logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

பரிவை சே.குமார்

சிறுகதை வரிசை எண் # 184


வாழ்வின் பௌர்ணமி ------------------------------------- கடந்த ஒரு வருடத்தில் அவன் அடிக்கடி செல்லும் இடமாக மாறியிருந்தது தனுஷ்கோடி. தனுஷ்கோடி... ஒரு காலத்தில் இலங்கையுடன் கடல்வழி வாணிகம் செய்த துறைமுகமாக இருந்த சிறு நகரம். 1964 புயலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுடன் கடல் கொண்டு போன ஊர். அன்றைய அழிவின் மிச்சமாய் சில சிதைந்த கட்டிடங்களை சோகத்துடன் சுமந்து கொண்டு நிற்பதைப் பார்க்கும் நமக்கு அன்றைய தனுஷ்கோடி எத்தனை அழகானதாய் இருந்திருக்கும், இயற்கை இப்படிச் செய்துவிட்டதே என்ற எண்ணத்தை விதைத்து, வலியை ஏற்படுத்துவதை அந்த மண்ணை மிதித்த ஒவ்வொருவரும் உணர முடியும். இன்றைய தனுஷ்கோடி என்பது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக சில கடைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் சில மீனவக் குடும்பங்களுடன் தன் உயிர்ப்பைக் காட்டிக் கொண்டிருப்பதாகவும் சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடமாகவும் மட்டுமே இருக்கிறது. கொத்தாக மரணித்த மனிதர்களின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் அந்த மண்பரப்பு பற்றி பலருக்குத் தெரியாமல்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட இடத்திற்கு ஒரு மனிதன் அடிக்கடி வருகிறான் என்றால் அவன் கண்டிப்பாக உள்ள மகிழ்வுக்காக வரவில்லை என்பதுடன் ஏதோ ஒரு வலி இருக்கக்கூடும் அல்லவா..? அப்படியான வலியைச் சுமந்துதான் அவன் அங்கு வந்து கொண்டிருக்கிறான். காரை ஓரமாக நிறுத்திவிட்டு கடைகளின் ஊடே பயணிக்கும் ஒற்றையடிப் பாதையில் நடந்து மணல்வெளியில் சிறிது பயணித்து சிதைந்திருந்த கோவில் போன்றதொரு கட்டிடத்தின் அருகில் நின்ற வேலிக்கருவை மரத்தடியில் அமர்ந்து அன்றைய நாள் முழுவதும் கடலையே வெறித்துக் கொண்டிருப்பதுதான் அவனின் வாடிக்கை. அங்கு வந்ததும் தனது போனை ஊமையாக்கி காருக்குள் போட்டுவிட்டுத்தான் இறங்கி வருவான். அமைதியாய் சீறிவரும் அலைகளைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பான். இப்போதும் அப்படித்தான் அமர்ந்திருக்கிறான் அவன். கிட்டத்தட்ட அவன் ஊரில் இருந்து இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும் போகவேண்டும் எனத் தோன்றும் நாட்களில் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இங்கு வந்துவிடுவான். தன்னுடன் யாரையும் கூட்டி வரமாட்டான், முடிந்தவரை பௌர்ணமி நாளில் அங்கு வந்துவிடுவான். அன்றைய தினம் அவனுக்கான நாள் என்பதில் கறாராய் இருப்பான். அங்கு