VENUGOPALAN S V
சிறுகதை வரிசை எண்
# 261
மண்ணாகிப் போனால்.....
எஸ் வி வேணுகோபாலன்
தகவல் வந்த போது மாநகரத்தின் எல்லையில் இருக்கும் ஒரு கிளையில் பணி நிறைவு பாராட்டு விழாவில் இருந்தோம் நானும் அசோகனும். தொழிற்சங்கத்தில் இருந்து பதினைந்து பேர் போயிருந்தோம் மூத்த தோழரைச் சிறப்பிக்க. நாங்கள் அங்கிருப்போம் என்று தெரிந்துதான் தலைமை அலுவலக அதிகாரி நண்பர் ஒருவர் அங்கே தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி உடனே புறப்படுமாறு கேட்டுக் கொண்டார். தேநீர், சிற்றுண்டி எல்லாம் காத்திருந்தது, கூட்ட முடிவில் பரிமாறுவதற்கு. போண்டா என்றால் இருவருமே விடமாட்டோம், ஆனால் மகேஷ் அதைவிட முக்கியம் எங்களுக்கு. அதாவது இல்லாமல் போன மகேஷின் உடலை இப்போது விட்டால் இனி ஒரு போதும் பார்க்க முடியாது, உள்ளபடியே வந்த செய்தியும் நேரமும் பார்த்தால், அப்போதே நாங்கள் நேரத்தில் மிகவும் பிந்தி இருந்தோம்....முப்பது கிலோ மீட்டர், அசோகனிடம் வாகனம் இருந்தது, ஆனால் நேரம் எங்கே இருந்தது?
மகேஷ் உள்ளபடியே மூன்று ஆண்டுகளுக்குமுன் போயிருக்க வேண்டும். அப்போதும் நானும் அசோகனும் தான் அரசு பொது மருத்துவ மனைக்கு அந்தப் பேயிரவில் ஓடோடிப் போய் நின்றோம். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தான் மகேஷ். எப்படியோ மருத்துவ பணியாளர்களிடம் தாஜா செய்து உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்தோம், இந்த வேலைகளில் அசோகன் படு சுட்டி. மகேஷ் எங்களைப் பார்த்து இரு கரங்களும் கூப்பியபடி நோக்கக் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.
மூத்த நர்ஸ் ஒருவரிடம் அன்போடு கேட்டுக் கொள்ள, 'நீங்கள் யார் முதலில், மகேஷுக்கு என்ன சொந்தம்?" என்று கோபமாகத் தொடங்கினார். குடும்பத்தில் பொறுப்பாக யாருமே இல்லையா என்று அவரது கேள்வி. மகேஷ் தாய் தந்தை இழந்திருந்தவன், வயது அப்போதே 36. திருமணம் ஆகவில்லை. வயதான அக்காவும் அவர் குடும்பமும் தான், இவனோ அங்கே எப்போது இருப்பான், இல்லாது போவான் என்று தெரியாது, இவன் இங்கே மருத்துவ மனையில் வந்து சேர்ந்த விஷயமே அவர்களுக்குப் போயிருக்காது என்று விளக்கிச் சொன்னேன். தொழிற்சங்கத்தில் இத்தனை பொறுப்போடு வந்து கேட்கிறார்களே என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு மதிப்போடு பதில் அளித்தார்.
"இத்தோடு தண்ணியடிக்கிறத எல்லாம் விட்டுத் தொலைக்கச் சொல்லுங்க....இந்தத் தடவ எப்படியோ பொழச்சுட்டான் பாவி..." என்று கரிசனத்தோடு சொன்னார்.
"பாத்துக்க ஆள் இல்ல சிஸ்டர்...தட்டிக் கேட்கவும் ஆள் இல்ல....மேரேஜ் கூட ஏற்பாடு ஆயிட்டிருந்துச்சு...நிச்சயதாம்பூலம் தேதி கூட வச்சு எங்கள அழச்சிருந்தான் ...ஏனோ நின்னு போச்சு...அதுலயே ஷாக் ஆயிருந்தான்...சேத்துக் குடிச்சிருப்பான் முட்டாள்" என்றான் அசோகன்.
