logo

கவிச்சுடர் விருது


நமது படைப்பு குழுமத்தின் டிசம்பர் 2021 க்கான கவிச்சுடர் விருதினை... ஆழ்ந்த மனத்துயர் இருந்தாலும் பெருமிதத்துடன் மறைந்த கவிஞர் கிறிஸ்டினா அருள்மொழி அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப் படுகிறோம். நமது படைப்பு குழுமம் அவரது

 

படைப்புகளை மிகவும் உன்னிப்பாகவே கவனித்து வந்திருக்கிறது. 

கோவையை வசிப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்த கவிஞர் திருப்பூரை சேர்ந்த பல்லடத்தில் பிறந்தவர்.  பி.எஸ்.சி. வேதியியல் பயின்ற  அவரது கல்லூரி வாழ்க்கை திருப்பூர் L.R.G. government arts college for women ல் கழிந்தது.  மிகவும் சுட்டியான பெண்ணாகவே வளர்ந்த கிறிஸ்டினா தன் தந்தையின் சொல் மீறாதவர். தன் தந்தையின் ஹொஸைரி ஸ்கிரீன் பிரிண்டிங் யூனிட்டை தனியாக நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். 1994ல் பி.டெக் சிவில் இன்ஜினியர் தேவசகாயம் அவர்களைக் கரம் பிடித்த பிறகு குடும்ப வாழ்க்கையில் தன்னை முழுமையாகவே அர்பணித்துக் கொண்டார்.

அவரது தந்தை நீ உன் புகுந்த வீட்டில் உன் அதீத திறமைகளைக் காட்டி அதனால் குடும்பவொழுங்கு கெட்டுவிடும் படி நடந்து விடாதே என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க தன்னை சுருக்கிக் கணவன் , மகன் என்ற கூட்டிற்குள் தன்னைப் பொருத்திக் கொண்டார். 2016ம் ஆண்டிலிருந்துதான் அவர் முகநூல் வழியாக கவிதைகளை எழுத தொடங்குகிறார்.  அவர் பார்வை குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்காமல் பலதரப்பட்ட கவிதைகளையும் வாசித்துப் பயணம் செய்தது. கூடவே மரபுக் கவிதைகளையும் எழுதப் பயின்று அதிலும் தன்னை நிருபித்துக் கொண்டிருந்தார்.

கவிஞரின் இந்த கவிதைப் பயணம், அவரது கணவருக்கும் கூட தெரியாது. பின் நாளில் தெரிந்த பிறகு முழு சுதந்திரம் அளித்து அவரது கவியரங்க பயணங்களுக்கு தானும் கூடவே நின்று ஆதரவு அளித்ததாக கூறும் அவரது கணவரின் கண்ணீரை யாராலும் துடைக்க முடியாது!

2010ல் மரணித்த கவிஞரின் தந்தை ஒரு நாள் கனவில் ஒரு பேனா அளித்ததாகவும், அதிலிருந்து கவிதைகளின் மீது நாட்டம் ஏற்பட்டதாகவும் அவர் கணவரிடம் அவரே தெரிவித்திருக்கிறார்.

கவிஞருக்கு அபிஷேக் சாமுவேல்  என்ற ஒருமகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார்.

கவிஞரின் மரணத்தை யாராலும் சீரணித்துக் கொள்ளவே முடியாது. சென்னையில் நடந்த அவருக்கான சாதனைப் பெண்மணி விருதை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்துடன் ஊர் திரும்பியவர்.. நன்றாகத்தான் தன் கணவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இரவு உணவுக்கு மாவு வாங்கி வர கணவரை அனுப்பிவிட்டு வீட்டில் இருந்தவருக்கு திடிரென்று மூச்சு திணறல் ஏற்பட அவரது கணவரும் மகனும் பதட்டத்துடன் அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அங்கிருந்தும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் உலகப் பயணத்தை முடித்துக் கொண்டார்.

இந்த விருதுக்கு தகுதியானவர் இதனை அவரால் நேரடியாக பெறமுடியாது என்றாலும் இதனை அவருக்கு கொடுத்து தமிழுக்கு அழகு செய்வது படைப்பின் கடமையாகிறது. இனிய நல் வாழ்த்துகள் கவிச்சுடரே!

