logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

ரம்யாமுத்துபாபு

சிறுகதை வரிசை எண் # 163


கருப்பட்டி மிட்டாய் ***************************** விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஒலிபெருக்கியில் இசைத்த சீர்காழி ஐயாவின் கணீர் குரல் மந்தியூர் கிராம மக்களை எழுப்பி விட்டது. அங்கு மாரியம்மன் கோயில் கொடை வருடத்தில் சித்திரை மாதம் வெகுபிரம்மாதமாக நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழாவின் இறுதி மூன்று நாளும் களைகட்டும். எங்கே போயிருந்தார்கள் இத்தனை சனங்களும் என்று தோன்றுமளவிற்கு ஊரில் கூட்டம் மொய்க்கும். இராட்டினங்கள், பஞ்சுமிட்டாய் ,வளையல் கடை, பலூன்காரர், ஐஸ் வண்டி இப்படி அனைத்து வகை அம்சங்களும் அங்கே இடம் பெறும். முக்கியமாக ஒரு பெரிய இரும்பு வாணலியில் தளும்ப தளும்ப எண்ணெய் ஊற்றி ஏற்கனவே தயாராக இருக்கும் மாவை அடியில் ஓட்டை போட்ட ஒரு எவர் சில்வர் செம்பில் அடைத்து வட்ட வட்டமாக சட்டி முழுவதும் கையைச் சுற்றிச் சுற்றி எண்ணெயில் பொரித்தெடுத்து பின் அப்படியே அதை கருப்பட்டிபாகில் போட்டு சுட சுட விற்பனையாகும் கருப்பட்டி மிட்டாயைப் பார்க்கும்போதே தின்றே தீர வேண்டும் என்ற எண்ணம் மனதில் வந்துவிடும் அனைவருக்கும். பேச்சியம்மாள் மட்டும் விதிவிலக்கா என்ன?!. எட்டு வயதான பேச்சியம்மாளும் கருப்பட்டி மிட்டாய் தின்ன ஆவலோடு காத்திருந்தாள். துப்புரவுத் தொழிலாளியான அவனது அப்பா முருகனுக்கும் திருவிழா சமயத்தில் வேலைகள் அதிகமாகவே வரும். ஆனால் சம்பளம் மட்டும் ஏனோ கொடுக்க மனமே வராது சனங்களுக்கு. 100 ரூபாய்க்கு வேலை பார்த்து கொடுத்தாலும் முருகனுக்கு பத்து ரூபாய்தான் அதிகபட்சமாக கொடுப்பார்கள். திருவிழா என்பதால் சாக்கடை அள்ள, மரங்களின் கிளைகளை வெட்ட, முட்செடியை அகற்ற, பொதுக்கழிப்பிடம் சுத்தம் செய்ய,கிருமி மருந்து தெளிக்க, பிளீச்சிங் பவுடர் போட இதோடு கோயில் நிர்வாகத்தினர் வீட்டிலும் தோப்பிலும் சேர்த்து வேலை வாங்கி விட்டு கோயில் செலவில் அந்த ரூபாய் கணக்கை சேர்த்துவிடுவார்கள் நிர்வாகத்தினர். கொடுப்பதோ கால் காசு சம்பளம் ஆனால் ரூபாய் கணக்கில் செலவாக எழுதிவிட்டு அவர்களது பாக்கெட்டை நிரப்புவார்கள். இதெல்லாம் முருகனுக்கு பழகித்தான் போயிருந்தது. திருவிழா ஆரம்பித்த நாளிலிருந்தே முருகனுக்கு நேரமே கிடைப்பதில்லை. அப்பா வேலையாகவே இருப்பதால் இந்த வருடம் "நமக்கு நாலணாவுக்கு மிட்டாய் வாங்கித் தர சொல்லனும்னு" மனதில் நினைத்து இருந்தாள் பேச்சியம்மாள். பேச்சியம்மாள், முருகனுக்கும் வள்ளிக்கும் பிறந்த மூன்றாவது மகள். மூத்த பெண்ணை 14 வயதில் திருமணம் செய்து