பிரகாஷ் T
சிறுகதை வரிசை எண்
# 157
"வாழ்த்துக்கள்"
"என்ன வாழ்க்கை இது. எவ்ளோ தான் இன்னும் சமாளிக்கிறது. இப்படி ஒரு வாழ்க்கையை கெட்டியா புடிச்சிகிட்டு தவிக்கிறதுக்கு சாவுறது எவ்ளவோ மேல். இதுக்கு மேல எல்லாம் என்னால சமாளிக்க முடியாது" என சொல்லியபடி ஆளில்லாத தன் வீட்டில் தனக்கான அறையில் கதவு ஜன்னல் என எதிலும் சிறுவெளிச்சம் கூட எட்டிபார்த்துவிடாத அளவில் தாளிட்டு உள்ளிருந்த கட்டிலில் அமர்ந்தபடி தன் இடது கையில் இருந்த சிறு கத்தியை கொண்டு தன் வலதுகையின் மணிகட்டின் மேல் அறுத்துக்கொள்ள சென்றான் அருண்கார்த்திக்.
'ப்பா.... என்ன ஒரு தைரியமான முடிவு அதும் இந்த சின்ன வயசுல.' நீயும் இருக்கியே எவன் எது சொன்னாலும் அவனுக்கென்ன அவன் சொல்லிட்டு போறான்னு செக்குமாடு மாதிரி இருந்தியே, இருந்து என்னத்த கிழிச்ச. நீயும் இப்படி யோசிச்சிருந்தா வாழ்க்கைய எப்படி எல்லாம் டார்ச்சர் பண்ணிருக்கலாம். வாழ்க்கைல உருப்படியா படிச்சி, நல்ல வேலைக்கு போயி நல்லா செட்டில் ஆகியும் காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ண முடியல, சொந்தக்காரன் எவனும் பொண்ணு கொடுக்க ஏனோ தயாரா இல்லை, வெளிலயும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கலனு பொலம்பிட்டு இருந்துருப்பியா. அதுக்கெல்லாம் தம்பி மாதிரி துணிச்சலான முடிவு எடுக்குற தைரியம் வேண்டும் உன்கிட்ட எங்க அதெல்லாம். சுத்த வேஸ்ட் யா நீயி.
ஆமா இவரு அப்படியே நல்லா வாழ்ந்தாரு. நீங்க செஞ்ச செய்கை எனக்கு தெரியாதுல. நீ எப்படி எல்லாம் வாழ்ந்தன்னு எனக்கு தெரியாதா. "நீயும் இப்படி தான் சிக்கி சின்னாபின்னமாகி வந்து நிக்கிற, என்ன இப்ப சந்தோசமா இருக்க அவ்ளோ தான்." என்னை கிண்டல் பண்ற முன்னாடி நீ எப்படி வாழ்ந்தன்னு யோசிச்சிக்கோ.
கையை அறுத்துக்கொள்ள சென்ற அருண்கார்த்திக் தன் அறையில் திடீரென கேட்ட இருவரின் குரல் கேட்டு பயத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தபடி தன் பின்பக்கம் திரும்ப அங்கே இருவர் நின்று பேசி கொண்டிருந்தனர். இருவரும் சிலபல வயதுகள் வித்தியாசத்தோடு பெரியவர், இளைஞர் ஆகவும், அதே சமயம் ஒரே மாதிரியான ஆடையை வயதிற்கு ஏற்ப கொஞ்சம் வித்தியாசங்களோடு அணிந்திருந்தனர்.
யாரு இவனுங்க என் ரூம்ல என்ன பன்றாங்க, அதும் சாத்தி வச்சிருக்க ரூம்குள்ள எப்படி வந்தானுக, என யோசித்தபடி அவர்களை உற்றுபார்க்க அதிர்ந்து போனான். இருவரின் வயதில் பெரியதாய் வித்தியாசம் இருந்தாலும் முக அம்சங்கள் கிட்டத்தட்ட ஒற்றுமையாகவே தெரிந்தது.