நர்ஸ் இன்னும் கோபமாகக் குறுக்கிட்டார், "இவன பத்தி விசாரிச்சு நிறுத்தி இருப்பாங்க...அந்தப் பொண்ணு தப்பிருச்சுன்னு நெனச்சுங்க...இவனுக்குக் கழுத்த நீட்டிட்டு இப்பவோ அப்பவோன்னு தெனம் செத்து செத்துப் பொழைக்கறதுக்கு நேரே பாழும் கெணத்துல குதிக்கலாம்"
மகேஷ் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் வழக்கம் போலவே காணாமல் போனான். வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஒரு பியூன் நினைத்தபடி விடுப்பு எடுத்தால் யார் பொறுத்துக் கொள்வார்கள். ஏற்கெனவே 378 நாட்கள் ஊதியமற்ற விடுப்பில் சேர்ந்திருந்தது. வேலையில் நிரந்தரம் ஆகி எட்டு ஆண்டுகளில் ஓராண்டுக் காலம் இப்படி விடுப்பு .என்றால் விடுவார்களா...ஒரேயடியாக எடுத்த லீவு கிடையாது...அடிக்கடி காணாமல் போவது. மெடிக்கல் லீவு என்று அடையாறு பக்கத்திலிருந்து ஒரே மருத்துவரிடம் ஏஜென்ட் மூலம் சான்றிதழ் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தான், தலைமை அலுவலக பர்சனல் டிபார்ட்மென்ட் அதிகாரி ஓருவர் நேரே அந்த டாக்டரை அழைத்துப் பேசி விட்டார், அதோடு சான்றிதழ் இல்லாது விடுப்பு. இன்னும் சுத்தமாகப் போயிற்று அவனது பதிவேடு.
எப்படியோ சமாதானம் சொல்லி உதவி பொது மேலாளரின் இரக்கமான நேரம் ஒன்றில் பேசி பாதுகாத்து வைத்திருந்தோம். அதெல்லாம் பழைய கதை. பின்னர் தில்லி தொழிற்சங்கப் பேரணி ஒன்றிற்கு நாங்கள் போயிருந்த ஒரு முகூர்த்த நாளில் அந்த அதிகாரி உள்ளே போய்ப் பேசி, மகேஷை மாநகரத்திற்கு வெளியே நூறு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிற்றூருக்கு மாற்றி விட்டார்.
அதற்கு மகேஷ் தான் நேரடி பொறுப்பு. அந்த அதிகாரி ஒரு நாள் மதியம் ஓட்டலுக்குப் போய்க் கொண்டிருந்த சாலையில், ஒயின்ஸ் ஷாப் செல்லும் குறுக்கு சந்து முட்டுமிடத்தில் பிளாட்பாரத்தில் கிடந்திருக்கிறான் இவன். மறுநாளே மாற்றல் தயார் செய்து அங்கிருந்து விடுவித்தும் துரத்தி விட்டனர். எப்போதேனும் வந்து நிற்பான் எங்கள் இருக்கை பக்கம். உலகத்து அப்பாவித்தனம் கிலோ கணக்கில் இருக்கும் முகத்தில். உண்மையில் அப்பாவி தான் அவன்.
"சார்....இனிமே கரெக்ட்டா வேலக்கி வர்றேன் சார்...திரும்ப என்ன இங்கேயே கொண்டாந்துருங்க சார்..." என்பான். இலேசில் நகர மாட்டான் மகேஷ். நானாவது சாப்பிட்டாயா என்று கேட்டுக் கொஞ்சம் காசு எடுத்து நீட்டுவேன், அசோகன் பிடித்து சாத்துவான். என்னையும் திட்டுவான்.
"தோழர்...இவனுக்கெல்லாம் எதுக்கு இரக்கம் காட்டுறீங்க....ஒழுங்கா ரெண்டு வருஷம் அங்கேயே இருக்கட்டும்...கஷ்டம்னா என்னன்னு உணர்ந்தாத் தான் வேலையில் நிப்பாங்க .." என்று சொல்வான்.
எங்கே நின்றான், வேலையில் ...இதோ போயே போய் விட்டான்.
