இமையி
சிறுகதை வரிசை எண்
# 153
அமரின் சரிதம்
சூரியன் மறைந்து இருள் மேலேற நிலா உலா வரும் நேரமது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை உயர்ரக அடுக்குமாடி கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் மட்டுமே. எத்தனை வேகமாய் வளர்ந்து விட்டது. எத்தனை மாற்றங்கள் இந்த இருபது வருடங்களில்.
தன்னிலும் தான். கண்களால் தானிருக்குமிடம் சுற்றிப் பார்த்துக்கொண்டே தன்னையும் ஒருமுறை குனிந்து பார்த்துக்கொண்டான்.
இவன் அமர்.
பிரபல வர்த்தக வளாகம் ஒன்றின் பொறுப்பாலனாய் இருக்கின்றான்.
அவன் இந்த இடத்திற்கு வர காரணமானவர், இவன் எதிர்பாராத இடத்தில் இவனைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.
இதோ இவன் நின்றிருக்கும் மேம்பாலத்திற்கு கீழேதான் இவன் வீடு அமைந்திருந்தது. இவன் சொன்னாலும் யாரும் நம்புவார்கள் என்பது கேள்விக்குறிதான்.
கல்லூரிப் படிப்பை முடித்து மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றவன், கிட்டத்தட்ட ஐந்து வருடங்களின் பின்னர் தாயகம் திரும்பினான். வந்த அடுத்த நாளே தனக்கு கீழ் இருந்த தன் பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைத்திருந்தார், இவன் வளர்ப்பு தந்தை மனோகர்.
ஆம் அவனளவில் வளர்ப்பு தந்தை தான். மரியாதைக்கு மீறிய பாசம் கொட்டிக்கிடந்தாலும், எப்போதும் கண்களில் அதை காட்டியதில்லை இருவருமே.
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னர், மனோகரின் வீட்டு வேலைக்காக வந்து சேர்ந்தவர்தான், அமரின் அன்னை சரோஜினி.
மேல்நிலை மக்களின் வீட்டு வேலைக்காக கீழ்நிலை மக்கள் செல்வது வழக்கம். அவர்களாகவே தேடிசென்று வேலை கேட்பர். இல்லையா, இதை கன்ட்ராக்ட் முறையில் அல்லது ஏஜென்ட் மூலம் செய்பவர்களை தொடர்பு கொண்டு அதன் மூலம் ஈடுபடுவர். அதில் ஒரு ஏஜென்ட் மூலமே சரோஜினி இவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்.
கணவன் அவரை விட்டுச்சென்றிருக்க, தன் மூத்த மகள் நோய்வாய்ப்பட்டு பத்து வயதில் இறந்திருந்தாள். தன் ஐந்து வயது மகனைப் படிக்க வைக்க வேண்டும் எனும் ஒரே நோக்கில், தன்னையும் மறந்து தினம் ஒருவேலை செய்து வந்தார். மனோகர் வீடு பாதுகாப்பாகவும் உடலுக்கு சற்று ஓய்வெடுக்கும் வகையிலும் கிடைக்க, இதை நிரந்தரமாக்கிக் கொண்டார்.
தினம் மாலை பின்னே வீடு செல்பவர், காலை அமரை பாடசாலையில் விட்டு அப்படியே இங்கு வந்து விடுவார். ஆனாலும் மனோகர் அடிக்கடி வெளியூர் செல்லும் நாட்களில் இரவு நேரங்களில், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் துணையாக இருக்கக் கேட்க, தன் மகனை காரணம் கூறுவார் சரோஜினி.
சில மாதங்கள் செல்ல அவர் மீது கொண்ட நம்பிக்கையில் அவரை அவர்களுடனேயே நிரந்தரமாக தங்கவைத்தார். மகனை இங்கிருந்தே பாடசாலைக்கு செல்ல வசதிகள் செய்து தருவதாயும் கூறி அவர்களுடனேயே அழைத்துக்கொண்டார் மனோகர்.
அமர் அப்போதிலிருந்தே படிப்பில் மிக ஆர்வமாய் இருப்பான். மனோகர் அதை அமர் வந்த சிறிது நாட்களிலேயே கண்டுக்கொண்டார். மனோகரின் மகள்கள் இருவருமே கல்லூரி முதல் வருடமும், இறுதி வருடமும் படிக்கும் பிள்ளைகள். ஆக, சிறுவனாய் இருந்த அமரை வீட்டில் அத்தனை பேருக்கும் பிடித்துவிட்டது.
