logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Samsul Hutha Banu. A

சிறுகதை வரிசை எண் # 124


மாடத்தீ காட்டுக் கருவை மர நிழலில் தனது கால்களை நீட்டி மரத்தின் தூரில் சாய்ந்தவாறு… தனது கண்களில் வடியும் கண்ணீரைத் துடைக்க மறந்தவளாய்…. மாடத்தி அமர்ந்திருந்தாள். அதன் எதிர்ப்புறம் கொமரக்கா சாமியின் கழுத்தில் அரளிப்பூச் சரத்துடன், அரளிப்பூவைக் கட்டிய நாறுடன், வாடி அரளிப்பூ காற்றில் சர…சரவென சத்தத்துடன் ஆடிக் கொண்டிருந்தது. கொமரக்கா சாமியிடம் நியாயம் மனதுக்குள் கேட்டு….கண்ணீரைத் துடைத்தாள் மாடத்தி. எத்தனை…. எத்தனை குஷியான வாழ்வில்… கன்றுக் குட்டியை போல இந்த சக்கிலியக் காலனியைச் சுற்றிச் சுற்றி வளைய வந்தேன். “அத்தர் வாசத்தில் மயங்கி அகால பள்ளத்தில் விழுவேன் எனத் தெரியலையே….. கொமரக்கா உனக்கு மஞ்சப்பூசி, குங்குமம் வச்சு, தாவாணி சுத்தி, வளவி போட்டு, கதம்பம், அரளிச் சரம், தலையில வச்சு…. உன்ன உழுந்து… உழுந்து கும்புட்டேனே…. என்னைத் தடுக்கி விழுந்தவளுனு காலனியே சொல்ற நெலமயக் குடுத்துட்டியே…. ஏந்தாயி….” என மறுபடி வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், அடி வயிற்றிலிருந்து குமாட்டிவரும் வாந்தியை எடுக்க காவாக்கரை நோக்கி ஓடினாள். ஏலேய்.. செம்பா… கருப்பா எனக் கத்தியபடி வந்த காலனித் தலைவர் ரங்கன், அக்பரு அய்யா வூட்டுல மாடு செத்துருச்சாம், வந்து தூக்கிப் போகச் சொல்லிருக்காங்கலே… வாங்கலே… இன்னைக்கு காலனி வூடுபூரம் கறியும், சோறுந்தேன்… என்றபடி கிளம்பினர் அனைவரும். அக்பர் ஐயா- என்ற பெயர் மாடத்தி காதுகளில் விழுந்த போது குமட்டல் அதிகமானது அவளுக்கு. மாடத்தியின் ஆத்தா ராசமணி அக்பர் ஐயா வூட்டுல… மாட்டுக்கொட்டாயி, கொல்லப்புரத்துல உள்ள வேலைக… ஊரணித்தண்ணி , கெணத்து தண்ணி எடுக்குற வேலைலாம் செய்து, தான் வகுத்தையும் , மக மாடத்தி வகுத்தையும் கழுவி வாழுற கைம்பொம்பள. காலணியில உள்ள ஆம்பளைகளாம் கவுர்மென்டு வேலைப்பாக்குறாக… சாக்கடை வண்டி, பீ வண்டி தள்ளுனாலும்… கவுர்மன்டு சம்பளமுல வாங்குறாக… அக்பரைய்யா வூட்டுல வேலை பாக்குறதுல ராசமணிக்கி கர்வந்தேன். அக்பர் ஐயா சம்சாரம் மைதீன் பாத்தம்மா குடுக்குற பழசு-பட்டை , பெனாங்கு சீலை துணிகளை ராசமணி கட்டுறதுல காலணிப் பொம்பளைக்கும் அவ மேல பொறாமைதேன். அக்பர் ஐயாவும் அவுக மவேன் சின்னைய்யா