logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

ஜெயந்தி சுந்தரம்

சிறுகதை வரிசை எண் # 167


ஐயா, என்னுடைய இந்த சிறுகதை "பயணங்கள் முடிவதில்லை " என்னுடைய சொந்த படைப்பே என்றும் வேறு எந்த தழுவலோ அன்றி எங்கும் பிரசுரமோ ஆகவில்லை என்றும் உறுதி மொழி அளிக்கிறேன். திருமாமகள் - புனைபயர். ------------- பயணங்கள் முடிவதில்லை - திருமாமகள் "பயணிகள் கவனத்திற்கு.  சென்னையிலிருந்து திருச்சி செல்லும் மலைக்கோட்டை விரைவு வண்டி இன்னும் பதினைந்து நிமிடங்களில் இரண்டாவது நடைமேடையை வந்தடையும்". அறிவிப்பு வந்த சில விநாடிகளில், சற்றே தாமதமாக வந்த பயணிகள் பரபரப்புடன் தங்கள் பெட்டி வந்தடையும் இடத்தில் அருகில் சென்று நின்றனர். அதென்னவோ எத்தனை முறை பயணம் செய்தாலும் எல்லோருக்கும் இந்த மலைக்கோட்டை விரைவு வண்டியில் பயணம் செய்வது முதன்முறை போல் தான் இருக்கும். எனக்கும் கூட அப்படித்தான் ஒரு குழந்தையின் குதூகலம். நன்றாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அறுபது வயதும் இருபதே போல் இருக்கும். அவ்வப்போது தட தட சத்தத்துடன் பாலம் கடப்பதும், பின் கிரீச்சுட்டுக நிற்பதும், அவ்வபோது ஏதாவது ஒரு பெரிய சந்திப்பில் டீ,. பால், காபி என்ற சத்தம் காதில் விழுவதும், டீ குடிக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள் வண்டி மீண்டும் நகர்வதும், கண் திரும்பவும் அப்படியே சொக்கி தூக்கத்திற்கும், விழிப்புக்கும் மாறி மாறி செல்வதும் எப்போதும் நடக்கும் ஒன்று. உட்கார்ந்த இடத்திலிருந்து கண்களை சுழல விட்டேன். நடைமேடையில் பயணிகளுக்கு என்று போடப்பட்டிருக்கும் பெஞ்சியில் அமர்ந்து கொண்டும்,  சிலர் இடமே கிடைக்காமல் அவர் கையில் கொண்டு வந்து இருக்கும் பெட்டியில் அமர்ந்து கொண்டும், சிலர் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும், அருகிலிருக்கும் தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டும்,  சிறுசுகள் குளிர்பானம் வேண்டும் என்று அடம் பிடித்துக்கொண்டும், ஒரு மணி நேரத்தை எப்படியோ கழித்து விடுவார்கள். புதியதாக எதுவும் நடப்பதில்லை. ஒரே செய்கைகள் தான் ஆனால் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். கிரிக்கெட் மேட்ச் ஹைலைட்ஸ் திருப்பி திருப்பி பார்ப்பதில்லையா, கேட்ட ஸ்லோகத்தை தினமும் கேட்பதில்லையா அது போல தான் இதுவும். நான் பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னமேயே வந்து அமர்ந்து கொண்டு விடுவேன். அப்பா அப்படி பழக்கம் செய்துவிட்டார். ' வண்டிக்கு காத்துட்டு இருக்கலாம், ஆனாக்க பரபரன்னு ஓடிபோய் கடைசி நிமிஷத்துல ஏறக்கூடாது' என்ற