logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

Suja Suyambu

சிறுகதை வரிசை எண் # 148


பயணம் மறுக்கும் பாதைகள் சுஜா சுயம்பு, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, சென்னை, இந்தியா, தொடர்புக்கு kurinjipirai@gmail.com ஒற்றைவார் கொண்ட தோல் செருப்பைக் காலில் தொட்டுக்கொண்டு பாதிபாதம் தரையையும் முன்பக்கப் பாதம் செருப்பிலும் தொற்றிக்கொண்டிருக்க நடந்து சென்றுகொண்டிருந்தார் தங்கையா. தரையைத் தேய்த்துத் தேய்த்து நடக்கும்போது எழுந்த செவ்வாளைப் புழுதி முன்பாதத்தில் படர்ந்து அவரது கருத்த தோல்பகுதியைச் செம்பழுப்பு நிறத்திற்கு மாற்றியிருந்தது. இடதுகைச் சுட்டுவிரலைப் பிடித்து நடந்து வந்துகொண்டிருந்த சடையாண்டியின் உள்ளங்கைப் பகுதி வியர்த்து நனைந்திருந்தது. ஈரம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்கையாவின் விரலிலிருந்து தன் பிடியை உதறிவிட்டு ஒரு நிமிடம் உள்ளங்கையை உற்றுப்பார்த்தான் சடையாண்டி. தனது கையைக் கால்சட்டையின் பின்பகுதியில் அழுத்தித் தேய்த்துக்கொண்டான். விரலோடு சேர்ந்து கையும் பிடியிலிருந்து விலகிச் சுதந்திரமானதை உணர்ந்து சிறிது நேரம் கையை உடலோடு ஒட்டவைத்துக் கொள்ள விரும்பியது போலத் தோன்றியது தங்கையாவுக்கு. தலையில் கட்டியிருந்த உருமால் வெயிலின் தாக்கத்தை சற்றே தணித்தாலும், உடல் ஓய்வு வேண்டியது. தங்கையா சட்டைபோடுவதைத் தவித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. வயது முதிர்ந்த பெண்கள் ரவிக்கையைத் தவிர்ப்பதுபோல் ஆண்கள் சட்டையைத் தவிர்த்துவிடுவது வழக்கமாகயிருந்தது அன்று. தங்கையாவின் நெஞ்சுக்கூட்டைப் போர்த்தியிருந்த தோல் சுருங்கி மணல் வரியாய் படிந்திருந்தது. ‘கதர் சட்டையும் கரைவேட்டியும்’ … என்றெல்லாம் தங்கையாவின் கடந்த காலம் பற்றிக் காலட்சேபம் நடத்தமுடியாது என்றாலும் தரமான வெண்மை நிறத்தில் சட்டையும் பூ போட்ட கைலியும் அணிவது தங்கையாவின் வழக்கமான தோற்றமாக இருந்தது. பொடி, சமாந்தரம், பெரிது என எண்ணத்திற்கு ஏற்றபடிக் கட்டம் போட்ட சாரம் உடுத்துவது துலுக்கர்களின் வழக்கமாக இருந்ததால் மற்றவர்கள் அதனைத் தவிர்த்து வந்ததைப் போலவே தங்கையாவும் தவிர்த்துவந்தார். கண நேரத்தில் தாத்தாவின் கையை மீண்டும் இழுத்து ஆள்காட்டி விரலைப் பற்றிக்கொண்டான். புத்தகங்கள் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் கூடையின் ஒரு கைப்பிடி சடையாண்டியின் தோளிலிருந்து சரியத் தொடங்கியது. தனது இடதுகையால் அந்தப் பிடியை இழுத்து மற்றொரு கைப்பிடிக்குள் திணித்தான். அதனால் கூடை ஊறுதியாகத் தோளில் நின்றுகொண்டதில் மனதுக்குள் மகிழ்ந்துகொண்டான். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை. அரைஞாண் கொடியால் பாதுகாக்கப்பட்ட அரைக்கால் சட்டை தனது போராட்டத்தைத் தொடங்கியதைப் போல இடுப்பிலிருந்து இறங்கிவர ஆரம்பித்தது. வெறுத்துப்போய் தாத்தாவின் விரல் பிடியை விட்டுவிட்டுக் கூடையைக் கீழே இறக்கிவைத்தான். பழுப்பு நிறக் கால்சட்டையைச் சரியாகக் கொடிக்குள் அழுத்தி அதன் மேல் பகுதியை இழுத்து மேலதிகப் பாதுகாப்பிற்காக ஒரு முடிச்சையும் போட்டுவைத்தான். ‘ஏலேய்… என்ன… பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆவலயா?... கெடந்து