UMADEVI VEERASAMY
சிறுகதை வரிசை எண்
# 155
எனக்கு நீ உனக்கு நான்
தங்களை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் மருதப்பனும் தங்கமும் கவனமாய் இருந்தனர். பூந்தோட்டத்தின் ஒரு மூலையில் பிறர் கண்களில் படாதவாறு மறைவாய் அமர்ந்து கொண்டனர். தங்களின் உறவு பிறருக்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற பயம் இருவர் மனத்திலும் ஆழப் பதிந்திருந்தது. இன்னும் எத்தனை காலம் இந்தத் தவிப்பில் உழல வேண்டுமெனப் புரியாமல் வெறும் பார்வையைப் பகிர்ந்துகொண்டு மௌனம் காத்தனர். அந்த மௌனமே அவர்கள் இருவருக்கும் அச்சுறுத்தலைத் தந்தது.
அதிலிலிருந்து விடுபட மருதப்பன் கண்களால் பூந்தோட்டத்தை வலம் வந்தான். அங்குச் சுதந்திரமாய்ப் பறந்து திரிந்துகொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகள் அவன் பார்வையில் அகப்பட, ஆழ்ந்த பெருமூச்சொன்று ஆழமாய் வந்து போனது. இந்தப் பட்டாம் பூச்சிகளுக்கு இருக்கும் சுதந்திரம்கூட மனிதர்களுக்கு இல்லை. பட்டாம் பூச்சிகளின்மேல் சம்பந்தமேயில்லாமல் பொறாமை வந்தது. தான் பொறாமைப்படுவதைத் தெரிந்துகொண்டதோ என்னவோ, பட்டாம்பூசிகளுள் ஒன்று பறந்து வந்து அவன் வலது தொடை மேல் துளியும் அச்சமின்றி உட்கார்ந்து கொண்டது. அதன் பரிசம் தனக்குள் புத்துயிரைக் கொடுத்தது போல் உணர்ந்தான். தங்கத்தின் பக்கம் நம்பிக்கையுடன் திரும்பினான்.
“தங்கம், கவலப்படாத. நான் இருக்கேன். என்ன ஆனாலும் நீதான் என் மனைவி. அத யாராலும் தடுக்க முடியாது!” தங்கத்தின் கைகளை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டான். தன் கைக்குள் அவள் கைகளுக்கு அடைக்கலம் கொடுத்தான்.
“வீட்டில தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு பயமா இருக்கு!,” முகம் வாடி உடல் தளர்ந்து காணப்பட்டாள் தங்கம்.
மருத்தப்பனின் கைக்குள் அடைக்கலம் புகுந்துகொண்ட கைகளைக் கலவரத்துடன் உற்று நோக்கினாள். இந்தப் பிணைப்பு நிலைக்குமா என்ற சந்தேகம் வர, கைகள் நடுங்கத் தொடங்கின.
“தங்கம்! ஏன் கையெல்லாம் நடுங்குது? எதைப் பத்தியும் நீ கவலப்படாத. எந்த எதிர்ப்பு வந்தாலும் உன்ன யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்ன(னை) நம்பு. உன் மேல சத்தியம்!” உணர்ச்சிவசப்பட்டதால் மருதப்பன் குரல் நடுங்கத் தொடங்கியது.
