logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2022 - பட்டியல்

Sudambigai devi

சிறுகதை வரிசை எண் # 146


நிழல் மனிதர்கள் ஜன்னலோராமாய் நின்று எட்டிப்பார்த்தான் அவன். இருளின் ஊடே அடர்ந்த அந்த மரங்கள் கருஉருவாய் பயம் காட்டின. நிலவொளியில் அவற்றின் நிழல் நீண்டு ஜன்னலை எட்டிப்பிடிக்கும் ராட்சசனாய் தோன்றியது. கிளைகளின் அசைவில் பீரிட்டு வழியும் நிலவொளியை ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. கொஞ்சம் ஜன்னலை திறந்து பக்கமாய் ஏதேனும் மரக்கிளைகள் ஜன்னலை பற்றி ஏறும்விதமாக இருக்கிறதாவென பார்த்தான். இல்லை. “ அப்பா ... தூங்கலியா... ? “ “ நீ தூங்கு குட்டி.... அப்பா கொஞ்சம் காத்துவாங்கறேன்... “ இதுபோன்ற ஒரு வீட்டில் வைத்து ஒரு மந்திரியை முடித்தது ஞாபகம் வந்தது. இதேபோல் காட்டின் நடுவே அமைந்த கெஸ்ட்ஹவுஸ் இதேபோல் மாடி. இதேபோல் ஜன்னல். அந்த மரக்கிளையை ஒட்டி மேலேறி... ஜன்னல் திறந்தே இருந்தது. மெதுவாய் குதித்து... இரவு விளக்கின் வெளிச்சத்தில்... அந்த போர்வையை இழுக்க... பதறி எழுந்த அவரின் முகத்தில் இருந்த பயம் அப்போது உணரமுடியவில்லை. அவனுக்கு வரும் உத்தரவுகளை ... அவற்றை உத்தரவு என்று சொல்லமுடியாது... வாய்ப்பு... எங்கிருந்து வரும் யார் சொல்வது ஏதும் தெரியாது. ரகசிய வெப்சைடில் இவனுக்கான நுழைவுடன் நுழைய... சங்கேதமாய் வாய்ப்பு தெரியும். அதை யார் செய்வது என்பது முடிவாக இவனைப்போல் இருக்கும் மற்றவரும் போட்டி போடுவர். யார் குறைந்த காலத்தில் முடிக்க ஒப்புக்கொள்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு... தவறும் பட்சத்தில் அடுத்த நபர். பணம் ஒரு பொருட்டல்ல. வேலை முடிந்ததும் அதுவாக ஏதேனும் ஒரு வழியில் வந்து சேர்ந்துவிடும். அவனுக்கு வரும் வாய்ப்புகளில் அவன் பெரும்பாலும் அவசரப்படுவதில்லை. மிகப்பெரிய தொகையாகவும்... முடிந்தவரை ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாகவும் தேர்ந்தெடுப்பான். அவனை யாரும் கண்டதில்லை. அதேபோல் அவனைப்போல் இருக்கும் மற்றவர்களையும் அவனுக்கு தெரியாது. எல்லோருமே ஏதேனும் ஒரு இயல்பான வேலை... ரகசியமாய் இந்த காரியங்கள். இவன் வேலைசெய்யும் அலுவலகத்தில் இதை சொன்னால்கூட சிரித்துக் கடந்துவிடுவர். அப்படி அப்பிராணி தோற்றம். “ அப்பா தூக்கம் வரல.... “ “ இதோ வரேண்டா...செல்லம்... “ “ஏதாச்சும் கதை சொல்லேன்... “ “வந்து... ஒரு காட்டில சிங்கம் ஒண்ணு இருந்துச்சாம்... அது ஒரு நாள்.....” என்று கதை சொல்லிக்கொண்டே... மனதில் அசைபோட்டான். கதை கேட்கும் பத்து வயது மகனுக்கு தேவையான ஐம்பது லட்சரூபாய் கிடைத்தாகிவிட்டது. அவனது இதய துளையை சரி செய்ய. ‘ எனக்கும் இதயம் இருக்கிறதா ‘ வென கேள்வி கேட்டுக்கொண்டான். இருப்பதால்தான் கொழுத்த.. முதலைகளை வேட்டையாடும் வேலைகளை மட்டும் தேர்வு செய்வதாக மனதில் சமாதானம் செய்துகொண்டான். “ தூங்கிட்டியாடா குட்டி... “ “ வரமாட்டேங்குதுபா... தல லேசா