Arulvadivel
சிறுகதை வரிசை எண்
# 158
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022
பாளை
______________
புழுதி நிலம். பார்வைப்புலன் பாயும் தொலைவெங்கும் பனங்காடு. அதனூடாக தீவுத் திட்டுகளாய் ஆங்காங்கே ஓலைக்குடிசைகள்.
ஏரிக்கரையில் பட்டாளத்து வீரர்கள் போல வரிசைகட்டி மிடுக்காய் நிற்கும் கருத்த பனைகள். முறுக்கிய கயிறாய்
உடல் கருத்த பனையேறிகள். புழுதிக்காட்டில் ஆடிக்களித்த குழந்தைகள்.
பள்ளியில் பாடவேளை போக,
அந்தப் பிள்ளைகளிடம் நான் தெரிந்துகொண்டவைகள் ஏராளம்.
அந்தப்பிள்ளைகளில் ஒருத்திதான் பொன்னனின் சின்ன மகள்.
8 ஆம் வகுப்பிலிருந்த அவள், பாதிநாட்கள் பள்ளிக்கே வரமாட்டாள். கேட்டால், பாய் முடையப்போனேன்.... பதனி காய்ச்சப்போனேன் என்று பதில் சொல்லுவாள். வயிற்றுக்கு உணவில்லாதபோது, செவிக்குணவு எதற்கு என்கிற நிலை. அவளுக்கு மட்டுமல்ல, தாழஏற எல்லா குழந்தைகளுக்கும் அப்படித்தான். அந்த ஊர் குழந்தைகளின் கள்ளமற்ற அன்பை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. காய்ச்சிய பதனியில் உடைச்ச கடலையை ஊறவைத்து கொண்டுவந்து தருவார்கள். சிலநாட்களில் அவர்களிடமிருந்து பனம்பழம் சுவைக்கக் கிடைக்கும். அந்தச் சுவையெல்லாம் இன்னும் நாவில் எங்கோ ஒளிந்துகிடக்கிறது.
*****
ஓலைப்படலைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும்போதே, பதனி கொதிக்கும் வாசனை நாசியைத் தழுவியது. குடிசைக்கு முன் யாருமில்லை. எல்லோரும் மேற்கில் வேயப்பட்டிருந்த ஓலைக்கொட்டகைக்குள் இருந்தார்கள். பெரிய மண் அடுப்பில் வாயகன்ற கொப்பரையில் கொதிவிட்டுக்கொண்டிருந்த பதனியை வியர்க்க விறுவிறுக்க கிளறிக்கொண்டிருந்தவள், என்னைக் கண்டதும் தன் அம்மாவிடம் அந்த வேலையைக் கைமாற்றிவிட்டு,
அழுக்குப் பாவாடையில் கையைத் துடைத்துக்கொண்டு, வணக்கம் அய்யா என்று சிரித்துக்கொண்டே வரவேற்றாள். ஓலைகள் அடுப்பில் மொடமொடத்து எரிந்துகொண்டிருந்தன. சுடர்ந்த தீப்பிழம்பின் லேசான புகைச்சலினூடேயிருந்து அவள் முழுவதுவமாக வெளியே வந்தபோது,
அந்த சின்னப்பெண்ணின் சிரிப்பில்
ஓர் அயர்ச்சி தெரிந்தது.
காய்ச்சி இறங்கியதும்
கருப்பட்டியாய் வார்ப்பதற்கான கொட்டாங்குச்சிகளை
வாளித்தண்ணீரில் அலசியெடுத்து விரித்துப்போட்ட துணியின் மீது வரிசைப்படுத்திக்கொண்டிருந்த பொன்னன், லேசாக நிமிர்ந்து
என் குரல் வந்த திசையைப் பார்த்து, வாங்க தம்பி....நல்லாருக்கீங்களா... செத்த உட்காருங்க தம்பி. இதோ இப்ப வந்திடறேன் என்றார். அவள் அம்மாவும் சிரித்துக்கொண்டே,
ஏய் ! இங்க வா. இந்தா இதப் போட்டு ஐயாவுக்கு காப்பி கலந்து குடுடீ
என்று அவளிடம் ஒரு சிரட்டையில்
கொதிவிட்டுக்கொண்டிருந்த கருப்பட்டிப் பாகை முகர்ந்து கொடுத்தாள்.
