சாம்பவி சங்கர்
சிறுகதை வரிசை எண்
# 164
போட்டிச் சிறுகதை
மாயம்மா
***********
மாயா கருவில் திருவாய் உருவானவள் தான். இரண்டு உயிர்களின் ஜனன மரணம் தான் பிரசவம். மாயாவுக்கு இப்படி ஒரு ஜனனம் ஏற்படுவதற்கு பதிலாக அவள் மரணித்து இருக்கலாம் என்று அவளைப் பார்ப்பவர்கள் அனைவரும் பரிதாபப்பட்டு கூறும் வார்த்தைகள் ஆகும். பொம்மையாக இருந்தால் கூட குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படும். கல்லால் அடிபட்ட நாய் கூட தன் கோபத்தையும் வலியையும் பலவித குரலில் வெளிப்படுத்தும் மாயவாள் அது கூட முடியாது. பிறந்து ஒரு வருடம் வரை அவள் கை கால்களை கூட அசைக்கவில்லை பசி எடுத்தால் பாலுக்கு அழுவாள். அதுகூட கிணற்றில் இருந்து கேட்பது போல குரல் மெல்லியதாக இருக்கும்.
ஆல் இந்தியா முழுவதும் மிகப்பெரிய மருத்துவர்களாலும் மாயாவின் நோயையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நோய்க்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நந்தினியும், ரவியும் கேரளா வரை அந்த குழந்தையை அழைத்துச் சென்று வர்மா முறையிலும் மூலிகை எண்ணெய் முறையிலும் கைகளை மட்டும் செயல்பட வைத்தனர். இடுப்புக்கு கீழே உள்ள பாகங்களில் உணர்வு இருக்காது கால்களை அசைக்க மாட்டாள்.
மாயாவால் நடக்க முடியாது உட்கார வைத்தால் கொஞ்ச நேரம் தலையாட்டி பொம்மை மாதிரி ஆடிக்கொண்டே உட்கார்ந்திருப்பாள். அம்மா என்ற வார்த்தை கூட தெளிவில்லாமல் தான் வரும்.
வாயில் எப்போதும் எச்சில் ஊற்றிக்கொண்டே இருக்கும்.சலிப்பில்லாமல் அதை துடைத்துக்கொண்டே இருப்பார்கள். நந்தினி நகரின் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் நர்ஸ் என்பதால் மாயாவை பார்த்துக்கொள்ள ஒரு அம்மாவை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஒருமுறை வீட்டில் இருந்த முருங்கை மரத்தில் இருந்து கம்பளிபூச்சி எப்படியோ குழந்தையின் கால் பகுதியில்
ஏறிவிட்டது. மாயாவுக்கு எந்த உணர்வும் இல்லாததால் சிரித்துக்கொண்டிருந்தாள். நந்தினி தான் கவனித்தாள். மாயாவின் காலெல்லாம் சிவப்பாக தடி தடியாக வீங்கியிருந்தது. அந்த நிமிடமே வீட்டில் இருந்த முருங்கை மரத்தை வெட்டி விட்டார்கள். மாயா வயது குழந்தைகள் எல்லாம் தலைவாரி பூச்சூடி பள்ளிக்கு செல்லும்போது மாயா சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு குழந்தைகளுக்கு டாட்டா காட்டுவதைப் பார்க்கும்போது நந்தினியின் மனம் அன்பின் எல்லையில் மாயாவும் பள்ளிக்குச் சென்றால் என்ன? என்று எண்ணியது. ஒரு அரசு பள்ளியை அணுகி மாயாவை பள்ளியில் சேர்த்தார்கள். நந்தினிக்கு ஹாஸ்பிடல் தூரம் என்றாலும் மாயாவிற்காக பள்ளிக்கு அருகிலேயே குடி வந்தனர்.ஆறு வயதுமுதல் மாயா சக்கர நாற்காலியில் பள்ளி சென்று வெளியுலக சுதந்திர காற்றை சுவாசித்தாள்.
மாயாவை பள்ளிக்கு அழைத்துச் செல்ல அவளுக்கு தேவையானதை கவனிக்க என்று பாக்கியம் என்ற அம்மா எப்போதும் உடன் இருப்பார்கள். இரவு நேரங்களில் மாயாவை நந்தினி தான் கவனித்து கொள்வாள். மாயாவுக்கு இருக்கும் ஒரே மகிழ்ச்சி என்னவென்றால் பள்ளியில் சிறிது நேரம் இருப்பது தான்.
