logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

சத்யா GP

சிறுகதை வரிசை எண் # 168

17396   4  

ஜன்ம சாபல்யம் ... கமான் கமான் கலாவதி நுவேகதே நுவேகதி கமான் கமான் கலாவதி நுவுலேகுந்தே அதோ கதி!... ஸிட் ஸ்ரீராம் உருகி உருகிப் பாட, அலை வழியாகப் பார்த்தும், ஹெட்செட் துணையுடன் கேட்டும் கொண்டிருந்தான் ரகுராம். நள்ளிரவு 1.45க்கு யாரும் ஃபார்மஸிக்கு வரவில்லை. அந்த நடுத்தரமான மருத்துவமனை வாசலில் அமைதி காணப்பட்டது. நிசப்தத்தை காணாமல் போகச் செய்யும் விதத்தில் ஆம்புலன்ஸ் சப்தமொன்று தொலைவிலிருந்து மெலிதாக ஹெட்செட்டை மீறி கேட்டது. இயர் பட்ஸைக் காதிலிருந்து விலக்க, சப்த அளவு அதிகரித்து மருத்துவமனையின் பெரிய கேட் வழியே உள்ளே நுழைந்தது. ஏஎல்எஸ் ஆம்புலன்ஸ், நிச்சயம் கார்டியாக் பேஷண்டாக இருக்கக்கூடும். பகல் நேரத்தில் வரும் நோயாளிகளை மனம் இயல்பாக ஏற்றுக் கொள்கிறது. அகால வேளையெனில் ஏனோ மனம் படபடக்கிறது. ரகுராமுக்கு அந்த நோயாளியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென மனம் அலைபாய்ந்தது. ஆம்புலன்ஸ் அருகே தியாகுவைப் பார்க்க முடிந்தது. Adrenaline (அட்ரினலைன்), Epinephrine (எபினிப்ரின்) ஊசி மருந்துகளை உள்ளுணர்வுடன் பார்க்கத் துவங்கினான். உள்ளுணர்வு பொய்க்கவில்லை... //////////////////////// பார்ப்பதற்கு ஐசிசியு மிகப் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. நிதர்சனத்தில் மருத்துவமனைப் பணியாளர்கள் இயல்பாக மற்றொரு நோயாளி என கடமையில் நிலைத்திருந்தனர். டாக்டர், நர்ஸிடம் ஏதோ இன்ஜெக்ஷன் பெயரைச் சொல்ல அந்தப் பெண் தொலைபேசியில் பார்மஸிக்குப் பேசி ரகுராமின் உள்ளுணர்வை மெய்பித்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில் கார்டியாலஜிஸ்டும் சேர்ந்து கொள்ள பேஷண்ட் பெயர் : குமரன் வயது 39 போன்ற விவரங்கள் பதிந்த இருதய நோயாளியின் ஃபைலை கார்டியாலஜிஸ்ட் பார்த்து, பேஷண்டோட வைஃப் யாருங்க என்று கேள்வியெழுப்ப, லதா, 'நான் தான்' என மெலிதாக பதிலளித்தார். கணவரின் இருதயக் கோளாறு தொடர்பாக மனைவியிடம் நிதானமாக பாடம் நடத்தி மனைவியின் இருதயத்தை தயார்படுத்தினார். மறுநாள் மாலை கார்டியோ தொராஸிக் சர்ஜனும் கார்டியாலஜிஸ்டும் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக குமரனின் தேகம் குறித்து அலசி ஆராய்ந்ததோடு தங்கள் முன் வைக்கப்பட்டிருந்த ரிப்போர்ட்களை பார்வையிட, சர்ஜன் பேசத் துவங்கினார். கொரொனரி ஏஞ்சியோகிராபி தெளிவா சொல்லுது. பேஷண்டுக்கு கண்டிப்பா சிஎபிஜி செய்யறது நல்லது. 