வாசல் மரத்தடியில் இருக்கையிட்டு
என்னை அமர்த்திவிட்டு, காப்பி போட குடிசைக்குள்ளே ஓடினாள் அந்தச் சின்னப்பெண். கண்ணாடிய பக்கமெல்லாம் பனங்காட்டு வாசனை.
ஓலையால் வேலியிடப்பட்ட கால் காணியளவு நிலத்தில், மண்பாதையை ஒட்டிய குடிசை. குடிசைக்குப் பின்னால் பொன்னன்
வளர்த்திருந்த ஆறேழு பனைகள்.
அவைகளில்
தூக்கணாங்குருவிக்கூடுகள் தோரணம் போல் காற்றில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன.
குருவிகளின் கீச்சொலி இசையாய் முற்பகல் காற்றில் மிதந்துகொண்டிருந்தது. வேலிக்குள் ஓராமாய் காய்ந்த பனையோலைகள்
குவியலாய் கிடந்தன.
இளம் கருப்பட்டியின் வாசனையுடன்
கடுங்காப்பி ஒரு தனி சுவையுடன் இருந்தது. இளகிய சாக்லேட்டைப் போல, முதல் மிடறில் மிதமாய் கசப்பதாய் பட்டது. பிறகு காப்பியை அருந்தி முடிக்கும்போது நாவோடு சேர்ந்து உள்ளமும் தித்தித்தது.
காய்ச்சிய பதனியை அடுப்பிலிருந்து இறக்கிவைத்துவிட்டு, ஒருவித கவனத்துடன் நடந்து வந்து,
கருப்பட்டிக்கின்னு பதனி இறக்குனா உடனே காய்ச்சிடணும் தம்பி. இல்லன்னா, வெயில்ல பதனி சலிச்சிடும் என்று சொல்லிக்கொண்டே அருகில்
அமர்ந்தார் பொன்னன். இறக்கிய பதனியை ஒருபக்கமாய் வழித்து, இன்னும் அதீதமாய் கிளறிவிட்டுக்கொண்டிருந்தாள் அவரின் மனைவி. குடிசைக்குள்ளே பொன்னனின் மூத்த மகள் நிறைமாதமாய் படுத்துக்கிடந்தாள்.
பாப்பாவை ஒழுங்கா பள்ளிக்கூடம் அனுப்பக்கூடாதுங்களா என்று ஆரம்பித்து, எங்கள் பேச்சு எங்கெங்கோ சிதறியது.
அவரோடு அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்ததில்
நெஞ்சம் பெரிதாய் கனத்துவிட்டது. விடைபெற்றுக்கொண்டு வெளியேறி நடந்தேன்.
*****
பெரியவளுக்கு பேறு வலி தொடங்கிவிட்ட போது, வெளியே காலம் சாய்ந்துகொண்டிருந்தது.
வேலைக்குச் சென்றிருந்த
பொன்னன் இன்னும் வந்துசேரவில்லை. அம்மாக்காரி துடித்துப்போனாள். தண்ணீரில் துணியை நனைத்து வியர்த்து வழிந்த அக்காவின் முகத்தை துடைத்துக்கொண்டிருந்தாள் சின்னப்பெண். அம்மாக்காரி ஓடிச்சென்று செல்லம்மா
கிழவியைக் கூட்டிவந்தாள். இருளானது, மெதுவாக பொழுதின் அனிம வெளிச்சத்தை விரட்டிக்கொண்டிருந்தது. கிழவியின் கைவைத்தியத்திற்கு இடுப்பு வலி போக்கு காட்டியது. கட்டிக்கொடுத்த ஆறு மாதத்திலேயே வாகன விபத்தில் கணவனை இழந்துவிட்டு சூலியாய் வந்து சேர்ந்த மகளின் கலங்கிய முகத்தைப் பார்க்கும்போது அம்மாக்காரிக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.