தங்கம் ஊமையாகிப் போனாள். இனி தனக்கு எல்லாம் மருதப்பன்தான் என முடிவே செய்து விட்டாள். தன் வாழ்க்கையில் சுனாமி வந்து வாழ்க்கையைப் புரட்டிப் போட்டாலும் அவள் முடிவில் மாற்றம் இருக்கப் போவதில்லை. அவள் கைகள் நடுங்குவது நின்று போனது. மருதப்பன் அதை உணரத் தவறவில்லை. அவன் பிடியை மேலும் இறுக்கமாக்கினான். அந்தப் பிடி அவளுக்கு வலியை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அவனுக்குத் தங்கத்தைக் கடந்த ஆறு மாதங்களாகத்தான் தெரியும். அவன் அங்கு அடைக்கலம் தேடி வருவதற்கு முன்பே அவள் அங்குக் குடியேறியிருந்தாள். முதல் பார்வையிலேயே அவளைப் பிடித்துப் போனது. பச்சிளங்குழந்தை போன்ற கள்ளம் கபடமற்ற முகம். அவளைப் பார்த்து வணக்கம் சொன்னபோது வெறும் புன்முறுவலையே பதிலாகத் தந்து சென்றாள். தன்னிடம் இயல்பாய்ப் பேசத் தயங்கிய தங்கத்தைப் பார்த்து மருதப்பனுக்குச் சிரிப்புதான் வந்தது. அவனே முதல் அடியை எடுத்து வைக்க, தங்கம் தயக்கத்தை விட்டுப் பேசத் தொடங்கினாள். பூர்வஜென்ம உறவோ என்னவோ, இருவருக்கும் இடையில் அப்படியொரு புரிதல். ஆழமான அன்பு. அளவிட முடியா அக்கறை. எனக்கு நீ உனக்கு நான் என்ற உணர்வு வேருன்ற ஆரம்பித்து விருட்சமாய் வளரத் தொடங்கியது.
அவர்களுக்கிடையில் பூத்திருக்க உறவைப் புரிந்துகொள்ளாதவர்கள் காமம் என முத்திரை குத்தலாம். தங்களை அறிந்தவர்கள் காதல் எனலாம். ஆனால், அவர்களுக்கு மட்டுமே தெரியும் அது காதலும் அல்ல காமமும் அல்ல என்று. இன்றுவரை அவர்கள் சுருங்கிய உதடுகள் காதல் என்ற வார்த்தையை மறந்தும் உச்சரித்ததில்லை. அவர்கள் பார்வை ஒரு கணமேனும் காமத்தைப் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்கள் இதுவரை முத்தங்களைப் பரிமாறிக் கொண்டதில்லை. உடலோடு உடல் உரசி அன்பைப் புலப்படுத்திக் கொண்டதில்லை. இந்த ஆறு மாதங்களில் ஆத்மார்த்தமான உணர்வு மட்டுமே அவர்களை இணைத்து வந்துள்ளது. அந்த உணர்வுக்கு அவர்கள் பெயரைத் தேடி அலைய விரும்பியதில்லை.
“தங்கம் இன்னைக்கே நம்ம குடும்பத்துகிட்ட இதப் பத்தி பேசுவோம். ஏத்துக்கிறதும் ஏத்துக்காமப் போறதும் அவங்க இஷ்டம். அதப் பத்தி நாம அலட்டிக்க வேண்டிய அவசியமில்லை!” உறுதியாய்ச் சொன்ன மருதப்பனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் தங்கம்.
“உங்க முடிவுதான் என் முடிவு,” தங்கத்தின் கண்கள் பேசின.
இனி நடக்கப்போவது என்னவாக இருக்குமென அவளால் அனுமானிக்க முடிந்தது. குடும்பம் எதிர்க்கும். கவலை இல்லை. சமாளிக்கும் தைரியம் இருவருக்கும் உண்டு. உறவுகள் அசிங்கப்படுத்தும். வருத்தமில்லை. அவர்களுக்காக இவர்கள் வாழவில்லை. தங்களுக்காகவே தாங்கள் வாழ வேண்டுமென இவர்கள் முடிவெடுத்துப் பல மாதங்களாகி விட்டன. இன்று உடல் வலிமை இல்லாவிட்டாலும் மன வலிமை அவர்களைக் கைவிட்டு விடாதென நம்பினர்.
இல்ல உரிமையாளரின் அனுமதியோடு சாலைக்கு அடுத்த பக்கத்திலிருந்த கோயிலுக்குச் சென்றனர். முருகப் பெருமான் சாட்சியாகத் தங்கத்தின் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டினான் மருதப்பன். இதுநாள் வரை அனாதை என்ற அடையாளத்தோடு, தனி மரமாய் உலாவிக் கொண்டிருந்த தங்கம் தன் வாழ்க்கையை மருதப்பனிடம் முழுமையாய் ஒப்படைத்தாள். எதற்கும் துணிந்து விட்ட அவர்கள், அலைபேசியின் மூலம் அவர்களின் திருமணச் செய்தியை அவரவர் வீட்டிற்குக் கொண்டு சேர்த்தனர்.