குளத்தில் மூச்சடக்கி இருப்பவனுக்கும், கடலில் மூச்சடக்கி இருப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மாயாவின் வாழ்க்கை கடலில் மூச்சை அடக்குவது போல இறுதி சுவாசம் வரை போராட்டம் தான். இப்போதெல்லாம் மாயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவர்கள் நந்தினியிடம் சொல்வது "நீ ஒரு நர்ஸ் உனக்கு தெரியும் அவளைப்பற்றி, அம்மாவாக யோசிக்காமல் ஒரு நர்ஸாக யோசித்துப் பாரு, மாயாவின் உடல்நிலை உனக்கு புரியும். எந்த சூழ்நிலையிலும் எதுவும் நடக்கலாம்." என்று ஒரு டாக்டராக பேசினார்கள். நந்தினியின் மனசு அம்மாவாக யோசித்தது. அறிவு நர்ஸாக யோசித்தது. 10 ஆண்டுகளாக நந்தினியும்,ரவியும் மாயா தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருந்தனர். மாயாவின் தம்பி விபினுக்கும் மாயாவை ரொம்ப பிடிக்கும். நந்தினியும் ரவியும் விபினை விட மாயாவின் மீது தான் அதிக அன்பு வைத்திருந்தனர். இருவரும் சம்பாதிப்பதை மாயாவிற்காகவே செலவு செய்தனர். ஊர் உலகத்தில் ஆம்பளை புள்ளைக்கு அதிக சொத்து சேர்த்து வைப்பார்கள். ஆனால் இவர்கள் நல்லா படிக்க வைத்தால் போதும் அவன் பிழைத்துக் கொள்வான். மாயா இருக்கும்வரை மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்று அவளுக்காக தனி அறை அந்த அறை முழுவதும் விளையாட்டுப் பொருள்கள் நிரம்பி வழியும். விபினுக்கும் மாயாவின் நிலைமையைச் சொல்லி சொல்லி அவள் மீது அன்பாக இருக்க வைத்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் மாயா விற்கு இரண்டு நாட்களாக சுரமாக இருந்தது.
கருப்பு நிறத்தை மொத்தமாக குத்தகை எடுத்தது போல அந்த தெரு இருளில் மூழ்கியிருந்தது. எரியாத தெருவிளக்குகள் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது என்று கூறாமல் கூறியது. என்னவோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று தெருமுனையில் படுத்திருந்த நாய் தன் உச்ச ஸ்தாயில் அழுதுகொண்டிருந்தது. சாதாரண சுரம் தான் என்று வழக்கமாக போடும் மருந்தைப் போட்டாள் நந்தினி. அந்த இரவு 11 மணிக்கு மாயாவிற்கு திடீரென்று வலிப்பு வந்துவிட்டது. "மாயம்மா.. மாயம்மா.. என்ற குரல் நிசப்த போர்வையை கிழித்துக்கொண்டு இதயத்தில் குத்தூசி குத்துவது போல உயிரின் ஓலமாக ஒலித்தது.
"மாயம்மா.. அம்மாவை பாரு டா மா" என்று நந்தினியின் குரல் உருகியது. "செல்லம்.. அப்பாவை பாருடா" என்று ரவியும் மாயம்மாவை உலுக்கினான். மாயம்மாவின் கண்கள் சொருகி கொண்டே இருந்தது. கைகள் இழுத்துக்கொண்டு, வாய் கோணிக் கொண்டு, கால்களை முன்னும் பின்னும் உதைத்துக் கொண்டு, தலையை ஆட்டி கொண்டு பல்லை கடித்து கொண்டு வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தாள் மாயம்மா.
நெருப்பில் விழுந்த புழு கூட ஒரு நொடி துடிப்புடன் அடங்கிவிடும். வலிப்பு நோய் வந்தவர்களின் துடிப்பை பார்க்கும்போது கடவுள் இருக்கிறாரா? என்ற சந்தேகம் வருகிறது.
" என்னங்க... காரை ஸ்டார்ட் பண்ணுங்க ஹாஸ்பிடல் தூக்கிட்டு போகலாம்" என்று கத்திக்கொண்டே 10 வயது மாயம்மாவை தூக்க முயற்சி செய்தாள் நந்தினி.