எவ்வளவு நேரம் இருப்பான் என்பதெல்லாம் தெரியாது. சில நாட்களில் ஒரு மணி, இரண்டு மணி நேரத்தில் திரும்புபவன் பௌர்ணமி அன்று மட்டும் இரவு வரை இங்கு இருந்துவிட்டுத்தான் போவான். அவ்வளவு தூரம் வருபவன் ஒருமுறை கூட மக்கள் கூட்டம் கடலோடு விளையாடி மகிழும் அரிச்சல்முனைப் பக்கம் போவதில்லை, அங்கு செல்ல அவன் விரும்புவதேயில்லை. அவனைப் பொறுத்தவரை தூரத்தில் அலைகளோடு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடலும் சிதைந்திருந்த இந்தச் சில கட்டிடங்களும் தன் மனதிற்கு இதம் கொடுக்கப் போதுமானதாய் இருந்தது. எரிந்து சாம்பலாகி கையில் மீதமிருந்த சிகரெட் துண்டைத் தூக்கி வீசிவிட்டு, தனது அருகில் கிடந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்துப் பார்த்தவன் உதட்டைப் பிதுக்கியபடி அதைத் தூக்கித் தூர வீசினான். எழுந்து வேஷ்டியை அவிழ்த்து பின்புறம் ஒட்டியிருந்த மணல் விழுமாறு உதறிக் கட்டி, மடித்துக் கட்டிக் கொண்டு ரோட்டை நோக்கி நடந்தான். சூரியன் தனது கோபக்கனலை அக்கினியாய் இறக்கிக் கொண்டிருந்தான். மணல்வெளியெங்கும் குடியைக் கொண்டாடும் நண்பர்கள் உடைத்துப் போட்டிருந்த பாட்டில்களின் சில்லுகள் சிதறிக் கிடந்தன. செருப்பில்லாமல் அந்த மணலில் பயணித்தால் பீங்கான் துண்டுகள் பதம் பார்ப்பது நிச்சயம். அவற்றை மெல்லத் தாண்டி நடந்தவன் வறட்சியாய் சிரித்துக் கொண்டான். அவனின் மனசுக்குள் 'குடிக்கிற சரி அதெதுக்கு நாலு பேர் வர்ற பாதையில உடைச்சிப் போட்டுட்டுப் போறே... இரவு நேரத்துல போலீஸ் இந்தப் பக்கம் யாரும் வரவிடாமப் பண்ணினால் நல்லாயிருக்கும். இது இப்படியே போகும் போது கூடிய விரைவில் இந்தச் சில்லுகள் கடற்கரையில் ஒதுங்கும் சிப்பிகளைப் போல கடலுக்குள்ளும் கரையிலும் இருக்கக் கூடும். இவற்றினால் சுற்றுலாப் பயணிகளின் கால்கள் பாதிக்கப்படப் போவதென்னவோ நிச்சயம்' என நினைத்துக் கொண்டான். அவன் இங்கு வந்த புதிதில் எதற்காக இங்கு வந்து அமர்ந்திருக்கிறான் என்று நினைத்த கடைக்கார மனிதர்கள் ஆளாளுக்கு ஒரு கதை கட்டினார்கள். சிலரோ அவன் எழுத்தாளன் ஏதோ ஒரு நாவல் எழுத இந்தத் தனிமையைத் தேடி வந்திருக்கலாம் என்றும், இன்னும் சிலரோ அவன் எடுக்கப் போகும் படத்துக்கான இடத் தேர்வுக்கு வந்திருக்கலாம் என்றும். அவன் சினிமாக் கவிஞனாக இருக்கும் பாட்டெழுத வந்திருப்பான் என்றும் சொன்னார்கள். போகப்போக அவனின் தொடர் வரவு அவர்களின் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வரும் ஒரு ஊரில் இவனது வருகையை ஆராய விரும்பாமல் தங்கள் தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த போது இவ்வருகை அவ்வளவாக கவனிக்கப்படாமல் போனது