logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

Thisai sankar

சிறுகதை வரிசை எண் # 42


எங்கேயோ கேட்ட பாடல்: வாழைகளுக்குத் தண்ணீர் பாய்ப்பதற்காகச் சென்ற சுப்புவின் வேலையை மேகங்கள் செய்து கொண்டிருந்தன. மெல்ல விழும் தூறலில் சைக்கிளை வேகமாக ஓட்டியபடி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது லாரி ஒன்று பாடலை ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தது. செல்லும் வேகத்தில் சில வரிகள் மட்டும் காதில் கேட்டன. அந்தப் பாடலை இதற்கு முன் எங்கோ கேட்டதாக ஒரு ஞாபகம். ஆனால், எங்கே என்று தெரியவில்லை. திடீரென நெஞ்சில் ஒரு சலனம். எப்படியாவது அந்தப் பாடலின் முதல் வரியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் சைக்கிளை வேகமாக ஓட்டினான். தூரத்து சிக்னலில் லாரி நின்று கொண்டிருந்தது. சீட்டில் உட்காராமல் நின்றபடியே ஓட்டி வேகமாக அந்த சிக்னலுக்குச் சென்றான். பாவம். அதற்குள் அந்தப் பாடல் முடிந்து வேறு பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடலின் முதல் வரியைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் லாரி டிரைவரிடமே கேட்க முடிவெடுத்தான். அதற்குள் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்து லாரியும் புறப்பட்டது. கடைசியாகக் கேட்ட வரிகளை முணுமுணுத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான். வீட்டுக்கு வந்ததும் யாரிடமும் பேசாமல் முதல் வரியை யோசித்துக் கொண்டே இருந்தான். "என்னங்க! வந்ததில இருந்து இப்டித் தலையக்கூடத் தொவட்டாம என்னத்த புதுசா ரோசன பண்ணிட்டு இருக்கிய?" என்று கேட்டாள், செல்வி. "அது ஒன்னுமில்லடி வர்ற வழியில ஒரு பாட்டோட எடவரிய மட்டும் கேட்டேன். அதுலேர்ருந்து மனசு ஒருமாதியா இருக்கு. அதோட மொத வரிய மட்டும் கண்டுபிடிக்கவே முடியல". "நீங்க இருக்கத பாத்தா, நா கூட ஏதோ நீங்க வுட்ட கப்பல்தான் கவுந்துட்டுன்னு நெனச்சேன்" என்று கிண்டலடித்தாள். "உன் கிட்ட பேசுனா எனக்குத்தான் தலவலி. பாட்ட கண்டுபிடிக்குற வரைக்கும் கொஞ்சம் எடஞ்ச பண்ணாம இருக்கியா" "சரி.. சரி.. நீங்க என்னமும் பண்ணுங்க. அதுக்கு முன்னாடி, மரத்துல ரெண்டு முருங்கக்கா மட்டும் பறிச்சுத் தாங்க. கருவாட்டுக் கொழம்பு அப்போதான் ருசியா இருக்கும்." "நான் எதப் பத்திப் பேசிட்டுருக்கேன், நீ எதப் பத்திப் பேசிட்டு இருக்க? இந்தப் பாட்டு எவ்ளோ முக்கியமான பாட்டுன்னு தெரியுமாடி? எங்க அம்மா, நான் சின்ன வயசுல இருக்கும் போது பாடினாங்க. அவுங்க போனதுக்கப்புறம் இப்போதான் இத கேக்கேன்" மனசுக்குள் சுப்புவைத் திட்டிக் கொண்டே கொடியில் இருந்து துண்டை எடுத்து வந்து சுப்புவின் தலையைத் துவட்டி விட்டாள், செல்வி. "சரி..சரி...