logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

படைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டி: சிறுகதை: கணக்குப் போடத் தெரியாத கணக்கு வாத்தி! நெருப்பலையார். இராம இளங்கோவன், பெங்களூரு. 'என் உயிருக்கும் மேலான உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட என் காதலி கலைமதி, மரணப் படுக்கையில் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.' என்ற செய்தியை அவளின் தந்தையும், அவளின் தங்கையும் போனில் தொடர்பு கொண்டு, சீக்கிரம் வரும்படி மாறி மாறிச் சொன்னதும் என் உயிரே போனது போல் ஆயிற்று. இந்த உலகமே காலடிக் கீழே நழுவி ஓடுவது போல் உணர்ந்தேன். என் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பெங்களூரிலிருந்து விமானத்தில் புறப்பட்டேன். விமானம் பறக்கத் தொடங்கியதும் என் மனமும் கடந்த காலத்தை நோக்கி பறந்தது. கர்நாடகத்தின் மங்களூரு மாநகரில், கருநாடக அரசின் கன்னட இலக்கிய மாநாட்டில் இந்திய ரூபாய் நோட்டில் உள்ள மொழிகளில் ஆங்கிலம் தவிர்த்து, மற்றப் பதின்மூன்று முக்கிய இந்திய மொழிகளின் இலக்கியவாதிகளுக்குக் கவிதைப் பாட அந்தந்த மொழிகளில் உள்ள சிறந்த கவிஞர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது என்பது எந்த மொழியினரும் கடைப்பிடிக்காத நடைமுறைச் சட்டமாக நிறைவேற்றி வருகின்றது கர்நாடக அரசாங்கம். அப்படி அந்த மாநாட்டிற்கு வந்தவர்களில் தமிழ் நாட்டிலிருந்து தமிழ்க் கவிஞராக கலைமதியும், கன்னட மொழிக்கான கவிஞராக நானும் மாநாட்டில் கலந்து கொண்டோம். மாநாட்டுக் கவியரங்கில் தமிழில் கலைமதியும் கன்னடத்தில் நானும் கவிதைப் பாடினோம். மெய்யாலுமே கலைமதியின் கவிதை பல்வேறு புதியப் புதிய உவமைகளோடு சிறப்பாக இருந்தது. கவிதைப் பாடிய விதமும் குரல் வளமும் சிறப்பாக இருந்தது. கவியரங்கம் முடிந்ததும் நான் தமிழிலேயே பாராட்டினேன். ஆனால், கவிதையோ மரபிலில்லை; புதுக்கவிதையாக இருந்தது. அதுவும் முடிவுக்கு வராத கவிதையாக, முடிவு பெறாமல் முடிந்ததையும் சுட்டிக் காட்டினேன். " ஆமாங்க. எனக்கு மரபுக்கவிதை எழுதத் தெரியாது. கவிதய எப்போதும் முடிக்கத் தெரியாம விடுவத பலபேர் சொன்னதுபோல, நீங்களும் சொல்றீங்க. இது என் பாணியாக இருக்கட்டுமே! " " தமிழ்நாட்ல பொறந்து, தமிழில படிச்சி, தமிழ்நாட்ல வாழற உங்களுக்கு மரபுத் தெரியாதா? உலகில இருக்கிற மொழியில உயர்ந்த இலக்கணம் கொண்ட மொழி தமிழ் மொழி." " நான் படிச்சது எல்லாம் இங்கிலீஷ் மீடியம்ங்க. தமிழ் மேல உள்ள ஆர்வத்தில கவிதை எழுதுறேன். அவ்வளவு தான். " " நெறைய பேரு இந்தத் தப்பப் பண்றாங்க. இது தமிழுக்குச் செய்ற துரோகம். " " எல்லாரும் உங்கள மாதிரி இருப்பாங்களா? உங்களுக்குப் பரந்த மனசுங்க. ஆமாங்க….. எப்பவும் எந்த விழாவுக்குப் போனாலும் அவவங்களப் பத்தி பெரிசா சொல்லி தனக்குத் தானே விளம்பரம் தேடறவங்களத் தான் நான் பாத்திருக்கேன். முதன் முதலா உங்க கவிதயப் பத்தி, " என் கவித எப்படி?"ன்னு என்னிடம் கேக்காம என்னோட கவிதயப் பாராட்டுற உங்களத் தான் மொதமொதலா பாக்கறேன். நீங்க தாங்க ஜென்டில்மேன். ஆமா...தமிழ்ல பேசுறீங்களே? ஒங்களுக்குத் தமிழ் தெரியுமா? " என்று கலைமதிக் கேட்டாள். " என்ன….தமிழ் தெரியுமாவா? ஏங்க நானும் தமிழன் தாங்க; பெங்களூர்ல வாழறதால கன்னடத்தில படிச்சி, கன்னடத்தில எழுதுகிறேன். தமிழிலும் எம். ஏ; கன்னடத்திலும் எம். ஏ. படிச்சவங்க நான். தமிழ் என்னோட தாய்மொழிங்கிறதால தமிழை விட்டுக் கொடுக்கற்தில்ல. ரெண்டு மொழியிலும் எழுதுறேன்." "ஓ….அப்படிங்களா? அப்படினா…. உங்களுக்குத் தமிழில் யாப்பிலக்கணம் தெரிமா? தெரிஞ்சா எனக்கும் கத்துக் கொடுங்களேன். ரொம்ப நாளா மரபுக் கவித எழுதனும்னு ஆச." " கத்துக் கொடுத்தா போச்சி. உங்க நெம்பரக் கொடுங்க. வாட்ஸ்அப்பில சொல்லித் தரேன். " என்று கேட்டு கலைமதியின் கைபேசி எண்களை என் கைபேசியில் பதிவு செய்து கொண்டேன். " நீங்க பெரியவங்க. என்னெ கலைமதின்னே கூப்பிடலாம். வாங்க போங்கன்னு இடைவெளிய கடைபிடித்து என்னெ கூப்பிடாதீங்க. இன்னும் கல்யாணம் கூட ஆகல." " சரிங்க… . " " பார்த்தீங்களா… மறுபடியும்…. என்னெ சுருக்கமா கலைன்னு கூப்பிடுங்க. அப்படிக் கூப்பிட்டா எனக்கு ரொம்பப் பிடிக்கும்." " அப்படியா? இடைவெளி இல்லாம நெருக்கமா ஆயிட்டோமோ? அப்படியே கூப்ட்டாப் போச்சி… . ஆனா...