Kanthi Murugan
சிறுகதை வரிசை எண்
# 147
சிபில் என்கிற மிசி
இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக உள்ளுணர்வுகள் உரைத்துக் கொண்டே இருந்தன. பல உயிர்கள் துச்சமாக எண்ணிக் கொல்லப்ப்படுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒரு துளி விந்துவினால் உயிர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது கருவாகி உருவெடுத்து உலகத்தை வியந்து பார்க்கையில், தனக்கான உலக வாழ்க்கையில் ஊர்ந்து கிடக்கையில், சம மனிதர்களுடன் சிந்தையில் கலந்து உணர்வில் உறைந்து போய்க் கொண்டிருக்கையில்
“ வந்தான், சுட்டான், போய்ட்டான்”
இதை நடைமுறை வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள முடியவில்லை. என் வெள்ளுடையாடையில் ஆங்காங்கே கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளின் உச்சத்தை சகித்து வாழ நான் உணர்வற்ற ஜடமாகியிருக்க வேண்டும்.
எங்கோ ஒரு மூலையில் மனித ஓலத்தை கட்டாயப்படுத்தியிருந்த ஜப்பான் சிப்பாய்களின் ஆயுதங்கள் முடக்கிவிடப்பட்டிருக்க வேண்டும். சதைகளை மிதித்து மிதித்து வலு சேர்த்துக் கொண்ட அந்த பூட்ஸ் காலணிகளின் ஓசைகள் என் செவிகளுக்கு அதிகமாக கேட்கின்றன. அவை ஆணவத்தின் அராஜமாக அல்ல, பயத்தில் தெரித்தோடும் வேகத்தின் தொனிகளாக.
இந்த இருட்டறைக்குள் ஒலியின் வேகக்கட்டுப்பாட்டை மட்டுமே நான் விளங்கிக் கொள்ள முடியும்.இங்கொன்றுமாய் அங்கொன்றுமாய் துப்பாக்கி முனைகளின் மரண ஓலங்கள் செவிகளைக் கிழித்திழுக்கச் செய்தன. சாமுராய் கத்திகள் பயன்பாட்டின் ஓசைகள் என் சதைகளைக் கிழித்து பதம் பார்த்தது போலவே உணர்ந்து கொண்டிருந்தேன். கடந்த சில நாள்களாக சாமுராய்கள் உறையை விட்டு வெளிவராமல் ஏதோ ஓர் மூலையில் உறங்கிக் கொண்டிருக்கின்றன போல.
மரண ஓலங்களுக்கு நடுவே டவன் என்னை
“ ம்மா…ம்மா “
என்று கூறி கதறியழுதது என் காதுகளுக்குக் கேட்கவேயில்லை. என் தாய்மையுணர்வுக்குள் “அம்மா “ என்கிற ஒரு வார்த்தையையிட “மிசி” என்கிற ஓராயிரம் குரல்கள் முன்னுக்குப் பின்னுமாக சதா ஒலித்துக் கொண்டேயிருந்தன. நடுசாமத்தில் கொல்லைப்புற கதவுகள் தட்டப்படுவதும், சன்னல்கள் ஒத்த விரலால் சுரண்டப்படுவதும், ‘மிசி’ என்று மெல்லிய ஓசையில் குரல் எழுப்பப்படுவதும் என் மனசாட்சியின் களமாக மாறிவிட்டதில் டவன் மகள் என்பதை மறந்து அவளும் சிபிலானாள்.
ஜப்பான் ராணுவ தளபதி யஷிமுராவை என் விழிகள் நோக்கிய விதம் இவள் இனி அசர மாட்டாள் என்பதை தெளிவுப்படுத்திக்கொண்டே இருந்தது.ஏழு வயது பச்சிளம் குழந்தையைக் கைகளைக் கட்டி மார்புகளைக் கசக்கிப் பிழியப்பட்ட கயிறுகள் மேனியைச் சிவப்பாக்கியது. தலைகீழாகத் கட்டிப்போடும் வரை டவனை அரக்கப்படுத்தின.
“ சிபில்…”
தளபதி யஷிமுரா ஆவேசத்துடன் என்னை அழைத்தப் போதும் விழிகள் பிதுங்கி கருவிழிகளில் வெள்ளைப் படலங்கள் மறைந்து புரட்சி மட்டுமே அவனை நோக்கியது.