"அக்கா... அக்கா" என்று சொல்லிக்கொண்டே ஏழு வயது விபினும் அம்மாவுக்கு உதவி செய்தான். மாயம்மாவை ஹாஸ்பிட்டல் அழைத்து வந்தனர். அந்த பிரம்மாண்டமான ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சை பிரிவின் முன்பு இருந்த சேரில் நந்தினியும் ரவியும் அமர்ந்திருந்தனர். விபின் நந்தினியின் மடியில் படுத்து உறங்கி கொண்டிருந்தான் நந்தினி கண்ணீரைத் துடைக்கவும் திராணியற்று அமர்ந்திருந்தாள். அவள் மனம் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த மறக்க முடியாத நிகழ்வை மீண்டும் அசை போட்டது. இதே மாதிரியான ஒரு பொழுதில்தான் அவள் நர்ஸாக பணிபுரிந்த அரசு மருத்துவமனையில் பிரசவ அறையில் ஒரு பெண்ணின் அழுகுரல் வெளியில் இருந்தவர்களின் உயிர் நரம்புகளையெல்லாம் துடிக்க வைத்துக்கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணின் கணவன் உட்பட அனைத்து உறவுகளும் ஊரிலுள்ள கடவுள்களை எல்லாம் மத பேதமின்றி வணங்கிக்கொண்டு கதறி அழுது கொண்டிருந்தனர்.
வலி வருகிறது குழந்தை பிறப்பதற்கு உண்டான வழிக்கு திரும்பி விட்டது. ஆனால் குழந்தை எங்கோ எலும்பில் சிக்கிக்கொண்டது. குழந்தையின் பல்ஸ் குறைந்துகொண்டே வந்தது. நந்தினி சீனியர் நர்ஸ் என்பதால் நிலைமையின் தீவிரம் உணர்ந்து,
" டாக்டர் இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம் சிசேரியன் பண்ணிடலாம்னு"டாக்டரிடம் கெஞ்சினாள் நந்தினி.
"சிஸ்டர் எனக்குத் தெரியும் அப்பறம் வெளியில் இருக்கிற சொந்தக்காரங்க வலி வந்து அந்தப் பொண்ணு துடிக்குது. இவங்க வேணும்னு சிசேரியன் பண்ணிட்டாங்கன்னு சொல்லுவாங்க" என்று நிலைமை புரியாமல் சொன்னார் டாக்டர்.
"டாக்டர் அவங்களுக்கு என்ன தெரியும் உயிருக்கு ஏதாவது நடந்தாலும் நம்ம மேல தான் பழி போடுவாங்க அதனால் சிசேரியன் பண்ணிடலாம்னு" மன்றாடினாள் நந்தினி.
" சிஸ்டர் அதெல்லாம் வேணாம் நீங்க அடிவயிறு அழுத்தங்கள் கொரோடா போட்டு எடுத்து விடலாம்" என்று என்னவோ கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது போல அலட்சியமாக சொன்னார் டாக்டர்.
"டாக்டர் எனக்கு பயமா இருக்குங்க "என்று நந்தினி பயந்தாள்.
" சிஸ்டர் சொன்னதை செய்யுங்க என்று டாக்டர் கத்தவும் ,
2 நர்சுகள் அந்தப் பெண்ணின் அடி வயிற்றைப் பிடித்து அழுத்தவும் டாக்டர் குழந்தையின் காதுக்கு மேல் பக்கம் கொரோடாவால் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்தார். அதற்குள் குழந்தைக்கு மூச்சு திணற ஆரம்பித்தது. அந்தப் பெண்ணும் மயக்கத்திற்கு சென்றார் ரத்தமும் நிறைய வெளியேறியது.
ஒரு வழியாக கொரோடாவால் பிடித்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். வெளியில் வந்த குழந்தை அழவே இல்லை. அவசரமாக ஐ.சி.யுவிற்கு அழைத்துச் சென்று ஆக்ஸிஜன் வைத்தார்கள். குழந்தையின் அம்மா மல்லிகா பிழைத்துக் கொண்டார். ஆனால் குழந்தை மண்டையில் கொரோடா அழுத்தியதால் மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிப்பு அடைந்தது.
அன்று டூட்டி முடிந்து வீட்டிற்கு வந்த நந்தினி தனியறையில் அழுதுகொண்டிருந்தாள். மெல்ல அவள் அருகில் வந்து அவள் கைகளை பற்றினான் ரவி.
"என்னாச்சு மா நந்து" என்று அன்பாக கேட்டான்.
" என்னங்க ..இன்னைக்கு ஒரு டெலிவரிங்க ஒரு பெண் குழந்தையை அநியாயமாக என்று சொல்லி விட்டு அழுதாள். "என்ன ஆச்சு மா பேபி இறந்திடுச்சா"
" இல்லைங்க.. ஆயுத கேஸ் போட்டதால அதன் நரம்புகள் செயலிழந்து மற்ற குழந்தைகள் மாதிரி அந்த குழந்தை வளர முடியாதுங்க. கை கால்கள் சரியாக செயல்படாதுங்க. சரியான மூளை வளர்ச்சி இருக்காதுங்க" என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.