பேரச் சொல்லிப் பேசும்போது ஒருமைல தான் பேச வேண்டி வரும். சில நேரம் வாடிப் போடின்னு கூட பேசிடுவேன்.கோபிச்சிக்கக் கூடாது. பரவாலையா?..... வேணும்னா நீயும் என்னெ வாடா போடான்னு சொல்லிக்கலாம்… ". என்றுதும், என்னைப் பார்த்து கலைமதி சிரித்ததும் நான் மயங்கிட்டேன். அப்படியொரு வசீகர சிரிப்பு. "கலை!.... உன் சிரிப்புல ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கு. சரி… எங்க தங்கி இருக்கே?" மங்களூரில் நட்சத்திர ஓட்டலான மயூராவில் கலைமதித் தங்கி இருப்பதாகச் சொன்னதைக் கேள்விப் பட்டதும், " அட! என்னையும் அதில் தானே அரசாங்கம் தங்க வச்சிருக்கு. " என்றேன். " அப்படியா? ரொம்ப நல்லதாப் போச்சு. " " எதுக்கு? " " என்னங்க மொழித் தெரியாத ஒரு ஊர்ல, தமிழரான உங்கள இங்க பாப்பேன்னு எதிர்பார்க்கல. தமிழைப் பேச வாய்ப்பே இல்லாத இடத்தில நீங்க கிடைச்சது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுங்களா? நிறைய பேசணும். அதனால சொன்னேன்." " சரி… கலை! எப்ப ஊருக்குப் போகப் போறே? கூட யார் வந்திருக்காங்க? அவங்க எங்க?" " வந்த வேல முடிஞ்சது. புறப்பட வேண்டியது தான். நான் தனியாத் தான் வந்தேன்." " தனியாவா?...ஒரு பொம்பள எப்படி தனியா வர முடியுது?" " எனக்கென்னங்க பயம்? என்னை மீறி என்னெ யாரும் எதுவும் செஞ்சிட முடியாது. நான் கண்ணகி மாதிரி. கண்ணகி மதுரய எரிச்ச மாதிரி நானும் எரிச்சுடுவேன். அதனால பயமில்லாம நான் எங்க போனாலும் தனியாத் தான் போய் வருவேன். இதுக்கு வேற காரணமும் இருக்கு. வீட்டில தங்கச்சி, அப்பா மட்டுந்தான். அவங்களுக்கு இலக்கிய உணர்வே கிடையாது. அதனால, நான் அவங்களக் கூப்பிடறதில்ல. தனியாத் தான் போய் வருவேன்." " அம்மா?" " அம்மா இல்ல. எட்டு வருஷ மாச்சு." " ஓ….ஐயாம் சாரி கலை!" " எங்கம்மா செத்துப் போனதுக்கு நீங்க ஏங்க சாரி கேக்குறீங்க? நீங்களா சாகடிச்சீங்க?" என்று கலைமதி புன்னகையோடு சொன்னதும் என்னையும் மீறி எனக்கும் சிரிப்பு வந்து சிரித்து விட்டேன். "சரி. ஒரு நாள் இருந்து மங்களூர்ல முக்கியமான எடங்கள சுத்திப் பாத்திட்டுப் போலாமே? " " நானும் சுத்திப் பாக்கணும்னு நெனச்சேன். எனக்கு ஊரச் சுத்திப் பாக்கற்துன்னா ரொம்ப இஷ்டம். அது முடியாதுன்னு நெனச்சேன். இப்பத்தான் நீங்க கெடைச்சிட்டீங்களே!" " ஓ…. நீ சரியான ஊர்சுத்திப் பேர் வழியோ? ஆனா, நான் சுத்திக் காட்டற கைடு இல்லயே கலை! " என்று நான் சொன்னதும் மீண்டும் அந்த வசீகர சிரிப்பில் தடுமாறிப் போனேன். இப்படி ஒரு சிரிப்பை இதுவரை நான் பார்த்ததே இல்லை. முதல் முறையாக அனுபவிக்கும் போது என்னை என்னவோ செய்தது. சுதாரித்துக் கொண்டேன். "மாநாடு ஒரு வாரமா நடந்திட்டிருக்கு. இன்னக்கித் தான் உன்னெ பார்க்கிறேன். " என்றேன். " மொழி தெரியாத இடத்தில முன்னால வந்து என்னப் பண்ண? அதனால கவியரங்கத்துக்கு மட்டும் கலந்துக்க இன்னக்கித் தான் வந்தேன். " " தமிழ்நாட்டுக்காரங்க எல்லாரும் தன்னலத்துக்காரங்களா இருப்பீங்களோ? " " ஏன் இப்படிச் சொல்றீங்க? நீங்க நினைக்கற மாதிரி நான் இல்ல. இலக்கிய நிகழ்ச்சினா சோறு தண்ணிக் கூட கேக்காம ரசிப்பேன். தமிழர் நீங்க கிடைப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நாலு நாளு முன்னாலயே வந்திருப்பேன்." " நீ வரேன்னு சொல்லவே இல்லையே? " சொல்லி இர்ந்தா நானே நாலு நாளு முன்னாடி வான்னு கூப்ட்டிருப்பேன். " என்றதும், மீண்டும் கலைமதியின் அந்த மின்னல் சிரிப்பும் பார்த்த காந்தப் பார்வையான அந்த ஓரப் பார்வையும், 'இவளுக்காக உயிரையும் கொடுக்கலாம் போலிருக்கே' என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன். அந்தளவுக்கு என்னை என்னவோ செய்தது