ரஹீமும் பெனாங்கு சவுராளியா வந்து இறங்குனப்போ, ஊரே ரஹீமைய்யாவ பாத்து வாயில வெரல வச்சுருச்சு… சின்னப் பயலாப் போன ரஹீமூ எளவட்டமா… சவுராளித் தோரணையோடு பாத்தவுக… ரஹீமுக்கு நாங்க பொண்ணு தாரோம்… நீங்க பொண்ணுதாறோமுனு… போட்டிய இருந்துச்சு. ராசமணிக்கு அக்பரு சம்சாரம் மைதீன்பாத்தம்மா சவுராளிக வந்த வூடு… வேலை நிமூற இருக்குது… வெள்ளன , வெரசா வாடியாத்தா ராசமணி என ராசமணியை வெரட்ட… சவுராளிக வந்த வூட்டுல கறியும் , சோறும் மிச்சம் மீதி கெடைக்க ராசமணி காலனியில பெருமையா அலைஞ்சா…. ராசமணிக்கி அக்பர் ஐயா வூடுல வேலை அதிகமாக மக மாடத்தியைத் தொனைக்கி வேலை வெட்டி பாக்க கைத்தொணையா அழைச்சுப்போனா…. அக்பர் ஐயா வூட்டு பெனாங்கு சோப்பு , பகுடரு , அத்தருவாசம் மாட்டுக்கொட்டகை சாணி, மோத்தர நாத்தத்தையே அமுக்கி…. வாசம்.. வாசம்… காத்தோட கொட்டாயில வந்து …. மோப்பம் புடுச்சே வேலை பாத்தா மாடத்தி. ஆத்தாடி என்னமா மணக்குது…. ம்ஹூம்… பெனாங்குல இப்புடித்தேன் இருப்பாக போல…. காலனியில பெனாங்கு வாசத்தை அவ சோட்டுப் புள்ளைகளோட சொல்லி…. சொல்லி…. பகுமானத்தோட திரிஞ்சா மாடத்தி. மாடத்தி வேலையின் சூட்டிகை மைதீன்பாத்தம்மாவுக்குப் புடுச்சுப் போக…. ஏலா- ராசமணி உம் மவள ஊட்டுக்குள்ளாற தூத்திப் பெருக்கச் சொல்லு என மாடத்தியின் வேலையில் பதவி உயர்வு கொடுத்தாள். அக்பர் ஐயா வூட்டுக்குள் தூத்தி பெருக்கச் சென்ற மாடத்தி வூட்டின் உள்ளார தரையோட வேலைப்பாடு , சரவெளக்கு ,மச்சுப்படி , அலமாரு , உக்காருற கட்டுலுக வேலைப்பாட்டையும் , அலங்காரத்தையும் பாத்து… அதைவிட வூட்டுக்குள்ள வந்த அத்தருவாசம்…. எல்லாம் வேற ஒலக்கத்துல இருக்குறாப்புல இருந்துச்சு அவளுக்கு. ஏலா… மாடத்தி வந்தமா… தூத்துப் பெருக்குனமா கெளம்பனமாமுனு இருக்கனும். ஏலா… பரகு… பரகுனு பாக்குறே… சீக்கிரம் தூத்திட்டு கொல்லப்பக்கம் போயி… ஒ.. ஆத்தாவோட கெளம்பு. மைதீன்பாத்தம்மாவின் குரல் அரற்ற … தன்னுலகத்துக்கு வந்து தூத்திப் பெருக்கினாள்… ஆனாலும் அந்த பெனாங்கு அத்தரு வாசம்… நான் மூச்சுல வாசத்த வாங்குறது ஐயா…. அம்மாவுக்குத் தெரியாதுல… மூச்சை… உள்ளார இழுத்து, இழுத்து நுரையீரல் முழுவதும் அத்தர் வாசத்தைத் தேக்கி வைத்துக்கொண்டாள் மாடத்தி. ராசமணி தெனசரி மாடத்தியைக் கூட்டிக்கிட்டு அக்பர் ஐயா வூட்டுக்கு வூட்டுக்கு வேலைக்கிப் போக