AMBETHKAR KITTU
சிறுகதை வரிசை எண்
# 160
மரணத்தின் போது நாங்கள் பிறந்தோம்.
- அம்பேத்கர் கிட்டு.
சத்தங்கள் நிறைந்த அழுகை கூட்டத்தில் என் செவிகளில் மட்டும் சிரிப்பு சத்தம் கேட்கிறது.மூன்று ஈ சவுரியமாக சென்று வர அளவுக்கு என் வாய் திருந்து இருக்கிறது.என் வாழ் நாளில் நீண்ட நேரங்களாக என் கண் சிமிட்டாமல் கண்களை திறந்திருக்கிறேன்.என் தாத்தா இறந்த பொழுது வைத்து இருந்த மர பலகையில் என்னையும் வைத்து இருந்தார்கள்.கை கால்களை தைத்து இறுக்கமாக கட்டி இருந்தார்கள், வாயில் இருந்து சிதறி கீழே விழுந்த சர்க்கரையை உரிமை கொண்டாட சிவப்பு எரும்பும்,கருப்பு எரும்பும் போட்டி போட்டுக் கொள்கிறது. என் வாயில் பாலை ஊற்றினாலும் தொண்டையில் இறங்க மறுக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தொலைந்த நாய் என் இறப்புக்கு இன்று வருகை தந்தது.எனக்கு அவர்களின் அழுகை, உயிர் இல்லாத உடல் முன் அமர்ந்து உயிருடன் வா என்று போராட்டம் நடத்துவது போல் இருக்கிறது. ஒரு கூட்டமே என்றோ நான் எழுதிய கவிதைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் என்னை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள், மற்றொருபுறம் என் படைப்புகளை பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள். சிலர் என் போராட்டங்களை திறனாய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். நீலமும் சிவப்பும் , கருப்பு மூன்றும் நிறமும் சேர்ந்து என் சாவுக்கு நீதி கேட்டுக் கொண்டு இருக்கிறது.அசைவற்ற என் கால்கள் அசையும் வரை அடிக்கிறார்கள் மாட்டுத்தோல் கொண்ட பறையை. ஒரு நொடியும் அசைத்தேன் சிலிர்ப்பால்,அனைவரின் கவனமும் குறையும் நேரத்தில். வெறும் எழுவத்தி ஆறு நிரம்பிய எனது ஆயா நீலாவதி என்னை பற்றி ஒப்பாரி பாடிக்கொண்டு இருக்கிறாள்.
ஊரேக்கே..செல்வம் அள்ளி
கொடுத்தவ..
செல்வராணி பெத்த மவனே
யான் தங்கம் செல்வராணி
பெத்த மவனே..
ஊட்டுக்கு மூணு புள்ள
அதுல ஒரு புள்ள ஆம்பள புள்ள..
சிறுத்த போல வேகம் கொண்ட புள்ள
இன்னிக்கி அடையாளம் இல்லமா
ஆக்கிடானோலே..
படப்பாவி பயலோ..
ஆனால் என் அம்மா இப்பொழுதும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறாள்.
“இவ்ளோ வயசு ஆயும் கல்யாணம் ஒன்னும் பண்ணாம போயிட்டானே, அத்தன வாட்டி தலையில அடிச்சிக்கிட்டேனே, அவ வேண்டான்டா அவள மறந்துட்டு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடான்னு சொன்னேனே, எல்லா விஷயத்திலையும் நான் சொல்றத கேட்டானே, சாகும் போது கடைசி நொடில அவள தானே நெனைச்சிருப்பான்”.
இதை போல் இடைவெளி இல்லாமல் புலம்பிக் கொண்டும். ஆயா விட்ட இடத்தில் அம்மா ராணியும் பாட ஆரம்பித்தால்.
அவன் அப்பன் ஆசை ஆசையா
அம்பேத்காருனு..பேரு வைச்சானே..
அவனுக்கு அம்பேத்காருனு பேரு வைச்சானே..
அய்யா கண்ட கொடுமையை யான் புள்ள
அம்பேத்தும் கண்டானே..
அய்யோ வலியும் குறைச்ச பாடு இல்ல..
