logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

அ.ஈடித் ரேனா

சிறுகதை வரிசை எண் # 160


நான் இந்திரன். ஈர விழிகள் என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் சமூக நலன் விஷயங்களை செய்வதோடு இந்த ஆதரவற்றோர் காப்பகத்தையும் 20 வருடங்களாக நடத்தி வருகிறேன். உடல் நிலையும் மனநிலையும் பாதிக்கப்பட்டு சாலைகளில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த எத்தனையோ பேரை நாங்கள் மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவந்திருக்கிறோம். அதைவிட முக்கியமாக அவர்களது குடும்பத்தை தேடிக்கண்டுபிடித்து தொலைந்தவர்களை மீண்டும் ஒப்படைத்திருக்கிறோம். பல வருடங்களாக தேடியும் கிடைக்காமல் இருக்கிறார்களோ இல்லையோ என்ற பரிதவிப்பில் இருப்பவர்களிடம் அவர்களது உறவுகளை ஒப்படைக்கும் தருணம் ரொம்பவே நெகிழ்ச்சியானது. அந்த ஒரு தருணத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம் என்று கூறிக் கொண்டிருந்தேன். நான் பேசுவதை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது ஜன்னல் வழியாக ஒரு ஜோடிக் கண்கள் என்னை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. அந்தப் பார்வைக்கு சொந்தக்காரன் விச்சு. ஆனால் உண்மையில் அவன் விச்சு இல்லை, முரளி. முரளியாக வாழ்ந்ததை விட அதிக காலம் விச்சுவாக வாழ்ந்து விட்டான். இங்கே எல்லோருக்கும் அவன் விச்சு தான். ஒரு மழை நாளில் சாக்கடையில் விழுந்து கிடந்தவனைக் காப்பாற்றி குளிப்பாட்டி உடலெங்கும் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளித்து முடி வெட்டி சவரம் செய்த பிறகு ஒளி பொருந்திய கண்களோடு 40 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் தெரிந்தான். அவன் உடல் முழுக்க காயங்களின் தழும்புகள். பற்களில் சிலவற்றை இழந்திருந்தான். முகத்தில் நிறைய வெட்டுக் காயங்கள். கால்களை இழுத்து இழுத்து சிரமப்பட்டு நடந்தான். காலில் எப்போதோ ஏற்பட்ட எலும்பு முறிவிற்கு சரியாக வைத்தியம் செய்யாததால் இப்படி ஆகி இருக்கும் என்று மருத்துவர் சொன்னார். தான் யார் தன் பெயர் என்னவென்று கூட சொல்லத் தெரியாமல் புத்தி பேதலித்தவனாக தான் காப்பகத்தில் நுழைந்தான். காப்பகத்தில் இருந்த பாட்டி ஒருவர் தன் மகனின் நினைவாக விச்சு என்று கூப்பிட ஆரம்பித்தார். அதுவே அவனுடைய பெயராகவும் ஆகியது. அமைதியான சூழல் சாப்பாடு மருந்து என்று அவனது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சொன்னதைக் கேட்பான். அவனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. மனநல சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு பழைய ஞாபகங்களும் வர ஆரம்பித்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக துண்டு துண்டாக அவன் சொன்ன சம்பவங்களை கோர்வையாக்கிப் பார்த்தால் அவனுக்கு இப்போது ஏறக்குறைய 40 வயது இருக்கலாம். அவனுக்கு பெற்றோர் வைத்த பெயர் முரளி. ஒரு கிராமத்தில் பெற்றோர் மற்றும் 3 சகோதரர்களோடு வசித்து வந்திருக்கிறான். பதின்பருவத்தில் வயது கோளாறு காரணமாக செய்த தவறுக்காக அப்பா எல்லார் முன்னிலையிலும் அடித்து அவமானப்படுத்தி விட்டார் என்று வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறான். எங்கெங்கோ சுற்றி தவறானவர்களிடம் சிக்கி அவன் வாழ்க்கையே சின்னாபின்னமாகி இருக்கிறது. மனநல பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விபத்தில் அடிபட்டு கைகால் செயலற்று கிடந்த நேரத்தில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறான். அப்போது தான் மீட்கப்பட்டு இங்கு வந்தான். உடம்பும் மனசும் சரியான பிறகு விச்சு எங்கள் காப்பகத்தின் ஒரு அங்கமாகி விட்டான். அவனால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை யாரும் சொல்லாமலே செய்தான். காப்பகத்தின் ஊழியர்களுக்கு