logo

கவிச்சுடர் விருது


இந்த மாதத்தின் நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை  கவிஞர் கோ.பாரதி மோகன் அவர்கள் பெறுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். கவிஞர் கும்பகோணத்தை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவர்.

இவரது தந்தை காந்திஜீயின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக இவருக்கு மோகன்தாஸ் என்று பெயரிட்டார். பின் நாட்களில் கவிதையின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக முண்டாசுக் கவிஞன் பாரதியின் பெயரை இணைத்துக் கொண்டு தன் பெயரை பாரதி மோகன் என்று மாற்றிக் கொண்டார். தாயாரின் மரணத்திற்கு பின் பள்ளி வாழ்க்கையை தொடர முடியாததால். 5 ம் வகுப்பு வரை மட்டும்தான் படித்துள்ள கவிஞர்.. தன் தந்தையுடன் நூலகம் செல்லும் பழக்கம் உள்ளவராக இருந்ததால், வாசிப்பு அனுபவத்தை வளர்த்துக் கொண்டது மட்டும் இல்லாமல், பிழையின்றி எழுதிப் பழக தன் முயற்சியில் அரிச்சுவடி துணையுடன் தானாகவே பழகி இன்று ஒரு சிறந்த கஸல் கவிஞராகவும் மிளிர்கிறார்.

தான் முழுமையான கவிஞராக மாறியதைப் பற்றி கவிஞரே விளக்க கேட்போம்….

சிறுவயதில் கும்பேஸ்வரன் கோயில் வளாகத்திலுள்ள புத்தகக் கடையில் பாடப் புத்தகம் வாங்கியிருக்கிறேன். முதன் முதலாக ஒரு இலக்கிய நூல் வாங்க சென்றேன். இலக்கிய நூல்கள் விற்கும் கடையில் எனக்குஅது புது அனுபவமாக இருந்தது.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஒருவித தயக்கத்தோடு் புத்தகங்களை எடுத்துப் பார்த்தவாறு பதட்டமானேன். கடை ஊழியர் ஒருவிதமாக என்னைப் பார்க்கத் தொடங்கினார். ஏதேனும் புத்தகம் வாங்காமல் சென்றால் தவறக நினைப்பார்கள் என்று ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். அது, 'இன்னொரு தேசிய கீதம்' என்கிற வைரமுத்துவின் கவிதைநூல். அதன் அப்போதைய விலை 20 ரூபாய்.

முதன்முதலில் ஒரு கவிதைத் தொகுப்பை அப்போதுதான் பார்த்தேன். வீட்டுக்கு வந்துவாசித்துப் பார்க்கையில் எனக்கு எதுவும் விளங்கவில்லை. நாங்கள் குடியிருந்த காலனியில் மதியழகன் என்றொரு வைரமுத்துவின் ரசிகர் இருந்தார். அவர்தான் கவிதைகளை வாசித்துக்காட்டி என்னை ஒருவாறு கவிதைக்கு ஆற்றுப்படுத்தினார். அதன் பிறகே கவிதைமொழி எனக்குப் புரியத் தொடங்கியது. நானும் மெல்ல மெல்ல முன்னேறினேன்.

சிலவருடங்கள் கழித்து சிகரங்களை நோக்கி நூலும் எனக்குக் கிடைத்தது. அந்நூலைப் படித்ததிலிருந்துதான் இலக்கிய ருசி என்னுள் ஒட்டிக்கொண்டது. கவிதைகள் புத்தியில் உறைக்கத்தொடங்கின.

 

பிறகு கவிஞர்கள் மேத்தா, கவிக்கோ அப்துல் ரகுமான், மீரா, நா. காமராசன், வலம்புரிஜான் என வாசிப்பு விரிவடைந்தது. வைரமுத்துவின் வைகறை மேகங்கள் மரபுக்கவிதைத் தொகுப்பபை வாசித்துவிட்டு மனம் கிறங்கிக்கிடந்தேன்.

ஒருமுறை ஏனோதானோவென்று நான் எழுதிவைத்திருந்த  வரிகளை நண்பர் சீனிவாசன் என்பவரிடம் காட்டினேன். கேலிபேசுபவர்களுக்கு மத்தியில் அவர்தான் எனக்குள்ளிருந்த  கவிதைக்காரனை முதன் முதலில் கண்டுகொண்டவர்.

