logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

ஆதர்ஷ்ஜி

சிறுகதை வரிசை எண் # 169


தந்தையா ? தாரமா ?      (ஆதர்ஷ்ஜி, திருநெல்வேலி)  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ என்னடாஇவன் அதரப் பழசான தலைப்பில் ஒரு கதை எழுதுகிறான் என நீங்கள் நினைக்கக் கூடும். முழுதும் படித்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.   அலைபேசி வாழ்க்கையை ஆக்கிரமிக்காத காலம் அது. பெங்களூரின் முன்னிரவுப் பனி மனதின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியது.. இரண்டு நாட்கள் விடுமுறை என்பதோடு நானும் அலுவலகம் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்பதே உற்சாகத்திற்குக்காரணம் . கடந்த சில மாதங்கள் வங்கியின்  கோர் பேங்கிங் சிஸ்டம் சம்பந்தமான ப்ராஜெக்ட் கெடுபிடியாக நடந்துகொண்டிருந்தது. வார விடுமுறை என்பது கூட இல்லாமல் ராப்பகலாய் வேலைகள். உடம்பின்சோர்வைப் பற்றிக் கவலைப் படக்கூட நேரமின்றி உழைப்பு. எனக்கு மட்டுமல்லாது வங்கியில் என் டீமில் இருந்தவர்களுக்கும், ஆரக்கிள், ஐபிஎம் என கூடவே ப்ரொஜெக்ட்டில் பயணித்த பிற நிறுவன ஊழியர்களுக்கும். "டெட் லைன்ஸ்" என்பது சாவைப் போலத் துரத்தியது. இது எதிர்பாராத 2நாட்கள் இடைவெளி.  "அப்பாடா 2 நாட்கள் , 48 மணி நேரம் இந்த கட்டிடம் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது. "  மணி 8 தாண்டிவிட்டது. கிளம்ப வேண்டியதுதான் என நினைத்து எனது கேபினிலிருந்து இறங்கினேன். போவதற்கு முன் அக்ஷய் ஜோஷியிடம் விவசாயக் கடன் பற்றிய அவனதுசில சந்தேகங்களை விளக்கிப் புரிய வைக்கவேண்டும். அக்ஷய் என்னில் நான்கு வயது இளையவன், திருமணமாகாதவன். ஆரக்கிள் நிறுவனத்தில் வேலை. ஜாவா ப்ரோக்ராமிங்கில் எத்தனுக்கும் எத்தன்.   விவசாயக்கடன்களுக்கு நம் நாட்டில் இருக்கும் விதிமுறைகள் , பெரும் குழப்பமானவை. அக்ஷயிடம் விளக்கிவிட்டால் திங்களன்று காலை ப்ரோக்ராம் ரெடியாக இருக்கும் , டெஸ்டிங் ஆரம்பித்துவிடலாம். மூணாவது மாடியில் இருந்த அக்ஷயிடம் 15 நிமிடங்கள்செலவழித்து விளக்கினேன்.   "சார் .... அபி கிளாரிட்டி ஏக்தம் பக்கா ... ஆப்  ஜாயியே ...மண்டே இட் வில் பிரெடி ...100%" என்றான் உற்சாகமாய்.  நான்பேசி முடித்ததும் நெருங்கிய நண்பர், சக ஊழியர்  ராஜேஷ் வந்து கன்னடத்தில் என்னிடம் "ஹோகோனா ? லேட்டாயித்து ... பன்னிஹாகே ஒந்து காபி குடியோனா ..."(போலாமா ? லேட்டாயிடுச்சு ... வாங்கஅப்படியே ஒரு காபி குடிக்கலாம் ) என்றார்.   காபிஎன்ற சொல்லே எனக்கு உற்சாகம் தரும் அதுவும் ராஜேஷ் போன்ற நண்பர்களோடு காபிகுடிப்பது நான் ரொம்பவே விரும்பும் விஷயம்.  "ஆயித்து பன்னி "  (ஆகட்டும்வாங்க ) " என்றேன்.   எம் ஜிரோட்டில் அணில் கும்ப்ளே சர்க்கிள் அருகில், சேஷ மஹால் ஹோட்டலில் இருவரும் அமர்ந்தோம். தரமான பில்டர் காபிபெங்களூரில் பெரும்பாலான உணவகங்களில் கிடைக்கும். சேஷ மஹால் எனக்கும் ராஜேஷுக்கும்பிடித்த ஹோட்டல். இருவரும் காபியை ருசிக்க ராஜேஷ் தமிழுக்குத் தாவினார்   "மேனேஜர் ப்ரோமோஷன் ரிசல்ட் இன்னைக்கு வரலாம்னு நினைச்சேன் ...