logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

boopathy periyasami

சிறுகதை வரிசை எண் # 161


படைப்புச் சிறுகதைப் போட்டி -2022 “மீத வாழ்வு…” பூபதி பெரியசாமி மதியம் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களைக் கழுவிப் போட்ட மலர், அசதியில் சற்று நேரம் சோபாவில் சாய்ந்தாள். சுவர்க் கடிகாரத்தின் முட்கள் மூன்று மணியைத் தழுவ முனைப்பாய் இருந்தன. ‘இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளி முடித்துக் குழந்தைகள் வந்துடுவாங்க. அதன் பிறகு, மாலைச் சிற்றுண்டி… பாடங்களை முடிக்க வைப்பது… இரவு உணவு… என நேரம் விரைவாய்க் கடந்து போகும்…’ மலைப்பும் பெருமூச்சும் ஒரு சேர ஆழ் சிந்தனையில் இருக்கும்போது, வாசலில் தெரு நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தாள், மலர். நரை தலை… கைத்தறிப் புடவை… நெற்றி நிறைய திருநீறு… கையில் பெரிய துணிப் பையோடு நின்றிருந்தார் ஒரு மூதாட்டி. ஏதோ பழைய படங்களில் நடித்த நடிகையை நினைவூட்டியது, மூதாட்டியின் உருவம். நாய்களை அதட்டி விரட்டினாள் மலர். சட்டென, அவை கலைந்து ஓடின. சற்று நேரம் நிதானித்து மூதாட்டியை உற்றுப் பார்த்தவள், “நீங்க யாரு பாட்டி? என்ன வேணும்…” என்றாள். “நான் பக்கத்து ஊருதாம்மா. பேரு பூரணி. ஏதாவது வீட்டு வேலை இருந்தா சொல்லுங்கம்மா…” “வேலைக்கு ஆள் தேவைதான். ஆனா, முன் பின் தெரியாதவங்களை எப்படி வீட்டுக்குள்ள விட முடியும்?” “வீட்டுக்குள்ள வேணாம் தாயி. தினமும் வாசல் பெருக்கியாவது கோலம் போடறேனே. நாலு வீடு கிடைச்சாக்கூட போதும். என் வயித்தைக் கழுவிக்குவேன்…” பூரணிப் பாட்டியின் பேச்சும் பாவனையும், அவர் மீது சற்று பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஏதாவது உதவி செய்யலாம் என நினைக்கும் போது, பக்கத்து வீட்டு மீனா எட்டிப் பார்த்தாள். மலருடன் ஒரு பாட்டி நின்றிருந்ததைப் பார்த்ததும், அக்கறையாய் அவளைத் தனியாக அழைத்துச் சென்ற மீனா, “யாரு என்னன்னு விசாரிக்காமலே வேலைக்கு வைப்பியா? உலகம் தெரியாத ஆளா இருக்கியே. இந்த காலத்துல டிசைன் டிசைனா பிளான் பண்ணித் திருடற கூட்டம் அதிகம் உலவுது. வீட்டு வேலை செய்த இடத்தின் உரிமையாளரின் மகளை கடத்திச் சென்ற வேலைக்காரின்னு, எத்தனை செய்தியிலப் பார்த்திருக்கோம். எல்லாத்துக்கும் மேல நம்ம குடியிருப்புக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு…” சொல்லி விட்டு பேச்சை பாட்டி பக்கம் திருப்பினாள். “பாட்டி… ஆதார் கார்டு வேறு ஏதாவது அடையாள அட்டை வச்சிருக்கியா?” “அதெல்லாம் எங்க கிடக்கோ தெரியல தாயி. வீட்டுல கொஞ்சம் பிரச்சனை. எல்லாத்தையும் விட்டுட்டு அப்படியே வந்துட்டேன்…” பரிதாபமாகச் சொன்னாள் பூரணி. அதற்குள், இச்செய்தி குடியிருப்போர் சங்கத் தலைவர் சுந்தரம் செவிக்குச் சென்றது. மனைவி பார்வதியுடன் அங்கு வந்தார், சுந்தரம். “ஏம்மா மலர்… அடையாளம் தெரியாத நபர்களை நம்ம குடியிருப்புக்குள்ள அனுமதிக்கக் கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா? ஆமா, யார் இந்த பாட்டி?” என்றார். “பக்க்கத்து ஊராம். வீட்டை விட்டு வந்துட்டாங்களாம். வேலை ஏதாவது இருக்கான்னு கேக்கறாங்க. வாசல் தெளித்து கோலம் போடற வேலை செய்யக்கூட