மகேந்திரன் கணேசன்
சிறுகதை வரிசை எண்
# 159
இருசாயி
சோவென்று அடைமழை இரவு 11.30-க்கு தொடங்கி 3 மணிநேரம் விடாமல் பெய்து கொண்டிருந்தது.
அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கட்டிடம் முன்பு பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த மண்டபத்தில் சிலர் நீண்ட உறக்கத்திலும், சிலர் வாசலை எதிர்நோக்கி பார்த்த வண்ணமாய் அழைப்புக்காக காத்துக்கிடந்தனர்,
சிலர் வெண்ணிற ஆடையினால் மூடப்பட்ட உடல்களை கட்டிக்கொண்டு அய்யோ அம்மா என அடித்து கொண்டு ஓடினர்.
அவள கட்டினுவந்த நாள்ல இருந்து என்ன சொகத்த கொடுத்தேன்..
காப்பாத்துறது கஷ்டம்னு கையேத்து வாங்கிடாங்களே
நான் என்ன பண்ணுவேன் அய்யோ...
மடித்து கட்டியிருந்த கைலியை அவிழ்த்து முகத்தை துடைத்துகொண்டோ கதறி அழது கொண்டிருந்தான் முனியன். அவன் குரலில் முன்பு இருந்த அந்த அதட்டல் தொனி குறைந்து நரைத்த முடியும், தளர்ந்த தேகமும், ஒடுங்கி போன கன்னமுமாக வயது முதிர்ச்சியை வெளிகாட்டியது இதற்கு முன்பு அவன் இப்படி அழுது பார்த்ததில்லை.
ஒன்னும் ஆகாதுப்பா
அம்மா யாருக்கும் எந்த கெடுதலும் செய்யல
நம்பிக்கையா இருப்போம்..
கொழந்த மாதிரி அழுதுட்டு இருந்த அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவை நோக்கி நடக்க ஆரம்பிச்சான் மணி. அவன் எடுத்து வைக்கும் ஓவ்வொரு அடியிலும் உடல் நடுக்கத்தை உணர ஆரம்பித்தான். சுற்றி நடக்கும் காட்சிகளும் சப்தங்களும் பேரிரைச்சலாக, ஒரு மாய பிம்பம் போல மங்களாக ஏதோ ஒரு கனவு பிரமைகுள் சிக்கிக்கிட்டது போல உணர்ந்தான்.
“இதோ பாருங்க அவங்களுக்கு நினைவு திரும்பவும் வாய்ப்பு இருக்கு,
இல்ல கோமா நிலைக்கு போறதுக்கும் வாய்ப்பு இருக்கு, இல்லனா என்ன வேணும்னாலும் நடக்கலாம்”னு மருத்துவர் சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப அவன் காதில் ஒலிபெருக்கியை வைத்து யாரோ உரக்க கத்திக்கொண்டு இருப்பதுபோல் உணர்ந்தான்.
மருத்துவர்: இருசாயி கூட வந்த வந்தவங்க யாருச்சு இருக்கீங்களா,
மணி: ஆ சார் இங்கதான் இருக்கோம்..,
மரு : இங்க வாங்க, நீங்க என்ன வேணும்
மணி: நான் பையன் சார்.
மரு: நீங்க
முனியன்: என் பொண்டாட்டி சார், பயப்புட்ற மாறி ஒன்னு இல்லல சார்
மரு : இங்க பாருங்க பின் தலையில அடிபட்டு இருக்கு,
அடிபட்டதுக்கு அப்புறம் வேற காது வழியா ரத்தம் வந்து இருக்கு.
மூலையில பலமா அடிபட்டு இருக்கு, இங்க பாத்திங்களா
(என்று சொல்லிக்கொண்டே அனுமதிக்கபட்டதுபோது நிரப்பட்ட விண்ணப்பத்தை காட்டினார்)
இதில என்ன போட்டுஇருக்காங்க
அதில் 4 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தது..,
1. சாதாரண நிலை
2. ஆபத்தான நிலை
3. மோசமான நிலை
4. மிக மோசமான நிலை
மிக மோசமான என்பதை சுழித்திருந்தார்கள்.
மரு : மூளையில ரத்த கசிவு ஏற்பட்டு இருக்கு
....
