logo

கவிச்சுடர் விருது


'ஆடுவது
தாயமென்றாலும் கூட 
மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டு
சிறைக்குள் சிக்கிக்கொள்ள
சம்மதிக்கிறது மனது
மகளிடம் மட்டும்' 

- கவிஞர் தனபால் பவானி தன் எழுத்துகளால் நம்மை வசிகரிக்கிறார். 

ஒரு கவிஞன் படைப்புகளோடு பயணிக்கும் போது வார்த்தைகளையும் சேர்த்து சுவாசிக்கத் தொடங்குகிறான்... கவிஞர் தனபால் அவர்களின் வார்த்தைகள் ஆக்ஸிசன் நிறைந்து வெளியாகிறது.

இந்த ஜூன் மாதத்திற்கான கவிச்சுடர் விருதினைப்பெறும் கவிஞர் தனபால் பவானி அவர்கள் ஈரோடு அருகில் உள்ள பவானியை இருப்பிடமாக கொண்டவர். தன் ஊரின் மீது கொண்ட அதீத நேசத்தின் காரணமாகவே தனது பெயருக்கு அருகில் ஊரையும் சேர்த்துக்கொண்டவர். கவிதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், பட மற்றும் புத்தக விமர்சனங்கள் என்று பல்வேறு தளங்களிலும் சிறப்பாக எழுதிவருகிறார்.

படைப்பு குழுமம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலம் முதல் தன்னை இதில் இணைத்துக்கொண்டு பல படைப்புகளை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாத சிறந்த படைப்பாளிகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். படைப்பின் மீதுகொண்ட அதீத ஈடுபாட்டின் காரணமாக தகவு மாத இணைய இதழில் நிருபர்கள் குழுவில் ஒருவராக இயங்கி பல்வேறு கவிஞர்களை நேர்காணல் செய்திருக்கிறார். 2018ஆம் ஆண்டு தகவு இதழின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது.

ஆரம்பகாலங்களில் நாளிதழ்களின் இலவச இணைப்புகளில் வரும் சிறு சிறு கவிதைகளைப் படித்து கவிதைகளின் மீது வந்த ஆர்வத்தால் எழுதத் தொடங்கியவர், தான் அன்றாடம் பார்க்கும் காட்சிகளை, கவனிக்கும் விஷயங்களை, எளிய மனிதர்களின் வாழ்வை, சந்திக்கும் சமூகப்பிரச்சனைகளை கவிதைகளாக, கட்டுரைகளாக படைக்கிறார். விரைவில் தன் படைப்புகளை புத்தகங்களாக கொண்டுவர முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.

இனி அவரது படைப்புகளை திறனாய்வோம் வாருங்கள்:

முரட்டு காற்றொன்றின்  வழித்தடங்கள் பாதிப்பின் சுவடுகளாக மாறிவிடுகின்றன... அதனை எதிர்க்கொள்ளும் மூங்கில்காடு முறியும் நிலையிலும் காற்றை உள்வாங்கி வெளிவிடும் மெல்லிசையில் புல்லாங்குழலாகி இந்தக்கவிதை தன்னை சான்றுபடுத்திக்கொள்கிறது...

வழிதெரியாமல் வந்துவிட்ட
சூறைக்காற்று மூங்கில்
காட்டுக்குள் மூர்க்கமாய் நுழைகிறது

காற்றில்
மோதிக்கொள்ளும் சருகுகள்
பயத்தில் படபடக்கின்றன

வேர்களின் விசும்பல்கள்
காடெங்கும் கேட்கிறது

மெல்லிய கிளைகளோ
சட்டென முறிந்து விழுகின்றன

சிறகுகள் வலிக்க
எதிர்க்காற்றில் பறக்கின்றன
பட்டாம்பூச்சிகள்

துளை விழுந்த மூங்கிலுக்குள் 
நுழைந்த வேகமான காற்று 
தென்றலாய் மறுபுறம் வந்தபோது 
மூங்கில் மாறியிருந்தது 
புல்லாங்குழலாய்

----
வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் இடம் இருக்குமென்றால் அது நாம் ஆதியில் தங்கிவாழ்ந்த வீடாக மட்டுமே இருக்கமுடியும். .. அதற்குள்தான் நம் பிள்ளைப்பருவங்கள் இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கும்... அதன் சுவர்கள் நம் பிஞ்சு விரல்களை பதிவு செய்திருக்கும்... இவற்றை நினைவுக்கூறும் கவிஞர்.. அதிலுள்ள மனித வாழ்வின் அடிமட்ட சோதனையையும் எழுதுகிறார்.. சொந்தவீடு வாடகை வீடாக மாறும் அவஸ்த்தை அதில் வாழ்பவர்கள் மட்டுமே உணரமுடியும். காலம் சுழற்றும்  சூழ்ச்சியில் இடம் மாறி அழகிய வேறொரு சொந்த வீட்டிற்கு திரும்பும் கவிஞர் தன் பிள்ளைகளின் காலடிக்காக ஏங்குகிறார்....