என்றாலும் சிலர் சிநேகமாய் சிரிக்கவும் தலையாட்டவும் செய்தார்கள். அவன் மணல் பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்தபோது சங்கு, சிப்பிகளால் ஆன பொருட்களை விற்கும் கடையில் இருந்த சிறுமி தன்னிடம் பேரம் பேசிய பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்துச் சிநேகமாய்ச் சிரித்தாள். அவன் இந்தப் பாதையில் போக வர இருப்பதால் அந்தப் பெண்ணுக்கு அவன் பரிட்சயமானவனாகிப் போனதுடன் நந்தினி என்ற அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நெருக்கமாகவும் ஆகிப் போனவன், இங்கு வரும் போதெல்லாம் அவளுக்காகவே ஏதாவதொரு மாலையை விலை கேட்காமல் வாங்கிக் கொள்வான். தான் சொல்லும் விலையில் பாதியெனப் பேரம் பேசும் மக்களை மட்டுமே பார்த்துப் பழகிப் போனவளுக்கு சொல்லும் விலையை குறைக்காமல் கொடுக்கும் இவன் ஆச்சர்யமானவனாகத் தோன்ற, தன்னிடம் பேரம் பேசுபவர்களிடம் விற்கும் கடைசி விலையை விடக் குறைவாகவே அவனிடம் கொடுக்கும் பொருளுக்கான பணத்தை வாங்கிக் கொள்வாள். அவள் மீது அவனுக்கு ஏதோ ஒரு நேசம், அதற்காகவே அவளிடம் மட்டுமே பொருட்கள் வாங்குவான், அதை யாராவது ஒருவருக்குக் கொடுத்தும் விடுவான். அவளைப் பார்த்துச் சிரித்தபடி, ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருந்த கடைக்குப் போனான். 'எப்ப வந்தீக தம்பி..?' சிநேகமாய்ச் சிரித்தபடி கேட்டாள் கடையில் அமர்ந்திருந்த அந்த தடித்த பெண். 'இப்பத்தாம்மா... சிகரெட் பாக்கெட் ஒண்ணு தாங்க' என்ற நூறு ரூபாயை நீட்டினான். அவன் பயன்படுத்தும் வில்ஸ் கோல்ட் சிகரெட் பாக்கெட் ஒன்றை கொடுத்து விட்டு மீதிச் சில்லறையை எடுக்க, 'அம்மா ஒரு தண்ணிப் பாட்டில்' என்றான். அவள் அதையும் சில்லறையையும் கொடுக்க, பைவ் ஸ்டார் சாக்லெட் ஒன்றை வாங்கிக் கொண்டு அதற்கான காசைக் கொடுத்துவிட்டு 'வர்றேம்மா' என்றபடி அங்கிருந்து அகன்றவன், அந்தச் சிறுமியின் கடையைக் கடக்கும் போது 'நந்து... இந்தாடாம்மா...' எனச் சாக்லெட்டை அவளிடம் நீட்டி விட்டுச் செல்ல, அவளின் 'தாங்க்ஸ்ண்ணா' அவனுக்குப் பின்னே பயணித்து அவன் காதுகளில் நுழைந்து மனசுக்குள் அமர்ந்து கொண்டு உதட்டோர புன்னகையை மிளிரச் செய்தது. சிகரெட்டைப் பிடித்தபடி மீண்டும் கடலையே பார்த்துக் கொண்டிருந்தான். அரிச்சல்முனையில் விரைந்து ஓடி வந்து கடலைத் தொட்ட அலையில் சேலை நனையச் சிரித்துக் கொண்டே 'வாங்க நனையலாம்...' என அவனை இழுத்த மனைவி ஞாபகத்தில் ஓடி மறைந்தாள். சிகரெட்டை விடாமல் இழுத்தான். கண்கள் சிவந்தன. மணலில் கைகளால் குத்தினான். அவள் நினைப்பு வரும்போதெல்லாம் அவனுக்குள் பொங்கும் கண்ணீர் வேகமாய் எட்டிப் பார்த்தது. மணலில் ஊர்ந்து போன ஓணானைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். அதுவும் நின்று திரும்பி அவனைப் பார்த்தது. பக்கத்தில் கிடந்த கல்லை எடுத்து அதன் மீது படாதவாறு வீசினான். பணம், வசதி வாய்ப்பு இருந்தாலும் எம்பிஏவில் அவன் எழுபத்தி எட்டு சதவிகித மதிப்பெண் வாங்கி, முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றவன். ஓரிடத்தில் போய் வேலை பார்ப்பதைவிட அப்பாவின் ரைஸ்மில்லையே பார்க்கலாம் என்று நினைத்தவன் படிப்பை முடித்த கையோடு மில்லில் வந்து உட்கார்ந்துவிட்டான். அப்பாவைப் போலில்லாமல் தொழிலில் என்ன மாற்றங்கள் செய்யலாம், எப்படி இன்னும் லாபம் ஈட்டலாமென அவனின் எம்பிஏ மூளை தீவிரமாக யோசித்தது. அவனின் போக்கில் விட்டுவிட்டதுடன் என்ன செலவு வேணுமின்னாலும் பண்ணிக்கோ என்ற சுதந்திரத்தையும் அப்பா கொடுத்து விட்டதால் அவனின் யோசனைகளைச் செயலாக்குவதில் எந்தத் தடங்கலும் இல்லாமல் போனது. கல் குருணை நீக்கப்பட்ட அரிசியை சொந்தப் பிராண்ட் பெயரில் விற்பனை செய்ய ஆரம்பித்தான், மொத்த விற்பனை என்ற அளவில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தான். தொழிலில் இன்னும் பெரிய வளர்ச்சி அடைய வேண்டுமென உழைக்கக் கூடிய குணமிருந்ததால் அடுத்தடுத்த கட்டத்துக்கான நகர்வு தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதற்கான பயனாக அப்பாவிடம் இருந்ததைவிட அவன் கைக்கு வந்தபின் லாபத்தின் மதிப்பில் நிறையவே மாறுதல் தெரிந்தது. மகனின் வேகமும் விவேகமும் இனிமேல் தொழிலில் வளர்ச்சியைக் கூட்டுமே தவிர வீழ்ச்சிக்கு வழிவகுக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தவர், மில் சம்பந்தமான விசயங்களை அவனிடம் பேசிக் கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டுத் தனது அரசு ஒப்பந்தக்காரர் வேலையில் பிசியாகிவிட்டார். ஐந்து வருடங்களுக்கு முன் அத்தை வீட்டுத் திருமணத்துக்குப் போனவன் அங்கு வைத்துத்தான் அவளை முதன் முதலில் பார்த்தான். அந்தப் பார்வையிலேயே அவன் அவனுக்குள் வந்து ஒட்டிக் கொண்டாள். அதன்பின் 'அவள் யார்..?'. 'எந்த ஊர்..?' என்பதையெல்லாம் மச்சான் ராஜேஷிடம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டான். அப்பா திருமணப் பேச்சை எடுத்தபோது அத்தை வீட்டில் வைத்து இந்தப் பெண்ணைப் பார்த்தேன், நம்ம அத்தைக்குத் தூரத்துச் சொந்தமாம். எம்.சி.