அசோகன் என் நினைவுகளைக் கலைத்து, "தோழர்...உங்களுக்கு அவன் வீடு தெரியாதில்ல....எனக்குத் தெரியும்...இன்னும் பத்து நிமிஷம் தான்..ஆனா எடுத்திருப்பாங்களோ?" என்று கேட்டவாறு வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அசோகன் போல் ஒரு கர்ம வீரனைப் பார்ப்பது அரிது. நேர்மையான கோபக்காரன். அசாத்திய அன்பைப் பொழிபவன். உதவி என்றால் உயிரையும் கொடுப்பது என்பதன் தூய இலக்கணம் அசோகன். நேரம் காலம் பாராது தொழிற்சங்க வேலைகளுக்கு ஓடோடிச் செல்பவன். அவனும் நானும் ஒன்றாகப் போகாத திருமண மண்டபம் கிடையாது மாநகரில். அதே போல் இடுகாடுகளும்!
"மகேஷை நாம் எப்போ கடைசியா பார்த்தோம் நெனவிருக்கா அசோகன்?" என்று பேச்சு கொடுத்தேன். வண்டியில் போகும்போது பேசக்கூடாது, ஆனால், அசோகன் நேர்த்தியான வாகன ஓட்டி.
"அந்த அராஜக பொம்பிளை ஒண்ணு , நா தான் அவரு பொண்டாட்டின்னு காய்ச்சலா இருந்த இவன இழுத்துக்கிட்டு வந்து நின்னதே...அப்போ தான் கடைசியா பாத்தது....அது இருக்குமே ஆறு மாசம்" என்றான் அசோகன். அந்த நாள் மறக்க முடியாதது.
நான் எனது துறையிலிருந்து வெளியே வந்து அதே தளத்தில் கேண்டீன் தோழர் வழங்கிப் போன தேநீரை அருந்தியபடி சக ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். கடைநிலை ஊழியர்கள் சிலர் தங்களுக்குள் பேசியவாறு என்னை நோக்கி வந்தனர்.
"டேய்...அண்ணன் இங்கிருக்காரு பாரு...அவராண்ட சொல்லு" என்று ஒருவர் மற்றவரிடம் பேசவும், நானே தலையிட்டு, என்ன விஷயம் என்று கேட்டேன்.
"அண்ணே உள்ள போய்ப் பாருங்கண்ணே....நம்ம மகேஷ் வந்திருக்கான்...பழைய டிபார்ட்மென்ட் அதிகாரிங்க கிட்ட போய் ஏதோ கேக்கறான்... அவனால ஒண்ணியும் பேச முடியல...கூட ஒரு பொம்பிள வந்துருக்கா...நான் தான் பொண்டாட்டின்னு ஒரே ரகளண்ணே ..." என்றார் ஒரு தோழர்.
அசோகனும் வந்து சேர, நேரே இருவரும் உள்ளே சென்று மகேஷை வெளியே அழைத்து வந்தோம். அவனால் நிற்கக்கூட முடியவில்லை. சுவரோடு சரிந்து சோர்ந்து அமர்ந்த அவனது கண்களில், 'என்னை எதுவும் கேட்காதே' என்று எழுதி ஒட்டி இருந்தாற்போல் தெரிந்தது.
"நீ யாரும்மா...?" என்று கேட்டேன் அருகில் உரிமையோடு வந்து நின்ற பெண்மணியை.
ஐம்பது இருக்கும் அவளுக்கு. அசாத்திய துணிச்சல் தெறிக்கும் கண்கள். அதைவிட அதிர்ச்சியான விஷயம், கூடவே நின்ற ஒரு பையன்.
" இவரு என் ஊட்டுக்காரு...இது என் பையன்" என்றாள் கூசாமல்.
எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அசோகன் சற்று பொறுமை இழந்தது தெரிந்தது.
"ஹலோ...அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகல....நீ எப்படி பொண்டாட்டி ஆவ?" என்று கோபமாகக் குரலை உயர்த்திக் கேட்டான்.
அவள் சடக்கென்று கழுத்தில் இருந்து மஞ்சள் கயிறு புரட்டியெடுத்துக் கண்களில் ஒத்தியவாறு, கண்களில் நீர் துளிர்க்க, "அய்யா...ஆண்டவன் பொதுவா இது இவரு கட்டின தாலி.. இவன் என் புள்ள" என்றாள். அந்தப் பையனுக்கு பதினைந்துக்கு மேல் இருக்கும் வயது. என்னால் அதற்குமேல் தாங்க முடியவில்லை. நான் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அவளிடமிருந்து சரியான பதில்கள் இல்லை. மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டினாள். ஆனால் நான் அவர் மனைவி என்று சாதிப்பதில் குறியாய் இருந்தாள்.