 

 

இனி கவிஞரின் சில கவதைகளை காண்போம் :

 

இல்லறம் என்பதே நேசத்தின் பிரதிபலிப்புதான்.  கடினம் என்பதும் அங்கு கரைந்துவிடும் கற்பூரம்.  ஆலாபனையின் அந்திக்குதான் காத்திருப்பு என்பது எத்தனை சுவையான சொல்லாடல்!

 

நேசம் அதிரும் நிம்மதியின் காத்திருப்பு….

*************************************

தொட்டாற் சிணுங்குகிறாள்

கற்பூரமாய் கரைகிறாள்

காற்றின் கனவுகளைக்

கைப்பிரதி எடுத்துக்

கவிதை என்கிறாள்

 

உள்ளங்கையின் உயிராகி,

ஊடுருவி,மோட்சம் தந்து மிதந்து,

பயிராகும் வாதைக்கு பந்தி வைத்து

பரிமாறும் வேளை பயந்து நிற்கிறாள்

 

பகற்கனவா, பள்ளி நினைவா?

தீர்மானம் அநாதி என்பதால்

சீர்திருத்தம் தேவையில்லை

 

தேவதை வரங்கள் மெய்படும் வேளை

தேவன் தேகமும் அதிர்வானேன்

அமைதிப்படட்டும்,அமைதிப்படட்டும் ஆலாபனையின் அந்திக்குத்தானே காத்திருப்பு…!!!

 

வாழ்வியலின் தேடல் வியப்பானதுஇதுதான் ஞானம் என்று எதையும் யாரும் யாராலும் வகுக்க முடியாது.  இது இதுதான் என்பதே கூட ஒரு ஆறுதலுக்கான சொற் கட்டமைப்புதான்.  இவன் தெளிந்தவன் என்று எதைக் கொண்டு நிர்ணயிக்கிறோம் என்பதே கூட இங்கு ஒரு கேள்விக் குறிதான்கலங்கி கிடக்கும் குளம் ரகசியங்களை மறைக்கும்.. அல்லது கலங்கி கிடக்கும் எதுவும் ரகசியமாகவே இருக்கும் என்பதை அழகாக சொல்லிவிடும் தெளிவு இந்த கவிதை!

 

தெளிவு என்பதும் சுமைதான்...

*******************************

கடலுக்கடியில் ஆழ்ந்து கிடந்த

கிழிஞ்சல்

சுட்டு சுண்ணாம்பாகி

கோபுரத்தில் மின்னியது

வெண்நிறத்தில்...

 

உயர வேறுபாடுகள் தந்த

காலக் கணிதப் பிசகுதான்

வாழ்வின் சூச்சுமம் என்கிற

ஞானக் குழப்பம் தெளிந்தபோது

மறைந்து போயிருந்தது மகிழ்வு...

 

இது சுமையில்லை

சுகமுமில்லை

பின் ஏன் தெளிய வேண்டும்...

 

கலங்கி கிடக்கும் குளம்

ரகசியங்களை மறைக்கும்

அல்லது

ரகசியம் இருக்கும் எதுவும்

கலங்கலாகவே இருக்கும்

மனிதர்கள் வாழ்க்கை போல...!!!

 

காதலென்பதே ஒப்படைத்தல்தான்.  நீ எடுத்துக் கொள் யாதுமாகிவிடுகிறேன்  என்பது காதலின் அர்ப்பணம்யாதுமானவனிடம் தன்னையே ஒப்படைத்த பிறகு முக்திப் பெற மோட்சம் எதற்கு என்பதே இக்கவிதையின் உச்சம்!

 

உன் கைப் பொருள் …

***********************

துளைத்தெடுத்தாய்

கண்ணா என்று கதறி கைக்குழலாகிவிட்டேன்

என் காதல் அப்படி

 

உயிர்த்தெழுந்த உடன் பார்த்த நீ

என் மேசியா

இரண்டாம் வாழ்வின் நித்திய ஜீவன்

என் கைலாயத்தை வைத்திருக்கும் கமண்டலம்

ஏதேனின் பள்ளியெழுச்சிப் பாசுரம்

 

ஆதியின் ஏவாளானாலும்

கோகுலத்து ராதையானாலும்

யாதுமானவனிடம்

வரும் வெறுமை தரும் நிறைதல்

முத்தியடைய

மரணம் எதற்கு என்கிறது…!!!