ஏ படிச்சிருக்காளாம். அழகி, மிடுக்கி என்றெல்லாம் சொல்லி வேற ஏதோ ஒரு பெண்ணைப் பார்க்கிறதுக்கு இவளையே கேட்கலாமே... பெரியவங்க நீங்க போயிப் பேசிப்பாருங்க ஒத்துவந்தா பாக்கலாம் இல்லைன்னா உங்க விருப்பப்படி வேற பொண்ணைப் பாருங்க என்று சொல்ல, அவனின் விருப்பத்துக்கு எதுக்கு குறுக்க நிக்கணும், நல்ல பொண்ணா இருந்தா கட்டி வைக்கிறதுல தப்பில்லையே என நினைத்த அப்பா, தனது தங்கையிடம் விசாரித்து அவர்கள் வீட்டுக்குப் போய் பெண் கேட்க, இந்தக் காலத்தில் பெரும் தொழிலதிபரின் பணக்காரப் பகட்டில்லாத பையனுக்கு யார் கட்டமாட்டேன் என்று சொல்வார்கள். எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்கள் உடனே ஒத்துக்கொள்ள, குன்றக்குடி அடிகளார் தாலி எடுத்துக் கொடுக்க பெரிய மண்டபத்தில் தடபுடலாகத் திருமணத்தை நடத்தினார்கள். மனைவியை எவ்வளவு மகிழ்வாக வைத்திருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்வாக வைத்திருந்தான். ஏதாவது வேலைக்குப் போகிறேன் என்றவளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக, தனக்குத் தெரிந்த பச்சையம்மாள் கல்லூரித் தாளாளரிடம் பேசி, அவரின் நண்பரின் சுயநிதிக் கல்லூரியில் கணிப்பொறி ஆசிரியையாகச் சேர்த்து விட்டதுடன் அவளை கல்லூரிப் ஆசிரியராவதற்கான தேர்வுகளை எழுதவும் சொல்லியிருந்தான். 'ரெண்டு மூணு வருசத்துக்கு நாம சந்தோசமா வாழ்ந்துட்டு அப்புறம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம், இப்பவே பெத்துகிட்ட அதன் பின்னாடியே போக வேண்டியிருக்கும், நமக்கான சந்தோசம் இல்லாமலே போயிரும்' என்றவளின் பேச்சு சரியெனப்பட, அவனும் ஆமோதித்தான். திருமணத்துக்கு முன்னர் வெளிநாடு போன நண்பன் முருகன், பதினைந்து நாள் விடுமுறையில் வந்து திருமணத்தை முடித்து விட்டுத் திரும்பிப் போய்விட்டு, வருடம் ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வருகிறான். திருமணமான ஆறு வருடத்தில் ஆறு மாதமே அவனுக்கான தாம்பத்ய வாழ்க்கை, அதில் அவனுக்கு இரண்டு மகள்கள். மனைவியுடனோ குழந்தைகளுடனோ மகிழ்வான வாழ்வு வாழ முடியாத அபாக்கியசாலிடா நான் என ஊருக்கு வரும்போதெல்லாம் புலம்புபவனிடம் 'நீ இங்கயே ஏதாவது பாருடா' என்றால் 'உங்கப்பா உனக்கான வாழ்க்கைக்குச் சேர்த்து வச்சிருக்காருடா மச்சான்... எங்கப்பாவோ மூணு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டு எந்தலையில கடனைத் தூக்கி வச்சிட்டாரு. அதுல இருந்து மீண்டு வரும்போது மீண்டும் ஏதாவதொரு கடன் என் தலையில் ஏறிக்குது. இதுல நான் எங்கிட்டு இங்க வந்து குடும்பத்துடன் சந்தோசமா இருக்க, எந்தலையில இந்த வாழ்க்கையின்னு எழுதுனவன் பாவம் அவ தலையிலயுமில்ல திருமணச் சந்தோசம் இல்லைன்னு எழுதிட்டான் என்று புலம்புவான். முருகனுடன் ஒப்பிட்டால் தனக்கான வாழ்க்கையை மகிழ்வானதாய் இறைவன் எழுதி வைத்திருக்கிறான் என நினைத்துக் கொள்வான். அவள் என்ன சொல்கிறாளோ, என்ன கேட்கிறாளோ அதை உடனே செய்து கொடுத்துவிடுவான். பொண்டாட்டிதாசன் என்ற பெயரை அவனின் சகோதரிகள் வைத்தபோதும் சிரித்துக் கொண்டே 'அவ கேக்குறதைச் செஞ்சா பொண்டாட்டிதாசனா...? அவளுக்குத் தேவையானதைத்தான் கேட்கிறாளே தவிர அக்கா தங்கச்சிக்கெல்லாம் எதுவும் செய்யாதே... அவளுக இங்க வரக்கூடாதுன்னு எல்லாம் அவ சொல்லலையே' எனச் சிரிப்பான். 