logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

அய்யனார் ஈடாடி

சிறுகதை வரிசை எண் # 54


மூக்கம்மா பெரும்பூசணிக் கொடிகள் அப்பிய கூரையின் மேல் காயும் சல்லிக்கெண்டைகள் சிதறிய சில்லறைக் காசுகளாய் பலபலவென மின்னிக் கொண்டிருக்கின்றன. உடல் கனத்த கருப்பாயி தலைச்சுமையோடு நாணற்புற்களை விற்பதற்கு கிளம்பிவிட்டாள். ஒழவுகாளைகளை பத்திக்கொண்ட வேலுக்குடும்பன் பரம்படிக்க செல்கிறான். திருக்கையில கேப்பைகளை இடித்து திரித்து கொண்டிருக்கிறாள் மூக்கம்மா. வேலுக்குடும்பனுக்கும் கருப்பாயிக்கும் ரெண்டு பிள்ளை செத்த பிறகு மூனாவதாக பிறந்த பிள்ளைக்கு மூக்கு குத்தி மூக்கம்மா என்று பேரு வைத்திருக்கின்றனர். பழம் உதிர்க்கும் விலா மரத்தில் சடைப்பிடித்துக் கிடக்கின்றன விலாம்பழங்கள். மரப்பல்லிகள் கீச்சிட்டுக் கொண்டிருக்கும் வாசற்கதவினோரம் ஊசித்தட்டான்கள் மின் மினியாய் மின்னுகின்றன. மூக்கம்மா தங்கச்சி செவனியம்மா சாணிப்பாலால் அடுப்பங்கரையை தீட்டிக் கொண்டிருக்கிறாள். மணல்வெளிகளிலும் ஓலைகளிலும் மூக்கம்மாவின் கைவண்ணம் சிற்பியைப் போன்றிருந்திருக்கின்றன. மூனுவயதிலேயே மூக்கு குத்தி ,காது வளர்க்கும் மூக்கம்மா அஞ்சாவது படித்துக் கொண்டிருக்கிறாள். செவ்வானம் சுடர் விடும் விடியற்காலையில் சடங்காகிறாள் மூக்கம்மா. வேலுக்குடும்பன் வீட்டின் முன் ஊரார்கள் கூடிவிட்டனர் மூக்கம்மா சடங்கான சேதி அறிந்து. கருப்பாயும் வேலுக்குடும்பனும் பச்சையம் வீசும் வயல்வெளிகளில் உறுமிக் காற்று கொட்டடிக்க புற்றிலிருந்து வெளிவந்த ஈசலாய் சுற்றுகின்றனர். திண்ணையின் ஓர் மூலையில் கட்டிப்போட்ட பூனையைப் போன்று அடைபட்டு கிடக்கிறாள் மூக்கம்மா. பனங்கருப்பட்டிச் சில்லுக்களை நாவில் கரைத்துக் கொண்டு சுவைக்கிறாள். தண்டட்டியும் பதக்கஞ் சங்கிலியும் பூச்சரங்களும் சீரு சனத்தோடு மூக்கம்மாவின் வீடு நெரம்பி வழிகிறது. மூக்கம்மாவின் அம்மத்தா மொத தண்ணியை குலவை போட்டு ஊத்துகிறாள். ஊர்தெறிக்கிறது குலவை சத்தம். பாவாடை,தாவணி லவுக்கை, பதக்கஞ் சங்கிலியோடு வெள்ளரிப்பழமாய் மின்னுகிறாள் மூக்கம்மா. அஞ்சு பிள்ளைகள பெத்த வேலுக்குடும்பன் கருப்பாயிக்கு தலப் பிள்ளை மூக்கம்மா. கூட்டம் அலைமோதும் வேலுக்குடும்பன் வீட்டில் மூக்கம்மா சிங்கத்தைப் போன்றவள்‌. மூக்கம்மாவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர் உறவினர்கள். ஒரு வழியாக அய்யணக்குடும்பன் அழகத்தாவின் மகன் ஈடான் குடும்பனுக்கு ஒப்புக்கொண்டனர் வேலுக்குடும்பனும் கருப்பாயும். செவ்வாரஞ்சுப் பழத்தின் நிறத்தை போன்றும் வளசல் விழுந்த முதுகு கொண்டவன் ஈடான்குடும்பன். படைதிரண்டு வரும் மீன் குஞ்சுகளைப்போன்று