மரு : அவங்கள கொண்டு வந்து சேர்க்கும் போதே ஆபத்தான நிலைல தான் சேர்த்து இருக்கிங்க இப்ப ஒன்னும் சொல்ல முடியாது
அதாவது அவங்களுக்கு நினைவு திரும்பவும் வாய்ப்பு இருக்கு, இல்ல கோமா நிலைக்கு போறதுக்கும் வாய்ப்பு இருக்கு..
அப்படி இல்லனா...
...
என்ன வேணாலும்..
முனி: அய்யோ சார் அப்படி சொல்லாதீங்க சார்....
சார்...
மரு : இல்லப்பா சொல்ல வேண்டியது எங்க கடமை.
இங்க ஒரு கையெழுத்து போடுங்க.
முனி :அய்யோ என்ன பாவம் பண்ணனோ, என் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனை, அவ சின்ன எறும்புக்கு கூட தீங்கு நினைக்க மாட்டாலே.. அவளுக்கா இப்படி நடக்கணும்... நான் போடா மாட்டேன்.. என்னால முடியாது...
தன் ஆற்றமையை நினைத்து கதறி அழுது கொண்டு இருந்த முனியனுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியாம, வேறு வழியில்லாம மணி கையெழுத்து போட்டேன். இதய துடிப்பை கண்காணிக்கும் கருவியும், இன்ன பிற கருவிகளும், ஊசலாடிக்கொண்டிருக்கும் மூச்சை அவ்வப்போது அளவுகோளில் காட்டிகொண்டே இருந்தது.
பெறுநகரசென்னையோட ஒட்டுமொத்த கழிவுகளையும் சென்னையில இரண்டு இடத்துல தான் கொட்றாங்க. ஒன்னு வடசென்னை கொடுங்கையூர்ல முப்பது வருஷத்துக்கும் மேல செயல் படுத்தப்பட்டுட்டு வர பிரதான குப்பை கிடங்கு. இன்னொன்னு 1988க்கு அப்புறம் ஆரம்பிக்க பட்ட வேளச்சேரி பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியான பெருங்குடி. 30 வருசமா இந்த பிரதான குப்பை கிடங்கான வடசென்னை பகுதியிலயிருக்க கொடுங்கையூர்க்கு பக்கத்துல தான் இவங்க வசிச்சிட்டு இருக்காங்க. கழிவுகள ஏத்திட்டு வர வண்டி பேசின்பிரிட்ஜ் வழியாக, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர கடந்து, முல்லை நகர் சுடுகாட்டை ஒட்டி உள்ள பாலத்தை கடந்து தான் போகனும். இந்த பிரதான சாலையோட மேற்கே உள்ள பகுதி சில காலத்திற்கு முன்னதான் வளர்ச்சியடைஞ்சுச்சு. சாலைக்கு கிழக்கே இருக்க பகுதி சமூக நிலையிலும், பொருளாதார நிலையிலும் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்ட மக்கள் வாழும் பகுதி. சில வருசத்துக்கு முன்னால, ஆக்கிரமிப்பு நிலங்கள மீட்குறோம்னு சொல்லி சிந்தாதரிபேட்டைல சாலையோரம் வசிச்சட்டு வந்த மக்கள அங்க இருந்து இந்த பகுதிக்கு அனுப்பிட்டாங்க, அப்புறம் சென்னையோட பல பகுதில இருந்த மக்கள இதே மாதிரி இங்க குப்பையோட குப்பையா அள்ளி கொண்டுவந்து போடுட்டாங்க. இந்த குப்பை கிடங்கு சிறிய குன்றுப்போல குவியல் குவியலா இருக்கும். பெரும்பாலான மக்கள் கூலி தொழிலாளர்களா இருப்பதானால தன்னோட குஞ்சுகளுக்கு இரைய தேடி கூட்டவிட்டு பறக்கிற பறவைய போல காலையிலயே கூலி வேலைக்கு கிளம்பிடுவாங்க. இந்த கிடங்குக்கு வெறும் 100மீட்டர் இடைவெளியிலேயே அருக்காமையில வாழ்ற சாபக்கேடானா ஒரு வாழ்க்கைய தான் வாழ்த்துட்டு இருக்காங்க. இவங்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்துக்கு தேவையான எதையும் எந்த அரசும் பெரிசா செஞ்சது இல்ல, ஆனால் சில நாளுக்கு முன்னால தான் இந்த பகுதிக்கு புதுசா ஒரு டாஸ்மாக் மதுபான கடை தொறந்தாங்க. ஏற்கனவே இந்த பிரதான சாலையில மொத்தமா 5க்கு மேல டாஸ்மாக் கடையிருக்கு. வழி நெடுங்கிலும் சாரை சாரை யா மக்கள் எறும்பு கூட்டம் போல சிலர் அங்க அங்க அலைஞ்சுட்டும், சிலர் சாலையோரமா ஒரு தடுப்பு போல அமைச்சு அதில வாழ்த்தட்டு வராங்க. பெற்றோர் பராமரிப்பும், சரியான கவனிப்பும் இல்லாம தனித்து விடபடுற பசங்க பெரும்பாலான பேர் தவறான வழியில போயிட்றாங்க. தப்பி பிழைச்ச சில பேர் தங்களோட பாதையை சரியா தேடுறாங்க.
