logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

ஐ.முரளிதரன்

சிறுகதை வரிசை எண் # 185


தவறான அழைப்பு விடியக்காலமே அந்தச்சேதி வீடு வந்து சேர்ந்து விட்டது. ஆவுடை அப்பாயி மாரிலும், வயித்திலும் அடித்துக்கொண்டே "பாதகத்தி அவதலையில அவளே மண்ணள்ளி போட்டுட்டாளே…. சொல்லுப் பொறுக்காத புருசனக்கட்டி இப்டி ஆயிட்டாளே"...." நா முன்ன போறே நீ யென் மகனக் கூட்டி வந்து சேரு என" அழுது கொண்டே விசுக்கு விசுக்குவென நடந்து சென்றாள். அந்த ஒப்பாரிச் சத்தமே ஒறக்கத்தில் இருந்த என்னை எழ வைத்து விட்டது. மூஞ்சியைக் கழுவிட்டு "யென்னமா ஆச்சு" என்ற கேள்விக்கு "பழனி அண்ணே சுருளிப்பட்டி ரோட்டு மேல செத்துக் கிடக்காரம்டா"..." மருந்தக் குடிச்சுட்டானாம் காலையில பாத்தவுங்க சொல்லிருக்காங்க" என்றாள். அம்மா சொல்லும் போதே யாரென தெரிந்தாலும் "எந்த பழனி மா" என மீண்டும் வேண்டுமென்றே கேட்டேன் "..........."...."அவதேன் ஒங்கத்த அந்த சிறுக்கி நாகதேவியோட புருசன் தான் டா" அவரு தான் என சொல்லும் போதே எனக்குத் தெரியும். "செத்து விட்டார்" மனசை ஏதும் பெரிதாக பாதிக்கவில்லை. ஆனாலும் மார்கழி மாத பனி போல படக்கென தொற்றிக் கொண்டது "துக்கம்" வெளிக்காட்ட தான் பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கேட்ட நொடியில் இருந்த மனநிலை கூட மாறி "செத்துட்டானா" என்கிற சொல் தான் பளீரென தோன்றியது. "எப்டி மா" "யென்னனு தெரியலடா அதே ன் ஒங்கத்தக்காரி இருக்காளே நாக்கெல்லாம் வெசம் வச்சவ"...." அவளால தான் செத்துருப்பயான்" "இந்தாளு மட்டுயென்ன யோக்கியமா"..." கூட்டுச்சேந்து நமக்கு பண்ணத மறந்துட்டியா" "ஒண்ணு மறக்கல"...." இப்ப என்ன செய்றது நல்லதுக்கு போகாட்டியும் கெட்டதுக்கு போகனும்பாங்க"..."அதுவும் உங்கப்பாவுக்கு தங்கச்சி புருசன் வேற" "அதுக்கு செத்தாலும் மூஞ்சில முழிக்குற மாதிரியா பண்ணாய்ங்க"..." செஞ்ச பாவத்துக்குதே இப்டி ஈ மொச்சு செத்து கெடக்யான்" "ரெம்ப பேசாத ஒங்கப்பாவுக்கு போன போடு அவரு என்ன சொல்றாருனு கேட்போம்" என்றாள். அதுவும் சரி தான் அப்பாவுக்கு போனடித்தேன். "ஹலோ".... " அப்பா எங்கருக்கீங்க விசயந்தெரியுமா" "தெரியும்பா அங்கதே போய்கிருக்கேன்"...." அம்மாவ கெளம்பி வரச் சொல்லு" அப்பாவிடம் இருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. நெஞ்சுக்குள் இருந்து யாரோ அழுத்தித் தள்ளுவது போல இருந்தது. அழுத்தம் தாங்காமல் வார்த்தைகள் வெடித்துக் கெளம்பியது "யார கேட்டு அங்க போறீங்க தொங்கச்சி பாசம் பொத்துகிட்டு வந்திருச்சோ அவயங்க செஞ்சதெல்லாம் மறந்திடுச்சா"....." ரோசங்கெட்டு போயி அங்க போகனுமா" என பொரிந்து கொண்டிருந்த போது "டேய் எல்லாந்தெரியும் சொன்னத மட்டும் செய்யி" போனைக் கட் செய்து விட்டார். அவரிடத்தில் கொட்ட முடியாததை அம்மாவிடம் கொட்டினேன். "ஒம்புருசனுக்கெல்லாம் அறிவே இல்ல"..." கூடப் பெறந்த