'ம்... அதையும் சொல்வாளே... அவ அப்படியெல்லாம் சொல்றவ இல்லடா... ஆனா நீ கூடிய சீக்கிரம் சொல்லிருவே' எனச் சொல்லிச் சிரிக்க, அவனும் அதில் சேர்ந்து கொள்வான். இதுதான் மகிழ்ச்சி, இதுதான் நிறைவு என்பதை அவன் அவளுடனான வாழ்க்கையில் உணர்ந்தான். அவனைக் குழந்தை போல் பார்த்தாள். அவளின் அன்பில் தாய்மையை உணர்ந்தான். பலமுறை இராமேஸ்வரத்துக்கு வந்திருந்தாலும் திருமணம் முடிந்தபின் முதல்முறை அவளுடன் அங்கு வந்த நாள் அவனுக்கு அத்தனை மகிழ்வைக் கொடுத்த நாள் எனலாம். அந்த நாளை எப்போதும் மனதில் வைத்திருப்பான். இராமநாதசுவாமி கோவிலில் இருபத்திரெண்டு தீர்த்தத்திலும் குளித்து, சாமி கும்பிட்டு கிளம்பும் போது 'இங்கேருங்க நான் வரும்போதே உங்ககிட்ட அரிச்சல்முனைக்குப் போகணும்ன்னு ச் சொல்லிட்டேன். நேரமாச்சு வேலையிருக்குன்னு கதையெல்லாம் விடக்கூடாது' என்றவளிடம். 'அம்மணி சொன்னதை மறப்பேனா..?' என்றபடி காரைத் தனுஷ்கோடி ரோட்டில் திருப்பி, அவளை அரிச்சல்முனைக்குக் கூட்டிச் சென்றான். பறந்து விரிந்த கடலைப் பார்த்ததும் அவள் குழந்தையானாள்... பாதம் நனைய தண்ணீருக்குள் இறங்கியவள் எகிறி அடிக்கும் அலை சேலையை நனைப்பதை ரசித்தபடி 'என்னது... கடலை எதிரியைப் பார்க்கிற மாதிரிப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க... வாங்க நனையலாம்' என அவனை அழைத்துப் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் தூரத்தில் தெரியும் படகைப் பார்த்துக் கொண்டு நின்றவனை ஓடிவந்து இழுந்துக் கொண்டு ஓடினாள். அவன் தோள் பிடித்து முழங்கால் அளவுத் தண்ணீர் வரை போனவள் 'என்னய விட்டா இப்பவே குளிச்சிருவேன்' கண்கள் மகிழ்வில் விரியச் சொன்னாள். 'இப்பத்தானே ராமேஸ்வரத்துல குளிச்சே..?' என்றவனிடம் 'ஏம்ப்பா நான் கடல்ல குளிக்கணும்ன்னு சொன்னா... நீங்க ராமேஸ்வரம்ங்கிறீங்க... அங்க அலையே இல்லைப்பா... அங்க உடுத்துன துணியள வெளியில போடுங்கன்னு கத்திக்கிட்டே இருக்காங்க ஆனா நம்மாளுங்க கடலுக்குள்ளயே அவுத்துப் போட்டுடுறாங்க.... நடந்தா கீழ துணிங்க கால் வைக்கவே அருவெறுப்பா இருக்குதுல்ல... இங்க பாருங்க... அலை எப்படி வருது... தண்ணியும் சுத்தமாயிருக்கு...' இப்போதும் அவளின் கண்களில் மகிழ்ச்சி மின்னலாய். 