அவள் பார்வையும் சிரிப்பும். "சரி. வா! ஓட்டலுக்குப் போயி சாப்டுட்டு, சாவகாசமா பேசலாம். " என்றேன். " சரிங்க. ஆனா எப்படிப் போற்து? " " அதான் மாநாட்டுல கலந்துக்கிற எல்லார்க்கும் சைரன் வச்ச கவர்ன்மெண்ட் கார் இருக்கே… . நீயும் அதில தானே வந்திருப்பே? பார்க்கிங்கில கார் இருக்கும். டிரைவர் அங்கத்தான் இருப்பாரு. வா போலாம். " என்றதும், " சரிங்க. " என்று சொன்னதும் இருவரும் போய் காரைக் கண்டு பிடித்து, காரில் ஏறி புறப்பட்டோம். கார் ஓட்டலை நோக்கிப் போய்க் கொண்டு இருந்தது. திடீரென எங்களிடையே ஏற்பட்ட மௌனத்தைக் கலைக்க, நான் கேட்டேன். " கலை! நீ என்ன செய்கிறாய்? அப்பா எங்க வேலை செய்றார்? உன் தங்கச்சி படிக்கிறாளா? உனக்கு என்ன வயசு? ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கிலே?..... " " அலோ...அலோ...இருங்க… இருங்க… அரசியல்வாதிய சுத்தி பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து பத்திரிகைக்காரங்க கேக்குற கேள்விய நீங்க ஒரே ஆளு இப்படி அடுக்கிட்டே போனா நான் எப்படி எதுக்கு பதில் சொல்றது? மொத்தமா என் கதைய சுருக்கமா சொல்றேன். அதில உங்க எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைச்சிடும். சரிங்களா?" என்று கலை சொன்னதும், நான் அவளையே வைத்தக்கண் வாங்காமல் இமைகளை இமைக்காமல் பார்த்தேன். " என்னங்க… . பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடைய மொறச்சிப் பாக்குற மாதிரி பாக்குறீங்க? " " மொறச்சிப் பாக்கல… உத்து கவனிக்கிறேன்; நீ சொல்லு? " " நான் என்ன பாட்டிக் கதையா சொல்லப் போறேன்? " என்று சொல்லி மின்னல் போன்று புன்னகைத்து விட்டு பேசினாள். "என் அப்பா ரிட்டேர்டு மேக்ஸ் டீச்சர். நான் மூத்தவள்; நானும் பிரைவட் காலேஜில மேக்ஸ் துணைப் பேராசிரியர். என் தங்கச்சி சாப்ட்வேர் என்ஜினீயர். என் அப்பா பென்ஷன் வாங்கினாலும், என் தங்கச்சி சம்பாதிச்சாலும் யாரும் ஒரு ரூபா கொடுக்கற்தில்ல என் சம்பளத்திலத் தான் குடும்பமே நடத்துறேன்… . .. " " என்ன…..அவங்க பணம் கொடுக்கற்தில்லயா? அவங்க மட்டும் பணத்த சேக்கும்போது, உனக்குன்னு நீ சேத்து வைக்கற்தில்லயா? " " அப்பா சேத்தெல்லாம் வைக்கிற்தில்ல… … " " அப்போ அவரோட பென்ஷன் பணம் என்னாவுது? " " வைப்பாட்டிக்குச் செலவுப் பண்றாரு." " என்ன… ஙொப்பாவுக்கு இந்த வயசில வைப்பாட்டியா? " " வாலிப வயசில காதலிச்சாராம்; என்னோட தாத்தா பாட்டிப் பாத்து என்னோட அம்மாவ கட்டி வச்சுட்டாங்க; என்னோட அம்மா கருப்புன்னு முழு மனசோட ஏத்துக்காம காதலிச்சவளயும் விடாம இப்ப வரை வச்சிட்டிருக்காரு. என்னோட அம்மா மனம் நொந்து நொந்து செத்துப் போயிட்டாங்க." " கருப்புன்னு சொல்லி எப்படி ரெண்டு பொண்ணப் பெத்துக்கிட்டாரு? வாத்தியாருனு சொல்றே… ஒழுக்கமே இல்லியே! இவருக்குப் புத்திச் சொல்ல நூறு பேரு தேவையா இருக்கும் போது இவர் கிட்ட படிச்சவங்க எப்படி ஒழுக்கமா இருப்பாங்க? கல்யாண வயசில ரெண்டு பொண்ணுங்கள வச்சுக்கிட்டு… . சே… மனுசனே இல்ல… . " " கல்யாண வயசில்லீங்க… . " " பின்னே?" "கல்யாண வயச தாண்டிய முதிர்கன்னிங்க நானும் என் தங்கச்சியும். " என்று சொல்லி விட்டு கலை சிரித்ததும் என்னாலயும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே கேட்டேன்… .. " என்ன சொல்றே கலை? " " ஆமாங்க. எனக்கு முப்பத்தி மூனு வயசுங்க. சின்ன சின்ன புள்ளிங்கெல்லாம் என்னெ ஆண்டின்னு தான் கூப்பிடுறாங்க. மூஞ்சில சுருக்கங் கூட வந்திடுச்சே தெரியலையா?" " நீ யாரையாவது காதலிச்சு அவங்கூட வாழ வேண்டியது தானே? " " எனக்குத் தான் அந்தக் கர்மாந்திரக் காதல் வரலையே? யாரையும் நம்பி கழுத்த நீட்டவும் தைரியம் வரல. என் அப்பன் மாதிரி இருந்தா என்ன செய்ய? " என்றதும் எனக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். " ஏன் சிரிக்கிறீங்க? " " இல்ல… . சின்ன வயசிலேயே லவ் பண்ணி கெழ வயசிலும் விடாம வச்சிட்டிருக்கிறவர்க்குப் பொறந்த பொண்ணுக்குக் காதல் வரலன்னு சொன்னா சிரிக்காம இருக்க