வலிக்குது... “ தூக்கம் வராத சமயங்களில் கொடுக்க சொன்ன மாத்திரையை எடுத்தான். அடிக்கடி கொடுக்க வேண்டாமென்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்த இரவு கடந்தாக வேண்டும். இவன் விழித்திருக்ககூடாது. ஏதேனும் அசம்பாவிதம் எனில் இவன் கனவுடன் முடிந்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். “ இதை சாப்ட்டு தூங்குடா.... “ “ கசக்கும் பா... “ “ இதோ ... சாக்லேட் இருக்கு... மாத்திரை... அப்புறம் சாக்லேட்... “ “ கதையை சொல்லிட்டே... இரு.. “ “ அந்த நரி என்ன பண்ணுச்சாம்... ரெண்டு முயலை கூட்டிட்டு....... “ “ ம் ” “ வேகமா ஓடுச்சாம்... “ “ ம் “ “ ரொம்ப வேகமா ஓடுச்சாம்... தூரமா... “ ........ “ .... “ தூங்கிவிட்டான். ஓடியாகிவிட்டது. இந்த ஓட்டத்தின் ஆரம்பத்தை நினைத்துப்பார்த்தான். பெருந்தொகை வாய்ப்பில் ஆரம்பித்தது. முழுசாய் முப்பது லட்சம். தட்டிப்பார்க்க இவனுக்கே கிடைத்தது. இவன் ஒரு வேலையை எடுத்தானெனில் மற்றவர் ஒதுங்கிவிடுவர். தொழில் சுத்தம். முழுதாக சொன்ன நேரத்தில் முடிப்பவன். டார்கெட் வி.ஐபியின் தினப்படி வேலைகளை குறிப்பெடுத்தான். போகும் வரும் இடங்கள்... தனியாக இருக்கும் இடங்கள்... பாதுகாப்பு குறைவாக உள்ள இடங்கள்... அழகாக திட்டமிட்டான். நெருங்க தேவையான ஆயுதங்களை சேகரித்தான். பெரும்பாலும் கத்தி. கையில் உள்ள துப்பாக்கி இரு இடங்களில் மட்டுமே இதுவரை பயன்பட்டது. சென்றவாரத்தின் வெள்ளிக்கிழமை அந்த நாள் வந்தது. கடற்கரை ஒட்டிய பங்களா... யாருமற்ற தனி வெளி. அந்த வி.ஐ.பி யின் மாத ஓய்வுநாள். இருளின் போர்வையில் நுழைந்து... உள்ளே சென்றாகிவிட்டது. கையில் உறை. முகத்தில் பாதி மூடிய முகமூடி. பெட்ரூம் உள் நுழைந்து மெதுவாய் .... திடீரென்று எரிந்த விளக்கொளியில் கண்கூச... சட்டென்று அனிச்சையாக கீழே படுத்தான். “ பயப்படாதீங்க புரோ... நான் உங்களை போலதான் “ குரல் கேட்டு நிமிர, அவன் இருந்தான். ஆறடி... ஒரு எக்ஸிகியூட்டிவ் போல உடை அணிந்திருந்தான். டை கட்டியிருந்தான். கையில் க்ளவுஸ். ஒரு டேபிளில் துடைத்து வைத்திருந்த கத்தி இருந்தது. பக்கத்தில் ரத்தம் துடைத்த துணி. படுக்கையை பார்க்க... மூடிய போர்வையில் நடுவே ஒரு துளை... அதை சுற்றி வண்ணச்சிதறலாய் ரத்தம். “ யார் நீ.... “ “ இந்த வேலையை யார் உங்களுக்கு கொடுத்தது... ? “ “ தெரியாது... விபரங்கள் மறைமுகமானது... “ “ நான் சொல்றேன்... அது எங்க அப்பா... “ “ வேண்டாம் சொல்லாதே... எனக்கு அது தெரிய வேணாம்.. “ “ இல்ல புரோ... அவர்... இந்த சிண்டிகேட்டின் ரகசிய தலைமை... இந்த வேலையை நான் செய்யறேன்னு சொல்ல , உங்க ரகசிய பெயரை சொல்லி... அதென்ன ஸ்பைடர்... ம் அதான் ஸ்பைடர் வாய்ப்பை எடுத்திருக்கார்... குறுக்கிடாதே சொன்னார். “ “ அப்புறம் ஏன் வந்த.. “ “ பணம் உங்களுக்கே தரச்சொல்லிடுறேன்... ஆனா இந்த வேலையை நான் நல்லவிதமா முடிச்சேன்னு நீங்க சொல்லணும்...” “ நோ... நான் போறேன்... உங்க அப்பாகிட்ட