logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

நந்தலாலா

சிறுகதை வரிசை எண் # 166


பயணத்தில் ஒரு பாடம்! நேரம் இரவு மணி : 8:35. நாள் : சனிக்கிழமை. கோவையின் முக்கிய பகுதியின் சாலையில் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தது அந்தப் பேருந்து. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கிட்டத்தட்ட அதில் முண்டியடித்து பயணித்துக் கொண்டிருந்த பெரும்பாலான பயணிகள் முகக் கவசம் அணிந்து இருந்தனர். அப்படி அணிந்து இருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் முக கவசத்தை முகவாய்க்கு அணிவித்து இருந்தனர். மெதுவாகச் சென்றாலும் அலுங்கி குலுங்கி அசத்தலாக சென்று கொண்டு இருந்தது அந்த பேருந்து. ஆண் ,பெண், வயதானவர், குழந்தைகள் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் ஒருவரை ஒருவர் நெருக்கித் தள்ளினாலும் தங்களால் முடிந்த அளவு பிறரை தொந்தரவு செய்யாமல் பயணித்தனர் பயணிகள். எப்போதும் கூட்டமான பேருந்தில் நடக்கும் காட்சிகளில் ஒன்றாக ஒரு இளம் பெண் இன்னொரு நடுத்தர வயதுப் பெண்ணை இடிக்க அவரோ _ “ தள்ளி நில்லும்மா. சும்மா வந்து வந்து இடிச்சிக்கிட்டு “ என எரிச்சல் பட்டார். இவர்கள் அனைவருக்கும் நடுவே ஜெகஜ்ஜால கில்லாடியாக ஊர்ந்து பயணச் சீட்டுக்களை விநியோகித்து கொண்டு இருந்தார் நடத்துநர் . அது ஒரு தனியார் பேருந்து. கூட்டம் காரணமாக அதன் ஓட்டுனரும் நடத்துநரும் சற்று சிரமப்பட்டாலும் அவர்களின் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. இதில் அவர்களுக்கும் லாபம் அல்லவா? காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து ஒரு அரசு பேருந்து இவர்கள் குறி வைத்த பயணிகளை அள்ளிக் கொண்டது. அதில் கடுப்பாக இருந்தபோதுதான் ஓட்டுநர் தனது திட்டப்படி எப்போதும் போகும் பாதையை கொஞ்சம் மாற்றிப் போனார். அதற்காக காவல் துறை கையில் சிக்காமல் வரப் போராடி இருந்தார். “ சாய்பாபா கோயில் தாண்டும் போது வண்டி நிறைய ஆளோட ஜம்முனு வருவேன் பாரு “ என தனது தோழர் ஒருவருக்கு ஃபோனில் பேசியவர் அப்படியே நடத்திக் காட்டிக் கொண்டு இருக்கிறார். இதோ இப்போதே பேருந்து நிறைந்து போனதே! இன்னும் அடுத்தடுத்து இறங்குபவர்களுக்கு ஏற்ப ஆட்களை நிறுத்தங்களில் கூவி அழைக்க வேண்டும். “ டவுன் ஹால் பூ மார்க்கேட், சாய்பாபா காலனி… ஏறு …ஏறு “ நடத்துநர் கத்த அவருக்கு பின் பாட்டாக பேருந்தில் பாடல் ஒலித்தது. “ ஏறு.. ஏறு… ஏறு.. ஏறு .. நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு.. “ “ அண்ணா! பாட்டை நிறுத்துண்ணா !” ஓட்டுனரை சத்தமாகக் கடிந்து கொண்டார் நடத்துநர். தனது அலைபேசி மூலம் ஒலிப் பெருக்கிக் கொண்டு இருந்த பாடல்களை உடனே