அப்பாவின் வார்த்தையை இன்று வரை நான் கடைப்பிடித்து வருகிறேன். அப்போதுதான் அந்த குடும்பத்தை கவனித்தேன். வண்டி வருவதற்குள் அவர்களுக்கு பசித்திருக்கும் போலிருக்கிறது. மிகப் பெரிய குடும்பம். பார்க்கவே சந்தோசமாக இருந்தது. குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து கொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சிற்றுண்டி  பொட்டலங்களை பிரிக்க மிளகாய் பொடி தடவிய இட்லி என் நாசியை தாக்கியது. வாயில் எச்சில் ஊறியது. நன்றாக வக்கணையாக உட்கார்ந்து சாப்பிடுவது பார்க்கவே ஆசையாக இருந்தது. நடுவில் மடக் மடக் என்று தாங்கள் கொண்டு வந்திருந்த தண்ணீரையும் குடித்த பொழுது என் தாகமே அடங்கியது போலிருந்தது. மெய்மறந்து அந்த குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருந்த என்னை பார்த்து விட்ட அந்த கிழவி, என்னை பார்த்துவிட்டு  கேட்டாள். "தம்பி இட்லி சாப்பிடுறீங்களா?" என்று. "இல்லம்மா நான் சும்மாதான் பாத்துக்கிட்டு இருந்தேன் நான் இப்பதான் சாப்பிட்டு வந்தேன்" என்று ஒரு பொய்யை உதிர்த்து விட்டேன். சொன்னபடியே அடுத்த பத்தாவது நிமிடத்தில் மலைக்கோட்டை விரைவு வண்டி கர்வத்துடன் (அப்படித்தான் எனக்கு தோன்றும் )அழகிய நடை போட்டுக்கொண்டு வந்து நின்றது. பயணிகள் பரபரவென்று இங்குமங்கும் ஓடி, தங்களைத் தாண்டி சென்று நின்ற பெட்டியை பிடிக்க பதட்டத்துடன் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும், ஒருவருக்கொருவர் உதவியாக ஒருவழியாக ஏறிவிட்டனர். நான் என்னுடைய இருக்கையை தேடி அமர்ந்துவிட்டேன்.  என்னுடைய பெட்டியை இருக்கையின் கீழே தள்ளி விட்டு முகத்தை கழுவி  திரும்பிய போது ஒரு குடும்பம் எனது இருக்கைக்கு எதிரே அமர்ந்து இருந்தது. ஒரு வழியாக ரயில் வண்டி நகர்ந்தது. அவரவர்கள் பெட்டி படுக்கை இவைகளை சரி செய்வதிலும், கை குழந்தை ஒன்றுக்கு  தூளி போடுவதிலும்,  அவரவர்கள் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டில் அங்கங்கே கிடைத்த இடத்தில் வைத்தும், கைப்பேசிக்கு சார்ஜர் போடுவதும் இப்படியாக எல்லாம் அரங்கேற இருக்கையில் அமர்ந்து கொண்டோம். "சார் நீங்க என்னோட அப்பர் பர்த்தை எடுத்துகிட்டு உங்களோட மிடில் பர்த்து கொடுக்க முடியுமா?" இப்படித்தான் ஆரம்பம் ஆகும் பயணங்களில். ஒருவருக்கொருவர் பரிச்சயம் ஆவதும் அப்படித்தான். பயணங்களில் இது மிகவும் சுலபமான ஒன்று. ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சில பல வீட்டு ரகசியங்களை சாதாரணமாகச் சொல்லிக் கொண்டும், அலுவலகங்ககளை பற்றி புலம்பிக் கொண்டும், ரயில் பயணச் சினேகங்கள் மிகவும் அற்புதம்.  " அதனால என்ன சார் ஒன்னும் பிரச்சனை இல்ல எடுத்துக்குங்க... " என்று நான் சொன்னதும் அவர் தன் மனைவியை பார்த்து சந்தோஷப்பட்டார். " ரொம்ப நன்றிங்க சார்" என்றார் அவர். அடுத்த அரை  மணி நேரத்தில் பெட்டியே அமைதியானது அந்த குடும்பத்தை தவிர. ஒரு பதினைந்து வயது சிறுவன் தன்னுடைய  அலைபேசியை உயிர்ப்பித்தான். எல்லோரும் அவரவர்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள். நிச்சயமாக ஒரு ஐம்பது ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் அந்த அலை பேசி. என் மனதுக்குள் எரிச்சல் மூண்டது. அலைபேசி வந்தாலும் வந்தது எப்போது பார்த்தாலும் விளையாட்டு எப்பொழுது பார்த்தாலும் வாட்ஸ்அப் மெசேஜ் எப்பொழுது பார்த்தாலும் முகநூல், இதில் வேறு நால்வரும் சேர்ந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. " என்ன சார் குடும்பமே சேர்ந்து கேம்ஸ் ஆடறீங்களா? "என்றதும் அந்த பெரியவர் என்னை பார்த்தார். " இல்லை தம்பி அப்படி எல்லாம் இல்ல... பொறுத்திருந்து பாருங்க உங்களுக்கே தெரியும்" " அப்படியா? "என்றேன் உதட்டில் இகழ்ச்சியுடன். சில சமயம் நம்மளுடைய அர்த்தமற்ற எரிச்சல் இகழ்ச்சி ஆகிறது. பின்னர் அதுவே நிகழ்ச்சி ஆகிறது. வண்டியை விட்டு இறங்குவதற்குள் மனம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு போய்விடும். தூக்கம் கண்களை அசத்த என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் இன்று கொஞ்சம் தூக்கத்தை கட்டுப் படுத்திக் கொண்டேன். " அம்மா" என்ற அந்த பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. " என்ன ஜனனி நீ ஒன்னும் கவலைப்படாதே... நாங்க நாலு பேருல யாரானு ஒருத்தர் நாளைக்கு ராத்திரி அங்க வந்திடுவோம்...நீ எப்படியானு மேனேஜ் பண்ணி தான் ஆகணும்... ஒன்னும் பயப்படாத புரிஞ்சுதா? " " இல்லம்மா எனக்கு பயம் இல்ல...இருந்தாலும்  மாத்திரை சாப்பிடுவதற்கு ரொம்ப படுத்திட்டாங்க.. " " பக்கத்துல நான்  ஃ பணல் எடுத்து வச்சிருக்கேன் இல்லையா...அது மூலமாக வாயைத் திறந்து கொஞ்சம் கொஞ்சமா இந்த மாத்திரையை கரைச்சு ஊத்து... ரொம்ப முக்கியம்.. யூரினுக்கு பேடு ராத்திரிக்கு வச்சிடு... உஷா பக்கம் மொபைல் திருப்பு... " அப்போதுதான் அந்தக் காட்சியை நானும் பார்த்தேன். வாய் எல்லாம் அப்படியே எச்சில் ஒழுக ஒரு சாய்வு நாற்காலியில் அந்த பெண் படுத்திருந்தார். "அம்மா... எ... பி.. வழுவ..." அந்த வார்த்தையை அந்தப்பெண் பேசுவதற்குள் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தது. பக்கத்தில் இருந்த பெண் ஒழுகிய எச்சிலைத் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள். " ஜனனி கிட்ட சமர்த்தா இருக்கணும் உஷா.. படுத்தக் கூடாது... அம்மா