 நான் எழுதியவற்றை அவரின் கையெழுத்து பதிவுசெய்து பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். 'தினபூமி' நாளேட்டின்  துணையிதழில் ஒரு முழுப்பக்கத்திற்கு அக்கவிதைகள் வந்தன! பிறகு பாக்யா, குங்குமம் உள்ளிட்ட வார இதழ்கள் மற்றும் உள்ளூர் பத்திரிகைகளிலும் எனது எழுத்து அச்சேறத் தொடங்கின.

எனது தொடக்க எழுத்துகள் எனது இயற்பெயரிலேயே வந்தன. கவிஞர் வைரமுத்து அவர்களின் 'கவிராஜன் கதை' நூலை வாசித்த பிறகே மோகன்தாஸான நான், பாரதிமோகனானேன். பிறகான தொடர் வாசிப்பிலும் அவ்வப்போதான எழுத்தின் வழியேயும் மெல்ல மெல்ல நான் கவிதை எழுதுபவனாக நண்பர்கள் வட்டத்தில் அறியப்பட்டேன்.

 

2001ல் நான் எழுதிவைத்திருந்த சில புதுக்கவிதைகளையும் குறும்பாக்களையும் திரட்டிச் சேர்த்து 'மௌனத்தின் சிறகடிப்பு' எனும் எனது முதல் கவிதை நூலை நண்பர் ஆர்.எஸ். நாதன் அவர்களின் ரோஜா பதிப்பகம் வாயிலாக வெளியிட்டேன். நூல் வெகுவான வரவேற்பையும் கவிஞன் என்கிற அந்தஸ்தையும் இலக்கியத் தோழமைகளையும் பெற்றுத்தந்தது. அதன் பிறகு சென்னைக்குச் சென்று நான்கு ஆண்டுகாலம் பத்திரிகைகள், நாளிதழ்கள் சிலவற்றில் பிழைதிருத்தும் பணி செய்தேன். அங்கே பெயரளவுக்குத்தான் நான் பிழைதிருத்துனனே தவிர 'ரீ ரைட்டிங்'கிலும் ஈடுபட்டேன். பக்க வடிவமைப்பிலும் எனது விருப்பம் படர்ந்தது.

தந்தையின் உடல்நலமின்மை, குடும்பச்சூழல் கருதி என்னால் சென்னையில் பணியைத் தொடரமுடியாமல் போயிற்று. திரும்பவும் கும்பகோணத்திற்குத் திரும்பி முன்னம் செய்துவந்தபாத்திர உற்பத்தித் தொழிலிலில் ஈடுபட்டேன். இப்போதும் கூட அதையே செய்துவருகிறேன்.

2017ல், 'காதலின் மீது மோதிக்கொண்டேன்' எனும் காதற்குறுக்கவிதைத் தொகுப்பொன்றைக் கொண்டு வந்துள்ளேன். அதிலுள்ள பெரும்பான்மையான கவிதைகள் கஸல் வடிவத்தைக் கொண்டவை அல்லது தழுவியவை. அந்நூலுக்கு கவிக்கோ அவர்கள் வாழ்த்துரை தந்துள்ளார். அந்நூலும் வெகுவாக வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

வாசிப்பின் எழுத்தின் தொடர் பயணத்தினூடே 2010 ன் மத்தி்மத்தில் முகநூலுக்கு வந்து சேர்ந்தேன்.

திருவாரூர்க்காரரான கவிஞரும் தோழருமான ஆழி. சத்தியன்தான் எனக்கு முகநூல் கணக்குத் தொடங்கித் தந்து செயல்பாட்டுப் பயிற்சியும் தந்தார்.

இதோ இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன்...

