பிரபுசங்கர்_க
சிறுகதை வரிசை எண்
# 13
அப்பாவின் காதல்
--------------------------------
பொங்கலுக்கு கிடைத்த நீண்ட விடுமுறையை பாதி உறங்கியும், பாதி அலைபேசி மற்றும் தொலைக்காட்சியுடனும்
செலவழித்துவிட்டு அடுத்த நாள் அலுவலகம் கிளம்புவதற்கான ஆயத்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கையில் விக்ரம் பட டைட்டில்
ட்யூனை ஒலிக்க விட்டது அலைபேசி.
"ரமேஷ் ஆந்திரா" என்று பதிவு செய்யப்பட்டிருந்த என் அத்தை மகனின்
அழைப்பு, இந்த நேரத்தில் எதற்கு அழைக்கிறான் யோசித்தபடியே அழைப்பை எடுக்கையில் "என் பெரியப்பா இறந்து விட்டார், நாளை மதியத்திற்கு
மேல் எடுக்கலாம் என்றிருக்கிறோம் அனைவருக்கும் சொல்லிவிடு" என்று துண்டித்தான்.
இது என்னடா வம்பா போச்சு??
நாளைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறது, பிள்ளைகளுக்கு ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் மீட் இருக்கிறது, இதைப் போன்ற இறப்புகளுக்கெல்லாம் அம்மாவை பஸ் ஏற்றி விட்டால் அவளே போய் வந்து விடுவாள். ஆனால் அம்மாவிற்கோ இப்போது கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறாள்.
அப்பாவுக்கு தனியாக செல்லும் அளவிற்கு இப்போதைய உடல்நிலை ஒத்துழைப்பதில்லை.
பல கட்ட யோசனைகளுக்கு பிறகு போன் செய்த ரமேஷ் மீது கோபம் வந்தது. இறந்தவுடன் அனைவருக்கும் சொல்ல வேண்டுமா என்ன?? சுற்றியிருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் சொன்னால் போதாதா?? எதற்கு இப்படி தொல்லை செய்கிறான் என மனதுக்குள் சபித்துக்கொண்டிருக்கையில் அம்மா, கண்டிப்பாக போய் தான்பா ஆகணும் என்று ஆரம்பித்தாள்.
"அம்மா நாளைக்கு நிறைய வேலை இருக்குமா, பக்கத்துல இருந்தா கூட பரவால்ல இங்க இருந்து நாலு மணி நேரம் டிராவல் பண்ணி போகணும், இப்ப நம்ம போகலைன்னா என்ன?? "
"இல்ல கண்ணு, உங்க அப்பாவுடைய அத்தையையும், உன் அத்தையையும்னு
ரெண்டு தலைமுறையா நம்ம வீட்டு பொண்ணுங்களை அவங்க குடும்பத்திற்கு கல்யாணம் கட்டிக் கொடுத்திருக்கோம். கண்டிப்பா போய் தான் ஆகணும்"
சிறுவயதில் மிரட்டிக் கொண்டிருந்த அம்மா,
இப்போது என்னிடம் கெஞ்சி கொண்டிருப்பதை பார்த்ததும்
மனம் இளகியது. அலுவலகத்திற்கு போன் செய்து விவரத்தை கூறிவிட்டு அடுத்த நாள் இறப்புக்கு நானும் மனைவியும் சென்று வருவதாக அம்மாவுக்கு உறுதியளித்துவிட்டு உறங்கச் சென்றோம்.
அடுத்த நாள் காலை 8 மணிக்கு காரை எடுக்கையில், நம்ம ஊர் வழியாக தான போற சாமி, அப்படியே சித்தப்பாக்களையும் உன் வண்டியில் கூட்டிட்டு போயிடு
என்றாள் அம்மா. சரி என்று கூறிவிட்டு நானும் மனைவியும் கிளம்பினோம்.
"நமக்கு கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆச்சு. ஒரு தடவை கூட நீங்க இந்த ஊருக்கு
என்னைய கூட்டிட்டு போகல"
என்றாள் மனைவி.
"நீ வேற எனக்கு இப்போ 42 வயசு ஆகுது, நானே இந்த ஊருக்கு வந்து முப்பத்தி ரெண்டு வருஷம் ஆகுது, அப்புறம் நான் எங்க உன்னை கூட்டி வர" பதிலளித்தபடியே
சொந்த ஊருக்கு சென்று சித்தப்பாக்களை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருக்கும் அந்த ஊரை நோக்கி பயணத்தை தொடங்கினோம். சிறிது நேரத்திற்குள் அனைவரும் உறக்கத்திற்குள் லயித்துப் போக, வழக்கமான வேகத்தை குறைத்து மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்த தொடங்கினேன். சரிவர விவரம் புரியாத பத்து வயதில் இந்த சாலையில் பயணித்த நினைவுகளுக்குள் மூழ்கி போகிறது மனது.