தடவிகிட்டுல்ல இருக்கா…’ கனத்த குரலில் தங்கையா உறுமினார். உறுமல்களுக்கெல்லாம் பயந்துபோகிறவனல்ல சடையாண்டி. சிறிதும் பதட்டம் இல்லாமல் மானப் பாதுகாப்பு வேலைகளைச் சரியாகச் செய்து முடித்துவிட்டுக் கூடையின் ஒரு பிடியை மற்றொரு பிடிக்குள் வைத்து முறுக்கித் தோளில் போட்டுக்கொண்டு விரலைப் பிடித்துக்கொணடு ஒரு அதிகாரியைப் போன்ற தொனியுடன் ‘எனி போவோம்…’ என்று புறப்பட்டான். எருமைகுளம் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் பாரம் படித்துவந்த சடையாண்டியைக் காலையில் பள்ளியில் விட்டுவிட்டு அருகில் இருக்கும் சங்கப்பறையில் ஐந்தாறு கிழவர்களோடு அளவளாவிவிட்டு வந்தால்தான் தங்கையாவின் அன்றையநாள் சிறப்பாகத் தொடங்கியதாக இருக்கும். பள்ளிக்கு அருகில் வந்ததும் தாத்தாவின் விரலை விலக்கிவிட்டு ஓடினான் சடையாண்டி. பள்ளியின் இரும்பு கேட்டில் தொற்றிக்கொண்டிருந்த பிற பிள்ளைகளின் பயணத்திற்குள் தானும் இணைந்துகொள்ளும் விருப்பத்தோடு வலதுகாலைத் தூக்கி இடத்தைத் துழாவினான். கண்டடைந்த இடத்தில் காலை வைத்த போது ரேனுவின் கால்மேல் வைக்க நேரிட்டது. தனது இடது காலைக் கீழே தொங்கவிட்டபடி ரேனு சடையாண்டியின் காலுக்கு இடம் கொடுத்தாள். ரேனுவின் வளைந்த சடைப் பின்னலைக் கட்டியிருந்த சிவப்புநிற ரிப்பன் சுங்கு அவிழ்ந்து காற்றில் பறந்தது. கம்பிக் கதவு முன்னும் பின்னும் சென்றுவரும்போது அவிழ்ந்த ரிப்பனும் கையசைக்துக்கொண்டிருந்தது. அருகருகே நின்றுகொண்டிருந்ததால் ரேனுவின் ரிப்பன் சடையாண்டியயின் முகத்தைத் தடவியதால் ஏற்பட்ட சுணைப்பினை நீக்கிக்கொள்ள இடது கையால் மூக்கைத் தேய்த்துக்கொண்டான் சடையாண்டி. கையில் தொற்றிக்கொண்டிருந்த கூடை ராஜனின் மேல் இடித்தது. ராஜன் கூடையைத் தள்ளிவிட்டு ‘ஏல.. பைய வச்சிட்டு வாயாம்ல…’ என்று சலித்துக் கொண்டான். ராஜன் தள்ளிவிட்டதில் கூடைக்குள் இருந்த தட்டு இரும்புக் கேட்டில் இடித்துத் தங்கையாவுக்காகப் பரிந்து பேசியது. அந்தச் சத்தத்தோடு சேர்ந்து பள்ளியின் மணியோசையும் இணைந்துகொண்டது. சடையாண்டியை நோட்டமிட்டபடியே, நின்றுகொண்டிருந்த தங்கையா உருமாலை உருவி உதறிக்கொண்டே சங்கப் பறைக்குள் நுழைந்தார். சங்கப் பறை புதுப்பிக்கப்பட்டு, கதவு போடப்பட்டு நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஊர் நியாயவிலைக்கடைக்கு வருகின்ற அரிசியும் பருப்பும் அந்த அறையில் கொள்வது போக மீதமிருந்தால் சில நேரங்களில் சங்கப்பறைக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும். கோவில் கொடைவிழாக் காலங்களில் வில்லுப்பாட்டுக்காரர்களும் சிங்காரி மேளக் குழுக்களும் சங்கப் பறைக்குள் அடைக்கலமாவார்கள். ஆனால் இப்போது மேற்குறித்த எந்தக் காரணமும் இல்லை என்றாலும் பூட்டப்பட்டுதான் இருந்தது. முன் இரவில் பெய்த மழைக்காக வீடு போகாமல் ஒதுங்கிநின்ற சில ஆடுகளின் புளுக்கைகளும் அவற்றின் சிறுநீர்த்தடமும் தெரிந்தது. ஆங்காங்கு பிய்ந்து சிதைந்துபோயிருந்த காரைத் தரையின் பள்ளங்களுக்குள் ஆட்டின் புளுக்கைகளைக் காலால் தள்ளியபடியே லிங்கத்துரையைப் பார்த்தார். கட்டடப் பகுதியிலிருந்து இறக்கப்பட்டிருந்த சீமை ஓட்டின் கீழே அமர்ந்தபடி, ‘என்ன மாமா வெயிலு பயங்கரமா?’ சட்டைப்பையில் வைத்திருந்த பீடியின் வால்பகுதியை இரு விரல்களால் அழுத்திப் பிடித்துச் சரிசெய்து வாயில் வைத்தான் லிங்கத்துரை. ‘பயங்கரமாவா?... வெய்யில் கொல்லுதுடே... ச்சூ… அடே… பாவிக் கடவுளே!’ என்று துண்டை உதறித் திண்ணைப் பகுதியைச் சுத்தம் செய்துப் பின்புறமாகத் திரும்பி பெருவிரல்களால் எக்கித் திண்ணையில் உட்கார்ந்துகொண்டார் தங்கையா. ‘அன்னா… அந்தா வாராரு…’ பீடியின் புகையை வாய் மூக்கு வழியாக வெளியே விட்டபடி லிங்கத்துரை கூறினான். நாராயணனை எதிர்பார்த்துக் காத்திருந்த தங்கையா லிங்கத்துரை காட்டிய திசையில் பார்த்து லிங்கத்துரையின் கேலியை உணர்ந்துகொண்டு, ‘நாராயணன காணலியே… பாத்தியா டே…’ என விசாரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘வரச்சில பூவரசு எணலுக்குள்ள படுத்துக்கெடந்தாவ… பாத்துட்டுதான் வாரேன்…’. ‘என்னவாம்…’ என்று தங்கையா காரணம் கேட்பதற்குள் வண்டி வரும் சத்தம் கேட்கவே, சொக்கனுக்காகக் காத்திருந்த லிங்கத்துரை திண்ணையிலிருந்து கீழே இறங்கியபடியே ‘சொகமில்லண்ணு சொன்னமாதிரி இருந்து…’ என்று பதிலுரைத்துக்கொண்டே வண்டியை நோக்கி நடந்தான். ‘போலாமா டே… என்னல… கையில…’ சொக்கன் லிங்கத்துரையின் பதிலுக்குக் காத்திருக்காமல் கண்ணாடித்தாளைப் பிரித்துப் பார்த்தான். கடுங்காப்பி நிறத்தில் ஒரு பிளாஸ்டிக் புட்டியும் அதன் மேல் வெள்ளைநிறத் தாளில் சிவப்பு நிற அச்சடி எழுத்தால் எழுதப்பட்டிருந்ததையும் கவனித்தான். சொக்கனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்றாலும் புட்டியில் இருந்த எண்ணெயின் மணம் அது செம்பொன்விளை எண்ணெய்தான் என்பதை ஊர்ஜிதப் படுத்தியது. செம்பொன் விளையில் நான்கு தலைமுறையாக எலும்பு முறிவு முதலானவற்றிற்குச் சிகிச்சை அளிக்கின்ற வம்சத்வர்களால் மேல்பூச்சு மருந்தாகக் கொடுக்கப்படும் எண்ணெய் செம்பொன்விளை எண்ணெய்; அந்தச் சுற்றுவட்டார மக்களால் நம்பிக்கையுடன் உபயோகப் படுத்தப்படுகிறது. ‘யாருக்கு டே…’ என்று கேட்டுக்கொண்டே வண்டியின் முன்பகுதியில் இருந்த பைக்குள் கண்ணாடித்தாளை முன்புஇருந்ததைவிட அழகாகச் சுற்றிப் பொதிந்து வைத்தான் சொக்கன். ‘கக்கன் குடியிருப்புல என் மைனி வாங்கிட்டு வரச் சொன்னாவ… அவிய மொவனுக்கு சதைப்பிடிப்பு மாதிரி இருக்காம்… அதான்… என்னால வரமுடியலப்பு… சொத்த வாங்கிட்டு வாறீயாண்ணாவ? அந்தால… நேத்து வரச்சில வாங்கிட்டு வந்தேன். இண்ணைக்குக் காய் பறிப்பு முடிஞ்சதும் கொண்டுபோய் குடுத்துட்டு வரணும்…’ லிங்கத்துரையின் பதிலைப் பயணத்தில் கேட்டுக்கொள்ளும் நோக்கில் சொக்கன் புறப்பட்டுவிட்டான். வழக்கமாகப் பறைக்குள் தான் சந்திக்கிற நாராயணன் போக, ஆறுமுகத்தையோ, முத்துப்பாண்டியையோ இன்று காணமுடியவில்லை. பத்தரை மணி நாகர்கோவில் வண்டி நீண்ட ஒலி எழுப்பிக்கொண்டே வேகமாகக் கடந்துசென்றுவிட்டது. பேச்சுத்துணைக்கு ஆள் இல்லாமல் தங்கையாவால் நீண்ட நேரம் அங்க இருக்கமுடியவில்லை. வேறுவழியில்லாமல் முன்னங்கால்களால் உன்னி இறங்கி, கீழே இருந்த செருப்பினைச் சரிசெய்து போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சடையாண்டி படிக்கும் இந்து தொடக்கப் பள்ளியில் குட்டியாப்பு படிக்கும் கௌரியை இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்துவந்துகொண்டிருந்தாள் வளர்மதி. ‘ஏ… வளரு…பிள்ள எதுக்கு அளியா?’ என்று குரல் கொடுத்தார் தங்கையா. ‘அதா பெரியப்பா… அவா பள்ளிக்கொடத்துக்குப் போவமாண்டாளாம்…’ சொல்லிக்கொண்டே பவுடர் போட்ட முகத்தில் வடிந்திருந்த கண்ணீர்க் கோட்டின் தடத்தைத் தனது முந்தானையால் துடைத்தாள் வளர்மதி. ‘எம்மோ… அளப்புடாது… என் செல்லக் கிளில்லா… நல்லா படிக்கணும் … படிச்சாதான பெரிய ஆளா வரமுடியும்…’ என்று அன்போடு குழந்தை கௌரியைக் கையில் வாங்கி வைத்துக்கொண்டு தனது துண்டினால் அவள் கண்களைத் துடைத்துவிட்டார். ‘எத்தன பிள்ளையளுவ பள்ளிக்கொடத்துக்குப் போவுதுவ பாத்தியா?...நீயும் படிக்கணும்மா… ’ என்று குழந்தையைத் தூக்கி மணத்திவிட்டு வேடிக்கைக் காட்டினார் தங்கையா, ‘இந்தால வந்த பண்டாரம்… இந்தால வந்து இந்தால வந்து…கித்து…கித்து…கித்து…’. கிச்சுகிச்சு மூட்டியவுடன் குழந்தை வாய்விட்டுச் சிரித்தது. ‘அளுத பிள்ள சிரிச்சிச்சாம்… களுத மோள குடிச்சிச்சாம்…’ என்று வளர்மதி தனது மகளைப் பார்த்துக் கேலி செய்ய, அம்மாமைத் தங்கையாவின் பிடிக்குள்ளிருந்து எட்டிப் பிடிக்க எத்தத்தாள் கௌரி. சமாதனமான குழந்தையை மீண்டும் இடுப்பில் வைத்துக் கொண்டு ‘தாத்தாவுக்கு டா.. டா.. போடு…’ என்று சொல்லிக் கொடுத்தாள் வளர்மதி. குழந்தை கையை அசைத்து தங்கையாவுக்கு விடை கொடுத்தது. வீட்டை நோக்கி நடந்த தங்கையாவிற்கு ஒரே சிந்தனை, நாராயணனைப் பார்த்துவிட்டுப் போகலாமா? என்று. நாராயணன் வீடு நடுத்தெருவில் இருக்கிறது. அங்கு போக வேண்டுமென்றால் இடையில் குமரேசனின் முருங்கை விளையைக் கடந்துதான் செல்ல வேண்டும். முருங்கை விளைக்கும் கீழவிளைக்காரன் கண்ணனுக்கும் ஏற்பட்ட இடத் தகராறில் அந்தப் பாதை அடைக்கப்பட்டிருந்தது. அப்படியானால் முருங்கைவிளையைக் கடந்து ஊசிக்காட்டுச் சுடலைக் கோயில் வழியாக தார்ரோடு ஏறி இறங்கிதான் நாராயணனின் வீட்டிற்குச் செல்ல முடியும். மனதில் நினைக்கும்போதே மலைப்பாக இருந்தது தங்கையாவுக்கு. இதற்காகத்தான் நவ்வலடி செல்லும் தார்ச்சாலைக்குக் கிழக்குப் பகுதியில் தன் மகன் பாட்டம் எடுத்துப் பயிர் செய்யும் வள்ளிவிளைக்குக் கூடத் தங்கையா செல்வதில்லை. வயது முதிர்ந்த காலத்தில் தன்னை அங்கும் இங்கும் அலையவேண்டாம் என்று மகன் மாயாண்டி கூறியிருந்த காரணத்தால் அதனைத் தவிர்த்திருந்தார் தங்கையா. ‘நாராயணனை நாளை நேரத்திலேயே வந்து பார்த்துக்கொள்ளலாம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தார். மதிய உணவு இடைவேளை மணி வேகமாக அடித்தது. பள்ளிப் பிள்ளைகளின் கூச்சலும் கும்மாளத்தில் இந்து தொடக்கப்பள்ளியின் விளையாட்டு மைதானம் குஸ்திக் களம் போலப் புழுதி கிளம்பிக் காட்சியளித்தது. பிள்ளைகள் அனைவரும் சத்துணவு வாங்குவதற்கு வேக வேகமாகத் தட்டை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தனர். சாக்குக்கோணியைச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு சோற்றுப்பானையை இறக்கிக் கொண்டு வைத்திருந்தாள் வடிவு. மூடியைத் திறந்ததும் மைசூர்ப்பருப்புக் குழம்புச் சோறு முக்கைத் துளைத்தது. வாசனை பிடித்துக்கொண்டே மாணவர்கள் தங்கள் தட்டை நீட்டி