logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

சேலம் சுபா

சிறுகதை வரிசை எண் # 325


படைப்பு சிறுகதைப்போட்டி - 2023 தலைப்பு .வாடை.. வீடெங்கும் மணந்த சைக்கிள் பிராண்ட் அகர்பத்தியின் ரோசாப்பூ மணத்தையும் மீறி என் நாசியில் நுழைந்தது பிணம் எரிக்கப்பட்ட விறகுகளின் கருகல் மணம். மிக லேசாக என்றாலும் என்னால் அதை நன்கு பிரித்து உணரமுடிகிறது . சுடுகாட்டின் அருகே மலிவான விலையில் கிடைத்தது என்று நிலத்தை வாங்கியதுடன் என் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது இங்கேயே வீட்டையும் கட்டி குடி வைத்த கணவரை கரித்துக் கொட்டினால் மட்டும் மாறவா போகிறது .. எங்கள் வீட்டுக்கும் சுடுகாட்டுக்கும் இடையில் முப்பது அடி தூரமாவது இருக்கும்.. ஒரு வேளைஎன் கணவர் சொல்வதுபோல் சுடுகாட்டின் நினைவு என் எண்ணத்தில் அழுந்தப் பதிந்து விட்டதால்தான் அந்த மணமும் வருகிறதோ என்றும் நினைப்பதுண்டு. அக்கா அக்கா வீட்டுல இருக்கீங்களா ? அட மீனா ...கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்தேன் . பரவாயில்லைக்கா ..வெளியவே இருக்கேன் .. என்ன இப்பதான் எரிச்சியா ? ஆமாம்கா ..அங்க இருந்தா மனசு என்னமோ பண்ணுது ..அதான் அக்காவப் பாத்து பேசிட்டுப் போகலாமுன்னு வந்தேன் ..ஏக்கா வேலை எதுவும் இருக்கா ? இல்லை சீதா..இனி நைட்டு டிபன் தானே ? இரு உனக்கு கொஞ்சம் காப்பி போட்டு எடுத்துட்டு வரேன் .. அவளின் அனுமதிக்கு காத்திராமல் சமையல் கட்டுக்கு சென்று ஸ்ட்ராங்காக காப்பியைக் கலந்து எடுத்து வந்து அவளிடம் தந்தேன் .அதை வாங்கி உறிஞ்சியவளின் முகத்தில் பரவிய நிம்மதியான ஆசுவாசம் எனக்கு பெருமகிழ்வைத் தந்தது . சொல்லு மீனா ..இன்னிக்கு என்ன சம்பவம் ? பத்து வயசு கூட ஆகாத பச்ச மண்ணுக்கா..இரண்டு கயவாளிப் பசங்க அது உடம்பக் குதறி ..ச்சே ..மனுசங்களா அவனுங்க ..நரகத்துல கூட அவனுகளை சேர்த்தாம வெச்சு வெச்சு சித்ரவதை செய்யணும் ..முடியலக்கா ..அந்தக் குழந்தையோட பெத்தவங்க கதறுன கதறல் இன்னும் கண்ணுக்குள்ளயே நிக்குது .பாவம் ..கேடுகெட்ட ஜென்மங்க.. மீனாவின் வார்த்தைகளில் இருந்த கனலின் வேகம் தாளாமல் கண்களில் இருந்து நீர் வழிந்தது . கேட்ட எனக்கும் நெஞ்சில் தீப்பொறி பற்றியது . கேட்கவே கூசுது மீனா.. பொண்ணோட உடம்புனா வெறும் ரப்பர் பொம்மையா நினைக்கிறானுங்க அயோக்கியனுங்க.. அவனுங்க இச்சைக்கு அப்பாவிப் பிஞ்சுகளை பலியாக்கி பெத்தவங்களை கதற விடறானுங்க..இவனுங்கள எல்லாம் கண்டதும் சுடணும்னு சட்டம் போடணும்..சரி சரி ..இதையே நினைச்சு உடம்பக் கெடுத்துக்காத..போய் குளிச்சிட்டு ஆகவேண்டியதப் பாரு .. ஆமாக்கா.. நாம இப்படி ஒருவருக்கொருவர் பேசி ஆத்திக்கறத விட வேறென்ன கிழிக்க முடியும் ? சாரிக்கா நா வேற அப்பப்ப இப்படி உங்க கிட்ட வந்து புலம்பறேன் ..நீங்க படிச்சவங்க புரிஞ்சிப்பீங்கனுதான்.. அட என்ன மீனா ..நீ எப்ப வேணா இங்க வரலாம் ..என்கிட்டே பேசலாம் ..