"அம்மா...நீங்க இங்க உள்ள வந்து பேசற பேச்சு எல்லாம் வச்சுக்காதீங்க....மொதல்ல வெளியே புறப்படுங்க...அதிகாரிங்க வந்தா கடுமையாப் பேசுவாங்க...மரியாதையா புறப்படுங்க" என்றேன்.
எந்த மறுபேச்சும் இன்றி அந்தப் பையனை அழைத்துக் கொண்டு வெளியேறிப் போனாள். ஊழியர்கள் மகேஷை இப்போது சூழ்ந்து கொண்டனர்.
"டேய்..அண்ணன் கட் அண்ட் ரைட்டாப் பேசின உடனே ஓசப் படாம கயட்டிக்கினு போயிருச்சு பாரு...யார்ரா அந்த பொம்பிள ...உன் சம்பளத்த உறிஞ்சுக்கிட்டு ஒன்ன ரோட்ல போட்டுட்டுப் போயிருவா...ஏண்டா ஒனக்கு புத்தி இப்படி போய்க்கினு..." என்று ஆள் ஆளுக்கு ஏதேதோ கேட்டும், மகேஷிடம் இருந்து ஒற்றை பதில் இல்லை.
அடுத்த ஒரு வாரம் கழித்து அவன் பணியாற்றும் கிளைக்கு அழைத்துக் கேட்டால், அவன் வேலைக்கு வந்தே இரண்டு மாதங்கள் ஆயிற்று என்று பதில் வந்தது. அதோடு மகேஷ் பேச்சு முடிந்திருந்தது. இப்போது அவன் கதையே முடிந்து விட்டிருக்கிறது. மகேஷ் தற்காலிக ஊழியராக இருந்த காலம் பொற்காலம். அம்சமாக வருவான் வேலைக்கு. ஒற்றை நாள் வராமல் இருக்க மாட்டான். பளிச் என்று இருக்கும் நடையும் உடையும் பேச்சும் வேலையும். அதிகாரிகள் வேண்டி விரும்பி அழைத்துக் கொள்வார்கள், மகேஷ் தான் வேண்டும் தங்கள் உதவிக்கு என்று! கண்ணியமாகப் பேசுவான். மூத்த ஊழியர்களிடம் மிகுந்த மரியாதை. அவர்களால் முடியவில்லை என்றால், இவன் அவர்களது வேலையை சத்தமின்றி வாங்கி செய்து முடிப்பான். காசுக்கு அலையவே மாட்டான்.
தொழிற்சங்கப் போராட்ட நாட்களில் ஓடி வந்து கொடிகளைத் தோரணமாக ஒட்டி மேலும் கீழுமாக ஏறி இறங்கி அலங்கரிக்கும் வேலைகளில் இவன் முந்திக்கொண்டு செய்பவனாக இருப்பான். வெளி மாநிலங்களில் இருந்து வரும் சங்கத் தலைவர்களிடம் போய் அரைகுறை ஆங்கிலம் இந்தியில் 'எங்களுக்கு எல்லாம் எப்போது வேலை நிரந்தரம் ஆகும்?' என்று கேட்பான். அவர்கள் தட்டிக் கொடுத்துப் பேசும்போது ஒரு குழந்தையாக நெகிழ்வான்.
நிரந்தர வேலை கிடைத்தபின் வெள்ளைச் சீருடையில் இன்னும் அம்சமாக வந்து இறங்கினான் மகேஷ். எல்லாம் நன்றாகத் தான் ஓடிக்கொண்டிருந்தது, ஒரு வருடத்திற்கு. அப்புறம், ஒரு நாள் நான் இரவு பத்து மணிக்குப் பிறகு தொழிற்சங்க அலுவலகத்திலிருந்து புறப்பட்டு ரயில் நிலையம் போகும் வழியில் தென்பட ஆரம்பித்தான். பெயரிட்டு அழைத்தேன், அருகே வராமல், யாரோ நண்பனைப் பார்க்க வந்தேன் என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து விட்டான். அன்று இலேசாக சந்தேகம் எழுந்தது. அடுத்த முறை அருகே நெருங்கும் போது, இலேசாக எல்லாம் இல்லை, வாசனை பலமாகவே காட்டிக் கொடுத்தது. சேர்மானம் சரியில்லாமல் அன்று தொலைந்தவன் தான் மகேஷ்.