40 வயசுல ஆர்டரி வியாதியெல்லாம் வரது கொடுமை. பேஷண்ட் செயின் ஸ்மோக்கரா? என்ன ப்ரொஃபஷன்? "ஒரு நாளைக்கு நாலு சிகரெட் குடிப்பார்னு வைஃப் சொல்றாங்க, ஏதோ லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியில பெரிய பொசிஷன்ல இருக்காராம், சவுத் ஸோன் முழுக்க இவர் கன்ட்ரோல், மாசத்துல பதினைஞ்சு நாள் டூரிங் இருக்குமாம்" "அவுட் வைட் ஜங் ஃபுட், லேக் ஆஃப் எக்ஸர்ஸைஸ், ஸ்மோக்கிங், ட்ரிங்ஸ்... குடும்பத்தை யோசிக்கவே மாட்டாங்க போல, எத்தனை பசங்க?" "ஒரே பொண்ணு. 11 வயசு" "ராம் ராம், வைஃப் கிட்ட நிதானமா எடுத்து சொல்லுங்க, ஃபார்மாலிட்டீஸ் கம்ப்ளீட் செய்து... 2 நாள்ல ஆப்ரேஷன், ஓகே தானே? " ஷ்யூர்" ////// அறுவை சிகிச்சை முடிந்து பாதி மயக்கம் தெளிந்த நிலையிலிருந்த நிலையில் இரண்டு சிஸ்டர்கள் பேசுவது மந்தமாக குமரனின் அகச் செவியினுள் ஒலித்தது. "சிலர் பைத்தியக்காரத்தனம்னு சொல்வாங்க, அதுக்காக எதையும் அவாய்ட் செய்யக் கூடாது. சின்னச் சின்ன விஷயங்கள் தான் ரொம்ப பெரிய ஆத்ம திருப்தியைக் கொடுக்கும்" "சப்ஜெக்ட்ல எதுவும் கேட்க வேண்டாம்னு தானே ரைட்டர், ரைட்டிங்ஸ் பத்தி கேட்டேன், இதுக்கும் பதில் தெரியாதா? எல்லா ஃபீல்ட்லயும் ஸீரோவா?" சிஸ்டரின் பேச்சும், பழைய நினைவும் பலவீனமான தேக நிலையிலும் பலமாக நிலை பெறத் துவங்கியது. bandhan khula panchhi uda aage suno aji phir kya huaa... யுக்புருஷ் இந்திப் பட பாடல் காதில் இயல்பாக ஒலித்தது. மனீஷா கொய்ராலாவின் உருவம் கண்களில் ஸ்திரமானது. ////////// ஃபோர்ட் ஸ்டேஷனுக்கு அதிகாலை 4 மணியளவில் ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் நிற்க, ட்ராவல் பேகுடன் குமரன் ரயிலிலிருந்து கீழே இறங்கினான். ஸ்டேஷன் திருச்சிராப்பள்ளியின் பார்வையில் ஜன சந்தடி அதிகமின்றி இருந்தது. மெட்ராஸ் பாஷையில் ஜிலோவென்றிருந்தது. ப்ளாட்ஃபார்மில் நடந்து ஏறி இறங்கி ஃபோர்ட் ஸ்டேஷன் ரோட்டை அடைந்த போது மனது குளிர்ந்தது. ஒரு ஆட்டோ சாரதி சவாரி? என விசாரிக்க வேண்டாமென என மறுத்து நடக்க ஆரம்பித்தான். மூச்சை நன்கு உள்ளிழுத்து... திருச்சிக் காற்று நாசிக்கு அமிர்தமாய் இனித்தது. சாஸ்திரி ரோடில் நடந்து கொண்டிருந்தவனுக்கு எதிர் சாரியில் இருந்த கோடக் பாங்க் கிளையை கடக்கையில் ஏதேதோ நினைவுகள் குறுக்கிட்டன. சாலையைக் க்ராஸ் செய்து ஏடிஎம்முக்குள் நுழைய, உள்ளே குளிர் காற்றை தேகத்துக்குள் கடத்திக் கொண்டிருந்த செக்யூரிட்டி வேகமாக வெளியே சென்றார். பணத்தை எடுத்துக் கொண்டு ஏழாவது க்ராஸ்க்குள் பிரவேசித்து ஆர்பிஎஸ் ரெசிடென்ஸியில் அறை பதிவுக்கான நடைமுறைகளைத் துவக்கினான். கடந்த சில வருடங்களாக திருச்சிராப்பள்ளிக்கு வந்தாலே மத்தியப் பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள ஹோட்டல்களில் தங்குவதை தவிர்த்து தில்லைநகரைத் தேர்வு செய்வதற்கான காரணம் மட்டும் விளங்கவே இல்லை. ரிசப்ஷனில் இருந்தவர் ஆதாரை ஸ்கேன் செய்து பணத்திற்கான ரசீதைத் தந்து சாவி, டிவி & ஏஸி ரிமோட்டைக் கையில் தந்தார். உடன் ஒரு பணியாளர் ட்ராவல் பேகை எடுத்துக் கொண்டு அறையைக் காண்பிக்க வந்தார். அறை சுத்தமாக இருந்தது. "ஒரு நிமிஷம் சார்" என்று சொல்லி உடன் வந்தவர் அறையிலிருந்த டேபிள் ட்ராயரைத் திறந்து டிஸ் இன்ஃபெக்டண்ட் ஸ்ப்ரேயை நாலாபுறமும் அடித்தார். பாத்ரூமூக்குள் அடிக்கவும் தவறவில்லை. ஸ்ப்ரே பாட்டிலை மேஜை மீது வைத்து 'தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்குங்க சார்' என்றவரிடம் வெந்நீர் கேட்க, 'கொண்டு வந்து தரேன் சார்' என்று புறப்பட்டார். சீன வைரஸ் காலத்திற்கு முன்பு இங்கு வந்த போது இருந்த முகங்கள் எதையும் காண இயலவில்லை. அனைத்தும் பரிச்சயமற்றதாய்! பூர்வீகமே அப்படித்தானே மாறிப் போகிறது. இருத்தலின் போது கண்ட சாலைகள், ஸ்தாபனங்கள், வீடுகள், கடை வீதிகள் என அடையாளங்கள் அனைத்தும் மாறிவிடுகின்றன. உயிரோட்டத்தை நினைவுகளும், சில மனிதர்களின் ஞாபகங்களுமே சிதைக்காது மீட்டெடுக்கின்றன. 'சார்' குரல் கலைத்தது. இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில், எலக்ட்ரிக் வாட்டர் கெட்டிலைத் தந்து "வெந்நீருக்கு இது தான்" என்றார். "இது எப்போலேர்ந்து ஆரம்பமாச்சுங்க? "கோவிட்ல இருந்து" "சரிங்க ஏதாவது தேவைன்னா சொல்றேன், உங்க பேரு?" "நந்த கோபால்" கை கால் கழுவி, பல் துலக்கி முகம் கழுவி, கெட்டிலில் சுடுநீர் தயார் செய்து, அரை க்ளாஸ் அருந்தி காலைக் கடன் முடித்து மணி பார்க்கையில் அலைபேசி 5.15 என்று காட்டியது. அறையைப் பூட்டி வெளியே வந்த போது ரிஸப்ஷன் ஓரமாக படுத்திருந்த நந்த கோபால் எழுந்து "ஏதாவது வேணுமா சார்" என்று கேட்டார். "எதுவும் வேணாங்க, டீ சாப்பிட்டு வரேன்" குமரன் வெளியே வந்தான். 6வது க்ராஸ் சாய் ஃபேக்டரியில் மாற்றமில்லை. கடையில் ஒருவர் டீ குடித்து விட்டு கிளம்ப, வழக்கமான மாஸ்டர் பாய் அடுப்பருகே அமர்ந்திருந்தார். "வாங்க வாங்க, பார்த்து பல வருஷமாச்சு, ஊர்ப்பக்கமே வரலிங்களா" "ஆமாம் பாய், சீனாக்காரன் வர விடாம செய்துட்டான்" பாய், கடைக்கு வெளியே இருந்த டேபிளருகே இருக்கையை வைக்கப் போக, "வேண்டாம் பாய்" தடுத்து கடைக்குள் அமர்ந்தான் குமரன். "ஸ்பெஷல் சாய் தானே?" "இல்லை பால், ஜீனி போடாதீங்க" பாய் ஆச்சர்யமடைந்தார். திடீரென மௌனம் பரவ குமரனே மீண்டும் கதைக்கத் துவங்கினான். "ஆர் ஆர்ல பழகின பசங்க யாரையும் காணலியே?" "சீனாக்காரன் எல்லாரையும் ஊருக்கு அனுப்பி வைச்சான். போனவங்க யாரும் திரும்ப வேலைக்கு வரல" இரண்டு ஆட்டோக்காரர்கள் டீ குடிக்க வந்தார்கள். 