நான் என்னிக்கும் தப்பாவே நினைக்க மாட்டேன் .. ரொம்ப சந்தோசம்கா..நா போயிட்டு வரேன்.. அவளை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவளுக்கு மீனாவின் அறிமுகம் கிடைத்த நாள் நினைவில் ஆடியது. பதினைந்து வருடங்கள் முன் இந்தப் புது வீட்டுக்கு குடி வந்த புதுசில் பால்கனியில் வேடிக்கை பார்த்த போது ஒரு சிறுமி வயது பதினான்கு பதினைந்து இருக்கும்..தன் பாட்டியுடன் இறந்தவர் பயணிக்கும் சொர்க்க ரதம் எனும் பிணந்தூக்கி வண்டியை சிறு கைகளால் இழுத்து வந்து கொண்டிருந்த காட்சி அடிக்கடி கண்களில் படும் . அந்த ஏரியாவுக்குப் புதுசு என்பதால் நான் அதிகம் வெளியே வரத் தடையுத்தரவு போடப்பட்டிருந்தது .எல்லாமே இவரே போய் வாங்கி வந்துடுவாரு .ரொம்ப அத்திப்பூத்தாற் போன்று வெளியே வருவேன்..அப்படி வரும் சமயங்களில் எல்லாம் அந்தப்பெண் மயானத்தின் ஏதோவொரு கல்லறையில் அமர்ந்து வடையை சாப்பிட்டவாறோ அல்லது டீயைக் குடித்தவாறோ அவள் பாட்டியுடன் அமர்ந்து தாயம் விளையாடிக்கொண்டு இருப்பாள் . என் பொண்ணு வயசு இருக்கும் இந்த சிறு பெண் பிணவண்டியை இழுக்கிறாளே எனும் ஆதங்கம் எனக்குள் இருந்ததால் அவளைப் பார்க்கும்போது ஆறுதலான புன்சிரிப்பை வழிய விடுவேன் .அவளும் கண்களால் புன்னகைப்பாள் . ஒரு நாள் அவசரமாக நான் கிளம்பிய தருணத்தில் என் வண்டி மண்ணில் சறுக்கி வண்டியைப் போட்டு நான் விழ..அந்த சமயத்தில் அங்கு வந்த சீதாதான் மயங்கிய எனக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து சோடாவைத் தந்து என்னை பத்திரமாக வீடு கொண்டு வந்து சேர்த்தாள். என்னோடு என் வண்டியையும்.. அதன் பின் ஆரம்பித்தது எங்களுக்குள் நெருக்கம் .இது ஏதோ ஆதிகால பந்தம் போல் இருவருக்குள்ளும் ஒரே அலைவரிசையில் பல வாதங்கள் விவாதங்கள் ..என்னவரும் “சுடுகாட்டுல வேலை செய்யும் அந்தப் பொண்ணை வீட்டுக்குள் விடுகிறாயே இது நல்லாவா இருக்கு ?” என்று ஒருநாள் பொறுக்கமுடியாமல் கேட்டார் . கேள்விக்கு பதிலைத் தந்தால்தானே அங்கு வாக்குவாதம் வரும் வாய்ப்பு இருக்கிறது ..அமைதியாக நகர்ந்து விடுவேன் நான் அதையே பிடித்துக் கொண்டு தொங்கும் அளவிற்கு அவரும் பக்குவமற்றவர் அல்ல அதே சமயம் அடங்கிப் போகும் அளவுக்கு நானும் சுதந்திரமற்றவள் அல்ல என்பதால் அங்கு மீனாவை பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. உண்மையில் நான் எது செய்தாலும் அதில் ஒரு நியாயமிருக்கும் என்பதால் அவர் அதிகம் என் விசயத்தில் தலையிடவும் மாட்டார் . மீனா அவ்வப்போது என் வீட்டுக்கு வருவதும் நான் தரும் இனிப்புகளையோ அல்லது பலகாரங்களையும் சாப்பிடுவதும் அவளும் நானும் சற்று நேரம் பேசிக் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது , இருந்தது, எப்போதும் இருக்கும்.. ஏனெனில் எங்கள் வீடும் சொந்த வீடு அந்த மயானமும் அந்த பாட்டிக்கு சொந்தமான இடம் என்பதால் அங்கேயேதான் இருக்கும். சீதாவிடம் பேசிக் கொண்டிருந்த போது தான் தெரியும் அந்த பாட்டி அவளின் சொந்த பாட்டி அல்ல வளர்ப்பு பாட்டியே என்பது.. அவளின் அப்பா குடி போதைக்கு அடிமையானதால் ஒரு சண்டையில் அவள் அம்மா சும்மா மிரட்ட உடலில் தீ வைத்துக் கொளுத்திக் கொண்டதாகவும் உண்மையாகவே தீப்பற்றிக்கொண்டதால் அலறலுடன் தீப்பற்றி எரிந்த தாயை நேரில் கண்ட வேதனை இன்னும் அவள் மனதை விட்டு அகலமாக இருந்ததையும் தெரிந்து கொண்டேன். 