"இந்தப் பாழாப்போன மனுசன்,
இந்நேரத்துல எங்க போயி
தொலைஞ்சாரு " .
*****
பருத்த அடிமரத்தை ஒரு பிள்ளையைத் தழுவுவது போல கட்டிப்பிடித்தார் பொன்னன்.
10 வயதில் பனையேறப் பழகத் தொடங்கிய நாளில், முதன்முதலில் மரத்தை கட்டிப்பிடித்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. பனையின் கருக்கு, வயிற்றிலும் நெஞ்சிலும் உறுத்தியது. தலையை நிமிர்த்தி, செவிகளைக் கூர்மையாக்கினார். காற்றிலசையும் ஓலைகளின் ஓசையிலிருந்தே மரத்தின் உயரத்தை அனுமானித்த பொன்னன், நுனிப்பாதங்களை உந்தி வைத்து, மிகச் சரியாக பதினேழே உக்கில் மரத்தின்உச்சியை அடைந்தார். ஓலையை இடது கையால் பற்றிக்கொண்டு,
சேமங்காலு போட்டமர்ந்தார், இடுப்பில் செருகியிருந்த அரிவாளை பொன்னன் உருவிய சில நொடிகளில், நுங்கு குலைகள் மரத்தடியில் நிரலாக விழத்தொடங்கின.
வரப்புக்கரையில் இருக்கும் வரிசைப் பனையில் குலை வெட்டுவது என்றால் பொன்னனுக்கு கரும்பு சாப்பிடுவது போல. கீழே இறங்காமலேயே, அப்படியே முதல் மரத்திலிருந்து அடுத்த மரத்திற்குத் தாவிவிடுவார். மரத்திற்கு மரம் ஓலையைப் பற்றிக்கொண்டு தாவுவது பொன்னனுக்கு கால் வந்த கலை. இத்தனை வயதில் ஒருமுறை கூட தவறி கீழே விழுந்தது கிடையாது. அவர் அடிக்கடி சிரித்துக்கொண்டே தன் சின்ன மகளிடம் சொல்வார்;
" பனைமரம் தாய் மாதிரிம்மா.
அது ஒருபோதும் யாரையும்
கைவிடாது. "
நுங்கு வெட்டிற்கு பொன்னனை அரைமனதாக கூலிக்கு அமர்த்திய அந்த நடுத்தர வயதுக்காரன், பொன்னனின் திறமையைக் கண்டு வியந்துபோனான். கண்பார்வை இல்லாத பொன்னன்,
கை நிதானத்திலேயே குலைகளை விரைவாய் வீழ்த்தியது, சங்கப் பாடல்களில் பனம்பூச்சூடி வாள் வீசிய பெயர் தெரியாத ஒரு போர்வீரனை நினைவுபடுத்தியது. பேசிய கூலியை விட சற்று அதிகமாகவே பணம் கொடுத்தான். கூடுதலை மறுத்துவிட்டு குலையொன்றை சின்ன மகளுக்காக எடுத்துக்கொண்டார் பொன்னன்.
*****
பேருந்திலிருந்து இறங்கிய பொன்னன், வீடடையும் முன்பே செய்தியறிந்து மருத்துவமனைக்கு விரைந்தார். பொன்னனுக்கு எல்லாமே கால் நிதானம், கை நிதானம்தான். அவர் நடந்துபோவதை பார்க்கும் யாரும், அவர் பார்வையற்றவர் என்று சொல்லிவிடமுடியாது. பழகிய ஊர்ப்பாதைகளின் பள்ளமும் மேடும்
பொன்னனுக்கு அத்துபடி. ரேசன் கடைக்கு டீக்கடைக்கெல்லாம் கூட எல்லோரையும் போலவே போய்வந்துவிடுவார்.