தயாரா இருக்காங்க…” “யாரு என்னன்னு தெரியாம வேலைக்குச் சேக்கறது சரி வராதே…” சற்று நேரம், மற்றவர்களிடமும் கலந்து பேசினார், சுந்தரம். பூரணி பாட்டியைப் பார்த்ததும், எவரும் எதிர்ப்பு சொல்லவில்லை. “ஒரு மாசத்துக்கு வேலை கொடுப்போம். அதுவும், வாசலில் கோலம் போடும் வேலையை, விருப்பமுள்ளவர்கள் வீட்டில் மட்டும் செய்யட்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாச சம்பளமா முன்னூறு கொடுக்கலாம். முப்பது நாளைக்குப் பிறகு, தீர்க்கமா ஒரு முடிவெடுப்போம். சரி பாட்டி, நீங்க நாளையிலிருந்து விருப்பப்படறவங்க வாசலை கூட்டிப் பெருக்குங்க...” என்றார் சுந்தரம். மிகவும் சோர்வாக இருந்த பாட்டியிடம், “ஏதாவது சாப்பிடறீங்களா?” என்றாள் மலர். உடனே, மலரை முறைத்தாள் பார்வதி. “நல்லா யோசனை பண்ணி முடிவெடுங்க. எனக்கென்னவோ இது சரிப்படுமான்னு தெரியல...” பார்வதி சொன்னதைக் காதில் வாங்காத மலர், “பாட்டி கொஞ்சம் இருங்க. சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்…” வேகமாக வீட்டுக்குள் சென்றாள். மலர் சாப்பாடு எடுத்து வருவதற்குள், காலனியில் இருக்கும் பெரிய வேப்ப மரத்தடியில் கிடந்த தழைகளை பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள், பூரணி. அதைக் கவனித்த காலனி வாசிகளுக்கு, அவர் மீது மதிப்பும் சற்று மரியாதையும் வந்தது. மலர் கொடுத்த இரண்டு தோசையை அவசரமாய்ச் சாப்பிட்டு முடித்து, விடை பெற்றாள் பாட்டி. மறுநாள் காலை… அதிகாலைப் பொன்னொளி புவியின் மீது பரவத் துவங்கும் நேரம். குடியிருப்பிலுள்ள சில வீட்டு வாசலில் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டு, அழகிய கோலம் போடப்பட்டிருந்தது. நடைபயிற்சிக்குப் போவோர் வருவோர், அதைக் கவனித்ததோடு, விசாரிக்கவும் தொடங்கினர். கையில் துடைப்பமும் குப்பை கூடையுமாய் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த பூரணியைச் சுட்டிக் காட்டிய மலர், “நேத்துதான் வேலை கேட்டு வந்தாங்க. ஏதாவது, உதவி செய்யலாமேன்னு நினைச்சித்தான், வாசல் கூட்டற வேலை கொடுத்திருக்கோம்…” என்றாள். இப்படியே சில நாட்கள் கடந்தன. தினமும் காலை வேளையில் தெருவில் நடந்து செல்வோருக்கு, காலனியில் நல்ல மாறுதல் தெரிந்தது. பொட்டலாய் இருந்த காலனிப் பூங்கா, பூரணியால் மீண்டும் புத்துயிர் பெற்றது. அங்கங்கு பூச்செடிகள் நடப்பட்டு அவை துளிர் விட ஆரம்பித்திருந்தன. வேலைகளை முடித்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கும் பூரணிப் பாட்டிக்கு, சிலர் காலை உணவும் கொடுத்து கூடுதலாகச் சில வேலைகளையும் வாங்கிக் கொண்டனர். சில நாட்களில், பூரணிக்கு வேலை கொடுத்தவர்களின் வீடுகளின் எண்ணிக்கையும் கூடியது. மூன்று வாரத்தில் எல்லோருக்கும் பிடித்தமான மனுஷியாக மாறி விட்டாள், பூரணி. பல நாட்கள் வேப்ப மரத்தடிதான் அவள் இருப்பிடமாக இருக்கும். சில நாட்கள் திடீரென மாயமாகி விடுவாள். பார்ப்போருக்கு, புரியாத புதிராகவே, அவள் செயல்பாடுகள் இருந்தது. ஒரு நாள்… சனிக்கிழமை. பூரணியைத் தேடினார் சுந்தரம். வழக்கம் போல வேலைகளை முடித்து, வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்தாள், பூரணி. அருகே சென்ற சுந்தரம், “நாளை என் சின்ன மகள் சிந்துவுக்குப் பிறந்த