நிறுத்தினார் ஓட்டுநர். வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் உடன் பணிபுரிபவர்களுடன் இணக்கமாக இருப்பது அல்லது இனக்கமானவர்கள் உடன் இணைந்து பணி புரிவது நல்லது. அப்படி இல்லாமல் போனால் என்னவாகும் என்பதற்கு மகாபாரத சல்லியனையும் கர்ணனையும் உதாரணமாகக் கொள்ளலாம். பாட்டுச் சத்தம் நின்றதும் ஒரு பாவையின் குரல் ஓங்கி ஒலித்தது. இருபதிலிருந்து இருபத்தொரு வயது இருக்கலாம். அதற்கு மேலும் கீழும் நிச்சயம் இருக்காது. அந்தப் பெண்ணைச் சுற்றி இருந்த அனைவரின் கவனமும் அவள் மேல் குவிந்தது. பேருந்தின் பளிரிட்ட விளக்கொளியில் கூட அவள் அணிந்திருந்த உடை சாதாரணமாக இருந்தது. கூட்டத்தில் அவளும் நின்று கொண்டு இருந்தாள். வலது தோளில் நீளமாக ஜோல்னா பை வைத்து இருந்தாள். சுற்றி இருந்தவர்கள் தன்னைப் பார்ப்பதை ஒரு கர்வத்துடன் கவனித்துக் கொண்டே அலை பேசியில் பேச்சைத் தொடர்ந்தாள். அவள்! அந்த நடுத்தர வயதுப் பெண்ணை இடித்து அவரிடம் திட்டு வாங்கியவள். “ நான் சொன்னதை செஞ்சியா? வர வர திமிர் கூடிட்டே போகுது உனக்கு. என்ன? கேக்க மாட்டான்னு நினைச்சியா? ரொம்ப ஆடாதடா “ யாரை எச்சரிக்கிறார் இவள்? அதுவும் ஓடும் பேருந்தில் அனைவர் முன்னும்? நடுத்தர வயது இவளை அலட்சியமாக பார்க்க இவள் இன்னும் பொங்கினாள் பேசியில். “ உன் கிட்ட நான் சொல்ற எதையும் செய்றதில்லை நீ. அன்னிக்கு காஸ் ஸ்டவ் வாங்க சொன்னேனே வாங்குனியா? பேசாத! நான் கேட்ட சுடியை ஸ்டவ் வாங்க வச்சிருந்த காசுக்கு வாங்கி குடுத்தா சரியா போச்சா? சுடியில சோறு போங்க முடியுமா? அதை விடு. வீட்டுக்கு முக்கியமா தேவை! டிவி வாங்க சொன்னேனே? போய் பார்த்தியா? ஷோ ரூம் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு நீ அதை செய்யலை. “ இளசு இங்கே கொதிக்க அடுத்த நிறுத்தம் வந்து விட பயணிகள் சிலர் இறங்கினார்கள். அதில் கையில் இருந்த அலைபேசியை எடுக்காமல் சுற்றி இவளை ‘ ஆ' எனப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களை இடித்துக் கொண்டு காலியான ஒரு இருக்கையில் அமர்ந்தாள் யுவதி. ‘ இப்போ ஒருத்தருக்கும் வலிக்கலையாக்கும் ‘ மனதிற்குள் நக்கலடித்துக் கொண்டாள் இளைஞி. தன் பேச்சை அவர்கள் ஒட்டுக் கேட்பது மமதையைத் தந்தது அவளுக்கு. பின்னே? அவளுக்காக ஒருவன் தவம் கிடக்கிறான். இங்கே இந்த இத்துப் போன கிழடு இவளை ‘இடிக்கதே ' என்று தள்ளி விடுகிறது! யாரிடம்? இதோ! தனது ஆளுமையை தெரிந்து கொண்டு வாயை மூடி விட்டதுகள்! நல்லது. தொடர்ந்து இந்தப் பயணம் முடியும் வரை இவர்களை வாயைத் திறந்து படியே வைத்திருக்க வேண்டும். யுவதி முடிவு செய்து கொண்டு உள்ளுக்குள் குதூகலித்தாள். “ உன்னை ஃபேன் வாங்கச் சொன்னேனே என்னாச்சு?” மற்பக்கம் கூறிய மொழியில் இவள் விழி வெறிகொண்டு விரிந்தது. “ என்னது