ஆதியில் ஒரு வீடு இருந்தது
பாதியில் இறந்துபோன தாத்தாவின் வீடு
கொலுசுகள் சிணுங்க சிணுங்க
சொந்தங்கள் சிரிக்க சிரிக்க
எங்கள் பாதங்களால் நிறைந்த வீடு அது

கடன் வந்து பாதிவீட்டை 
தின்று செரிக்க
வட்டியும் முதலும் 
மீதிவீட்டை செரித்து ஏப்பம் விட்டது
சொந்த நாட்டில் அகதியும்
சொந்த வீட்டில் வாடகையும்
சொற்களால் சொல்லிவிட முடியாத வலி

மழைவந்தால் மண்சுவர் கரையும் ஓலைக்குடிசைக்குள்
கண்சிமிட்டும் சிம்னி விளக்கின் ஒளியில்
ஒழுகும் இடங்களில் 
பாத்திரங்களை வைத்துவிட்டு
தூக்கமிழந்து உறைந்து ஒடுங்கி நடுங்கிய இரவுகளிலும்
ஈரப்பாதங்களால் 
நிறைந்தே இருந்தது அந்த வீடு

காலப்பெருவெளி அடித்துவந்த வாழ்வில்
வெளியூரில் இருந்தபடியே 
கட்டிமுடிக்க நேர்ந்தது
அடுக்குமாடி வீடொன்றை

வழுக்கும் தரைகளைத் துடைத்தபடி
அப்பாவும் அம்மாவும் வாழுமந்த வீட்டில்
எப்போது நிறையும் எங்கள் பிள்ளைகளின் பாதங்கள்..?\

--------

பெண்களின் காலச் சூழலையும் கால மாற்றங்களையும் காணும் போது ஒரு வெறுமை அதில் நிரம்பியிருக்கும்.  தன் தாயை தமக்கைகளை பார்த்து வளர்ந்தக் கவிஞன் அவர்களைப் போன்றோரின் தன் ஊர்ப் பெண்களின் கால மாற்றத்தையும் கணக்கிட்டு வேதனைக்குள்ளாழும் இந்தக் கவிதை மிகவும் சிறப்பானது...

எப்போது கோலப்போட்டி வைத்தாலும் 
தெருவடைத்து போடும் ரங்கோலியால் 
புருவமுயர்த்த வைக்கும் தேவி 
இப்போது தன் இரண்டாவது மகளுக்கு
சோறூட்டியபடி வேடிக்கை மட்டும் பார்க்கிறாள் 

ஏற்றிக்கட்டிய பாவாடையோடு 
ஆற்றில் இறங்கினால் அரைமணி நேரம்கூட 
மூச்சடக்கும் ஆனந்தி ஒட்டிக்கொண்ட 
ஆஸ்துமாவால் அவதிப்படுகிறாள் 

ஊருக்கே தையல்கலை சொல்லிக்கொடுத்த 
கலைவாணி வாக்கப்பட்டுப்போன இடத்தில் 
சாராயவாடையோடு பீடியிலிருந்து கசியும் 
புகைக்கு நடுவே விறகடுப்பில் 
சமைத்துக்கொண்டிருக்கிறாள் 

தூரிகையெடுத்தால் 
ரவிவர்மனுக்கே சவால்விடும் காயத்ரி 
சாயம்போன அழுக்கு நைட்டியோடு
குடியிருக்கும் வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் 
ஒட்டடை அடித்துக்கொண்டிருக்கிறாள் 

இளவரசிகளாய்ப் பிறந்து 
ராணிகளாய் வளர்க்கப்பட்ட 
பெண்களின் இன்னொரு பக்கம் 
யாராலும் துடைத்துவிடமுடியாத 
கண்ணீர்துளிகளால் நிரம்பியே இருக்கிறது 

----
வெட்கத் துகள்களுக்குள் ஒளிந்து கிடக்கும் பூகம்பம் என்று காதலை வர்ணிக்கும் கவிஞன் அவளின் கண்கள் கொத்துவதால் காதல் விஷம் ஏறுவதாக சொல்லிவிட்டு சற்றென்று நெகிழ்ந்து அவளது அழகு சலனமற்ற நதியென்றும் அதன் உதடுகளில் கவிதை சிக்கி உடைவதாகக் கூறுவதும்... காதலின் இரண்டாம்கெட்ட நிலையை அழகாக வடித்திருக்கிறார் இந்தக் கவிதையில்....