இப்படியாக ஐந்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தது. திடீரென்று நோய்வாய்ப்பட்ட சரோஜினியும் இறந்திட, அமருக்கு மொத்தமும் மனோகரே ஆகிப்போனார்.
மகள்கள் இருவரும் திருமணமாகி, வெவ்வேறு மாநிலங்களில் செல்வமாக வாழ்ந்தனர். வீட்டில் மனோகரும் மனைவியும் மட்டுமே. இருவருக்கும் ஆறுதலாய் அமரே இருந்தான்.
அவன் படிப்பை முன்னேற்ற செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுப்பார். அவனுக்கான தேவைகளை அவன் கேட்கும் முன்னமே செய்துவைத்திருப்பார். இத்தனைக்கும் அவனோடு அமர்ந்து பேசியிருக்க மாட்டார். மனைவி மூலமே அத்தனையும் நடக்க வழி செய்திருப்பார். அதுவும் ஒரு வகை உத்தி தான் போல.
தன் மகள்மாருக்கு சொத்துக்கள் பிரித்துக்கொடுத்தவர், தனக்கென்று தான் நிலைநாட்டிய ரூபி காம்லெக்ஸ் எனும் வர்த்தக வளாகம் ஒன்றை மட்டும் தன்னோடு இருத்திக்கொண்டார்.
இதைக்கொண்டே தன்னுடைய மொத்த சொத்துக்களையும் சம்பாரித்தவர், இதை அவருக்கென்று அவர் பின்னே அவர் மனைவிக்கு, அதற்கும் பின்னே அது தனக்கு தேவையானவருக்கு. அதில் எவ்வித பிரச்சினைகளும் வரக்கூடாது, எவரும் தலையிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். மருமகன்மார்களையும் வைத்து நீதியின் அடிப்படையில் பேச்சுக்களை முடித்திருந்தார் மனோகர்.
கல்லூரி படிப்பை முடித்திருந்த அமரை மேல்படிப்பிற்காக வெளிநாடு அனுப்பியிருந்தார். பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இவர் உடன்படிக்கை.
அவனுக்கும் அது பிடித்திருக்க, புது உலகில் புதியன கற்றுக்கொள்ள சென்றான்.
***
கிரைம் பிரிவில் ஜர்னலிஸ்ட் ஆக இருக்கிறாள் சுஜாதா. வெளியில் பார்ப்பவர்களுக்கு சிறுவர்கள் மாத இதழ்களுக்கு பொறுப்பாளினியாக இருக்கிறாள். அவள் முகத்தினில் அத்தனை குழந்தை தனம் கொட்டிக்கிடக்கும். அவள் பேச்சிலும் பார்வையிலும் அவள் அலுவலகத்தில் வேலை செய்வோர் அவளை நெருங்கவும் அஞ்சுவர். எந்த மேலிடத்திற்கும் தைரியமாக தனியே சென்று வருவாள். செல்வந்த வம்சம் அவள். நான்கு அண்ணன்மார்களுக்கு தங்கையாக பிறந்தவள்.
இருப்பத்தியாறு வயது. சில காரணிகளை வைத்து, திருமண வாழ்வு தனக்கு எட்டாக்கனியென்று தனக்கு தானே தீர்மானித்துக் கொண்டாள். என்ன ஒன்று இரு கால்களுக்கும் இடையே அரை அங்குல உயர வேறுபாட்டில் கொஞ்சம் விந்திவிந்தி நடப்பாள். அவளுக்கான குறை அதுவென்று கூறாது, நாகரீகமாய் வேறு காரணம் வைத்து மறுத்தனர் பலரும்.
மனோகரின் தூரத்து உறவுதான் சுஜாதாவின் குடும்பத்தினர். அதுமட்டுமல்லாது மூத்த அண்ணன் தொழில் துறை நண்பர். அவர்களே வந்து ஒருமுறை அமரை மாப்பிள்ளை கேட்க, மறுத்துவிட்டார் மனோகர். அவனோடு தாங்களே பேசுகிறோம் என்று இரண்டாமவனும் சேர்ந்தே கேட்டும், இதுப்பற்றி அவன் காதுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று அப்போதே மறுத்து விட்டார். அதில் சிறு மனவருத்தம் அவர்களுக்கு.