ஒரு தனியார் மருத்துவமனையில்தான் பெரியவள் சேர்க்கப்பட்டிருந்தாள். குழந்தை புரண்டு கிடக்கிறதென்று சொல்லி, சில மணிநேர போராட்டங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் அவள் ஒரு சூம்பிய ஆண் குழந்தையை
அறுவை சிகிச்சையின் உதவியால் பெற்றெடுத்தாள். அந்த மகப்பேறு மருத்துவமனையில் அரசுக்குத் தெரியாமல் கருவிலிருக்கும் குழந்தையின் பால் வகைமையை அறிவிக்கும் தொழில்நுட்பம் கள்ளத்தனமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தது.
பாளை விட்டாதான் பனை மரம் ஆணா பெண்ணான்னு தெரியும். ஆனால் நவீன மருத்துவம் வயிற்றிலிருக்கும்போதே, பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்று சொல்லிவிடுகிறதே என்பது அந்த பனங்காட்டு பாமர மனிதர்களுக்கு பெருவியப்புதான்.
ஆறு நாள் மருத்துவமனை ஓய்வுக்குப் பின், தாயும் சேயும் வீடடைந்தார்கள்.
அவர்களின் வீடு என்பது வெறும் ஓலைக்குடிசைதான். எல்லா பனையேறிகளுக்கும் ஓலைக்குடிசைகள்தான் போக்கு.
செங்கல் வீடுகளெல்லாம் எப்போதும் கனவுதான். மீன் குஞ்சு கடலில் நீந்திக் கிடப்பதைப்போல, நாளெல்லாம் பனங்காட்டில் நீந்திக் கிடந்தார்கள்.
ஓலைக்குடிசையில் ஒண்டிக்கொண்டிருக்கும் பொன்னனுக்கு, மகளின் பேறுக்கான மருத்துவமனை செலவு,
பேரன் பிறந்த பெருமகிழ்வை துய்க்கவிடாமல், பணத்திற்காக அலையவைத்துக்கொண்டிருந்தது.
கடன் வாங்கி ரூபாயை கட்டி முடிப்பதற்குள் பொன்னனுக்குப்
போதும் போதுமென்றாகிவிட்டது.
போதாதற்கு சூம்பிய குழந்தையைத் தேற்ற, நிறைய செலவழிக்க வேண்டியதாயிற்று. தலைப் பேறு தாய் வீட்டில்தான் பார்க்கவேண்டும் என்று, என்றோ யாரோ ஏன் சொல்லிவைத்துவிட்டுப் போனார்கள் என்று நொந்துபோகுமளவிற்கு பொருளாதார முடை, பொன்னனின் ஓலைக்குடிசையை
முடைந்துகொண்டிருந்தது. மகளின் திருமணத்திற்கு வாங்கிய கடனே இன்னும் அடைந்தபாடில்லை.
பனையேறும் தொழில் பட்டுப்போன பிறகு பெரும் சம்பாத்தியத்திற்கு பொன்னன் எங்கே போவார். விவசாயக்கூலியாய் பொன்னனின் காலம் திணறிக்கொண்டிருந்தது.
அரிதாக ஓலை வெட்டப் போவார். அந்த வேலியோர கால் காணி நிலம் மட்டுமே பொன்னனின் முன்னோர் சொத்து. பனை மரம் ஏறி ஏறி நெஞ்சு காய்த்து, அந்த நிலத்தில் வாழ்வாடிக்கிடந்தவருக்கு பனையை விட்டால் வேறெந்த வேலையும் தெரியாது. பதனி பருவமாயிருக்கும் நாட்களில், வீட்டில் கொட்டாங்குச்சியில் கருப்பட்டி வார்த்து
காலமோட்டிக்கொண்டிருந்தார்.
