logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சகா

சிறுகதை வரிசை எண் # 125


அம்மையார் ஹைநூன்பீவி நினைவு சிறுகதைப் பரிசுப் போட்டிக்காக சிறுபான்மை சகா உறுதிமொழி இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள இச்சிறுகதை எனது சொந்தக் கற்பனையே. இதற்கு முன் வேறு எந்த வடிவிலும் இது வெளிவந்ததில்லை. வேறொரு படைப்பின் தழுவலோ, மொழிபெயர்ப்போ கிடையாது என உறுதியளிக்கிறேன். நன்றி! இப்படிக்கு, சகா முகவரி K.NAGARAJ, (சகா) 39 / 55, காமாட்சி நகர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், பொள்ளாச்சி 642001 கோவை மாவட்டம். செல் 98421 99668 விடிந்து வெகு நேரம் கழித்து தான் விடுதி அறையில் அப்துல்லா இல்லை என்பது சதீசுக்கும், ராமுவுக்கும் உறைத்தது. “எங்கேடா போனான் அவன்.. நேரத்துலேயே கடைக்குக் கிளம்பிட்டானோ.?” என்றான் ராமு அன்றைய நாளிதழை மடக்கினவாறே. பால்கனியில் நின்றபடி தெருவை பராக்கு பார்த்துக் கொண்டிருந்த சதீஸ் யோசனையோடு அறைக்குள் நுழைந்தான். பொங்கி வந்த கொட்டாவியை அடக்கினவாறே “ராத்திரி வந்தானா இல்லை, லேட்டாயிடுச்சுன்னு பிரியாணிக் கடையிலேயே படுத்துட்டானா..” “அப்படியே ராத்திரி அங்கே தங்கியிருந்தாலும்..” எதையோ ஆரம்பித்து உடனே நிறுத்திவிட்டு “மணி எட்டாச்சே. இந்நேரம் வந்திருக்கனுமே..” என்றபடி சார்ஜர் கயிறில் தூக்கு மாட்டியிருந்த போனை எடுத்து அப்துல்லாவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான். காதில் வைத்து பதில் கேட்டவன் புரியாமல் பார்த்தான். “என்னடா ஸ்விச்டு ஆஃப்ன்னு வருது, ஏன்.?” இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ விபரீதம் என்பது மாதிரி மனதில் உறுத்த.. “என்ன இது, ஒண்ணும் புரியலையே. சைக்கிள் எடு, ஒரு அழுத்து கடைக்கே நேர்ல போய் பார்த்துட்டு வந்திடலாம்..” “இதோ அஞ்சே நிமிசம்..” கொடியில் இருந்த துண்டை உருவிக் கொண்டு பாத்ரூம் நுழைந்தான். சில நிமிடங்களில் திரும்பி வந்தவன் ஃபேண்டுக்குள் நுழைந்து கொண்டு ”வா, போகலாம்..” என்று அறையை விட்டு வெளியேற .. சரியாக அந்த நேரத்தில் தான் அவர் அறையை நோக்கி வந்தார். ஒரு மாதிரி சாய்வு நடை. சினிமா நடிகர் நாசர் சாயலில் இருந்தார். ”தம்பி, இங்கே அப்துல்லான்ற பையனோட ரூம் எதுன்னு தெரியுமா..?” சதீசும், ராமுவும் முகம் பார்த்துக் கொண்டார்கள். அவரது உருவ அமைப்பு எதையோ உணர்த்தியது. ”அப்துல்லா எங்க ரூம்ல தான் இருக்கான். நீங்க..?” “சொல்றேன் தம்பி, உள்ளே போய்ப் பேசலாமா..” “பேசலாம்ங்க. நீங்க யாருன்னு கேட்டது..” “அட வாய்யா சொல்றேன்..” சதீசின் தோள் மேல் கொஞ்சம் அழுத்தமாகவே கை போட்டு அணைத்தபடி அறைக்குள் தள்ள முயற்சித்தார். “தள்ளாதீங்க.. வர்றேன்ல்ல” என்றான் அவன் முகம் சுளித்தபடி. ராமு