அய்யணக்குடும்பன் அழகத்தாவின் வீட்டில் கூட்டம் நிரம்பி வழிகின்றன. பிச்சிக் கொடிகள் அப்பிய வீட்டுத் தாழ்வாரத்தில் தலைகீழாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது கீழ் வானம். மூக்கம்மாவும் ஈடான் குடும்பனும் இணை சேருகின்றனர். பூமலர்ந்த அரும்புகளில் மொய்க்கும் தேன்வண்டுகள் போன்று மொய்க்கின்றன சிறுபிள்ளைக் கூட்டங்கள். நெல்மூட்டைகள் அடஞ்சு கெடக்கும் பெரும் பரணியில் தொட்டு விளையாடும் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டு ஒலிப் பெருக்குகின்றன அந்தர இரவில். வானம் அலப்பிவிட்டுச் செல்லும் நீர்முத்துக்கள் புழுதிபடிந்த வாசலை கண்ணாடி போல் கழுவி விடுகின்றன. வெளக்கி வைத்த வெண்கல சருவபானையை போன்று மின்னிக் கொண்டிருக்கிறது தலவாசல். கேப்பைக் கறுதுகளை அள்ளி சொளகு போட்டுக்கொண்டிருக்கிறாள் மூக்கம்மா. ரெண்டு காதில் ஆடும் தண்டட்டி மார்பைத் தொட்டலைகின்றன. புங்கடி வயலில் ஒழவு ஓட்டிவிட்டு களைப்போடு வருகிறான் ஈடான்குடும்பன். மூக்கம்மாவின் வயிறு மேலெழும்பி ஊதிப்பழுத்த பொன்நிலவைப் போன்று இருந்தது. மூக்கம்மாவை இறுக்க கட்டியணைத்து முத்தங்களை அள்ளித் தெளிக்கிறான். மதிய வெய்யில் உரைத்துக் கொண்டிருக்கிறது கோடையின் உட்சம் தொடும் போது மூக்கம்மாவுக்கு தலப்பிள்ளை பொம்பள பிள்ளை வயிற்றுக்குள்ளே செத்துப் பிறந்தது. தலப்பிள்ளை செத்துப்போன சேதி கருப்பாயிக்கும் வேலுக்குடும்பனுக்கும் காதில் தட்டுகிறது. இந்தப் பாவிப்பய கடவுளுக்கு இறக்கம் இல்லையா என்று விக்கித் தவிக்கிறாள் கருப்பாயி. சோகம் சூழ்ந்த வீட்டில் இருளும் சூழ்ந்து கொண்டது. உச்சிக் கூரையில் மரப்பல்லிகள் கீச்சிட்டுக் கொண்டிருக்க கருப்பாயி கண்களை முழித்து முழித்து பார்த்து கைகளை எழுப்பி கும்பிடுகிறாள். தூக்கமற்ற வீட்டின் கொட்டத்தில் ஒழவு காளைகளும் எருமைகளும் சினைக்கிடாரிகளும் ஆழ்ந்து உறங்குகின்றன. ஈடான் குடும்பனின் கண்களில் கண்மாய்த் தண்ணியாய் கசிகிறது பிரிவினையின் சோகங்கள். ரெண்டு கைகளில் பிள்ளையை வாங்கிக் கொண்டு பிள்ளை தைக்கும் மேட்டிற்கு சென்று இறக்கி வைத்து, ஊரார்கள் மத்தியில் கரம்மை மண் புதைந்த மண்வெளியில் புதைத்து விட்டு வருகிறான் ஈடான்குடும்பன். தலப்பிள்ளய பறிகொடுத்த துயர் மூக்கம்மாவை விட்டு ஒரு மாதம் ஆகியும் பிரியவில்லை. பச்சிளங்குழந்தையாய் புங்கடி வயலில் நாற்றுகள் சிரித்தபடியே வளர்ந்தபடியிருக்கின்றன. காற்றுப் பிள்ளைகளைக் கண்ட மூக்கம்மா மனதைத் தேற்றுகிறாள். பரம்படித்துக் கொண்டிருக்கிறான் ஈடான் குடும்பன். கஞ்சி கொண்டு போன மூக்கம்மா ஓடவாய்க்காலில் சடாரென்று விழுந்தால் தென்னையில் இருந்து விழுந்த நெற்றைப் போன்று. சிதலமடைந்த சுற்றுச்சுவரை