 

கைம்மாறு என்பது களங்கமாஎன கேள்விக் கேட்கும் கவிஞர்.. விட்டேத்தியாய் விட்டு பறக்கும் உயிருக்கு எத்தனை செய்திருக்கும் இந்த உடல்கால நீட்சியில் தவிர்க்க முடியவில்லையாஅதனிடம் கூட சொல்லாமல் பிரிந்து போகிறாயே என உயிரையே கேள்விக் கேட்கிறார்அதற்கு விளக்கம் கேட்கத்தான் கவிஞரின் உயிரும் உடலை பிரிந்து சென்றிருக்குமோ,! இதோ கவிதை

 

கைம்மாறு என்பது களங்கமா…???

*********************************

அன்புக்குப் பலனாய் அன்பைக் கேட்பது அறமா?

கொடுக்கலும் வாங்கலுமா உறவு ?

 

விட்டேத்தியாய் விட்டுப் பறக்கும்

உயிருக்கு

எத்தனை செய்திருக்கும் உடல்

கால நீட்சியில் தவிர்க்க முடிவதில்லையா

சிறையிருப்பின் சலிப்பு ?

 

விழுது விடும் என்ற காத்திருப்பு

பழுது பட்டபின்

வேருக்குத் தெரியாதா வேறுபாடு ?

 

வேறு வேறு களத்துக்கு

வேறு வேறு நீதி என்பதை

வேதமும் மறுக்காதபோது

 

கைம்மாறு என்பது களங்கமா

அன்புக்கு…???

 

 

 

 

கடவுள் பெயரெனும் தொல்லை…

*********************************

🦚எப்படியும் நாவன்மை என்னுள் தரவேண்டும்

முப்பால் மொழிமூழ்கி முத்தெடுக்க —அப்பனே

ஏறுமயில் வாகனனே என்னுள்ள வேண்டுதலை

ஆறுமுகா நீயே அருள் !!

 

💒அன்றாடம் தோத்தரித்து ஆண்டவரைப் போற்றுவதால்

மென்மேலும் தந்திடுவார் மேன்மைதனை — என்னுடைய

பாழ்மனத்தின் வேண்டாதப் பாவங்கள் மன்னித்தென்

ஏழ்பிறப்பும் காப்பார் இயேசு !!

 

☪️பிறைபார்த்து நோன்பை பிழையின்றி பூர்த்தி

நிறைவாக செய்திடுவேன் நித்தம் —இறையே

மறையோதும் தூய்மை மனம்பார்த்து நாளும்

குறையெல்லாம் தீர்க்கும் குதா !!

(குதா—அல்லா)

 

 

 

நீ கொடுத்த மறுபிறவி…!!!

***********************

❤️நேசத்தில் மூழ்கி நெஞ்சழுத்தும் வேளை

சட்டென பார்த்தது உன் முகம்தான்

மூச்சுக்கு வேண்டி முணகியபோது

அக்கரைக்கு அருகிருந்து

சுவாசம் கொடுத்தாய்

சொக்கிய மனம் சொந்தம் என்றது

 

துடிக்கத் துடிக்கத் துவண்டபின் தெரிந்தது

பிறவி இப்படித்தான் நமக்கென்று

பிரிவெல்லாம் இனி இல்லையென்றாய்

பேரின்பம் இதுவென்று பேசாமல் கிடந்தேன்

 

கண்கட்டி அழைத்து வந்து

கடவுள் காட்டிய உன்னை

பொத்தி வைத்து வணங்கும் எனக்கு

என்ன வேண்டும் இதற்குமேல்

 

ஆனாலும் என் அதரம் மதுரம் என்ற

குறும்பில்

நகம் கடித்து நகைக்கிறது நீ தந்த மூச்சு காதலுடன்…!!!