கண்ணும் தெரியல. கையில தொழிலும் இல்ல. உன்ன நம்பி எப்படிப்பா கடன் கொடுக்கறது என்று
சிலர் சொன்னபோது, கண்ணில்லாத பொன்னன் கண்ணுடைந்துபோனார்.
*****
இதெல்லாம் நடந்தது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. நானே தெளித்து, நானே சமைத்து, நானே துவைத்து, ஒரு ஓட்டுவீட்டில் தங்கியபடி, அந்த ஊரில் ஒரு நடுநிலைப்பள்ளி ஆசிரியனாய் பணிபுரிந்த ரொம்பவும் அலுப்பான நாட்கள் அவை. ஆனால், பனங்காட்டில் வாழ்வாடிக்கொண்டிருந்த அந்த வெள்ளந்தி மக்களுக்கு நடுவே,
சில ஆண்டுகள் துய்த்தது,
என் வாழ்நாளில் மறக்கமுடியாதது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய
நம் மொழியின், நம் இனத்தின் வரலாற்றை பனையோலை சுவடிகளில்தான் நம் முன்னோர்கள் எழுதித் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆரியர்கள் கூட நம்மிடமிருந்துதான் பனையோலையில் எழுதுவதை கற்றுக்கொண்டார்களாம்.
பனையோலையில் தொகுத்தவர்களில் பெருவாரியான பேர்கள், கல்வி கற்ற பனையேறிகளாய் கூட இருந்திருக்கலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த பனையை ஆளும் பனையேறிகளின் வாழ்வை எழுதிச் செல்லத்தான் இன்று நம்மிடையே ஆட்களில்லை.
உழுகுடிகள் வாழ்ந்த ஆற்றங்கரை மற்றும் சமவெளி நிலங்களைத் தாண்டி, தமிழ்நிலத்தின் மற்ற நிலப்பகுதிகள் பெரும்பாலும் பனங்காடுகளாய்த்தான் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன.
பல நூற்றாண்டுகளாக
பல ஆட்சியாளர்கள், பல்வேறு காரணங்களுக்காக பனையை அழிக்கத் தொடங்கி, கடைசியில் இன்று ஊருக்கு சில மரங்களே எஞ்சி நிற்கின்றன.
பனையின் வரலாற்றையும்,
பனையோலையில் தாலி செய்த வரலாற்றையும், காதலில் தோற்றவன்
பனையோலையில் குதிரை செய்து மடலேறிய வரலாற்றையும்
சொல்லத் தயங்குகிற
பள்ளிப்பாடங்கள்,
நம்மீது அரை நூற்றாண்டாக, தேவையற்ற வெட்டி வரலாறுகளைத் திணித்து வைத்திருக்கின்றன.
*****
தீபத் திருநாளில் கரித்தூளோடு
பனம்பூவை கருக்கித் தூளாக்கி சின்னப்பெண்ணுக்கு கார்த்தி
செய்து தருவார் பொன்னன்.
மங்கிய அந்தியில் தீப்பொறி பறக்க, கார்த்தி சுற்றி மகிழும் அக்குழந்தையின் முகம்,
ஓர் அணங்கைப் போல அழகாய் ஒளிர்வதைக் காண கண்ணில்லை என்றாலும் நெருப்பிலிட்ட பனம்பூவின் மெல்லிய வாசனை, பொன்னனின் நாசியைத் தழுவும்போது, அவரின் மணக்கண்கள் திறந்துகொள்ளும்.
மகள்களை மனைவியை மட்டுமல்ல,
மனிதர்களையும் மரங்களையும் கூட, அவர் மனக்கண்ணில்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை எல்லாமே வாசனைதான். மனைவிக்கு ஒரு வாசனை. மரத்திற்கு ஒரு வாசனை. மண்ணிற்கு ஒரு வாசனை.
*****
குருத்துக் கட்டிய பனைகளில் பதனிக்காக பாளை சீவி,
பானைகளைக் கட்டித் தொங்கவிடுவார்கள். பானைக்குப் பதிலாக முன்பெல்லாம் சுரை குடுக்கைகள் கட்டுவார்கள்.