ஒன்றும் புரியாமல் மிரட்சியுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ விபரீதம் என்பது போல மனதுக்குள் உறைக்க ஆரம்பித்திருந்தது. பக்கத்து அறையில் இருக்கும் யாரையாவது உதவிக்கு அழைப்போமா என்றொரு சிந்தனை மனசுக்குள் ஓடியது. “சார் உள்ளே வர மாட்டீங்களோ..” என்றார் இவனைப் பார்த்து. “முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க..” என்றான் லேசாக கோபம் கலந்த குரலில். அவர் அவனை வெறித்தார். ”காளிமுத்து, போலீஸ்.” என்றார். “சரி, விசயத்தை சொல்லுங்க. அப்துல்லாவைக் காணோம்ன்னு அவனைத் தேடி அவன் வேலை செய்கிற கடைக்கு கிளம்பிட்டிருக்கோம். நீங்க அவனைக் கேட்டு வந்திருக்கீங்க. என்ன விசயம் சார்..?” “குறுக்கு விசாரணை நான் தான் பண்ணுவேன். பதில் சொல்ல வேண்டியது மட்டும் தான் உங்க வேலை..” என்றார் சினத்துடன். அறையை நோட்டமிட்டார். ”மூணு பேரு தான் இருக்கீங்களா. எல்லோருக்கும் ஒரே ரூம் தானா.?” “என்ன விசயம்ன்னு சொல்லுங்க சார். முதல்ல உங்க அடையாள அட்டையைக் காண்பிங்க..” ராமு தைரியமாகக் கேட்டான். அவர் அவனை முறைத்தபடி ”அப்துல்லா இப்போ எங்க கஸ்டடியில தான் இருக்கான். சி 1 ஸ்டேசன்.” ”அவனை எதுக்கு அங்கே வெச்சிருக்கீங்க. அவன் என்ன தப்பு செஞ்சான்..” சதீஸ் பதட்டமாகக் கேட்டான். “பாரு, சும்மா தொணதொணங்காதே. எல்லாத்தையும் விளக்கமா அப்புறம் சொல்றேன். முதல்ல வந்த வேலையை செய்ய விடு.” அறையை மீண்டும் நோட்டம் விட்டார். ”அவனோட திங்க்ஸ்ல்லாம் எங்கேயிருக்கு. அது அவனோட பெட்டியா..?” அதை நோக்கி நகர்ந்தார். சதீஸ் ராமுவிடம் கண் ஜாடையாக ’விட்டுடு, அவர் பண்றதை பண்ணட்டும்’ என்றான். பச்சை வெள்ளையில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அவனது பெட்டியை டொம் மென்று கீழே தள்ளி பூட்டை உடைக்க முயற்சிக்க.. ”சார் இருங்க, சாவி இருக்கு..” என்றபடி சாமி படத்தின் ஆணியில் மாட்டி யிருந்ததை எடுத்து தந்தான். “முதல்லயே தந்திருக்கலாம்ல்ல.” “நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு சொன்னாத் தானே தெரியும்! ஒத்துழைப்பு தர மாட்டோம்ன்னா சொன்னோம். விவரம் கேட்டாக் கூட கோவிச்சுக்கறீங்க. அப்புறம் எப்படி உதவ முடியும்.?” “உங்க ஃப்ரெண்டு அதான் அந்த பாய்ப் பையன் அப்துல்லாவை ஒரு சந்தேகக் கேஸ்ல பிடிச்சு வெச்சிருக்கோம். ஒரு விசாரணைக்காக. அதனால அவன் தங்கியிருக்கிற இடத்தை சோதனை போட வந்திருக்கிறேன். இதுதான் விசயம் போதுமா.?” என்றார். சதீசும், ராமுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். பெட்டிக்குள்ளிருந்த அவனது ஆடைகளை எடுத்து வெளியில் வீசினார். ஒரு போட்டோ ஃப்ரேம் கிடைக்க உற்றுப் பார்த்தார். “சார் அது அவனோட அப்பா, அம்மா, தங்கச்சிங்க.” தனது மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டார். ஒரு கெட்டியான புத்தகம் கிடைத்தது. ”பார்த்தீங்களா..” என்றார். “சார் அது குரான்..” நம்பாமல் அதையும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார். ’என்னடா, இத்தனை பொறுப்புள்ள போலீசா இருக்காரு..’ உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான் ராமு அந்த சூழலிலும். “சார் அவன் சின்னப் பையன். இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகலை. அவனைப் போய் ஒரு தீவிரவாதி மாதிரி..” அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. இன்லாண்டு லெட்டர் இருக்க அதை பதுக்கிக் கொண்டார். “வேற என்ன இருக்கு அவனோடது..” இரைக்கு அலையும் சிங்கம் மாதிரி சுற்றிலும் பார்த்தார். பொது செல்ஃபில் எதையோ தேடினார். கலைத்தார். “என்ன தான் சார் வேணும் உங்களுக்கு, துப்பாக்கியா, வெடிகுண்டா. அதுக்கெல்லாம் அவன் ஒர்த் இல்லை சார்.” முறைத்தார். ”நக்கல் பண்றியா.? என்னை என்ன சிரிப்பு போலீசுன்னு நினைச்சிட்டியோ?” “சார் நீங்களே கொஞ்சம் லாஜிக்கா யோசனை பண்ணிப் பாருங்க. நானும், இவனும் இந்து. நான் சைவப் பிள்ளை. இவன் செட்டியார். எங்க மத்தியில எப்படி சார் ஒரு இஸ்லாமிய தீவிரவாதி இருக்க முடியும்.?” அவர் கர்ஜித்தார். ”ஒருவேளை அவன் ஸ்லீப்பர் செல்லா இருந்தா.?” ”பாயிண்ட்டுடா. நீ யோசிச்சியா இதை.?” “ப்ச்..” உதடு பிதுக்கினான். “ஆமா நீங்கள்லாம் எந்த ஊரு?” என்றார். “ராமநாதபுரம் சார். அப்துல்லா இருக்கானே அவன் என் நண்பன் நசீரோட தம்பி. இங்கே கபிலர் வீதியில ஏ ஒன் பிரியாணி ஸ்டால்ன்னு ஒண்ணு இருக்கு. அதுல வேலை பார்க்கிறான். நான் கண்ணன் பஜார்ல சின்னதா ஒரு ஃபேன்சி கடை வெச்சிருக்கேன். இவன் ப்ளம்பரா இருக்கான்.” “ம்.. ம்..” “சார் அவன் எந்தத் தப்பும் பண்ணியிருக்க மாட்டான் சார். ஏதோ மிஸ்அண்டர் ஸ்டாண்டிங்ன்னு நினைக்கிறேன்..” “எதுன்னாலும் இன்ஸ்பெக்டர்கிட்ட நேரடியாப் பேசிக்கங்க. அவரே அவனை கையும், களவுமாப் பிடிச்சிருக்காரு..” “கையும், களவுமாவா.. அப்படின்னா..?” பதில் சொல்லாமல் சேகரித்தவைகளுடன் கிளம்பினார். “சரியா ஒரு மணி நேரம் கழிச்சு ஸ்டேசன் வந்தா உங்க தோழனைப் பார்க்கலாம். நான் ஆதாரங்களை எல்லாம் அதிகாரிகிட்ட ஒப்படைச்சுடுவேன்..” அவர் இறங்கிப் போனார் அவர் தலை மறைந்ததும் ”இதுதாண்டா போலீஸ்..” என்றான் ராமு விசிலடி த்தபடி. “விளையாடாதேடா. இவர் பேசறதைப் பார்த்தா அவனை கூடிய சீக்கிரம் என்கவுண்டர் பண்ணிடுவாங்க போல இருக்கு.. வா போய் காப்பாத்தலாம் அவனை!” “முதல்ல அவன் வீட்டுக்கு தகவல் சொல்லிடலாம்.. அப்புறம் அவன் கடை முதலாளிக்கு..! சொல்லலைன்னா நம்ம தலையைப் போட்டு உருட்டிடுவாங்க.” “நீ வீட்டுக்குத் தகவல் சொல்லு. நான் முதலாளி கூடப் பேசறேன்..” “முதலாளி கூடப் பேசாதே.” என்றான் யோசனையுடன். ”அவரு உதவி பண்ணமாட்டாரு. ஏற்கனவே அவரு மேல ஒரு சந்தேகக் கேஸ் இருக்கு.. அப்துல்லா