தங்கச்சி இல்ல" சொல்லிக் கொண்டிருந்த போதே... "வாயக்கொறடா விட்டா பேசிட்டே போற அவரு ஒங்கப்பா அவருக்கு தெரியாதா என்ன செய்யனும்னு நேத்து பொறந்த நாயி அவரு போட்ட விட்டை அவர பேசுற அளவுக்கு பெரியளாயிட்டயா"...." என்னடா சொன்னாரு" அதற்கு மேல் பேச முடியவில்லை. வெடித்து வந்த வார்த்தைகளை தொண்டைக்குழியில் சிக்க வைத்தது போல ஆகி விட்டது. பொறுமல் குறையவில்லை. கடுகடுப்பான முகத்துடன் "அவரு அங்க போறாராம் நீ வருவியாம்" பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அம்மா போன் அடித்தது. அப்பா தான். "ங்ங் ஹலோ"...." சொல்லுங்க ம்ஞ்சரி"...."அப்டியா அச்ச்சோ பாவிபய" "........."....." போஸ்ட்மாட்டம் பண்ணலியா"...."ச்சேரி இந்தா வாரேன்". "யென்னவாம்" "நேரா சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போறாங்களாம்"...." போலிஸ் வந்தா போஸ்ட்மாட்டம்னு நாளாயிருமாம்"...."செத்து ரெண்டு நாளாயிருக்கு என்னத்த குடிச்சோனோ உடம்பெல்லாம் வீச்சமாம்"......"வேகமா வ.ஊ.சி திடல் வரச் சொன்னாரு நா போறே"..."நீ இங்கயே இருப்பியாம்" "நீ கூப்பிட்டாலும் நா வரல" என்றேன். அம்மாவின் கலைந்த தலைப்பற்றிய நினைவு கூட இல்லை. அவசர அவசரமாக கட்டியிருந்த சீலையை சரி செய்து கொண்டு வெடுவெடுவென வெளியேறினாள். உச்சந்தலையில் ஏதோ சூடாக செலுத்தியது போல இருந்தது. கண்கள் வழியாக அந்தச்சூடு ஒரு ஆவியாக வெறியேறியதை உணர்ந்தேன். ச்சே அப்பா எப்படி போனார். இது தான் மனசுக்குள் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது. நினைச்சுப் பாத்தா இப்பக்கூட தாங்க முடியாத எரிச்சல் வருது. மறக்க முடியுமா அத மறக்குற அளவுக்கு நான் மலுமட்டயா அப்டி அப்பா என்னய வளக்கலயே. ஆனா அவரு ஏன் போனும். இன்னமும் அந்த நாளை மறக்க முடியல. "யெண்ணே ஒம்மகன சொல்லி வச்சுக்க தெனமும் எம்மகளுக நம்பருக்கு போன் பண்ணி " தரனு" இருக்கானானு கேக்குறாங்க"...."சொல்லி வையிணே" என அத்தை போனை கட் செய்ததும். "ஹலோ"...." சொல்லுங்கப்பா" "எங்க டா இருக்க" "மெடிக்கல்லபா" "என்ன காலித்தனம் பண்ணிட்டு இருக்கியா". " யேன்பா என்ன ஆச்சு" யென்ன என்னாச்சு னொன்னாச்சுனு"...." வீட்டுக்கு வா பேசிக்கிறேன்" என்றார். அதற்கு மேல் மெடிக்கலில் என்னால் வேலை செய்ய முடியாததால். ஓனரிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். உள்ளே நுழைந்ததும் "..........".." மகனே எதுக்குடா அந்தப்பிள்ளைகளுக்கு போன் பண்ணச் சொன்ன" "எந்தப் பிள்ளைக்கு பா"..." என்னப்பா கேக்குறீங்க கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்க"...."