அப்போதும் இதே போல ஒரு இறப்பு தான்.
அத்தையின் வீட்டுக்காரர் இறந்து போயிருந்தார். வசதி வாய்ப்புகள் அதிகம் இல்லாத அன்றைய நாளில் யாரோ ஒருவர் நேரில் வந்து சொன்ன செய்தியை கேட்டதிலிருந்து மொத்த குடும்பமும்
இங்கேயே ஒப்பாரி வைத்து அழ தொடங்கியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் கூடிவிட
எதற்கு இப்படி அழுகிறார்கள் என்று
புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு மணி நேரத்திற்குள் ஒரு மினி லாரியை அழைத்து வந்தார் ஊர் நாட்டாமைக்காரர். சிறிய கிராமத்தில் வீட்டிற்கு ஒருவரென லாரி முழுக்க
சொந்தங்களும் உறவுகளும் ஊர்க்காரர்களும் ஏறி நின்று கொள்ள
கருப்பு கொடியை ஏற்றியவாறு புறப்பட்டது லாரி. எதற்கு கருப்புக்கொடி என சித்தப்பாவிடம் விசாரித்த போது, கருப்புக் கொடி கட்டினால் எழவுக்கு போகிறார்கள் என்று போலீஸ்காரர்களும் நிறுத்த மாட்டார்கள், இரு மாநில எல்லையில் இருக்கிற செக் போஸ்டிலும் நிறுத்த மாட்டார்கள் என்று சொன்ன விளக்கம் அரைகுறையாக நினைவில் உள்ளது.
இறப்புகளின் போது போய் தான் ஆக வேண்டுமா?? என்ற இன்றைய சலிப்பு
மனநிலையையும், மொத்த ஊருமே
பெருஞ்சோகத்தோடு கிளம்பிய அன்றைய மனநிலையையும் ஒப்பிட்டு பார்க்கையில்
என் மீதே எனக்கு கோபம் வந்தது.
அலைபேசி தொடுதிரையை தேய்த்து தேய்த்து, உலகத்தை சொந்தமாக்கி
அருகில் இருக்கும் உறவுகளையும், பாரம்பரியங்களையும் விலக்கி வைப்பது
என்ன மாதிரியான மனநிலை??
என யோசித்தபடியே அந்த ஊருக்குள் நுழைந்தோம்.
வீட்டிற்கு வெளியே குளிரூட்டப்பட்ட பெட்டியில் மெல்லிய புன்னகையுடன்
உயிரை விட்டிருந்தார் ரமேஷின் பெரியப்பா, உனக்கு மாமா முறை வருது பா என்றார் அருகில் இருந்த சித்தப்பா.
என்ன உறவு என்பதை கூட சரியாக கணிக்க முடியாமல் நிலவில் கால் வைத்து என்ன சாதித்து விடப் போகிறோம் நாம் என்ற எண்ணம் மேலெழ மாலையை சாத்தி விட்டு, சம்பிரதாயமாக கும்பிட்டு
பந்தலுக்கு கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம்.
அத்தனை யோசனைகளுக்கு பிறகும்
அமர்ந்த சில நொடிகளில், விரல்கள் பரபரவென அலைபேசி அசுரனை தேட
காரிலேயே அலைபேசியை மறந்து விட்டு வந்தது ஞாபகம் வந்தது. உடனே எழுந்து சென்றால் நன்றாக இருக்காது என மெதுவாக தலையை நிமிர்த்தி அங்கே குழுமி இருந்த உறவுகளை நோட்டமிட்டேன்.
ஓரிரு உறவுகளை தவிர யாரையுமே எனக்கு தெரியவில்லை. பெண்கள் அமர்ந்திருந்த வரிசையில் இருந்த அத்தையும் அத்தை மகளும் என் மனைவியை அருகில் அமர வைத்து
கொண்டார்கள். சிறுவயதில் பார்த்து பழகிய அத்தை பெண், அவளது மகனை அறிமுகப்படுத்திவிட்டு காபி கொண்டு வந்து தந்தாள்.
சித்தப்பாவை நிறைய பேருக்கு தெரிந்திருந்தது, அவரை வந்து நலம் விசாரித்த அனைவருக்கும்
என் அப்பாவின் பெயரை சொல்லி இவன் எனது அண்ணன் மகன் என்று பெருமையாக அறிமுகம் செய்து கொண்டிருந்தார்.
அப்பாவின் பெயரைக் கேட்டதும் பெண்கள் வரிசையில் முதலில் அமர்ந்திருந்த ஒரு வயதான அம்மா என்னை திரும்பிப் பார்த்து அருகில் அழைத்தது.
நானும் தயங்கியபடி மெல்ல அவரிடம் சென்றேன், கருணா மாமா பையனா டா நீ, என்று கேட்டபடியே என் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டது.