உணவைப் பெற்றுச்சென்றனர். உணவை வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பிள்ளைகள் அவர்களின் தட்டை எட்டி எட்டிப் பார்த்தனர். சடையாண்டிக்கு ஆவல் தாங்க முடியவில்லை. தனது வரிசை வருவதற்குள் முட்டை இருக்குமோ? தீர்ந்துவிடுமோ? என்று பின்னே உள்ள பிள்ளைகள் நெரித்துத் தள்ளத் தானும் வளைந்து கொடுத்துக்கொண்டு சோற்றுப்பானையின் அருகில் வந்துவிட்டான். உணவை மூடியிருந்த தட்டில் இன்னும் முட்டைகள் மீதமிருந்தன. தனக்கும் முட்டை கிடைக்கும் என்று தன்னை ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு உணவைப் பெற்று வேம்பின் இணலில் பிள்ளைகளோடு அமர்ந்து சாப்பிட்டான். தட்டான்விளை வேலு வாத்தியார் பிரம்பை சுழற்றிக்கொண்டு பிள்ளைகள் ஒழுங்காகச் சாப்பிடுகின்றனவா? என்று கண்காணித்துக்கொண்டே நடந்தார். பிள்ளைகளோ அதனைப் பிரமாதமாக எடுத்துக்கொள்ளவில்லை. தங்கையா தனது சோற்றுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையின் வெண்மைப்பகுதியைத் தொட்டுக்கொண்டான். முட்டையும் சோறும் முடியச் சமமாக இருந்தது. மீதமிருந்த மஞ்சள் கருவைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு உள்ளங்கைக் குழிக்குள் வைத்து சூழற்றி விளையாடி வாயில் போட்டுக்கொண்டான். ஏற்கனவே உண்டு முடித்த பிள்ளைகள் குழாயில் தண்ணீர் பிடித்துத் தட்டைக் கழுவிவிட்டு அதே தட்டில் மீண்டும் தண்ணீர் பிடித்துக் குடித்துக்கொண்டிருந்தன. முண்டியடித்துக்கொண்டு சடையாண்டியும் கூட்டத்திற்குள் நுழைந்தான். தட்டைக் கழுவிவிட்டுத் திரும்பும்போது மற்றொருவனின் தட்டில் இருந்த தண்ணீர் சடையனின் தலையில் கவிழ்ந்தது. வாயில் போட்டிருந்த முட்டையின் மஞ்சள் கருவைக் கூழாக்கிச் சாப்பிடுவதில் அலாதியான சுவையை சடையாண்டி உணர்வான். ஆனால் அந்தச் சுவையை உணர்வதில் இன்று தடை ஏற்பட்டுவிட்டது. படக்கென்று முட்டையை விழுங்கிவிட்டான். ‘யாருலே அவன்… ?’ இடது கைத் தோளால் தலையிலிருந்து காதுக்குள் வடிந்த தண்ணீரைத் துடைத்துக்கொண்டே எட்டிப் பார்த்தான். பதிலில்லாத கேள்வியாக அது நின்றுவிட்டது. அலுங்காமல் தட்டில் கொண்டுவந்த தண்ணீரைச் சிறிது தூரம் கடந்துவந்து குடித்துவிட்டுத் தட்டை உதறினான். ஈரமான காலில் ஒட்டியிருந்த செவ்வாளை மண்ணை வகுப்பறைக்கு ஏறும் படியின் அருகில் வளர்ந்திருந்த கொளிஞ்சிச் செடியில் தேய்த்துக் காலைச் சுத்தப்படுத்திக்கொண்டு வகுப்பிற்குச் சென்று கூடைக்குள் தட்டை வைத்துவிட்டு விளையாட்டுக்கு ஆயத்தமானான். மணியோசை அதற்கு நேரமில்லை என்று தடை போட்டது. அதற்குள் வீடு வந்ததிருந்த தங்கையாவிற்கு மதிய சோறு கொடுப்பதற்காக முத்தரசி கொடியடுப்பின் பக்கவாட்டில் வடிக்கப்பட்டிருந்த சோற்றுப்பானையை நிமிர்த்தி ஒரு குலுக்குக் குலுக்கி மூடியைத் திறந்தாள். ஒற்றை இலைச் சோற்றின் மணமும் அதன் பெரிய பெரிய பருக்கைகளும் பானைக்குள் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. கும்பா வட்டிலில் சோற்றைப் போட்டு குழம்புச் சட்டியையும் தூக்கிக்கொண்டுவந்து தங்கையாவின் அருகில் வைத்தாள். ஆட்டுச் சாப்பிற்குள் போடப்பட்டிருந்த நார்க் கட்டிலில் அமர்ந்திருந்த தங்கையா, ‘கரித்துணிய வச்சிப்பிடிச்சிக் கொண்டுவரவேண்டியதுதான தாயி…’ என்றார். அவரது