நா யாருக்கும் போன் பண்ணலபா" அடிப்பதற்காக ஓடி வந்தவரை அம்மா தான் தடுத்தாள். அம்மாவுக்கும் ரெண்டு விழுந்தது. "யேங்க பொறுமயா கேளுங்க அவ அப்டி பண்ணிருக்க மாட்டயான்". அப்போது வரை எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்பு அம்மா தான் அந்த முடிச்சை அவிழ்த்தாள். "யேப்பா ஒங்கத்த பொண்ணுங்க நம்பர யாருக்கும் கொடுத்தியா" "யம்மா அந்தப் பிள்ளைக நம்பரே எங்கிட்ட இல்லமா" "அப்றம் எவன்டா அங்க போன் பண்ணி உன்னய கேக்குறது"..." உண்மயச் சொல்லு" "அப்பா நீங்களே யெம்போன பாருங்கபா"...." அதுங்க நம்பரே எங்கிட்ட இல்ல" "நீயு அந்தப் பிள்ளைகளும் ஒரே காலேஜ் தானடா"...." நெசமாவே ஒங்கிட்ட நம்பர் இல்லயா" "அப்பா அதுகள பார்த்தாலே நான் பேச மாட்டேன்பா"..." பசங்க கூட அத்த பொண்ணு வருதுனு கிண்டலடிப்பாய்ங்க அது கூட எனக்கு பிடிக்காதுபா".."அந்தப் பிளள வேற மேஜர் நான் வேற மேஜர் பா..எங்கூட படிச்சவங்க அந்தப்பிள்ள கிளாஸ்" மத்தபடி காலேஜ்ல நான் நேர்ல கூட பேசமாட்டேன் பா". "அப்றம் யாருடா போன் பண்றது"..." உன் பேர ஏன் கேக்குறாய்ங்க" "அது யெனக்கு என்ன பா தெரியும்"..." அந்த பிள்ளைக கிளாஸ்மேட் எல்லாம் வாட்சப் குரூப் ல இருக்காய்ங்க".."என்கிட்ட இருக்கிறது வெறும் பட்டன் செல்லு"..."எனக்கு எதும் தெரியாது நம்புங்கபா" என்றேன். கொஞ்சம் நிதானித்தார். "மொதல்ல ஒங்கதங்கச்சிய சொல்லி வையிங்க யாரு காட்டு பயலோ போன் பண்ணதுக்கு எம்புள்ள தான் கெடச்சானா"...." அவனே காலேஜ்..காலேஜ் முடிஞ்சி மெடிக்கலு...மெடிக்கலு விட்டா வீடுனு இருக்கயான்"...."மத்தபயக மாதிரியா சுத்தறயான்" என சொல்லும் போதே அம்மாவின் கண்களில் நிரம்பிய அணைக்கட்டை தாண்டி வழிவது போல கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. அத்தைக்கு போன் செய்தவர் "யெம்மா அவனுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல அந்த நம்பர் யாருனு விசாரி இல்லனா பொறு நா இப்ப வர்றேன்" என சட்டைய உதறி மாட்டிக் கொண்டு கிளம்பினார். வீடே நிசப்தமாகியது. இதுவரை அப்படி ஒரு அமைதியை நான் வீட்டில் உணர்ந்ததில்லை. இதயம் வேகமெடுக்க தொடங்கி பயம் அதிகமானது. எல்லோரும் இருக்கிற வீட்டில் நான் மட்டும் இருப்பது போன்ற உணர்வு. "அம்மா" என வாயெடுக்க நினைத்த போது அந்த இடத்தை "காற்று" நிரப்பிக் கொண்டது. சிறிது நேரத்தில் அப்பா வந்தார். "இந்தாடா இதான் அந்த நம்பரு".. " யாரு என்னன்னு பாரு"..என்றார். என்னுடைய நண்பன் அரசனுக்கு போனடித்தேன் அவனும் அந்தப்பிள்ளையின் வகுப்பு தான். விசயத்தை விளக்கினேன். அவனிடம் இருந்த ஆன்ட்ராய்டு போனில் ட்ரூ காலப் மூலம் பார்த்த போது "சிவக்குமார் பாண்டிச்சேரி" என வந்தது. "விடுடா பாத்துகலாம் நா இருக்கேன்" என்ற அவனது வார்த்தைகள் கொஞ்சம் நம்பிக்கை அளித்தது. மறுநாள் அத்தையிடம் இருந்து அதே போன் ஆனால் இந்த முறை அப்பாவிடம் பேசிய தொணி குரூரமாக இருந்தது. "யெண்ணே ஒம்மகன வந்தா செருப்ப கழட்டி அடிச்சிடுவேன் பொறுக்கிய சொல்லி வச்சுக்க நாங்க போலிஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண போறோம்".