வைத்துவிட்டான். இரண்டாவது மகளை பண்ணையார் வீட்டில் வேலைக்கு விட்டிருந்தான். மூன்றாவது மகளான பேச்சியம்மாளையும் இரண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்து விட்டு பக்கத்தில் இருந்த டாக்டர் அம்மா வீட்டில் வேலை பார்க்கும் வள்ளியோடு பேச்சியம்மாளை அனுப்பி வைத்திருந்தான் முருகன். விளையாட வேண்டிய வயதில் வேலை பார்க்கும் தன் மகளை நினைத்து வள்ளிக்கு அழுகை தான் வரும். பேச்சியம்மாளுக்கும் விளையாட ஆசை வரும். ஆனால் காலையில் வேலைக்குப் போனால் மதியம் 3 மணிக்கு தான் வீட்டிற்கு வர முடியும். திரும்ப மாலை 4 மணிக்கு போனால் 6 மணிக்கு தான் வீட்டிற்கு வருவாள். அந்நேரத்தில் அவளோடு விளையாட யாருமே இருக்க மாட்டார்கள். எல்லாமே பழகிதான் போயிருந்தது பேச்சியம்மாளுக்கும். அன்றிரவு வேலை முடித்து மிகவும் களைப்போடு வந்தான் முருகன். தயங்கியபடியே அவன் அன்றாவது கருப்பட்டி மிட்டாய் வாங்கி வந்திருக்கிறானா என ஆசையாக பார்க்க வந்தாள் பேச்சியம்மாள். ஆனால் அன்றும் அவன் வெறும் கையோடுதான் வந்திருந்தான். கண்களில் வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "அப்பா எனக்கு மிட்டாய் வாங்கியரலையா?" என கேட்டாள். "பேச்சி நாளைக்கு பார்க்கலாம் தாயி. அப்பாக்கு பைசா தரல யாரும்" என்றான் முருகன். "என்னப்பா நீங்க நாளையோடு முடியுது திருவிழா நாளைக்காவது வாங்கி தருவீங்களா?" என்று கேட்டாள். "சரி வாங்கியாரேன். சோறு தின்னியா? போய் தூங்கு" என்றான் முருகன். "நிதமும் சொல்றீங்க. நாளைக்கும் வாங்கி தரமாட்டீங்க"என அழத்தொடங்கினாள் பேச்சி. "ஏ கழுதை கூடகூட பேசுற. போனு சொன்னப்போ. திமிரா என்ன பேச்சு உனக்கு. நான் பார்த்த வேலைக்கு கூலித் தரலனு நொந்து வந்திருக்கேன். நீ எலவெடுக்காத" என கத்தினான் முருகன். பயந்த பேச்சியம்மாள் அழுது கொண்டே தூங்கி விட்டாள். விடிந்ததும் அதே நினைவோடு எழுந்தாள். அப்பாவிடம் ஞாபகப்படுத்த எண்ணி அவனை தேடினாள். ஆனால் அதற்குள் அவன் வேலைக்கு கிளம்பி இருந்தான். மெல்ல அம்மாவிடம் வந்து "அம்மா நீயாவது எனக்கு அஞ்சு பைசாவிற்காவது கருப்பட்டி மிட்டாய் வாங்கி தருவியா" பாவமாக கேட்டாள் பேச்சி. "காலங்காத்தாலே ஏழரை இழுக்காத. கெளம்பு. அம்மா வீட்டுக்கு வேலைக்குப் போணும்" என்றாள் வள்ளி. "சட்டைப் பையில் காசு எப்பவாது இருக்கும் அப்பாவே வாங்கி தரல. இந்த அம்மா எங்கிருந்து வாங்கி தருவா" என மனதில் நினைத்துக்கொண்டே கிளம்பினாள். போகும் வழியில் பள்ளிக்கூடம் செல்லும் எல்லா பிள்ளைகளின் கையிலும் கருப்பட்டி மிட்டாய் இருந்ததைப் பார்த்தாள். அவளின் ஆசை அதிகமானது. ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. டாக்டரம்மா வீட்டில் வள்ளி வரவை எதிர்பார்த்து வேலைகள் ரெடியாக இருந்தது. வள்ளி பேச்சியிடம் "நீ தொட்டியில இருக்குற செடிக்கு தண்ணி ஊத்து. அம்மா மத்தத பார்த்துக்கிறேன்" என்றாள். "உம்"என்ற வெறும் வார்த்தையோடு மனதில் இன்றாவது தின்ன மிட்டாய் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்தாள் பேச்சி. செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது வாட்ச்மேன் தாத்தா "ஏலேய் திருவிழா மிட்டாய் தித்திப்பாய் இருக்குல்ல "என்று அதை சுவைத்தபடியே தன் பேரனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை கவனித்தாள் பேச்சி. பேரன் கையில் இன்னும் ஒரு மிட்டாய் இருந்தது அதை எப்படியாவது. சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தோடு போய் கேட்போம் என நகர்ந்தாள். அதற்குள் அது அந்த பேரனின் வாய்க்குள் சென்று விட்டது. ஏங்கியப்படியே அம்மா சொன்ன வேலையை முடித்துக்கொண்டு அம்மாவிடம் வந்தாள். அதற்குள் டாக்டரம்மா வந்து "வள்ளி அரும்பு இருக்கு கட்டித்தா. நான் கோயில் கிளம்பணும்" என கையில் திணித்தாள். அருகில் நின்ற பேச்சியம்மாளைப் பார்த்ததும் "உன் மகளுக்கும் கொஞ்சம் கட்டி வை" என்றாள் டாக்டரம்மா. எங்கிருந்து வந்த தைரியம் என தெரியவில்லை பேச்சிக்கு. டாக்டரிடம் "பெரியம்மா எனக்கு கருப்பட்டி மிட்டாய் தாங்க இந்த பூவெல்லாம் வேணாம்" என்றாள் பேச்சி. சட்டென்று அரையை வைத்தாள் வள்ளி." அம்மா மன்னிச்சிடுங்க அது தெரியாம கேட்டுச்சு" என பணிந்தாள். "எதற்கு அடிக்கிற அவள. பேச்சி உனக்கு நான் வாங்கி வரேன்" என்றாள் டாக்டரம்மா. அம்மா அடித்த அடி அந்த நொடி வலிக்கவில்லை. பேச்சுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. டாக்டரம்மா திரும்பிவரும் நேரத்திற்காக அந்த நொடியிலிருந்து காத்திருந்தாள் பேச்சி. மதிய வேலை முடிந்தும் திரும்பி வரவில்லை டாக்டரம்மா. வள்ளி வீட்டிற்கு கிளம்பினாள் ‌."அம்மா பெரியம்மா வரல இருமா மிட்டாய் வாங்கிட்டு வீட்டிற்கு போகலாம்" என்றாள் பேச்சி. "ஏண்டி இந்த ஒரு மணி நேரம்தான் எனக்கு ஓய்வு. அதுவும் உனக்கு பொறுக்கலையா. பேசாட்டி நடைய கட்டு வந்து வாங்கிக்கலாம் அம்மாட்ட. அது எங்கும் பறந்து போகாது" என்றாள் வள்ளி. எல்லா பெரியவர்களின் வாயிலும் இந்த வார்த்தைகள் வெகுசுலபமாகவே வருகிறது ."