உன் வெட்கத்தின் துகள்களுக்குள்
ஒளிந்துகிடக்கும் பூகம்பங்களை
சட்டெனக் கட்டவிழ்த்து
நொடியில் நிலைகுலைய வைக்கிறாய்

சட்டையுரித்த பாம்பென 
மினுமினுக்கும் உன்
கண்கள் கொத்துவதால்
உடம்பெங்கும் ஏறுகிறது
அமிர்தமும் விஷமும்

சலனமற்று பாயும் நதியாய்
உன் பேரழகின் 
கரையோரத்தில் பயணித்து 
உதடுகளின் சுழலில் 
சிக்கி உடைகின்றன என் கவிதைகள்

எல்லா மின்னல்களையும்
கண்களுக்குள் வைத்துக்கொண்டு 
மென்பார்வைகளென மொழிபெயர்க்கிறாய்

குடையற்ற பொழுதொன்றில்
பெய்யும் பெருமழையென 
அழகால் மொத்தமாய் நனைத்துவிட்ட உன்னிடம் 
வேறென்ன கேட்டுவிடப்போகிறேன்
முத்தங்களால் துவட்டிவிடு என்பதைத்தவிர...!

----
குற்றமே கொள்கையென வாழும் அரசாங்கத்திடம் நியாயங்களை எப்படி எதிர் பார்க்க முடியும்? மக்களின் விரோத மனப்பான்மைக்கு ஜன நாயகம் என்று பெயரிட்டால் காறித்துப்பத்தான் தோன்றும்.. இதுவும் கவிஞனின் கோபம்தான்....

உங்களிடம் இன்னும் 
லத்திகளும் துப்பாக்கிகளும் 
மீதமிருக்கின்றன அதையும் 
அப்பாவிகள் மீது பிரயோகியுங்கள் 

பள்ளிகளுக்கும் கோவிலுக்கும் 
அருகில் ஆட்சியரின் அனுமதியோடு
சாராயக்கடை திறப்புவிழா 
நடத்துங்கள்  

அம்மணமான விவசாயிகளிடம் 
முண்டாசுகள் அவிழாமல் இருக்கின்றன 
அதை பிடுங்க ஆயுதப்படையை அனுப்புங்கள் 

உரிமைக்காக போராடும் 
மாணவர்களின் மீது 
உங்கள் கையாலாகாத்தனத்தை 
கட்டவிழுங்கள் 

பெண்களிடமும் 
பெரியவர்களிடமும் 
வன்முறையை நிகழ்த்தி 
உங்கள் வீரத்தை 
மெச்சிக்கொள்ளுங்கள் 

இன்னும் வாகனங்களும் 
வாழ்க்கையும் மிச்சமிருக்கின்றன 
அதையும் தீயிட்டுக் கொளுத்துங்கள் 

இறுதியில் இழப்பீடென 
எதையாவது அறிவித்து அதையும் 
உங்கள் சட்டைப்பையில்
திணித்துக்கொள்ளுங்கள் 

விவசாயிகளை மதிக்காத நாட்டில் 
மக்களை மதிக்காத மாநிலத்தில் 
மனிதனாய் வாழ நாதியற்ற ஊரில் 

தமிழ் புத்தாண்டென்ன 
ஆங்கிலப் புத்தாண்டென்ன 
போங்கடா நீங்களும் 
உங்க ஜனநாயகமும் ...!

------
பிணிப்படர்ந்த சூழலில் தொல்லைத்தருவது பிணி மட்டுமில்லை அதனைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும்தான். அதன் துன்பவியலை கவிதையாக வடித்திருப்பது கவிஞரின் சுவாரசியம்

மெல்லத் தொடங்கும் 
இருளின் அடர்த்திக்குள் 
கருமைகவ்விய அச்சமொன்று
படர்ந்து நிரம்புகிறது

ருசி கேட்கும் நாக்கில்
மீண்டும் மீண்டும் அப்பிக்கொள்கின்றன
ரசத்தின் புளிப்பும்
கொதிநீரின் வழவழப்பும்

படுக்கைக்கும் கழிவறைக்கும்
நீளும் பாதையில் 
தன் அத்தனை முகங்களையும்
காட்டிச் சிரிக்கிறது பிணி

புரண்டுபடுக்கும் தருணங்களில்
மூக்கிலேறி நினைவுகளுக்குள்
கசக்கிறது மாத்திரைகளின் நெடி

அருகிலிருப்பவர்களின் 
கனவுகளோடு சேர்த்து 
உறக்கத்தையும் கலைக்கிறது
இருமல் சத்தம் 

நோய் பூசிய இரவை கடப்பதென்பது
காதலி மடியில் தூங்கி விழிப்பதுபோல 
அத்தனை எளிதல்ல...!

-----
இசைக்குறிப்புகளால் காதலை இசைக்கும் அழகான கவிதையொன்று:

நீ மூச்சுவிடுகிறாய்
ஒரு புல்லாங்குழல் தன்னைத்தானே இசைத்துக்கொள்கிறது

ஒரு வீணை 
கசியவிடும் ஸ்வரங்களென
உனக்குள்ளிருந்து வெளிப்படுகிறது 
உன் வெட்கச்சிணுங்கல்கள்

கூந்தலுக்குள் சிக்கெடுக்கிறாய்
சிதறிவிழும் கவிதைகளில்
ஒளிந்து கிடக்கின்றன சில சிம்பொனிகள்