மண்குலைத்து தீட்டிக் கொண்டிருக்கிறாள் அழகத்தா. உப்புக்கரை படிந்து நன்னீரைக் கக்கிச் செல்லும் நகரும் நத்தையின் தடங்கள் பதியப்பட்டிருந்தது. கையசைத்து அலைக்கும் ஒட்டடைகள் அப்பிக்கெடக்கும் மொகட்டு ஓலையில் சிலந்திக்கூட்டங்கள் வலைப்பின்னிக் கொண்டிருக்கின்றன. யார் மழைக்கு மொத நனைவது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன மொகட்டு ஓலையும் சார் ஓலையும். திடீரென சார ஓலையைப் பார்த்து மொகட்டு ஓலை சிரிக்கத் தொடங்கி விட்டது. கூலப்பாம்புகள் தலைதூக்கி அடைகாக்கும் மொகட்டு ஓலை . கடை அடுப்பில் பொங்கி வழிகிறது கொதிநீர் உலை அரிசிக்காக. கனல் முற்றித் தீ எழும்பும் அடுப்பில் தணிந்துகொள்ளும் சுள்ளிகள் ஆறத் தொடங்கிவிட்டன. கொதிநீரில் மெது மெதுவாய் கலைகின்றன மூக்கம்மா விரல் சொடுக்கி போடப்பட்ட சுண்ணாம்புக் கோலங்கள். விடலைப் பருவக்கோழி கூட்டங்களை விரட்டிப் புணர்கின்றன கெழட்டு சேவல்கள். உச்சிக் கூந்தலை கிண்டிக் கொண்டிருக்கும் மூக்கம்மாவின் பூவிரல்கள், மெல்லிய மயிலிறகு போன்ற முடிகளை உதிர்த்து விடுகின்றன. ரெண்டாவது பிள்ள சனிஞ்ச மூன்று மாதத்தில் கரு கலைந்து விடுகிறது மூக்கம்மாவிற்கு. யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் வைத்து தைத்து பூட்டுகிறாள்.தாழ்ப்பா இல்லாத வீட்டினைப் பூட்டியது போன்று. நகக்கனுவிலே ஏறிய சேற்று மண்ணால் உலைபானையில் கைவைத்து இதமேற்றுக் கொண்டிருந்தாள் மூக்கம்மா. மருதாணியாய் பூத்துக் கிடக்கின்றன களையெடுத்த கைகள். மண்சட்டியில் குருணை அரிசி ஊறிக்கொண்டிருக்க மழை பிடிக்க தொடங்கிவிட்டது. ஆட்டுரலில் மழைநீர் வழிந்தோடுகிறது. பரணியில் தலைதொங்கும் பனியாரச்சட்டியில் அப்பிக்கிடக்கின்றன சிலந்தியின் எச்சங்கள். விட்ட மழை மீண்டும் சுழற்றியெடுக்கின்றன. நீர்பெருகிய குளத்தைப் போன்று வாசல் பெருகிவிட்டது. பிச்சிக்கொடிகள் தொங்கும் நிலையற்ற வீட்டு தாழ்வாரத்தில் ஊசிமழை குத்திக் கிழிக்கிறது. முடிவிரிக்கும் நடையெறும்புகள் கொடி அடுப்பின் அருகே கூதக் காய்ந்து கொண்டிருக்கின்றன. மூனாவதாக மூக்கம்மாவுக்கு பொம்பளை பிள்ளை பிறந்திருக்க,தாழை மணந் தத்தளிக்கும் கிருதுமா நதியருகே நடைபோட்டு வந்து கொண்டிருக்கிறான் ஈடான் குடும்பன். பொம்பளை பிள்ளை பெறந்த சேதியைக் கேட்டதும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கிறான். வேலுக்குடும்பனும் கருப்பாயிம் ,மூக்கம்மா நல்லபடியாக பொம்பளை பிள்ளை பெறந்த சேதியைக் கேட்டதும் உள்ளம் பூரிப்படைகிறார்கள். வெள்ளைக்காரன் கட்டி முடித்த பஞ்சுஆலையில் ஈடான் குடும்பனுக்கு வேலை கிடைக்கிறது. கிருதுமாநதியின் மணல்வெளியில் புதைந்து கிடந்த