12 வயதில் ஒரு பெண் குழந்தை எதிரில் அவள் தாய் கதறியபடி எரிந்தால் எப்படி இருக்கும் மனநிலை? அக்காவோ திருமணமாகி வேறு வீட்டுக்கு சென்று விட்டாள் .அப்பாவோ காவலர் பிடியில் , இவளின் கதி? இவளை யார் பார்த்துக் கொள்வார்கள்? சிறிது காலம் அக்காவின் வீட்டுக்கு இவள் போக , அந்த நேரத்தில் அக்காவின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு இந்த கோவிந்தம்மா பாட்டி வரவும் விதி விளையாடியது . அங்கே இருந்த சீதாவைப் பார்த்து அந்த சிறு வயதிலும் பொறுப்பான அவளின் வேலைகள் பிடிக்க இப்படி ஒரு மகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சீதாவின் அக்காவிடம் கேட்க விட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்த அவள் அக்காவும் மாமாவும் சரி என்று தலையாட்ட பாட்டி அவளை கூட்டிக் கொண்டு வந்து விட்டார். உண்மையிலேயே உண்மையான பாட்டியை போன்ற பாட்டியின் அன்பான அரவணைப்பு சீதாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவள் அம்மா இறந்த துக்கத்தை மறக்க உதவியது . பாட்டியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள் பதினைந்து வயது சீதா. நாட்கள் செல்ல செல்ல தான் மட்டும் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்து வயிறு வளர்க்கிறோமே என்ற உறுத்தல் அவள் மனதிற்குள் வர அவளே பாட்டியிடம் சென்று “ இனி நான் தான் உங்கள் சுடுகாட்டில் பிணம் எடுப்பேன்” என்று சொல்லி அந்த பாட்டியுடன் அவளும் கூட வந்தாள்.. .பாட்டியின் இரண்டு மகன்களும் குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் இருந்ததால் முழுக்க முழுக்க மயான பொறுப்பு அனைத்தும் பாட்டியின் பொறுப்பில் இருந்தது. மீனா கேட்டதும் முதலில் நீ சிறு பெண் இன்னும் சிறிது நாட்களாகட்டும் என்று மறுத்த கோவிந்தம்மா பாட்டி அவளின் துடிப்பையும் ஆர்வத்தையும் கண்டதும் “”சரி வா என்று அழைத்து நல்லதொரு நாளைப் பார்த்து பிண வண்டியை எடுக்கும் பொறுப்பை தந்தாள். ஒரு பக்கம் பாட்டி இழுக்க ஒரு பக்கம் மீனா இழுக்கத் தொடங்கினாள் இதுதான் சுடுகாட்டில் பணி செய்யும் பெண்ணாக மீனா உருவெடுத்த கதை. இந்த கதையை கேட்டதிலிருந்து அவள் மீதான அந்த ஆதங்கமும் பாசமும் இன்னும் அதிகமாகி விட்டது எனக்கு. இப்படி ஒரு பொறுப்பான பெண் உள்ள பெற்றவர்கள் எப்படி அபபடி நடந்து கொள்ள முடியும் என்று தோன்றும். இந்த மது போதை தான் ஒரு குடும்பத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது? தகப்பன் மதுவுக்கு அடிமை ஆனதால் தற்கொலையை நேரில் பார்த்த சிறுமி பாவம்.. ஒரு மீனாதான் இங்கு