ஆனால் அந்த வழக்கமெல்லாம் என்றோ மலையேறிவிட்டது.
தை - மாசியில் தொடங்கும்
பனையின் பருவம்,
ஆடி பிறக்கும்போது ஓய்ந்துவிடும். அந்த சமயங்களில் பெரும்பாலான பனையேறிகள் தேங்காய் வெட்டப் போய்விடுவார்கள். ஆனால் பொன்னன் தென்னை ஏறுவதில்லை
என்றொரு புலனடக்கம் கொண்டிருந்தார். புலனடக்கம் இல்லாத சில பனையேறிகள், சுண்ணாம்பு தடவாத பானைகளில் கள் இறக்கிக் குடிப்பார்கள். ஆனால் பொன்னன் அவர் வாழ்நாளில் கள் இறக்கியதுமில்லை. பருகியதுமில்லை.
மிதமான மயக்கத்தில் வீழும் கள்ளாடிகள், போதையில் தங்கள் வாழ்வே நிமிர்ந்துவிட்டதாக எண்ணிக்கொள்வார்கள். உக்கி போட்டு உக்கி போட்டு வீங்கிப்போயிருக்கும் தங்கள் முழங்கால் மூட்டுகளிலிருந்து,
எல்லா வலியும் பறந்துவிட்டாதாக உணர்வார்கள். கொஞ்சம் துணிச்சல் உள்ள பனையேறிகள், கள் இறக்கி வியாபாரம் செய்வார்கள். 90 களில் இளவட்டங்களாய் இருந்தவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், எந்த ஊரில் அருமையான கள் கிடைக்கும் என்று நீங்கள் தேடியலைந்த நாட்கள், இந்நேரம் உங்கள் நினைவுக்கு வந்திருக்கும்.
ஊரின் ஏரிக்கரை முழுக்க நூற்றுக்கணக்கான பனைகள், கரையை உடையவிடாமல் கவனமாய் இருத்தி வைத்திருந்த காலமெல்லாம் மறைந்து, இன்று பனைமரங்கள் இல்லாத ஏரிக்கரைகள், தண்ணீரைத் தக்கவைக்க இயலாமல் சரிந்து கிடக்கின்றன.
*****
தனது குடிசைக்குப் பின்னாலிருந்த பனைமரங்களுக்கு கீழே கயிற்றுக்கட்டிலைப் போட்டு, கைகளை தலைக்கு வைத்தபடி படுத்துக்கிடந்தார் பொன்னன். பனையில் கூடு கட்டியிருந்த குருவிகளின் கீச்சுக்குரல்கள் அடங்கிவிட்டிருந்தன. ஓலைகள் மட்டும் ஒன்றோடொன்று உரசி சலசலத்துக்கொண்டிருந்தன. கண்மூடிக் கிடந்த பொன்னனுக்குள்
காட்சிகள் வடிவமில்லாமல் நகர்ந்துகொண்டிருந்தன. வாங்கி வைத்திருக்கும் கடன், மகளின் எதிர்காலம், பேரனின் நிலைமை, சின்ன மகளையாவது படிக்கவைத்துவிடவேண்டும் என்பது குறித்தெல்லாம் எண்ணி விசனப்பட்டுக்கொண்டிருந்தார்.
பனைத்தொழிலும் செத்துவிட்டது.
பருவமழையும் போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. விவசாய வேலைகளும் குறைந்துவிட்டன. அரிதாக கிடைக்கும் வேலைகளுக்கும் யாரும் கூப்பிடுவதில்லை. வயதான
கண் தெரியாத தன்னை அவர்கள் மறுப்பதிலும் ஒரு நியதி இருக்கிறது.
பிறந்தது ரெண்டும் பொட்டப்புள்ளயா போச்சு. இனி என்ன செய்து என் குடும்பத்தை காப்பாற்றப் போகிறேன்.