முடியுமா? " " எங்கப்பா காதலிச்சா எனக்கும் காதல் வந்திடுமா? " " காதலிக்காத ஒருத்தர இந்த ஒலகத்தில உன்னால காட்ட முடியுமா? நீ மட்டும் ஏன் இப்படி? சரி… போகட்டும்… ஆனா, எல்லாரையும் ஙொப்பன போல நெனச்சிடாத." " இல்லீங்க… . எல்லாரும் கழுகு மாதிரி என்னோட ஒடம்பக் கொத்தித் தின்ன அலையறாங்களே தவிர தன்னோட தங்கச்சி மாதிரி நினைக்கற்தில்ல. என்னோட நிலைய நெனச்சி யாரும் வருந்தரதில்ல. உதவின்னு கேட்டா… அதுக்குப் பதிலா ஒடம்பக் கேக்குறாங்க. தூ.. என்ன ஒலகங்க இது? " என்று அழ ஆரம்பித்ததும் கலைமதிக்கு, ' எப்படி ஆறுதல் சொல்வது? எப்படி சமாதானப் படுத்துவது?' என்று தெரியாமல் திண்டாடினேன். " கலை… பிலீஸ்… அழாதே. டிரைவர் தப்பா நினைக்கப் போறான். கண்ட்ரோல் பண்ணுங்க. " என்று நான் சொன்னதும், கலைமதி மேலே மார்பகத்தில் மூடியிருந்த துப்பட்டாவில் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, " அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை பாடத்தில, கதைக் காவியங்களில, நாடகம், சினிமா, புத்தகங்கள்ல நீதிக்கதைங்க படிச்சாலும், கேட்டாலும், பார்த்தாலும் இந்த உலகம் திருந்தாதா? என்ன படிச்சி என்ன பிரயோஜனம்? எல்லாரும் படிச்சவங்க தானே? மேடை ஏறி வாய்க்கிழிய கண்ணகி, மாதவி, சீதை, நளாயினி போன்ற புராண இதிகாசக் காவியங்கள்ல வர பெண்களின் கற்பப் பத்தி பேசுறாங்க; ஆனா, மேடய விட்டு எறங்கினதும் கற்பழிக்கற்திலேயே குறியா இருக்காங்க; இலக்கியத்தில சாதிக்கணும்னு நினைக்கிற என்னெ மாதிரி பொம்பளிங்க கற்ப வித்துத்தான் முன்னேற முடியுமா? நாணயமா திறமய வெச்சி முன்னேறவே முடியாதா? இது என்ன பண்பாடுங்க? " இது என்ன மாதிரி இலக்கியம்? என்னெ வித்துத்தான் நான் முன்னுக்கு வர முடியும்னா… . அப்படிப்பட்ட இலக்கியம் மண்ணாங்கட்டி எனக்குத் தேவயில்லிங்க. " என்று மறுபடியும் கண்கலங்கிய கலைமதியைப் பார்க்கவே மனசு கஷ்டப் பட்டது. ' பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைம? ' என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். " இல்ல….. கலை! ஒனக்கு உன்னப் பத்தியும் தெரியல; ஒலகத்தப் பத்தியும் தெரியல." " எனக்கா… .. எனக்கா….எனக்காத் தெரியல?..... " " அம்மா… . தாயி! கூல்...கூல்… சந்திரமுகிப் படத்தில சந்திரமுகிப் பேய் பிடிச்ச ஜோதிகா மாதிரி மொறச்சிக்கிட்டு கேக்காதே! உண்மையில உனக்குத் தெரியல. புராண, இதிகாசம், சங்க இலக்கியங்க, வரலாறு எல்லாத்திலயும் காதல், காமம், பிறன் மனை நாடுதல்னு நிரம்பியிருக்கு. மனைவி இருந்தும் வேறொரு பொண்ண நாடுற விஷயங்க எதில இல்ல? அரசர்களுக்கு எத்தனை மனைவிங்க? பதவி, பணம்னு தகுதிக்கேற்ப காலா காலமா ரெண்டு மூணு மனைவிங்க இருக்கும் போது சாதாரண மனுஷன் ஆசைப் படறதில தப்பு இல்ல. " " நீங்களும் ஆம்பளதான்னு நிரூபிக்கிறீங்க. இல்ல?..... " " அப்படி இல்ல கலை! ஒலகத்தின் நிலைமய சொல்றேன். ஆனா, எல்லாரும் அப்படி இல்ல. யாரோ ஒரு சிலர் இருக்கிறாங்க. நான் இல்லன்னு சொல்லல.என்னெ மாதிரி ஆளுங்களும் இருக்கிறாங்க." " நீங்க ஆம்பளங்கற்தால ஆம்பளிங்களுக்கு வக்காலத்து வாங்கறீங்களா? " " நான் வக்காலத்து வாங்கலை கலை கடந்த கால புராண, இதிகாசம், வரலாறு சொன்னதைச் சொல்றேன்." "சரி… என்னெ பத்தி நானே புரிஞ்சிக்கலனு எப்படி சொல்றீங்க? " " இது உன்னோட பர்சனல் என்பதால கோபிச்சுக்கக் கூடாது; என்னெ தப்பாவும் நினைக்கக் கூடாது." " கோபிக்க மாட்டேன் சொம்மா சொல்லுங்க." " நீ சிரிச்சா அழகா, கவர்ச்சியா இருக்கே. ஒலக அழகின்னு சொல்ல முடியாது. அழகில்லன்னும் சொல்லிட முடியாது; கருப்புமில்லாம, செகப்புமில்லாம மா நிறம். ஒயரமோ சராசரி பெண்களுக்கில்லாத அஞ்சடி ஒயரம். நாட்டுக் கட்டை; அலங்காரமில்ல, ஆடம்பரமில்ல. எளிமையா இருக்கே. இந்த எளிமையே மற்றவரை சுண்டி இழுக்கும் வசீகரம். அதனால, உன்னோட எளிமை, ஏழ்மை மத்தவங்க ஈசியா அடைஞ்சிடாம்னு நெனச்சிருப்பாங்க.'கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா இருக்கும்.'