கூழாங்கற்கள் மேலெழும்புகின்றன. சுண்ணாம்புக் கற்களைப் போன்ற சிதறிக் கிடக்கின்றன மீன் முட்டைகள். புங்கடி வய பூத்துக் குலுங்குகின்றன படைதிரண்டு வந்திறங்கும் மைனாக்கூட்டங்களால். கதிர் அறுத்த தரிசு நிலங்களில் நடந்து தேய்ந்த மூக்கம்மாவினன் பாதங்கள் பலாவாய் பிளந்துகிடக்கின்றன. வெள்ளையருடன் நேரடித் தொடர்பு கொண்ட கொமாரசாமி அய்யருடன் நெருக்கமாகிறார் ஈடான்குடும்பன். கண்மாய்குள் வெளையும் கத்திரி பெரும் பூசணி பாவக்காய்களை கூடை கூடைகளாக அள்ளி இரைக்கிறான் கொமாரசாமி வீட்டிற்கு. ஊரார்களில் ஒவ்வொருவராக வெள்ளையர்களின் ஆலையில் வேலைக்குச் சேர்த்து விடுகிறான் ஈடான் குடும்பன். இருள்கோர்த்த பொழுதடைக்கப்பட்ட இரவில் மூக்கம்மாவின் அப்பன் வேலுக்குடும்பன் தவறிய சேதி வந்து விழுகிறது. மூக்கம்மாவின் ஒப்பாரிச்சத்தத்தில் ஊர்திரண்டு விட்டது. இரவோடு இரவாக கண்மாய்க்கரைப் பாதையில் உறவினர்களோடு போய்க்கொண்டிருக்கின்றனர். தண்ணி வத்திய கண்மாயில் மீன் கொச்சையும் சங்கஞ்செடியின் வாசமும் நாசியை அடைக்கின்றன. நிறை கண்மாய் வற்றி வற்றுப்பால் மாடு போன்று மடி வத்தி சொனங்கிப் போய் கெடக்கின்றன. குடமுடைத்து விட்டு வீடு திரும்புகையில் வேலுக்குடும்பன் நிழல்களாய் மூக்கம்மாவின் பின் தொடர்கிறார். வெண்கலச் செம்பு தழுவ நீர் வைத்து மூக்கம்மா மையத்தில் அமர‌ வைத்து ஒப்பாரியோடு மாரடித்துக் கொண்டிருக்கின்றன. குத்துரலில் கெழக்கே பார்த்தபடி கருப்பாயியை உட்கார வைத்து தாலிக்கயிற்றை அறுக்கையில் ஊர் தெறிக்கிறது ஒப்பாரி. வெயிலுவந்தானுக்கு நேர்ந்துவிட்ட சேவல் பெருத்து ஒலிக்கிறது. சோணைக்குடும்பனை கையில் பிடித்தபடி புல்கள் விக்க கிளம்புகிறாள் கனத்த கருப்பாயி. புற்களை அறுத்து கட்டு போடுகின்றனர் முருகக்குடும்பன் ,செவனியம்மா,ராக்கம்மா மூவரும். தரிசு நிலங்களில் ஆங்காங்கே தலை நீட்டிக் கொண்டிருக்கும் பச்சைவெளிகளில் முட்டி மோதுகிறது மாடுகள். அடுப்படியில் அடங்க மறுக்கிறது சோணைக்குடும்பனின் பசி. பச்சை மொச்சை பயறு வேக வைத்த தண்ணியை இறுத்து கருப்பாயி குடித்து விட்டு,பயறுகளை சோணைக்குடும்பனுக்கு கொடுத்து பசியாற்றுகிறாள் கருப்பாயி. பிஞ்சிறங்கிய மாமரத்தின் வடுக்களை தொட்டு விளையாடும் தெக்கித்திக்காற்று அலப்பி அலப்பி விட்டு உதிர்க்கின்றன வடுக்களை. வடுக்களை பெறக்கி முந்தாங்கியில் முடியும் மூக்கம்மாவின் புறமுதுகில் சொடுக்கி உதிர்கிறது வியர்வையின் முத்துக்கள். சாணிப்பால் மொழுகிய திண்ணையில் பனங்கருப்பட்டியின் வாடை தெறித்து ஓடுகிறது. அத்தக்குழி பனியாரத்தை கோனூசியில் குத்திப் பெயர்க்கிறாள் மூக்கம்மா. சுண்டிக் காய்கிறது செவலமறை மாட்டு நெய். கொரளி வித்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறது சாரைப் பாம்பு மலவாடைக்குள். அஞ்சு பிள்ளைக்கு பிறகு ஆறாவதாக மூக்கம்மாவுக்கு ஆம்பளப் பிள்ளை பெறக்க , கட்டற்ற வெளியில் ஒத்தக்கல் பீடமாய் ஊர்காத்து வரும் ஆதம்மாவுக்கு மாடவிளக்கு தீபக்கல் அடித்து வைக்கிறான் ஈடான் குடும்பன். அமாவாசை இரவு பூத்த நாளன்று கண்மாய்த் தண்ணி குதிரை ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.மீன்வாடையில் மிதந்து கொண்டிருக்கிறது களிங்கு மடை. பானைப்பொரியில் குவிந்து விழுகின்றன பல மீன் வகைகள். சாமக்கோழி கூப்பிடும் சட்டென்று முழிக்கிறான் ஈடான் குடும்பன். மெது மெதுவாய் ஊதிக்கொண்டிருக்கிறது சூரியப் பலூன். கடகா ஓலைப்பெட்டியில் எட்டுவைக்கிறான் ஈடான் குடும்பன் தலைச்சுமையோடு. தாழம்பூக்கள் இதழ்விரிந்த கிருதுமா நதிக்கரையில் ஓடவண்டுகள் மொய்க்கின்றன. சிறகில்லாத மின்மினி போன்று. பனியாரம் சுட்டுக்கொண்டிருக்கும் மூக்கம்மாவிற்கு தொடையிடுக்கினுள் இரத்தம் கசிந்தோடி பூமியைத் தொடுகிறது பொம்பளை பிள்ளை. கத்தரிக்காயும் கருவாடும் நெல்மூடைகளும் அடஞ்சு கிடக்கும் மூக்கம்மாவின் வீட்டில் இருள் மட்டும் சூழ்ந்திருந்தது. நிலத்தின் மடியில் முத்தமிடுகிறாள் மூக்கம்மாவின் எட்டாவது பிள்ளை . மொகம் ஈடானைப் போலவும் நெறம் மூக்கம்மாவைப் போலவும் இருந்தன. உச்சிக்கூரையில கருங்காலி கம்பு சொருகி தொட்டி கட்டிக் கொண்டிருக்கிறான் ஈடான் குடும்பன். பிள்ளையின் அழுகுரலில் பெருத்தொலிக்கிறது இசை. காணியல கருது வெளஞ்சு கெடக்கு ,கொடி அருகுகள் அப்பிய நடு வரப்பு மூக்கம்மாவின் உச்சிக் கூந்தலைப் போல இருக்கின்றன. தலைகுனிந்து தாள் பழுத்த செங்கதிர் மணிகள் முற்றிய காணியில் காற்றோடு பரவுகின்றன நெல்வாசம். சருவபானை தளும்பியோடும் கிணற்றடியில் முண்டியெழும்புகின்றன மண்புழுக்கள். ஆலம் விழுதுகள் கட்டியணைக்கும் கிணற்றில் ஆங்காங்கே துளிர்விடுகின்றனர் இளந்தளிர்கள். தொங்கியபடி கீச்சிட்டுக்கொண்டிருக்கின்றன மரப்பல்லிகள். வீச்சறுவா ,குடலுறலி,கருங்காலிக்கம்புகளை எடுத்துக் கொண்டு கத்தரிக்கும், கதிருக்கு காவலுக்கு கிளம்புகின்றனர் ஈடான் குடும்பனும் மூக்கம்மாவும். கைபிடித்த குழந்தையாய் பின் தொடர்கிறது வெண்ணிலவு. மின்மினிகள் படர்ந்து கிடக்கின்றன சங்கஞ்செடிக்குள். காதைப் பிளக்கும் நரியின் ஊலைச்சத்தம் பின் தொடர்கிறது. நாணல் புற்களை தலைப்பூவாய் சூடியிருக்கின்றன நடுக்கண்மாய் கத்திரநடுகை‌. வயிறு குலுங்கி பத்தாவதாக சின்னவனைப் பெற்றெடுக்கிறாள் மூக்கம்மா. பத்தாவது பெறந்த பாக்கியராசவேனு கொஞ்சிக் குலாவுகிறான் ஈடான் குடும்பன். புங்கடி வய ,காணி வய,நாற்றங்காலில் வெள்ளாமை வெளஞ்சு செல்வச்செழிப்போடுகின்றன சின்னவன் பிறந்த