போலீசுல மாட்டியிருக்கிற சேதி தெரிஞ்சு போய் இந்நேரம் அவரு பாகிஸ்தானுக்கே ஓடிப் போயிருக்கலாம்..” “டேய் ஏண்டா..” தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான். “இவன் என்னடா பண்ணினான்.. தேவையில்லாம ஏன் பிரச்சனைகள்ல போய் மாட்டிக்கிறான்..” “நாம இப்போ என்ன பண்றது ஸ்டேசன் போக வேணாமா.? அவனை அங்கே என்ன பாடு படுத்தறாங்களோ. செல்வராஜ் அண்ணன் கிட்ட யோசனை கேட்போமா. ஏதாவது பாயிண்ட் கொடுப்பாரு. இல்லைன்னா கவுன்சிலர் முத்தையன்கிட்ட உதவி கேட்போமா. தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருக்காரு.. அவரைப் பார்த்து.. முன்ஜாமீன்..” “ஏண்டா உளர்றே. இப்படி சகட்டுமேனிக்கு எல்லோரையும் இழுத்துப் போடாதே. முதல்ல முத்தையன் அண்ணனைப் பிடிப்போம்.. அவரையும் கூட்டிக்கிட்டு ஸ்டேசன் போவோம். அங்கே போய் முடிவெடுத்துக்கலாம்..” கவுன்சிலருடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்தார்கள். “ஸ்கூல் பையன் அட்டெண்டன்ஸ் சொல்ற மாதிரி ஆகிப் போச்சு என் நிலைமை. தினந்தோறும் வந்திட்டிருக்கேன்.” அலுப்புடன் பெருமூச்சுவிட்டார் முத்தையன். ”பிரபலமா இருந்தாலே இப்படித் தான்ண்ணா. சமூக சேவைன்னு சும்மாவா..” என்று கண்ணடித்தான் ராமு. பழங்கள் மொத்த வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அவர். ”தொழிலையும் கவனிக்க முடியாம, இதனால பத்து பைசா பிரயோசனமும் இல்லாம.. வீணா அடுத்தவங்க டென்சன்களையெல்லாம் என் தலை மேல ஏத்திக்கிட்டு..” ”விடுண்ணா விடுண்ணா.. அப்புறம் எப்போ எம்மெல்லே ஆகறது..” ரிசப்சனில் இருந்த பெண் காவலர் பிலோமினா நிமிர்ந்து அவரைப் பார்த்து சிரித்து ”முத்தையன் சார் தண்ணீ கேன் ஒரு அஞ்சு வேணும்” என்றாள். ”அனுப்பி வைக்கிறேன்ம்மா. தலைவர் இருக்கிறாரா..?” எங்களைக் குற்றவாளிகள் போலப் பார்த்தாள். கண்களில் ’ஏன்.?’ ”அப்துல்லான்னு ஒரு குழந்தைப் பையனைப் போய் சந்தேகக் கேஸ்ல பிடிச்சுட்டு வந்துட்டாராம். என்ன விசயம் அது..?” ”அய்யோ சார். அதெல்லாம் என் தகுதிக்கு மீறின ரகசியத் தகவல். நீங்க அய்யாகிட்டயே கேட்டுக்குங்க.” ”பில்டப் ஏத்தியே டென்சன் பண்ணுங்க..” சலித்துக் கொண்டார். “அவரைப் பார்க்கலாமா, கூட யாரும் இருக்காங்களா.?” பிலோமினா மேஜையிலிருந்து வெளியே வந்து ஆசீர்வாதம் பண்ணுவது போல காத்திருப்பு சைகையைக் காட்டிவிட்டு கடந்து போனாள். ”அரசு அலுவலகங்களைப் பார்த்தாலே வயித்தை ஏதோ பிசையுதுடா. கக்கூஸ் வர்ற மாதிரியே இருக்கு..” ராமு சதீசின் காதைக் கடித்தான். ”என் கவலை அதில்ல. கையில பணம் வெச்சிருக்கியா..?” ”பணமா. அப்படின்னா..?” என்றான். “உனக்குத் தெரியாமலா.? தேதி என்ன..!” “சரிவிடு, சமாளிப்போம்..” பிலோமினா வெளியில் வந்து ”கூப்பிடறாரு, சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடுங்க. ரவுண்ட்ஸ் போகனும்.. செல்லை