நாள். ஊரிலிருந்து பெரியவ கவுரியும் வருகிறாள். வீட்டைக் கொஞ்சம் சுத்தம் செய்யணும்…” என்றார். “சரிங்க ஐயா…” என்ற பூரணி, சுந்தரம் சொன்ன அடுத்த சில நிமிடத்தில், அவர் வீட்டு வாசலில் இருந்தாள். இதை கவனித்தாள் மலர், “இந்த சுந்தரமும் பார்வதியும் சுய நலம் பிடிச்சவங்க. செய்யற வேலைக்குக் காசும் கொடுக்க மாட்டாங்க. சரியானக் கஞ்சப் பிசினாறிங்க. இனிமே, பாட்டியை என்னென்ன வேலையெல்லாம் வாங்குவாங்களோ. பாவம் பூரணிப் பாட்டி…” மலரின் முனகலில், பாட்டி மீதிருந்த அக்கறையும் பரிதாபமும் தெரிந்தது. சற்று நேரத்தில், சுந்தரம் வீட்டுக் கூடம் பூரணியின் கட்டுப் பாட்டில் வந்தது. செல்பில் இருந்த எல்லாவற்றையும் எடுத்து வைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள் பூரணி. அதில், பள்ளிக் குழுப்படம் ஒன்றும், ஒரு சிறுமி கையில் நீண்ட மூங்கில் கம்போடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த தனிப்படமும் இருந்தது. அதை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பூரணி, கண்ணாடி மீது படிந்திருந்த தூசுகளை துடைத்து விட்டு, சில நொடிகள் கைகளால் அதை வருடியபடி இருந்தாள். அப்போது, அங்கு வந்த சுந்தரம், “என்ன பாட்டி அதையேப் பார்க்கறீங்க. பெரியவ கவுரி ஸ்கூல் படிக்கும்போது எடுத்தது. அதைப் பத்திரமா வைங்க…” என்றார். அடுத்த ஒரு மணி நேரத்தில், சுந்தரம் எதிர்பார்த்ததைவிட, படு சுத்தமானது வீடு. “நாளை பாப்பாவோட பிறந்த நாள். நீயும் வந்துடு பாட்டி…” சமையலறையிலிருந்து, ஒப்புக்குப் குரல் கொடுத்தாள் பார்வதி. “அவசியம் வரேம்மா…” சொல்லி விட்டு விடை பெற்ற பூரணியின் மனம், அங்கிருந்து புறப்படும்போது, பழைய நினைவுகள் பலவற்றை அசை போட்டது. மறுநாள் மாலை நான்கு மணி… “காலனிக்கு வேலைக்கு வந்து நாளையோட முப்பது நாளாகப் போகுது. இந்த மாசத்தோடு சம்பளம் கொடுத்து அனுப்பிட்டாங்கன்னா, என்ன செய்யறது. நாளையிலிருந்து வேலைக்கு வச்சிப்பாங்களா?” குழப்பத்தில், சுந்தரம் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பூரணி. ஒரு மணி நேரத்தில் வாசல் அழகாக புதுப் பொலிவு பெற்றது. “ஏழு மணிக்கு சிந்துவுக்குப் பிறந்தாள் கொண்டாட்டம் வச்சிருக்கோம். இன்னும் ஒரு மணி நேரத்தில் பெரியவ கவுரியும் வந்துடுவா…” யாரிடமோ போனில் பேசிக்கொண்டே, சிந்துக்குக் குரல் கொடுத்தாள், பார்வதி. பதில் வரவில்லை. பதற்றமாய் அறைக் கதவைத் திறந்தாள். அங்கும் அவள் இல்லை. பயம் விஷம் போல் உடம்பில் வேகமாகப் பரவியது. வெளியே ஓடி வந்து பார்த்தாள். வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பூரணியையும் காணவில்லை. அப்போது வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆர்வமாய் இருவரும் ஓடினர். அதிலிருந்து கவுரி இறங்கினாள். வாசலில் அழகாக “சிந்துவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…” என்று கோலத்தால் எழுதப்பட்டு கலர் கொடுக்கப்பட்டிருந்தது. நிலைமை புரியாமல், “அம்மா… கோலம் யார் போட்டது? அழகா இருக்கே…” என்றாள் கவுரி. “வாசல் தெளிச்சிக் கோலம் போட புதுசா ஒரு பாட்டியை வேலைக்கு வச்சிருந்தோம். அது நமக்கே வினையாடுச்சு. இது அவ வேலையாத்தான் இருக்கும்…” பதறினாள் பார்வதி. “என்ன