அட தம்பி நீங்க பாயிண்ட் புடிச்சி தான் பேசுறீங்க, ஆனா என் வயச இன்னும் தொடலைல. அப்போ தெரியும் நான் எவ்ளோ சந்தோசமா இருக்கன்னு.
அய்யா பெரியவரே எனக்கு நீங்க சொல்ற மாதிரி சின்ன சின்ன பிரச்சனை இருந்தாலும், நான் வாழ்ந்துட்டு தான் இருக்கேன். உங்களை மாதிரி வாழ தான் போறேன். ஆனா நீங்க சப்போர்ட் பண்ணி பேசிட்டு இருக்கீங்களே, இந்த வயசுலயே அவன் அப்பன் தாத்தன் பிரச்சனை எல்லாம், தான் ஒண்ணா சந்திச்ச மாதிரி தற்கொலை பண்ணிக்க போறானே அவன மாதிரி கோழைத்தனமா போய் சேர முடிவு பண்ணல.
அட ஏன் இத்தனை கோபம் சொன்னது சும்மா தான். என்னதான் வயசு மாறுனாலும் அவன்கிட்ட இருக்க அவசர புத்தி மாறாம இருக்க. சரி அது இருக்கட்டும் நீ சொன்னதும் தான் ஞாபகம் வருது. ஆமா இங்குட்டு ஒருத்தன் கைல கத்தி வச்சி வித்தை பண்ணிட்டு இருந்தானே அவன் என்ன ஆனானு பாரு.
என பெரியவர் சொல்ல இருவரும் அருண்கார்த்திக் பக்கம் திரும்பினர். அங்கே அவன் இவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்.
டேய் தம்பி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா. நீ பேசுன பேச்சுக்கு நீ போய் சேர்ந்து ரொம்ப நேரம் ஆகி இருக்கணுமே என பெரியவர் கேட்டார்.
யோவ் நீ பெருசுன்றதை அப்பப்போ நிரூபிச்சிட்டே இருக்க, அவன் செத்தா நாம எங்க இங்க பேசிட்டு இருக்கது.
தம்பி இந்த வயசுல கோவக்கார ஆளா இருந்தாலும் நல்லாவே பேசுரிங்க கீப் இட் அப்.
அதெல்லாம் இருக்கட்டும் அவன பாருங்க எதோ விநாயகர் சதுர்த்தி அன்னைக்கு ஆத்துல கரைக்க புடிச்சு வச்ச புள்ளையார் மாதிரி அப்டியே பாத்துட்டு இருக்கான். அவன முதல்ல என்னனு கேளுங்க.
டேய் தம்பி.. என இருவரும் அவனை பார்த்து கூப்பிட்டனர்.
சட்டென நிதானத்திற்கு வந்தவன், யார் யாரு நீங்க ரெண்டு பேரும். எப்படி என் ரூம்குள்ள வந்திங்க.
நாங்க எப்போ வெளில போனோம் உள்ள வரதுக்கு. இங்க தானே இருக்கோம்.
என்னது இங்கேயா. என் ரூம்குள்ள நீங்க எப்படி இருப்பிங்க என அதிர்ச்சியாய் கையில் வைத்திருந்த கத்தியை அவர்கள் இருவரையும் நோக்கி நீட்டியப்படி கேட்டான் அருண்கார்த்திக்.
டேய் டேய் தம்பி என்ன இது, நீ கையை அறுத்துக்க வச்சிருந்த கத்தியை எங்கபக்கம் காட்டுற. வன்முறை தவறு தம்பி. கத்தியை கீழ வை கீழ வை.. என பெரியவர் சொன்னார்.
சிறிது நேரம் ஏதோ யோசித்து கொண்டிருந்த அருண்கார்த்திக் தன் கையில் இருந்த கத்தியை கட்டிலில் போட்டுவிட்டு, அவர்களிடம் பேச தொடங்கினான்.
