'நெடுநேரமாய், ஒரு ராட்சஷப் பறவை
எதிர்க் கூரையில் அமர்ந்து கரைகிறது...
தப்பிக்கத் தவறிய இளஞ்சிறகு
அதன் கூர்நகங்களில்.
காலம்,
தன் கடைசி பிம்பத்தை உடைக்கவும்
கல்லெடுக்கக் குனிகிறது.'
- ........... மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப் பெறும் நம் படைப்பு குழுமக் கவிஞர் காளிதாஸ் அவர்களை படைப்பு குழுமம் வாழ்த்தி மகிழ்கிறது...
கவிஞர் காளிதாஸ் அவர்கள் நீண்ட காலமாக நமது படைப்பு குழுமத்தில் அவரது கவிதைகளை பதிந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். அவரது சொற்பிரயோகங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
மதுரை மாவட்டம் பரவை அரசு மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரியும் கவிஞர், 1 சந்திப்பின் கடைசி நொடி 2.அட்சதை,3.பிம்பங்களின் மீது ஒருகல் மற்றும் 4. திருடனின் வீடு என்று நான்கு தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
இனி கவிஞரின் படைப்புகளைக் காண்போம் :
மனக் கசப்புகளின் மூலப்பொருளாக ஒரு வார்த்தை நிச்சயம் நிமிர்ந்திருக்கும்.. அதை துப்பிவிடாதவரை மனக்கிலேசங்கள் மாறுவதுக் கிடையாது. காதலியிடம் காதலன் வைக்கும் வேண்டுகோள் இதுவாகத்தான் இருக்கமுடியும்... அன்பு காத்திருக்கிறது... துப்பி விடு கண்ணே அந்த ஒவ்வாத ஒற்றை வார்த்தைதனை....
இம்மியளவு அன்பு தான் மிச்சமிருக்கிறது
துடைத்தெறிய தயாராக்கப்படுகிறது புன்னகை
வற்ற வற்ற அள்ளப்பட்டு விட்டது கண்ணீர்
தேடப்படுகிறது வலியறியா அணு
தவிர்க்கும் கோணத்திற்குத் தவிக்கிறது கண்
சுண்டச் சுண்ட உறிஞ்சப்பட்டு விட்டது இரக்கம்
மன விளக்கமாறால் அள்ளி மறுபிறவியில் கொட்ட வேண்டும் தாமதிக்காமல் துப்பி விடு
ஒவ்வாத அந்த ஒற்றை வார்த்தையையும்.
----
ஒரு படிமம் பல பொருட்களுக்குள் பதுங்கிக்கொள்ளும். ஆசையும் அப்படித்தான் இங்கொரு படிமத்தில் அமர்ந்து அமர்க்களம் செய்கிறது... அது கழுவி போட்ட மிச்சத்திற்கு கால நாய் வேறு காத்திருக்கிறதாம்...
கதவு இல்லை என்பதால்
தாழ்ப்பாள், பூட்டு, சாவிக்கு
வேலையே இல்லை.
காற்றைப் போல உள்ளே நுழை
கலைத்துப் போடு
களவாடு
ஒளிந்து கொண்டு பூச்சாண்டி காட்டு
சமைத்திடு
பரிமாறு
எல்லாவற்றையும் கழுவிக் காய வை
மிதமிஞ்சியதை அதற்குரிய பாத்திரத்தில் இடு
நாக்கைத் தொங்கப் போட்டுக் காலனாய்க் காத்திருக்கிறது
கால நாய்.
------
மீன்காரி
படிமத்திற்குள் படிமமாக அவளே நுழைகிறாள்...அவளின் கூடையில் உள்ள மீன்கள் சொற்களாக படிம இட மாற்றம் செய்து கொள்கின்றன... வாழ்க்கையின் சித்திரத்தை படிமங்களால் செதுக்குகிறான் கவிஞன்..
ஒரு மாறுதலுக்கு
சொற்களை ஏந்தி வந்த மீன்காரி
பேரம் படிந்ததும், வழக்கம் போல் செதில்களை உரசுகிறாள்.
பெருஞ்சொல்லின் குடலைக் கொத்திப் போக கூரையில் கரைகின்றன காலக் காகங்கள்.