ஆர்மோனியத்தின் 
கருப்பு வெள்ளை கட்டைகள் 
உனக்கு விரல்களாய்
வாய்த்திருக்கின்றன

யாழொன்றை மீட்டிட 
நீளும் கைகளிலும் ஒட்டிக்கொள்ளும்
உன் மெளனத்தின் பேரழகு

ரசனைக்குறிப்புகளால் எழுதப்பட்ட பெண்களுக்கு நடுவே
இசைக்குறிப்புகளால்  
எழுதப்பட்ட கவிதை நீ

------
மகளிடம் தோற்று விளையாடுவதில் ஒரு சுகம் இருக்கிறது... அவள் உயர்வதற்காக குனியும் தகப்பன் மனசில் ஒரு அழகியல் கவிதை:

ஒவ்வொரு முறை
உருட்டும்போதும்
ஒற்றைப்புள்ளிக்காய் ஏங்குகிறாள் 

தாயம் விழுந்து ஆட்டம் தொடங்கியதும் 
விருத்தங்களைப் பற்றிக்கொண்டு 
கட்டங்களைத் தாண்டிப் பயணிக்கிறாள்

துரத்திவரும் என் காயிடம் வெட்டுப்படாமலிருக்க
லாவகமாய் மலையேறிவிடுகிறாள்

விருத்தம் விழுந்தும் அவளிடம்
வெட்டுப்பட வேண்டுமென்றே
உள்ளிருக்கும் காய்களை நகர்த்துகிறேன்

மூன்று போட்டு வெட்டி சிறைவைத்து 
வெட்டாட்டம் ஆடி வேகமாய் பயணித்து 
தன் காய்களை பழம் எடுக்கிறாள்

ஆடுவது
தாயமென்றாலும் கூட 
மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டு
சிறைக்குள் சிக்கிக்கொள்ள
சம்மதிக்கிறது மனது
மகளிடம் மட்டும்

----------
கடவுள்களைத் தேடி  ஒரு மூட்டை கேள்விகளோடு பயணிக்கும் கவிஞன்... பல இடங்களில் அவரைக் கண்டும் காணாதக் கவிஞன் இறுதியாக ஒரு பூங்காவிற்குள் உறங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.. அவரை எழுப்ப மனமில்லாமல் கேள்வி மூட்டையை அவரருகில் வைத்துவிட்டுச் செல்வது ஆயிரம் பொருட்களை உணர்த்தும் கவிதை...

ஒரு மூட்டை நிறைய
கேள்விகளைச் சுமந்தபடி
தெருவில் இறங்கி தேடத்தொடங்கினேன்
கடவுளை

தெருமுனையின் தேநீர்க் கடையில்
பூமாலைகளுக்குள் 
சிறு சிலையாய் இருந்தார் ஒரு கடவுள்

ஊதுபத்தி வாசனையில்
மிதந்தபடி புகைப்படத்தில்
தொங்கிக்கொண்டிருந்தார்
இன்னொரு கடவுள்

மரத்தடி நிழலில் மழுங்க மழுங்க
விழித்தபடி அமர்ந்திருந்தார்
புதிதாய் முளைத்த கடவுளொருவர்

என்னையே இழுத்துக்கொண்டுதானே
போகிறார்களென புலம்பிக்கொண்டிருந்தார்
தேரில் ஊர்வலம் போகுமொறு கடவுள்

கடவுளைத்தேடி களைத்துப்போன
கால்களுக்கு ஓய்வு கொடுக்க
பூங்கா ஒன்றுக்குள் நுழைந்தேன்

அங்கே பக்தர்களின்
வேண்டுதல்கள் நிறைந்த  
மூட்டையைச் சுமந்தபடி
ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் ஒரு கடவுள்

கேள்விகள் நிரம்பிய 
என் மூட்டையை
அவர் பாதங்களில் வைத்துவிட்டு
திரும்பிவிட்டேன்....!!!

-------

கவிஞரின் அற்புதமான மேலும் சிறந்த சில கவிதைகள்....

கழுத்தறுத்த கத்தி
குரல் நெறித்த தூக்குகயிறு
முகம் சிதைத்த அமிலம்
தேகம் தின்ற தீ
உடலேறிய வாகனம்
பூவைக் கொன்ற காமம்
துரத்தி குத்திய கூர்வாளென
ரத்தத்தின் பிசுபிசுப்பை 
புசிக்கும் யாவற்றிற்கும் தெரியாது
அது பெண்களின் உயிரென்பது

ஆறாம் அறிவில் ஓட்டைவிழுந்த
மூளை துருப்பிடித்த
புத்திக்குள் சாத்தான்கள் புகுந்துகொண்ட
சொற்களால் திட்ட முடியாத
பாவிகளின் கொடூரத்தை 
பார்த்து பார்த்து 
கடந்து கடந்து இதயம்
கனத்துப் போகிறது

***

சொற்கள் நிறைந்த வனமொன்றில்
வழிதவறி வந்துவிட்ட 
ஊமை ஒருவன்

தூக்கிச் சுமக்கும்
மெளனத்தையெல்லாம் 
ஒரு புன்னகையின் வழியாகவோ
ஒரு கண்ணீரின் வழியாகவோ 
இறக்கி வைக்க எத்தனிக்கிறான்