நினைத்தது போலவே ஒரு மணி நேரத்திற்குள் இருவரின் குடும்பத்தாரும் அலறி அடித்துக்கொண்டு அவர்களைத் தேடி வந்தனர். பார்வையால் அவர்களைக் கூறு போட்டனர். ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்ச்சி. முதியோர் இல்லத்திற்குள் செல்ல அவர்களுக்கு நேரமுமில்லை; பொறுமையுமில்லை. வாசலிலே வாக்குவாதம் தொடங்கி விட்டது.
“உங்களுக்கே இது அசிங்கமா இல்ல. காதல் பண்ற வயசா இது? சாகற வயசில காதல்!” மருதப்பனின் மூத்த மகன் அசிங்கப்படுத்தினான்.
அவன் மனைவி அவர்களை எரித்து விடுவது போல் பார்த்தாள். கண்ணகியும் தோற்றுப் போவாள் அவள் கொடும் பார்வை கண்டு. தாத்தாவைப் பார்த்ததும் தாவிச் செல்ல எத்தனித்த தன் மகனை பிடித்து இழுத்து அருகில் வைத்துக் கொண்டாள். அவன் முரண்டு பிடித்தான். தாத்தாவைப் பார்த்துக் கைகளை நீட்டினான். கால்களை உதைத்து அழுதான். அவள் கண்டு கொள்ளவில்லை. அவன் அழுது அழுது ஓய்ந்து போனதுதான் மிச்சம். மருதப்பன் சலனமின்றி நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான். அடுத்த தோட்டா தங்கத்தை நோக்கிப் பாயத் தயாராக இருந்தது.
“உங்கள அம்மான்னு சொல்லிக்கவே அவமானமா இருக்கு! நான் எப்படி வெளியில தல காட்டுவேன்னு கொஞ்சமாவது யோசிச்சுப் பாத்தீங்களா? உங்களுக்கு உங்க சுகம்தான் பெரிசா போச்சில்ல?” தங்கத்தின் இளைய மகள் தாண்டிக் குதித்தாள்.
ஐந்து வயதாகியும் பேசாமல் இருந்த மகளை, சளைக்காமல் பல மருத்துவமனை வாசல்கள் ஏறி வைத்தியம் பார்த்ததின் பலனை இன்று முழுமையாய் அனுபவித்தாள் தங்கம். பேசிக் கொண்டிருப்பது தன் தாயிடம் என்பதை மறந்து பூமிக்கும் வானத்திற்கும் குதித்த மகளைக் கட்டுப்படுத்த அவள் துளியும் முயலவில்லை. கைகள் நடுங்கத் தொடங்கின. உள்ளுக்குள் வடிந்த கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை. மருதப்பனைப் பார்த்தாள். அவன் பார்வை அவளுக்கு யானையின் பலத்தைக் கொடுத்தது. தங்கம் மௌனம் காத்தாள். அவள் மௌனம் மகளுக்குக் கோபத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். தாயை நெருங்கினாள். குண்டு விழிகளை உருட்டிப் பார்த்தாள். தங்கம் மசிவதாய் இல்லை.
“இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. இந்த ஆளோடத்தான் வாழப் போறீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்கனா, எங்கள மறந்திடுங்க. எங்க வீட்டுப் பக்கம் மறந்தும்கூட வந்திடாதீங்க. இன்னையோட உங்கள தலை முழுகிடறோம். ஒன்னு மட்டும் தெளிவா தெரிஞ்சிக்குங்க. இப்படி ஒரு மானங்கெட்ட வாழ்க்க வாழறதுக்குச் செத்து போயிடலாம்!” மனிதாபிமானத்தை வாடகைக்கு விட்டுவிட்டு வாய்க்கு வந்ததை விசமாய்க் கக்கினாள் மரகத்தின் மகள்.