அமர் அவன் வாழ்வை அவனே முடிவெடுத்து வாழவேண்டும், அவன் விரும்பி வாழவேண்டும் என்று நினைத்தார் மனோகர். அவனுக்கென்று இனி அவன் துணை மட்டுமே. ஆக, அது அவன் விருப்பமாய் மட்டுமே அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அமர் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய மறுநாளே வளாகத்தை மொத்தமாய் சுற்றிக்காட்டிய மனோகர், அவர் அறைக்கு அழைத்து வந்து அவர் இருகையில் அமர வைத்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டான் அமர்.
"நான் எப்படி?" தடுமாறினான் என்றுதான் சொல்ல வேண்டும்.
"இனி இப்படித்தான். எனக்கு அப்புறம் ரூபி உன் பொறுப்பு. அவளுக்கு அப்புறம் இது உனக்கானது. இப்போதிலிருந்தே இதை இன்னும் எப்படி வளர்க்கணும், முன்னேற்றணும்னு பார்த்து அதை பண்ணு. இப்படியே ரன் பண்ணுனாலே போதும், எப்போவும் ரூபின்னு சொன்னா ரூபிக்கான பெறுமதி நம்பர் ஒன்னா இருக்கணும். அவ்ளோதான்."
அவர் கூறி மூடிக்கவுமே மனோகரின் மகள்மார்கள், அவர்களது கணவன் பிள்ளைகள் என அனைவருமே வந்திருந்தனர்.
ஒருவருக்கும் அவனிடத்தில் பொறாமை இருக்கவில்லை. அவன் வளர்ச்சியில் மகிழ்வையே அவர்களிடம் கண்டான். அவன் இருக்கையை விட்டு எழுந்திட அவன் தோள் பற்றி அமர வைத்த மனோகர், "கொஞ்ச நேரம் உட்காரு அமரா. என்னையே நான் பார்க்குற பீல் எனக்கு. அனுபவிக்க விடமாட்டியா?"
அதன் பின் மிகக் கடினப்பட்டே அமர்ந்தான். அவனருகில் வந்து அமர்ந்தார் ரூபி. ரூபாவதி மனோகரின் மனைவி.
மகள்மார்களும் அன்னையோடு அளந்தே பேசுவார்கள். அத்தனை கண்டிப்பு இருக்கும், அமருக்குமே. ஆனாலும் எதுவென்றாலுமே அவரோடு பகிர்ந்துக்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தான் அமர்.
அவர் கைகளை பற்றிக் கொண்டவன், "ரூபிம்மா, நான் இங்க இருக்க தகுதி இருக்கான்னு எனக்கு தெரில. என்னால இவ்ளோ பெரிய பொறுப்பை எடுத்து நடத்த முடியுமா?"
"என்ன அமரா, மனோ கூட இவ்ளோ வருஷம் இருந்துட்டு அவர் தைரியம் கொஞ்சம் கூட உன்கிட்ட ஒட்டிக்கலயே. இப்படி பேசுற. உன் திறமையை காட்டறதுக்கான சந்தர்ப்பம் இது. அதோட இந்த ஐந்து வருடம் நீ அனுப்புன உன்னோட காசு இங்கதான் இன்வெஸ்ட் பண்ணிருக்கார். சோ உன் பங்கு இங்க இருக்கு. எந்த சங்கடமும் இல்லாம நடத்து. கண்டிப்பா உன்னால பண்ண முடியும்."
அவர் பேச கேட்டிருந்தவன் சரியென்று அன்றோடு ஆரம்பித்தது, மனோகரின் உந்துதலோடு, முன்னேற்றிக்கொண்டே வந்து இதோ ஐந்து வருடங்களில் பிரபல வணிக வளாகமாய் திகழ்கிறது ரூபி காம்ப்லெக்ஸ். பாதி இவர்களுடையாதாகவும், மீதியில் சரிக்கு பாதி இவர்கள் பங்கிருப்பதாகவும் அமைந்திருந்தது.