இதுல என்ன கஷ்டம் இருக்கு? நீங்க எந்த வரியக் கேட்டியளோ, அத சொல்லுங்க. நான் மொத வரியச் சொல்லுதேன்". "ஆமா என்னாலேயே முடியல, இவா அந்தால சொல்லிக் கிழிச்சுருவா பாரு" என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த வரிகளைச் சொல்லிக் காட்டினான். "ஜில் என்னும் குளிர் காற்று வீசும்; மெளனமே தான் அங்குப் பேசும்" அவள் மௌனமாக இருந்தாள். வாய்க்குள் அந்த வரிகளை முணுமுணுத்தபடியே இருந்தாள். "ஆமாங்க எனக்கும் இத எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு." "ஏன் உன் அம்மையும் சின்ன வயசுல இருக்கும்போது பாடுனாளாக்கும்?" என்று கிண்டலடித்தான். "சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க!… இது எம்ஜியாரும் லதாவும் ஆடுற பாட்டு. எனக்கு நல்லா ஞாவகம் இருக்கு." "ஞாவகம் இருக்குன்னு சொல்ற, ஆனா வரிய சொல்ல மாட்டங்கிய". "அதுதான வரமாட்டுக்கு. சரி இதுல உப்பு சரியா இருக்கான்னு பாருங்க" என்று குழம்பின் சில துளிகளை உள்ளங்கையில் ஊற்றினாள். "பாட்ட கண்டுபிடிக்காம ஒரு துளி கூட நாக்குல படாது. உன் கருவாட்டுக் கொழம்ப நீயே சாப்டு. நான் 'கேசட் குமார்' வீட்டுல போய் ஒரு தடவ விசாரிச்சிட்டு வாரேன்" என்று வெளியேறினான் சுப்பு. டேய் குமாரு! டேய் குமாரு! "ஏங்க! குமாரு இருக்கானா?" "இல்லங்க! அவுரு பக்கத்து ஊரு முத்தாரம்மன் கோவில்ல செட் போடப் போயிருக்காரு. வர்றதுக்கு ரெண்டு நாளாகும்" என்றாள், குமாரின் மனைவி. என்ன செய்வதென்றே தெரியாமல் பேய் அறைந்தது போல் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். மீண்டும் அந்தப் பாடல் தூரத்தில் கேட்டது. பக்கத்தில் வர வர யாரோ பாடுவது போல இருந்தது. அந்தப் பாடலில் அப்படி ஒரு கருவாட்டு வாசனை. சிரிப்பாணியோடு வீட்டுக்கு வந்தான். "ஆமா.. எப்டிக் கண்டுபிடிச்ச?" "அதெல்லாம் சொல்ல முடியாது.. நான் சாப்ட போறேன்.. நீங்க வாரீங்களா? இல்லையா?" இரண்டு தட்டில் சோறு போட்டு, குழம்பு ஊற்றினாள். "அந்த நல்லி எலும்ப எடுத்து வையு" "ஆ…என்ன சொன்னீங்க" "அதான்டி ரெண்டு முருங்கைக்காய வையுன்னு சொன்னேன்" "வாயக் கிளராதீங்க, சத்தம் போடாம சாப்பிடுங்க. நான் பறிச்சுக் கேட்டப்போ தராம ஓடிட்டு, இப்போ வந்து எலும்ப கொண்டு வான்னு கேட்டா எப்டி வரும்?" சுப்பு கொஞ்ச நேரம் அவளை உற்றுப் பார்த்தான். 'கேசட் குமாரி'ன் வீட்டுக்கு அவன் சென்று வருவதற்குள் செல்வி, குளித்து முடித்து நெற்றியில் பொட்டு வைத்திருப்பதை அறிந்தான். அவள் பாட்டை அறிந்த முறையை அவன் தெரிந்துகொண்டான். மெல்லிய சிரிப்பில், அந்தக் கருவாட்டு நாத்தத்தோடு அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். அப்போது அவளது கை, ரிமோட்டில் தெரியாமல் பட்டு "குடியிருந்த கோயில்" படத்திலிருந்து அந்தப் பாடல் ஒலித்தது.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

  • அ. வேளாங்கண்ணி Avatar
    அ. வேளாங்கண்ணி - 2 years ago
    ரசனையான கதை, கடைசி வரைக்கும் என்ன பாட்டுனு சொல்லவே இல்லையே.. "பொட்டு வைத்த முகமோ?" பாடலா?