நேரத்தில். ராத்திரி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான் ஈடான் குடும்பம் வெள்ளையர்களின் ஆலைக்கு. காடியைச் சுற்றி மருவுகிறது பாலையா மொரட்டுக்காளை. பாலையானு கூப்பிட கொம்பை ஒசத்தி திமிலைச் சிலுப்பி செருமுகிறது. முகத்தை தடவி ஒரு முத்தத்தை கொடுத்து போயிட்டு வாரேன்டா பாலையானு சொல்லிவிட்டு கிளம்புகிறான் . ஒரு கொடங்கை வைக்கோலை போடப் போகும் மூக்கம்மாவிடம் சீறிப்பாய்கிறது பாலையா. யாருக்கும் அடங்கமறுக்கும் பாலையா காளை ஈடானுக்கு மட்டும் அடங்குகிறான். புழுதி கிளப்பும் நந்தவனத்தில் கத்திரிப் பிஞ்சிறங்கி முற்றத் தொடங்கி விட்டன காய்கள். ஈடான் குடும்பன் கையசைத்து மூக்கம்மாவை கூப்பிட்டு ஆடையுங்கோடையும் வெளச்சலுக்கு புங்கடி வயலும் , காணியும் கெடக்கு . வெறகுக்கு நாற்றங்காலில பத்து வண்டி தெற்கு விழும் நம்ம வாகையில. பிள்ளைகள வளர்த்துக்கோ ,கூலி வேலைக்கு யாரிடமும் போய் நிக்காதே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான் ஈடான் குடும்பன். சின்னவனை தூக்கி கொஞ்சிக் குலாவி முத்தத்தை அள்ளி தெளிக்கிறான். குளிர் முடிந்து கோடை பூக்கின்றன. ஈடான் குடும்பன் நந்தவனத்துக்கு கத்தரி காவலுக்கு போனவன் வீடு திரும்பவில்லை. தண்ணிக்கெணத்தில தண்ணியெடுக்கப் போன மக அய்யம்மா ,அப்பனை எழுப்பி விட்டிருக்கிறாள்‌. ராத்திரியில செவனாயி போட்டு அமுக்கி பயமுறுத்திவிட்டிருக்கிறாள். வீட்டுக்கு வந்து படுத்த ஈடான் குடும்பனின் மூச்சுக்காற்று பிரிகிறது. மூக்கம்மாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மூக்கம்மா ஒப்பாரியில் ஊர்திரண்டு விட்டனர். ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றன மீன்களும்,கருவாடுகளும்,புளியம்பழங்களும், தேங்காயும் மாங்காயும். வெற்றுத்திண்ணைகள் கெடந்த ஊருல கூட்டம் நெரம்பி வழிகின்றன. பாலையா காளையை தண்ணிக்கு விடப்போன சின்னப்பொன்னுவை குத்தி குடல் வெளிய தள்ளி வந்துவிட்டது. பாதி சனம் ஈடான்குடும்பனின் உடல் அருகில் அழுகின்றனர். பாதி சனம் காளை குத்தி குடல் தள்ளிய சின்னப்பொன்னுவின் அருகில் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கின்றனர். இரத்தம் மூக்கம்மாவுக்கு ஒரே நாளில் துயரங்கள் துரத்தி துரத்தி வருகின்றன. சின்னப்பொன்னுவை கட்டவண்டியில தூக்கி ஏத்தி வைத்தியத்திற்கு கொண்டு செல்கின்றனர் ஊரார்கள். ஒப்பாரி பெருத்தொலிக்கிறது ஊர்முழுவதும். மணல்வெளிகள் பரந்த கிருதுமா நதிக்கரையில் ஈடான் குடும்பன் நிம்மதியாக உறங்கச் சென்று விட்டான். கூடுகளை இழந்த பறவையைப் போலவும் குஞ்சுகளை இழந்த தாய்ப்பறவையை