 

 

 

எப்படிச் சொல்வாய் நீ முடியாதுதான்

************************************

வெறுமனே கடந்து போதல் என்பது

வெறுப்பில் சேர்த்திதானே

அலட்சிய முகம் காட்டும்போது

கொஞ்சம் தள்ளி நிற்கச் சொல்கிறாய்தானே

 

காலாவதி ஆகும்நிலை அன்புக்கும் உண்டா

சாயம் போதல் என்பது நேசத்திலும் நடக்குமா

 

சகுந்தலைப் பட்சிகள் வளர்த்த

குழந்தையிடம் கேட்டால்

துஷ்யந்த மறதி புரியும்

 

கவர்ச்சிக்கும், கண்ணியத்துக்கும்

காத தூரம்…!!!

 

 

 

புத்தக பிம்பமும் உண்மை நானும்…

********************************

எல்லாவற்றுக்கும் சிரிக்காதே

மரப்பசு அம்மணி ஆக்கப்படுவாய் என்றார் தி்.ஜா

 

அப்பிராணி இரக்க குணத்துடன்

பிரிவோம் சந்திப்போம்

ஏமாளி மதுவா நீ

கேட்டார் சுஜாதா

 

பொய் ஏற்றுப் பழகும்மா

உண்மையில் மட்டும் உயிர் வைத்தால்

காதலையே துறந்த

அது ஒரு கனாக்காலம் சுகந்தா போல்

வருத்த வேண்டும்

எச்சரித்தார் ஸ்டெல்லா ப்ரூஸ்

 

கலைகளில் உருகாதே,இளகதே

மீறல்களில் முன்னோடி அவைகள்தான்

மெர்க்குரிப் பூக்கள் சியாமளியைக் கேள் பெண்ணே புரியும்

சொன்னார் பாலகுமாரன்

 

எல்லாவற்றிலும் என் அப்பா குரல்

 

பெண் பிம்பங்களின் பின்னால் திரிந்து

எழுத்துக்களில் உலா வந்து

புத்தகங்களில் கிறங்கி

அறிவுரைகளில் மயங்கி

 

உண்மை பயமுறுத்தும் நேரங்களில்

மீண்டும் புதைந்து கொள்கிறேன் காகிதக் கண்ணாடிகளில்

என்னை அழகாகப் பிரதிபலிப்பவை அவை மட்டுமே…!!!

 

 

 

பாரம் தரும் தூரம் அதிகம்…

****************************

என் சிறு பிணக்கின் இடைவெளி

உன் வசதியாகும் அளவுதான் நாம்

வாழ்ந்திருக்கிறோம் இல்லையா

 

நேசப் பிரதேசங்கள் நசுங்கும் நெரிசல் நிலையை

பின் எப்படித்தான் வெளிப்படுத்த

 

நிம்மதிக்கூடு நிறம் குறையும்போது

ஆசைப் பயிர் நுனி வாடும்போது

அப்படி இப்படித் தோன்றுவதுதானே

அன்பு செய்யும் வம்புத்தனம்

 

இலேசாக தலைவருடி உறுதியை உணர்த்தேன்

பிரியத்தின் அடர்த்தி பெரும் பாரம்

நெருப்பு வளர்க்கும் நேசக் காய்ச்சல்

சுடுகிறது குளிரக் குளிர…!!!

 

 

வயிறு நிறைய உலகம்…

****************************

“அம்மா பசிக்கிறது”என்று வயிறு தடவி கையேந்தியது ஒரு குழந்தை

 

“பசித்தால் வயிறு வலிக்குமாம்மா” என்றது

இன்னொரு குழந்தை

 

இரண்டு குழந்தைகளுக்கும் நடுவே

இருந்தது ஒரு கார்…!!!

 

 

 

எப்படி இருந்தாலும்

கவிதை எழுதத் தெரிந்திருந்தாலும்

அப்படி எழுதியிருக்க மாட்டாள்

ஒருபோதும் கண்ணம்மா

 

வார்த்தை தவறிவிட்டாய்

பாரதி என்று…!!!

 

 

எனக்கே ஆனதுதான்…

*********************

உபவாச நாழிகைக்காய்

உத்திரத்தில் மடித்து வைத்திருந்த

உயிர்கூடு

உன் வருகைக்குப் பின் காணவில்லை

 

உள்ள அன்பை எல்லாம் வார்த்து உருவாக்கியது

உள்ளே நானும் இருந்தேன்

 

எடுத்தது உண்டானால்

என்னிடம் கொடுத்து விடு

எனக்கு என்றால் அது எனக்குத்தான்

எனக்கே எனக்கென்றால்

எப்படியும் அது உனக்குத்தான்…!!!