ஆனா வரலை ஏன்னு தெரியல ..." "ஆமா ராஜேஷ் ... நானும் இன்னிக்கி எதிர்பார்த்தேன்...."  நானும் மேனேஜராக பதவி உயர்வு பெற பரிட்சை நேர்முகத் தேர்வு எல்லாம் நடந்து முடிவுகளுக்காககாத்திருந்தேன். சில உரையாடல்களுக்குப் பின் கிளம்பினோம். பைக்கில் நகர்ந்தேன். பெரிதாய் சாலையில் நெருக்கடி இல்லை. பிரிகேட் ரோடு வார இறுதியைக் கொண்டாட ஆரம்பித்து இருந்தது,மெலிதான தென்றல் உடல் தழுவ நினைவுகள் பின்னோக்கிப் பயணித்தது..."மேனேஜர் " இந்த ஒற்றைச் சொல் மனதில் கட்டவிழ்க்கும் நினைவு அலைகள் எத்தனை எத்தனை ?  வங்கியில்வேலைக்குச் சேரவதற்கு முன் நான் பொதுப் பணித்துறையில் சில மாதங்கள் வேலைபார்த்தேன். ராஜினாமா செய்துவிட்டு வங்கியில் சேர்ந்த போது அப்பாவிடம் யாரோ கேட்டார்கள்.  "எதுக்கு கவர்மெண்ட் வேலையைப்போயி விடுதான்?"  "இங்க PWDல ப்ரோமோஷனுக்கு அதிகவாய்ப்பில்லையாம்...அதான் ,  பேங்குன்னா ரிட்டையர் ஆகுறதுக்குள்ள மேனேஜர்ஆயிருவான் !"  அப்பாவைப்பொறுத்தவரை மேனேஜர் என்பதே வங்கியில் அதிகபட்ச பதவி. வங்கியில் திருப்பூர் அருகே கிளையில் முதல் முதலாய் பணியில் சேர்க்க, கூடவே வந்தார். ஜங்க்ஷனில் திரையரங்கில் வேலைபார்த்த அப்பா, ரெண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு என் கூடவே இருந்துவிட்டு வேறு வழியில்லாமல் ஊருக்குச் சென்றார்.  நான்நண்பர்கள் உதவியோடு சங்கீதா தியேட்டர் பக்கம் ரூம் பார்த்து புது வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பழகிக் கொண்டிருந்தேன். அப்போது நெல்லையில் என் வீட்டில் போன்வசதியில்லை . நான் கடிதம் எழுதவும் இல்லை. பத்து நாட்களாய் என்னைப் பற்றி எந்தத் தகவலையும் அறியாத அப்பா பதறிப் போய் அம்மாவையும் அழைத்துக் கொண்டு வங்கிக்கே வந்துவிட்டார். எனக்கு அப்போதுதான் நான் செய்த முட்டாள்தனம் உரைத்தது.  அப்பா "என்ன வேலையிருந்தாலும் ஒரு கடுதாசிபோட்ருப்பா "  என்றார்.  நான்தலையசைத்தேன்.  அன்று முதல் மாதம் மூன்று , நான்கு கடிதங்கள் எழுதுவேன். அப்பா வேலை செய்த திரையரங்கு ஜங்க்ஷனில் பாலத்தின் அருகே இருந்தது. அப்பாவின் முகவரிக்கு எழுதிய கடிதம் வெளிர்நீல நிறத் தூதுவனாய் வீட்டில் எல்லோருக்கும் என் திருப்பூர் வாழ்வை சித்தரிக்கும்.  சிலமாதங்கள் கழித்து ஊருக்கு வந்தேன்.அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது அப்பாகேட்டுக் கொண்டார்.   "யப்பா ... லெட்டர் போடும்போது அட்ரெஸ்ல என் பேரையும் ,தியேட்டர் அட்ரெஸ்ஸும் எழுதினாப் போதும்ப்பா ....மேனேஜர்னு போடவேண்டாம் ...."    நான்மனதில் யோசனைகளோடு சரிப்பா என்றேன். அப்பா தியேட்டரில் மேனேஜர் இல்லையா ? இல்லை அதற்கும் மேலே. மனது நினைவுச் சங்கிலியின் அடுத்த கண்ணியைப் பிடித்துக் கொண்டது. அப்பா முன்பு பகிர்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.  