னு ஆசைப் பட வாய்ப்பிருக்கில்லயா? " " இப்ப என்ன சொல்ல வரீங்க? " " நீ கேக்கற்தால வெளிப்படையா சொல்றேன்; தயவு செஞ்சி தப்பா நினைக்காதே! " " இல்ல… . சொல்லுங்க. " "கல்யாணம் செய்துகிட்டு கணவனோடு போனா உன்னெ யாரும் தப்பா நெனைக்க மாட்டாங்க; கிட்ட நெருங்கவும் மாட்டாங்க. இன்னொரு முக்கியமான விசயம் என்னான்னா… நீ உலக அழகின்னு நெருங்கல. உன்னெ பார்த்தால் பெரிய அழகின்னோ, வசதியானவள்னோ உன் மேல ஆசைப் படறதில்ல. நல்ல உடையில்ல; அலங்காரமில்ல; ஆடம்பரமில்ல; சுடிதார் போட்டாலும் அந்தக் காலத்துப் பொம்பளிங்க ஆறு கெஜம் புடவைய மூடிட்டிருக்கிற மாதிரி ரசன இல்லாம துப்பட்டாவ போட்டு நாகரிகம் தெரியாம மூடிட்டிருக்கிறே; ஒன்னெ பார்த்தா காலேஜி புரப்பசர் மாதிரியான தோற்றம் இல்ல. கட்டிட வேல செய்ற சித்தாள் கல்ல, மண்ண, செங்கல்ல தூக்கின தலை மாதிரி முடி உதிர்ந்து முன் வழுக்கை விழுந்த மண்டை, தனியா சுத்துறதால, எல்லார்கிட்டயும் சிரிச்சி பேசறதால சாதாரணமா எடை போட்டு முயற்சித்திருப்பாங்க அவ்வளவுதான்." " என்னெ சந்திச்ச கொஞ்ச நேரத்திலேயே என்னெ நல்லாவே எடை போட்டுட்டீங்களே? பலே ஆள் தான் சார் நீங்க. " " பிலீஸ்...கலை! என்னெ தப்பா நெனக்காதே! உண்மய உணர்த்த நான் உதாரணமா சொன்னேன். இதுக்குத் தான் நான் முதல்லயே கோபிச்சுக்காதே அப்படினு சொன்னேன்." " இத பாருங்க… . என் வசதிக்கு ஏத்த மாதிரி தான் துணி போட முடியும். பிரைவேட் காலேஜில கொறைந்த சம்பளத்தில குடும்பம் நடத்தவே போராடிட்டிருக்கேன். இதில, என்னெ அலங்காரம் செய்யவோ,ஆடம்பரமா வாழவோ முடியாது. நான் யாருக்காக இதெல்லாம் செய்துக்கணும்? என்னாலயும் அலங்காரம் செய்துக்க முடியும்; நான் அதை விரும்பல; எளிமையா இருக்கவே ஆசைப் படுறேன். நான், பெரிய அழகின்னோ வசிதியானவள்ன்னோ காட்டிக்கில. ஆனா… எதுக்கு அநாகரிகமா ஏன் நடந்துக்கிறாங்கன்னு தான் கேக்குறேன். நான் வசதி இல்லாதவள் தான். ஆனா மானத்தோடு கௌரவமா கற்போடு வாழனும்னு நினைக்கிறேன். இது தப்பா? " " இது தப்புன்னு நான் சொல்லலையே…..எவன்னா நெருங்கினா… ' நீங்க என்னெ விரும்புறீங்களா? வாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேளு. ஓடிப் போயிடுவான். உன்னெ வச்சு எவன் அன்பா பாத்துப்பான்னு பாரு. அவன நம்பு. வயசு, வசதி வாய்ப்பு, தகுதி, படிப்பு என்று எதையும் ஆய்ந்து அவன ஆபரேஷன் பண்ணிப் பார்க்காம உன்ன உயிருக்குயிரா நேசிக்கிறானா? அவன ஏத்துக்க. ஒரு வாழ்க்கய அமைச்சுக்க. ஆம்பளத் துணை இல்லாம வாழ முடியாதா' ன்னு குதர்க்கமா கேக்காதே! இப்போதே தனித்து விடப்பட்டிருக்கே. பின்னால தனியா இருக்கும் போது தான் அந்த வலி தெரியும். இப்பத் தெரியாது. நான் பத்திரிகையில படிச்சேன்; நேரடியா தெரிஞ்சியும் வச்சிருக்கேன். 'நான் சம்பாதிக்கிறேன்; வசதியா இருக்கேன்; சந்தோஷமா இருக்கேன்; பட்டப் படிப்பு படிச்சிருக்கேன்; என்னால ஆம்பளத் துணை இல்லாம வாழ முடியும்.'ன்னு சொன்னவங்க கடைசியில அநாதயா போனாங்க. கணவன் மனைவியா வாழற வாழ்க்க இருக்கே அது ஒரு நந்தவனம். அது உனக்குப் புரியாது. இதனால்தான் சொன்னேன்….உன்ன பத்தியே உனக்குத் தெரியலன்னு. " என்று நான் சொன்னதும் கலைமதி ஒன்றும் பேசாமல், அழுதபடி எதையோ யோசித்தபடி கார் கண்ணாடி வழியே சாலையைப் பார்த்தபடி இருந்தாள். சிறிது நேர மௌனத்திற்கு பின், "எல்லாரும் உன்னச் சுத்திச் சுத்தி வர்றதுக்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்." என்று நான் சொன்னதும், சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தவள், ' என்ன அது?' என்று கேட்பது போல் பார்த்தாள். புரிந்து கொண்டு, "அது வேற ஒன்னுமில்ல… .. உன்னைப் பார்ப்பவனுக்குக் கண்டிப்பா சபலம் வந்தே வரும். ஐ மீன் இங்லீஸ்ல சொல்லனும்னா உனக்கு செக்ஸி பேஸ்; உன்னைப் பாக்கறவன் ஆசைப்படத்தான் செய்வான். இந்த விஷயமும் உன்னெ பத்தி நீயே தெரியாத விஷயம்." என்றதும், கேலியாக புன்னகைத்து மீண்டும் சாலையைப் பார்த்தாள். சிறிய மௌனத்திற்கு பின் கார் நாங்கள் தங்கியிருக்கும் ஓட்டலை அடைந்ததும், கீழே