என்று சொல்லி துண்டித்தாள். அப்பாவுக்கு சுருக்கென்றிருந்தது. அம்மாவிடம் சொன்ன போது ஆத்திரப்பட்டு " அப்டியா சொன்னா அந்த முண்ட அவள இப்பயே சந்தி சிரிக்க வைக்கிறேன்" என தலைமுடியை அள்ளி முடிந்தாள். அம்மாவை அப்பா தடுத்தார். "பொம்பள புள்ளைக விவகாரம்" பொறு நானே போறேன் என்றார். அம்மாவும் இந்த முறை உடன் போனார். இருவரும் போய் நேரமானதால் நானும் போனேன். அத்தை அப்பாவின் முகத்திற்கு நேராக வெளக்கமாறினைக் காட்டி கத்திக் கொண்டிருந்தாள். அம்மாவும் அவளை கெட்ட வார்த்தைகளில் திட்டினாள். அப்பாவை வீட்டிற்குள் கூட விடாமல் வெளியே வைத்தே பேசியிருக்கின்றனர். பேச்சுவார்த்தை வாக்குவாதம் ஆகியிருக்கிறது. வேகவேகமாக சென்று "அத்த சத்தியமா எனக்கு இதுக்கும் சம்பந்தமில்ல பிரச்சனய விடுங்க"..என பேசிக் கொண்டிருந்த போது " வெளக்கமாறால் என் மீது ஓங்கி அடித்தாள். அந்தத் தெருவின் அத்தனை பேர் பார்க்க செய்யாத தவறுக்கு வாங்கிய அடி அந்த நிமிடம் நடுத்தெருவில் அம்மணமாக நிற்பதைப் போன்று இருந்தது. கலங்கிப் போனேன். அப்பா அதற்கு மேல் பொறுக்க முடியாதவராய் அத்தையை விலக்கி விட்டு கண்ணத்தில் அறைந்தார். அத்தை உறைந்து போனாள். "அய்யோ புருசன் இல்லாத நேரமா வந்து இப்டி எங்களக் கொல்லப் பாக்குறாய்ங்களே" என கூப்பாடு போட்டாள். அத்தையை பார்க்க அறுவறுப்பாக இருந்தது. விளக்கமே கொடுக்க வாய்ப்பளிக்காமல் இப்படி ஒரு "பழியை" ஏன் சுமத்த வேண்டும். அதுவும் என் மீது. இத்தனையும் சிந்தித்துக் கொண்டிருந்த போதே அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்குள் நுழைந்து அப்பா நாற்காலியில் அமர்ந்த போது போன் வந்தது. "ஹலோ" …."ஆமாங் சார்" "யெம்மகன் இல்ல சார்"...." சரிங் சார்" "யென்னப்பா" "சவுத் ஸ்டேசன்ல இருந்து கூப்பிடாங்க உன் மேலயும் என் மேலயும் ஒங்கத்த கம்பெளய்ன்ட் பண்ணிருக்காம்"...." காலையில பத்து மணிக்கு ஸ்டேசன் வரவாம்" "நா ஒண்ணு பண்ணலபா"..." விடுபா பாத்துக்கலாம்" அப்பா தாய்மாமாவுக்கு போன் அடித்தார். பத்துமணிக்கு முன்பாகவே எங்கள் வீட்டிற்கு ஒரு பீ.சி வந்து எங்களை வரச் சொல்லி நினைவூட்டினார். அப்பா தாய்மாமாவுக்கு தகவல் சொல்லி விட்டு நேராக ஸ்டேசன் வரச் சொன்னார். அப்பாவும் நானும் முன்னே பைக்கில் போனோம். அம்மா மாமாவோடு வந்து சேர்ந்தார். நன்றாக நினைவிருக்கிறது சிவந்த முகம் நெத்தியில் சந்தனப்பொட்டு வைத்திருந்த எஸ்.ஐ "ஏண்டா ரவுடிப்பயலே வீடு தேடி அடிக்கிற அளவுக்கு நீ பெரியாளாடா" என அப்பாவை நோக்கி அடிப்பது போல கைகளை நீட்டினார். கை மேல பட்டுவிடாமல் இருக்க ஒரு பக்கமாக சாய்ந்து நிமிர்ந்தார். "எங்க டா உம்பையன்" எனக்கு அடிவயிற்றில் நடுக்கம் கண்டது. "சார்" "போன் பண்ணி செக்ஸ் டார்ச்சர் பண்றியா முட்டிய பேத்துருவேன்"..." யோவ் இவன தனியா கூட்டி விசாரி" பதினெட்டு வயதினைக் கடந்த பின்பு முதன்முதலாக அப்பாவை விட்டு போக பயந்தேன். இன்னும் சொல்லப்போனால் யாரெனும் முகம் தெரியாத ஒருவர் நம்மை துரத்தும் போது பதுங்கி அப்பாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் சிறுவனைப் போல ஒளிந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. அப்பா என்னையே பார்ததபடி எஸ்.