நான்பிறந்த போது அந்தத் தியேட்டர் கட்டினார்கள் எனவும் அப்பா அங்கே முதல் நாளில் இருந்து பணியில் இருப்பவர் என்றும் தெரியும். வழக்கமாக இரவு 7 மணி ஆகிவிட்டால் தரை , பெஞ்சு ,சேர் , சோபா என எல்லா டிக்கெட் கவுண்டர்களில்இருந்தும் வசூல் பணமும் மீதமுள்ள டிக்கட்டுகளும் அப்பாவிடம் வரும். அப்பா கணக்கைசரிபார்த்து பனாமா அல்லது கோல்ட் பிளேக் சிகரெட் அட்டையில் விவரங்கள் எழுதிபணத்தின் மீது வைத்து ரப்பர் சுற்றி முதலாளியிடம் கொடுப்பார்.  ஒருநாள் இரவு தியேட்டர் அலுவலகதிற்கு திடீரென பெரிய முதலாளியின்மகன் தயாள் வந்தார். அவர் கல்லூரி மாணவர்.  அப்பா " என்ன தம்பி ... அப்பாவைப் பாக்கவந்தியளா ? காப்பி சொல்லவா?"  என்றார். தயாள் ,"அண்ணாச்சி, உங்களைப் பாக்கத்தான்வந்தேன்..ஒரு உபகாரம் ஆவணும் !" "சொல்லுங்க தம்பி " " எனக்கு புது பைக் வாங்கித்தர அப்பாட்ட நீங்கசொல்லணும் ...."  அப்பாஇதை எதிர்பார்க்கவில்லை. அமைதி காத்தார். கடும் உழைப்பும் நேர்மையும் அப்பாவைபெரிய முதலாளி குடும்பத்தில் ஒருவர் போல நம்பிக்கையைப் பெற்றுத் தந்திருந்தன.அதனாலோ என்னவோ பெரிய முதலாளியின் தம்பி சின்னவருக்கு அப்பா மேல் அவ்வப்போதுஎரிச்சல் வருவதுண்டு.   "அப்பா நீங்க சொன்னா கேப்பாக..." தயாள் கெஞ்சினார்.  வேறுவழியில்லை , பேசித்தான் ஆகவேண்டும். வெளியேஜெனெரேட்டர் அறை அருகில் வேப்ப மரத்தின் கீழே இளைப்பாறிக் கொண்டிருந்த பெரியமுதலாளியிடம் அப்பா செல்ல ,  பின்னால் தள்ளி தயாள் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்.   "ஐயா , ...." "என்ன கிஷ்ணா .... " "தயாள் தம்பி பைக் வேணும்னு கேக்காங்க ... வாங்கிக்கொடுக்கலாமே ... காலேஜு வேற போறாரு " "அவனுக்கு நீ வேற சிபாரிசா கிஷ்ணா .... ஏற்கனவேபழைய பைக்கைத்  தொலைச்சுட்டான் ... திரும்பவும் வாங்கிக் குடுத்து தொலைச்சான்னா உன் சம்பளத்துல புடிப்பேன்பரவால்லையா  ..." என்றார் அபூர்வமானமுறுவலோடு. "சரி முதலாளி ..." அப்பாவும் முறுவலோடு பதில்சொன்னார்.   அடுத்தவாரம் புது கருப்பு யமஹா RX100 ல் தயாள் உற்சாகமாக வந்து இறங்கி அப்பாவிடம் சாந்தி ஸ்வீட்டில் வாங்கியஇனிப்புகளைக் குடுத்துவிட்டுப் போனார். அந்ததியேட்டரைப் பொறுத்தவரை அப்பா மேனேஜருக்கும் பல படி மேலே. பிறகு ஏன் கடிதத்தின் முகவரியில் அப்படி போடக்கூடாது எனச்சொல்கிறார் ? அப்பாவிடம் கேட்கத் துணிவில்லை. பொதுவாக அப்பாவிடம் கேட்க முடியாத விஷயங்களுக்கு அம்மாக்கள்தானே விடையளிப்பார்கள் ?  "நீ எழுதின லெட்டரைப் பாத்துட்டு சின்ன மொதலாளிதான்மேனேஜர்னுலாம் போடக்கூடாதுன்னு சொல்லி கண்டிச்சாராம் ..."   எனக்குரத்தம் சூடேறியது. சத்யா படத்தில் வரும் கமல் போல் நேரே போய் அந்த சின்ன முதலாளியைதூக்கிப் போட்டு நாலு சாத்து சாத்தலாம் எனத் தோன்றியது . வளர்ப்பும் குணமும்  அப்படியில்லை. ரௌத்ரம்  மனதிற்குள்புதைந்துவிட்டது.   காலம்ஓடிட , விதியும் மதியும் பல திசைகளுக்கு என்னை நகர்த்தி , ஆஃபீசராக பதவி உயர்வு பெற்று பெங்களூர்மாற்றலாகி வந்தேன்.  உழைப்புக்கு நல்ல மதிப்பைபெங்களூர் தந்தது. முதல் முறை மேனேஜர் பதவி உயர்வுக்குத் தகுதி வந்தபோது எல்லோரும் உனக்கு கண்டிப்பாகக் கிடைக்கும் என்றார்கள். பெங்களூரிலிந்து போக விருப்பமில்லை.