சைலன்ட்ல வெச்சுக்குங்க.” ”ம்.. ம்.. வாங்கப்பா..” அவர் முன்னேறி நடக்க பின்னாலேயே இருவரும். அறைக்குள் நுழைய, கருப்பாய் முகத்தில் கோபம் சுமந்தபடி இருந்த அவர் கண்ணில்பட்டார். ஏன் இந்த போலீஸ் உயரதிகாரிகள் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கின்றனர்.. ”என்ன கவுன்சிலரே தினம் வந்திட்டு இருக்கீங்க. உங்களுக்கும் சேர்த்து இங்கே ஒரு டேபிள் போடச் சொல்லிடவா..” என்றார் சிரிக்காமல். இரண்டு ப்ளாஸ்டிக் சேர்கள் மட்டும் இருக்க இன்னும் ஒரு சேர் கொண்டு வரப்பட்டு மூவரும் அமர்ந்தார்கள். ”இப்ப என்ன..?” என்று அவரது முகத்தைப் பார்த்தார். ”இவங்கள்லாம்..” ”ஏதோ ஒரு பாய்ப் பையனை சந்தேகப்பட்டுக் கூட்டிட்டு வந்திட்டீங்களாம். அதுதான் என்ன விவரம்ன்னு..” இழுத்தார் முத்தையன். ”ஏன் அதுல என்ன உங்களுக்கு சம்பந்தம்..?” விரைப்பானார். முத்தையன் உடனிருந்த இருவரையும் காட்டி ”இவங்க ரெண்டு பேரும் அவன் அறையில கூட்டாளிக. காலையில காளி சார் தான் போய் விவரம் சொல்லியிருக்காரு. ஒண்ணும் புரியாம என்கிட்டே உதவிக்கு வந்தாங்க. நீங்க கொஞ்சம் மேல் விவரம் சொல்லுங்களேன்..” ”ஓ. நீங்க தான் அவனோட ரூம் மேட்ஸ்சா. அவன் ஆள் எப்படி..?” என்றார் இருவரையும் உற்றுப் பார்த்து. ”சார் அவன் ஆள் இருக்கிறதே தெரியாது சார். சத்தமா பேசக்கூட மாட்டான். ரொம்பவும் வறுமைக் கோட்டுக்குள்ள இருக்கிற குடும்பம். ஒரு வருசம் தான் ஆகுது சார் இங்கே வந்து. கடுமையான உழைப்பாளி. வாங்கற சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பி வெச்சுடுவான்..” ”சார் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கலாமா. யாராவது அவனைத் தேவை யில்லாம வம்புல மாட்டி விட்டுட்டாங்களா..?” ”யாரும் ஒண்ணும் புகார் தரலை. நானே தான் ஸ்பாட்ல கண்ணெதிருல பார்த்து பிடிச்சிருக்கேன்.” ”சார்..” ”நேத்து ராத்திரி பதினொன்னு இருக்கும். ரவுண்ட்ஸ்ல இருந்தோம். கரிகாளியம்மன் கோவில் கிட்ட ஏதோ பிரச்சனைன்னு தகவல் வர அங்கே போனா இந்த அப்துலை ரெண்டு, மூணு பேரு பிடிச்சு வெச்சிருக்கங்க.” ”ஏன் சார், என்ன காரணம்..” ”உங்களுக்குத் தெரியும் தானே. அங்கே தானே அந்த முன்ணனிக்காரர் வீடு இருக்கு. வடக்குப் பார்த்த காவி பங்களா.” ”ஆமா. நம்ம தோஸ்து தான் சார்..” பெயர் சொன்னார். ”அவருக்கு பத்து நாள் முன்னாடி தான் ஒரு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. பொதுக் கூட்டங்கள்ல குறிப்பிட்ட மதத்துக் காரங்களை ரொம்பவும் தாக்கிப் பேசினதால..” ”சரி..” ”மிரட்டல் கடிதம் வர பயந்து போனவரு இங்கே வந்து பாதுகாப்பு கேட்டு புலம்.. அவரு நச்சரிப்பு தாங்காம ஒரு போலீசுகாரரை வேற அவரோட பாதுகாப்புக்கு வீட்டுல நிக்க வெச்சிருந்தோம். இந்த அப்துல்லா அந்த வழியா அந்நேரத்துக்கு