போலவும் அடுப்படியில் அனாமத்துக் கிடக்கிறாள் மூக்கம்மா. ஈடான் குடும்பன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகள் ஒவ்வொரு நாளிகையும் இதயத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது மூக்கம்மாவுக்கு. அய்யம்மா டீச்சர் வேலைக்கு தேர்வாகிறாள். பத்துப்பிள்ளகளை பெத்து அதிலு தளைச்சு நின்ற அஞ்சுபிள்ளைகளையும் வளர்த்தெடுக்கும் மூக்கம்மா தையிரமானவளே. விடியக்காலம் பனியாரத்தோடு இட்லிக் கடை போடும் மூக்கம்மா. இதர நேரங்களில் புல்கள் அறுத்து விற்கச் சென்று பிழைப்பு நடத்துகிறாள். கைம்பெண்ணாக குடும்பத்தை நடத்துவது கொடிதிலும் எவ்வளவு கொடிது. சோணைக்குடும்பனுக்கு அய்யம்மாவை கை சேர்த்து வைக்கிறாள் மூக்கம்மா. நாற்றுக்குழந்தையாய் இருந்ந சின்னவன் பூக்கும் மரமென வளர்ந்து விட்டான். தனத்தா கெழவியின் நவா மரத்தில் லவாப் பழங்கள் இடம் தெரியாமல் சிதறிக் கிடக்கின்றன. லவா மரத்தில கொறவன் இருக்கான் என்றும் யாரும் அந்தப் பக்கம் போகாதேங்க ,மீறிப் போனா கொறவன்‌வெரட்டுவான் என்றும் பேச்சிக்கெழவி சொல்லிவிட்டு செத்திருக்கா. நிலவின் வெளிச்சம் பூத்த இரவில் சின்னவன் திண்ணையில் உறங்கிக் கொண்டிருக்கிறான். மொனவெட்டிக் கெழவன் வந்ததும் திண்ணையில யாரும் படுக்காதேங்கடா மாசி பச்சை வருது , வீட்டுக்குள்ள போய் படுடா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஆழ்ந்து ஒறங்கிக் கொண்டிருக்கிறான் சின்னவன் . கனத்த ஆளு காதில் கடுக்கண் தலையில் கீரிடம் வைத்து மன்னரைப் போன்ற தோற்றத்தில் வந்தவன் சின்னவனைக் கண்ணைப் பொத்தியிருக்கிறான். சட்டென்று சின்னவன் முழிக்க பக்கத்தில் யாரும் இல்லை போல தெரிகிறது. சாமக்கோழி பெருத்தொலிக்கும் சிவராத்திரி பொழுது. வெதப்பு கொண்டு போன சின்னவனின் ஒலப்பெட்டி ஒத்தப்பனை தாண்டி போகையில் கொட்டிச் சிதறுகின்றன. சிதறிய நெல்மணிகளை அள்ளிக்கொண்டு போய் வெதப்பு கொடுத்துவிட்டு ஈடாடி அய்யன் காலில் விழுந்து விபூதியை அப்பிக் கொண்டு வந்து படுத்தவன் தான், ராத்திரியில எழுந்து பல பாஷைகளை பேசுகிறான் . மூக்கம்மாவுக்கு ஒன்றும் வெளங்கவில்லை. அம்மிக்கல் ,குளவிகளை தூக்கி ஆட ஆரம்பித்து விட்டான். சோணைக்குடும்பனுக்கு சேதி சொல்ல கண்மாய்க்கரை பாதை வழியாக வண்டினங்கள் போன்று ஊர்ந்து செல்கின்றனர் ஊரார்கள். மூக்கம்மாவுக்கு இந்த கெதியா வரனும் என்று ஊரார்கள் கசிகின்றனர். புதுக்கோட்டை கோடாங்கிக்கு அழைப்பு விடுத்து கூட்டி வருகின்றனர் ஊரார்கள்,மொதல் அடியிலேயே உடுக்கை உடைந்து விட்டது. பல பல கோடாங்கிகளை அழைத்து வந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை‌ . சின்னவனை கட்டுப்படுத்த முடியவில்லை. குளவிக்கல்லோடு கூரமேல போய் ஒக்கார்ந்து கொண்டு பல பாசைகளை பேசும் சின்னவனை, ஊரார்கள் கிறுக்குப் பயவென்று எள்ளி நகையாடினர். பொழுதடைஞ்ச மாலையில் ஒரு சனம் வெளிய வராது . கதவை சாத்திக்கொண்டு வீடுகளை விட்டு யாரும் வெளிவருவதில் லை. ஏழுபானையை வைத்து ஏழாவது பானையில் பொங்கல் பொங்குகிறது. சின்னவன் ஆடிக்கொண்டு எருமைக்கெடா பலி கேட்டுக்கொண்டிருக்கிறான். மூக்கம்மா இரு கைகளையும் கூப்பி அழுதபடியிருக்கிறாள். ஆட்டுக்கெடா கொடுத்தா பலி ஏத்துக்கிருவயா என்று சோணைக்குடும்பன் கேட்க தலை ஆட்டுகிறான் சின்னவன் ஒடம்பில் இறங்கியாடும் மணிக்கொறவன். வெண்கலச்செம்பு தளும்பும் மஞ்சள் நீரை மூக்கம்மா ஊற்றுகிறாள் கெழக்கு பார்த்த கெடாவின் மேல். உடலைச் சிலுப்பி ஆடு குலுங்கியதும் ஆட்டுச் சங்கை கடித்து உதிரம் குடிக்கும் சின்னவன் ஒரு சொட்டு கூட சிதற விடவில்லை. மணிக்கொறவன் என்றும் மணியக்கம்பன் என்றும் தான் வந்த வரலாற்றை அள்ளி தெளிக்கிறான் சின்னவன். இருபத்தொரு தேசத்தில இருப்பதாக சொல்கிறான். வெவ்வேறு பாசைகளில் வெவ்வேறு உருவத்தில் இருப்பதாக சொல்கிறான். சோணைக்குடும்பனுக்கு மட்டும் தான் அடங்கிப் பணிகிறான் சின்னவன். சோணைக்குடும்பன் பற்பல மாந்திரீகவாதிகள் ,கொரளிவித்தைகள் கொண்டு வந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை. மூக்கம்மா கோபத்தில வசைபாட , சின்னவன் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி விட்டான். வெள்ளையர்கள் முதன் முதலில் அமைத்த உயர் மின்னழுத்த கோபுரத்தில் மின்சாரம் பாய்ந்தோடுகின்றன. மூக்கம்மா அழுது புலம்புகிறாள், ஊரார்கள் கூடிவிட்டனர் வண்ணாந்தரை மின்னழுத்த கோபுரத்தில். ஒரு மணி நேரங்கழித்து கீழிறங்கும் சின்னவன் ஆளுயர நெருப்பை வளர்க்க சொல்கிறான்.மூக்கம்மா என்ன செய்வாள் ,அழுது அழுது கண்கள் சிவந்து சிறுத்து சுனங்கி விழுகிறாள். நெருப்பில் இறங்கி இருபது நிமிடம் நிற்கும் மணிக்கொறவன்,பல பாஷைகளில் பேசிவிட்டு ஒங்க பாசையிலை பேசுகிறேன் என்று பேச ஆரம்பிக்கிறான். உலகத்தில் இருபத்தொரு தேசத்தில இருப்பதாக சொல்கிறான் . மணியகம்பன் என்கிறான் ஒலகமணி என்கிறான். கிறுக்குப் பயவென்று எள்ளி நகையாடிய ஊரார்கள் சின்னவன் காலில் விழுந்து விபூதி வாங்கிச் செல்கின்றனர். வறுமையும் ஏழ்மையும் மூக்கம்மாவை விடாது துரத்திய போதும் கைம்பெண்ணாக குடும்பத்தை ஆலமரமாய் வளர்த்தெடுக்கிறாள். பதக்கஞ்சங்கிலி கழுத்தில் மின்னிச்சிதற , தண்டட்டி தொட்டு ஆடி அலைய வீரநடைபோடும் மூக்கம்மா தொண்ணூற்றாறு வயதில் மூச்சை நிறுத்திக் கொண்டாள். கிருதுமா நதி மேட்டின் கட்டற்ற வெளியில் அசந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள் மூக்கம்மா இன்றும். அய்யனார் ஈடாடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.