மேனேஜர் பதவி உயர்வு வேண்டாம் என யோசனை வந்தது.  "ரிட்டையர் ஆகிறதுக்குள்ள மேனேஜர் ஆயிருவான் "அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.  அப்பாவுக்காகமேனேஜர் ஆக வேண்டும் எனத் தோன்றியது. பதவி உயர்வு பெற்றதும் முதலில் அப்பாவிடம்தான் சொல்லவேண்டும் என ஆசை வந்தது.  அதையே சின்ன முதலாளி முன் சொல்வது போல கற்பனை செய்து கொண்டேன்.  திட்டம்போட்டு நண்பர்களோடு வெறித்தனமாக பரிட்சைக்குப் படித்தேன். என் மனதுக்கு இனிய இணையாள் , மணிக்கு ஒருமுறை காப்பி , சுண்டல் என தயார் செய்து கொடுத்து படிப்பை மேலும் சுவாரசியம் ஆக்கினாள். பரீட்சை,நேர்முகத் தேர்வு முடிந்ததும் , DGM "உனக்கு 100% கிடைக்கும்" என்றார்.   பதவி உயர்வின் இறுதி முடிவு வரவேண்டிய வேளையில்தான் நான் புதிய சிக்கலை உணர்ந்தேன். பதவிஉயர்வு பெற்றதும் முதன்முதலில் அப்பாவிடம் சொல்ல நான் ஆசைப்பட்டேன் .  அதே நேரத்தில் என் மனைவிக்கு இது போன்ற விஷயங்களை கணவர்முதலில் தன்னிடம் சொல்லவேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்குமதானே..அது மனைவிகளின் இயல்பும் கூட .  அப்பாதிருநெல்வேலியில் இருந்தார் , நான் மனைவி குழந்தையோடு பெங்களூரில். யாரிடம் முதலில் சொல்ல ? மனது அப்பாவிடம் சொல்லவேண்டும் என்றும் ஆசைப்பட்டது ... அதேநேரத்தில் மனைவியின் எதிர்பார்ப்பும் நிறைவேற வேண்டும் என ஆசைப்பட்டது. ‘ஏன் ரிசல்ட் வரவில்லை இன்னும் ?’ குழப்பம் மேலிட மடிவாளா ஐயப்பன் கோவில் அருகே சந்தில் புகுந்து BTM லேஅவுட்டில் இருக்கும் என் வீட்டை நோக்கி பைக்கை செலுத்தினேன்.  பேங்க் ஆஃபீஸ்ர்ஸ் காலனி தெருக்களில் குல்மோஹர் மரங்கள் பூக்களைஉதிர்த்திருந்தன. அங்கங்கே நாய்கள் குரைக்கும் சப்தம் எழுந்து அடங்கியது.  வீட்டருகே செண்பக மரங்கள் பூத்து மணம் வீசின. வண்டியை நிறுத்திவிட்டு அழைப்பு மணியைஅழுத்தினேன். கதவைத் திறந்த என் மனைவி  "மேனேஜர் ஆயிட்டீங்களாமே .... கங்கிராட்ஸ் ...சூப்பர்"  எனக்கூறி வியக்க வைத்தாள். அவள் முகத்தில் பெருமிதம் ... ஆயிரம் வாட்ஸ் பல்பைப் போல பிரகாசமாக எரிந்தது.   நடந்தது இதுதான்.  நான் கிளம்பி 15 நிமிடங்களில் ரிசல்ட் வந்திருக்கிறது. என்னிடம் மொபைல் கிடையாது. விஷயம்அறிந்த எனது நெருங்கிய நண்பர் குபேரன் , வீட்டுக்கு போன்செய்து சொல்லியிருக்கிறார்.  நான்மேனேஜர் ஆன செய்தியை வீட்டில் இருந்த எனது மனைவி சொல்லிட அறிந்து கொண்டேன்.   ஓடிப்போய்போனை எடுத்தேன்... 0462 2500701..வீட்டுக்கு போன்செய்தேன். தம்பி எடுத்தான். அப்பாவிடம் குடு என்று கேட்டு விசயத்தைச் சொன்னேன்.   "மேனேஜர்ஆயிட்டானாம் "   அப்பா அம்மாவிடம் மகிழ்ச்சியோடு சொல்வது எனக்குக் கேட்டது. திருச்செந்தூர் முருகனுக்கு நன்றி சொன்னேன்.  தந்தையா ? தாரமா என்ற எனது சிக்கலுக்கு இப்படி ஒரு அற்புதமான தீர்வு கிடைக்காமல் போயிருந்தால் , நான் இந்தக் கதையை எழுதி இருக்கவே மாட்டேனோ என்னவோ ? (--ஆதர்ஷ்ஜி, திருநெல்வேலி)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.