கடக்கும் எதிலும் 
ஏதோவொன்றை தேடுகிறான்
கண்டெடுத்த எதிலும் 
ஏதோவொன்றை இழக்கிறான்

ஒரேநாள் பொழிந்த பெருமழையில் 
வாழ்நாள் வறட்சியை தணிக்கிறான்
ஈரம் சொட்டும் மிச்சங்களில்
வாழ்ந்து விட நினைக்கிறான்

சேர்த்து வைத்த வார்த்தைகளுக்கு 
சிறகுகள் முளைக்கும் முன்
அவள் வந்து விட பார்க்கிறான்
காத்திருக்கும் காலம் யாவையும்
அவள் காலடியில் வைக்கிறான்

***

ஊரறிய அடைகாத்தவள்
வயிற்றுக்குள் தொப்புள்கொடிசுற்றி 
தலைமேலாய் கால்கீழாய் 
கிடந்த என்னை 
இரு உயிருக்கும் ஆபத்து 
என்று சொல்லியும்
வலிபொறுக்கா விடியலொன்றில்
பெரும்பாடுபட்டு பிரசவித்தாள்

எட்டி எட்டி உதைத்த என்னை
இடப்பக்கம் கிடத்தினார்கள்
முக்கி முக்கி பெத்தவள் 
நான் பசியால் அழுததை 
அன்று மட்டும் ரசித்திருப்பாள்

பின்னாளில் வளர்ந்த எனக்கு
ஒரு நன்னாளில் யாருக்கும் தெரியாமல்
சிறகுகளை தந்தவள்
தான் பார்க்காத வானத்தையும்
சேர்த்தே தந்தாள்

கிழிக்கப்படாத நாட்காட்டியில்
மாறாத தேதியைப்போல
அவள்காட்டிய திசைநோக்கி பறக்கும்போதெல்லாம் 
என் சிறகுகளுக்குள் பத்திரமாகவே இருக்கிறது 
அவள் வானத்தோடு சேர்ந்த 
என் வானமும்

***

கோடுகளால் நிறைந்த 
வனமொன்றை வரைந்து 
அதன் நடுவே 
வீடொன்றையும் வரைந்து வைத்திருந்தாள் 
வைஷ்ணவி பாப்பா

உதித்து வரும் சூரியனும்
சிறு நதியில் கவிழ்ந்த 
காகித கப்பலொன்றும்
வாலாட்டியபடி நாய்க்குட்டியும்
குஞ்சுகளுக்கு இரையூட்டும் பறவையும்
தூண்டிலில் மீன் பிடிக்கும் அப்பாவுக்கு 
உதவும் அம்மாவுமென வரைந்துவிட்டு

"இதுதான் என் வீடு நல்லா இருக்கா?" 
எனக் கேட்கிறாள் வைசு
"நீ எங்கே?" எனக்கேட்டால்
"நான் தான் வரைஞ்சிக்கிட்டு இருக்கேனே" என்கிறாள்

நான் ஓவியத்தில் ஒரு புள்ளியாகிப்போகிறேன்

***

இத்தனை 
வருடங்களுக்குப் பிறகு
நீ வந்தபோது நெகிழ்ச்சியால்
நிரம்பியது என் வீடு

உள்நுழைகையில் 
நீ எந்தக்காலெடுத்து வைத்தாயோ தெரியாது 
என்கால்கள் தரையிலில்லாமல் 
இருந்ததை நீ பார்த்திருக்க மாட்டாய்

நீ குடித்துவிட்டு வைத்த பழச்சாற்றின் 
கடைசிச்சொட்டில் 
நூற்றுக்கணக்கான முத்தங்கள் மிதந்ததை 
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை

ஆட்டோகிராப் நோட்டில் 
அடைப்புக்குறிக்குள் நீ எழுதித்தந்த வார்த்தைகளை 
அதே வெட்கத்துடன்தான் இப்போதும் படித்தாய்

புரட்டிப்பார்த்த புகைப்பட தொகுப்பில் 
உன்படத்தில் கசிந்த நினைவுகளின் மேல்
புதுப்பிக்கிறாய் பழைய புன்னகையை

விடைபெற்று வீடுதிரும்ப 
பேருந்தில் புறப்பட்டபோதுதான்
புரிந்துகொண்டேன் 
போய்க்கொண்டிருப்பது 
நீ மட்டுமல்ல என்பதை...!

***

அருகில் வரவேண்டாம் 
அங்கேயே நில்லுங்கள் ...