பல்வேறு வடிவங்களில் கவிதைகள் எழுதுகிறபோதும் கஸல் வடிவம் எனக்கு மிகவும் பிடித்த வடிவம். கஸலின் மரபுத்தளை தளர்த்தி கவிக்கோ கஸலுக்குக் கொடுத்த சுதந்திரத்தைப் பின்பற்றிக்கொண்டு எனது எழுத்து மேலும் முன்னேறிச் செல்கிறது என்பதாக உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

 

கவிஞர் வெய்யிலின் 'குற்றத்தின் நறுமணம்' என்னை நவினக்கவிதையின் பக்கம் கவனம்கொள்ளச் செய்தது. தோழர்கள் த. விஜயராஜும் விஷ்ணுபுரம் சரவணனும் எனது நவின வாசிப்புக்கு அடியெடுத்துத் தந்தவர்கள். பிறகு கவிஞர் கண்ணகனை சந்தித்த பிறகு எனது எழுத்தும் கருத்தும் மாறத்தொடங்கின.

எனது எழுத்திற்கென லட்சியம் ஏதும் இல்லை; எதுபற்றி எழுதினாலும் வடிவம் எதுவாக இருந்தாலும் எழுதுவது கவிதையாக இருப்பின் அது கவிதையாகவும் குறைந்தபட்சம் எள்ளளவு கவித்துவமாகவேணும் ஒளிரவேண்டும், அவை மெல்லளவேணும் அன்பைப் பேசவேண்டும் என்பதே எனது விருப்பம்.

கலீல் ஜிப்ரான், கவிக்கோ அப்துல் ரகுமான், உருது கஸல் கவிஞர் மிர்சா காலிப், பிரான்சிஸ் கிருபா, கண்ணகன் ஆகியோர் எனது எழுத்தில் நின்று ஆள்வதாக உணர்கிறேன். இப்போது தோழக்கவிகள் செருகுடி செந்தில், கு. இலக்கியன் ஆகியோருடன் இணைந்து "தாழ்வாரம் நவீன இலக்கியக் களம்" என்கிற இலக்கிய அமைப்பொன்றையும்  ஏற்படுத்தி கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறேன்

 

ஒரு முழுமையான கவிஞனுக்கு கவிச்சுடர் அளிப்பதில் படைப்பு குழுமமும் பெருமைக் கொள்கிறது.

 

இனி கவிஞரின் சில கவிதைகள் காண்போம் :

-------------------------------------

விதியின் வழிதான் பயணம் என்றான போது  விலகி நிற்க மறுக்கிறது நம்பிக்கைக் குறைவு! இருள்தான் பாதை என்றால் வெளிச்சம் வழிக் காட்டுமா? சுவை மொட்டுகள் மலடான தேசத்தில் பேரீச்சை பயிரிட்டவன் என்ற உவமை இக் கவிதையின் துயரை  உச்சமாய் வைக்கிறது…. இதோ கவிதை

    

 

1

 

நிலவெரிந்து

என்னவாகப்போகிறது இனி?

 

ஒட்டகமும் நிராகரித்துவிட்ட பாலையின்

இரவாகிப்போனது இதயம்

 

சுவைமொட்டுகள் மலடான தேசத்தில்

பேரீச்சை பயிரிட்டவனின்

கானல்வரி நான்

 

விளக்கின் முன்னால் விழுகிற நிழல்

துணைக்குக் கூட்டிச் செல்லும் ஒளியைப்போல்

பிரிந்துவிட்டாய்

 

எவ்வளவு கொடுமையானது

இரக்கத்தாலும் இரங்கவியலாது

கைவிடப்படவனின் விதி?

 

நீ நடந்த சுவடுகள் மிச்சமென

நினைத்த போதுதான் வந்தது

பாலைப் பெரும்புயல்.

 காதலின்  துயர்! காதலின் முத்தம்! என விரியும் கஸலின் மொழிப் பிரதியில் ஒரு கவிதை காதலின் பிரிவை துயராக்கி வழிகிறது. பிரிவென்பது விதியானால் அதற்கு ஏன் காதல் என்று பெயர்?  “ துயரத்தை  முத்தமிடுகிறேன் / காதல்  பதியம் வைக்கிறது / பூக்கள் பூக்கட்டும் / என் சமாதியில் அதனை  வைத்து விடு!” பார்ஸீய நாடோடிப் பாடலாக உள்ள மஜ்னுவின் கதைப்பாடலில் உள்ள வரி இது. .. இதுவும் அப்படிப்பட்ட ஒரு பாடல்தான்….