குரலில் அன்பின் வரிகள் படர்ந்திருந்தன. தேங்காய் எண்ணெய் தாளிப்பு மணம் மனதை வருட பருப்புக் குழம்மையும் முருங்கைக்காய் கூட்டையும் வயிறாற உண்டார். மருமகள் முத்தரசி கொண்டுவந்த சிறிய வாளித் தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு கண்ணயர்வதற்காகக் கட்டிலில் சாய்ந்தார். ஆட்டுக்கான உணவு கட்டித் தொங்கவிடப்படும் கயிறில் வாழை இலையின் நடுத்தண்டுப் பகுதி மட்டும் தொங்கிக் கொண்டிருந்தது. முளைக்கொம்பில் கட்டப்பட்டிருந்த மறி சோகமாகப் படுத்துக்கிடந்தது. தங்கையா எழுந்து தனது செருப்பைப் போட்டுக்கொண்டு வீட்டின் வடக்குப் பகுதியில் வளர்ந்திருந்த வாடாச்சி மரத்தின் அருகே சென்றார். அருகில் சாய்க்கப்பட்டிருந்த கவட்டைக் கொம்மை எடுத்து மரத்தை நோக்கி உயர்த்தினார். அங்கு வந்து சேர்ந்த முத்தரசி, ‘மாமா மேக்க தாந்து கெடக்கே அந்தக் கொப்புல போடுங்க… கரண்டு ஒயர்ல ஒரசிகிட்டு கெடக்கு…’ என்றாள். முத்தரசியின் வார்த்தையை ஆமோதித்து அந்தக்கிளையைத் தங்கையா தாழ்த்திப் பிடிக்க எட்டிப்பிடித்தாள் முத்தரசி. இழுத்த இழுப்பில் தனது வெண்மையான சிறு பூக்களை உதிர்த்தது வாடாச்சி. கிளையை விட்டுவிடாமல் தலையைக் கீழே தாழ்த்திக் கண்ணில் விழுந்திருந்த பூவினைத் தட்டிவிட்டு, படபடவென்று இலைக்காம்புகளை இணுக்கி எடுத்தாள். வேலிக்காக நடப்பட்டிருந்த கள்ளிச்செடிகளின் மேல் விழுந்திருந்த ரெண்டொரு இலைகளையும் எடுத்துக்கூட்டிச் சேர்த்து ஆட்டுச் சாப்பிற்குள் கொண்டுபோய்க் கயிற்றுக்குள் இலைக்காம்பை வைத்துத் திணித்து கயிறை இழுத்துவிட்டாள். இலை தொங்கிக்கொண்டிருந்தது. இலைவாசம், இறைவாசம் உணர்ந்து முன்னங்காலை பூமியில் அழுத்தி உதறிக்கொண்டு தன்னுடைய குறுவாலை ஆட்டியபடி அருகே வந்தது மறி. தலையை உயர்த்திச் சிறு நாக்கினை நீட்டி மூக்கின் முன்பகுதியைக் கீழும் மேலும் அசைத்து நுகர்ந்து பார்த்தது. இலையைக் கறிக்க மனமில்லாமல் திரும்பச் சென்று படுத்துக்கொண்டது. மறியின் செயலைப் பார்த்த தங்கையா மேற்குத் திண்ணையில் வைக்கப்பட்டிந்த பால்பாட்டிலை எடுத்தார். சூழலை உணர்ந்துகொண்டவளாய் பால் பாத்திரத்தை எடுத்துவந்து சின்ன கட்டிலில் உட்கார்ந்தாள் முத்தரசி. சாராயப் பாட்டிலின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த ரப்பரைக் கழற்றி, தொட்டியிலிருந்த தண்ணீரைக் கோதிப் பெருவிரலை பாட்டிலின் வாய்ப்பகுதிக்குள் விட்டுக் குலுக்கினார் தங்கையா. அடிப்பகுதியில் தங்கியிருந்த பால் கரைந்து நீர்க்குமிழிகளோடு கலந்து பயணித்தது. விரலை விலக்கி நீரை மல்லிச் செடிக்குள் ஊற்றினார். முத்தரசி பால்பாத்திரத்தில் படர்ந்திருந்த ஆடையை ஊதி நீக்க முயற்சித்தாள் முடியவில்லை. பாத்திரத்தை ஒரு சுழற்று சுழற்றினாள். பற்றிப் பிடித்திருந்த ஆடை விலகி வழி கொடுத்தது. பாத்திரத்தைச் சரித்து பாட்டிலை நிரப்பி ரப்பரைப் பொருத்தினார் தங்கையா. சரியாகப் பால் வருகிறதா என்று பாட்டிலை கிழே சரித்துச் சோதித்தார். மாலை நான்கு மணிக்குப் பள்ளிக்கூடத்தின் மணி அடித்தவுடன் கூட்டைவிட்டுப் பறக்கும் தேனீக்களின் ரீங்காரத்தோடும் சுறுசுறுப்போடும் பறந்தோடி வந்தான் சடையாண்டி. கூடையைத் திண்ணையில் போட்டுவிட்டு ஆட்டுச் சாப்பிற்குள் நுழைந்தான். ‘சடையா… டேய்…’ என்று மறியைக் கொஞ்சிக்கொண்டே பிணைக்கப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டான். முழுக் கருமையோடு நெற்றியில் வெண்மையான நாமத்தோடு தனது தந்தை மயிலாடி சந்தையிலிருந்து வாங்கிவந்த மறியல்லவா? சடையன். முன்னங்கால்களைச் சடையாண்டியின் கால்களின் மேலே வைத்து முகத்திற்கு அருகே முகத்தைக் கொண்டுசென்று அன்பை வெளிப்படுத்தியது ஆட்டுக்குட்டி. ‘ஏலேய்… மறிய கெட்டு, அவுத்து உடாத… அந்த மல்லி இப்பதான் நாலு மெட்டெடுத்திருக்கு… காலைல சாணி தெளிக்கச்சிலயே நாலு சொட்டுத் தெளிக்கணும்ன நெனச்சேன் அயித்து போச்சு’ என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டு உளுந்து ஊறவைத்திருந்த பாத்திரத்தை இடது காலில் சரித்து வைத்தபடி அசைத்து அசைத்துத் தோலை நீக்கிக்கொண்டிருந்தாள். பாத்திரத்தில் வெள்ளை உளுந்தும் முத்தரசியின் கையில் கருப்புத் தோலுமாக உளுந்து பிரிந்துகொண்டிருந்தது. தாத்தாவின் கையிலிருந்து பாட்டிலை வாங்கிக்கொண்டு ‘நான் பாத்துக்கிடியேன்…’ அம்மாவின் அதட்டலுக்கு பதில் சொல்லிக்கொண்டே மறிக்குப் பால் புகட்டினான். மறியின் வயிறு புடைத்து மேலெழும்பியது. வெற்று பாட்டிலை எடுத்துக்கொண்டு எழுந்து நடந்தான் சடையாண்டி. தான் ஆசையோடு சடையனின் கழுத்தில் கட்டியிருந்த உருண்டை மணி தாழ்ந்து கிடந்தது. ‘என்னடே… மணி தாந்து கெடக்கு… ’ சொல்லிக்கொண்டே மணிகட்டியிருந்த கயிறை மேலே இழுத்துத் தகுந்த அளவு பார்த்து முடிச்சுப் போட்டுவிட்டு நடந்தான். மறி மீண்டும் சடையாண்டியைப் பின்தொடர்ந்தது. சடையாண்டி வீட்டில் இருக்கும் நேரத்தில் சடையன் கட்டவிழ்ந்துதான் திரிவான். ‘ஏலேய்… சடையா… பிளாப்பெட்டியில காணம் வறுத்து வச்சிருக்கேன் எடுத்துத் தின்னு…’ முத்தரசி சொல்வதற்கு முன்பாகவே தின்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடித் திரைந்து அலைந்தவனின் கண்களில் பட்ட காணப்பயிரை எடுத்துக்கொண்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான். ஒரு பக்கம் காணப்பயிரும் ஒரு பக்கம் பள்ளிக்கூடப் புத்தகப் பையுமாக சடையாண்டி நடுவில் தனியரசாண்டான். அவனது காலுக்குக் கீழே சடையன் படுத்துக்கிடந்தான். ‘குச்சி டப்பா எங்க?’ கூடைக்குள் கையை விட்டுத் துழாவிக்கொண்டே யோசித்தான். அதற்குள் கையில் பிடிபட்டுவிட்ட குச்சிடப்பாவைத் திறந்து பல்பத்தை எடுத்தான். மரக்கட்டைச் சட்டம் போட்ட சிலேட்டை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். தமிழில் உயிர், மெய்யெழுத்துகளை ஐந்து முறை எழுதி முடிப்பதற்குள் முதல் பக்கம் முடிந்துவிட்டது. சிலேட்டின் அடுத்த பக்கத்தைத் திருப்பி மேல் பகுதியில் உள்ளங்கையால் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘எம் போட்டு புள்ளி வச்சு எஸ்… ஏ… டி..ஏ..ஒய்..ஏ..என்..டி..