ஃபேன் வேண்டாமா? யாரைக் கேட்டு முடிவு பண்ண? எனக்கு ஃபேன் இல்லாம இருக்க முடியாதுன்னு தெரியும்ல உனக்கு? பின்ன என்ன தைரியத்தில் நீ என்கிட்ட இப்படி சொல்லுவ? பயம் விட்டுப் போச்சா?” கூட்டத்தினர் இவளிடம் இப்படி பாட்டு வாங்கும் நபர் யார் என ஊகித்தாலும் தலையிடவில்லை. ‘ தவறாக ஒன்றுமில்லை ‘ என்றாலோ அல்லது ‘ இதைக் கேட்க நீ யார்? ‘ என்றாலோ தங்களுக்கு தர்மசங்கடம் ஆகிவிடும் என்பதை உணர்ந்து அமைதி காத்தனர். “ சரி அதையும் விடு. என் சம்பளத்தில் நான் உனக்கு வாங்கித் தர்றேன். எப்டியாவா? உனக்கு நான் வாங்கிப் போட்டதே இல்ல பாரு? இப்பவும் வாங்கிப் போடுறேன். ஆமா? அன்னிக்கு ஐயாயிரம் உன் பிரெண்டுக்கு வேணும்னு வாங்கிட்டுப் போனியே? அடுத்த வாரம் தர்றேன்னு சொன்ன. சொல்லிட்டு ஒரு வாரம் ஆளைக் காணும். போனிலேயே கடலை போட்டுட்டு இருந்த என்கிட்ட. எப்போ தர்ற?” ‘ ஓ! இவள் பண பலம் மிக்கவள் போலவே?’ என்பதாக மற்றவர் ஆச்சரியப்பட்டாலும் அதை வெளிக்காட்டாமல் நின்றனர். அவர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் சங்கடமாக பார்த்துக் கொண்டனர். ‘ என்ன இந்தப் பெண் இப்படிப் பேசுகிறது?’ என்ற வார்த்தைகள் அவர்கள் முகங்களில் ஒட்டி இருந்தது. அவள் தொடர்ந்தாள். “ என்ன பேச்சு மூச்சையே காணோம்? அட இது எல்லாத்தையும் விட்டுடறேன். உன்னை நமக்கு ஒரு வீடு பாக்க சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு? இன்னும் ஒரு மாதத்துக்குள்ள வீட்டைப் பாருன்னு நான் உன்கிட்ட சொல்லி நேத்தோட ஒரு மாசம் ஆச்சு. நான் உனக்கு குடுத்த டைம் முடிஞ்சு போச்சு! குறுக்கப் பேசாத! இந்த லட்சணத்தில் அடுத்த மாசம் நமக்கு ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல கல்யாணம் வேற!?” “ அதுக்காவது உன் சர்டிஃபிகேட் குடு. அந்த வேலையாவது உருப்படியா செய்யு. என்னது? சர்டிஃபிகேட் மிஸ் ஆகிடுச்சா? போலீஸ் ஸ்டேஷன்ல எழுதிக் குடுத்தியா? இல்லையா? சரி விடு. கல்யாணத்தைப் பத்தி அப்புறம் பேசலாம்.” யுவதி பெருந்தன்மை என நினைத்துப் பேசினாள். எவனோ ஒருவன் செய்யும் ஏமாற்று இதிலேயே மற்றவர்களுக்கு புரிந்தாலும் பேசா மடந்தைகளாக அமைதி காத்தனர். “ஏது? பெரிய வீடா பாக்கப் போறியா? ஓ! சின்ன வீட்டை திவ்வியமா பார்த்திட்டே! அடுத்து பெரிய வீடு ஒண்ணுதான் குறை .” வாய் ஓயாமல் இவள் பேச எதிர்முன் காத்த பொறுமை எதனால் என்று பச்சையாகத் தெரிந்தது. அடுத்த அவள் பேச்சு அதை உறுதிப்படுத்தியது. தெனாவெட்டாக பேசிக் கொண்டு இருந்தவள் உடல் மொழி சட்டென மாறியது. பேச்சின் சத்த அளவும் குறைந்து குழைந்தது. “ என்ன? அங்க வரணுமா? எதுக்கு? இப்பவா? நாளைக்கு லீவ் தான்.