 

2

 

யாரால் தடுக்க இயலும்

இதுதான் விதியெனில்

 

இந்த மரணத்தின் குலுக்குச் சீட்டோ

என் பெயருக்கானது

 

ஆச்சரியமில்லைதான்

துயரத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவனுக்கு

சாக்குழி

 

ஆனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை

காதலின் கட்டளை இது என்பதை

 

இதுநாள்வரை ஏன்

மறைக்கப் பட்டதெனக்கு

காதலுக்கும் கொடுவாளுக்கும்

ஒரே கருப்பை என்பது

 

எனது மரணத்தின் தொட்டில்

அவள் விழிகளிலா ஆடவேண்டும்

 

என் இறுதி ஆசை இதுதான்..

 

நான் பலிபீடத்தில் சரி்ந்தபின்

அநாதையான துயரத்திடம்

இந்த கஸலை கொடுத்துவிடுங்கள்

காதல் என்பது ஒரு கை ஓசையா அல்லது இருக் குயில் இசையா?  உன்னை சரண் அடைந்தேன் என்பது ஒப்படைத்தல்அதன் பிறகு பிரதி பலன் எதற்கு? அப்படி எதிர்ப் பார்த்தால் வியாபாரம் ஆகி விடாதா? இந்தக் கவிதையும் ஒரு ஒப்படைத்தல்தான்

3

 

பாறையாக்கிக் கொண்டாலென்ன

இதயத்தை

ஓயாத அலை நான்

 

நிப்பந்திக்க

என்ன இருக்கிறது அன்பிற்கு

 

வழங்குதல் இயற்கையின் ஒருவழிப்பாதை

மணத்திற்கு மலரோ

சுவைக்கு கனியோ

கேட்பதில்லை கூலி

 

கட்டாயம் என்ன உண்டு காதலில்

காதல் இல்லையென்றால்

இருந்திருக்க வாய்ப்பில்லை

இதயமே கூட

 

வேடிக்கைதான்

விதைத்துவிட்டு காத்திருத்தல்

 

போகிற வழியின் விளைச்சலுக்கு

பொறுப்பேற்பதில்லை நதி

 

நதியின் பாதையில் உருளும்

கூழாங்கற்களுக்கு

பதில் இல்லை நதியிடம்

 

உன் விளக்கை நீ ஏற்றுகிறாய்

ஏன் கோரவேண்டும்

விட்டில்களிடம் மன்னிப்பு

 

நீ ஒளி

இருள் என் காதல்

இடம் மாறிப் போன காதலுக்கு யாரைக் குற்றம் சாட்டுவது? துயரை அளித்தவள்  கஸலின் மேக நீராட்டில் பாட்டிசைக்கப் பணித்திருக்கிறாள்.  இந்த கஸல் , துயரத்தை இசைக்க மட்டுமே பணித்திருக்கிறது. அவளை சபிக்க அல்ல

4

 

இசைத்துக்கொண்டிருக்கிறது

என் உறங்காத்துயரின் சாட்சியத்தை

அந்த ராப்பறவை

 

நிராகரிப்பின் இதய அதிர்வுகளை

என்னமாய் இசைக்கிறது அது

 

கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் ஓடுகின்ற

ஒலித் துணுக்குகள் வலிகளால் ஆனவை

 

கரிய திரையில்

அவள்தான் இயற்றினாள்

எனதிந்த சோகத்தை

 

அவளென்ன செய்வாள்

பாவம்

என் காதலுக்கு கைக்கிளை விதி

 

இடம்மாறிப் பொழிந்ததற்கு

மழையிடம் என்ன பிழை

எவரின் திசைக்கோ எழுதப்பட்டிருக்கிறது காற்று

 

அழுவதொன்றே ஆறுதல் என்றால்

விடியாதிருக்கட்டும்

துக்க அனுசரணை இரவு

 

கண்கள் பொழியும் இந்த கரிப்பு

கஸலின் மேகநீராட்டு

 

சிறைக் கூண்டில் வாழும் சிங்கத்தை ஒத்தது காதல்! அவள் முந்தானையின் காற்று பாலைக்கு அழைத்துச் சென்ற பிறகு, அதன் பல்லவி என்ன பல்லக்கிலா சொகுசுப் போகும்?  கல்லறையில் பாட்டிசைக்கிறவன் இளம் தளிரைப் பற்றியா பாடப் போகிறான்? இதோ விழுந்தவன் இசைக்கும் பாட்டு….