ஆரம்பித்து… மைதிம் பாத்தும் மாடத்தியிடம் வேலை வாங்குவது அதிகமானது. அத்தர் வாசமே மாடத்தியை அதிக… அதிகமாக…. வேலை பார்க்க வைத்தது. அடியை ராசாமணி… நானும் , பெரிய ஐயாவும் பக்கத்து ஊருக்கு மெளத்துக்கு போறோம்… நேத்து வச்ச மீனானம் உஞ்சட்டியில ஊத்திருக்கேன் எடுத்துட்டுப்போ…. சின்னையா வூட்டுல இருக்குறாக வேலை முடிஞ்சா அவுக கிட்ட சொல்லிப்புட்டு ரெண்டு பேரும் கெளம்புங்க… எனச் சொல்லியவாறு மைதிம்பாத்தம்மாவும் , அக்பரையாவும் கிளம்பிவிட்டனர். மைதிம்பாத்தம்மா , அக்பர் பெரியய்யா இல்லாத வீட்டில் விளக்கமாறுடன் ஆடிக்கொண்டே நுழைந்து… வீட்டின் உள்அலங்காரத்தை ஆசை தீர பார்த்து ரசித்தாள்… அத்தர் வாசத்தை ஆனந்தமாக தனது மூச்சுக்குள் இழுத்தபடி வீட்டைக் கூட்டியவள்.. சின்னையா படுக்கையறை வாசலில் ஐயா உள்ளாற இருக்காக… கூட்டனுமா… வேணாமா…. கூப்பிடுவோமா என வாசலில் நின்றவளுக்கு குப்பென அத்தர் வாசம் சுவாசத்தில் திடீரென நுழைய… தடுமாறினாள்… தடுமாறி நிமிர்ந்த போது மிக அருகில் சின்னைய்யா ரஹீம் சினிமாக் கதாநாகன் போன்று நிற்க, அதைப் பார்த்த மாடத்திக்கு நெஞ்செல்லாம் பட படவென பட்டாம்பூச்சி பறந்தது, கையிலிருந்த விளக்கமாறு அவள் கையை விட்டுத் தவறுவதை அறியாமலே நின்றவளின் கையை ஆசையுடன் பிடித்தான் ரஹீம். ஐயா… ஐயா… உங்க அறையக் கூட்டனும் என்று காத்தோடு பேசியும் பேசாமலும் நின்றவளை … அறைக்குள் கூட்டிச் சென்றான் ரஹீம்… அறைத் தாழ்ப்பாள் போட்டது கூட அறியாமல்… அத்தர் வாசத்தின் போதையில் பின்னால் சென்றாள். மாடத்தியின் கைகளைப் பிடித்த கரங்கள் அவளது உடல் முழுவதும் பரவியது… மாடத்திக்கோ அத்தர் வாசம் மேலும்,.. மேலும்… மயக்கி அவளை வேறொரு உலகத்துக்குக் கொண்டு சென்றது. ஏய்ய்ய்… மாடத்தி நாங்கெணத்துல தண்ணி எடுத்து வந்துட்டேன்… வேலைலாம் முடிஞ்சுப் போச்சு …. அம்மாவுக வச்சமீங்கொலம்ப எடுத்துக் கெளம்புவோம் என்றவள் மகளின் மேல் அடித்த அத்தர் வாசத்தை அறிந்து அடியேலேய்… அம்மாவுக இல்லாத இந்த நேரத்துல அத்தர் சீசாவத் தொட்டியா… அம்மாவுக என்னத்தேனே வைவாக… அறிவுகெட்டவளே மொதல்ல கெளம்பு டீ…. ஊரணியில போயிக் குளிடி… பேதிலபோவே… நெஞ்சுல பயமில்லாம திரியாதடி…. எனக் கத்தியபடி முன்னால் செல்ல… அத்தர் வாசம் அவர்களுடனே … பின் சென்றது. சின்னய்யா ரஹீமுக்கு பொண்ணு பேசிமுடுச்சு… கலியாண வேலை அதிகமாக… ராசமணி… மாடத்திக்கும் வேலை