ஸ்பைடர் விலகிட்டான்... நீங்க முடிச்சேன்னு சொல்லிடுங்க... “ “ அலோ... திரும்புங்க... “ அவன் கையில் துப்பாக்கி இருந்தது. “ உட்காருங்க ஸ்பைடர்... எனக்கு நீங்க யாரு ... உங்க முகம் தெரியணும்...” “ இது துரோகம்... “ “ அட பார்டா... செய்யறது அடியாள்தனம்... இதில துரோகமாம்... நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா... உட்கார்டா கீழ... “ மனதில் மகனின் முகம் ஞாபகம் வர... அமைதியாய் உட்கார்ந்தான். பக்கத்தில் வந்த அவன்... முகமூடியை கழட்டுவதை தடுக்கமுடியவில்லை. பைத்தியக்காரன். தெறிக்கும் ஈகோவில் எதுவும் செய்வான். “ அட... இது என்ன சார்... பால்வடியும் முகம்... இத வச்சுக்கிட்டா இவ்ளோ ஆளுங்கள செமயா போட்டிங்க... செம... ஒரு ஃபோட்டோ ப்ளீஸ்... “ என்றபடி அவன் செல்ஃபோனில் எடுக்க... சூழலின் விபரீதம் புரிய... அவன் கேமராவை பார்க்கும் ஒரு கணம் போதுமானதாய் இருந்தது. சட்டென்று காலை நீட்டி அவன் கால்களுக்குள் நுழைத்து ஒரு சுழட்டு சுழட்டினான். தடுமாறிய அவன் பக்கத்தில் இருந்த டேபிளில் மோதி கீழே விழ... அதில் துடைத்து வைத்திருந்த கத்தி...எகிறி.. திரும்பி.. நேரே... அவன் தொண்டையில் . நல்ல கனமான கத்தி. அவன் பார்வை... இவனை ஏக்கமாய் பார்த்தது. அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். அவன் பாக்கட்டுகளில் துழவினான். சில அட்டைகளின் மூலம் முகவரி கிடைத்தது. அவனின் தந்தையை பார்த்து ஒரு நிமிடம் ஆச்சரியம் வந்தது. இவரா தலைவர்...? அடுத்த நொடி முகம் இயல்பானது. செல்ஃபோனில் எடுத்த படத்தை அழித்தான். திரும்பி நடந்தான். கீழே கிடந்தவனின் மூச்சுத்திணறலான சத்தம் கேட்டது. அவன் கால்கள் இன்னமும் துடிப்பது நிழலாய் தெரிந்தது. அன்றிரவே வேட்டையை முடிக்கவேண்டியிருந்தது. முகவரியை தேடிப்போக அவர் இவனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “ வா ஸ்பைடர்... “ “ என்னைத்தெரியுமா... “ “ என் மகன் கடைசி மூச்சு நிற்கும்முன் உன் படத்தை அனுப்பிட்டான்...” “ நான் அழித்தேனே... “ “ அது உள் மெமரியில் சேவ் ஆகும்... நீ செல்லையே தூக்கிருக்கணும்... அவன் பாடியை எடுக்கச் சொல்லிட்டேன்.. “ “ என் தவறு ஏதுமில்லை.... “ “ தெரியும் ... அவனின் சாதிக்கும் வெறி... ஆனால்... என் அடையாளம் தெரிந்தபின் நான் சும்மா இருக்க முடியாதில்லையா... “ பேசிக்கொண்டே அவர் எழ... அவர் எதிர்பாராத கணம் துப்பாக்கியை முழக்கினான். அவர் சரிந்தார்... அவர் முகத்தில் புன்னகை இருந்தது. அந்த புன்னகையின் அர்த்தம் குரூரமாய் உறைக்க... அவர் முன் இருந்த கம்யூட்டரின் வேகவேகமாக தட்டினான். நிஜம்... அவன் புகைப்படம் போட்டு... இவனது மகனின் உயிருக்கு முப்பது லட்சம் விலை வைக்கப்பட்டு... அது ஒருவாரம் கெடுவில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. பதட்டம் அதிகரிக்க... அவரை ஒருமுறை பார்க்க.... முடிந்திருந்தார். அவரது அறையை சோதனை செய்தான். கிடைத்த தோல்பையில் முழுதாக ஐம்பது