கூடுதலாகப் போடப்பட்ட கொழகொழத்த சொல்லை
'குழம்பு'க்கென ஒதுக்குகிறாள்.
கண்டதுண்டமாக்கப்பட்ட நல்ல சொற்கள் வறுபடக் கூடும்.
மடித்து வீசப்படும் கழிவுச் சொற்களுக்காகச் சண்டையிடுகின்றன
பழக்கப்பட்ட நாய்கள்.
அவள் கைகளிலிருந்து நழுவும் கவுச்சி வாசத்தை சாராயநெடியோடு முகர்கிறது தெருமுக்கு.
சில்லரை கழித்து சரியான விலையை மார்புக் கச்சையில் செருகியபடி
சுமையை இடம் மாற்ற ஒரு கைபிடிக்கச் சொல்கிறாள்
ஒரு மாறுதலுக்கு
சொற்களை ஏந்தி வந்த மீன்காரி.
----------------
பேருந்து நிறுத்தங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நிகழ்வுகளையும்.. பல் வேறு கதைகளையும் தினமும் வாசித்துக் கொண்டிருக்கிறது... நாமும் கவிஞரின் வாயிலாக அவற்றின் காட்சிகளை இந்தக் கவிதையில் காண்போம்...
வேரோடு பிடுங்கப்பட்ட காற்றோடும் மழையோடும் சேர்த்து சில நிறுத்தங்களின் பெயர்களும் காணாமல் போய்விட்டன.
சில்லரை சப்தங்களோடு நிறுத்தங்களின் பெயர் சொல்லி இறங்கச் சொன்ன நடத்துனர் பணி ஓய்வுக்குப் பின் தேங்கி நிற்கிறார்.
பழைய அடையாளத்தோடு வருவோர் அதே இடத்தில் புதிய அடையாளத்தோடு கையேந்தும் நிறுத்தத்தை பரதேசியைப் போல நிராகரிக்கிறார்.
துருப்பிடித்த நிறுத்தப் பலகையின் மீது யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி காலக் காக்கையின் எச்சம் கோடாக வழிந்து காய்ந்திருக்கிறது.
காம இச்சைக்குக் களவாடப்பட்டு இறக்கிவிடப்பட்ட இளம்பெண் மீது கழிவிரக்கம் கொண்டவாறே மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்க்கிறது நிறுத்தம்.
கூடை நிறைய பொறுக்கிய நாவல் பழங்களைத் தூசு துடைத்து விற்ற கிழவியின் உழக்கு நெளிந்து கேட்பாரற்றுக் கிடக்கிறது விரிவாக்கப்பட்ட சாலையின் பாதி இடிந்த நிறுத்தச் சுவருக்கு அருகே.
யாரையோ காவு கொள்ள வந்து வழி தெரியாமல்
மயங்கிக் கிடக்கும் எமனின் முகத்தில்
யாரோவொரு புண்ணியவான் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கிறார். ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறது பெயரழிந்தும் கம்பீரம் குறையாத பழைய நிறுத்தம்.
----
ஒவ்வொருவருக்குள் ஒரு பிம்பம் ஒளிந்திருக்கும். அது ரகசியமானதாகவும் இருக்கும். காதலின் தொடராக... காமத்தின் நிழலாக... இப்படி எத்தனையோ... இங்கும் ஒரு பிம்பம் ஒரு சவத்தின் அருகில் நின்று தன்னைக் காட்டிக் கொள்ளாமல் நிகழ்த்தும் செயல்... கவிதையாக! வாழ்வியலில் யாரும் பார்க்காத ஒரு கருப்பு பக்கமாக...