நீங்கள் சுமந்து வருவது 
என் மீதான பரிவல்ல 
என் வலியின் அடர்த்தியை 
ஆய்வு செய்வதற்கான முயற்சி 

வார்த்தைகளால் நலம் விசாரித்துவிட்டு 
பின்சென்று புன்னகையால் 
கைகுலுக்கிக்கொள்ளும் 
உங்கள் கருணை எனக்கு வேண்டாம் 

கண்ணீரைத் துடைக்க 
நீளும் உங்கள் விரல் 
என் கண்களைக் குத்தி 
குருடாக்க முயல்வதாய்த் தோன்றுகிறதெனக்கு 

குருதி வழிந்தோடும் காயத்தில் 
கூர் தீட்டப்பட்ட ஆயுதத்தால் 
மேலும் குடையும் குரூரத்தை விடக் கொடுமையானது 
பொய் முலாம் பூசிய உங்கள் அன்பு 

ஆகவே ...

அருகில் வர வேண்டாம் 
அங்கேயே நில்லுங்கள் 
என் வாழ்வை நானே 
வாழ்ந்து கொள்கிறேன் 

****

பாட்டி வீட்டிலிருந்து புறப்படும் 
போது கொடுத்தனுப்பிய 
முத்தத்திலிருந்து  இரண்டும் 

பக்கத்துவீட்டு அத்தை 
கொடுத்த ஒற்றை முத்தமும் 

சொந்த பந்தங்கள்  
கொட்டிக்கொடுத்த 
ஒரு கூடை முத்தங்களும் 

பள்ளிக்கு புறப்படுகையில் 
அப்பாவும் அம்மாவும் 
சேர்ந்து கொடுத்த முத்தமுமாய் 

சீருடையணிந்த கால் சட்டைப்பையில் 
முத்தங்களை  
நிறைத்துக்  கொண்டு போகும் குழந்தை 

வகுப்பாசிரியை கொடுத்த முத்தத்தையும் 
சேர்த்து கொண்டுவந்து 
பிரித்துக்கொடுக்கிறது எல்லா பொம்மைகளுக்கும் 

***

வலப்பக்க கதவு வழியே
குயில்களின் சத்தம்
இடப்பக்க ஜன்னல்கள் வழியே
நாய்களின் குரைப்பு
தூரத்தில் கேட்கும்
ரயிலின் ஓசை
ஊஞ்சலில் ஆடும்
குமரியின் சிரிப்பு
புன்னகைக்காத உதடுகளின்
வழியே வந்துவிழும் மெளனம்
புரிந்துகொள்ளாத மனம் உதிர்க்கும்
சொற்கள் நிகழ்த்தும் வன்மம்
எல்லாவற்றையும் சுமந்து கணக்கும்
அடக்க முடியாத பெருங்கோவம்
இவை எல்லாவற்றையும் 
மறக்கச்செய்யும் கடந்து போகும்
தொடர்வண்டியிலிருந்து 
கைகாட்டும் குழந்தை என 
ஒரு விடியல் எப்படி
வேண்டுமானாலும் நிகழும்

***
அவனிடம் கண்களைத்தவிர
எல்லாமே இருந்தன
கைவசம் வைத்திருந்த
கைத்தொழிலை கட்டவிழ்க்கிறான் 
ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியினுள்

கொண்டுவந்த பைக்குள்
கைவிட்டெடுக்கும் போதெல்லாம் 
வாத்துபொம்மையும் நாய்க்குட்டியும் 
சிரித்தபடி வெளிவருகின்றன

பலவண்ணங்களில் வைத்திருக்கும் 
விசில்களில் நுழையும் ஒரே காற்று
வெவ்வேறு இசையை 
வெளியிடுகின்றன

கைப்பேசியில் சொருகியிருந்த
ஹெட்போனை காதுகளில் 
வைத்தபடி தன் உலகத்தில்
விளையாடிக்கொண்டிருந்தாள்
அந்தச்சிறுமி

***

தகிக்குமிந்த கோடையில்
வேண்டியபோது நனைந்துகொள்ள 
மெல்லிய மழையொன்றை 
பரிசாக கொடுத்தாய்

பூட்டிய வீட்டின் சாவியைப்போலவே 
அந்த மழையையும் 
எப்போதும் என்னோடு
பத்திரமாகவே வைத்திருந்தேன்

யாரும் தீண்டாமல்
சலனமற்று ஓடுமொரு 
காட்டு நதியைப்போல 
என் தனித்த பயணத்திலும்
உலராமலே இருந்த மழையை

அடர்ந்த இரவொன்றில்
பொழியச் செய்தேன்
வந்துவிழுந்த எல்லா துளிகளிலும்
உன் முத்தங்களின் 
ஈரமும் கலந்தே இருந்தது கூடுதல் சிறப்பு

***

பிரியங்களின் பெருவாசலில் 
தனித்திருப்பது அத்தனை சுலபமல்ல 

தனிமை போர்த்தியபடி 
மெல்ல நகரும் பொழுதுகள் 
நரகத்தை நினைவூட்டும் 

துக்கம் மிகுந்து தூக்கம் துறந்த 
இரவுகளை தலையணைக்கடியில் 
ஒளித்து வைக்கச் சொல்லும் 

பசி நிறைந்த பகல்கள் 
மெளனத்தை சமைத்து
உணவாய்த் திண்ணும் 

பெயரற்ற உருவங்கள் 
மூளை மடிப்புகளில் 
முன்னும் பின்னும் மின்னும் 

அழகிய முரண்களோடு 
அர்த்தமற்ற சண்டைகளால் 
மனம் திணறி பிரிந்திருப்பதை விட 

தனித்தே இருந்துவிடலாமென்றும் 
தோன்றும் ....!