அது ஒன்னும் பறந்து போகாது. அங்கேதான் இருக்கும்" என்று. ஆனால் உயிருடன் இருக்கும் மனிதரின் ஆவலும் ஆசையும் பறந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தாலும் அந்த உணர்ச்சிகளுக்கு பதில் மரியாதை செய்ததே இல்லை. அழுதுகொண்டிருந்த பேச்சியம்மாளை இழுத்துக் கொண்டே வீட்டிற்கு சென்றாள் வள்ளி. வீட்டுக்குள்ளே வரவே இல்லை பேச்சி. வாசலிலே உட்கார்ந்திருந்தாள். எப்படியும் திரும்ப வேலைக்கு போய் விடுவோம் என்று தவிப்போடு அந்த ஒரு மணி நேரத்தை கடந்தாள் பேச்சி. இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் கையில் ஏந்த போகும் மிட்டாயை எண்ணி நாவில் ஈரத்தைத் தேக்கிக் கொண்டே இருந்தாள். அந்நேரம் அவ்வழியாகச் சென்ற பக்கத்து வீட்டு முத்துவிடம் கருப்பட்டி மிட்டாய் கையில் இருந்தது .அவன் அவளிடம் "பேச்சி மிட்டாய் சாப்பிடுறியா" என்றான். "தாயேன்" என்றாள் பேச்சி. "அஸ்க்கு பிஸ்க்கு தரமாட்டேன் போ. நீ தந்தியா அன்னைக்கு சவ்வுமிட்டாய்.அதுவும் காக்கா கடி தானே கேட்டேன்" என்றான். பேச்சி கோபமாக "நீ போ எனக்கு டாக்டரம்மா ஒரு ரூபாய்க்கு வாங்கி தருவாங்க. உன் மிட்டாய் யாருக்கு வேணும்" என்றாள் . "ஏய் என்ன சொல்ற?!. ஒரு ரூபாய்க்கா" என்றான் முத்து." ஆமாம் உனக்கு நான் தர மாட்டேன். உன் மிட்டாயும் வேணாம் போ" என்றாள் அலட்சியமாக. அவன் மேலும் கீழும் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான். "அம்மா வா போகலாம் நேரமாச்சு" என்று பரபரத்தாள் பேச்சி. "பறக்காதே போவோம்" என இருவரும் வேலைக்கு புறப்பட்டார்கள். நேராக வாட்ச்மேன் தாத்தாவிடம் "பெரியம்மா வந்தாச்சா தாத்தா?" என்று ஆர்வமாக கேட்டாள் பேச்சி."இல்லையே அம்மா இன்னும் வரல" என்றார் வாட்ச்மேன் தாத்தா. இலை உதிர்ந்த மரமாக பேச்சியின் முகம் வாடியது. ஆறு மணியாகியும் பெரியம்மா வரவில்லை. மீண்டும் பலத்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். உடுத்திய உடுப்பில் இருந்து உண்ணும் உணவு வரை எதுவும் சீராக கிடைத்ததில்லை பேச்சிக்கு‌‌. அவள் நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என்று அனைவரும் ஏதோ ஒரு வேளையாவது நல்ல உணவோ உடுப்போ அவர்களுக்கு கிடைத்து இருந்திருக்கும். ஆனால் பேச்சிக்கு எல்லாம் பழையது தான். அப்படியே வளர்க்கப்பட்டிருந்ததால் அது எதுவும் அவளுக்கு புரியவில்லை. புது உடுப்புகள் மீதோ உணவுகள் மீதோ பேச்சிக்கு நாட்டம் இருந்ததில்லை. பளபளவென பச்சை கவரில் சுற்றி இருந்த 15 பைசா மிட்டாய்க்கு மட்டும் சலனம் அவ்வப்போது லேசாக வந்து போகும் பேச்சிக்கு. அதுவும் அந்த முத்து அடிக்கடி அவள் முன் நின்று தின்பதாலே. அவள் நினைவு தெரிந்த நாளிலிருந்து அதிகமாக ஆசைப்பட்டது இந்த கருப்பட்டி மிட்டாய் தான். அதுவும் அவளது தாத்தா அவளது நான்காவது வயதில் திருவிழா சமயத்தில் வாங்கிக்கொடுத்தார். அன்றிலிருந்து அம்மிட்டாயின் ருசி அவளது நாக்கில் அழியாது ஒட்டிக்கொண்டது. இன்றும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அழுகையோடு வள்ளியிடம் கேட்டாள் பேச்சி"அம்மா வீட்டுக்கு போகறதுக்கு முன்னாடி கோவில் தெரு போவோமா ?