மாமா எப்படி இருக்காங்க? உடம்பெல்லாம் பரவாயில்லையா? கரெக்டா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறியா? ரொம்ப தங்கமானவரு அவரை பத்திரமா பாத்துக்கணும்னு உரிமையுடன் சொல்லி கன்னத்தை தடவி தந்தது.
முதல்முறையாக அந்த ஸ்பரிசம் எழுத்தில் சொல்ல முடியாத நெகிழ்வை தர, இனம் புரியாத ஒரு உணர்வு மேலோங்க ஏற்கனவே அமர்ந்திருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தேன்.
அந்த அம்மா யாரு தெரியுமா?? மெதுவாக என்னிடம் கேட்டார் சித்தப்பா. வழக்கம் போல நான் உதட்டை பிதுக்க, அவங்க தான் எங்க அத்தை பொண்ணு, ஒரு காலத்துல உங்க அப்பாவ தான் கட்டிக்குவேன்னு
ஒத்த கால்ல நின்னுது??
உங்க அப்பாக்கு நாட்டுக்கோழி முட்டை ரொம்ப பிடிக்கும்னு அது கோழி வளர்க்க ஆரம்பிச்சது. அந்த கோழி போடுற முட்டையில ஒன்னு கூட யாருக்கும் தராம வாராவாரம் உங்க அப்பாக்கு யார் மூலமாவது கரெக்டா கொடுத்து அனுப்பிரும். ஆனா எப்பயாவது எங்கேயாவது உங்க அப்பாவை பார்த்தா
ஒத்த வார்த்தை கூட பேசாம எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கும்.
அப்பாவும் இந்த பொண்ணு மேல
உசுரா இருந்தாரு. இவங்க ரெண்டு பேரும் பேசி நாங்க ஒரு முறை கூட பார்த்ததில்லை. ஆனா இவக ரெண்டு பேரும்தான் கட்டிக்குவாங்கன்னு
ஊர்ல எல்லாரும் அத்தனை தீர்க்கமா நம்பினோம்.
நிஜமாக எனக்கு புரியவில்லை, காதலித்த இருவரும் ஒருவரிடம் ஒருவர் ஏதும் பேசிக் கொள்ளவில்லை, அதிகமாக சந்தித்துக் கொள்ளவில்லை, இவர்களின் காதல் மொத்த ஊருக்கும் உறவுகளுக்கும் தெரிந்திருக்கிறது. ப்ரோபோசல் இல்லை,
டேட்டிங் இல்லை, அவுட்டிங் இல்லை
இன்னும் என்னென்னமோ எதுவும் இல்லை, அப்புறம் எப்படி என குழப்பத்துடன் கேட்டுக் கொண்டிருக்க
சுவாரசியம் குறையாமல் தொடர்ந்தார் சித்தப்பா.
அத்தை பொண்ணு தானேன்னு எங்க அப்பாவும் அம்மாவும் பொண்ணு கேட்க
போனாங்க. எந்த வசதி வாய்ப்பும் இல்லாம சர்க்கார்ல வாத்தியார் வேலை பார்க்கிறவனுக்கெல்லாம் எங்க பொண்ண தர முடியாதுன்னு ,
எங்க நிலத்துல கூலி வேலை பார்க்கிறவன் அந்த சம்பளத்தை வாங்குறான்னு அடிச்சு சொல்லிட்டாரு அவங்க அப்பா.
அந்த அம்மாவும் எவ்வளவோ போராடி பார்த்துச்சு, ஆனா முடியல, கடைசில அவங்க அப்பா பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கிட்டு, அவரும் கொஞ்ச நாள்ல இறந்து போக கஷ்டப்பட்டு தன்னோட ரெண்டு பசங்களையும் சொந்த கஷ்டத்துல ஆளாக்கி விட்டிருக்கு.
கதை கேட்ட பின் மீண்டும் ஒருமுறை அவரிடம் செல்ல வேண்டும் என எனக்கு தோன்ற, என் மனைவியை அழைத்துக்கொண்டு மீண்டும் அவரிடம் சென்றேன். அவர் என்ன நினைத்தாரோ என்னவோ, தன் சுருக்கு பையில் இருந்து
பழைய 100 ரூபாய் தாளை எடுத்து என் கைகளில் திணித்தார்.
இவ்வளவு கனமான நூறு ரூபாய் நோட்டை இதுவரை சுமந்திராத நான், மிகுந்த கவனத்துடன் அதை எடுத்து சட்டைப் பையில் தனியாக வைத்தேன். அப்பாவின் காதலை சுமந்து சென்று அவரிடமே தரும் பாக்கியம் அனைத்து மகன்களுக்கும் கிடைப்பதில்லை.
#பிரபுசங்கர்_க
படைப்பு சிறுகதைப் போட்டி - 2024 - பட்டியல்