அதிர்ச்சியுடன் அரக்கப்பரக்க வந்து என் பிணத்திற்கு மாலையிடுகிறாய்
நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்க்கிறாய்
யாரும் கவனிக்காத போது
எட்ட நின்றவாறே, என் உதடுகளில் முத்தமொன்றைச் சேர்க்கிறாய்
'எப்படி நிகழ்ந்தது?' என்ற கேள்வியை
வேறு பக்கம் திருப்புகிறாய்
ஏதோ நினைவு வந்து, கண்களுக்குள்
செல்ஃபி எடுத்துக் கொள்கிறாய்
நெற்றியில் இருக்கும் நாணயத்தை எடுத்து, அடுத்த விளையாட்டிற்குப் 'பூவா தலையா?' போட விழையும் அபத்த சிந்தனையைத் தலையிலடிக்கிறாய்
கட்டுகளை அவிழ்த்து விட்டு
ஒற்றை உதிர்த்துவிட மாட்டேனாவென
உற்றுநோக்குகிறாய்
அமைதியாய் இறைஞ்சும்
உன் கைபேசிக்குக் காது கொடுத்து
துளிக்கண்ணீரால் என் உருவம் துடைத்தபடி காலைத் தூக்கிப் போடும் உன் நடுச்சாமக் கனவை ரசித்துக் காண்கிறது பாதி கரைந்த பசிய நிலா.
______
வீடு கூடாக மாறுகிறது... வாழ்க்கை பறத்தலின் விதிகளோடு நகர்கின்றன... அலைச்சலின் மிச்சம் வாழ்வில் தொங்கிக்கிடக்க நாளினை நகர்த்தும் வாழ்க்கை கவிதையாக....
என் கூட்டில் தான் இருக்கிறேன்
என் கூடு போலவே இல்லை
என் அலகு கொத்தி வந்த குச்சிகளில்
ஒன்றுகூட இல்லை
நனைதலுக்காக ஒடுங்குதல் இல்லை
உலர்தலுக்காக சிறகடித்தல் இல்லை
குளுமை இல்லை
வெக்கை இல்லை
இரைக்காகக் காத்திருத்தல் இல்லை
எதையோ பற்றிக் கொண்டு
எங்கோ தொங்குகிறது
வெளியேறுதலும் திரும்புதலும் ஒரு நாளினை நகர்த்தி வைக்கிறதன்றி வேறொன்றுமில்லை
இருப்பைச் சுருக்கி காற்றில் அலைகிற கூட்டின் மீது குவிந்திருக்கிறது யாருடையதோ அம்புக்குறி.
________
அரசியல் பேசாத கவிதைகள் அழகு சாதன பொருட்கள் மட்டுமே.. வாழ்க்கையின் ஓரம்சம் அரசியல்.. நாம் பல் துலக்கும் டூத் பேஸ்ட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது அரசியல் வாழ்க்கை... நாம்தான் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்... இதோ கவிஞரின் இன்றைய அரசியல் மேசும் கவிதை...
நீர் நிறைந்த
பொருளாதாரப் பானையைத் தோளில் தூக்கி
அரிவாள் நுனியால் பொத்தலிட்டு
முச்சந்தியில் போட்டுடைத்து
அநேக ஆரவாரங்களுடன்
சுடுகாடு நோக்கிப் போகிறாள்
பழம்பெரும் தாய்.
புத்தோவியம் வரையவென
காந்தியிடம் திருடப்பட்ட
குட்டி பென்சிலால் தான்
அகிம்சைக்கான
எல்லைக்கோடுகள் வரையறுக்கப்படுகின்றன.
சட்டத்தின் முன் சாதாரணர்களை மட்டும் கொன்று
தடையில்லாச் சான்று பெற்று
வெளிநாடு தப்பியோடத்
தயாராய் இருக்கிறாள்
நீதி தேவதை.
'சில்லறை'களாகக் கொட்டுகிறது
தனியுடைமைத் தானியங்கி.
எங்கள் பிச்சைப் பாத்திரம் நிரம்பத்
தடையாய் இருக்கிறீர்கள்.
மேலும், வீரம் வெட்டப்பட்டு
முழுச்சம்'மதத்'துடன்
கோழையாக்கப்பட்ட எங்களுக்கு
தகர்த்தெறிவதைத் தவிர
வேறு மழுங்கடிப்பில்லை...
மன்னியுங்கள் லெனின்.
_______
இதுவும் கூட ஓர் அரசியல் கவிதைதான்.. தன் மானமில்லாத அரசியல்வாதிகள் பணம் மட்டுமே குறிக்கோளுடன் வாழ்பவர்கள்.. அவர்கள் அவமரியாதைகளை பொருட்செய்ய மாட்டார்கள்... எதையும் துடைத்தெறிந்துவிடுவார்கள்... ஆனால் பேனாவின் ஈரம் அப்படியில்லை...