இப்படியான சிலரையெல்லாம் ஒரு முறை சங்க அலுவலகத்திற்கு வரவழைத்து இரண்டு மணி நேரம் பெரிய கூட்டம் போட்டோம் ஒரு முறை. அழிந்தே போவீர்கள் என்று மிரட்டாமல், அவர்களது நிலைமையை அவர்கள் வாயிலிருந்தே பேச விட்டு, உரையாடல் நடத்தி, அவர்களும் மதித்துக் கேட்பது மாதிரி அறிவுரையெல்லாம் கொடுத்து அனுப்பி வைத்தோம். கட்டிக் கொடுத்த சோறு போலத் தான் கொஞ்ச காலத்திற்குத் திருந்தியது போல் காட்டிக் கொண்டனர். மிக நெருக்கமாக வந்து வணக்கம் எல்லாம் வைப்பார்கள்.
மகேஷும் சில நாள் அப்படி நடந்து கொண்டான். கனிவோடு என் இருக்கை அருகே வந்து நிற்பான். 'சார், வூட்ல எல்லாம் எப்படி இருக்காங்க...உங்களுக்கு ஒரு பொண்ணு தான... பாப்பா என்ன படிக்குது?' என்று பேச்சு கொடுப்பான். மறுவாரம் யாராவது வந்து சொல்வார்கள், தம்பிய கடையில பார்த்தேன் என்று. சொல்பவரும் அருகே கோப்பையைச் சுழற்றிக் கொடுத்தவராக இருப்பார்.
ஆனால், மகேஷ் தான் அப்படியல்ல என்று ஒருமுறை நம்ப வைக்கப் படாத பாடுபட்டான். நாள் முழுக்க என்னோடே இருந்தான் ஒரு நாள். திருச்சி மாநாட்டுக்கு எல்லோரும் பேருந்தில் புறப்பட்ட போது, அவன் அசோகனிடம் சொல்லி மூன்று பேருக்குமாக ரயிலில் டிக்கெட் போடச்சொல்லி எங்களோடு சினிமாப் பாட்டு எல்லாம் பாடிக்கொண்டு வந்தான். வழியில் எங்கும் எங்களை செலவு செய்யவிடாமல் பழங்களும், தேநீரும் நான் தான் காசு கொடுப்பேன் என்று சண்டை போட்டுக் கொடுத்து வாங்கி வழங்கியபடி வந்தான். அப்போது தான் திருமணப் பேச்சு எடுத்தான்.
"அக்கா போய்ப் பார்த்துட்டு வந்து போட்டோ எல்லாம் கொடுத்துச்சு" என்று சொல்லி பர்சில் இருந்து எடுத்துக் காட்டினான், "நம்மள விட கலரு கொஞ்சம் கூடுதல், பேரு மணிமேகலையோ என்னமோ சொன்னாங்க...நான் மணின்னு தான் சொல்றது" என்றான்.
அசோகன் அவனிடம் கிண்டலாக, "டேய் தனியாப் போய்ப் பார்த்து தெனமும் பேசிட்டு வர்ற மாதிரி சொல்ற!" என்றான்.
"ரெண்டு தடவ அவங்க வூட்டுக்குப் போயிருக்கேண்ணே....நெலக் கதவுல எட்டிப் பாக்கும் பாரு பார்வ...கிட்டல்லாம் வச்சுப் பேசல...அக்கா சொல்லியிருக்கு, அடுத்த வாரம் கோயில்ல வச்சுப் பேசலாம்னு..."
ஆனால், இரண்டு மாதங்கள் கழித்து ஆள் வேறு தினுசாக மாறி இருந்தான். அவன் சொன்ன தேதியெல்லாம் தள்ளிப் போயிருந்தது. அழைப்பு இல்லை. அவனது நிச்சய தாம்பூலம் என்ன ஆயிற்று?
தேடிப்பிடித்துக் கேட்டபோது, பிடி கொடுத்துப் பேசவில்லை மகேஷ்: "விட்ருங்க சார்...அது ஆவாது... இப்போ இல்ல சார் ..இப்போதைக்கு இல்ல..நமக்கு எல்லாம் எதுக்கு சார் கல்யாணம்...சும்மா ஜாலியா இப்படியே லைஃப ஓட்டிட்டுப் போயிரலாம்" என்றான்.
எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அந்த மாத சம்பளப் பட்டியல் கேட்டேன், இழுத்தான் சொல்லாமல்.
"இன்றைக்குத் தானே சம்பளம் போட்ருக்காங்க. பாக்கெட்ல வச்சிருப்ப, ஸ்டேட்மென்ட் எடு" என்று அதட்டல் போட்டு வாங்கிப் பார்த்தால், பூஜ்யம் என்று எழுதி இருந்தது. கம்ப்யூட்டர் ஸ்லிப் அது, இடது பக்கம் ஊதிய விவரங்கள், வலது பக்கம் வரிசையாகப் பிடித்தம் செய்யும் விஷயங்கள், அதிலிருந்து இதைக் கழித்து ஒன்றுமில்லை பூஜ்யம் என்று போட்டிருந்தது. கடன் ஏகத்திற்கு ஏறி இருந்தது தெரிந்தது. பத்து நாள் ஊதியமற்ற விடுப்பு என்று காட்டப் பட்டிருந்தது.
அதனால் இன்னும் சில கடன்களுக்கு அந்த மாத ஈவு போயிருக்காது என்றும் புலப்பட்டது.
வேதனையாக இருந்தது, அவனோ முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை.
"வெளியே வேற கடன் வாங்கிட்டிருக்காண்ணே அவன் ....மூணு ரூபா வட்டிக்கு. அவனுங்க கொடச்சலு தாங்க முடியாமத் தான் பாதி நாள் வேலைக்கு வர்றதில்ல" என்று பக்கத்திலிருந்த வேறு ஒரு கடைநிலை ஊழியர் சொல்லவும், மகேஷ் அவன் வாயைப் பொத்தினான்.
"இப்போ கூட ஒண்ணும் பிரச்சனை இல்லை...ஒழுங்கா வேலைக்கு வா...எங்க பேச்சு கேட்டு ஒழுங்கா இரு...எல்லாம் சரி பண்ணிறலாம்" என்றான் அசோகன்.
அதற்கு அடுத்த வாரம் நாங்கள் தில்லி போயிருந்தோம். திரும்பி வந்தபோது மகேஷ் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தான். பிரதான சாலையிலிருந்து விலகி நெருக்கமாக இருந்த தெரு ஒன்றில் வண்டியைத் திருப்பினான் அசோகன்.
"இன்னும் ரெண்டு நிமிஷம் தோழர்...மகேஷ் வீட்டைத் தொட்டிறலாம்" என்றான் அசோகன்.
நாங்கள் நெருங்கும்போதே தெரிந்தது, வீதி நெடுக பூக்கள் சிதறிக் கிடக்க, மகேஷ் காட்டுக்குப் புறப்பட்டு விட்டான் என்று பிடிபட்டது. இருந்தாலும் வீட்டுக்கு அருகே கொண்டு வண்டியை நிறுத்தினான் அசோகன்.
"மகேஷ்...." என்று நான் இழுக்கவும், "சார்...பாடி எடுத்தாச்சு....போய் அரை அவுர் ஆவுது...பக்கத்துல தான் அடக்கம் செய்யற எடம் ... அப்படியே புறப்படுங்க... முகமுழி விட்றாதீங்க...ஆபீஸ் ஸ்டாபுங்களா..." என்று பெரியவர் ஒருவர் தடியை ஊன்றியபடி சொன்னார்.
எங்களுக்குத் தான் மாநகரத்தின் தொகுதி வாரியாக இந்த இடங்கள் அத்துப்படி ஆயிற்றே.... அடுத்த பத்தாம் நிமிடம் வண்டியை வாசலில் போட்டுவிட்டு, உள்ளே ஓட்டமும் நடையாய் விரைந்தோம்.... கூட்டமாக எங்கே தெரிகிறது என்று பார்த்தவாறு இறந்தவன் முகவரியை இடுகாட்டில் கண்டடைந்தோம். குழியில் இறக்கிக் கொண்டிருந்தனர் எங்கள் மகேஷை.
"நிறுத்துப்பா....ஆபீஸ்காரங்க வந்துருக்காங்க...மொகமுழி காட்டு.... பொறு...பொறுமையா...பொறுமையா...சார்...இந்தப் பக்கம் வாங்க...அங்க நிக்காதீங்க...மண்ணு சரியும்...இங்க வாங்க..இப்படி வாங்க...உங்க கையால ஒரு பிடி போடுங்க...உங்க நண்பர வழியனுப்பி வைங்க" என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர்.