அடுத்த நொடி அவள் பக்கத்தில் மருதப்பன். வயதையும் மறந்து பலம்கொண்ட மட்டும் அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். எதிர்பார்க்காத அறையால் ஆடித்தான் போனாள் அவள். யாரோ ஒருவன், தன் மேல் உரிமை இல்லாதவன், அத்து மீறியதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மருதப்பனைப் பிடித்துத் தள்ளினாள். மருதப்பன் தள்ளாடிப் போய் மரகத்தின் மேல் விழுந்தான். அவனைத் தாங்கிப் பிடித்தாள் தங்கம். இது வரை சாந்த சொரூபியாய் காட்சி தந்தவள், ஊமையாய் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், பத்திரக்காளியாய் விசுவரூபம் எடுத்தாள்.
“ஆறேழு மாசமா அனாதையா இங்க இருந்தப்பா ஒரு நாளாவது என்ன(னை) வந்து பார்த்திருப்பியா? எனக்கு என்ன குறைன்னு கேட்டு ஆறுதல் சொல்லிருப்பியா? இல்ல என்னோட ஏக்கத்தைப் புரிஞ்சிகிட்டு உன் பிள்ளைங்கள கொண்டு வந்து காட்டியிருப்பியா? நானும் மனுசிதான். ஆசா பாசத்துக்கு ஏங்குற மனுசி. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு. அத ஏன் புரிஞ்சிக்க யாரும் முயற்சி செய்றது இல்ல? அவ்வளோ வேணா, உயிரோட இருக்கனா இல்ல செத்தன்னான்னு கூட வந்து பார்க்கல. எந்த உரிமையில இன்னைக்கு நீ இப்படிப் பேசறன்னு நான் தெரிஞ்சிக்கணும், சொல்லுடீ சொல்லு!” ஆவேசமாய்க் கத்தினாள்.
முதியோர் இல்ல வளாகம் போர்க்களமானது. முதியோர் இல்லவாசிகள் நடப்பதை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். தவறியும் ஒருவர்கூட அந்தக் குடும்பச் சண்டையில் தலையிடவில்லை. வெறும் பார்வையாளர்களாக இருந்தனர். வாழ்க்கை அவர்களுக்கு நிறையவே கற்றுக் கொடுத்து விட்டது. அனுபவசாலிகள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தங்களைப் பக்குவப்படுத்திக் கொண்டவர்கள். இதைவிட மோசமானவற்றை வாழ்வில் பார்த்து நொந்து போய் அடைக்கலம் தேடி வந்தவர்கள். தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கும்போது மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவர்கள் இருப்பதற்குச் சாத்தியமில்லை.
கூட்டம் வேடிக்கை பார்ப்பதைச் சகிக்க முடியாமல் குடும்ப உறவுகள் வெறி கொண்டு செயல்படத் தொடங்கின. தாய் தந்தையரைப் பக்குவப்படாத பிள்ளைகளாய்க் கருதிக் கேள்விக் கணைகளை அடுக்கடுக்காய்த் தொடுத்தனர். விசமேற்றிய வார்த்தைகளை அம்புகளாக்கி அவர்கள் மேல் சராமாரியாக எய்தனர். பெற்றவர்களை ஒரு வழிபடுத்திவிட வேண்டும் என்ற அவர்களது எண்ணம் வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்தது. காம இச்சையால் வளர்ந்த உறவல்ல என எவ்வளளோ விளக்கம் சொல்லியாகி விட்டது. ஆனால், கேட்பதற்குப் பிள்ளைகளுக்குப் பொறுமையில்லாமல் போனதுதான் அவலம்.
“எல்லாரும் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா!” வெடித்தான் மருதப்பன். சுற்றியும் தன் பார்வையை ஓட விட்டான். தன்னை ஆசுவசப்படுத்திக் கொள்ள முயற்சித்தான். அனைவரின் பார்வையும் அவன்மேல் பதிந்தது.
“இப்ப நாங்க என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிறீங்க? தெளிவா சொன்னா தெரிஞ்சிக்குவோம்... சொல்லுங்க!” நொந்து போய்க் கேட்ட மருதப்பனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள் தங்கம். தங்கள் உறவுக்குச் சாவு மணி அடிக்கக் காத்திருக்கும் பிள்ளைகளை நொந்து கொண்டாள். மலர்ந்த சில மாதங்களில் கருகப் போகும் உறவென்னும் பயிரைக் காப்பாற்ற வழி தெரியாமல் தத்தளித்தாள்.