அப்பா எல்லாம் ஓடி வந்து விடுவோம் நாளைக்கு தங்கத்தை பார்க்க... " "ழ... ழ... தாக்கோ லேட்..." சொல்லிவிட்டு வாயருகில் கட்டை விரலை வைத்து சப்பியது அந்த பெண். "சாக்லேட் பயித்தியம்.. என்ன வயசு ஆனா என்ன குழந்தைதான்... சமத்தா இருந்தால் உண்டு.. சரியா..." ஏதோ குழந்தைக்கு சொல்வது போல் சொன்னார்கள். என் கணிப்பில் நிச்சயமாக இந்த பெண்ணிற்கு நாற்பத்து ஐந்து வயதுக்கு மேல் இருக்கலாம். ஏதோ நடந்திருக்கிறது அந்த குடும்பத்தில் அது மட்டும் புரிந்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த அலைபேசியில் இருந்து அந்த அலைபேசிக்கு கட்டளைகள் பறந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக எல்லாரும் தூங்க ஆரம்பிக்க திடீரென மீண்டும் அலைபேசி அழைத்தது. எனக்கு இப்பொழுது கோபத்திற்கு பதில் மனதில் இரக்கம் ஏற்பட்டது. ஏதோ பெரிய பிரச்சினை போலும். கேட்டால் தவறாக நினைக்கலாம்.  "  ஜனனி.. கூப்பிட்டு இருக்க ஏதாவது பிரச்சனயா? " அந்த வயதான அம்மா தான் பேசினார். " அம்மா நீ மட்டும் கொஞ்சம் லைன்ல வாம்மா" என்றது அந்தப் பக்கத்திலிருந்து. " என்ன ஜனனி என்ன ஆச்சு? " " திடீர்னு அது வந்துருச்சு மா அவங்களுக்கு.. " " அட கடவுளே இதை நான் எதிர்பார்க்கவே இல்லையே ஜனனி...இப்ப டைம் இல்லையே....சாரிடா ஜனனி... பக்கத்திலேயே சானிடரி நாப்கின் இருக்கு பாரு எடு... கொஞ்சம் பெரட்டி தான் ஆகணும் கஷ்டம்தான் ஜனனி....வேணும்னா...மாடிவீட்டு ராதா அக்காவை கூப்பிடுகோ... " " இல்லம்மா ஏற்கனவே இராத்திரி ஆயிடுச்சு அவங்களை கஷ்டப்படுத்த வேண்டாம்னு பார்க்கிறேன்... நானே  பண்ணிக்கிறேன்... " " முடிச்சுட்டு சொல்லு நான் திருப்பி லைன்ல வரேன்...சாப்பாடு ஒழுங்கா சாப்பிட்டு இருக்காட்டி கொஞ்சூண்டு ஹெல்த் டிரிங்க் கொடுத்துட்டு படுத்துக்கோ.... நாளைக்கு நாங்க கிரிமேஷன் ஐ முடிச்சுட்டு வந்துடறோம்... " இதற்கு மேல் எனக்கு பொறுமை யாக இருக்க முடியவில்லை. என் கண்களில் கண்ணீர். யான் அவர்கள் பேசியது எதுவும் கேட்காதது போல் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்குவது போல் நடித்தேன். நம் கலாச்சாரம் அப்படி. இயற்கை அழைப்பிற்காக எழுந்து சென்றபொது அந்தப் பெரியவரும் அங்கு நின்றிருந்தார். " சார் என்றேன்" அந்த பெரியவரை பார்த்து. சொல்லுங்க சார்" என்றார் அவர். "கேக்க சங்கடமா தான் இருக்கு என்ன ஓடிட்டு இருக்குன்னு எனக்கு புரியல... சத்தியமா நான் வம்புக்கு கேக்கல...