வந்திருக்கான். சும்மா வரலை, கை நிறைய கல்லுக வேற பொறுக்கி வெச்சிருக்கான்.” ”கல்லா..?” என்றார் புரியாமல். ”ஆமா. அவரோட வீட்டுக்கிட்ட வந்து கீழே குனிஞ்சு கல்லு எடுக்கிறதைப் பார்த்திட்ட அவங்க ஆட்கள்ல ஒருத்தன் விசிலடிச்சு ஆட்களை வரவழைச்சு ட்டான். பாதுகாப்புக்கு இருந்த போலீசும் இதைப் பார்த்துட்டாரு. வீட்டு மேல கல்லை வீசப் போறான்னு தெரிஞ்சு போய் பிடிச்சு வெச்சுக்கிட்டாங்க..” “சார்.. அவன் அப்படி பன்ண மாட்டான்..” “சொல்லப் போனா, நாங்க அவனைக் காப்பாத்தியிருக்கோம். கொஞ்சம் தாமதமாயிருந்தாக் கூட இவனை கசக்கி பிழிஞ்சி இருப்பானுங்க..” சார் இதுல ஏதோ ஒரு குழப்பம் நடந்திருக்குது. நீங்க சொல்கிற நபர் யாருன்னு கூட அவனுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை!” என்றான் சதீஸ் உறுதியாக. ”சார் அவன்கிட்ட விசாரிச்சீங்களா. என்ன சொன்னான் அவன்..?” “அவன் என்னத்தை சொல்றான்..” அலுத்துக் கொண்டார். ”வாயைத் திறந்தாத் தானே? சரியான கல்லுளிமங்கனா இருக்கான். கந்தசாமி அந்த பாய்ப் பையனை வரச் சொல்லுங்க.” சில நிமிடங்களில் அப்துல்லா வர அவனைப் பார்த்து சதீசும், ராமுவும் அதிர்ச்சியில் எழுந்தே விட்டனர். உதடு வீங்கி, கன்னம் பெருத்து, சட்டை கிழிந்து.. ”என்ன சார் இப்படி அடிச்சிருக்கீங்க..” சதீஸ் அழுதே விட்டான். அவனை நெருங்கி அணைத்துக் கொண்டான். அப்துல்லா அவர்களைப் பார்த்து கண்கலங்கினான். ”நான் ஊருக்கே திரும்பிப் போயிடறேன். என்னை விட்டுடுங்க.” கைகூப்பினான். ”சதீசு நீ கொஞ்சம் நகரு. தம்பி என்னப்பா நடந்தது.. நீ ஏன் அந்த வழியாப் போனே..?” முனகின குரலில் சொன்னான். ”பிரியாணிக் கடையை அடைச்சுட்டு வக்கீல் ராமசாமி நகர் வீதி வழியாத் தான் எப்பவும் வருவேன். அங்கே சாக்கடை வேலை நடந்திட்டு இருந்ததால சுத்தி கோவில் வீதிக்குப் போனேன்..” ”சரி. கல்லெல்லாம் எடுத்தியாமே.. அது எதுக்குப்பா.?” ”அந்த வீதியில தெரு நாய்ங்க தொல்லை அதிகம்! யாரு போனாலும் பாய்ஞ்சு கடிக்க வரும். கல்லு இருந்தா ஒரு பாதுகாப்பு. அதனால தான். கையில வெச்சுக்கிட்டேன்..” கந்தசாமி கான்ஸ்டபிள் ”சார் பையன் சொல்றது உண்மை தான் சார். நம்ம கிட்டே போன வாரம் அந்த வீதிக்காரங்க அது விசயமா ஒரு புகார் கூடத் தந்திருக்காங்க.. நகராட்சியிலயும் பேசியிருக்காங்க.” என்றார் யோசனையோடு. ”ஏன்ப்பா தம்பி. போலீசுக்காரங்க பிடிச்சு வெச்சிருக்காங்களே. அது ஏன், எதுக்குன்னு தெரியுமா.” ”தெரியாது. கேட்டா அடிக்கறாங்க. ராத்திரியும் யார் யாரோ வந்து அடிச்சாங்க. சட்டையெல்லாம் கிழிஞ்சு, தலை சுத்தி மயக்கம் வந்து, வாந்தி எடுத்து..” ”என்ன சார் இதெல்லாம்..” முத்தையன் அவரை பார்த்தான். ”பேசினது வெச்சே தெரியலையா. இவன் குற்றவாளியா இல்லையான்னு. இவனைப் போய்..” ”அவரும் தான் அடிச்சாரு..” என்றான் அப்துல்லா கை