23 வருட தவிப்பு முடிவுக்கு வந்து விடுமா? "ஒருத்தரைப் பார்த்தா ஏதோ ஒரு சாயல்ல யாரையோ நினைவுபடுத்தும் இதையும் 'Resemblance' ன்னு சொல்லலாம். இப்போ உதாரணத்துக்கு இந்த தோற்றத்துல என்னைப் பார்த்தா யாரையாவது நினைவுபடுத்துதா?" "..." இதுக்கும் பதில் கிடையாதா? இதுலயும் ஸீரோ தானா? க்ளாஸில் பால் தீர்ந்து போக, பார்ஸல் டீ, ரெண்டு கப்பை கவரில் வாங்கி ஹோட்டலுக்கு வந்த குமரன், "டீ சாப்பிடுங்க கோபால்" என்று கவரைத் தந்துவிட்டு ரூமுக்குச் சென்றான். கால் கழுவி, சோப் போட்டு கை கழுவி படுக்கையில் விழுந்தவன், தூங்கிப் போனான். ///////// காலை 10 மணிக்கு ஸ்கூல் இயல்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அலுவலகம் சென்று சுய அறிமுகம் செய்து விஸிட்டிங் கார்டைத் தந்த குமரன், கையிலிருந்த ஃபைலைத் திறந்து ப்ளஸ் 2 மார்க் ஷீட்டைக் காட்டி "இந்தப் பள்ளியின் பழைய மாணவன்" என்றான். "உங்களுக்கு என்ன சார் வேணும்?" "நான் ப்ளஸ் ஒன் படிக்கும் போது ஹேமா மிஸ் இங்க்லீஷ் சப்ஜெக்ட் எடுத்தாங்க. அவங்களைப் பார்க்கனும்" மதிப்பெண் பட்டியலில் இருந்த வருடத்தைப் பார்த்த பள்ளி அலுவலர், எனக்குத் தெரியாது சார், ரவீந்திரன்னு ப்ளஸ் 1, ப்ளஸ் 2 க்கு ஃபிஸிக்ஸ் எடுக்கிறவர் 25 வருஷத்துக்கு மேல சர்வீஸ்ல இருக்கார். அவர் கிட்ட கேளுங்க" "ரவி சார் தானே? ப்ளஸ் 2 ல எனக்கு அவர் தான் ஃபிஸிக்ஸ் எடுத்தார்" "பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, க்ளாஸ் முடிஞ்சு வருவார். பாருங்க" கூடுதல் நரை, வயோதிகத்துடன் ரவி சார் அலுவலகத்துக்குள் வர இருக்கையிலிருந்து உடனே எழுந்த குமரன், "குட் மார்னிங் சார், நான் உங்க ஓல்ட் ஸ்டூடண்ட்" மீள் சுய அறிமுகப் படலம், மார்க் ஷீட் என சில நிமிடங்கள் கழிய, " எதுக்குப்பா அவங்களைப் பார்க்கணும்? "நான் நாலு வார்த்தை இங்க்லீஷ் தப்பில்லாம பேசறேன்னா அதுக்கு காரணம் மிஸ் தான் சார், கடந்த காலம், நிகழ் காலம் & எதிர் காலம் இதையெல்லாம் ஆங்கில வார்த்தைகளில் இலக்கணப் பிழையில்லாம எழுதறதை எளிமையா சொல்லித் தந்தது அவங்க தான் சார். ஒரு பிஸ்னஸ் யூனிட் ஸ்டார்ட் பண்ணப் போறேன். அதுக்கு அவங்களை இன்வைட் செய்யறதுக்காக சார்" "அவங்க இப்போ சாவித்ரி வித்யா ஸாலால வொர்க் பண்றாங்க, போய் பாரேன்" "இன்விடேஷன் தரனும் சார், படிக்கும் போது ராமலிங்க நகர்த வீடுன்னு மிஸ் சொல்லி இருக்காங்க, ஈவ்னிங் வீட்ல போய் பார்த்தா சரியா இருக்கும் சார்" "எஸ்விஎஸ்ல விசாரிச்சு ஃபோன் நம்பர் வாங்கித் தரவா?" "வேண்டாம் சார். சர்ப்ரைஸா நேரா வீட்டுக்குப் போய் எல்லாரையும் இன்வைட் செய்யறது தான் சார் தன்மையா இருக்கும்" "கொஞ்சம் வெயிட் பண்ணு" ரவி சார் வெளியே போய் துண்டு காகிதத்துடன் வர கால் மணித்தியாலமானது. "இந்தாப்பா அட்ரஸ், ராமலிங்க நகர்ல தான் இருக்காங்க, வீடு மாறி இருக்காங்க" "தேங்க் யூ சார். கை கூப்பி வணங்கி விடை பெற்றான். பாடம் சொல்லித் தந்த ஆசிரியரிடம் சரளமாக உண்மையும், பொய்யும் கலந்து பேசியது