ஐ யிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். "சார் சின்னப்பய சார் அவேம் பண்ணல சார்" …."கொஞ்சம் பொறுமையா கேளுங்க சார்" என்றார். "யேய் வாய மூடு இல்ல வேட்டிய கழட்டி உட்கார வச்சிருவேன்" மிரட்டினார். உள்ளே வந்த போலிஸ்காரர் என்னை துருவி துருவி கேள்வி கேட்டார். ஒரு கட்டத்தில் "நீ தான பண்ண ஒத்துக்க ஒத்துக்கிட்டா எதும் பண்ணாம விட்ருவோம்" என்றார். என் மனவோட்டத்தில் "ஆமா சார் நா தான் செஞ்சேன் என ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மனோரீதியாக பாதிக்கப்பட்டேன். சுதாரித்தவனாய் "சார் எங்கம்மா தாலிக்குப் பொதுவா நான் எதும் பண்ணல சார்"...." நா எதும் பண்ணல" குரல் உடைந்து போனது. "ச்சீ ச் சீ என்னப்பா இப்டி பேசிட்ட" விடு விசாரிப்போம் "தண்ணியக்குடி" என வெளியில் சென்றார். மாமா தனக்கு தெரிந்த கட்சிக்காரருடன் ஸ்டேசன் வந்த பின்பு தான் சூழல் மாறியது. என் போனை செக் செய்து பார்த்து தீர விசாரித்த பின்பு என் மீது குற்றமில்லை என்றானது. ஆனால் அப்பாவை அத்தை விடுவதாய் இல்லை. "யென்னய அத்தன பேருக்கு முன்ன அடிச்சிட்டான் சார்"...." கண்டிப்பா கேஸ் போட்டாகனும்" "யேம்மா அண்ணன் தானம்மா அடிச்சாரு"என்ற போலிஸ்காரருக்கு " சார் நீங்க கூட எனக்கு அண்ணன் சொல்லுங்க ஆனா இவேன்லாம் அண்ணனே கெடயாது"...."கேஸ் போடுறீங்களா மகளிர் ஸ்டேசன் போகவா" தலைகுனிந்தவாறே அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா. யாரையும் நிமிர்ந்து பார்க்க அவர் விரும்பவில்லை. அத்தையின் பிடிவாதத்தால் கோர்ட்டில் அபராதம் கட்டுமளவு மட்டும் வழக்கு போடப்பட்டது.வெளியே வந்தவர் வாசலில் எதிரே நின்ற அத்தையை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்தார். மெலிதாக சிரித்தவர் கடகடவென நடையைக் கட்டினார். பாளையம் கோர்ட்டில் அவரும் நானும் போய் "எழுநூத்தி ஐம்பது" ரூபாய் பைன் கட்டினோம். எங்களோடு வந்த பி.சி க்கு அப்பா இருநூறு ரூபாய் கொடுத்தார். வாங்கியவர் "மனச விட்ராதீங்க சார் சொந்தம்னாலே இப்டி தான்" என்றார். கோர்ட்டை விட்டு வருகிற போது அபராத சீட்டைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவின் கண்களில் நீர் ததும்பியது. அப்பாவை கட்டிப்பிடித்துக் கொண்டு சட்டென நொறுங்கிய கண்ணாடி போல உடைந்து அழுதேன் "எல்லாம் என்னால தானப்பா" என்றேன். "யேய் இல்லயா ஏதோ கெட்ட நேரம் விடுப்பா அழுகாத ஆம்பளபுள்ள அழுகலாமா"...." எம்புள்ள அழுகலாமா என் ராசா அழுகலாமா" கண்ணத்தில் முத்தம் கொடுதார். கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு பிறகு அப்பாவிடம் இருந்து ஒரு முத்தம். இன்னும் அழவேண்டும்போலிருந்தது அந்த முத்தத்திற்காக. அடக்கிக் கொண்டேன்.