இறங்கினோம். கார் டிரைவரைப் போகும்படி சொல்லி விட்டு இருவரும் ஓட்டலின் வரவேற்பறையை அடைந்தோம். " கலை! அயாம் சாரி! நான் உன் மனச புண்படுத்தியிருந்தா என்ன மன்னிச்சிடு." " அய்யோ! சாரில்லாம் வேணாங்க. இவ்வளவு நாளா என்னெ பத்தி நானே தெரிஞ்சிக்காத விஷயங்கள ஞாபகப் படுத்தியதுக்கு நான் தான் ஒங்களுக்கு நன்றி சொல்லணும். தேங்க்ஸ்!" என்று கையெடுத்துக் கும்பிட்டதும், எனக்கு நெருப்பில் நிற்பது போல் ஆகிவிட்டது. என்னதான் இருந்தாலும் நான் இப்படிப் பேசி இருக்கக் கூடாது. நானொரு அதிக பிரசங்கி. " சரி… நீ என் அறைக்கு வருகிறாயா? இல்ல…… உன் அறைக்குப் போகிறாயா? " " நான் கொஞ்சம் தனியா இருக்கணும். பிறகு சந்திக்கலாம். " என்று சொல்லி என் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்றதும், நான் என் அறைக்குச் சென்றேன். என் மனம் கனமாகிக் கனத்தது. 'சந்தித்த முதல் சந்திப்பிலேயே மனம் நோகும்படி செய்து விட்டோமே! மறுபடியும் சமாதானம் செய்து பழைய நிலைக்கே அவளை கலகலப்பாக மாற்ற வேண்டும்' என்று எண்ணி, உடனே என் கைபேசியை எடுத்துத் தொடர்பு கொண்டேன். கைபேசியை எடுத்து அழைத்து, இரண்டு பேரும் ரெஸ்டாரெண்டில் சந்தித்தோம். கலைமதியின் முகத்தில் பழையபடி சிரிப்பைப் பார்த்து ஆறுதல் அடைந்தேன். என்னால் ஏற்பட்ட மனக்கஷ்டம் நீங்கி இருந்ததில் சமாதானமானேன். சாப்பாட்டை முடித்து வேறெதையும் பேசிக் கொள்ளாமல் அவரவர் ரூம்க்குச் சென்றோம். மறுநாள் மங்களூரிலுள்ள முக்கிய இடங்களைச் சுற்றிக் காண்பித்து விட்டு, கடைசியாக நான் மங்களூர் வரும்போதெல்லாம் எனக்கு அறிமுகமான வயதான தம்பதியைப் பார்க்க கலைமதியையும் அழைத்துச் சென்றேன். அப்போது எங்களுக்குக் காபி போட, காப்பிப் பௌடர் டப்பாவைத் திறக்கச் சொல்லி தன் கணவரிடம் கொடுத்தார் பாட்டி. தாத்தாவும் சந்தோஷமா கம்பீரமா டப்பாவைத் திறந்து கொடுத்து மீசையை முறுக்கினார். கலைமதியை அழைத்துக் கொண்டு, சமையலறைக்குள் நுழைந்து, " ஏன் பாட்டி… காபி டப்பாவைத் திறக்க ஓபனர் வாங்கிக் கொடுத்தேனே.. தொலைஞ்சிடுச்சா? ஏன் தாத்தாவ தொறக்கச் சொல்றீங்க. "என்று கேட்டதும், "நீ வாங்கிக் கொடுத்தது இருக்கு; இல்லன்னாலும் நானே தொறக்க முடியும்; ஆனா, எங்க வீட்டுக்காரர் கிட்ட தொறக்கச் சொன்னா… இந்த வயசிலயும் திடகாத்திரமா இருக்கேங்கிற சந்தோஷம் அவருக்கு. இன்னமும் நான் அவர மதிக்கிறேன்; அவர நேசிக்கிறேன்னு அவருக்கொரு சந்தோஷம், தெம்பு வரும். அவர பாத்து எனக்கொரு சந்தோஷம். விட்டுக் கொடுக்கறதிலயும், அன்பா இருக்கற்தலயும் வாழ்க்க இருக்கு. " என்றதும், நான் வியந்து போனேன். " பார்த்தியா கலை? இது தான் வாழ்க்கை. இல்லறந்தான் சரியான பாதை. இனியும் தாமதிக்காம கல்யாணம் செஞ்சுக்கோ! " என்று சொல்லி, பாட்டிக் கொடுத்த காபியை இருவரும் குடித்து விட்டு புறப்பட்டோம். அப்போது பாட்டி என்னைப் பார்த்து, " நீ கட்டிக்கப் போற பொண்ணா? அழகா லட்சணமா இர்க்கா; ஜோடி பொருத்தம் நல்லாவே இருக்கு. " என்றார் மனசில் கலங்கமில்லாமல். " அய்யோ… . பாட்டி! இவங்க தமிழ்நாடு; மாநாட்டில கவிதைப் பாட வந்தவங்க." " உனக்கும் ஒரு தொண வேணும். வாழ்க்கய தொலச்சிட்டு எவ்வளவு நாள்தான் இப்படி தனியாக் கஷ்டப்படுவே? கடைசி காலத்தில உனக்குனு ஒருத்தி வேணும்பா." என்று முந்தானையை எடுத்து எனக்காக வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 'என் இதயத்தில் வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரை யார் தொடைப்பது?' என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்தால் அழுது விடுவேனோ? என்ற பயம் தொற்றியதால், கலைமதியை அழைத்துக் கொண்டு தாத்தா பாட்டியிடம் சொல்லிக் கொண்டு, பாட்டிக் கையில் ஒரு பணத்தொகையைத் திணித்து விட்டு புறப்பட்டேன். அப்போது கலைமதி கேட்டாள்… … "ஏங்க ஏன் அந்தப் பாட்டிம்மா நீ கட்டிக்கப் போற பொண்ணான்னு கேட்டாங்களே...உங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலையா? உங்களப் பார்த்தா கல்யாணமாகாதவர்னு தோணலையே? " " அப்பா...