ஆமா நீங்க யாரு, இங்க என்ன பண்றீங்க, ரெண்டு பேரும் பாக்க கிட்டத்தட்ட ஒரே மாதிரி வேற இருக்கீங்க, இவ்ளோ வயசு வித்தியாசத்துல ட்வின்ஸ்க்கும் வாய்ப்பில்லை. அப்போ நீங்க என்ன அப்பா மகனா?
எதே அப்பா மகனா? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என கேட்டு இருவரும் சத்தமாக சிரித்தனர்
யோவ் யோவ்.. இருங்க எதுக்கு இப்படி ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க, வித்தியாசமான சத்தம் கேட்டு வெளில இருந்து யாராச்சும் வந்து என்னாச்சுனு சந்தேகமா கேக்க போறாங்க.
ஹாஹாஹா ஹாஹாஹா, இருவரும் தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தனர்
இந்தாளுக என்ன பைத்தியமா. சொல்ல சொல்ல சிரிச்சிட்டே இருக்கானுக யோசித்தப்படியே, நீங்க சொன்னா கேக்க மாட்டிங்க இருங்க என கட்டிலில் இருந்த கத்தியை மீண்டும் எடுக்க போனான்.
ஐயோ தம்பி தம்பி! எதுக்கு இவ்ளோ அவசரம் உனக்கு. ஆ ஊ னா கத்தியை தூக்கி கிட்டு. எல்லாத்துக்கும் இப்படி அவசரப்பட்டா வாழ்க்கைல நீ எதையும் தெரிஞ்சிக்காம புரிஞ்சிக்காம வாழ்க்கைல எதையுமே அனுபவிக்காம தான் இருக்கனும் என பெரியவர் பதறியபடி சொன்னார்.
ஆமா வாழ்ந்து முடிச்சு அனுபவிச்சு இப்போ அறிவுரை சொல்ற இவர் மாதிரி ஆகணும்னா கொஞ்சம் எல்லாத்துலயும் பொறுமை காட்டு. என இளைஞன் நக்கலாய் சொன்னான்.
பாக்க கிறுக்கன் மாதிரி இருந்தாலும், சின்ன கேப் கிடைச்சதும் என்னையே கலாய்க்கிற பாத்தியா வாவ் தம்பி நீ.
ஆரம்பிச்சிட்டீங்களா திரும்ப ரெண்டு பேரும். கடைசி வர என் கேள்விக்கு பதில் வராது அப்படி தானே என கோவமானான் அருண்கார்த்திக்.
சரி சரி கோவப்படாத, சொல்றோம் இரு என இளைஞன் பேச தொடங்கினான்,
நாங்க ட்வின்ஸ்ம் இல்ல, அப்பா மகனும் இல்ல. அதைவிட முக்கியமா நாங்க ரெண்டு பேர் இல்லை.
பின்ன?
மூணு பேர், ஆனா அவன் எங்களை விட சின்ன பையன், ஏன் அவனுக்கு உன் வயசு தான் இருக்கும்னு வச்சிக்கயேன். ஆளு கூட அப்படியே உன்னை மாதிரி தான்.
மூணு பேரா? அட ச்சை அப்போ அவனும் இந்த ரூம்குள்ள தான் இருக்கானா. இதென்ன என் ரூம் ஆ, இல்லை சத்திரமா. அவன் எங்க ஒளிஞ்சிருக்கான் அவனையும் வெளில வர சொல்லுங்க என கோபமானான்.
டேய் மூணாவது உருப்படி நீ எங்க இருக்க, என்னை தேட வைக்காம நீயே வெளில வந்துரு சொல்லிட்டேன் என சுற்றும் முற்றும் பார்த்தான்.
அருண்கார்த்திக் பேசுவது கேட்டு இருவரும் மீண்டும் சிரிக்கத் தொடங்கினர்.