எதுவும் உறுத்தவில்லை. பள்ளியிலிருந்து கிளம்பிய குமரன் தன் காரியாலயத்தின் கன்டோன்மென்ட் கிளைக்கு சென்று பணி நிமித்தமாக சிலவற்றை கோப்புகளிலும், கம்ப்யூட்டரிலும் ஆராய்ந்தான். கவிதா ஹோட்டலில் சாப்பாடு முடித்து மீண்டும் ப்ரான்ச் ஆஃபிஸ் சென்று வேலை முடித்துக் கிளம்பிய போது மணி மாலை 4.30. மறக்காமல் தேங்காய் வாங்கிக் கொண்டான். ரூமுக்கு வந்து குளித்து முடித்து 5 மணிக்கு கிளம்பியவன் 6வது க்ராஸ்க்கு திரும்பும் முனை வாகான முச்சந்தி என்பதால் தேங்காயை உடைத்தான். ஆட்டோ பிடித்தான். சாரதியிடம் "ராமலிங்க நகர் போங்க" என்று முகவரி சொன்னான். வீட்டு வாசலில் இறங்கியவன் ஆட்டோவை அனுப்பிவிட்டு கேட்டை நெருங்கினான். தனி வீடு, நெஞ்சு படபடத்தது. கேட்டைத் திறந்து உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்திக் காத்திருந்தான். கதவு திறந்தது. ஹேமா மிஸ் முக ஜாடையில் சுடிதார் அணிந்து ஒரு பெண் கதவைத் திறந்த ஆள். " ஹேமா மிஸ் வீடு இது தானே?" "ஆமா நீங்க யார் சார்?" "நான் மிஸ்ஸோட பழைய ஸ்டூடண்ட், ப்ளஸ் ஒன் படிக்கும் போது எனக்கு மிஸ் தான் இங்க்லீஷ் எடுத்தாங்க. மிஸ்ஸைப் பார்க்கணும், இது என் விஸிட்டிங் கார்ட்" "உள்ள வாங்க, உட்காருங்க, அம்மா ஸ்கூல்ல இருந்து இப்போ தான் வந்தாங்க, வெயிட் பண்ணுங்க" இருக்கையைக் காட்டி அமர சொன்னாள். பேண்ட் பாக்கெட்டிலிருந்த சானிடைஸர் பாட்டிலைத் திறந்து கரங்களை சுத்தப்படுத்திக் கொண்டான். "இந்தாங்க சார்" தண்ணீர் பாட்டிலைத் தந்தவளிடம் உன் பேர் என்னம்மா? என்று கேட்டதற்கு ஸ்வேதா என்ற பதில் கிடைத்தது. பத்து நிமிட காத்திருப்பு சமயபுர அம்மன் தரிசன வரிசையில் நிற்பது போலத் தவிப்பாக இருந்தது. "யார் நீங்க" குரல் சிறிதும் மாறவில்லை ஆனால் முகத்தில் பல மாற்றங்கள். சற்று பூசினாற் போல தேகம். தலைக் கேசத்தில் சில நரை. பூச்சு கொண்டு மறைக்கவில்லை. ஹேமா மிஸ்ஸை ஹேமாம்மா என்று சொல்லலாம். இருக்கையிலிருந்து எழுந்து இரு கரம் கூப்பி வணங்கி "மிஸ் என் பேர் குமரன். N. 23 வருஷத்துக்கு முன்ன ப்ளஸ் ஒன் படிக்கும் போது நீங்க தான் எனக்கு இங்க்லீஷ் மிஸ்" குரலில் எல்லை மீறிய உற்சாகம் வெளிப்பட்டது‌. "நீங்க நிறைய ஸ்டூடண்ட்ஸை வருஷா வருஷம் பார்ப்பீங்க, உங்களுக்கு என்னை நினைவிருக்காது ஆனால் ஆங்கிலத்தை சிம்பிளா என் மனசுல பதிய வைச்சது நீங்க தான் மிஸ்" "மேடம், மேம்னு இந்த காலத்து கல்ச்சர் இல்லாம மிஸ்னு சொல்ற போதே நீ பழைய ஸ்டூடண்ட்னு புரியுது. எவ்ளோ நேரம் நிற்ப, உட்காருப்பா, இது க்ளாஸ் இல்லை என் வீடு தான்!" மிஸ் இயல்பாகப் பேசினார். "க்ளாஸ்ல ஒன் ஹவர்ல எழுதி முடிக்க சொல்லி அஸைன்மெண்ட் தருவீங்க. நான் தான் ஃபர்ஸ்ட் முடிச்சு உங்க கிட்ட பேப்பரைத் தருவேன் மிஸ்" மிஸ் சிரித்தார். "என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்த"? ரகு தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பித்தான். "டென்த் வரை ஒரு ஸ்கூல்ல படிச்சுட்டு ப்ளஸ் ஒன்ல ஸ்கூல் மாறினேன். அப்போ நான் கூச்ச சுபாவி. க்ளாஸ்ல நீங்க ஏதாவது பொதுவா கேள்வி கேட்டா பசங்க யாரும் பதில் சொல்ல மாட்டானுங்க, முந்திரி கொட்டை மாதிரி எழுந்து சொல்லக்கூடாதுன்னு பதில் தெரிஞ்சும் அமைதியா இருப்பேன். சங்கோஜத்தால பேச மாட்டேன்" "இப்போ நல்லா பேசறப்பா" "ஒரு முறை நீங்க சப்ஜெக்ட்ல இல்லாம கேள்வி கேட்கறேன்னு சொல்லி "ரைட்டர் ராஜேஷ்குமார் நாவல்னாலே ஒரு குறிப்பிட்ட ஏரியா தான் பிரதானமா இருக்கும். அது என்ன?"ன்னு கேட்டீங்க. இந்தக் கேள்விக்கும் எவனும் பதில் சொல்லல ஆனால் எனக்கு ஆன்ஸர் தெரியும் மிஸ். நான் சிஸ்த் ஸ்டாண்டர்ட்ல இருந்தே அவர் கதைகளைப் படிக்கிறவன். அம்மா, அக்காவோட சேர்ந்து வீட்டுக்கு மளிகை, காய்கறி வாங்க காந்தி மார்க்கெட்டுக்கும், தெப்பக்குளம் ரோடுக்கும் போவாங்க. அப்போ வீட்டை நான் பார்த்துக்கறேன்னு சொல்லி 2 ராஜேஷ்குமார் நாவல்ஸ் படிக்க வாங்கித் தந்துட்டுப் போவாங்க. அவர் எழுத்துன்னாலே கோயம்புத்தூர், வால்பாறை சுற்று வட்டாரம் தான் பிரதானமா இருக்கும். என் பதில் சரியா மிஸ்?" மிஸ் பலமாக சிரித்தார். "சென்ட் பர்சன்ட் கரெக்ட். வேற ஏதாவது இருக்கா?" கண்களில் ஆர்வம் மின்ன கேட்டார். "தப்பா நினைக்காட்டி சொல்றேன் மிஸ்" "சொல்லுப்பா" என் க்ளாஸ் மேட் ஆர். கண்ணன் வீடு அண்ணாமலை நகர்ல இருந்தது. அவங்க வீட்ல டிவிஎஸ் ஆஸ்ட்ரா வண்டி இருந்தது. அதுல சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் ரவுண்ட் போகலாம்னு ஒரு சண்டே மதியம் கூட்டிட்டுப் போனான். அருணா தியேட்டர் கிட்ட வண்டியில போகும் போது உங்களைப் பார்த்தேன் மிஸ். வெள்ளை கலர் சுடிதார் உடுத்தி இருந்தீங்க. வெயிலுக்கு தலையில துப்பட்டாவை சுத்திக்கிட்டு கையில ஒரு பையோட நடந்து போயிட்ருந்தீங்க. அந்த ட்ரெஸ், உங்க முக சாயல் எல்லாம் யுக்புருஷ் இந்திப் படத்துல பந்தன் குலா பாட்டுல வர மனீஷா கொய்ராலா மாதிரி இருந்தது. ஒரு முறை resemblance பத்தி க்ளாஸ் எடுக்கும் போது கேள்வி கேட்டீங்க. இதை சொல்லலாம்னு நினைச்சேன். தப்பாயிடுமோன்னு சொல்லல" மிஸ் முகத்தில் விவரிக்க முடியாததொரு பா வம் வெளிப்பட்டது. "என்னமோ தெரியல, உங்களைப் பார்த்து இந்த ரெண்டு விஷயத்தையும் சொல்லியே தீரணும்னு ஆசை. வொர்க் விஷயமா இந்த முறை திருச்சி வந்த போது சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க மிஸ்" "ச்சை ச்சை, இதுல ஒரு தப்பும் இல்லை" மிஸ் முகத்தில் பூரிப்பு. "ஜன்ம சாபல்யம் கிடைச்ச திருப்தி, நான் கிளம்பறேன் மிஸ்" "இருப்பா காஃபி சாப்பிட்டு போ" "டீ, காஃபி குடிக்கிறதை நிறுத்திட்டேன் மிஸ். உங்க