 

5

 

பலியாட்டை கண்டுகொள்வது

மிக சுலபம்

மைவிழியின் பின்னால் சென்றிருக்கும் அது

 

சிங்கமாக இருந்தாலென்ன ஒருவர்

காதலோ ஒரு சர்க்கஸ் கூண்டு

 

நெருப்பிலோ நீரிலோ விழுந்தால்தான் என்ன

உதிரத் தலைப்பட்ட சருகு?

 

தூண்டில் நரம்பில் மீன் பிடிப்பவளுக்கு

நியாயமில்லைதான் தெரிய

ராஜ வீணையின் நரம்புகள் பற்றி

 

இறைச்சி உண்ணிகள்

இதயம் பார்ப்பதில்லை

 

விளைமண் நோக்கி விழும் மழையை

பாலைக்குத் திருப்பும் காற்று அசைகிறது

அவள் முந்தானையில்

 

அவளின் இதயம் போன்ற ரகசிய இரவில்

நேற்று ஒரு கனவு

பின்தொடரும் என்னை அது அழைத்துச் சென்றது

கல்லறைத் தோட்டத்திற்கு

இனி கவிஞரின் மற்றும் சில கவிதைகள் காண்போம்….

6

 

இந்தத்துயரை அவள் தராதிருந்தால்

கரிப்பின் சாபம் கண்டிருக்காது கடல்

 

என்ன செய்வது?

குமுறலை அலைகள் முறையிடும் கரை

காதுகளற்ற பாறை

 

ஏறெடுத்துப் பார்த்தாலென்ன

மண்மீதான கருணையாலா

பெய்கிறது மழை

 

என் இதயம் செய்த பிழையன்றி

குற்றமென்ன அவள் கண்களில்

 

மாளிகைச்சுவரில் அமரும் பறவை

அதன் கூண்டுக்கு வாய்க்கவேண்டுமென்பது நியாயமில்லைதான்

 

கோழியின் சிறகை உயர்த்தாத குற்றம்

வானத்தினுடையதல்ல

 

பழியில்லை என்மீதும்

 

இதயத்தை இடித்த இந்தக் காதல்

எச்சத்தில் விட்ட வேர்

 

7

 

எவருக்கோ வழங்கப்பட்டு தவறிய சாபத்தை

கண்களேந்தி வந்திருக்கிறாய்

 

மரணம் நோக்கி

நெளிந்து நீளும் சாலையின்

பரிதாபப் பயணி நான்

 

எப்படித்தான் தாங்கும்

அன்பிற்குரிய கருணையின் கூர்மை

களிம்பு பூசச்செய்த என் இதயம்

 

ஒதுங்கியபின் இதயத்தைச் சுடும் நிழலை

எவர் விளித்தார் நேசமென்று

 

இதய வெக்கைக்காய்

இதயமொதுங்கினேன்

 

நீயோ சாபத்தை இறக்கிவைத்து

இளைப்பாறுகிறாய்

 

எங்கோ தூரத்தில்

வீழ்த்திவிட்ட வெற்றிக்கு

கட்டைவிரல் உயர்த்துகிறது காதல்

 

8

 

ஆயுதம் ஒன்றுமில்லாமல்தான்

இருக்கிறாள்

 

ஆனால் எப்படி நம்பாமலிருப்பது

நிராயுதபாணி என்று சொல்லிக்கொள்ளும்

அவளின் கொடூரத்திற்கு சாட்சியமாகிற

கண்களை

 

என்ன செய்யும் பாவம்

எதிர்கொள்கிற இதயத்திற்கோ

புறமுதுகு இருப்பதில்லை

 

கபடம் திரை இழுக்க

மண்டியிடத் துணிகிறது நாடகத்தின் விதி

 

எவரொருவரை தோற்காது விட்டு வைக்கும்

களம் இது

 

பிளவுண்ட நாக்கின் வற்புறுத்தலுக்கு

எவளோ தலையசைக்க

ஆப்பிள்கள் உருளும் சாபவனத்திற்கு

யார் வைத்தது

காதல் என்கிற பெயரை?