ஐயோ இவனுங்க சிரிக்கிறத தவிர வேற எதையும் முழுசா செய்ய மாட்டானுக போல. என எரிச்சலாய் புலம்பினான்.
தம்பி, நீ தேடுற அந்த மூணாவது ஆள் அதாவது எங்களோட சின்ன வயசு ஆள் வாழ்க்கையோட கஷ்டத்தை தீர்க்க முக்கியமான வேலைல இறங்கி இருக்கார் அதனால உன் கண்ணுக்கு அவர் தெரியாமட்டார்.
கண்ணுக்கு தெரியாமாட்டானா? என்ன ஏதோ மாயாவி கணக்கா கதை உட்டுட்டு இருக்கீங்க.
அட கதையும் இல்லை புராணமும் இல்லை, ஆனா உண்மை தம்பி. சரி எங்கள பத்தி சொல்றதுக்கு முன்னாடி உன் பேர் என்னனு தெரிஞ்சிக்கலாமா. ஏனா நாங்க ரெண்டு பேரும் பேர் இல்லாமலே பேசிட்டு இருக்கோம்.
என்னோட பேர் அருண்கார்த்திக். ஆமா உங்க ரெண்டு பேர் என்ன?
அருண்கார்த்திக் ஹ்ம்ம் நல்ல பேர்,
நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லல,
அது அது.. உன் பேர் அருண்கார்த்திக்னா , என் பேர் AK32, அந்த பெருசு பேர் AK48
எதே Ak32 AK48 ஆ, என்னங்கயா பேர் கேட்டா ஏதோ பிராஜக்ட் நம்பர் சொல்லிட்டு இருக்கீங்க,
புராஜாக்ட்ம் இல்லை கம்மர்க்கட்டும் இல்லை, அதான் எங்க பேர், பேர கேட்ட சொல்லிட்டோம் அப்புறம் என்ன டவுட்டு உனக்கு.
சரி அது இருக்கட்டும், உங்களுக்கு இங்க என்ன வேலை, எப்படி இங்க வந்திங்க அதை முதல்ல சொல்லுங்க.
அதை சொல்லனும்னா, நீ ஒரு விஷயத்தை சொல்லணும். என சொன்னான் AK32
என்ன என்ன சொல்லணும்?
இல்ல கொஞ்சம் முன்னாடி கைல கத்தி வச்சிக்கிட்டு, பெரிய சினிமா டயலாக் எல்லாம் பேசி வித்தை காமிச்சிட்டு இருந்தியே எதுக்கு? என கேட்டார் AK48
அது அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு. நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க.
எங்களுக்கு இங்க அதைவிட்டு வேற என்ன வேலை இருக்கு. நீ சொல்லு தெரிஞ்சிப்போம்.
அது அது...
அட சொல்லுய்யா சும்மா இழுக்காம என சொன்னான் AK32
எனக்கு வாழ்க்கைல சில பிரச்சனை. அதுக்கு என்ன பண்றதுனு தெரியல, அதான்.
எது வாழ்க்கைல பிரச்சனை யா அப்படி எத்தனை வயசு வாழ்க்கையை சார் வாழ்ந்துட்டிங்க? ஹாஹாஹா என சிரித்தார் AK48
யோவ் சும்மாருயா. உன் நகைச்சுவை திறமையை காமிக்கிறேன்னு தற்கொலை பண்ணிக்க இருந்தவனை கொலைகாரன் ஆக்கிடாத பெருசு என குறுகிட்டார் AK32
நீங்க சொல்லாட்டியும் அதான் நடக்க போகுது.
தம்பி தம்பி.. அவசரப்படாத. நீ சொல்லு, நாங்க பேசாம கேட்டுட்டு கிளம்பிடுறோம்.