***
தெருவோரத்தில் கடை போட்டு 
கீரை விற்கும் கிழவியிடம் 
பேரம் பேசி இரண்டு ரூபாய் குறைத்து 
வாங்கி வந்துவிட்டேன் 
சில கீரைக்கட்டுகளை 

வீடுகள் நிறைந்த வீதிக்குள் 
வண்டி தள்ளிக்கொண்டு வந்த 
இளநீர் விற்பவரிடம் அவ்வளவு வாதாடி 
ஐந்து ரூபாய் குறைத்தாகிவிட்டது 

கோணிச்சாக்கின் கீழ் அமர்ந்து
செருப்பு தைப்பவரிடம் பிடிவாதமாய் 
பத்து ரூபாயை பிடித்துக் கொண்டுதான் 
மீதம் கொடுத்து வந்தேன் 

நெடுஞ்சாலை ஓரத்தில் பழங்கள் 
விற்கும் விவசாயி ஒருவரிடம் 
நாட்டுநடப்பு பேசியபடி சில பழங்களை 
இனாமாக வாங்கிக்கொண்டேன் 

பெருநகரின் நடுவில் 
கண்ணாடிகளால் எழும்பியிருந்த 
குளிர்சாதன வசதி நிரம்பிய 
அந்த வணிக வளாகத்தினுள்
வாங்கிய பொருள்களுக்கு 
பைசா குறையாமல் 
வரியையும் சேர்த்து கட்ட 
மிகநீண்ட வரிசையில் நின்று 
கடனட்டையோ காசையோ நீட்டிக்கொண்டிருக்கும் 
என்னை என்ன செய்ய...?

***
உடைந்து கிடந்த 
சாக்பீஸ் துண்டுகளால் தெருவோரத்தில் 
வரையத் தொடங்குகிறான் அவன் 
ஒரு கடவுளை

கையில் கடாயுதத்தோடு 
நிற்கும் கடவுளை 
கைப்பேசியில் தற்படம் எடுப்பவர்கள் 
கவனமாய் தவிர்த்து விடுகிறார்கள் ஓவியனை 

வேகமாய் விரைந்து செல்பவர்கள் 
வீசிவிட்டு செல்கிறார்கள் சில சில்லறைகளை 

ஒரு வழியாய் கோடுகளால் முடிவுக்கு வந்த கடவுள் 
மகிழ்ச்சியில் உதிர்க்கிறார் 
பெருமூச்சொன்றை 

ஓவியத்தை கடக்கும் முன் 
குழந்தை ஒன்று கையெடுத்து 
கும்பிட்ட போதுதான் உயிர் வந்தது 
கடவுளுக்கு ...!

***

நடுங்காதே மனமே 
தூரத்தில் தெரிவது 
வேறு யாருமல்ல 
தேனின் தித்திப்பென அடி நாக்கில் 
ஒட்டிக்கிடந்த ஒரு உறவுதான் அது 

பக்கம் நெருங்கி உன்னை
கடந்து போகும் போது 
உடைந்து போகாதே 
உன்னைப்போலவே அந்த உறவும் 
தேனீர் அருந்தவோ  
பசி போக்கவோ வந்திருக்கலாம் 

உன் சந்தோசத்தின் மீதொரு 
பார்வைக் கல்லெறிந்தோ அல்லது 
உண்மையில் பார்க்காமலே கூட 
உன்னைத் தாண்டிப் போயிருக்கலாம் 

கடந்த காலத்தின் நினைவுகளை 
கண்களில் கொண்டுவந்து ஆறிப்போனதாய் 
நினைத்துக் கொண்டிருக்கும் 
காயங்களின் தழும்புகளைத் தடவிப்பார்க்காதே 

கூண்டைத் திறந்துவிடும் 
கைகளென மென்மையாக விலகு 
சிறகுவிரிக்கும் பறவையென 
அவளோ / அவனோ பறக்கட்டும் 
அந்த சந்தோசத்தில் 
உன் சந்தோஷமும் இருக்கிறதென நிம்மதி கொள்...!