நடந்தது. ஏன் பதற்றமா இருக்கீங்க?” “படிச்சிப் படிச்சி சொன்னேன். இங்க நீங்க யாரும் கேக்கல. இப்போ என் மகளைக் கடத்திப் போயிட்டா. என்னங்க போலீசுக்கு சொல்லலாம் வாங்க…” அவசரப் படுத்தினாள் பார்வதி. நடப்பது எதுவும் புரியாததால், வீட்டுக்குள் நுழைந்த கவுரி நிதானமாய், சிசிடி கேமராவின் பூட்டேஜ்களை போட்டுப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். சிந்துவோடு பூரணி ‘விடுவிடு’வென நடந்து செல்லும் காட்சிகள், அதில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. “அய்ய்… எங்க வாத்தியாரம்மா. நான் இவங்கள மொதல்ல பார்க்கணும்…” “என்னடி சொல்ற. வாத்தியாரம்மாவா? அந்தக் கிழவியை உனக்குத் தெரியுமா?” பதறிக் கேட்ட பார்வதிக்கு பதில் கிடைக்கவில்லை. ஆளுக்கு ஒரு பக்கமாக, செல்போனும் கையுமாய் இரு சக்கர வாகனத்தை எடுத்துப் புறப்பட்டனர். காலனி வாசிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. செய்தியைக் கேள்விப்பட்ட மலர், “நிச்சயமா அந்தப் பாட்டி அப்படிச் செய்திருக்க மாட்டாங்க. தேவையில்லாம வீண் பழியெல்லாம் போடாதீங்க…” பூரணியைக் குறை சொன்னவர்களுக்குப் பதிலடி கொடுத்தாள். சற்று நேரத்தில், காலனிக்கு அருகே இருந்த கோவில் வாசலில் வண்டியை நிறுத்திய கவுரி, சுந்தரத்திற்குப் போன் செய்தாள். பார்வதியுடன் பதற்றமாய் வந்த அவர், கோவில் வாசலில் அமர்ந்திருந்த முதியவர்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த சிந்துவைக் கண்டதும் நிம்மதிப் பெரு மூச்சு விட்டார். ஒன்றும் விளங்காமல் விழித்த பூரணி, “பாபாவுக்கு இன்னக்கிப் பிறந்த நாள்தானே. காலையிலிருந்து கோவிலுக்குக் கூட்டிப் போகலைன்னு சொல்லுச்சு. அதான், பக்கத்திலிருக்கும் கோவிலுக்கு அழைச்சி வந்தேன். ஏம்மா என்னாச்சு” என்றாள் யதார்த்தமாய். கவுரி ஓடிச் சென்று பூரணியை வாரியணைத்துக் கொண்டாள். சுந்தரமும் பார்வதியும் ‘திருதிரு’வென விழித்தனர். “எங்க ஸ்கூல் ஆயாம்மா, பூரணி பாட்டி. ஸ்கூல் பாத் ரூம் கழுவற வேலையைச் செய்தாலும், எங்களுக்கெல்லாம், இவங்க சாமி மாதிரி. வேலை நேரம் போக மாலை நேரத்தில், பாதுகாப்புக் கலையான சிலம்பம் கத்துக் கொடுத்த வாத்தியாரம்மா. எல்லாத்துக்கும் மேல, எங்க பிறந்த நாளை சரியா நினைவு வச்சி, ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்பாங்க. எங்களுக்கெல்லாம் பிடிச்சவங்க பூரணிப் பாட்டி…” பெருமையாய்ச் சொன்னாள் கவுரி. பூரணியை ஆச்சர்யமாகப் பார்த்த சுந்தரம், “சரி பாட்டி. நீ ஏன் இதை எங்ககிட்ட மறைச்ச?” என்றார். “கக்கூஸ் சுத்தம் செய்தேன்னு, உண்மையைச் சொன்னதுமே பல இடங்களில் விரட்டிடாங்க, சார். அதான் சொல்லத் தயங்கினேன்…” பூரணியின் கலங்கிய கண்களைத் துடைத்து விட்ட கவுரி, அவரோடு இரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். மறுநாள் மாலை… குடியிருப்புச் சிறார் சிறுமியர்களுக்கு சிலம்பப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த பூரணிக்கு, ‘மீத வாழ்வு, அந்தக் குடியிருப்பிலேயே இனி கழியும்’ என்ற நம்பிக்கை, லேசாக துளிர் விட்டது. பூபதி பெரியசாமி, 23, கோபாலன் கடை வீதி, அய்யன் குட்டிப் பாளையம், புதுச்சேரி-9 9789322069

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.