'பாரு டிரஸெல்லாம் நனையிது' என்றவனிடம் 'கடல்ல நனையிறது ஒரு சுகம்... அதைவிட போட்டிருக்க டிரஸ் நனைய ஆட்டம் போடுறதுல இருக்க சுகம் வேற எதுலயும் இருக்காது தெரியுமா..?' என்றபடி ஆட்டம் போட்டாள். நீண்ட நேர ஆட்டத்துக்குப் பின் 'போலாமா..?' என்றவனிடம் 'ப்ளீஸ்... இன்னும் கொஞ்ச நேரம்' என்றபடி சிப்பிகளைப் பொறக்கி சேலை முந்தானையில் வைத்தபடி மீண்டும் மீண்டும் முழங்கால் அளவுத் தண்ணீருக்குள் இறங்கி ஆட்டம் போட்டாள். வீட்டுக்குத் திரும்பும் போது தனுஷ்கோடியில் இருக்கும் மீன் கடையில் அவள் விரும்பிய பெரிய மீனைப் பொறிக்கச் சொல்லி வாங்கிக் கொடுத்ததுடன் அவளுக்கு விருப்பமான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தான். புயலின் எச்சங்களாய் நின்ற கட்டிடங்களைப் பார்க்கணும்ன்னு அவ சொன்னதும் அவளுடன் நீதிமன்றம், தேவாலயம், கோவில் என அழிவின் சொச்சமாய் நின்ற இடங்களைப் பார்த்துக் கொண்டு வந்தான். இதோ இந்தக் கோவிலின் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு போட்டோ எடுக்கச் சொன்னாள். அவனும் போட்டாவாய் எடுத்துத் தள்ளினான். அந்த நினைவுகள் அவனுக்குள் சிதிலமடையாமல் இருந்தது. தூரத்துக் கடலில் படகொன்று அலையோடு ஆடிக் கொண்டு சென்றது. தண்ணீர் குடித்துவிட்டு சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு அந்தக் கோவிலைப் பார்த்தான். சிதிலமடைந்த கோவில் ஏதோ ஒரு இறைவியையோ இறைவனையோ தன்னுள் வைத்திருந்திருக்கும், அந்தச் சிலை எங்கே போயிருக்கும்..? கடலோடு போயிருக்குமா..? களவு போயிருக்குமா..? அப்படி என்ன சாமி இருந்திருக்கக் கூடும். ஒருவேளை கடலம்மா கோவிலாகவோ கருப்பன் கோவிலாகவோ இருந்திருக்கக் கூடுமோ என்று நினைத்துக் கொண்டவன் அலையோடு ஆடி வரும் படகைப் பார்க்க, அலையோடு ஆடிய அவள் தெரிந்தாள். கண்ணை நீர் சூழ படகு மங்கலாய் ஆடியது. அவளின் சிறு பிள்ளைத்தனமான அந்த மகிழ்ச்சிக்காகவே பலமுறை அரிச்சல்முனைக்குக் கூட்டி வந்தான். 'பேசாம இராமேஸ்வரத்துல ஒரு வீட்டைப் புடிச்சி அங்கயே இருந்திருங்கடா... அவனவன் கட்டுன பொண்டாட்டியோட ஊட்டி, கொடைக்கானல்ன்னு போவானுங்க... இதுக என்னடான்னா சூரியன் சுட்டெரிக்கிற ஊருக்கு ஊர்வலம் போகுதுக' என வீட்டாரும் நண்பர்களும் கேலி பேசும்போதெல்லாம் 'அவளை நான் அந்த இடத்தில் திருவிழாவில் பலூனைப் பார்த்ததும் மகிழ்ந்து சிரிக்கும் சிறு குழந்தையைப் போல் பார்க்கிறேன்... கடல் நீர் காலில் பட்டதும் மகிழ்வான குழந்தையாய் அவள் மாறிப் போகிறாள்... அவளுக்காக இல்லையென்றாலும் விலை மதிப்பில்லாத அந்த மகிழ்வை ரசிக்கவாவது அங்கு அடிக்கடி போகிறேன் என்று பதில் சொல்வான். அதுதான் உண்மையும் கூட, அந்த நேரத்தில் அவளின் மகிழ்வுக்கு விலை இல்லை. அதை ரசிக்க அவனுக்குக் கிடைத்த அந்த நொடிகளுக்கும் விலையில்லை. வர்ஷன் பிறந்து