இதோ வயது முப்பதை தொட்டிட, தினம் ஏதாவது கூறி புலம்ப ஆரம்பித்து விட்டார் ரூபாவதி. இன்னுமே சரோஜினி இருக்கும் போது கொடுத்த கெஸ்ட் ஹவுஸ் வீட்டிலேயே தங்குகிறான் அமர். இரவு வந்ததும் ரூபியோடு பேசிவிட்டு இரவுணவை இவர்களோடு முடித்துக்கொண்டு கிளம்புவான்.
அப்படித்தான் இன்றும்.
"மனோ, என்ன பொறுப்பில்லாம இருக்கீங்க. இவன் வயசுக்கு கையில குழந்தையோட இருக்கானுங்க பசங்க. இவனுக்கு கல்யாணம் பண்ணிவைக்குற ஐடியா இருக்கா இல்லையா?"
மனோகர் அமரை பார்த்து நேராகவே கேட்டார். "அமர் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கலாமா?"
"உங்க இஷ்டம்."
"என் இஷ்டத்துக்கு எனக்கு பொண்டாட்டி கொண்டுவந்து குடும்பம் நடத்திட்டுதான் இருக்கேன். நான் உனக்கு கேட்குறேன். "
"அதான் நீங்க பார்த்துட்டு சொல்லுங்க."
"நான் போய்..." மனோகர் ஏதோ கூற இடைமறித்த ரூபாவதி,
"இல்ல அமரா, உனக்கு எப்படியான பொண்ணு வேணும்னு உனக்கும் ஒரு ஆசை இருக்கும் தானே. இல்ல மனசுல யாராவது இருக்காங்கன்னா கூட சொல்லு பார்க்கலாம்."
"அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நீங்க ரெண்டு பேரும் இருக்க போலயே நானும் வாழணும். அதுக்கு ஏற்றது போல பாருங்க."
"பார்ரா… அமரா, நாம தினம் ஒரு சண்டை போட்டுப்போம். நீ பார்த்ததில்லை."
"அது எல்லாருமே போட்டுக்குறாங்க, ஆனா உங்களை போல இல்லையே."
"நாம வெளில சிரிச்சிட்டே இருக்குறதால சொல்ற" ரூபாவதி சிரித்துக்கொண்டே கூறினார்.
"வெளில பொய்யா சிரிக்கிறவங்களுக்கும், மனசு சந்தோஷத்தோட சிரிக்கிறவங்களுக்கும் வித்தியாசம் என்னால உணர முடியும் ரூபிம்மா."
அமர் நீண்ட நேரம் இவர்களோடு இப்படி அமர்ந்து பேசியதில்லை, இதுவே முதல் முறை. அதுவும் அவன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டம், அதனை தீர்மானிக்கவே இப்படியான பேச்சுக்கள்.
"சரி... நாம நம்ம நிரஞ்சன் தங்கைய பேசலாமா?" ரூபாவதி சற்று குரல் தாழ்த்தி மனோகரிடம் கேட்க,
"அது எப்போவோ நான் வேண்டாம் சொல்லிட்டேன். அதை பத்தி பேசாத ரூபி" சற்று குரல் உயர்த்தி, கோபமாகவே கூறினார்.
"எதுக்கு இவ்ளோ கோபம்? அவளுக்கு அது குறையே இல்லேங்க, நீங்களே இப்படி பேசுறது நல்லா இல்லை. எனக்கு எப்போவும் அது தெரியவே இல்லை. இவனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாள். அவ்ளோதான்."
"ரூபி உனக்கு சொன்னா புரியாது, இது பற்றி நாம அப்புறம் பேசலாம்.
அமரா, டைமாச்சு கிளம்பு. காலைல பார்க்கலாம்."
"அமரா,காலைல நானும் வரேன். என்னையும் கூட்டிப்போ" ரூபாவதி அமரோடு இதைப் பற்றி பேசுவேன் என்பதாய் கூறிவிட,
மனோகர் அமரைப் பார்த்து, "புருஷனுக்கு அடங்காத, புருஷன் பேச்சு கேட்காத பொண்டாட்டிதான் உனக்கும் வேணுமா அமரா, யோசிச்சுக்கோ"
என்று விட்டு உள்ளே சென்றார்.
இவனும் சிரித்துவிட்டு விடைப் பெற்றான்.
அறைக்குள் ரூபாவதி வரவும், "ரூபி, அந்த பெண்ணை நாம பார்த்தோம்னா, இவனுக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும். நம்மல தப்பா நினைச்சுடப்போறான். "
"மனோ, நீங்க கூட இப்டி பேசினா?"