ஆனா.. நீ சரிப்பட மாட்ட! அங்கலாம் வர மாட்டேன். “ இதுவரை ஒலித்த கம்பீர குரல் மாறி மெல்லிய வெட்கத்துடன் அவள் பேச _ கேட்டுக் கொண்டு இருந்த தாய்மார்களுக்கு நெஞ்சம் பதறியது. தன்னை இடித்துவிட்டு இப்போது இளக்கரமாகப் பார்த்துக் கொண்டு பேசும் யுவதியை பரிதாபத்துடன் பார்த்தார் நடுத்தரம். “ பாப்பா. ரொம்ப அர்ஜென்ட் பாப்பா. ஒரு ஃபோன் பண்ணிக் குடு பாப்பா “ என யுவதியிடம் பேச்சை மீண்டும் ஆரம்பித்தார் அவர். யுவதியின் கண்களில் மின்னல் வெட்டியது. ‘ ஆஹா! எனக்கு இருக்கும் மரியாதை புரிந்து இருக்கும் ‘ 'அலைபேசியை தர முடியாது ' என்று சொல்ல முடியாத படி அதில் இவ்வளவு நேரம் பேசி விட்டாள். எனவே அலை பேசி உபயோகிக்கத்தக்க நிலையில் உள்ளது உறுதியாகத் தெரிந்துவிட்டபடியினால் வேறு வழி இன்றி _ “ நம்பர் சொல்லுங்க மா “என்றாள் சிறியவள். தொலை பேசி எண் சொன்னவர் மறுமுனை எடுக்கப் பட்டதும் பாய்ந்தார். “ அடேய் துப்புக் கெட்டவனே! புள்ளையாடா வளத்து வச்சிருக்க? எவன் என்ன சொன்னாலும் நம்பிருவாளா? வயசுப் பொண்ணு எங்க போவுது எங்க வருதுன்னு பாக்க மாட்டியா? அவளுக்குத்தான் அறிவு இல்லன்னா உன் புத்தி பொங்கல் தின்னப் போச்சா? நாளைக்கு எவனையோ இழுத்துட்டு ஒடுனா என்னடா பண்ணுவ? அட இழுத்துட்டு போயி நல்லா இருந்தா பரவாயில்ல. கருமம் உள்ளதும் போச்சுன்னு திரும்பி வந்தா என்னடா பண்ணுவ? பொண்ணு வேணும்னா துணிஞ்சு நிக்கணும்டா. அப்படி இல்லாதவன் பொண்ணை எப்டிடா நல்லா வச்சுக்குவான். இப்பவே இவகிட்ட காசு வாங்குறாங்கிற. இன்னும் கல்யாணம் ஆனா மொட்டை அடிச்சிடுவான் உன் பொண்ணை. ஏதோ பக்கத்து வீட்டுல இருந்த பாவத்துக்கு சொல்றேன். கேட்டா கேளு. இல்லாட்டி போ. கடைசியாக சொல்றேன். உன் பொண்ணு அவனை நம்பி போனா உருப்படியா திரும்பி வருவாளான்னு யோசிச்சிக்க. வைக்கிறேன். இது இங்க ஒரு பாப்பாவோட போனு. நல்ல தங்கமான புள்ள. ஃபோன் கேட்டதும் குடுத்திருச்சு. அதுக்கு ஆள் தராதரம் தெரியுது. யார் யார் எப்படி எப்படின்னு. உன் பொண்ணும் இருக்கே? சரி சரி. நான் வைக்கிறேன். இந்தா தாயி. ரொம்ப தேங்க்ஸ் தங்கம் “ பேருந்தின் இறுதி நிறுத்தம் வந்து இருந்தது. யுவதியின் முகத்தில் குழப்பம் படர்ந்து இருந்தது. ‘ இனி ஆண்டவன் விட்ட வழி! ' நடுத்தரம் தன் எதிர் முனையில் காரணம் தெரியாமல் மனைவியின் குரல் கேட்ட ஒரே காரணத்திற்காக தொடர்ந்து இவர் கூறிய அறிவுரைகளைக் கேட்ட தன் கணவனை நினைத்து சிரித்துக் கொண்டார். ‘ பாவம் வெள்ளந்தியான மனுசன்! போய் கருவாடு சுட்டு பழைய கஞ்சி ஊத்திக் குடுத்தா திட்டுனதை மறந்துட்டு சுத்தி வருவாரு ' வீடு நோக்கி எட்டி நடை போட்டார் நடுத்தரம். அதற்கு எதிர்த்த திசையில் மீண்டும் ஒலித்த முன்னாள் காதலனின் அலைபேசி அழைப்பை நிராகரித்து விட்டு தனது இல்லம் நோக்கி நடக்கத் துவங்கினாள் யுவதி.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.