அதிகமானது. ஆனால் மாடத்தியின் உடல் சோர்வுற்றது… வாந்தி… வாந்தி… என விடாது அவள் எடுக்க.. ஐயாவுக வூட்டுக் கறியுஞ் சோறும்… நாம திங்கிறமுனு காலனி சனங்க வாயில வச்சு வண்டாப் பறத்துதுக நம்மள, இவுக கண்ணேறாள …. எம் மகளுக்கு செமிக்காமை வாயில… வாயில எடுக்குறா எனப் புலம்பியபடி கை மருந்து கொடுத்து… மாடத்தியை வூட்டுல படுக்கவச்சுப்புட்டு கல்யாண வேலை பார்க்க அக்பர் ஐயா வூடு சென்றாள். நாளாக ..ஆக மாடத்தியின் வாந்தி நிற்காத போது… காலனியின் வைத்தியச்சி பேச்சிக் கெளவியக் கூட்டியாந்து காட்ட மாடத்தி கைப் புடுச்சுப் பார்த்த பேச்சிக்கெளவி ரெட்டை நாடி ஓடுது ஒம்மவளுக்கு, மாடத்தி புள்ளை உண்டாகிருக்கா… உம்மவ வகுத்துல உள்ளத கலைக்க முடியாதுடி பாதகத்தி… மூணுமாசத்துக்கு மேல ஆகிருக்குறாப்புல இருக்கு எனப் பேச்சிக்கெளவி சொல்லவும்… ராசமணிக்கு அடி வகுத்துல இடி இறங்கியது… தானும், தம் மகளும் சாவுறதுதேன் சரி இனி உசுரோட இருக்குறது அசிங்கம் என அழுதபடி அரளி விதை பறிக்கப்போகும்போதே… கொமரக்கா சாமி கோவில் திண்டுல உக்காந்து அழுது… என்னோட பாலாப் போன விதிதே புருஷனப் பறி குடுத்து… பட்டழுந்துறேன்… எம் மக விதியையும் இப்படி ஆக்கிட்டியே… ஐயாமாருக வீட்டுல என்னால நாயம் கேக்கப் போக முடியுமா?.. உனக்கு எம்புருஷன் பன்னி அடிச்சு காலனிக்கே கறியும்… சோறும் போட்டு சாமி கும்புட்டாரு… நீ அவரு மகள நிற்கதியா வுட்டுட்டியே தாயீ… என அழுது.. எழுந்து அரளிக்காயுடன் தனது குடுசைக்கு வந்தாள்.. காலனித் தலைவரு ரங்கன் ராசமணி குடுசை வாசலுக்கு வருவதை பார்த்து… தலைகுனிந்து நின்றாள். வாங்கனு கேக்கக் கூட வாய் வராமல் கூனிக் குறுகிப் போய் நின்றாள். ராசாமணியிடம் ரங்கனே பேச்சை ஆரம்பித்தார்… சேதிலாம் கேள்விப்பட்டேன்,.. என ரங்கன் சொன்னவுடன் சாமி… நானும் எம் மவளும் சாவுறதுதேன் நல்லது.. காலனில இனி தலை நிமுந்து நான் எப்படி நடப்பேன்… என அழுதாள் ராசமணி. சாவுறதுதேன் ஆத்தா, மகள் முடிவுனா… நம்ம காலனியில மாடத்தி மாதிரி பாதிப் பொட்ட புள்ளைகள்ள செத்துருக்கனும். நம்ம காலனிப் பயலுவ… வகுத்துல புள்ளையோட உள்ள காலனிப் பொம்பளப் புள்ளைகள கலியாணஞ் செஞ்சு ஏத்திகுறதுனாலதேன் நம்ம பொம்பளப் புள்ளைக சாவாம வாழுதுக… மாடத்தி சேதி கேட்டதும்… காலனி முக்கியஸ்தர்ட்டைலாம் பேசிப்புட்டு… நம்ம நானியாத்தா மவன் ராசைய்யாவ கூப்புட்டுப் பேசுனேன்… மாடத்திய ஏத்துக்கிறேனு சொல்லிட்டான்… ரெண்டுநாலுல கொமரக்காசாமி கோவிலு முன்னால கலியாணத்த முடுச்சுருவோம்… எனக் காலனித் தலைவர் சொன்னவுடன் அவரது கால்களில் நெடுஞ்சான் கட்டையாக விழுந்தாள் ராசமணி. மாடத்தி கழுத்தில் தாலி கட்டி ராசய்யா தனது பொண்டாட்டியாக்கினான் மாடத்தியை. தாலி கட்டியவன் ஒருவன்…. வகுத்துல இருக்குற புள்ளைக்கு அப்பன் வேறொருவன். எத்தனை பொம்பளைகளுக்கு தலைப் புள்ளக்கி அப்பன் வேறொருவனாக இருக்குதோ.. அப்போ எங்கள எங்க வகுத்துல வளருற புள்ளைகளெல்லாம், ஏத்துக்குறாத பெரிய வூட்டுக்காரவுக.. எங்கள தொடவும் கூடாதே?..என மாடத்தி மனதில் நெனச்சு வெந்து… வெந்து செத்தாள். அத்தர்வாசம் அவளது வாழ்வை நாறிப் போக வைத்ததை நினைத்து அவளது நுரையீரல் சுருங்கியது… மாதங்கள் சென்றது, மாடத்திக்கு ஆண்குழந்தை பிறந்தது… பிறந்த குழந்தையின் மீது அத்தர் வாசம் வீசுவது போலவே உணர்ந்த மாடத்திக்கு குமட்டியது, தாலி கட்டியவன் ஒருவன், பிள்ளை கொடுத்தவன் ஒருவன்… அத்தர் நெடி மேலும்…. மேலும்… மாடத்தி மனதிலிருந்து வெறி ஏற்றியது… பெற்ற பிள்ளையைத் தூக்கிக் கொண்டு விறு, விறுவென …அக்பர் வீடு நோக்கி நடந்தாள். அங்கோ ரஹீமின் மனைவிக்கு ஏழாம்மாத சீமந்தம் தடல், புடலாக சொந்தம், சுருத்துகளுடன்… நடந்து கொண்டிருந்தது. அக்பர் வீட்டின் நடுப்பகுதியில் நின்று…” என்னத் தொடாத ஒருத்தவனோட தாலிய கழுத்துலயும்… என்னத் தொட்டவனோட புள்ளைய கையிலயும் வச்சுருக்கேன்”,.. புள்ளக்காரவுகிட்டே புள்ளைய ஒப்படச்சுற்றேன் என புள்ளையைக் கீழே வைத்தவள்…. “அத்தர் வாசமுள்ளவுகலாம் நல்லவகளும் இல்லை… கவுச்சி நாத்தம் உள்ளவுக கெட்டவுகளும் இல்லை”… என ஆவேசத்துடன் கூறி தனது காலனி நோக்கி ஓடியவள்… கொமரக்கா சாமி முன்பு ராசய்யா கட்டுன தாலியைக் கழட்டி வைத்து விட்டு மிடாப்பானையில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றினாள். அத்தர் வீச்சம் அவளை கழுவி விட்டுச் சென்றது. தாய்மை மாடத்தி மார்பகங்களில் பாலாக கெட்டியது தாய்மையின் உணர்வு அதிகரிக்க தனது பிள்ளையை நினைத்து அரற்றியபடி தனது துணிகளை அள்ளிக்கொண்டு அக்பர் வீடு சென்றாள் “தீயாக மாடத்தி”. -சம்சுல் ஹுதா பானு **************************************************************

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.