“ சாமுராய எடு…கயிறு வெட்டு…தலை கீழா இருக்கும் டவன் நெருப்புல எரியட்டும்…”
என் உதடுகள் உதிர்க்க தடையாகப் போன புரட்சியை உணர்ந்து கொண்டவன் போல் பூட்ஸ் காலால் என் மார்பை எட்டி உதைத்து தன் ஆணாதிக்கத்தில் தோல்வியுற்றதை ஒப்புக் கொள்ளயியலாதவனாய் என் கண்ணிலிருந்து மறைந்தான் யஷிமுரா. டவன் என்னை மன்னிப்பாளா?ருதுவானவளாயின் சிறைக்கைதியாய் ஜப்பான் சிப்பாய்களுக்கு டவனை நான் இழந்து காலங்கள் ஓடியிருக்கும்....கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக துளிர்விட்ட போராளிகளின் இரகசிய மறைவிடங்கள் காக்கப்படுமாயின் நாளை மற்றொரு டவன் உதயமாகி சொந்த மண்ணில் சுதந்திரமாக சுவாசிப்பாள். ஓல்கா எப்படியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வாள்.அவள் எனது சாரம்.
ஜோசப்பினைப் பற்றிய கேள்விகளை பலவாறாகத் தொடுத்து ஓய்ந்துப் போன சிப்பாய்களின் முகத்தில் வெறியாட்டம் தாண்டமாடிக் கொண்டிருந்தது.ஜோசப்பின் இல்லையேல் நான் பாப்பான் மக்களுக்கு நாட்டு நடப்பை தெரிந்து அறிவித்திருக்க முடியாது. ஜோசப்பின் பாதுகாப்பாக என் பாப்பான் வீட்டின் பாதாளத்தில் இருக்கிறாள். எனக்கு என்ன நேர்ந்தாலும் பாப்பான் மக்கள் யாராவது அவளைக் கண்டுப்பிடித்து பயன்பெறட்டும்.
ஜப்பானின் ஒடுக்கூமுறை ஆட்சியிலிருந்து பாப்பான் மக்கள் விடுதலையாவது எளிதான ஒன்றல்ல.கெம்பெத்தாய் முகாமில் நரக வாழ்க்கையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற இயலாத ஒன்று.
என்னால் எழுந்திட முடியவில்லை.ஏதோ ஒரு மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன். என் விழிகள் மூட தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. போராளிகளின் காயங்களுக்கு வேண்டிய மருந்துகளைப் தேடி சுத்தம் செய்து அடுத்தப் போராட்டத்திற்கு அவர்களைப் புத்துணர்ச்சி செய்து வழியனுப்பிய கண்கள் இன்று உலகத்தைக் காண மங்கிக் கொண்டிருக்கின்றன. இனி வைத்தியம் பார்க்க என்னால் இயல வேண்டும்.
ஆனால் எழுவதற்கு என் கைகளும் கால்களும் ஒத்துழைக்கவில்லை. தலை கீழாக தொங்க விடும் நாள்களில் தலைக் கிறுகிறுத்துப் போகும். அங்குக் கூடிய குழுமியிருக்கும் அரக்கன்களின் பார்வையில் என் பிறப்புறுப்பு காட்சிப் பொருளாய் நையாண்டியாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் என் வெண்ணிறாடை என் முகத்தை திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்கும். என்னை நிர்வாணப்படுத்தியவன்களிடம் இன்னுமும் தான் தன்மானத்தை இழந்திடாது வென்றுக் கொண்டுதான் இருக்கிறேன். என் பாப்பான் மக்களுக்காக.
பிறப்புறுப்பில் ஊற்றப்பட்ட சவர்க்கார நீர் ஆரம்பத்தில் எரிச்சலை மட்டும்தான் உண்டாக்கி இருந்தது. நேரம் ஆக ஆக அதிக அரிப்பானது. அந்த அரிப்பினை தடவி விடக் கூடிய நிலைக்குக் கூட நான் தள்ளப்படவில்லை. சவர்க்கார நீரினால் தோலில் சிறு சிறு கொப்பளங்களாக உருவாகி தொடைப்பகுதி பழுத்துப் போனது. நான் ஓரிடத்திலேயே நிற்க வைக்கப்பட்டதால் தொடைகள் வீங்கி இரு கால்களையும் இணைக்க முடியாமல் சிரமப்பட்டேன். கொப்பளங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது எரிச்சல் ஏற்பட்டு கத்தவும் முடியாமல் தவித்து நின்றேன்.
கை விரல்களும் கால் விரல்களும் பொதபொதவென்று நீங்கிக் கிடந்தன.மிருகங்களைப் போல் நடந்து கொண்ட ஜப்பான் ராணுவத்தினரின் நான் மனிதநேயத்தை எப்படி எதிர்பார்த்திட முடியும்? என் நகங்களை பிடுங்கி எறிந்திட்ட அந்த மிருகங்களிடத்தில் எங்கணும் பெண்ணியம் பேச இயலும்? ஒவ்வொரு நகத்தையும் பிடுங்கிடும் போது தான் மறுப்பிறப்பு என்று ஒன்று உள்ளதை உள்ளத்தாலும் உணர்வாலும் அறிந்தேன்.
“ எங்களை எதிர்க்க நெனக்கும் நோயாளிகளைக் காட்டி கொடுத்துட்டா அடுத்த நகத்த விட்டுடு வோம் …”
என்று சொல்லிச் சொல்லியே எல்லா நகரங்களும் பிடுங்கப்பட்டன..வலி தாங்காது நான் அதிகம் அலறவுமில்லை. அவர்களிடத்தில் நான் அலறிப்போனால் பாப்பான் மக்களை எளிதில் பிணமாக்கி விடுவான்கள்.
பிடுங்கிய நகத்தோடு என்னை விட்டப்பாடில்லை. கூர்மையான ஊசியைக் கொண்டு என் சதைகளைக் கிழித்துப் பார்த்தனர் கொடூரத்தின் மொத்த உருவமாய் நின்றிருந்த ஜப்பான் ராணுவம்.
என்னிடத்தில் எந்த தகவல்களையும் பெற முடியாது என்பதை உணர்ந்தவன்கள்தான். ஆனால், மீண்டும் மீண்டும் என்னை அராஜகப்படுத்தித்தான் பார்த்தனர். உடல் மீது நான்கைந்து பேர் பூட்ஸ் காலால் ஏறி இறங்கி மிதித்தப்போது வாயிலிருந்து கசங்கிய இரத்தத்தை துடைத்திட கூட என்னால் இயலவில்லை. மார்பில் கால் பட்ட போது சுருண்டு விடக் கூட எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. கால் பந்தைப் போலவே என் மேனி உருவெடுத்திருந்தது. முட்டிக் கால்களில் காயம் பட பட கால்களை நகர்த்திக் கூட முடியாத நிலையில் கிடந்தேன். கால்களை நீட்டினால் காயங்களின் இரத்தக் கசிவுகள் உயிரைப் பிழிந்தெடுத்தது.
அந்நிலையிலும் கூட நான்கைந்து சிப்பாய்கள் என்னைத் தரதரவென்று இழுத்துச் சென்று ஐஸ் கட்டியின் மேல் போட்டுப் போது என் உடல் காய்ந்த சருகிலிருந்து அடைமழையில் தேங்கிய குட்டை நீரைப் போல அசையாது நடைப்பிணமாகிப் போனது.
அவர்களிடத்தில் கொஞ்சம் கருணை இருந்திருக்கும் போல. ஐஸ் கட்டியின் மேல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த என் உடலை இழுத்து சிமெண்டு தரைக்குத் தாரைவார்த்தனர். கண்கள் மட்டுமே சுற்றியிருந்த சூழலைக் கவனித்துக் கொண்டு மௌனத்தில் மூழ்கிப் போயின.
இராணுவத் தளபதி யயஷிமூராவிற்கு என் மீதான வன்மம் குறைந்தப்பாடில்லை.ஜப்பானிய மொழியில் என்னைத் திட்டித் தீர்த்திருப்பான். அவனது கோபத்தின் உச்சம் அந்த அறையையே அலறச் செய்தது. அவனது வாயிலிருந்து உதிர்த்த வார்த்தைகள் கணீரென்று அறையை ஆக்கிரமித்திருந்தது.சிறிது நேரம் யோசித்தவனாய் நின்றிருந்தேன். சிப்பாய்களோ அவனது அடுத்த கட்ட நகர்வுக்கும் ஆணைக்கும் காத்து நெஞ்சை நிமிர்த்து நின்றனர். அவனது அடுத்த தண்டனை எதுவாக இருக்கட்டும் ,என் பாப்பான் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்திடுவேன் என்று உறுதியாகத் தரையில் ஐக்கியமாகியிருந்தேன்.
சில நிமிடங்கள் மௌனத்திற்குப் பின் தன் சிப்பாய்களை அழைத்தான். மொழி தெரியாத அவனிடத்தில் என்ன தண்டனைகள் இணையாகப் பிறப்பிக்கப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மனநிலையில்தான் என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன்.
இரு சிப்பாய்கள் என்னை நோக்கி வந்து வலது பக்கம் ஒருவரும் இடது பக்கம் ஒருவரும் கைத்தாங்கலாகத்தான் தூக்கினர். தரையில் கால்களை ஊன்றிக் கூட உடலிலும் உள்ளத்திலும் தெம்பில்லை. பாதங்கள் தரையைத் தேய்த்தவாறே இழுத்துச் செல்லப்பட்டேன். பழுத்தக் கம்பியால் உள்ளங்காலில் வைத்த சூடுகள் வலிகளை அதிகரிக்கச் செய்தன. துடித்து அழுதிட இனி இயலாது. என் ஒட்டு மொத்த வலிகளையும் முகம் மட்டுமே ஏற்றுக் கொண்டு உணர்வுகளை அழுத்திக் கொண்டிருந்தது. இம்முறை நீரில் முக்கி முக்கி அழுத்தப்பட்டேன். ஏற்கனவே மூக்கைத் துளைத்திருந்த புகையிலையின் நெடி மண்டை வரைக்கும் சென்று தலை வெடிக்கச் செய்து விடும் போலிருந்தது. எண்ணில் அடங்கா வரை நீருக்குள் முக்கிவிடப்பட்டேன்.