ஐ…’ என்று சொன்னபடியே தனது பெயரைப் பத்துமுறை எழுதிவிட்டு, மற்ற பாடங்களையும் எழுதி முடித்தான். எழுதியதெல்லாம் அழிந்துவிடாமல் சிலேட்டைத் தூக்கிக் கூடைக்குள் பத்திரமாக வைத்து, திண்ணையின் பக்கவாட்டில் இருந்த திண்டில் கூடையை வைத்தான். பெட்டியில் இருந்த காணப்பயிரும் குறைந்திருந்தது. எஞ்சியிருந்த பயிறையும் அள்ளி வாயில் போட்டுக்கொண்டு சட்டைக் காலரை இழுத்து வாயைத் துடைத்துக்கொண்டு தெருவுக்கு ஓடினான். கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி கலகலவென ஒலியெழுப்ப சடையன் சடையாண்டியைத் தொடர்ந்து ஓடினான். சடையாண்டிக்காகக் காத்திருந்த நண்பர்கள்… இல்லை.. இல்லை… சடையனுக்காகக் காத்திருந்த பிள்ளைகள் கூட்டம் சடையனோடு ஓடி விளையாட ஆரம்பித்துவிட்டன. பொழுது சாயவும் ‘ஏலேய் சடையா… ’ என்று அம்மா முத்தரசி குரல் கொடுத்தாள். சடையன் குரல் கொடுக்கவில்லை. விளையாட்டு ஆர்வத்தில் பிள்ளைகள் கூட்டத்தோடு சடையனும் சடையாண்டியும் நடுத்தெருவிற்குச் சென்றிருந்தார்கள். அதற்குள் ஓடிப்பிடித்த விளையாட்டு, ‘மலைத் தீ’ விளையாட்டாக மாறியிருந்தது. ‘மலையில தீ எரியுது பிள்ளையளா ஓடுங்க, மலையில தீ எரியுது பிள்ளையனா ஓடுங்க’ என்று பாடிப் பாடி களைத்த சிறுவர்களின் விளையாட்டு மீண்டும் திசை மாறியது. ‘டிக்.. டிக்.. யாரது? திருடன். என்ன வேணும்? நகை வேணும், என்ன நகை? கலர் நகை, என்ன கலர்… பச்சை’. ‘ஏல …பச்சை….பச்சை…’ என்று முண்டியடித்துக்கொண்டு தனசேகரின் வீட்டு அருகில் இருந்த தண்ணீர்க் குழாய் அருகே வளர்ந்திருந்த உடைமரத்தின தழைகளைப் பரித்து வைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு பிள்ளைகள் ஓடினர். வெற்றியின் கைகளுக்கு யாரும் அகப்படவில்லை. பிள்ளைகள் மீண்டும் பாடலைத் தொடர்ந்தனர். சிகப்பு, நீலம், மஞ்சள் என வண்ணங்கள் நிறம்மாறின. நிறம் கருப்பானது. எல்லோரும் சடையனை நோக்கி ஓடிவந்தார்கள். ‘ஏலேய்… உங்க தலையிலதான் இருக்குல்லலே… சடையன்கிட்ட ஏன் வாறீய…’ சடையனைத் துன்பப்படுத்துவதை விரும்பாமல் அதனை அணைத்துக்கொள்ள ஓடோடினான் சடையாண்டி. முருங்கைவிளையில் தலைநீட்டிக்கொண்டிருந்த வாழை இலையைக் உண்ணும் நோக்கத்தோடு தலையை உயர்த்தி நாக்கை நீட்டி முயற்சித்துக்கொண்டிருந்தான் சடையன். முடியவில்லை. தனது முன்னங்காலை உயர்த்தி இலையைத் தின்றுவிட எண்ணி கால்களை உயர்த்தி, காலை வைக்கப் பற்றுதல் தேடி, இறுதியில் முருங்கைவிளையில் வேலிக்காக நடப்பட்டிருந்த கல்லில் கால்வைத்தான் சடையன்; கண நேரத்தில் நின்ற நிலையிலேயே தனது இறுதிப்பயணத்தைத் தொடங்கத் தயாரானான். பாதைப் பிரச்சனையில் வேலியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தது தெரியாமல் சடையனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சடையாண்டி தூக்கி வீசப்பட்டான். விளையாட்டுக் கூச்சல் அடங்கி, குழந்தைகளின் ஓலம் அதிகமாகியது. அதற்குள் கூட்டமும் வந்து சேர்ந்துவிட்டது. வாக்குவாதங்களும் சமாதானப் பேச்சுகளுமாக அன்றைய இரவு வேகமாகக் கடந்துவிட்டது. மறுநாள் காலை பள்ளிக்கூடத்து மணியோசையும் வேதக்கோயில் மணிக்கூண்டு ஓசையும் சந்தித்துக்கொண்டன. அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடிக்கொண்டிருந்த பச்சைமால் சடையனைப் பார்த்ததும் ‘ஏல பள்ளிக்கொடத்துக் வரலயா?’ என்றான். ‘நாளைக்கு நிச்சயமாக வந்துருவேன்…’ உற்சாகத் தொனியில் சடையனின் பதில் வந்தது. சடையனின் கால்களுக்கு செம்பொன்விளை எண்ணெய் போட்டு நீவிக்கொண்டிருந்த தங்கையா தனது இடக்கையால் சடையனின் தலையைத் தடவிக்கொடுத்தபடியே சிரித்தார்.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.