"ரூபி, சுஜாதாவை எனக்கு முன்னமே பிடிக்கும், நிரஞ்சன் கேட்கும் முன்னமே எனக்குமே அமருக்கு பேசணும்னு தோணுனது தான். ஆனாலும்... "
"மனோ, அவனுக்கும் என்னை போலத்தான். அவ குறை அவன் கண்ணுக்குத் தெரியவே தெரியாது. அவன்கூட பேசிட்டு அப்புறமா பிடிக்கலைனா வேற பார்க்கலாம்."
"என்னவோ பண்ணு, அவன் மனசு கஷ்டப்படுத்தாத அவ்ளோதான். "
அடுத்த நாள் ரூபாவதி அமரின் வண்டியில் முன்னிருக்கையில் அமர்ந்துக்கொண்டே, "அமரா, என்னை போலயே குண்டா இருந்தா பரவால்லையா?"
"ரூபிம்மா, உங்களை போலன்னுதான் சொன்னேன், அதுக்காக இப்டில்லாம் கேட்டா என்ன பதில் சொல்றது?"
அவனுடனேயே அவன் அலுவலக அறையில் அமர்ந்துக்கொண்டு அவன் வேலைகளை கவனித்துக்கொண்டவர்,
"அமரா, நம்ம நிரஞ்சன் தெரியும்ல?"
"ஆமா ரூபிம்மா."
"அவன் தங்கை பத்தி என்ன நினைக்கிற?"
"எனக்கு சரியா ஞாபகம் இல்லை. சின்னதா இருக்கப்ப பார்த்திருக்கேன்."
"இப்போ ஜர்னலிஸ்டா இருக்கா. நல்ல அழகு."
"ஹ்ம்..." சற்று இதழ் சிரிக்க, 'ஹ்ம்' கொட்டிக்கொண்டிருந்தான்.
"நீ ஒருமுறை பேசி பார்க்குறியா? ஜஸ்ட். அப்றமா உனக்கு ஓகேன்னா நாம பேசலாம்."
"சரி ரூபிம்மா. "
அப்போதே அலைபேசியை எடுத்து அழைத்தார். அமரும் மனோகருக்கென்று நினைத்திருக்க,
"ஹலோ சுஜாதா, நான் ரூபி ஆன்ட்டி."
"ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன்டா. இன்னிக்கு பிஸியா இருக்கியா?"
"இப்போதைக்கு பிஸி இல்லை, ஆனால் சொல்ல முடியாதே. என்னனு சொல்லுங்க ஆன்ட்டி."
"அது நம்ம அமர் உன்னை மீட் பண்ணனும் சொல்றான்."
"ஹேய்! நா எப்போ சொன்னேன், ரூபிம்மா… இப்போவே எப்படி? அப்புறமா பார்க்கலாம்" அமர் மெதுவாக பேசினாலும் சுஜாதாவுக்கு அதை கேட்க முடிந்தது.
"ஓகே ஆன்ட்டி, லேட் ஈவினிங் செவன் ஒ கிளாக், மீட் பண்ணலாம்."
"எங்க மீட் பண்ணலாம்?"
"இங்க ஆபிஸ்ல?" அமர் கூற, தலையிலடித்துக்கொண்டார் ரூபாவதி.
"டபுள் பிரிஜ் லெப்ட் கார்னர்ல வெய்ட் பண்றேன், சொல்லிருங்க ஆன்ட்டி."
"அங்க எப்படி?" அமர் கேட்க,
"அவ அப்படித்தான்டா போய் பேசு. நாம நாளைக்கு இதே நேரம் இதே இடத்துல மீட் பண்ணலாம். நான் கிளம்புறேன்" கூறிவிட்டு அவரும் கிளம்பினார்.
இதோ ஏழு முப்பதையும் தொட்டிருக்க, இன்னும் வர வேண்டியவள் வந்து சேரவில்லை. தன் சிறு வயது மொத்தம் நினைத்து முடித்தவன் கிளம்பலாம் என திரும்ப,
"ஹாய்…" என தூரமாய் பெண்குரல் இவனுக்காய் கேட்டது.
ஏதோ கையில் வைத்து சாப்பிட்டிக்கொண்டே வருகிறாள் போல.