கோர்ட்டே வேடிக்கை பார்த்தது. வீட்டுக்கு கிளம்பினோம். இரவு அரசன் வந்தான். "மக்க நா சொல்றத பொறுமயா கேளு"..." அந்தப்பிள்ளைக்கு போன் பண்ணது நம்ம விக்கி டா"..."அந்தப் புள்ளய லவ் பண்றானாம் அவங்கம்மா போன எடுத்ததும் பதட்டதுல ஒம்பேரை சொல்லிருக்கான்டா" என்னால் கோவத்தை அடக்க முடியல "முட்டாக்கூ..." அவனால தான்டா இருடா இப்பவே என்ன செய்றேன் பாரு. "டேய் வேணான்டா முடிஞ்சது முடிஞ்சிருச்சு இதுக்கு மேலயும் இத பெருசாக்கி அப்பாவ ஸ்டேசன் அதுனு அலைய வைக்காத"..." அவன நா பாத்துகிறேன்" என்றான். "ஒரு நிமிசம் நான் சொன்னத கேட்ருந்தா பிரச்சனயே இல்லயே டா" "சரி தான் டா விடு சொந்தமா இருந்தாலும் இந்த மாதிரி சூழல்ல தான் அவனுங்க யாருனு தெரியும்"..." தெரிஞ்சுக்கிட்ட வரை நல்லது நெனை" என்றான். அவன் சொன்னதும் சரியாக இருந்தது. அப்போதைக்கு அப்பா நிம்மதியாக இருக்கவே விரும்பினேன். அரசனை அனுப்பி விட்டு உள்ளே சென்றேன். அப்பா உறங்கிக் கொண்டிருந்தார். ஆழ்ந்த உறக்கம் தான் ஆனாலும் முகத்தில் அதற்கான சாயல் இல்லை. நானும் போய் படுத்தேன். அடுத்த இரண்டு வருசத்துக்கு பிறகு அத்தையின் மூத்த மகளுக்கு கல்யாணம் வைத்தார்கள். எத்தனையோ பேர் வந்து சொல்லியும் "யேப்பா என்னருந்தாலும் தாய்மாமன் முறைய விட்டுக் கொடுக்கலாமா" என்ற போதும் "அந்த ஒறவுலாம் அன்னைக்கே அத்துப்போச்சுனே" என மறுத்து விட்டார். இத்தனை வைராக்கியமாக இருந்தவர் இந்த ஆறு வருடத்தில் ஒரு முறை கூட அத்தையின் முகத்தில் கூட விழிக்கவில்லை. அப்படிபட்டவர் இப்போது ஏன் போக வேண்டும். டிவியில் "கொரோனா பாதிப்பினால் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு" என செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அப்பாவும் அம்மாவும் வீடு வந்தனர். அம்மா உள்ளே சென்று குளிக்க போனார். ஆத்திலேயே குளித்து விட்டு வந்ததால் அப்பா துணியை மட்டும் காயப்போட்டு விட்டு தலையை துவட்டிக் கொண்டிருந்தார். மெதுவாக என் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். கொஞ்ச நேரம் இருவருக்கும் இடையே அமைதி நிலவியது. பின்பு நானே அதை உடைத்தேன். "ஏன்ப்பா போனீங்க"...." எங்கப்பா போச்சு உங்க ரோசமெல்லாம்" எந்தவித படபடப்புமின்றி அப்பா "மகனே ஒருத்தன் தான் வாழ ஆயுசு இருந்தும் அத வேணாம்னு வாழவே பிடிக்காம செத்துருக்கயான்டா"...." உசுர விடுறது என்ன சாதரண விசயமா, அவேன் அத்தன வலியில இருந்துருக்யான்டா". "அதுக்குனு" "மகனே உசுரோட இருக்கிற ஒருத்தன்கிட்ட காட்றதுக்கு பேரு தான்டா ரோசம் செத்த மனுசன் கிட்ட எதுக்குடா ரோசம்" ………"அப்டி செத்தவன்கிட்ட காட்டுறதுக்கு பேரு வறட்டு கௌரவம்"...என்றார். அப்பா கோர்ட்டில் தந்த முத்தத்தை அவருக்கு திருப்பி தரனும் போலிருந்தது. ஐ.முரளிதரன் 8098281451.

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.