இதே மாதிரி ஒரு பிரச்சினை என் வீட்டிலேயே இருக்கு அதான் கேட்டேன்.. " " இந்தப் பக்கம் வாங்க வாங்க.... சொல்றேன்.. " அவர் சொன்ன பொழுது ஆச்சரியத்தின் உச்சத்துக்கே நான் சென்று விட்டேன். சுருக்கமாய் கீழே. அந்தப் பெண் இவருடைய மருமகள். அவர்களுக்கு இரண்டு  குழந்தைகள். திடீரென ஒருநாள் அதிகாலையில் பாத்ரூமிற்கு சென்ற பொழுது கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டிருக்க எக்ஸ்ரே ஸ்கேன் என்று ஏகப்பட்ட செலவு செய்து கடைசியில் வீட்டுக்கு காய்கறியாக வந்து சேர்ந்திருக்கிறார். பெண்ணின் அம்மா வீட்டிற்கு தகவல் சொன்ன பொழுது அங்கிருந்து வந்த பதில் இவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 'நாங்க என்னோட பையனோட தான் இருக்கோம். என் மருமக இதற்கெல்லாம் ஒத்துக்க மாட்டா. இனி மாசம் மாசம் என்ன செலவு ஆகுதுன்னு சொல்லுங்க. இல்லியா அங்கேயே ஏதேனும் ஒரு ஹோம்ல வெச்சு பார்த்துக்கோங்க' என்று சொல்லி இருக்கிறார்கள். 'ஒருத்தரோட கல்யாணம் பண்ணி கொடுத்திட்டா உங்களுக்கு தான் சொந்தம். பிரச்சினை வந்தா எங்க கிட்ட தள்ளிவிடுவது சரியில்லை' என்று மனதில் இரக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார்கள். "அடப்பாவமே " என்றேன் நான். "ஆமாம் சார்....எங்க குடும்பத்துக்கு வாரிசை கொடுத்திருக்கா... எனக்கு ஒரே பையன் தான். அப்படி தூக்கி எறிஞ்சிட முடியுமா சார்? அவங்க என்ன காய்கறியா தூக்கி எறிய. எப்படியாவது வாழ துடிக்கிற உயிர். நடக்கமுடியாது பேச முடியாது ஆனா ரொம்ப சூட்டிகையானவ எல்லாத்தையும் புரிஞ்சுப்ப... என் மனைவி சாக கிடந்தப்ப மூணு மாசம் ஒரு தாயா பாத்துட்டுருந்தா... அந்த நன்றிகடனுக்கு செய்யறேன்னு நினைக்காதீங்க... மனிதம்ன என்னனு சொல்லி குடுத்தவ... உங்களுக்கு நியாபகம் இருக்கா.... நடு ரோட்டுல ஒரு பேருந்து எறிஞ்சப்ப அவ்வளவு உயிரை காப்பாத்திருக்கா... என். சி. சி. ல இருந்தப்ப அந்த பயிற்சியை நியாபகம் வெச்சு காப்பாத்திருக்கா... இவங்க எல்லாம் பூஜைக்கு உகந்த மனித மலர்கள் சார்... எப்படி வாடி கிடக்கா பாருங்க..." அவரின் கண்ணீர் என் கண்ணுக்குள்ளும் குளம் கட்ட வைத்தது. "அது சரி இப்ப எங்க போய்ட்டு இருக்கீங்க..." "இவளோட அம்மா இறந்துட்டாங்க... அதுக்கு போய்ட்டு இருக்கோம்..." எனக்கு சுர்ரென்று கோபம் ஏறியது. " அவங்க பொண்ணையே  அவங்க  திரும்பி பாக்கல... நீங்க எதுக்கு சார் போறீங்க... " ' சார் ஆயிரம் தான் இருந்தாலும் அவங்களோட அம்மா சார்... அங்க போயிட்டு அவங்களுக்கு முகமுழி கிடைக்க செய்யணும் இல்லையா... பத்து மாசம் சுமந்து பெத்தவங்க... அவங்க சூழ்நிலை அவங்க மறுத்தாங்க அதுக்கு என்ன சார் செய்ய முடியும்....' " சார் உண்மையிலேயே ஒரு வித்யாசமான பிறவி சார்"என்றேன் நான். "சரி நீங்க ஏதோ ஒரு விஷயம் கேக்கணும் என்று சொன்னீர்களே அது என்ன?" என்றார் அவர். " என் பொண்ணு ஒரு பெரிய