உதவியாக இருந்தான். எல்லோரிடமும் அன்பாக பழகினான். இப்படியான சிந்தனைகளில் இருந்து மீண்டு ஏக்கப் பார்வையோடு நின்று கொண்டிருந்தவனை அருகில் அழைத்து உனக்கும் உன் ஊருக்கு போக வேண்டுமா, உன் குடும்பத்தை பார்க்க வேண்டுமா என்று கேட்டேன். மெல்லத் தலையசைத்தான். அன்றிலிருந்து ஆரம்பித்தது விச்சு என்ற முரளியின் குடும்பத்தை தேடும் படலம். அவன் சொன்ன ஊரில் விசாரித்தால் அப்படி யாருமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். முகநூல் புலனம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக முரளியின் புகைப்படம் அனுப்பியதற்கும் பெரிதாக எந்த தகவலும் இல்லை. காலமும் சூழலும் ஏற்படுத்திய வடுக்களோடு இருந்தவனை பெற்ற தாயால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. இருந்தாலும் அந்தக் கண்களின் ஏக்கம் என்னை தூங்கவிடாமல் செய்தது. 20 வருடங்களுக்கு முன்பு தொலைத்த குடும்பத்தை குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு தேடிக் கண்டுபிடிப்பது ரொம்ப சவாலாக இருந்தது. ஒரு வழியாக காவல்துறை மற்றும் ஊடக நண்பர்கள் உதவியுடன் அவனது குடும்பம் இருக்கும் ஊரைக் கண்டுபிடித்தேன். அவர்கள் விச்சு சொன்ன ஊரில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் வேறு ஊரில் செட்டில் ஆகி இருந்தனர். ஊர் முக்கியஸ்தர் ஒருவர் மூலமாக குடும்பத்தினரிடம் அலைபேசியில் பேசி தகவல் தெரிவித்துவிட்டு விச்சுவையும் அழைத்துக் கொண்டு வருவதாக தெரிவித்தேன். நானே நேரில் சென்று பாதுகாப்பாக முரளியை அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து வர வேண்டும் என்பதே என் எண்ணம். நண்பர் ஒருவர் உதவி செய்யும் நோக்கத்தோடு தனது காரை கொடுத்து அனுப்பினார். விச்சு காப்பகத்தில் எல்லாரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டான். காப்பகத்தில் அவனுடன் இருந்த ஆதரவற்றவர்கள் நீ கொடுத்து வைத்தவன் உனக்காவது உன் குடும்பம் திரும்ப கிடைத்திருக்கிறது" இனி ஒருபோதும் அவர்களைத் தொலைத்து விடாதே என்று மனசார வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். அந்தப் பயணம் முழுக்க முழுக்க ஒரு பரபரப்போடும் இனம்புரியாத பரவசத்தோடும் இருந்தான் விச்சு. போகும் வழியில் எதையும் சாப்பிடும் மனநிலையில் கூட அவன் இல்லை. அப்பா எப்படி இருக்கிறார் அம்மா எப்படி இருக்கிறார் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று தொண தொணவென்று கேள்விகளாக கேட்டுக் கொண்டே இருந்தான். 25 வருடங்களுக்கு பின்னோக்கி சென்ற வாழ்வை முன்னோக்கி நகர்த்தும் பயணம். வீட்டு வாசலில் இறங்கும்போது விச்சுவை முரளி இறங்கு என்று சொன்னேன். முரளி புரியாமல் திகைத்தான். உன்னுடைய குடும்பம் தான் கிடைத்துவிட்டதே, இன்று முதல் நீ பழைய முரளியாக வாழலாம் என்று சொன்னேன். கண்களில் கண்ணீரோடு என்னை அணைத்துக் கொண்டான் விச்சு. அங்கே சென்று பார்த்த போது அவன் தந்தை இறந்திருந்தார். தாயார் வயோதிகத்தால் தளர்ந்து நடப்பதற்கே சிரமப்பட்டு கொண்டிருந்தார். முரளியின் அண்ணனுக்கும் இரண்டு தம்பிகளுக்கும் திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் இருந்தனர். மகனைக் கண்டதும் கண்ணீர் வடித்தார், அவனது தாயார். எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் பெற்ற தாய்க்கு பிள்ளையைத் தெரியும் அல்லவா. அண்ணன் தம்பிகளும் வாஞ்சையாக முரளியின் கையை பற்றி விசாரித்தார்கள் பேசினார்கள். எனக்கு நன்றி சொன்னார்கள். உபசரித்தார்கள். உடன் பிறந்தவர்களின் மனைவிகள் முரளியை குறுகுறுவென பார்த்தனர். அவர்களது பிள்ளைகளை பார்த்ததும் முரளிக்கு அவ்வளவு சந்தோஷம். அருகில் வர சொல்லிக் கூப்பிட்டான். பிள்ளைகள் முரளியின் அருகில் வர தயங்கினர். எவ்வளவு தான் நெருக்கமானவர்களாக இருந்தாலும் காலம் சில