“ஹலே மணி”
ஆ சொல்லுங்க
நான் அசோக் அப்பா பேசுறேன்
அம்மாக்கு அடிபட்டுச்சு டா உடனே முல்லை நகர் சுடுகாடு பிரிட்ஜ் கிட்ட வாடா”
ஐயோ அப்பா என்ன ஆச்சு
இதோ நான் உடனே வரேன்’
அங்கே போயி பாத்தா அந்த ஆட்டோக்காரண அக்கம் பக்கம் மக்கள் பிடிச்சி வெச்சு இருந்தாங்க.
“டேய் ஓ** ஒழுங்கா ஓட்ட தெரியாதா”ன்னு கண்ணத்துல ஓங்கி அரைஞ்சுச்சுட்டேன”
“தம்பி மொத அம்மாவ காப்பாத்துற வழிய பாரு,
ஆமா பா இடிச்ச வேகத்துல அந்த கல்லுல மோதிட்டாங்க”
உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போப்பா”
பாவி நல்லா குடிச்சுபுட்டு ஆட்டோவ தாறுமாறா ஓடிட்டு வந்து சிவேனானு ஓரமா காய் வாங்கிட்டு இருந்து பொம்பளைய, இடிச்சுபுட்டான்”.
யாருக்கு போன் பண்றது எங்க கூட்டிட்டு போறதுனு ஒன்னும் புரியல.
ஏற்கனவே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணியிருந்த ஒருத்தருக்கு போன் வந்துச்சு, அவர் வழி சொல்லிட்டு இருந்தாரு.
“அம்மா, நான் மணி மா
ம்ம்... ம்ம்
உனக்கு ஒன்னும் இல்ல,
ம்ம்...
நான் கூட இருக்கேன்...
ஒன்னு ஆவாது மா”
ஆ... ம்
சரியா ஒரு 10 நிமிசத்துல ஆம்புலன்ஸ் வண்டி வந்துச்சு,
சட்டுனு இறங்கி ஸ்ட்ரெச்சர்ல ஏத்திட்டு,.
கூட்டத்தை விளக்கிட்டு கிளம்புச்சு.
“சார் எப்படி அடிபட்டுச்சு”
“எனக்கு தெரியாதுங்க, நான் இல்ல
வேகமா மோதி கீழ விழுந்துட்டாங்கனு சொன்னாங்க”
ஏதாச்சு பண்ணுங்க”
...
அம்மா ஒன்னு இல்லை
... (ஆக்சிஜன் பொருத்த பட்டு இருந்தது)
... (மூச்சு காத்து வேகமாக இரைச்சுட்டு இருந்தாங்க)
காதில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டே
“காதுல இருந்து ரத்தம் வந்துச்சா”
எனக்கு தெரியலங்க இப்போ தான் பாக்குறேன்
இன்னும் கொஞ்ச நேரத்துல ஆஸ்பத்திரிக்கு போயிடுவோம் ம்மா
“வாமிட் எடுத்தாங்களா”
இல்லங்க
மா நான் இருக்கேன் மா...
(மூச்சு முன்பை விட வேகமாக இரைந்துக்கொண்டிருந்தது)
உடனே சரியாயிடும்ம்மா...””
வழி நெடுக்கும் குழுமியிருந்த வாகனங்களை கிழித்துக்கொண்டு வேகமாக மருத்துவமனை வாயிலில் நுழைந்தது. உடனடியாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்க தொடங்கினர் மருத்துவர்.