அவள் முகத்தில் சிரிப்பு அந்த இருளிலும், தெரு விளக்கொளியை மீறி பிரகாசித்தது. கண்கள் அங்கிருந்தே இவனை அளவெடுப்பதை கண்டுகொண்டான்.
'ப்பா கண்ணு ரெண்டு வச்சே விமர்சனம் பண்ணிருவா போலயே...' இவனும் சாம்பல் நிற காட்சட்டை அணிந்து, இளமஞ்சள் நிற உடல் இறுக்கிப்பிடித்த கை நீள சட்டையை முழங்கை வரை மடித்து விட்டிருந்தான்.
"சாரி கொஞ்சம் லேட் ஆச்சு."
"பரவால்லங்க."
"திடீர்னு சின்ன வேலை அதான்."
"ஹ்ம்."
அவள் அலைபேசியில் யாரையோ அழைத்தவள், "டேய் முருகா… கொஞ்சம் வெளில வந்து, பிரிஜ் மேல பாரு..."
"யக்கோ..." சிறுவன் ஒருவன் கீழிருந்து கூச்சலிட இவளும் கை காட்டினாள்.
"இங்க என்ன பண்ணுத? நா வேண்ணா வரவா?"
"வேணாண்டா, வேல விஷயமா வந்திருக்கேன், நாளைக்கு மீட் பண்ணலாம்."
"என் பிரெண்ட்" அமருக்கும் அவனை காட்டி அறிமுகப்படுத்தினாள்.
"பிரெண்டா?"
"ஆமா, ஏன் இங்க இருக்கவங்க கூட பேசக்கூடாதா என்ன?"
"அப்டின்னா நீங்க என் கூடவும் தான் பேசக்கூடாது."
"ஏன்?"
"ஏன்னா...? ரூபிம்மா வீட்டுக்கு வர முன்ன எனக்கும் இங்கதான் வீடு. அம்மா வேலைக்கு வந்தப்புறமா தான் நானும் அங்க போய்ட்டேன். இன்னிக்கு இப்படி இந்த நிலைமையில இருக்கேன்."
"இந்த பசங்களுக்கும் யாரும் இப்டி ஹெல்ப் பண்ணாங்கன்னா கண்டிப்பா நல்ல நிலைக்கு வருவாங்கல்ல. ஒன்ஸ் ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காக போனப்ப அப்படியே பிரெண்ட் ஆகிட்டவங்கதான். இவனும் இவன் பிரெண்ஸும். அன்னைல இருந்து என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்."
"சூப்பர்ங்க. இனி என்னையும் சேர்த்துக்கோங்க, சேர்ந்தே பண்ணலாம்."
"ஹ்ம்... கண்டிப்பா."
"ஆமா,ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து. முன்ன ரூபி ஆன்ட்டி ஹோம் வர்றப்ப எப்போவாச்சும் பார்ப்பேன். அப்றமா பார்க்கவே இல்லை."
"கொஞ்சம் ஒர்க் பிஸிங்க."
"ஹ்ம்... அப்றம் வேறென்ன?"
"வேற என்ன? உங்க ஒர்க் பத்தி சொல்லுங்களேன்."
"அதுவா, அது எனக்கு எங்கிட்ட பிடிச்சது, என்னையும் என் வேலையும் தான். செம சீன்ங்க இன்னிக்கு. என்னாச்சுன்னா..." பேசத்தொடங்கியவள் நிமிடங்கள் பல கடந்தும் பேசிக்கொண்டிருந்தாள்.
அவள் கையிருந்த நொறுக்குதீனி அவன் வாயிலும் அரைப்பட்டது.
அவள் ஆளுமை, திறமை கண்டு வியந்தவன், அவள் குழந்தை முகத்தினில் வீழ்ந்துப்போனான். அவனே அவளை வீட்டில் இறக்கியும் விட்டான்.
விடை பெற்றுக்கொள்ளும்போதும், "என்னை இறக்கி விட்டுட்டு இன்னிக்கு பேச வந்த காரணத்தை மனசுல இருந்து இறக்க மறந்துட்டீங்க அமர்."