ஏதோ ஒரு அபாய ஒலி அறையையே அலறடித்து ஓடச் செய்தது.என்னை இழுத்துக் கொண்டு வந்த சிப்பாய்களும் நீர்நிலைக்கடியில் ஒரு பொருட்டாக கருதாது போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். மூக்கில் நுழைந்த தண்ணீர் தலைக்கேறி மூச்சுத் திணறலுக்கு ஆளாக்கி இன்னும் உயிரோடுதான் விட்டிருந்தது.
எத்தனை நாள்கள் இப்படி கிடக்கின்றேன் என்று தெரியவில்லை. மூச்சுக் காற்று இன்னும் உள்ளது.
உறங்கிப் போனதாக சில மணித்துளிகளில் திடீர் விழிப்பு. என் முன் ஜப்பான் சிப்பாய்கள் இல்லை : யாரென்றும் என்னால் அறிந்திட முடியவில்லை. கதவைத் திறந்த அந்த ஒளி என் கண்களை மங்கச் செய்திருந்தது. வெள்ளை நிறத்திலான ஆடையில் ஒரு தளபதி போலத் தெரிந்தது.
“சிபில் இயேர்…”
அவனது மகிழ்ச்சியான ஒலியில் வந்தவன் ஆங்கிலேயன் என்று மட்டும் உணர்ந்துக் கொண்டேன். எங்கோ கேட்டக் குரல் போல், ஆமாம் கேப்டன் மெக்பர்பேன்.முடங்கிக் கிடந்த என்னைக் கண்டுக் கொண்டான்.ஆனால்...
சட்டென்று தன் கண்களுக்குக் கைகளால் திரையிட்டுக் கொண்டேன்.
"ஓ...மை லேடி...ஜீசஸ்..."
கேப்டனுக்குள் அழுத்தம். அங்கிருந்த கிழிந்த துணியொன்றைக் கொண்டு என் மேனியை மூடினான். மறுபடியும் பூட்ஸ் காலணிகளின் ஓசை அதிரச் செய்தது. மனம் கொஞ்சம் தடுமாறியது. ஏதோ ஒரு கட்டையில் கிடத்தப் படுவதாக உணர்ந்தேன்.சுற்றி நிறைய பேர் இருந்திருக்கக் கூடும்
“பாஸ்ட் பாஸ்ட் “ என்கிற வார்த்தை மட்டும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது. நாலாப் பக்கமும் நான்கு கைகள் என்னைச் சுமந்து செல்வதை உணர்ந்தேன்.படிக்கட்டுப் போல “பீ கேர் புல்” என்று பின்னாடியிருந்து ஒரு குரல் ஆணையிட்டுக் கொண்டே இருந்தது.
“மிசி,ஆர் யூ ஓகே…”
ஒருவன் மட்டும் என்னை அழைத்துக் கொண்டே வந்தான். ஜப்பானிய இராணுவம் தொலைந்து விட்டதை அப்போதுதான் உணர்ந்தேன்.
சைரன் ஓசையில் வண்டி காத்திருக்க என் உடல் கிடத்தப்பட்டது. வண்டியில் மருத்துவர் நாடியைப் பார்க்க நான் என் பாப்பான் மக்களைப் பார்க்க முடியாது வண்டியின் விளக்கில் மூழ்கிப் போனேன்.
ஆக்கம்
காந்தி முருகன்
குறிப்பு : சிபில் கார்த்திகேசு எனும் வீரப் பெண்மணிக்கு நிகழ்ந்த அநீதியின் ஒரு சாரம் தான் இக்கதை. மலேசியாவில் மறைக்கப்பட்ட ,மறுக்கப்பட்ட பெண்ணிய வரலாறு
சிபில் கார்த்திகேசு : கதைச்சொல்லி
டவன் : சிபிலின் இளைய மகள்
ஓல்கா : சிபிலின் மூத்த மகள்
பாப்பான் : மலேசியாவின் ஈப்போவிலுள்ள ஒரு நகர்.இன்னுமும் உள்ளது.
கெம்பெதாய் : ஜப்பானின் இராணுவ முகாம்
மிசி : தாதியர்
ஜோசப்பின் : சிபில் கார்த்திகேசு பயன்படுத்திய வானொலி பெட்டி. அதற்கு ஜோசப்பின் என்றே மறைமுக பெயர் சூட்டி அழைத்தார்.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்