அங்கு 5 பைசாவுக்கு மட்டும் மிட்டாய் வாங்கித்தாமா. நான் அழ மாட்டேன் .அடம் பிடிக்க மாட்டேன். இராத்திரி பழசு கூட வேணாம் நீயே தின்னுக்கோ. வேணும்னா காலையில கஞ்சியும் வேணாம். ஒரு அஞ்சு பைசாவுக்கு மிட்டாய் மட்டும் வாங்கி தாமா" என்று கெஞ்சினாள் பேச்சி. ஒரு உருட்டு பார்வையால் பேச்சியை பார்த்தாள் வள்ளி. அதன்பின் அழுகையும் நின்றது பேச்சிக்கு .பாவம் வள்ளி மட்டும் என்ன செய்வாள்? வாங்கும் சம்பளம் குடை கூலிக்கு சரியாக இருக்கிறது .கிழியாத ஒரு புடவை கூட அவளிடம் இல்லை. மகன் வருவான் என நினைத்து மூன்றும் பெண்ணாக போனது அவள் வாழ்வில். முதல் பெண் பிறந்த போதே அவளது அத்தனை ஆசைகளையும் குழித் தோண்டி புதைத்தே ஜீவனம் நடத்தும் பாமர சனமே வள்ளி. வீட்டின் அருகே செல்லும் பொழுது அவளது வீட்டு வாசலில் மல்லாந்து கீழே விழுந்து கிடந்தான் முருகன் .பார்த்த வேலைக்கானக் கூலி கிடைத்திருந்தமையால் அவன் குடித்திருந்தான். ஆனாலும் அவன் பேச்சிக்கு கருப்பட்டி மிட்டாய் வாங்க தவறவில்லை. அவன் கையில் இருந்த பொட்டலம் திறந்து மிட்டாய் சிதறிக் கிடந்தது. அங்கிருந்த தெரு நாய்கள் அதை தின்று கொண்டிருந்தன. இவற்றையெல்லாம் காட்சியாக பார்த்துக்கொண்டிருந்த பேச்சியும் வள்ளியும் கத்திக்கொண்டே முருகனிடம் ஓடிவந்தனர். நாய்களை கல் கொண்டு விரட்டினாள் வள்ளி. அப்பாவை எழுப்ப தண்ணி மொந்து வந்தாள் பேச்சி. அதற்குள்ளும் எல்லா மிட்டாகளும் நாய்களால் அபகரிக்கப்பட்டு இருந்தன. முட்டிக் கொண்டு வந்த அழுகையோடு பேச்சி திரும்பினாள். தனது கடைசி மிட்டாயைக் கேலி சிரிப்போடு முத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவளுக்கு பிடித்த கருப்பட்டி மிட்டாய் அந்த வருடம் அவளால் வாங்கி சாப்பிட முடியாமலே முடிந்தது. இன்றோ சென்னையில் இலட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஹோட்டல் முதலாளியாக பேச்சி வலம் வருகிறாள். இன்றும் அவளுக்குப் பிடித்த மிட்டாயாகவே இருந்து வருகிறது அந்த கருப்பட்டி மிட்டாய். ஆனால் அந்த சிறுவயது ஏமாற்றத்திற்கு பின் அவள் எப்போது சாப்பிட்டாலும் அந்த கசப்பான நினைவுகளால் சிறிது கசந்து போய் தான் இருந்தது கருப்பட்டி மிட்டாய். ரம்யாமுத்துபாபு.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • Mariappan Avatar
    Mariappan - 3 years ago
    உணவாக இல்லாமல் மருந்தாக இருப்பின் கசப்பு நன்மைக்கே ..கசப்பான நிகழ்வுகள் உயர்வுக்கான தூண்டு கோல்கள் ..அருமை ..