இந்த நொடி வரைக்கும் அவனால இங்க நடந்த எதையுமே நம்ப முடியல. ஒரு மின்னல போல சட்டுன்னு நடந்தேறிய விபத்து.
“யாருப்பா இங்க இவ்ளோ பேரு
வெளிய போ இங்கல்லாம் நிக்க கூடாது
டாக்டர் கூப்பிடா நான் வந்து கூபிட்றேன
இங்க நிக்க கூடாது”.
பெரிய டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தா என் வேல போயிடும்’ன்னு அதட்டிட்டு இருந்தாரு அந்த காவலாளி.
விஷயம் தெரிஞ்சு பாக்க வந்த சொந்தகாரங்க, நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச நேரத்துல ஆறுதல் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. சிலர் கையில கொஞ்ச பணத்தை திணிச்சாங்க. அந்த நொடி ஒரு மொடவனை போல உணர்ந்தேன். கண் இமைக்கும் நேரத்தில் கூட்டம் கலைந்தது. அங்க இங்க அலைஞ்சிட்டு இருந்தவங்க மண்டபத்தில இடம் கிடைக்காம உணவகத்துலயும், பக்கத்துல இருந்த கோவில்லையும் படுத்துட்டு இருந்தாங்க. அந்த அறையை விட்டு வெளியே வர மனசில்லாம அவங்க காலடியிலேயே காத்து கிடைக்கணும் அவன் ஆழ்மானது சொல்லுது சட்டுனு எழுந்து மடியில கடத்தி சின்ன வயசுல சொன்ன கதய சொல்லமாட்டாங்களானு தவிச்சட்டு இருந்தான்.
“முப்பது வருசத்துக்கு மின்ன உங்கொப்பன கட்னப்போ
தினக்கூலி 50 ரூவா சம்பாரிக்குறான்டி,
30 வருசத்துக்கு முன்னால அது பெரிய காசு
25 ரூவா செலவு போனா கூட, மீதி 25 ரூவா எடுத்து வெக்கலாம்
பஞ்சம் பொயக்க வந்த ஊர்ல ஏதாச்சும் பொருள சேக்கலாம்னு நினைச்சேன்.
“சான் ஏறுன மொழ சறுக்குற” கதையா
இந்த மனுசன் 4 நாளிக்கு வேலைக்கு போனா 40 நாள் ஊட்ல உக்காந்து குடி குடிச்சிகினு இருப்பான்.
நா பொறந்த வுட்ல தான் எந்த சொகத்தையும் அனுபவிக்கலனு, வாழ்க்கபட்டுப்போற வுட்லயாச்சு
சொகத்த கொடுப்பான்னு நினச்சேன்”.
எண் தலைவிதி இந்தாளு கிட்ட வந்து இப்பிடி சீரழியிறேன்.
ஆமா இல்லனா இவளை மைசூரு மகாராஜா தான் வந்து கல்யாணம் பண்ணுகிறேன்னு லைன்ல நின்னாங்கப்பாரு.
பேச வந்துட்டா. பேச்சு.
யோவ் சும்மா வாய மூடுயா...
குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குதாக்கும்.
உங்களுக்கு வேலை செய்ய அடிமையா என்ன கல்யாணம்ன்ற பேர்ல கூட்டினு வந்து என் வாழ்க்கையே பாயாக்கிட்டாங்க”.
இந்த பேச்சுகள் முனியனுக்கு எந்த வித குற்றவுணர்வையும் கொடுக்கல, ஆனா மணிய பொறுத்த வரை அந்த புலம்பல் அவனுக்கு கொடுக்குற எச்சரிக்கயா தான் பாக்குறான். இந்த சமூக கட்டமைப்பால் கல்வி, சுதந்திரம், ஆசைகள் மறுக்கப்பட்டதற்கான காரணிகளாக தாத்தா செலம்பன் மேலயும், அப்பா முனியன் மேலயும் இருக்க அடக்க முடியாத கோவத்தை இருசாயி இப்படித்தான் சில நேரம் வெளிப்படுத்துவாங்க”. பல இரவுகள் யாருகிட்டயும் எதுவும் போசாம அமைதியா இருந்துடுவாங்க.
தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்களிடத்தில் விசாரித்துக்கொண்டிருந்தான். இது போன்ற கையறு நிலையில் ஒரு மனிதனுக்கு தேவைப்படுவது நம்பிக்கையுட்டும் வார்த்தைகளே.
கதவில் வட்டமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடி திரை வழியாக இதயந்துடிப்பின் அளவுகோலையும், நாடிதுப்பின் அளவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அங்குமிங்குமாக நடத்தவன் மீண்டும் மணியை பார்த்தான் நேரம் நகரவேயில்லை, 4 மணிக்கு மேல் தான் அடுத்த சி.டி ஸ்கேன் எடுக்க சொல்லியிருந்தார் மருத்துவர். அந்த ஆய்வு முடிவுகள பார்த்தால் தான் சொல்ல முடியும் என்று சொன்னது அவன் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது.
வினாடிகள் யுகங்களாக கடந்தது, மணி 2.30-யை தாண்டியிருக்கும்
கலியாணம் முடிஞ்ச கையோட புளியந்தோப்புல
அவுங்க அக்கா வுட்டுக்கு பக்கத்துல ஒரு குடிசையில தான். என் காலத்த ஆரம்பிச்சேன்.
இரண்டு தம்பியும் அக்காவும், அவுங்க வுட்டுக்கார், மூனு பசங்க எல்லரும் ஒரு வுட்டுல இருந்தாங்க.
கொஞ்ச நஞ்ச குடச்சளா குடுப்பாங்க, அவங்க அக்காக்கு, அக்கா புள்ளிங்களுக்கு, தம்பிங்களுக்கு போக தான் எல்லாமே.
அந்த ஊரே எனக்கு புடிக்காது. எந்நேரமும் ஒரே குடி, கறி, கூத்துனு ஆட்டம் பாட்டுமா கொண்டாட்டமா, ஒரு ஊதாரி பொயப்பு தான்.
ஏதாச்சு எதித்து கேட்டா, அடிச்சி ஒங்காத்த வுட்டுக்கு போடினு, சண்டை போடுவாரு.
ஏமா அத்த ஒன்னு கேக்க மாட்டாங்களானு,
யார் பேச்சையும் கேக்க மாட்டார். தான் புடிச்ச மொயலுக்கு மூணு காலுனுன்னு” அடாவடி பண்ணுவாரு உங்கப்பன்.
அப்பறம்,
இனி இந்த ஆள நம்பி புரோஜனம் இல்லனு,
உன்ன தூக்கினு, பட்டாளம் மார்க்கெட்லருந்து அம்மா வுட்டுக்கு நடந்தே வந்துட்டேன்.
நடந்தே வா ?
ஆமா கையில காசு இல்ல,
பாத்தேன்.
பட்டாளம், G3 போலீஸ் ஸ்டேஷன், ஆட்டுதோட்டி, கன்னிகாபுரம், கணேசப்புரம், வியாசார்பாடி..,
அப்படியே வழி கேட்டு வந்திட்டேன்.
போதை தெளிஞ்சதும்
காலைல தேடினு வுட்டன்டா, வந்து பிரச்னை பண்ணி,
மாமனுக்கும் அவருக்கும் பிரச்சனை பெருசா ஆகி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயி பெரிய பிரச்சனை ஆச்சு.
காலம் உருண்டோடியது. சுயமரியாதைகாரியாக யார் உதவியையும் நாடாமல் இரண்டு பிள்ளைகளையும் நல்ல கல்விநிலையங்களில் பட்டப்படிப்பு வரை படிக்கவும் வைத்துவிடடார்.
என் நெனவு தெரிஞ்சு இதுவரை காயச்சல், உடம்பு வலி, ஓய்வுனு ஒரு நாள் கூட படுத்தது இல்ல. பசி, தூக்கம்ன்னு எதையுமே அவங்க பொருட்படுத்துணதில்ல, வாழ்க்கை விரட்டுன வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடிட்டிடே தான் இருந்தாங்க. .
நம் மீது சிலர் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கையே சில இக்கட்டான சூழ்நிலைகளில் நம்மை இயங்க வைத்துக்கொண்டிருக்கும்.
தன் தங்கப்பனிடம் கிடைக்கப்பெறாத சுதந்திரத்தை, தன் கணவனிடம் ஏமாந்த கனவுகளை, தன் பிள்ளைகளின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்பட்டால் இருசாயி.