'நா அவள மணின்னு தான் கூப்பிடப் போறேன்' என்ற மகேஷின் குரல் எனக்கு ரகசியமாகக் கேட்டது போல் இருந்தது, உள்ளே புதைந்து கொண்டிருந்தவன் முகத்தைப் பார்க்கையில்...... அசோகன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான், கண்ணீரைத் துடைக்க மாட்டாது.
ஊழியர்கள் சிலரும் கூடி இருந்தனர், சிலர் எங்கள் அருகே வருவதைத் தவிர்த்துத் தள்ளாடியபடி நகர்ந்தனர். வேக வேகமாக வேலை நடந்து அவனது மொத்த சரித்திரத்தையும் குழிக்குள் பத்திரமாக நெருக்கிப் போட்டு வேண்டிய அளவு மண்ணை உள்ளே தள்ளி மண்வெட்டி போட்டுத் தட்டி மூடி நிமிர்ந்தனர் பணியாளர்கள். 'ஒடம் பால் சொல்லலியே' என்று அவர்களிடம் சண்டைக்குப் போனார் சொந்தக்காரர் ஒருவர்.
"பெர்சு...உள்ள எறக்கறப்பவே கொரலு கொடுத்தாச்சு...சும்மா கேக்காத...எல்லாம் கேட்டுக்கப்பா...ஒடம் பால் ஒடம் பால்" என்று இரைந்தார் மூத்த பணியாளர்.
மெல்ல வெளியே வந்தோம். சூடாக ஒரு தேநீர் தேவைப்பட்டது இருவருக்கும். 'ஒண்ணு சக்கரை இல்லாம' என்று அசோகன் குரல் கொடுக்கவும், அது அவனுக்கு என்று தெரியாது அந்தக் குவளை எனக்கு வந்தது. சிரித்துக் கொண்டே மாற்றிக் கொண்டான் குவளையை என்னிடமிருந்து.
"அவங்க அக்கா கிட்ட ஒரு வார்த்த பேசிட்டு போயிருவோம்...வீட்டுப் பக்கமே வண்டிய விடுங்க" என்றேன் அசோகனிடம்.
பந்தல் எல்லாம் அகற்றப்பட்டுத் துலக்கமாக இருந்தது தெருவே. எளிய குடியிருப்பு. வீடு முழுக்கக் கழுவி விடப்பட்டிருந்தது.
"அம்மாவிடம் இப்போது பேச முடியாது...மாமன் செத்ததுல ரொம்ப ஷாக்....உள்ற அழுதுட்டு இருக்கு... கொஞ்ச நாள் செண்டு வாங்க" என்றான் வாலிபன் ஒருவன். மகேஷின் அக்கா மகனாக இருக்கக் கூடும்.
வாசல் பக்கம் ஏதோ சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தபோது, முன்பு பார்த்த பெரியவர் தடியால் யாரையோ விரட்டிக் கொண்டிருந்த பேச்சுக் குரல் கேட்டது வெளியே.
"ஒரு தடவ சொன்னா போக மாட்டே....இங்கெல்லாம் வந்தே எங்காளுங்க பொல்லாதவனா ஆயிருவானுங்க.. எங்க பையன முழுங்கின ராச்சசி .... தொலஞ்சு போ அப்பால.....சரிதான்.... செத்தப்புறம் கூட அவன் சொத்துக்கு அலையறா போலருக்கு....ஆபீஸ்ல இருந்து ஏதாவது கிடைக்கும்னு எப்படி மடக்கிப் போட்டு இந்தப் பாவிகிட்ட என்னவெல்லாம் எழுதி வாங்கி வச்சிருக்காளோ தெரியலையே"
தடியை ஆட்டியாட்டிக் கத்திப் பேசிக்கொண்டிருந்தார் பெரியவர். எனக்கும் அசோகனுக்கும் சட்டென்று ஏதோ பிடிபட்டதுபோல் தெரிந்து வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றோம்.
வேகமாகப் போய்க் கொண்டிருந்தவள் ஒரு பெண்மணி, எங்களுக்குப் பரிச்சயமான உருவம். கூடவே ஒரு பையனும் பதினைந்து வயதில்.
**************
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்