இன்னும் எத்தனை மீனாக்கள் வேதனையில் செய்வதறியாது உழன்று கொண்டிருக்கிறார்களோ என்ற எண்ணம் எனக்கு தோணும். கோவிந்தம்மா பாட்டி போல் அனைவரும் ஆதரவற்ற குழந்தைகளை தங்கள் குழந்தைகளாக பார்த்துக் கொள்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியமாகவே தெரிந்தது. இதில் மீனா சமூக சேவையிலும் ஈடுபாடு கொண்டு சாலையோர மக்களுக்கு உணவளிப்பது, மரக்கன்றுகளை நடுவது போன்ற பணிகளை செய்து கொண்டிருந்தாள். அதோடு யாருற்ற பிணங்களை எரிக்கும் பொறுப்பையும் தானே ஏற்று அரசு மற்றும் சமூக அமைப்புகளிடம் இருந்து வரும் பிணங்களை அடக்கம் செய்து மகிழ்வாள் .அநாதை எனும் வார்த்தையைக் கூட அவள் விரும்பமாட்டாள் .அவர்கள் ஆத்மா சாந்தியடைய அவர்களின் மகளாக சகோதரியாக நான் இருக்கிறேன் என்பாள். . இப்படி வரும் ஆதரவற்ற பிணங்களில் பலதும் மனதை உருக்கும் கதைகளை அடக்கியே வரும். பாலியல் துன்புறுத்தலால் இறந்த பிஞ்சு குழந்தை, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட வயதான முதியவர் போன்ற எண்ணற்ற மரணங்களை எரித்து அதை பற்றிய விவாதங்களை மேற்கொள்வாள் மீனா . நடு இரவிலும் சுடுகாட்டுக்கு வந்து செல்லும் மீனாவைப் பார்த்து நான் கூட கேட்பதுண்டு “உனக்கு பயமே இல்லையா ?” என்று .எனக்கா எரிய எரிய என் அம்மாவைப் பார்த்தவள் அக்கா நான் எனக்கு பயமா ? என்று வேதனையுடன் சிரிப்பாள். இதோ காலங்கள் தான் எவ்வளவு வேகமாக ஓடுகின்றது அந்த 15 வயது மீனா இப்போது 26 வயதுக்கு மேல் ஆகி வளர்ந்து நிற்கிறாள். என் பெண்ணுக்கும் இவள் வயது என்பதால் திருமணம் முடித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி விட்டேன்.. திருமணத்தில் கூட மீனாவின் பங்களிப்பு மிகப்பெரியதாக இருந்தது. வருபவர்களுக்கு வழி சொல்லியும் அவர்களை அழைத்து போய் சாப்பிட வைக்கவும் என பெருமளவில் எனக்கு உதவியாக இருந்தாள். அவளை பார்த்தவர்கள் அங்கு முகம் சுளித்தாலும் அதை கண்டு கொள்ளாமல் எனக்காக என் வீட்டில் வந்து வேலை செய்து கொடுத்தவள் மீனா. . எத்தனை உறவுகள் இருந்தாலும் இப்பொழுது எல்லாம் சொந்த வீட்டுக்கே வேலைகளை செய்யத் தயங்கி மறுக்கிறார்கள் ஆனால் என் வீட்டிலோ மீனா வின் பங்கு மிக அதிகம் ஆயிற்று. மீனாவுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது என்றாவது அவளிடம் திருமணம் குறித்து எப்படியாவது பேச வேண்டும் மனதிற்குள் முடிவு செய்து கொண்டேன். மீனா எப்பொழுது வருவாள் என்று காத்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் அவளும் வந்து விட்டாள்..முகத்தில் என்றுமில்லாத பூரிப்புத் தெரிந்தது. “என்ன முகமெல்லாம் ஒரே சந்தோஷமா இருக்கு என்ன விஷயம்? “ என் கூட மண்ணை அள்ளிப்போட்டு வேலை செய்வானே குமாரு அவனுக்கு கல்யாணம்கா..குப்பத்துப் பொண்ணாம்..காதல் கல்யாணமாம் ..ரெண்டு பக்கமும் சம்மதிச்சு நாள மறுநா ரெஜிஸ்டர் ஆபிஸ்ல கல்யாணம்கா..நல்ல பையன்கா குமாரு ..சூதுவாது தெரியாதவன்..நல்லா இருக்கணும் ..