விபத்துல மாட்டி... கோமாக்கு போய்ட்டாங்க சார்... என்னோட மருமகள் முடியாதுனு சொல்றா சார்... அங்க ஒரு தனியாக ஒரு வீடு எடுத்து அங்க நர்ஸ் போட்டு பார்த்துக்கலாம்னு நினைச்சோம் சார்.. எல்லாத்தையும்விட அன்பும் பாசமும் தான் முக்கியமானதுன்னு உணர்ந்துகிட்டேன்  சார்.... எவ்வளவு ஒரு பெரிய செய்தியை எனக்கு நீங்க சாதாரணமா கொடுத்திருக்கீங்க... " " அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார் மனிதனாகப் பிறந்தவனுக்கு மனிதம் வேணும்.  மனிதனும் தெய்வமாகணும்னு அவசியமில்லை.  மனிதனாக இருந்தாலே போதும் அதுதான் சார் எங்களோட கொள்கை.... பணம் காசு எத்தனை வேணாலும் சம்பாதிக்கலாம்... ஆனா அன்பு பாசம் இதோட சேர்ந்த தொடுதல் இருக்கே... உடம்பு சரியில்லாதவங்களுக்கு தான் சார் புரியும்... அது அவங்கள போய் சேரும் போது அது கொடுக்கிற ஒரு சந்தோஷம் வேறு எதிலும் இல்ல சார்... "   இருவரும் மீண்டும் இருக்கைக்கு வந்தோம். நான் என்னுடைய அலைபேசியை எடுத்தேன். அந்தப் பக்கம் என் மனைவிதான் பேசினாள். " சொல்லுங்க என்ன இந்த நேரத்துல? " என்றாள். " இல்ல காமாட்சி விஷயம் என்னன்னா... நம்ம பொண்ணு நம்ம கூட தான் இருப்பா... இருக்கிற இரண்டு வீட்டில் ஒரு வீட்டை உன் பையன் பேர்ல எழுதிட்டு... பொண்ணு கூடவே நம்ம தங்கிடலாம்... என்ன ஏதுன்னு நாளைக்கு காலைல வந்து உனக்கு விவரமா சொல்றேன்" "சரிங்க" என்று என் மனைவி சொன்னதும் நான் அந்த பெரியவர் பக்கம் திரும்பினேன். " என்ன சொல்லுங்க" என்றார் அவர். " சார் பயணங்களில் அப்படிங்கிறது என்னிக்குமே முடியவே முடியாது...  அது தொடர்ந்து கொண்டே இருக்கும்ன்றது தெரிஞ்ச விஷயம் சார்... ஆனா அந்தப் பயணங்கள் மூலம் நமக்குக் கிடைக்கிற நட்பு, செய்திகள், இது எப்பவுமே நமக்குள்ள  பயணிசுக்கிட்டே கொண்டே இருக்கும் சார்.. அதுக்கு நீங்க ஒரு பெரிய உதாரணம் சார்... " கொள்ளிடம் பாலம் வந்துவிட்டது. "நீங்க எங்க சார் இறங்கணும்?" என்றேன். "ஸ்ரீரங்கம் சார்... " " நானும்கூட அங்க தான்  சார் இறங்கணும்.. உங்களுக்கு ஏதாவது உதவி வேணுமா சார்... " " பரவாயில்ல சார்.. கேட்டதே போதும்..." ' ஆனால் நீங்க எனக்கு பெரிய உதவி செய்து இருக்கீங்க சார்... நன்றி... " என்று நான் சொன்னதும் அவர் என்னை பார்த்தார். என் கைகளை அவர் கைகளில் வைத்துக் கொண்டார். " நல்லதே நடக்கும் சார் கவலைப்படாதீங்க உங்க பொண்ணு சீக்கிரமே கோமாவில் இருந்து வெளியில வந்துடுவாங்க... அரங்கன் அருள் இருக்க உங்களுக்கு என்ன கவலை? " என்றார். ராஜகோபுரம் நெருங்க கையெடுத்து கும்பிட்டேன். அவரையும் சேர்த்துத்தான். &&&&&&  

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.