும் விளைஞ்ச பிறகு வேலி போடறது தண்ணி வந்த பின்னாடி அணை கட்றமாதிரி" "யாருமே நம்ம வூருல பனவிதைய விதைச்சி தோப்பாக்கல நீ தான் பனந்தோப்பா ஆக்குவ போலிருக்கு " பேசி விட்டு போனார் ஆறுமுகம். 'விவசாயத்துக்கு தண்ணியில்லன்னா வேறு வழியில மாத்தி செஞ்சாலும் கேலி கூத்தா ஆகுது மகனுக்கு வழியற்ற வேலை செஞ்சிட்டோமா?' மனதுக்குள் புலம்பி குழம்பி தவித்தது பஞ்சண்ணனுக்கு. உழைத்து களைத்த அசதியால் வேப்ப மரத்து காற்றில் கண்ணயர்தால் பரவாயில்லை என தோன்றியதால் துண்டை தரையில் போட்டு உறங்கினார் பஞ்சண்ணன்.      சூரிய மேற்கில் மறையத் தொடங்கியது மாலை பள்ளிக்கூடம் விட்டு நேராக காட்டிற்கு போனான் லிங்கம்.உறங்கிக் கொண்டிருந்த அப்பாவின் அருகில் எறும்புகள் இரையை கவ்விக்கொண்டு சாரை சாரையாக ஊர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். 'எறும்பு போல் சுறுசுறுப்பாக இருக்கணும்'என்று ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்தது லிங்கத்திற்கு.    கீழே கிடந்த கவை குச்சி கொடுவாளையும் எடுத்தான்.சொச்சமாய் விட்டு வைத்திருந்த இடத்திற்கு  முள் வெட்டி வேலி போட்டுக் கொண்டிருந்தான்.பஞ்சண்ணன் எழுந்தார். மகன் லிங்கம் முள் வெட்டி வேலி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். மகன் பிழைச்சிக்குவான் விதைத்த பனவிதை விருட்சமாகி காப்பாற்றும் என நம்பிக்கை கொண்டார்.    "லிங்கா இருட்டுது வூட்டுக்கு போலாம் வாப்பா (மழை)மல வராப்ல இருக்கு"என்றார் பஞ்சண்ணன். "சரிப்பா"என்றவன் புத்தகப் பையினை தோளில்  மாட்டிக் கொண்டு தூக்கு வாளியினை கையில் எடுத்துக் கொண்டும். பஞ்சணணன் கொடுவாளையும் கடப்பாறையை தோளில் வைத்துக்கொண்டும் இருவரும்  வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். இருபுறமும் அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருந்த கும்மிருட்டிளும்  தினமும் வந்து போகிற வழி என்பதால் அனுபவ யூகத்தில் நடந்து கொண்டிருந்தார்கள்.பேசிக்கொண்டே... சற்று தூரம் தான் கடந்திருப்பார்கள். "ஆ..ஆஆ.."அலறினார் பஞ்சண்ணன். "அப்பா ..என்னாப்பா "பயந்து நடுங்கி கொண்டு லிங்கம் கேட்டான். பஞ்சண்ணனுக்கு தெரிந்து விட்டது பாம்பு கடித்து விட்டது என்று  சொன்னால் மகன் பயந்து விடுவான் என மறைத்து வேகமாக வீட்டிற்கு போய்விட வேண்டும் எண்ணி  "ஒண்ணுமில்லப்பா முள்ளு கால்ல கீறிடுச்சி, வூட்ல போய் பார்த்துக்கலாம்  வேகமா வா  "  அவசரப்படுத்தி  நடையை  ஓட்ட நடையாக மாற்றினார்.லிங்கம் ஆடு பின்னால் ஆட்டுக்குட்டி போல் ஓடி வந்து கொண்டிருந்தான்.      வீடு வந்ததும் திண்ணையில் தொப்பென பஞ்சண்ணன் விழுந்து மனைவி பழனியம்மாவை அழைத்தார். "ஐயோ என்னாய்யா " என அலறிக்கொண்டு உள்ளிருந்து ஓடிவந்தாள்...வெளியே வருவதற்குள் வாயில் நுரைத்தள்ளிக் கொண்டிருந்தது பஞ்சண்ணனுக்கு பார்த்ததும் கதறிக்கொண்டு  "ஐயோ சாமி என்னாச்சி ..யாஞ்சாமிக்கு ..அப்பாவுக்கு என்னாடா" லிங்கனை உலுக்கி விட்டு மண்ணில் உருண்டு புரண்டு அழுதாள்  அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூடிவிட்டார்கள்.       லிங்கம் வரும் வழியில் நடந்ததை தேம்பித் தேம்பி கண்ணீர் வழிய அழுது கொண்டோ சொன்னான்.