எப்போதும் இப்படி பெண் பார்க்கிறேன் என வருபவர்கள் பேசிவிட்டு, அவளுக்கு அவள் குறையைப் பெரிதாய் பேசாது, அவள் தொழில் குடும்பப்பெண்ணுக்கு சரியாக வராது எனும் விதமாய் பேச்சுக்களை பேசி, அவளும் அவள் தொழிலை விடமாட்டாள் என்பதால் அதிலேயே முடித்துக்கொள்வார்கள். இன்றும் அதையே இல்லை என்றாலும் மறையான பதிலையே எதிர்பார்த்து கேட்டாள் சுஜாதா.
"இல்லையே, பேச நினைச்சது நாம பேசி முடிக்கவும் மனசுக்கு பிடிச்சுப் போய், இப்போவும் அதுவே மனசுக்குள்ளயும் ஓடிட்டே இருக்கு. அதான் இங்கேயே இறக்கி வச்சுட்டு போகலாமான்னு யோசிக்கிறேன்."
"ஓஹ்!" அதன் பின் சுஜாதாவினால் என்ன பேசவென்று தெரியாது, அவன் முகத்தினில் காண்பித்த மொழியை படிக்க முடியாது தடுமாறி மௌனமானவள், அவனை ஏறிட,
"என்ன ஓஹ்...?"
"ஒன்னில்லங்க..."
அவளை பார்த்து புன்னகைத்தவன், "இறக்கி வைக்கிறதை மொத்தமா காலம் பூரா சும்மக்குறீங்கன்னா இப்போவே, இங்கேயே இறக்கி வச்சுட்டு போகவா?"
அவனை அவள் வண்டுக்கண்களால் மிரண்டு விழித்தவள், "குட் நைட்" என்றுவிட்டு திரும்பியும் பார்க்காது சென்றுவிட்டாள்.
சிரித்துக்கொண்டவன் அதே சிரிப்போடு வீட்டுக்கும் வந்தான்.
அடுத்தநாள் அலுவலகத்திற்கு ரூபாவதி வரவும், அமர் முகத்தில் வெட்கச்சிரிப்பு. அத்தனை வசீகரமாய் தெரிந்தான்.
"அமரா, உனக்கு அவ குறை பார்த்து அனுதாபத்துல ஏதும் தோணுச்சுன்னா சொல்லிரணும்."
"ரூபிம்மா அதுவெல்லாம் குறையா, அப்போ என்னோடது?”
"உனக்கென்ன குறை?"
"நீங்க இருக்கதுனால அதன் நிழல் என்னோட குறை மறைக்குது. மத்தபடி நாம எவ்ளோ பெரிய இடத்துக்கு போய்ட்டாலும் சேரி பசங்கன்னு சொல்லிட்டே இருப்பாங்க.
நான் என்னை, என்னோட சுயத்தை நேசிக்கிறேன். அதுனால அடுத்தவங்க பேச்சு எதுன்னாலும் அதை நினைச்சு என்னை வருத்திக்க மாட்டேன். அதையே அவகிட்டயும் பார்த்தேன். அவ திறமைக்கு முன்ன நானெல்லாம் நிற்கவே முடியாது. பொண்ணுன்னா கண்டிப்பா இந்த தைரியம், திடம் இருக்கணும்.”
"அமரா..." ரூபாவதி அவனை அணைத்துக்கொண்டார். அவனுமே முதல் முறையாக அவர் தோள் சாய்ந்து கண்ணீர் சிந்தினான்.
"எவ்வளவு எனக்கு கிடைத்தாலும் நானும் இழந்தது நிறையா ரூபிம்மா. சின்ன பிள்ளையா நிறையா. அப்றம் காலேஜ் படிக்கிறப்ப பிரெண்ட்ஸ் கூட அவ்வளவா சேர்ந்துக்க மாட்டேன். எல்லாமே பெரிய வீட்டு பசங்க. ஏதோ ஒரு நெருடல். ஏன் இப்போவும் நான் என் தகுதி மீறி எல்லாத்தையும் அடைஞ்சுட்டேன்னு தோணும். அதுனாலதான் அந்தந்த வயசுக்கு கிடைக்க வேண்டிய சிலது இழந்துட்டனோன்னு தோணுது."