***

உயர்ந்து வளர்ந்த மரமொன்றின் 
தனித்த கிளை நான் 
சிறகு விரித்தபடி வந்தமர்ந்த 
சிறு பறவை நீ 

அலகு தவிர்த்து 
கண்களால் கொத்துகிறாய் 
கிளையெங்கும் கசிகிறது காதல் 

பட்டுப்போன மரம் 
துளிர்விடத் தொடங்குகிறது 
உன் பார்வை பட்டுப்போன 
நொடியிலிருந்து  

இளைப்பாற வந்த பறவையின் 
சிறகுக்குள் இளைப்பாறுகின்றன
மரமும் கிளைகளும்

ஒற்றை மரத்திற்கான ஈரம் 
பாய்கிறது மொத்த வேர்களுக்குள் 

இறுதியில் உந்திப் பறக்கிறாய் 
காய்ந்து உதிர்ந்த இலையொன்று 
உயிர்த்தெழுகிறது 

***

லட்சுமி என்றே அழைத்து பழக்கப்பட்ட 
மகாலட்சுமி அக்காவுக்கு
வளர்ச்சியில்லாததால் இன்றுவரை 
கல்யாணமே நடக்கவில்லை

விவாகரத்து வாங்கி வந்ததிலிருந்து 
பிள்ளைகளுக்காகவே 
வாழத்தொடங்கிய வளர்மதி அக்கா 
இப்போதும் பூ கட்டி விற்கிறார்

கணவனை இழந்து 
கட்டில்கடை வைத்து வாழ்க்கை நடத்தும்
தனா அக்காவின் மகளும் 
வாழாமல் வந்துவிட்டதால்
பாரமாகிப்போனாள்

காதலித்தவன் கைவிட்டதால்
தற்கொலையின் விளிம்பு வரை சென்று 
வாழ்வில் அத்தனை பிரியமில்லாத அமுதா அக்கா 
ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்

சொல்லமுடியா சோகங்களால் 
சூழப்பட்ட வலியிலும் வாழ்கிறார்கள் 
என நினைத்துக்கொண்டிருந்த நாளொன்றில்

"பசிக்குது காசு தரியா" 
என பேருந்து நிலையம் அருகே 
கையேந்திய சாந்தி அக்கா 
மனம் பிறழ்ந்து திரிவது
தம்பிகளால் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட 
காரணமாய் கூட இருக்கலாம்

***
ஆழ்ந்த உறக்கத்தின் 
அர்த்த ராத்திரியில் 
கைப்பேசிக்குள் விழுந்து கிடந்தது 
ஒரு தவறிய அழைப்பு 

நடுநிசியின் பெரு மெளன அமைதியிலும் 
என் செவிப்பறைக்கு எட்டாத 
நொடியில் அது தன் சத்தத்தை 
நிறுத்தியிருக்கக்கூடும் 

சங்கீதம் வழிந்தபடி 
எழுப்பிய அலாரம் 
அரைக்கண்ணில் பார்க்க வைத்தது 
அந்த தவறிய அழைப்பை 

விபரங்கள் எதுமற்ற
அந்த புது எண்ணின் மீது 
குவியும் கவனத்தில்  
தொலைந்துபோன நட்பும் 
உடைந்துபோன உறவுகளும் 
வந்து போகின்றன 

ஆர்வத்தோடும் அன்போடும் 
திருப்பி அழைத்தபோது 
"நீங்கள் அழைத்த எண் தற்போது 
அணைத்து வைப்பட்டிருக்கிறதென" 
வரும் பதிவுக்குரலால் 
 
நீளும் சந்தேகத்தையும் 
குமுறும் குறுகுறுப்பையும் 
பெருகும் பயத்தையும்
எதைக்கொண்டு நிரப்புவது ..?

***
பெரு நகர பேருந்தில் 
நரக பயணத்தில் 
பெண்ணாய் படும் 
அவஸ்தைகளை 
எப்படிச் சொல்ல...?

இருக்கைகள் நிறைந்த 
காலை வேளையில் 
கிடைக்கும் இடைவெளியில் 
என்னை நிறுத்திக்கொள்ள
முயலும் போராட்டத்தை 
எப்படிச் சொல்ல...?

உடைக்குள் ஊடுருவி 
உடல் தேடும் ஒருவனிடம் 
உடலுக்குள் மனுசி என்ற 
மனசொன்று இருப்பதை 
எப்படிச் சொல்ல...?

மல்லிகை கருகும்படி 
முதுகில் மூச்சுக்காற்றை 
ஊசியாய் இறக்கும் ஒருவனிடம் 
உனக்கும் என் வயதிலொரு 
சகோதரி இருப்பாளென 
எப்படிச் சொல்ல...?

கடக்கும் சாக்கில் 
கம்பியை பிடித்தபடி 
பின்னுரசும் ஒருவனிடம்  
பிசுபிசுப்பின் ஈரக்கசிவை 
எப்படிச் சொல்ல...?  

வெக்கை தகிக்கும் வியர்வையில்
வழிந்திறங்கும் துளிகளில் 
வாசம் நுகரும் ஒருவனிடம் 
உதிரம் கசியும் வலியை 
எப்படிச் சொல்ல...?

காலதாமதத்திற்கு காரணம் கேட்டு 
கைப்பேசியில் வந்து குதறும் மேலாளருக்கு 
"அந்த மூன்று நாட்களில்" 
அலுவலகம் வர கொஞ்சம்
தாமதமாகுமென்பதை 
எப்படிச் சொல்ல...???

***

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

ஆயிஷா பாத்திமா


0   775   0  
April 2022

கோதை


0   923   0  
September 2020

மணி அமரன்


0   874   0  
October 2020

சு.கேசவன்


0   854   0  
April 2021