இப்பவாவது என்னெப் பத்தி கேக்கத் தோணுச்சே! நன்றி." என்று பேசாமல் இருந்தேன். " சரி...இப்பச் சொல்லுங்க. " " பெரிசா சொல்ற மாதிரி ஒன்னுமில்ல." " என்னெப் பத்தி பொம்பல நானே சொல்லும்போது ஆம்பல ஒங்களுக்கென்ன? சொல்லுங்க." " என்னெப் பாத்தா உனக்கு என்ன தோணுது?" " நான் ஒங்கல கேட்டா எங்கிட்டயே கேட்டா எப்படிங்க. நான் என்ன ஜோசியக்காரியா? சொம்மா சொல்லுங்க." " நான் திருமணம் ஆனவந்தான். காதலிச்சிக் கல்யாணம் பண்ணேன். வாழ்ந்த வாழ்க்கையே எட்டு வருஷம் தான். எட்டு வருஷத்தில எண்ணூறு வருஷ நரகத்த பொண்டாட்டியால அனுபவிச்சேன். இதல மூணு ஆம்பலப் பிள்ளிங்க. சொந்த வீடு, காருன்னு வசதி இருந்தாலும் கல்யாணம் ஆகாத பிரம்மச்சாரி நீயின்னா, நான் கல்யாணம் ஆன பிரம்மச்சாரி. என் வேதனை,சோகம், துன்பம் எல்லாத்தையும் மறைச்சிக் கிட்டு போலியா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இலக்கியம் இலக்கியம்னு முழு இலக்கியத்தில கவனத்த வச்சி சாதிச்சிட்டேன். இருபத்து நாலு மணி நேரத்த நாப்பத்தெட்டு மணி நேரமா மாத்தி உழைக்கிறேன். இல்லற வாழ்க்கைய அனுபவிச்சு இருவது வருஷத்துக்கு மேல ஆச்சி. ஏறக்குறைய உன்ன மாதிரி தான் நானும். அன்புக்கு ஏங்கித் தவிக்கிற சராசரி மனுஷன்." "என்னங்க ஒளர்றீங்க? உங்க மனைவி?" " எவ்வளவு ஆட்டம் போட்டாலோ அவ்வளவு சீக்கிரம் மேல போய்ச் சேர்ந்துட்டா. இப்ப கட்ட பிரம்மச்சாரி. கடைசி காலத்தில எனக்குத் தொண வேணும்னு அந்தப் பாட்டி நெனக்குறாங்க. என் வாழ்க்கையில இன்னொருத்தியா? வேண்டாம். பட்டதே போதும்னு இருக்கேன். எந்தப் பொண்ணயும் ஏத்துக்க மனசு வரல." " உங்க புள்ளிங்க?" " பொண்டாட்டிப் புள்ளிங்களோடு வாழறாங்க. நான் கடைசி பையங்கூடத்தான் தனி ரூம்ல தனித்தீவா இருக்கேன். செத்துக் கெடந்தா கூட அவங்களுக்குத் தெரியாது. அப்படி உயிர் வாழறேன். வேணாம் கலை. இதுக்கு மேல எதுவும் கேக்காத. நான் அழுதிடுவேன்." " அழுங்க...நல்லா அழுதிடுங்க. அப்பத்தான் மனசில இருக்கிற பாரம் குறையும். தமிழுக்கு, இலக்கியத்துக்கு, என்னெப் போன்றவங்களுக்கு வழிகாட்ட நீங்க வேணும். அழுதிடுங்க." என்று கலைமதி சொன்னதும் தேம்பித் தேம்பி அழுதேன். ஆண்டு கணக்காக அழ வேண்டியத ஒரே நேரத்தில் அழுது தீர்த்தேன். " தேங்க்ஸ் கலை!" " எதுக்கு?" " காலங் காலமா சேத்துவெச்சத இறக்கி வைக்க நீ காரணமா இர்ந்தே இல்ல. அதுக்குத் தான்." நேராக ஓட்டலுக்குச் சென்று ரூமை காலி செய்து விட்டு இருவரும் தொடர்வண்டி நிலையம் சென்று, கலைமதியை அனுப்பி வைத்து விட்டு, அங்கிருந்து நானும் சொகுது பேருந்தில் ஏறி பெங்களூரு வந்தேன். வந்ததிலிருந்து எதையோ பறிக்கொடுத்த மாதிரி ஆனேன். கலைமதியோ மனசு முழுக்க நிறைந்திருந்தாள். என்னையும் மீறி மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவளை மனம் விரும்ப ஆரம்பித்தது என்பதை என் மூளை உணர்த்தியது. ஆசையை எனக்குள் போட்டுப் புதைத்து, கலைமதிக்கு உதவி செய்ய நினைத்தேன். கலைமதிக்கு வாட்ஸ்அப் மூலம் யாப்பிலக்கணம் கற்றுக் கொடுத்தேன். அப்போது தான் தெரிந்தது தமிழே ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரியவில்லை அவளுக்கு என்று. உடனே தமிழைப் பிழையின்றி எழுதிப் பேசுவதற்கான புத்தகங்கள், இலக்கணப் புத்தகங்கள், கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் அவளுக்கு அனுப்பி படிக்க வைத்தேன். பத்திரிகைகளை நானே சந்தாக் கட்டி அவள் முகவரிக்கு அனுப்பும்படி செய்து படிக்க வைத்தேன். நிறைய போட்டிகளில், இலக்கிய விழாக்களில் வாய்ப்பைத் தேடிக் கொடுத்தேன்.