எனக்கு சின்ன வயசுல இருந்து நிறைய பிரச்சனை இருக்கு, யார்கூடவும் அவ்வளவா பேசமாட்டேன். பசங்க கூடவும். ஏனா அவங்க பாக்கிறது, பேசுறதும் இவன்லாம் ஒரு ஆளான்னு நினைக்கிற மாதிரி தான் இருக்கும். அதனாலேயே நானும் ஒதுங்கியே இருந்திட்டேன். எல்லாரும் மாதிரி தானே நானும்.
அதை கூட நான் பெருசா எடுத்துக்கல. அப்புறம் பத்தாவது படிக்கும் போது ஒரு பொண்ண காதலிச்சேன்.
ஓ உங்க வீட்ல உன்னை பாடம் படிக்க அனுப்பிச்சா நீ காதலை படிச்சிருக்க பேஸ் பேஸ் என இடையில் பேசினார் AK48
பேச்சை நிறுத்திவிட்டு பார்வைலயே கொன்றுவிடுவது போல் பார்த்தான் அருண்கார்த்திக்.
AK48 சட்டென்று வாயை மூடிகொண்டார்.
அந்தாளு கிடக்காரு நீ சொல்லு தம்பி உன் லவ் மேட்டர் என்னாச்சு.
என்ன ஆகிருக்கும், அந்த பொண்ணுக்கு இவரு லெட்டர் கொடுத்துருப்பாரு, அந்த பொண்ணு கொண்டு போய் அவங்க அப்பா கிட்ட கொடுத்துருக்கும், அவர் ஆவேசமா கிளம்பி வந்து அந்த லெட்டர ஸ்கூல் வாத்தி கிட்ட கொடுத்து பிரச்சனை பண்ணிருப்ருப்பாரு, வாத்தி உடனே இவர் அப்பாவை கூப்டு லெட்டரை கொடுத்து புள்ளையை கண்டிச்சு வைக்க சொல்லிருப்பாரு, லெட்டர வாங்கிட்டு பையன கூட்டிட்டு வீட்டுக்கு வந்த அப்பா இவனை வெளுவெளுன்னு வெளுக்க, என்னனு தெரியாம பதறி போய் ஓடி வந்த அவங்க அம்மா கிட்ட அவங்க அப்பா லெட்டர் கொடுத்துருப்பாரு அவ்ளோ தான். என AK48 குறுக்கிட்டு சொன்னார்.
யார் யாருக்கு எழுதுன லெட்டர் யாரு மூலமா யாருக்கு யா போயிருக்கு என முனுமுனுத்த AK32 சட்டென கார்த்திக் ஐ யோசித்து, யோவ் பெருசு உனக்கு உன் வாயில தான் சனி என AK48 ஐ திட்டினான்.
'இல்ல அவர் சொன்ன மாதிரி தான் நடந்துச்சு' என கார்த்திக் சொல்ல, AK32, AK48 இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹாஹாஹா ஹாஹாஹா என சிரிக்க தொடங்கிவிட்டனர்.
பின்னர் AK48 ஏன்யா யோவ், அவன் தான் ஏதோ நமக்கு தெரியாத கதையை சொல்ற மாதிரி சொல்றான்னா நீயும் என்னை வார்த்தைல முறைக்கிற.
இல்ல, நீங்க ரெண்டு பேரும் வந்ததுல இருந்து ஏதேதோ வித்தியாசமா பேசுறீங்க. ஆனா எனக்கு தான் ஒண்ணுமே புரியல என அருண்கார்த்திக் சொன்னான்.
எப்படி புரியும். எல்லாத்துலயும் அவசரம் தானே நமக்கு.
நான் ஏற்கனவே புரியாம தான் கேட்டுட்டு இருக்கேன். நீங்க இப்போ ஒன்னு பண்றீங்கள்ல அது அதுக்கும் மேல இருக்கு.
அட விடு தம்பி. வயசானாலே இப்படி தான் பேசிட்டு திரியும் பெருசுங்க. நீ அடுத்ததடுத்த சோகங்களை சொல்லு கேப்போம்.