கையால கொஞ்சம் தண்ணீர் தாங்க போதும்" மிஸ் தண்ணீர் கொண்டு வந்து தந்தார். "உனக்கு எத்தனைப் பசங்க?" "ஒரே ஒரு பொண்ணு மிஸ்" "என்ன படிக்கிறா? வாண்டு பேரென்ன?" "சிக்ஸ்த் படிக்கிறா மிஸ். அவ டீச்சரா வருவாளாம். அது தான் பிடிக்குமாம். அவ பேரு ஹேமா" - வெட்கப்பட்டு தலை குனிந்தான். மிஸ் முகத்தில் எண்ணற்ற உணர்வுகளில் பெருமிதம் மேலோங்கி நின்றது. "வரேன் மிஸ்" கை கூப்பினான். "இருப்பா, ஒரு வெள்ளைத் தாளில் அவர் பெயரையும், பேசி எண்ணையும் எழுதி கையெழுத்திட்டு தந்தார். அந்தப் பேனாவையும் குமரன் கைகளில் தந்து "இருக்கட்டும்" என்றார். கிளம்பியவனை வாசல் வரை வந்து வழியனுப்பிய போது கேட்டைத் திறந்து இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபடி ரகு வந்தான். "என்ன சித்தி?" என்றவன் குமரனைப் பார்த்து அதிர்ந்தான். "சார் நீங்க இங்க எப்படி? நான் நீங்க அட்மிட் ஆகி இருந்த ஹாஸ்பிட்டல் ஃபார்மஸில வொர்க் பண்றேன். மன்த்லி லீவுக்கு ஊருக்கு வந்தேன். நீங்க எப்படி ஹேமா சித்தி வீட்ல?" "சில கண்ணுக்குத் தெரியாத புள்ளிகள் ஒரு நேரத்துல அழகா சேர்ந்து கோலமாகும். ஜன்மாந்திர வாசனைன்னு சொல்லலாம்" குமரன் மொபைலை எடுத்து மிஸ் நம்பரை டைப்பத் துவங்கி ஸ்வேதா அம்மா என்று பெயரைப் பதிந்து ப்ராக்கெட்டில் ஹேமா மிஸ் என்று முடித்து ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தான். ###################

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Sailasubramanian Avatar
    Sailasubramanian - 3 years ago
    இக்கதை படித்த தருணங்கள் அருமையானவை.... யாரு இந்த படைப்பாளி எனக்கு அவரை நேரில் பார்க்கணும் போல இருக்கு

  • Jayashree Sadagopan Avatar
    Jayashree Sadagopan - 3 years ago
    நல்ல பாஸ்ட் moving ஸ்டோரி. கடைசியில் ஸ்வேதாவின் அம்மா என்று வருவதன் காரணம், ஸ்வேதா மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதன் குறியீடு? சின்ன சிறுகதையில் நாவில் படித்த தாக்கம். எழுத்தில் நல்ல maturity . பரிசு பெற வாழ்த்துகள்.

  • Ramaganesh Avatar
    Ramaganesh - 3 years ago
    வழக்கம் போல சத்யா ஜிபியின் இயல்பான எழுத்து நடை.ஒரு இடத்தை சம்பவத்தை கண் முன்னே நிறுத்தும் பாங்கு மருத்துவ மனை என்றால் மருத்துமனை நம் கண் முன்னே இருக்கும் எழுத்து நடையில். மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • Ramaganesh Avatar
    Ramaganesh - 3 years ago
    வழக்கம் போல சத்யா ஜிபியின் இயல்பான எழுத்து நடை.ஒரு இடத்தை சம்பவத்தை கண் முன்னே நிறுத்தும் பாங்கு மருத்துவ மனை என்றால் மருத்துமனை நம் கண் முன்னே இருக்கும் எழுத்து நடையில். மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்