நீட்டி. ”டேய், நான் உன்னை அடிக்கலைன்னா அவனுக உன்னை அடிச்சே கொன்னுரு ப்பானுக. காப்பாத்தியிருக்கேன் உன்னை. புரிஞ்சுதா..?” கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. முத்தையன் பேச ஆரம்பித்தார். ”ஏன் சார் முன்னெல்லாம் ஒருத்தனை குற்றவாளியாக்க ஆதாரம் சரிபார்ப்பீங்க. இப்பல்லாம் வெறும் பேரு மட்டும் இருந்தாலே போதும். அப்படித் தானே சார்.? அவன் குற்றவாளின்னு நீங்களே முடிவெடுத்துடுவீங்க.! அவங்க ஆளுகன்னாலே தீவிரவாதிக தானா.?” முத்தையன் அழுத்தமான குரலில் கேட்க அவர் தலைகுனிந்து அமர்ந்தி ருந்தார். ”இப்படிப் போட்டு இவனைக் கொலை அடி அடிச்சிருக்கீங்க. அவனுக்கு ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா யாரு பொறுப்பு.? ஏற்கனவே டிபார்ட்மெண்ட் மேல ஜனங்க மத்தியில நல்ல பேரு. ………..குளம் பிரச்சனையில இவ்வளவு அடிபட்டும் கூட நீங்க திருந்தலைன்னா எப்படி..? அவங்க ஆளுகள்லாம் சேதி தெரிஞ்சு கொந்தளிச்சுப் போயிருக்காங்க. எப்ப வேணும்னாலும் இங்கே திரண்டு வரலாம். என்ன பண்ணப் போறீங்க..?” கடைசி வார்த்தைகள் அவரை அசைத்துப் பார்த்தது. ”சார் இத்தோட இதை விட்டுடுங்க. கையோட அவனைக் கூட்டிட்டுப் போயிடுங்க.. பிரச்சனை வேணாம்.” கெஞ்சலான குரலில் சொன்னார். நடுங்கின விரல்களை டேபிளுக்கடியில் மறைத்துக் கொண்டார். ”அவமானம் தாங்காம இந்தப் பையன் ஏதாவது தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போனா..?” ”அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. தப்புத் தப்பா எதையாவது பேசாதீங்க. கிளம்புங்க சார்.. டேய் தம்பி.. உனக்கு நடந்ததையெல்லாம் யாருகிட்டேயும் சொல்லிட்டிருக்காதே புரியுதா. கெட்ட கனவா நினைச்சு மறந்திடனும்.” என்றவர் தன் பர்ஸ் பிரித்து ஒரு இரண்டாயிரம் நோட்டை எடுத்து அவன் கைகளில் திணித்தார். ”இந்தா இதை வெச்சுக்கோ, டாக்டரைப் போய்ப் பாரு முதல்ல..” அவன் வாங்கவில்லை. ’இனி இவரு கிட்ட பேசி பிரயோசனம் இல்லை’ என்பது போல எழுந்தார் கள். ”வாடா அப்துல்லா கிளம்பலாம்..” பத்து நிமிடம் கரைந்திருக்கும்.. ஸ்டேசன் பின்புறம் ரிலாக்சாக வந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டரை நோக்கி ஓடி வந்தார் கான்ஸ்டபிள் கந்தசாமி. ”அய்யா.. அய்யா…” ”என்னய்யா.. உயிரு போகிற மாதிரி..” என்றார் அவர் எரிச்சலோடு. ”இங்கே வெளியே வந்து பாருங்க சார், அவனுங்க என்ன அநியாயம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு..” ”என்னய்யா.. என்னாச்சு..” பதறினபடி வெளியே வந்தார். புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தார். “ம்..?” “சார், உங்க சேருக்கு மேலே பாருங்க சார். அங்கே நம்ம மாட்டி வெச்சிருந்த மகாத்மா காந்தி படத்தைக் காணோம்..!” .

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.