சோகத்தை ஏதோ அதிசயம் மாதிரி கேக்குறீங்க. சரி இருக்கட்டும் தெரிஞ்ச யாருக்கும் தான் என் பிரச்சனை வலி புரியல தெரியாத உங்ககிட்டயாவது கடைசியா சொல்லிட்டு சந்தோசமா போறேன்.
இருவரும் எதும் பேசாமல் இருக்க கார்த்திக் தொடர்ந்தான்.
அப்புறம் அந்த லவ் பிரச்சனை அப்புறம் கொஞ்சம் நாள் ஸ்கூல் போகாம இருந்து, அப்புறம் திரும்பவும் ஸ்கூல் க்கு போய் பப்ளிக் எப்டியோ பாஸும் பண்ணிட்டேன். ஆனா அதுக்கப்பறம் தான் சில விஷயங்கள் நடந்து போச்சு. என்னை இப்போ லவ் பண்ணலைனாலும் என்னைக்காவது ஒரு நாள் என்னை அந்த பொண்ணுக்கு புரிஞ்சு புடிக்கவும் செய்யும்னு தான் ஸ்கூலுக்கு திரும்பவே போனேன், ஆனா அதே ஸ்கூல்ல 12 வது வர இருந்தாலும் அவங்க அப்பா அவளை வேற ஸ்கூல் சேர்த்துட்டார். அதனாலேயே பாஸ் பண்ணியும் நான் மேற்கொண்டு படிக்கல. வீட்ல திட்னாங்க அடிச்சாங்க அப்பவும் கேக்கல. ஆனா ஊர்ல சும்மா இருந்த நேரம் சில பேர் இவன் படிக்க லாயக்கு இல்ல பொண்ணுங்களுக்கு லெட்டர் கொடுக்க தான் லாயக்கு. அதனால தான் வீட்ல படிக்க வைக்காம ஊரு சுத்த உட்டுட்டாங்கன்னு பேசுனாங்க. அதனாலேயே மேல படிக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் அவங்க சும்மா சொல்லிருந்தாலும் ஏதோ காரணத்தால படிப்பு ஏறவே இல்ல. இதுல ஸ்கூல்ல மத்த பசங்க என்னோட பழசு பத்தி பேசி கிண்டல் பண்ணாங்க. எப்படியோ அதெல்லாம் தாண்டி இப்போ 12 வது பப்ளிக் எக்ஸாம் எழுதுற அளவுக்கு வந்துட்டேன். ஆனாலும் படிப்புனு ஒன்னு வராம, பப்ளிக் முன்னாடி நடந்த ஒரு english எக்ஸாம்ல பாட்டு எழுதி மாட்டுன மாதிரியா எழுதி வைக்கவா முடியும். இல்ல எழுதி பாஸ் தான் ஆக முடியுமா?.
ஆக முடியாது தான். AK48 குறுக்கிட்டு பேசினார்.
கார்த்திக் அவரை கோபமாய் முறைக்க AK32 அவசரமாய், அது ஏதோ கிராஸ் டாக் நீ அதெல்லாம் கண்டுக்காத நீ சொல்லு என சொன்னான்.
எக்ஸாம் நெருங்கிடுச்சு, ஆனா எனக்கு இப்போ வர எந்த சப்ஜெக்ட் மே மண்டைல எறல. இதுல எங்கப்பா வேற நீ மட்டும் பாஸ் பண்ணல அவ்ளோ தான்னு பாக்கும் போதெல்லாம் சொல்லி முறைக்கிறாரு. அதான் எனக்கு வேற வழி தெரியல, எக்ஸாம் எழுதி பெயிலாகி அசிங்கப்படுறத விட முன்னாடியே...
தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட அதானே. என AK48 கேட்டார்
யோவ் பெருசு நீ சும்மாவே இருக்க மாட்டியா என AK32 கேக்க,
நீ செத்த சும்மா இரு இவனெல்லாம் என்ன மனுஷன், அவனவன் வாழ்க்கைல எங்கேங்கயோ அடி மிதி வாங்கி முன்னேறி போய்கிட்டு இருக்கான். இவருக்கு ஊர்ல இருக்கவங்களுக்கு புடிக்கலயாம், லவ் செட் ஆகலையாம், லெட்டர் குடுத்து அடிவாங்குனாராம், எல்லாரும் கிண்டல் பண்ணாங்கலாம், அப்பா எக்ஸாம் ல பாஸ் ஆகணும் திட்டினாராம். இதெல்லாம் பெரிய பிரச்சனை னு சாவ போறாராம்.
AK32 எதுவும் சொல்லவில்லை.
இல்ல தம்பி நீ சொன்னில, தற்கொலைக்கான காரணங்கள்ல ஒன்னு யாருக்கும் புடிக்கலைனு. "எங்க நீ போய் அவங்க யார்கிட்டயாச்சும் எனக்கு உங்கள புடிக்கல அதனால தற்கொலை பண்ணிக்கனு. நீ யாரு? உனக்கு எதுக்கு என்னை புடிக்கணும். நீ என்னோட அப்பா அப்பா அம்மாவா, கூட பொறந்தவங்களா, இல்ல கட்டிக்க போற பொண்ணான்னு கேட்டு மூஞ்சிலயே வைப்பாங்க.
AK32 வாய்விட்டு சிரிக்க முடியாமல் நின்று கொண்டிருந்தான்.
அப்புறம் லவ் பிரச்சனை இல்ல அதெல்லாம் ஒரு பிரச்சனையா. ரெண்டு பேர் மனசு ஒத்து காதலிச்சு சேர முடியாம போய் இப்போ வாழ்க்கையை சந்தோசமா வாழறவங்க எத்தனை பேர் இருக்காங்க, ஏன் இந்த AK32 நீயா இருந்து வந்தவன் தான், ஏன் நான் கூட அப்படி தான். ஆனா இப்போ எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பொண்ணுங்க இருக்கு, வாழ்க்கைல வந்த பிரச்சனை எல்லாம் சமாளிச்சு இப்போ சந்தோசமா தானே இருக்க நீ. இல்ல இருக்கேன் நான். அதும் பத்தாவதுலேயே வந்த காதலன்னு சொல்லிட்டு இருக்க.
எப்போ வந்தாலும் காதல் தானே, என கேட்டான், அருண்கார்த்திக்.
காதல் தான், ஆனா வாழ்க்கைக்கு செட் ஆகுமா, அதும் இல்லாம உனக்கு மட்டும் தானே புடிச்சி இருந்துச்சு.
..........
அப்புறம் ஸ்கூல் ல நடந்தது பத்தி எல்லாரும் கிண்டல் பன்றாங்கன்னா, நீ பண்ணாதது ஒன்னும் சொல்லலியே. உன்னை கிண்டல் பண்றவனுக்கு என்னென்ன நடந்துச்சோ. உன்னை பத்தி தெரிஞ்ச மாதிரி அவனை பத்தி தெரியல. அவ்ளோ தான் சிம்பிள்னு போய்கிட்டே இருக்கனும்.
இதெல்லாம் இருக்கட்டும், இதெல்லாம் சமாளிச்சுட்டு தானே இருக்க. இல்ல அதெல்லாம் மனசுக்குள்ளயே இருக்கு அதான் அதோட சேர்த்து இப்போ எக்ஸாம் பத்தி வீட்ல சொல்றதுக்காக தற்கொலை வர இறங்கிட்ட அப்டினா, ஒருவேலை நீ தற்கொலையே பண்ணிக்கிட்டா உங்க அப்பா அம்மா நிலைமை நெனச்சி பாத்தியா, பையன் இப்படி ஒரு முடிவு எடுக்க காரணம் ஆகிட்டோம்னு அவங்க குற்றவுணர்ச்சிக்கு ஆளாக மாட்டாங்களா. இல்ல இதான் உன் ஆசையா.