முதல் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடியதுடன் அடுத்தநாள் மூவரும் அரிச்சல்முனையில் இருந்தார்கள். அவன் மகனை வைத்துக் கொள்ள, அவள் சிறு குழந்தையாய் ஆட்டம் போட்டாள். அந்த முறை அவள் அடுத்தமுறை வருவதற்குள் இந்தக் கடல் வற்றிவிடும் என்பதைப் போல் கிளம்பலாமா என்றபோதும் போகலாம் போகலாம் எனச் சொல்லிக் கொண்டே ஆசைதீர அனுபவித்தாள். அதுதான் அவர்களின் கடைசிப் பயணமும் கூட. ஆம்... திடீரென வந்த உடல் நலக்குறைவில் இருந்து அவள் மீளவே இல்லை... இதே போன்றொரு பௌர்ணமி நாளில் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விட்டாள். அந்த வெற்றிடம் அவனைப் பித்தனாக்கியது... பித்துப் பிடித்தவன் போல இருந்தான். வர்ஷனின் தொடுதலே அவனை மெல்ல மெல்ல மாற்றியது. தற்கொலை எண்ணத்தில் இருந்தவனை மகனுக்காக வாழவேண்டும் என நினைக்க வைத்தது. பணமிருக்கு வயசிருக்கு நான் நீன்னு பொண்ணு கொடுக்க ஆளிருக்கு பின்ன என்ன வருசம் திரும்பப் போகுதுல்ல ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்க எனக் குடும்பமும் நட்பும் சுற்றமும் சொன்னபோது அவளைத் தவிர வேற யாருக்கும் இனி இங்க இடமில்லை... அந்த இடத்தில் வர்ஷன் மட்டுமேன்னு பிடிவாதமாய் உறுதியாய் பிடித்து நிற்கிறான். காலம் என்ன செய்யும் என்பது யாருக்கும் தெரியாதென்றாலும் அவன் அவளின் அன்பில் கரைந்தவன் என்பதால் அவனின் உறுதி அத்தனை சீக்கிரத்தில் உடைபடாது என்பதை வீட்டார் உணர்ந்திருந்தார்கள் என்றாலும் அவன் மனசை மாற்றிக் கொள்ள வேண்டுமெனத் தெய்வத்தின் காதில் தினமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பௌர்ணமி நிலவு வானில் இருந்து ஒளியை பூமிக்கு அனுப்ப, கடற்கரை மணல் வெண்பனியாய் காட்சி அளித்தது. மூன்றாவது முறையாகத் தீர்ந்து போன சிகரெட் பாக்கெட்டைத் தூக்கிப் போட்டுவிட்டு எழுந்தான். வர்ஷனின் நினைவு மெல்ல எட்டிப் பார்க்க, அங்கிருந்து நடந்து காருக்குப் போய் போனை எடுத்து உயிர்ப்பித்தான். சில போன்கள் வந்த விபரங்கள் திரையில் தோன்றி மறைய, அம்மாவுக்குப் போனடித்து வர்ஷன் என்ன பண்றான் எனக் கேட்டுக் கொண்டான். அண்ணாந்து நிலவைப் பார்த்தான்... அது மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அந்நிலவுக்குள் அவள் சிரிக்க,. அவளின் நினைவோ அவனைத் துரத்தியது. கண்கள் குளமாக- அப்படியே நின்றவன்- 'நந்து... இவ்வளவு சீக்கிரம் போகத்தான் என்னைய அத்தனை அன்போடு காதலிச்சியா...?' என வாய்விட்டுச் சொல்லியபடி காரை உயிர்ப்பித்தான். டாஸ்போர்டில் பூக்களுக்கு இடையே சிரித்துக் கொண்டிருந்தாள் நந்தினி,

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.