 

 

9

 

தூண்டிலைப் போற்றுகிற உலகில்

மீனாகியிருக்கிறேன் நான்

 

வளர்த்த நதியின்

அண்மித்துவிட்ட சாபம் கவிகிறது

என்மீது

 

அவளின் கண்களில் நெளிகிற புழுவுக்கு

எனதுயிரின் தாகம்

 

நேச இதயத்தை சிக்கப்பண்ணுவது

காதலின் இயல்பு எனில்

குற்றமொன்றுமில்லை உன்மீது

 

கண்களின் பிழையல்ல காட்சி

 

மரணத்தின் நிழலை

இத்தனை அழகாய் விழவைத்தது

காதலின் கருணை

 

முன்பே எழுதப்பட்ட விதிக்கு

உன் வருகை

ஆகட்டும் என்கிற தலையசைப்புதான்

 

10

 

நரம்புகள் அறுந்துவிடக்கூடும்

இதயமே இந்த யாழில்

துயரையேனும் மீட்டு

 

நம்பிக்கை வைத்தாலென்ன

பிரகாச விடியலும்

கொண்டுவரத்தான் செய்கிறது

தன்பின் ஓர் இரவை

 

புன்னகைக்குள் ஒளித்துவைத்தக் காயத்தை

வாழ்வு என்கிறார்கள்

 

வரைந்து பார்க்கிறேன் நானதை

என் ஒளிக்கோடும்

நீள்கிறது கறுப்பாய்

 

காலத்திடம் கேட்க

ஒன்றுதானுண்டு

 

உன் கருணையில் வாய்த்த இவ்வாழ்வு

எனக்குத்தான் துயரா

இல்லை நானே துயரா?

 

10

 

தன் கண்ணை தானே பிடுங்கத்தான்

வந்து தொலைக்கிறது இந்த பாழும் கனவு

 

விழிகளோ இதயமோ இல்லாமல்தான்

இருக்கக் கூடாதா மனிதப்பிறவி

 

ஆழப்புதைத்து விட்டுதான் வந்தேன்

ஆனால் நாள்பட்ட மதுவானது

அவளின் நினைவு

 

நீ்ந்தி கடக்கத் துணிய

பிரிவுக்கு என்ன ஆயுளின் தூரமா?

 

அரும்பாதிருக்கட்டும் இனி

ஜென்மங்களுக்கான எனது கருப்பை

 

நாத்திகம் களைந்தவனுக்கு

சாபம்தான் அருள் எனில்

இடிவிழட்டும் வழிபாட்டின் மீது

 

உவர் நுரைக்கிற காதலில் ஊறிய இதயத்தை

எவரிடம் கையளிபேன்

 

கையிடறிய சாத்தானின் கோப்பை

சிந்திய சிறு மதுவில்

தாள்ளாடுகிறான் கடவுள்

 

11

 

அழகாய் இருந்தாலென்ன

கொலைக்கருவிதானே வாள்

 

மை தீட்டிய இருண்மையை

வாழ்வின் ஒளியென நினைத்தது

இதயத்தின் பிழை

 

ஏன் கோபிக்கிறீர்கள்

தாலாட்டு

இறுதிப்பாடலின் முதல் வரி என்றால்

 

நிராகரிப்பும் வருத்தமும்

இதயத்தைக் கொண்டாடியபின்

தனிமைக்குத் துணையானேன்

 

நட்சத்திரங்களும் வெறுத்த இரவில்

ஆந்தைகளின் பரிகசிப்புக்கு

ஆளாக்கியது என்னை

காதலின் விதி

 

கல்லறையின் நிழலில்

ஒதுங்க நேர்ந்தவனின் இருளுக்கு

துயரமே விளக்கு

 

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

ப.தனஞ்ஜெயன்


1   1652   0  
September 2021

ஜனனி


0   613   0  
September 2022

சிவக்குமார்


0   1143   0  
April 2019