நீங்களும் வாழ்த்துங்க கா அவளே நான் பேசுவதற்கு களத்தை எளிதாக்கினாள். ஓ அப்படியா ? அவங்க நல்லா இருக்கனும்னு கடவுளை வேண்டிக்கலாம் ....அது சரி உன்கிட்ட ஒண்ணு கேட்கணும் கேட்கவா ? கேளுங்க கா ..ஏன் இப்படி தயங்கறீங்க ?நீங்க என்ன வேணா என்னக் கேட்கலாம் .. நீ எப்ப கல்யாணம் பண்ணப் போற ? உங்க பாட்டி மாப்பிள்ளை ஏதும் பாக்கறாங்களா? அவள் முகத்தில் இருந்த சிரிப்பு தொலைந்தது .சட்டென அங்கு ஒரு விதமான இறுக்கம் வந்தது .எனக்கே இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது . “என்ன எனக்குக் கல்யாணமா ? இனிமேல் இந்தக் கேள்வியக் கேட்காதீங்க அக்கா ..அன்னிக்கு ஒரு பொண்ண கொண்டு வந்தாங்க புதைக்க ..மவராசி அவ்வளவு அழகு அவங்க ..அந்த அழகை சந்தேகப்பட்டு தினம் புருஷன் சித்ரவதை செய்வானாம் .இவங்க பொறுக்க முடியாம தூக்குல தொங்கிட்டாங்க. .அந்தப் பொண்ணோட அம்மா அப்பா அழுத அழுகை ..காசிருந்து என்ன பண்ண ? ஒரே பொண்ணு இப்படி ஆயிடுச்சேன்னு அவ்வளவு அழுகை .. சரி அதை விடுங்க ..என் அம்மா குடிகார அப்பாவைக் கட்டிக்கிட்டு நெருப்புல வெந்தாங்க..அக்கா கண்டிப்பான புருஷன் பேச்சுக்கு கட்டுப்பட்டு சொந்த தங்கச்சிய அம்போன்னு விட்டுட்டா ..இதோ என்ன வளர்குதே பாட்டி ..அதோட புருசனும் குடிச்சே ஈரல் வெந்து செத்துப் போனாரு ..இப்ப பாட்டியோட பசங்களும் குடியே கதியா இருக்காங்க ..பாவம் அவங்க பொண்டாட்டி புள்ளைங்க.இந்தப் பாட்டியோட உழைப்பு இருக்கவும்தான் அந்தக் குடுமபங்கள் ஓடுது ..இப்படி எத்தனை பேரு ? கல்யாணம்கிற பேர்ல பொம்பிளைங்க நரகத்தை பாக்கறாங்க ..அதென்னமோ என் கண்களில படற அத்தனை ஆம்பிளைகளும் அசுரனாகவே தெரியறாங்க .. உங்கள மாதிரி புரிஞ்சிக்கிற புருஷன் இலட்சத்தில ஒருத்தருக்குத் தான் கிடைப்பாங்க அக்கா ... நீ சொல்றது வாஸ்தவம்தான் மீனா ..ஆனா உனக்குன்னு ஒரு துணை வேணுமே ? சரி அக்கா நீங்க சொல்ற மாதிரி நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேனு வையுங்க வரவன் என்னோட இந்த சுடுகாட்டு வேலையை ஏத்துப்பானா? நடுநிசியில நான் வெளியே போயிட்டு வரத ஒத்துப்பானா ? ராத்திரியில என் பக்கத்துல வரவன் என் மேல அடிக்கும் பிணவாடையை நிச்சயம் ஏசுவான் ..இதெல்லாம் தேவையா அக்கா ? இனி கல்யாணம் எல்லாம் என் வாழ்கையில இல்லவே இல்லை அக்கா ..யாருன்னே தெரியாதவங்களோட பிணங்களை அவங்க சொந்தக்காரியா நிறைஞ்ச மனசோட அடக்கம் பண்ற புனிதமான வேலையை அந்தக் கடவுள் என்னிடம் தந்திருக்காரு .அதை மட்டும் கரெக்டா பண்ணிட்டு போறேன்கா .என்ன சொல்றீங்க ?”.. படபடவென்று பொரிந்து தள்ளி விட்டுப்போனாள் மீனா அவள் சொல்வதில் உள்ள நியாயங்கள் புரிந்தாலும் வாடையால் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கை பாழாகிறதே இறைவா என்று புலம்பவும் செய்தது இந்த இரக்கமுள்ள தாயின் மனது .. எழுதியவர் சேலம் சுபா -- என்றும் அன்புடன் ...... சேலம் சுபா...

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in