குண்டியில வலியும் குறைச்ச பாடு இல்ல..
நான் பெத்த கண்ணனே,யான் ரத்தினமே..
உடம்பு சரியலான ஒரு ஊசி..
வலி தாங்க மாட்டனே.. தாங்க மாட்டனே..
இன்னிக்கி உடம்புல
வெட்டு பட்டு இருக்கானே வலியல
துடிச்சிருப்பானே யான் புள்ள நான் இல்லானு..
வலியல துடிச்சிருப்பானே…
நான் ஆலமரமா இருந்தனே..
இப்போ வேர் அறுத்து என்ன
சாச்சிபுட்டாங்களே..
வேர் அறுத்து என்ன சாச்சிபுட்டாங்களே..
இப்ப நான் ஒத்தமரமா இருக்கனே யான்
வேர் ஆண்புள்ள இல்லமா இருக்கனே..
தொலைக்காட்சியில் என் இறப்பை தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். பல கைகள் கொண்டு வெட்டப்பட்ட என் உடலை கூவிக் கூவி சொல்கிறார்கள். என் அப்பா ஒரு சொட்டு கண்ணீர் விடலையே. உயிர் இல்லாமல் நான் கிடப்பதை போல அவருக்கு உயிர் இருந்தும் சிலை போல் அசையாமல் இருந்தார். உடன் பிறந்த அக்காவும் தங்கையும் அவரவரின் கண்ணீரை பரிமாற்றிக் கொண்டிருந்தார்கள். சிலரோ என் இறப்புக்கான காரணத்தை தேடிக் கொண்டிருந்தார்கள். அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் பரப்பிக் கொண்டிருந்தார்கள். அண்டமே தென்றல் வீசாமல் இருந்த போது எனது நீல நிற அறையில் இருந்த நான் கடைசியாக அரைகுறையாக எழுதி வைத்திருந்த கவிதை என்னிடம் பறந்து வந்து அதனை முழுமையாக்க சொல்லி கேட்டது. தயவு செய்து யாரும் என் கவிதைகளை முழுமையாக்காதீர்கள். உங்களால் ஒருபோதும் என்னை போல் எழுத முடியாது. உங்களால் முடிந்தால் இந்த ஒரு கவிதைக்கு மட்டும் கருணைக்கொலை சட்டம் ஏற்றுங்கள்.இன்று ஒரு நாள் நான் உயிரோடு இருந்தால் “அம்பேத்கர் எனும் நான்”என்ற சுயசரிதையை முழுமையாக்கிருப்பேன்,இனி எத்தன அம்பேத்கர் வந்தாலும் இந்த ஒரு கதையை என்னை போல் முழுமையாக்க முடியாது. எட்டாவது படிக்கும்பொழுது என் தங்கையிடம் திருடி மறைய வைத்த மிட்டாய் வாசம் நன்றாக என்னிடம் வந்து சேர்ந்தது. மகிழ்ச்சியில் நான் இறந்ததை மறந்து என் தங்கையை அழைத்தேன், பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்தேன்.
திடீரென்று என் கைகளை இறுக்கி பிடித்தாள், அந்த கை நான் நீண்ட காலமாக பிடிக்க ஏங்கிய கைகள் என்று நினைக்கிறேன். அந்த கை மென்மையாக இருக்கிறது. என் உடலில் உணர்வு இல்லை என்று தான் நினைத்தேன் ஆனால் அந்த கை தொடும் உணர்வை நான் நன்றாக உணர்கிறேன். பலர் அழுகை நிறைந்த கூட்டத்தில் அந்த குரல் கேட்பதுபோல் இருந்தது. அந்த குரல் பரிச்சயமான குரல். ஆனால் சரியாக கேட்க முடியவில்லை. அந்த குரல் கேட்கவேண்டும் என்பதால் கவனத்தை முழுவதும் அங்கே செலுத்தினேன். அப்போது என் செவிகளில் எட்டிய வார்த்தை
“நம்__உ__த்து_கு__லா_வா”.