அவன் முதுகை தடவிக்கொடுத்து அவன் பேச கேட்டுகொண்டிருந்தார். நிறைய பேசினான். அவர் உணர்ந்ததெல்லாம் அவன் அன்புக்காக ஏங்கியிருக்கிறான். அது அவன் பெற்றோரது, நண்பர்களது, உறவுகளது எல்லாமுமாய். அவர்கள் நிலை அவர்களாகவே உயர்த்திக்கொள்வது தான் சிறந்தது. அவரவர் வாழ்வும், அவர்களுக்கான சூழலுமே அவர்களின் வாழ்வினை நிர்ணயிக்கின்றன. அதை மாற்றியமைப்பதனால் கிடைப்பதைப் போலவே இழப்பும் அங்கே இருக்கத்தான் செய்கின்றது.
ரூபாவதி பேசிவிட்டு சென்ற சிறிதுநேரத்திலேயே இவனை அழைத்தவர்,
"அமரா, சுஜாதா உன் பக்கம் தான் வந்திட்டு இருக்கா."
"சரி நான் பார்த்துக்கிறேன் ரூபிம்மா" சிரித்துக்கொண்டே அழைப்பை துண்டித்தவன், அவளையும் கண்டுகொண்டு அவளறியாது பின் தொடர்ந்தான்.
“எந்தப்பக்கம் முதல்ல பார்க்கலாம்.” சுற்றியும் கண்களை நான்கு பக்கமும் சுழல விட்டுகொண்டிருந்தாள் சுஜாதா.
ஸ்லீவ்லெஸ் டாப், ஸ்கர்ட் அணிந்து ஒரு பக்கம் குறுக்காக போட்ட துணிவகை பையுடன் தன் சுருள் குழலை தூக்கி கொண்டை இட்டவள், நான்கைந்து சிறுவர்களுடன் அந்த மாலினை சுற்றிகொண்டிருந்தாள்.
"இன்னாங்கடா எப்பயும் இருக்கதவிட கும்பலு ஜாஸ்த்தியாக்கீது…"
"அக்கோவ், ஏதாவது ஒன்ன பாத்து லுக்குவுட்டு செட்டுல் ஆகலாம் க்காவ்…"
"நீ வேற ஏன்டா… என் பையையும் பேனாவையும் பார்த்துட்டு யாருமே வர மாட்டேங்குறானே… "
"ஆமா உங்க அண்ணாத்தவோட துணிக்கடை இங்கதானே இருக்கு."
"ஆமாண்டா" அவர்கள் என்ன கேட்கப்போகுகிறார்கள் என்பதை உணர்ந்தவள்,
"அது மூனாவது தளத்துல மொத்தமா இருக்கு. இன்னைக்கு அங்க மட்டும் போனோம், எங்க அண்ணாச்சி என்னை பெண்டு கட்டிருவாங்க. சோ அங்க நாம போகலை. பொங்கலுக்கு போய் மொத்தமா வாங்கிக்கலாம் டா."
"சரிக்கா."
"டேய் சோகமா மூஞ்ச வச்சுட்டு வர்றதுன்னா சொல்லு, நா இப்டியே கிளம்பி போய்டுறேன்."
"இல்லக்கா, அதெல்லம் மொத்தமா வசூல் பண்ணிப்பேன்."
"சரிதான் வா."
அவ்வப்போது இவங்களுடன் இவள் இங்கே வருவது வழக்கம். அந்த வளாகத்தை சுற்றிக்காட்டி அவர்களுக்கு உண்ண உணவு கொடுத்து அழைத்துச் செல்வாள். இவர்கள் உணவுண்ண அமரவும் இவனும் அமர்ந்துக்கொண்டான். அவனாகவே சிறுவர்களோடு அறிமுகமாகிக்கொண்டான்.
அதன் பின்னே அனைத்தும் இனிதாய் இருவீட்டினரும் பேசி முடிக்க, சிறப்பாய் திருமணம் நடந்து, மன நிறைவோடு இணைந்தனர்.
அவன் இழந்த அன்புகளை அவள் திகட்ட கொடுக்க, அவள் பயணத்தில் துணை நின்று அவள் பாதையைச் செம்மை படுத்தினான்.
அவள் அழகென்பது, அவளை அவளே நேசித்து, அவளை நினைக்க புன்னகைக்கும் சுற்றத்தை சேமித்தது!
அவன் அழகென்பது, அவளை அவளுக்காய் ஏற்று தன் மகிழ்வை அதில் சேர்த்து நிறைவாக்கிக்கொண்டதும்!
***
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்