அடைமழை லேசாக விட்டு தூரலாக சொட்டிக்கொண்டிருந்தது. வெளியே காத்து கொண்டிருந்தவர்களில் பலர் உறங்க தொடங்கியிருந்தனர். சிலர் படுக்க இடமில்லாமல் தூண்களில் சாய்ந்த மேனியாக அசதியில் கண்களை மூடியிருந்தனார். பலரின் முகத்தில் அழுதோய்ந்த தடம் கண்ணங்களில் படர்ந்திருந்தது.
முன்பு அழைத்த மருத்துவ நண்பன் அழைத்திருந்தான்.
ஹலோ ஆ சொல்லுங்க ஆதித்யா
ஹாய் மணி நீங்க சென்ட் பண்ண ரிப்போர்ட்டஸ் எல்லாம் பாத்தேன்
சிவியர் இன்ஜுரி தான், பிரைன்ல பிளாட் லீக் ஆகி இருக்கு, பிளாட் கிளாட்டும் இருக்கு ஃபர்தரா பிளாட் லீக் ஆகலானா அவங்க பொழச்சிக்குவாங்க. நம்பிக்கையா இருங்க. உங்க நம்பிக்கைய விட உங்க அம்மாவோட தன்னம்பிக்கை தான் முக்கியம்.
லெட்ஸ் ஹோப். என்று அழைப்பை தூண்டித்தார்.
கடிகாரத்தில் மணியை பார்த்தான் 4.30. மீண்டும் எட்டிப்பார்த்தான்,
அந்த அறையின் நிசப்த ஒலியுடன் வெண்டிலேட்டர் மூலம் செலுத்தப்படும் ஆக்ஸிஜென் சப்தமும், இதயத்துடிப்பை கண்கானிக்கும் கருவியிலிருந்து வரும் கீங்... கீங். என்ற சப்தமும் அவன் மூளையில் யாரோ சம்பட்டியால் அடிப்பது போல கணமாக உணர்ந்தான்.
சற்று முன்பு எடுக்கப்பட்ட சி. டி ஸ்கேன் முடிவு மருத்துவரின் மேசைமேல் வைக்கப்பட்டு இருந்தது.
“இப்பிடி அப்பனாட்டம் ஊதாரி பொயப்பு பொயச்சுனு, இருந்தா எப்பிடி எப்பா.
உங்களுக்கு சொத்து, சோகம் சேத்து வெக்கலைன்னாலும்,
தம்புடிக்கு பிரயோஜனம் இல்லாத குடிகார புருசன கட்டிக்கினு வந்து, காலம் பூறா உழைச்சி அழியாத ‘கல்வி’ சொத்தை உங்களுக்கு கொடுத்து இருக்கேன்.
என் சக்திக்கு என்ன பண்ண முடியுமோ அதுக்கு மேல கொடுத்திட்டேன், இனி எல்லாமே உங்க கையில தான் இருக்குனு”
மருத்துவர் அழைத்தார்.
மருத்துவரை நோக்கி நடக்க தொடங்கினான் இப்போது அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வார்த்தை ஒன்றுதான்.
மருத்துவர் முடிவை எடுத்து பார்த்து சக மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.
இருசாயியை பார்த்தான்.
அவள் பட்ட அத்தனை துன்பங்களை நினைவு கூர்ந்தான்.
அவள் விரும்பிய சுதந்திரமான வாழ்க்கை, சுவாசிக்க விரும்பிய நிம்மதியான மூச்சுக்காற்று, முப்பது வருட கால போராட்டம். அத்தனையும் சுக்கு சுக்காக உடைந்து, சிறகு முளைத்து வானில் பறக்க ஆயுத்தமாவதை போல உணர்ந்தான்.
கடவுள் என்ற உருவ வழிப்பாடு மீது நம்பிக்கை இல்லாதவன்.
இயற்கையிடம் யாசகம் செய்து வேண்டிக்கொண்டான்.
“எப்படியாவது எங்க அம்மாவை எனக்கு திருப்பி கொடு,
கோமோ நிலையிலயாவது கொடு”
முடிவை பார்த்தவர், உதிர்ந்த வார்த்தை,
இது உங்க அம்மாவுக்கு மறு பிறவி.
ஷி இஸ் ரெகாவேரிங் ஸ்லோவ்லி.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்