லட்சம். ஓட்டம்... ஓட்டம்... ஒருவாரம் கெடு. அந்த தலைமை இறந்ததோ... கொன்றால் பணம் கிடைக்காதென்பதோ கொலையாளிக்கு தெரியாது. யாரவன் என்பதுகூட தெரியாது. எனினும் இன்று இரவை கடந்துவிட்டால்.. அனைத்தும் பனிபோல் விலகிவிடும். இந்த மறைமுகமான வீட்டை நேற்று அவசர வாடகைக்கு பேசியதுகூட யார்க்கும் தெரியாது. காட்டுக்குள் சுற்றுலாவென குழந்தைக்கும் சொல்லியாகிவிட்டது. இன்னும் ஒருமணி நேரமே... அதன்பின் கண்டிப்பாக முயற்சி இருக்காது. ஆனால் கடக்கும் ஒவ்வொரு நொடியும் அவனை சித்திரவதைக்குள்ளாக்கியது. நிழல் மனிதனாய் வாழ்வதைவிட... மகனுடன் சேர்ந்து இறந்துவிடலாமாவெனவும் தோன்றியது. ஏதோ ஒரு சூழலில் இந்த வலைப்பின்னலில் மாட்டியது. கொஞ்சம் சித்திரவதையை பொறுத்துக்கொள்ள... மகனின் வாழ்வை மீட்டுவிடலாமென்ற ஒரே நம்பிக்கை அவனை அமைதியாய் இருக்க வைத்தது. சிலந்தியின் வலை முழுதாக விலகும் நேரம்... அவசரப்படக்கூடாது... என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது... அவனது ஃபோன் அடித்தது. அமைதி சூழலில் எழுந்த அந்த ஒலியில் சற்று அரண்டுதான் போனான். “ தம்பி.. அவரு வந்துட்டாரா.....? “ பங்களாவின் ஓனர். “ யார்ணே.... ?” “உன் ஃபோட்டோ வச்சிகிட்டு கேட்டுச்சுபா அந்த தம்பி... வழி சொல்லி அனுப்பினேன்..” “ ஏண்ணே.... அதல்லாம் கண்டவங்ககிட்ட.... “ என பதறினான். “ எனக்கென்னபா தெரியும். உங்க ஃப்ரெண்டுன்னாரு... தப்பா... ?” “ இல்லல்ல ... பாத்துக்கறேன்.... எவ்ளோ நேரம் இருக்கும்....?” “ அது இருக்கும்பா... ஒரு ஒருமணி நேரம்.... “ ' முடிந்தது. ஒருமணி நேரம் எனில்... பையனுக்கு மாத்திரை கொடுத்து பின் தூங்கிய நேரம். எங்கே போயிருந்தேன். இங்கே யாரும் வரவில்லை. நான் தூங்க காத்திருக்கிறானோ. சாக்லேட் சாப்பிட எழுந்த மகனுடன் சற்று வெளியில் இருந்தது ஞாபகம் வந்தது. பக்கத்துரூம் ஒரு நிமிடம்தான் சென்றிருப்போம். அந்த நேரம்தான்...‘ “ தம்பி ... தூங்கு நான் கொஞ்சம் காத்தாட வெளியில இருக்கேன்... “ என்று குரல் கொடுத்தான். வெளிசெல்வதுபோல் கதவை உள்ளிருந்தபடியே சத்தம் வர ஓங்கிச்சாத்தினான். சட்டென்று அந்த மேஜையின் கீழ் மண்டியிட்டு அமர்ந்தான். இருள். ஜன்னல் வழியே கசியும் நிலவொளி. பத்து நிமிடம் கடந்திருக்கும். அந்த பழங்கால மர பீரோவின் கதவு அசைந்தது. மூச்சை பிடித்துக்கொண்டு சைலன்ஸர் பொருத்திய துப்பாக்கியை தயாராய் வைத்தான். பீரோ கதவு மெதுவாக திறக்க அந்த ஒல்லியான உருவம் வெளிவந்தது. முகத்தில் கர்சீப். கையில் நீண்ட கத்தி. மெதுவாக கட்டிலை நெருங்கியது. “ டுப் “ மடிந்து சரிந்தது அந்த உருவம். அதன் தோல்பையை ஆராய... இவன் , இவனது மகனின் புகைப்படங்கள், இவன் வேலைக்கு செல்லும் இடம். இன்னும் சில... கூடவே அந்த ஒல்லி நபரின் தாயாரின் மருந்து சீட்டுகளும் , அடுத்த வாரம் செலுத்த வேண்டிய ஆஸ்பிடல் பில்லும், கூடவே ஒரு வாரத்துக்கான மாத்திரைகளும் இருந்தன.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.