ஐயோ அதெல்லாம் என் ஆசை இல்லை. என்னால அவங்க எதிர்பாக்குறது செய்ய முடியல அவ்ளோ தான்.
செய்லையா செய்ய முடியலையா? AK32 கேட்டான்
அது அது..
தெரியாத விஷயம் ஒன்னும் இல்லையே யோசிக்காம சொல்லு.
செய்ய முடியல.
ஹ்ம்ம் செய்ய முடியல. அப்போ செய்யலாமே AK48 சொன்னார்.
ஒன்றும் புரியாமல் பார்த்தான் அருண்கார்த்திக்.
இன்னும் எக்ஸாம் முடியலயே இன்னும் கொஞ்சம் நாள் இருக்குல, இப்போ ஆரம்பிச்சாலும் எல்லா பாடமும் நல்லா படிச்சு நல்ல விதமாவே எழுதலாமே, அதைவிட நீ படிக்காம இருந்தவன் இல்லையே, 10 வதுல அந்த பிரச்சனை நடந்தும் நல்லா பப்ளிக் எழுதி பாஸ் பன்னே தானே அதை இப்போவும் செய்யலாமே. முக்கியமா பெத்தவங்க யாரும் பிள்ளைங்களை டார்ச்சர் பண்ணனும் எல்லாம் நெனைக்க மாட்டாங்க, நம்ம பையன் நல்லா படிச்சு மத்தவங்க மெச்சுற மாதிரி வரணும் அவ்ளோ தான் அவங்க ஆசை. நீ இத புரிஞ்சிக்கோ.
இல்லை அது
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். ஆனா நான் கடைசியா ஒன்னு சொல்றேன். நீ இப்போ இத முடிச்சு பாஸ் ஆகணும், அப்புறம் அங்குட்டு நிக்கிறானே அந்த AK32 அவனோட வயசுல நீ, அவன பத்தி ஆரம்பத்தில நான் சொன்ன மாதிரி வரணும். அப்புறம் என் வயச தொட்டு நான் இப்போ என்னைப்பத்தி சொன்ன மாதிரி மனைவி, ரெண்டு பொண்ணுங்களுக்கு அப்பான்னு சந்தோசமா இருக்கனும் அவ்ளோ தான், மத்த எல்லாம் யோசனையும் தூர வச்சிட்டு, இப்போ சந்தோசமா தூங்கி எழுந்துருகிற சரியா. என்ன நான் சொன்னது சரிதானே AK32 நீ சொல்லு
நீங்க சொன்னா எல்லாம் சரிதான் பெருசு.
அப்டின்ற, அப்போ நாம வந்த வேலை முடிஞ்சது கிளம்பலாமா?
ஹ்ம்ம் தாராளமா.
இல்லை அது.... என கார்த்திக் ஏதோ சொல்ல வரும் முன் சட்டென மறைந்து போனார்கள் இருவரும்.
இரவு ஏதேதோ குழப்பதோடு தூங்க சென்ற அருண்கார்த்திக் அதிர்ச்சியாய் தூக்கதிலிருந்து கிளம்பினான். இத்தனை நேரம் நடந்ததெல்லாம் உண்மையா கனவா என குழம்பி சுற்றும் பார்த்து, பின் அங்கே எதிரே மேஜையில் இருந்த புத்தகங்களின் பக்கம் சென்றான். அடுக்கி வைத்த புத்தகங்களில் மேலிருந்த தமிழ் புத்தகத்தின் முதல் பக்கம் திறந்து அதில் யாரோ என்றோ எழுதிய "வாழ்த்துக்கள்" என்ற வாசகம் கண்ணில் பட ஏதோ புரிந்தவனாய் புன்னகையை உதிர்த்தான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்