" அதுக்கு நீ என்னம்மா பண்ண முடியும்" என்று ஆறுதல் கூறினான் ரவி.
" இல்லைங்க.. சிசேரியன் பண்ணி இருந்தா குழந்தை நல்லா பிறந்திருக்கும் ஆயிரத்தில் ஒரு குழந்தை இது மாதிரி ஆயிடுங்க. பாவம் அந்தப் பெற்றோர்கள் எவ்வளவு கனவோட இருந்திருப்பார்கள் என்று ரொம்ப வருந்தினாள் நந்தினி.
" இதுதான் விதி என்ன செய்யறது" என்று ரவியும் வருத்தமான குரலில் சொன்னான்.
ஹாஸ்பிடலில் 10 நாட்களாக அந்த பேபியை நந்தினி தான் கவனித்துக் கொண்டாள். குழந்தை கை கால் ஆட்டாது. தலை சற்று நீண்டிருக்கும். "குழந்தை ஏன் இப்படி இருக்கு?" என்று கேட்ட பெற்றோருக்கு குழந்தையின் நிலைமையை பக்குவமாக எடுத்துச் சொன்னாள் நந்தினி. அதை கேட்டதும் குழந்தையை பெற்றவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள். பெரிய டாக்டர் எல்லாம் என்னென்னவோ சமாதானம் சொல்லவும் அழுது அடக்கினார்கள். பிறகு டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு சென்று விட்டார்கள்.
நந்தினி மட்டும் அடிக்கடி அந்த குழந்தையைப் பற்றியே ரவியிடம் புலம்பிக் கொண்டிருப்பாள். கடவுள் குழந்தை வரம் கொடுப்பார். சிலருக்குதான் கடவுளே குழந்தை வரமாய் வருவார். அப்படிப்பட்ட குழந்தைகள் தான் இவர்கள் என்று ரவியிடம் சொல்லிக் கொண்டிருப்பாள் நந்தினி.
இது நடந்து மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் வீட்டின் கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்தாள் நந்தினி. டெலிவரி பார்த்த அந்த குழந்தையுடன் அதன் அப்பா அம்மா நின்று கொண்டிருந்தார்கள்.
" நாங்க தினக்கூலிங்க எங்களுக்கு இந்த குழந்தையை வளர்க்க முடியாதுங்க,கொலை பண்ணவும் தைரியம் இல்லைங்க, அனாதையாக குப்பைத் தொட்டியில் போடவும் மனம் வரலைங்க, நாங்க படிக்காதவங்க இந்த குழந்தையை எங்க சேர்க்கணும் என்ன பண்ணனும்னு தெரியலைங்க, நீங்க தான் காப்பாற்ற வேண்டும்" என்று நந்தினி, ரவியின் காலடியில் அந்த குழந்தையைப் போட்டு அவர்களும் விழுந்து அழுதனர்.
நந்தினி குழந்தையை கையில் தூக்கி கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ரவியைப் பார்த்தாள். ரவி அவன் நண்பர் லாயருக்கு போன் பண்ணினான். திருமணமாகி ஓராண்டே ஆன ரவியும், நந்தினியும் அந்த குழந்தையை தத்து எடுத்து "மாயா" என்று பெயர் சூட்டி வளர்க்கின்றனர். ஏனோ நந்தினிக்கு இந்த பழைய நினைவுகள் எல்லாம் வந்தது.மேலும் மனதை அழுத்தியது.
"நந்தினி.." என்று டாக்டர் அழைத்ததும் தான் உணர்வு வந்தவளாக திடுக்கிட்டாள்.
"டாக்டர்..மாயா எப்படி இருக்கா?"என்று வறண்ட குரலில் கேட்டாள்.
"பயப்படாத நந்தினி, மாயா இப்போ நார்மலா இருக்கா உள்ளே போய் பாரு" என்று டாக்டர் சொன்னதும்,
ரவி ,நந்தினி,விபின் எல்லாரும் உள்ளே ஓடினர்.
மாயா அவர்களைப் பார்த்ததும் சிரித்தாள்.
"அம்மா.."என்று நந்தினியின் கன்னத்தைத் தடவினாள்.
இந்த ஸ்பரிசம் போதுமடி உன் அன்பைச் சொல்ல என்று நந்தினி நெகிழ்ந்தாள்.
நிறைவுற்றது.
சாம்பவிசங்கர்
திண்டிவனம்.
9597893720
சாம்பவி
45. மைலம் ரோடு
இந்திரா நகர்.
திண்டிவனம்.
விழுப்புரம் மாவட்டம்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்