 

 

 

முனை மழுங்கல் உன்முன்தான்…

***********************************

ஞான ஊற்றைத் திறந்து விட்டாய்

கொட்டித் தீர்க்கையில்

நனைந்து நிற்கிறேன் பார்

 

முனை மழுங்கிய கூர்மை

முதுகு சொறிந்து கொள்ளும்

மூழ்கிவிட்ட பின் மூச்சு பற்றி என்ன

மீனாகிப் பின் மானாகி, நானாகி விடுகிறேன் தினமும்

 

எல்லாம் பார்த்து ஏளனம் கொள்ளாதே

வேறுநிலை வித்தகி நான்

உன்முன்தான் வெற்று

 

நேசப் பெருங்கடலில் உவர்ப்பில்லை

பாசம் பொழிகையில் போதவில்லை

சூரியனை முழுதாய் கேட்கும் சுயநலத்தை சபிக்காதே

 

நான் வானமாகி நிற்கிறேன்

வந்துபார்…!!!

 

 

 

*ஆறு வெவ்வேறு வெண்பாக்கள் எழுதவும்

*அதில் ஒரே தனிச்சொல் வைக்கவும்.

*காசில் முடிக்கவும்.

*ஒவ்வொரு பாவிலும் ஒரு மலரின் பெயர் இடம் பெற வேண்டும்

*இவை ஆறுமே அந்தாதியாக எழுதவும்.

 

எல்லா நிபந்தனைகளும் ஏற்று

எழுதிய வெண்பா

 

கரம்பற்றும் முன் இப்படித்தான்

*******************************

எப்படித்தான் சொல்வேன்

    எனதுமனம் உன்னிடம்தான்

இப்படியே பார்த்தால்

   இனிக்குமா?—அப்படியேன்

பார்க்கின்றாய் மல்லிகைபோல்

      பாவையிவள் பாவமன்றோ

வேர்க்கிறது போகாதே

       விட்டு!!

 

விட்டுவிட்டு வந்தெந்தன்

    வீறாப்பை நோகடித்து

சொட்டிக் கலங்கடிக்கச்  

    சொன்னாயோ — அப்படியேன்

செய்கிறது ஊசிமுல்லைச்   

     சின்னமழை வம்பிழுக்கப்

பெய்கிறதோ என்மேனி

      பட்டு!!

 

பட்டால் பழிவருமோ

    பால்முகமும் மாறிடுமோ

மொட்டாய் அனிச்சம்பூ

     மேனியிவள் — அப்படியேன்

செய்வதென்று ஆராய்ந்து   

      சென்றாயோ ஆணழகே

மெய்தானா பேசேன்இம்

       மட்டு!!

 

மட்டற்ற நேசத்தில்

     மங்கைமனம் மோகத்தில்

சட்டென்று சாய்ந்தாளிச்

     சாமந்தி —அப்படியேன்

வீழ்ந்தேனோ பேரன்பின்

     வீச்சில் அயர்ந்தேனோ

பாழ்மனத்தை சொல்லிவிட்டேன்     

      பிட்டு!!

 

பிட்டுக்கு மண்சுமந்த பிள்ளையவன்   

    பேரருளால்

தட்டேந்தித் தந்தமனம்

    தாமரையாம் — அப்படியேன்

நான்செய்தேன் என்றெண்ணி   

      நாணத்தில் வீழ்வதற்குள்

ஏன்வந்து தாங்கேன்ஓர்

      எட்டு!!

 

எட்டூரும் பூமணக்க

    என்னைநீ கைப்பற்றி

தொட்டாள இன்பம்

      தொடராதோ — அப்படியேன்

செய்தாய் எனக்கேளாச்

      செண்பகமாய் உள்நிறைந்து

மெய்ம்மலர்வேன் அப்போது

       மொட்டு!!

 



Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.

டீன் கபூர்


0   1070   0  
February 2019

மிஸ்ரா ஜப்பார்


0   40   0  
November 2024

ஆகிஷா


0   685   0  
February 2022