நீங்கள் எல்லாவற்றையும் துடைத்துவிடுவீர்கள்
அல்லது துடைத்துவிட்டதாய்
மாயம் செய்வீர்கள்.
புட்டத்தில் ஒட்டிய தூசி
குதிகாலில் படிந்த சேறு
தலையில் விழுந்த எச்சம்
தரையில் சொட்டிய தேநீர்
வழிந்தோடும் வியர்வை
உணர்வற்றுப் பிரியும் சிறுநீர்
கண்ணெதிரே கொட்டிய ரத்தம்
கழுவிக் காய வைத்த கண்ணீர் இன்னும் உலராத முத்தம்
உச்சியில் தோய்த்த எண்ணெய்...
எல்லாவற்றையும்
அடையாளமே தெரியாதபடி
துடைத்துவிடுவீர்கள்
அல்லது துடைத்துவிட்டதாய்
மாய்மாலம் செய்வீர்கள்.
பேனா ஈரம்
அவ்வளவு சீக்கிரம் உலர்ந்துவிடாது.
_______
கவிஞரின் கவிதைகள் இன்னமும் சில...
நமக்கு இடையில் ஓடும் நதியில் ஒரு கை அள்ளி யாரோ முகம் கழுவுகிறார்கள்.
கரை மரம் உதிர்க்கும் இலை நரம்பை இறுகப் பற்றியவாறு மறுகரை நகர்கிறது காலச் சுள்ளான். குனிந்து தாகம் தணிக்கும் குதிரையின் கடிவாளத்தில் இழுத்துப் பிடித்து உலர வைக்கப்பட்டிருக்கிறது நம்
அதீத இச்சையும் அதீத இயலாமையும்.
மற்றொரு பருவத்திற்கு கண்கட்டி அழைத்துச் செல்லும் பெருந்தலைவனிடம் ஒப்படைத்து
கொஞ்ச காலம் கவனம் சிதறி இருப்போம், எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும்.
மூடிக் கிடக்கும் நம் உளுத்த கதவுகளைப் பெயர்த்து டிஜிட்டல்மயமாக்க வரும் ஒப்பந்தகாரன் கண்ணை உறுத்தும்முன் நம் பிணம் எரிக்க இப்போதே பதுக்கி வைப்போம் இதம் தரும் முற்றத்து வேம்பை.
_______
முத்தமெல்லாம் பிறகு தான்...
கைகளுக்குள் முகம் அள்ளி
நெஞ்சாரக் கழுவுவாய்.
ஆறடி ஆளுக்குள்
ஆயிரம் அடி இறங்கும்
'ஆள்'துளைக் காதல்.
______
எனக்குப் பசிக்கிறது தான்
பேய்ப்பசி தான்
ஆளையே தின்றுவிடும் அகோரப்பசிதான்
பசியில் கண்மண் தெரியவில்லை
நேரம், ருசி, வெந்தது, வேகாதது
பழையதா, புதியதா
சைவமா, அசைவமா
தொண்டையில் சிக்குமா
செரிக்குமா, உபாதை தருமா
பசி எல்லாவற்றையும் மறைக்கிறது
முடி கண்ணுக்குத் தெரியவில்லை
நஞ்சு நாக்கு அறியவில்லை. என்றாலும்...
கெட்டுப் போனதையும் மலத்தையும் 'திணித்தால்' தின்று கொழுத்துவிடாது 'வடக்கிருந்து' உயிர்விடும் என் பசி.
________
ஒரு புள்ளி வைக்கிறேன்
அதைத் தொட்டுப் பார்த்து ஆசுவாசம் கொள்கிறாய். புள்ளியிலிருந்து எழும் இசைக்கு ஸ்வரம் கூட்டுகிறாய்.
புள்ளியிலிருந்து ஒரு நீள்கோடு
குவியும் ஒளிக்கனவு
படரும் பச்சையம்
பறக்கும் சாம்பலை
ஒரே மூச்சில் உள்ளிழுக்கிறாய்.
ஒரு பெருமழைத்துளி
மிகச் சரியாக அப்புள்ளியின் மீதே விழுகிறது.
_______
என் இடத்தை நானே நிரப்பிக் கொண்டிருப்பேன்.