இடைவெளிகளை ஏற்படுத்தி விடுகிறது அல்லவா. அதன் காரணமாக உடன் பிறந்தவர்களிடம் பேச முரளிக்கும் தயக்கமாகத்தான் இருந்தது. அதற்குள் மாலை வந்துவிட்டது. கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று முரளியையும் அவரது தாயாரையும் என்னையும் மட்டும் தனியே விட்டுவிட்டு இரவு திரும்ப வருவதாக சொல்லி மற்ற எல்லோரும் கிளம்பி விட்டார்கள். மகன்கள் போன பிறகுதான் முரளியின் தாயார் கொஞ்சம் ஆசுவாசமாக பேச ஆரம்பித்தார். எனக்கு கூட நம்பிக்கை இல்லாம போச்சு, ஆனா அவங்க அப்பா தான் என் பையன் கண்டிப்பா திரும்பி வந்துருவானு சாகுற வரைக்கும் நம்பிக்கையோடு இருந்தாரு. அவர் சொன்ன மாதிரியே எங்க புள்ள திரும்பி வந்துட்டான், அவருக்குத்தான் மகன திருப்பி பார்க்கிற கொடுப்பினை இல்லாமல் போச்சு என்று கண்ணீர் வடித்தார். இரவு 7 மணி வாக்கில் டீ சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கூறி முரளியின் சகோதரர்கள் என்னை மட்டும் அழைத்தார்கள். முரளி அம்மாவிடமும் பிள்ளைகளிடமும் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கட்டும் என்று சொன்னார்கள். நானும் சரி என்று புறப்பட்டேன். டீ சாப்பிட்டுவிட்டு ஒரு இடத்தில் அமர்ந்து பேசினோம். எனக்கு காப்பகத்தில் நிறைய வேலைகள் இருக்கின்றன நான் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னேன். ரொம்ப தூரம் வந்து இருக்கீங்க சார் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில போலாம் என்று கூறினர். அதன் பிறகும் அவர்கள் ஏதோ என்னிடம் சொல்ல தயங்கியது தெரிந்தது. பேசுவதற்காக தான் என்னைத் தனியே அழைத்து வந்திருக்கிறார்கள் என்றும் புரிந்தது மூவரும் தனித்தனியாக சொன்னாலும் சொன்னதின் சாராம்சம் இதுதான். மூத்தவர் தன் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் இத்தனை வருடங்கள் கழித்து மனநிலை பாதிக்கப்பட்ட உடல் ஊனமான ஒரு சித்தப்பா இருக்கிறார் என்று தெரிந்தால் என் மகளுக்கு வரன் அமைவதில் சிக்கல் ஏற்படும். அப்பா இறந்துவிட்டார் அம்மா படுத்த படுக்கையாகி விட்டார் இவனை யார் வைத்து பராமரிப்பது இதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வரும், இது முரளிக்கு நேர் இளையவனின் கூற்று. கடைசி தம்பிக்கோ இப்பதான் நாங்களே தட்டுத்,தடுமாறி கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கோம், இப்போ முரளியை வைத்து பராமரிப்பது மருத்துவ செலவு பார்ப்பது எல்லாம் என் தலையில்தான் விடியும். என் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டவே நான் கஷ்டப்படுகிறேன் என்று பேசிக்கொண்டே போனான். எத்தனையோ பேரை குடும்பத்துடன் சேர்த்து வைத்த போது இறந்ததாக நினைத்தவர்கள் திரும்பக் கிடைத்து விட்டார்கள் என்ற ஆனந்தத்தைத் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இது எனக்கு புதிது. இந்த சூழலை எப்படிக் கையாள்வது என்று குழம்பிப் போனேன். அப்படியே வீட்டுக்கு வந்தோம். இரவு உணவிற்கு பிறகு நான், முரளி, முரளியின் தாயார் மட்டுமே இருந்தோம். முரளிக்கு தினந்தோறும் இரவில் சில மாத்திரைகள் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்த பிறகு அவன் தூங்கிவிட்டான். அவன் தூங்கிய பிறகு அவன் தாயார் என்னிடம் வந்து அவங்க அப்பா நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன். என் பையன ஊர்ல எல்லார் முன்னாடியும் அடிச்சு அவமானப்படுத்திட்டேன். அவன் எங்க போய் என்ன கஷ்டப்படுறானோ. நிச்சயமா ஒரு நாள் திரும்பி வருவான். அப்படி வரும்போது அவன் ஒன்னும் இல்லாம நிக்க கூடாதுன்னு வீடு நிலம்னு எல்லா சொத்தையும் நாலா பங்கு வச்சு முரளியோட பங்கு பத்திரமா இருக்கணும்னு சொன்னாரு. அவன் எத்தனை வருஷம் கழிச்சு எந்த சூழ்நிலையில் வந்தாலும் இந்தப் பங்கை எடுத்துக்கிட்டாச்சும் அவனுக்கு கஞ்சி ஊத்திரனும்னு