“இந்தக் கல்யாணத்த எங்களால் சத்தியமா ஏத்துக்க முடியாது. இந்த அசிங்கத்த எங்களால் ஜீரணிக்க முடியாது. பேசாம எங்களோட வீட்டுக்கு வாங்க. போடுறத சாப்பிட்டுகிட்டு ஒரு மூலையில கெடங்க, அது போதும்!” இரக்கமின்றி பேசினான் மருதப்பனின் மகன்.
தங்கத்தின் கண்கள் அவள் பேச்சைக் கேட்பதாய் இல்லை. அடக்கி வைத்த அழுகை இமையெனும் அணையை உடைத்துக் கொண்டு வந்தது. பார்வை மங்கியது. மருதப்பனைப் பார்த்தாள். அவனும் மங்கலாய்த் தெரிந்தான். ஏதோ சொல்ல வாயெடுத்தாள். வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன. அவளின் தளர்ந்த உடல் கொடியாய்த் துவண்டு நிலத்தில் விழுந்தது. பதறிப் போனான் மருதப்பன். கூட்டத்தில் சலசலப்பு. விரைந்து குழாயில் நீரைப் பிடித்து வந்து தன் அன்பிற்குரியவளின் முகத்தில் தெளித்தான். உள்ளமெல்லாம் படபடப்பு. அவள் கன்னத்தை தன் வறண்ட கைகளால் தட்டித் தட்டி அவளை எழுப்பப் போராடினான். அவளைத் தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்க முயற்சித்தான். அவள் சரிந்து விழுந்தாள். “என்ன ஏமாத்திடாத தங்கம்!” உள்ளம் வேண்டிக் கொண்டது. மனம் பாரமானது. அவளை உலுக்கிப் பார்த்தான். அசைவின்றி இருந்தாள்.
சற்று முன் போர்க்களமாய் இருந்த முதியோர் இல்லம் மயான அமைதி கொண்டது.
மருதப்பனுக்கு உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. வியர்வையைத் துடைத்துக் கொள்ளக்கூட அவனுக்குத் தோன்றவில்லை. “என்ன(னை) திரும்பவும் அனாதயாக்கிடாத தங்கம்!” அவன் வாய் முணுமுணுத்தது. கண்ணீர் அவன் கன்னங்களை நனைக்கத் தொடங்கியது.
அவ்வளவு நேரம் மான அவமானத்தைப் பற்றி வாய் கிழிய பேசிய இரத்த சொந்தம் வேடிக்கை மட்டுமே பார்த்தது. மருதப்பன் உடைந்து போனான். அவளை இழக்க நேர்ந்தால் அவனும் உயிர் துறந்து போவான். மீண்டும் தங்கத்தை உலுக்குகிறான்.
“கண்ண திற தங்கம்! நான் வாழனும்னு நெனைக்கிறது உனக்காகத்தான். என்னோட அந்திம காலத்துத் துணையா நீ வரணும். எனக்கு நீ உனக்கு நான். நமக்கு வேற யாரும் வேணா!” கண்களை இறுக மூடிக் கதறுகிறான்.
தங்கத்தின் கண்கள் மெதுவாய்த் திறக்கின்றன. நிமிர்ந்து உட்கார முயற்சிக்கிறாள். வலுவற்ற கால்கள் அவளைத் தடுமாறச் செய்கின்றன. கீழே விழப் பார்க்கிறாள். அவளைத் தாங்கிப் பிடிக்கிறான். சுற்றி உள்ள உறவுகளை அலட்சியமாய்ப் பார்க்கிறான்.
“எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்க விரும்புறேன். நாங்க வேணும்னு நினைக்கிறவங்க இங்க இருங்க. வேணாம்னு நினைக்கிறவங்க தாராளமாகப் போங்க!” மருதப்பனின் அழுத்தமான பேச்சு யாரையும் மறுபேச்சுப் பேச இடம் தரவில்லை.
மருதப்பன், தங்கத்தின் வலது கரத்தை உறுதியாய்ப் பிடித்துக் கொள்கிறான். முதியோர் இல்லத்துக்குள் கம்பீரமாய் நுழைகிறான்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்