முந்தானை துணியில் கணவன் வாயில் வரும் நுரையினை துடைத்துக் கொண்டிருந்தாள். "ஏப்பா  அந்த விளக்கு எடுத்துட்டு வா என்ன ஏதுன்னு பா(ர்)க்கலாம் செத்தையேது (பாம்பு)தீண்டிடுச்சாண்ணு பாக்கலாம் " கூட்டத்தில் ஒருவர் அக்கறைப்பட்டார்.விளக்கொளியில் பஞ்சண்ணன் காலில் பாம்பு கடித்த வாப்பாடு (அடையாளம்)தெரிந்தது. "சீக்கிரம் வைத்தியர்கிட்ட தூக்கிட்டு போகணும் வண்டி ஏற்பாடு பண்ணுங்கப்பா"    உறவுக்காரர் அவசரப்படுத்தினார். அதற்குள் பஞ்சண்ணனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது கண்களின் கருவிழி மேல் நோக்கியது உடம்பு சில்லேன்று ஆனது.கைகள் பாதங்களை சூடாக்க தேய்த்தார்கள். "காத்த கொஞ்சம் விடுங்க விலகுங்க "  கூட்டத்தை விலக்கினார் அக்கறையாக ஒருவர்.பனை ஓலை விசிறியால் காற்று வீசினார்கள்.    வியர்வை குப்பென்று வியத்து உடலை நனைத்தது. கண்கள் சொருகியது நுரைத்தள்ளுவது நின்றது. வாய் பிளந்து இழுத்தது.உடல் குலுங்கியது.கைகளின் கால்களின் நரம்புகள் விறைப்பானது  வாய் மூடி மூச்சு நின்றது. "சாமி என்ன தனியா விட்டுட்டு போறீயே  தவிக்க விட்டு போறீயே சாமி நான் என்ன செய்வேன்" தலைவிரி கோலமாகி தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கையேந்தி கதறி கதறி அழுதாள் பழனியம்மாள். "அப்பா..அப்பா பாருப்பா ..பாருப்பா" என லிங்கம் கத்தினான்.அந்த இடமே அழுகையின் குரலால் நிரம்பி வழிந்தது. ஊர்காரர்களுக்கும், உறவுக்காரர்களுக்கும் துயரமான இழவு சேதி பரவியது. "பனை வெதைய வெதைச்சிட்டு, முளைப்பு பாக்காமலே மண்ணுக்கு  வெதையா போயிட்டான் பஞ்சண்ணன்" விவசாயி ராஜி ஆற்றாமையை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிந்தார். உறவுகளும்-ஊரார்களும் ஒப்பாரி வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடானது. அப்பாவின் சிதைக்கு தீ வைத்து "அப்பா ..அப்பா" வென சப்தத்தோடு மண்ணில் புரண்டு அழுதான். "அப்பா ..அப்பா .."என உலுக்கி எழுப்பினான் நகுலன்.நினைவுக்கு வந்த லிங்கம் கண்களில் நிரம்பியிருந்தது. மகன் நகுலை ஆதரவாக இறுக அணைத்துக் கொண்டான்.      பக்கத்து வயல் வெளிகளில் பார்வையை ஓட விட்டான் லிங்கம்.        அன்று செழிப்பாக இருந்த தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும் வான்  மழையில்லாமல் பொய்த்து போனதால் தென்னைமரங்கள் காய்ந்து குருத்துகள் சரிந்து மொட்டையாக நின்றிருந்தது.மாந்தோப்பிலிருந்த பட்டுப்போன மரங்கள் யாவும் விறகிற்கும் ,செங்கல் சூளைக்கு எரிபொருளாக அறுத்துக் கொண்டு போயிருந்தார்கள்.பொட்டல் காடாய் இருந்த நிலம் அப்பாவின் விவசாய மாற்றத்தினால் தரிசாய் கிடந்த நிலத்தில் வறட்சி காலத்திலும் பசுமை கிரீடம் அணிந்து இன்று கம்பீரமாய் 'கற்பகதரு'என போற்றப்படும் பனைமரங்கள் தோப்பாக நின்றிருப்பதை பெருமிதமாய் பார்த்தான். பனந்தோப்பில் இருக்கும் தருணங்களில் அப்பாவின் நிழலில் இருப்பதாகவே உணர்வான் லிங்கம்.     மகன் நகுலன் கொண்டு வந்த சாப்பாட்டை திறந்து, சாதத்தை மகனுக்கும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டான்.பனைமரத்து ஓலையின் சப்தம் (ஒலி) காதுக்கு இனிமையாக இருந்தது லிங்கத்திற்கு.                      தாழ்மையோடு,                           பஞ்ச்தர்மா                        வெள்ளாளப்பட்டி                    கைப்பேசி:9791302573

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.