இந்த வார்த்தையை மட்டுமே அந்த உயிர் சொல்லிக்கொண்டு இருந்தது. என் கரங்களை பற்றிக்கொண்டது. உணர்வுகளே இல்லாத விரல்கள் அனைத்தும் அந்த கையை இறுக்கிப்பிடித்துக் கொண்டது. என்றோ அவளிடம் நான் சொன்ன வார்த்தைகளை எனது காதருகில் சொன்னாள்.
“உனக்காக உயிரலாம் கொடுக்க மாட்டேன், என்னோட உயிரா உன்ன பாத்துப்பன்”
மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டே இருந்தார்,செவிடனாக இருந்த என் காதுகளில் அந்த சத்தம் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.இவ்வளவு அற்புத்த்தை நடத்திய அந்த உருவத்தை பார்க்க முயற்சி செய்கிறேன்.
இருள் பூத்த என் கண்களில் சிறகு முளைத்த தேவதையாக தெரிந்தாள். அவளை நான் பல முறை பார்த்து இருக்கிறேன் அவள் வேற யாரும் இல்லை என் இறப்புக்கு காரணமானவள்.
ஒரு காலத்தில் என் பிறப்புக்கு அர்த்தமாக இருந்தவள் என் சிரிப்புக்கு அவள் மட்டும் காரணமாக இருந்தவள் இவளிருந்து தொடங்கியதே இந்த கவிதைகள் அனைத்தும்.நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருக்கிறேன் உன் மூச்சுக்காற்று என் நெஞ்சில்படும் அளவுக்கு நீ அணைக்கும் அந்த அணைப்பையும், என் தோளில் நீ சாய்ந்து கைக்கோர்த்து கதை பேசும் தருணத்தையும்,
நம் வலிகளில் வானம் அழுது நம் கண்ணீருடன் மழை கலந்து மீன் போல் கடலில் நீந்தி
வாழ்வதற்கும், இருவரும் மரத்தின் அடியில் நம் எதிர்காலத்தை பற்றி கதைக்கவும் கனவுகானவும்,
தூக்கம் தொலைத்த பல இரவுகளை கலைத்து, உன் மார்போடு என்னை நீ அணைத்து உன் தாலாட்டில் நான் மனசாற தூங்க அழுகையுடன் கலந்த அழகான தூக்கத்தைம் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்.பல கனவுகள் உடன் அவளை சந்திக்க சென்ற என்னை பல சாதி வெறி கைகள் வெட்டியது,என் உடலில் இருந்து முதலில் கைகளை வெட்டினார்கள்,பிறகு என் கால்களை சுட்டு சுட்டாக வெட்டினார்கள்,என் இரு கண்களையும் கடப்பாரை கொண்டு தோட்டினார்கள்.என் முகத்தை அவர்களின் மூத்திரத்தால் சுத்தம் செய்து பிறகு மலத்தால் அழகு படுத்தானர்கள்.விரல்களை வெட்டி அவர்களின் அடுத்த தலைமுறைக்கு படையள் வைத்தார்கள்.கைகளை வெட்டி அவர்களின் கடவுள்வாக நம்புமும் கல்லுக்கு காவு கொடுத்தார்கள்.அவளின் வயிற்றில் உயிர் உருவாக காரணமான இருந்த என் ஆணுறுப்பை கூர்மையான கத்தி கொண்டு அறுத்தார்கள்.வயிற்றை கிழித்து என் குடலை எடுத்து மாலையாக அணிந்து பெருமை கொண்டார்கள்.வெட்டி நான்கு திசைகளிலும் வீசினார்கள்..
வெறும் சாதி கௌரவ மயிக்காக அவளையும் கொன்று தின்றார்கள்.சாதி வெறி பிடித்த மனிதர்கள்.
என் வாழ்க்கையில் நான் மிகவும் அமைதியை உணர்ந்த நாள் அது.