ஆயா... பத்ரகாளி ! நீதாம்மா எனக்குத் துணையா இருக்கணும்
என்று தன் குலசாமியை வேண்டியபடி
கட்டிலில் கண்ணற்று திக்கற்று புரண்டுகொண்டிருந்தார் பொன்னன்.
மட்டை அரிசியைத் தின்று தின்று உடம்பு மரத்துவிட்டது. பனையேறும்போதும் பாளை சீவும்போதும் உண்டான காயங்களும் சிராய்ப்புகளும் நெஞ்சையும் மரத்துப்போக செய்துவிட்டது. மொத்தத்தில் பொன்னனுக்கு வாழ்க்கையே மரத்துப்போய்விட்டது போலிருந்தது.
ஆறேழு பனைகளின் ஒலைகளுக்கூடாக நிலவு, துண்டு துண்டாய் ஒளிவீசிக்கொண்டிருந்தது.
வாழ்வில் முதன் முறையாக,
தனக்கு கண் இல்லையே என்று
கண் கலங்கினார். அப்போது பொன்னனுக்கு சட்டென்று பெருமதியானதொரு ஆவேசம் எங்கிருந்தோ நெஞ்சில் மூண்டது.
*****
அலைந்து திரிந்து அந்த வாரத்தின் நடுநாளில், வெளியூர் தோப்பொன்றில் பாளை சீவும் வேலையைப் பிடித்திருந்தார். ஆவேசத்துடன் கொஞ்சம் தெம்பும் வந்தது. 100 மரங்களுக்கு பாளை
சீவி விடவேண்டும். 2 நாள் வேலை.
ஒரு மரத்துக்கு 2 முறை பாளை சீவ வேண்டும். மரத்திற்கு 60 ரூபாய் கணக்கில், எப்படியும் 6000 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிடலாம். புதிய ஊரில் இறங்கியவரை,
அவரது மனைவி கைப்பிடித்து அழைத்துப்போனாள். இதுபோல எத்தனையோ ஊருக்கு எத்தனையோ முறை கைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறாள். ஆனால் பதனி காய்ச்சி, பாய் முடைந்து உழைத்துக் களைத்த அந்தக் கைகளில், தாய்மையின் பிடிமானம் பற்றிக்கொண்டிருந்ததை
அன்றுதான் பொன்னன் உணர்ந்தார்.
பொன்னனை பொறுத்தவரை பனை
என்பது கற்பக மரம்தான். தென்னை வேரு ரெண்டடிக்கு மேலே உள்ளே போவாது தம்பி. பனை வேரு அப்படியில்ல. நெட்டாங்குத்தா நெலத்துக்குள்ள ரொம்பத் தொலவு போயி, தண்ணிய அப்படியே நிறுத்தி வைக்கும். இந்த மண்ணுக்கேத்த மரம்னா அது பனை மரம்தான் என்று அடிக்கடி சொல்லுவார்.
மழையை வரவைக்கிற பச்சயம் பனை மரத்துக்கு நெறைய இருக்கு. நொங்கு, பதனி, கள்ளு, கருப்பட்டி, பழம், கொட்டை, கிழங்குன்னு ... சொல்லிகிட்டே போகலாம்.
ஓலையை வெட்டி கூரை மேயுறது. பாய் முடையுறது. பொட்டி முடையுறது. வேலியடைக்கறது. சாய்ஞ்சாலும் வீட்டுக்கு உத்திரமா நிக்கிறதுன்னு எத்தனையோ இருக்கு.
ஆனா இப்ப பனங்காடெல்லாம் பாதிக்கு மேல அழிஞ்சிடுச்சி. இதுக்கு மேல இந்தத் தொழிலுக்கு, அடுத்த தலமுறைய கொடுக்க மனசில்ல. அவுங்களை படிக்க வைக்கப்போறோம். எனக்கெல்லாம் பள்ளிக்கூடம் போகுணுமின்னு எம்புட்டு ஆசை இருந்தது தெரியுமா !