மூணு பிள்ளைங்க கிட்டயும் சொல்லிக்கிட்டே இருப்பாரு. நாலு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்த பிறகு, மத்த மூணு பேரும் போலீசு கோர்ட்டுன்னு போயி இனி முரளி திருப்பி வர வாய்ப்பே இல்லை, செத்துட்டான்னு சொல்லி இறப்புச் சான்று வாங்கி சொத்தை எல்லாம் பிரிச்சு முரளியோட பங்கையும் அவங்க மூணு பேருமே பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க. அவங்க அப்பா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்க விட்டிருக்க மாட்டாரு. எனக்கு இவங்களை எதிர்க்கத் தெம்பு இல்ல. நானே இப்பவோ அப்பவோனு இருக்கேன். எங்கேயோ எப்படியோ சின்னாபின்னமாகி கிடந்த என் புள்ளையை காப்பாத்தி உசுராக்கி வச்சிருக்கீங்க. நீங்க எங்களுக்கு சாமி மாதிரி. உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன். செத்ததா சொன்னவன் திரும்பி வந்துட்டானே. சொத்து சுகத்தை பங்கு போடணுமே இனி இவனோட பாரத்தை சுமக்கணுமேனு மூணு பேரும் மருகுறானுங்க. நானும் கண்ண மூடிட்டா என் புள்ளையை நல்லபடியா பார்த்துப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை சாமி. தொலைஞ்சவன் தொலைந்தவனாவே இருக்கட்டும்னு என் புள்ளையை ஏதாவது பண்ண கூட தயங்க மாட்டாங்க. கண்காணாத இடத்துல இருந்தா கூட என் புள்ள உசுரோட இருக்கட்டும். முரளியைக் கூட்டிட்டு போய் உங்க காப்பகத்திலேயே வைச்சு கடைசி வரைக்கும் கஞ்சி ஊத்திடுங்க என்று கண்ணீர் மல்க கையெடுத்து கும்பிட்டார். அன்று இரவு முழுக்க எனக்கு உறக்கம் வரவில்லை. முரளிக்கு என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை. முரளியை இங்கேயே விட்டுவிட்டு போவதா மீண்டும் தன்னுடனே அழைத்துச் செல்வதா என்று குழப்பம். சும்மாவே இருந்திருக்கலாமோ உன் குடும்பம் கிடைக்கவில்லை என்று பொய் சொல்லி இருந்திருக்கலாமோ. தொலைத்த ஒன்று கையில் கிடைத்து கிடைத்த உடனேயே மீண்டும் தொலைந்து போவது என்பது எத்தனை பெரிய கொடுமை. இந்த சிந்தனையிலேயே இரவு முழுக்க தூங்காமல் இருந்தவன் அதிகாலையில் தான் கண் அயர்ந்தேன். அப்போது என்னை யாரோ மெல்லத் தொட்டு எழுப்புவது போல இருந்தது. தூக்க கலக்கத்திலும் இருட்டிலும் மங்கலாக முரளி தெரிந்தான். நாங்கள் கொண்டு வந்திருந்த பையை எடுத்துக்கொண்டு மத்தவங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி போயிடலாம் வாங்க சார்னு கூப்பிட்டான். அவன் கண்களில் ஒரு தீர்க்கமான முடிவு தெரிந்தது. அவன் தாயாரும் உடன் பிறந்தவர்களும் பேசியது எதுவும் முரளிக்கு தெரியாது. ஆனாலும் அங்கிருந்த ஏதோ ஒரு அன்னியத்தன்மை, அவர்களின் முகபாவம், அங்கிருந்த சூழல் எல்லாவற்றையும் வைத்து அவனே சில விஷயங்களை யூகித்துக் கொண்டான் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட என்னை அவன் இழுத்துக் கொண்டு வந்தான் என்று தான் சொல்ல வேண்டும். மற்றவர்கள் கண் விழிக்கும் முன்பே காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டோம். நான் ஏதேதோ சொல்ல வாய் எடுத்தேன். அவன் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான். கொஞ்சம் மனநல பாதிப்பு இருந்தாலும் அங்கு இருப்பவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நான் சொல்லாமலேயே எப்படி புரிந்து கொண்டான் என்பது இப்போது வரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சொத்து பத்திற்காக சொந்தத்தையே தூக்கி எறியும் சுயநலம் மிக்க மனிதர்கள் தான் உண்மையிலேயே மனப்பிறழ்வாளர்கள். சில பாதைகளும் பயணங்களும் திரும்புதல் சாத்தியமற்றவை. விச்சுவாக மாறிய முரளி பின் எப்போதும் முரளியாக மாற வாய்ப்பில்லை என்று தெரிந்தது. நாங்கள் பயணித்த கார் காப்பகத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. முற்றும். அ.ஈடித் ரேனா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.