“எனது அறை ஜன்னல் வழியாக எங்க இருந்தோ பறந்து வந்த பட்டாம்பூச்சி எனது கையில் மேல் அமர்ந்தது என் கைகளை ஆற்றினேன் உதறினேன் ஐந்து நிமிடம் ஆகியும் ஒரே இடத்தில்அமைதியாக இருந்தது.நான் அதை தள்ளியும் விட்டேன் ஆனால் நகரவே இல்லை, சாம்பல் நிறம் கொண்டது அதன் சிறகுகள் மற்ற பட்டாம்பூச்சியை விட சிறிது மாற்றம் பெற்றதாக இருந்தது, அதன் கண்களில் என்னை பார்த்தேன் ஆம் அதன் கண்களை உற்று கவனித்தேன் மனிதர்களின் இமை முடியை விட சிறிதாக இருந்தது கவனம் சிதறாமல் நன்றாக உற்று கவனித்தேன் அதன் கண்களில் நான் மிகவும் பெரியாளாக தெரிந்தேன் என் முகம் வட்டமாக தெரிந்தது அதனை தொட ஆரம்பித்தேன் என் கைகள் அதன் மேலே படும் வரை ஒரு நொடி கூட தனது உடலை அசைக்கவில்லை சிலை போல் தோற்றம் அளித்தது.என் விரல்கள் அதன் மேலே பட்டதும் ஒரு முறை மட்டும் அதன் இமைகளை சிமிடியது.அதன் வாயின் வழியாக அதன் பார்மனுக்கு ஏத்த நீளமாக ஒன்று வெளிய வந்தது அதன் நிறம் பச்சையாக திகழ்ந்தது நாய் போல் எனது கைகளை தொட்டது.எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நான்கு முறை அதேப்போல் தொட்டது அதனை என்னால் உணரமுடிந்தது,மழை காலத்தில் சாரால் என் மேல் பட்தது போல் இருந்தது அந்த உணர்வு.
பிறகு எவ்வழியில் வந்ததோ அவ்வழியில் அருகே எனது கைகளை வெளியே நீட்டினேன். அதன் றெக்கையை மூன்று முறை அசைத்து ஒரு சில நொடிகள் சிந்தித்து வழி மாறி வந்த பட்டாம்பூச்சியை அதன் வந்த வழியே கொண்டுவிட்டேன் அதன் இலக்கை நோக்கி பறந்து சென்றுவிட்டது.
அந்த பட்டாம்பூச்சி போல் நாங்களும் இந்த உலகத்திற்கு வழி மாற்றி வந்துவிட்டோம்.கேவலம் இந்த மனிதன் இனத்தில் சிக்கி கொண்டு.எங்கள் பெற்றோர்கள் எங்களுக்கு வைத்த பெயரை விட இந்த உலகம் என்னைபறையன் என்றும் அவளை படையாச்சி என்ற பெயரிலே அழைத்து,
வாழந்து கொண்டு இருந்தோம்.
இந்த சுதந்திரம் அற்ற உலகில் பட்டாம்பூச்சியின் சுதந்திரத்தை பார்த்தால் சற்று பொறாமையாக உள்ளது.
அவள் இறந்தே என் இறப்புக்கு தேவதை போல் வருகை தந்தாள்.அசந்து தூங்கி கொண்டு இருந்தேன் என் செவிக்கு அருகில் வந்து
“நம்ப உலகத்துக்கு போலாம் வா”.
என்றும் அன்பினால் முளைத்த சிறகில் வானத்தின் இலக்கை நோக்கி பறந்தோம்.விடிந்த பின்பு எரிகின்ற மெழுகுவர்த்தின் வெளிச்சித்தில் எங்கள் வாழ்க்கை தொடங்குகிறது.
பள்ளி கூடத்துல சேர்ந்தனே
பாதையாலாம் முள்ளு இருந்தும்
பறந்து போனானே..யான் புள்ள
பறந்து போனானே பறையனு பட்டம்
கொடுத்தானே..
யான் புள்ள அம்பேத்காருக்கு
பறையனு பட்டம் கொடுத்தானே..
பறையான பொறந்தது பாவமா..
நாங்க பறையான பொறந்தது பாவமா..
பாதள குழில கூட..இடம் இல்லனு சொல்றானே..
அம்பேத்காரு புதைக்க ஒரு அடி நிலம் தாடா..
யான் புள்ளயை பொதிக்க
ஒரு அடி நிலம் தாடா..
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்