தினை இத்தினி உதவி செஞ்சாலும் பனை இத்தினிக்கு நெனைக்கணும்னு பனை மரத்தப் பத்தி அய்யன் பெருமையா சொன்னதையெல்லாம் இப்ப யாரு மதிக்கிறாங்க. பத்தாக்குறைக்கு, அரசாங்கமும் எங்கமேல அனுசரணை காட்டல..... இந்தப் பாடெல்லாம் எங்களோடயே முடிஞ்சு போகட்டும்
என்று மூச்சுவிடாமல் சொல்வார்.
அவர் சொல்வதைக் கேட்கும்போது, ஒரு தாவர இனம், இந்த நிலத்தில் தன் இனத்தைச் சுருக்கிக்கொள்ளும் அபாயகாலத்தின் சாட்சிகளாக நாமும் இருந்துகொண்டிருக்கிறோமோ என்கிற குற்றவுணர்ச்சி உண்டாகும்.
தோப்பின் முதல் பனையை ஒரு குழந்தையைக் கட்டியணைப்பது போல கட்டிப்பிடித்து, தலையை நிமிர்த்தி செவிகளைக் கூர்மையாக்கினார். காற்றிலசையும் ஓலைகளின் ஓசையிலிருந்தே மரத்தின் உயரத்தை அனுமானித்த பொன்னன், நுனிப்பாதங்களை உந்தி வைத்து, மிகச் சரியாக இருபது உக்கில் உச்சியை அடைந்தார்.
இடுப்பில் செருகியிருந்த பாளைக்கத்தியை உருவி சீவத்திடங்கினார். கருங்குளவிகள் காதோரம் விர்ரென்று பறந்தன. பிற்பகலுக்குள்
30 மரங்களுக்குத்தான் அவரால் பாளை சீவ முடிந்தது. நெஞ்சு நெருப்பாய் எரிந்தது. இளவட்டமாய் இருந்த நாட்களில் நாளொன்றுக்கு
50 மரங்களுக்குமேல் பாளை சீவிய பொன்னன், இன்று ஓய்ந்துபோய்விட்டார். உடலை விட அவரின் மனது ஓய்ந்துவிட்டது. இதற்குமேல் இன்று தன்னால் பனையேற முடியாது என்று தெரிந்திருந்தும், அவர் மனதில்
அந்த 6000 ரூபாய் மின்னலாய் வெட்டி மறைந்தது. கடன்காரர்களின் கறார் பேச்சுக்கள் காதுக்குள் ஒலித்தன.
மீண்டும் அடுத்த பனையில் முன்பைவிட ஆவேசமாய்
கால் உந்தினார். மூப்பும் களைப்பும் மேவிய உடம்பில் எக்கச்சக்கமாய் வியர்த்து வழிந்தது. அவர் அனுமானித்ததை விட, மரம் உயரமாகச் சென்றுகொண்டிருந்ததாகப் பட்டது.
உக்கியைப் பலமாய் போட்டு ஏறினார்.
தலைக்குள் கிறுகிறுத்தது. ஆனாலும் சிலிர்த்துக்கொண்டு ஏறினார்.
வரப்பில் அமர்ந்திருந்த அவரின் மனைவி, அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மனதில் அப்போது என்னவெல்லாம் ஓடியிருக்கும் என்பதை உங்கள் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.
உச்சிக்கருகில் கையை மரத்தில் ஊன்றி உந்தியபோது, எதிர்பாராதவிதமாய் பொன்னனுக்குத் தன் பனையேறி
வாழ்க்கையில் முதன்முறையாக வழுக்கியது.
சுதாரிக்கமுடியாமல் அப்படியே சரிந்து, தரையை நோக்கி மல்லாக்க விழுந்துகொண்டிருந்த பொன்னனை நோக்கி அவர் மனைவி அலறியபடியே ஓடிவந்துகொண்டிருந்தாள்.
●
ச. அருள்வடிவேல்
91598 46820
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்