மௌனம், வலி, வேதனை, கண்ணீரால் தானாகவே பூர்த்தியாகியிருக்கும் என் வெற்றிடம்.
போலித்தனங்களால் தோண்டிய புதைகுழியில் என்னைத் தலைகீழாகப் புதைக்க முயல்கிறாய்.
பச்சாதாபத்தோடு நீ தரும் பச்சைத்தண்ணீர் கூட சுத்திகரிக்கப்பட்ட என் சிறுநீரே.
வியர்வை வழிய என்னை மிதித்து
நீண்ட வரிசையில் நிற்கும் என்னிடமே
மலிவாக நீட்டுகிறாய் பஞ்சாமிர்தமாய்.
பல்லாண்டு பிரார்த்தனைகளின் முடிவில், சப்புக் கொட்டி என்னையே
நக்கத் தலைப்படுகிறேன் நானும்.
விறைத்துக் கிடக்கும் என்னை எரித்து
விபூதியாகப் பூசிக் கொள்.
இனி நீ, மொட்டை அடிக்கவோ அதற்கான டெண்டர் விடவோ அவசியமிருக்காது.
__________
இந்த முறை திருவிழாக் கூட்டத்தில் நிச்சயம் தொலைந்து போவேன்.
இத்தனை நாள் தவிப்பு அடங்க
தூக்கித் தொலைதூரம்
கொண்டு சென்று
மொத்தமாய் முத்தக் கொலை செய்.
நீ வருவாயெனக் காத்திருந்து
திருவிழாக்களைத் தொலைக்க
இனியும் என்னால் இயலாது.
_______
எங்கு பார்த்தாலும் சொல் தான்...
சொல் மீது இடறி
சொல் மீதே விழ வேண்டியிருக்கிறது.
இக்கட்டான தருணத்தில்
சொல்லி வைத்தாற் போல
எல்லாச் சொற்களும்
தனித்து நிற்கின்றன.
சொல் மீதேறி வந்து
சொல்லம்பு எய்தி
சொற்குருதி பருகிச் செல்கிறது
ஒரு வன்சொல்.
பொத்திப் பொத்திப் பாதுகாத்தாலும்
கையளவு சொற்களாவது
களவு போய்விடுகின்றன
அந்தந்தப் பருவத்தில்.
மின்னிக் கொண்டிருக்கும் போதே
உதிர்ந்து சாம்பலாகி
உருத் தெரியாமல் ஆகிறது
நட்சத்திரச் சொல்லொன்று.
நம் காலத்திலேயே புதைத்து
நம் கண்முன்னேயே அகழ்ந்தெடுத்து
நம் பாரம்பரியம் என
நம்மிடமே கையளிக்கப்படுகிறது
'தெய்வீக' அந்நியச் சொல்.
யாரோ எதையோ எதற்கோ நோண்டி
தடவி வைத்த சொல்லை ருசித்து
காலந்தோறும் நோய் பரப்பும்
ஈக்களின் மீது
கவனமாய்த் தெளிக்க வேண்டும்
வீரியம் மிகு பூச்சிச்'சொல்'லியை.
_______
ஒரு கதவு அடைத்திருக்கிறது...
காமக் களியாட்டத்தின் தொடக்கம்
தற்கொலை முயற்சி
ரகசிய பேரம்
விட்டு விலகுதலுக்கான
கடைசி முத்தம்
வெளியே தூக்கி எறிவதற்கான
ஒரு சொல்
அவசரமாக அடங்கும் துளிக்கண்ணீர்
துண்டிக்கப்பட்ட பகல் கனவு
ஏதோவொன்று
திறந்திருக்கும் மற்றொரு கதவின் மீது
பழிபோடத் தயாராக இருக்கிறது
அல்லது ஒரேவொரு கதவாக உருமாறுவதற்கான சாத்தியங்கள் மீது
'நிலை' கொள்கிறது.
_________
உயர்த்தப்பட்ட
இடது உள்ளங்கையில்
வலது விரல்களால்
நடுவர் காட்டுகிறார்
ஸ்ட்ரேட்டஜிக் டைம் அவுட்.
கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்
அவசரம் அவசரமாகச்
சிறுநீர் கழித்துவிட்டு,
தன் செயல்களை
மீண்டும் தொடரப் பழகிக் கொண்டார்
புராதானக் கடவுள்.
-----------
தூக்குக் கயிறு
அரளி மசி
திணறும் புகை மூட்டம்
கொளுத்திக் கொள்ளத் தீ
மலையுச்சி
கட்டுக்கடங்கா வேகம் என
எவ்வளவோ இருந்தும்
பொசுக்கெனப் போகும்படி
ஒரேவொரு சொல்.
-----------
உன்னிடம் தான்
எல்லாவற்றையும் கற்றேன்.
எப்படிப் பார்ப்பது
எப்படிச் சிரிப்பது
எப்படித் தயங்குவது
எப்படி மயங்குவது
எப்படிச் சொல்வது
எப்படிச் சேர்வது
எப்படி விலகுவது
எப்படி அழுவது...
எல்லாவற்றையும்
கற்றுக் கொடுத்த நீ,
எல்லாவற்றையும் மறைத்து
உள்ளுக்குள்
எப்படிப் புழுங்குவது என்பதை மட்டும்
கற்றுத் தர மறுத்து
எதுவுமே தெரியாதது போல் கடந்து சென்று
கேலிச் சிரிப்பை உதிர்க்கிறாய்.
-----------
இன்னும் விலக்கி வைக்கப்படுகிறது கறுப்பு
சாதுர்யமாகவும் சடங்காகவும்.
துக்கம் தடவி வந்த கறுப்புக் கடிதங்கள்
கிழிபடாமல் பத்திரமாக இருக்கிறதா எவரிடமும்?
மேகத்தைப் போலவும்
இருளைப் போலவும், கறுப்பு
தன்னை வெளிப்படுத்தத் தவறாத போதும்
ரகசியங்களைப் போலவும்
மர்மங்களைப் போலவும்
மிகவும் கண்ணியமாகப் பாதுகாக்கப்படுகிறது.
காணாமல் போய்விடாது
தொலைக்கவும் முடியாது
குறிப்பாக எழுதப்படாத எழுத்துக்களைப் போல
வாழ்வு முழுதும்
வலம்வரக் கூடியது கறுப்பு.
விலக்கினாலும் விலகாமலும்
விளக்கினாலும் விளங்காதது போலவும்
கள்ளத்தனமாக யாருடைய பெட்டிக்குள்ளோ
பணத்தைப் போல
பதுங்கிக் கிடக்கிறது கறுப்பு.
விவரமறிந்த யுவனோ யுவதியோ
ஒவ்வொரு வட்டத்தையும்
அதீத நம்பிக்கையுடன் கறுப்பாக்குகிறார்கள்.
காரணம் இல்லாமலா
கறுப்பைப் போல உன்னத நிறம்
வேறெதுவும் இல்லையென
சங்கோஜத்துடன் ஒப்புக்கொள்கிறார்
நம்மைப் பிணமாகப் பார்க்க ரசிக்கும்
தோழர் வெட்டியான்?
-----------
யாரோ தொலைத்த சாவியைக்
கையிலெடுத்திருக்கிறேன்.
அது இன்னும் துருப்பிடிக்கவில்லை.
தன் பழைய கதவுத் துவாரத்தை
தொங்கிய ஆணியை
ஒளித்து வைக்கப்பட்ட மறைவிடத்தை
மெழுகில் நகலெடுக்கப்பட்டதை
தன்னால் மட்டுமே திறக்க முடியுமென்கிற
அபார நம்பிக்கையை
தன்னை வார்த்தவனின் கைத்திறமையை
பூட்டின் இசைவை
எப்படியும் கண்டடையப்படுவோமென
மறதியாக வைக்கப்பட்ட இடத்தை
மறக்க முடியாமல் மருகும்
அதன் முனகலையும் கையிலெடுத்திருப்பதாக
தன்னை உணர்கிறது சாவி.
நெகிழும் ஒரு மகிழ்வை
எளிதாகத் திறந்ததாக,
அடக்க முடியாமல் ஒரு துக்கத்தை
அவ்வளவு வேகமாகப் பூட்டியதாக
அசைபோடும் சாவியை வைத்துக் கொண்டு
நடுத்தெருவில் நிற்கிறேன்...
இழுத்துப் பூட்டப்பட்ட கதவைப் போல.