பரிசுகள் பெறவும் பரிந்துரைத்தேன். இலக்கியம் மட்டும் வாழ்க்கை இல்லன்னு உணர்ந்தேன். அவளிடமிருந்து ஜாதகம் வாங்கி நானே வரன் தேடினேன். ஆனா, எல்லா வரனையும் தட்டிக் கழித்தாள். திடீரென ஒருநாள், ' ஊனமுற்றவருக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். அப்பா எதிர்க்கிறார். உங்க விருப்பத்தச் சொல்லுங்க.' என்றதும் எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போல் ஆயிற்று. இன்னொரு நாள், ' நானே திருமண மேடை மூலமா ஒருத்தரைப் பாத்திருக்கேன்.' என்றாள்.' கல்யாணம் இல்லாம வாழ முடியாதா? ' என்றாள். பைத்தியம் மாதிரி மாத்தி மாத்திப் பேசினாள். ஒரு வேளை என்னை விரும்பித் தான் இப்படி மாற்றி மாற்றிப் பேசுகிறாளோ? என்ற சந்தேகம் வந்தது. உடனே என் காதலை வெளிப்படுத்தினேன்; மறுத்து விட்டு, " நீங்களும் மத்தவங்க மாதிரின்னு நிருபிச்சிட்டீங்க இல்ல? உங்க வயசென்ன என் வயசென்ன? நான் உங்க மகள் மாதிரி. இப்படி தப்பாப் பேசாதீங்க. " என்று என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். ஆனால், அவள் இல்லாமல் இனி இந்த வாழ்க்கை இல்லை. என்ற நிலைக்கு நான் தள்ளப் பட்டேன். மறுபடியும் பேசினோம். மெல்ல மெல்ல அவளை மூளைச் சலவைச் செய்ய ஆரம்பித்தேன். சில நேரம் ஏற்பாள்; சில நேரம் மறுப்பாள். இப்படியே மூன்று வருஷம் ஓடியது. அவளுக்குப் பிடித்த எதையும் கேட்க நான் வாங்கி பார்சலில் அனுப்பி வந்தேன். அடிக்கடி எங்களுக்குள் சண்டை வரும். பிரிவு ஏற்படும். சில சமயம் என் காதலை ஏற்பது போல் பேசுவாள். திடீரென வெறுப்பது போல் பேசுவாள். நான் குழம்பிப் போவேன். போன் செய்து பேசுவோம். வாட்ஸ்அப்பில் நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம்.' இந்த மெண்டலோடு எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? ஏற்கெனவே ஒருத்தியிடம் பட்டது போதாதா? இன்னும் படணுமா?' என்று நினைப்பேன். ஆனால், என்னால் அவளை மறக்க முடியவில்லை. கலைமதியோ கெஞ்சினால் மிஞ்சுவாள்; மிஞ்சினாள் கெஞ்சுவாள். அவள் அப்படியொன்றும் அழகில்லை; ஆனால், எனக்கு உலக அழகியே அவள் தான் என்று தோன்றியது. நான் வயசானவன்னு நெனச்சி தப்பான ஆளிடம் மாட்டி சீரழிஞ்சிடுவாளோ? என்ற பயம் எனக்கு. அம்மா இல்லை; அப்பா சரியில்லை; தங்கையோ சக்களத்தி போல எப்போதும் சண்டை; வயசு ஏறிட்டே போகுது என்ற ஏக்கம்; இதுவரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காம, ஆசைப் பட்டதை அடைய முடியாமல் தவிக்கிறாள். என் வசதிக்கு அவளை கஷ்டமே தெரியாத அளவுக்கு அவள் ஆசைப்படுகிறதை எல்லாம் வாங்கிக் கொடுத்து சந்தோஷமா வாழவைக்குணும். தப்பான ஆள்கிட்ட மாட்டி சீரழிய விடக் கூடாது. எனக்கும் ஒரு துணை வேணும். அந்தத் துணை கலைமதியாய் இருந்தா அவளுக்கும் பாதுகாப்பா இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். நான்கு வருஷமா சண்டை, பிரிவு, மறுபடியும் சேருதல் என்று போய்க் கொண்டிருந்தது. கலை இல்லை என்றால் சாவதே மேல் என்ற நிலைக்கு நான் வந்து விட்டேன். ஒரு மாதமா. அவளிடம் படித்த மாணவிக்காக எங்கள் இருவருக்கும் சண்டை வந்து, நாங்க பேசாமல் இருந்ததில் இந்தப் பிரிவால் கலை மீது இன்னும் காதல் வெறி அதிகமாயிற்று. பிறகு தான் புரிந்தது; எங்களுக்குள் நடப்பது சண்டை இல்லை; ஊடல் என்று. விமானம் தரையிறங்கப் போகின்ற செய்தியின் அறிவிப்பைக் கேட்டு, பழைய நினைவிலிருந்து சுய நினைவுக்கு வந்து சீட் பெல்ட்டை மாட்டினேன். விமானம் தரை இறங்கியதும், வேக வேகமாக வெளியில் வந்து டாக்ஸியில் ஏறி மருத்துவ மனைக்குள் நுழைந்தேன். கலைமதியின் அப்பா, தங்கச்சி , சொந்த பந்தம் எல்லாம் நிரம்பி இருந்தனர். என்னை எல்லோரும் ஒரு மாதிரியாய் வெறித்துப் பார்த்தனர். எவரையும் கண்டுக் கொள்ளாமல் நேராக கலைமதி இருந்த வார்டுக்குள் நுழைந்தேன். " வந்திட்டீங்களா? உங்களுக்காகத் தான் இந்த உசிரு காத்திட்டிருக்கு." கலைமதியின் ஒடம்பு மெலிந்து, நிறம் மாறி பசலைப் படர்ந்திருந்ததைப் பார்த்ததும் என் மீது அதிகமா ஏக்கம் வச்சிருக்கான்னு புரிஞ்சிக் கிட்டேன். " எதுக்கு இப்படி அபசகுனமா பேசறே? உனக்கு ஒன்னுமில்ல.எமனிடம் வாதாடி கணவன் சத்தியவான் உயிர மீட்ட சாவித்திரி மாதிரி நான் உன் உயிர மீப்பேன். என் உயிரக் கொடுத்து உன்னக் காப்பாத்துவேன். " " நீங்க முதல்ல என்னெ டிசார்ஜ் செய்து அழைச்சிட்டு போங்க." " பைத்தியம் மாதிரி பேசாதே கலை. டாக்டர் டிசார்ஜ் செய்யாம நானா எப்படி, எங்க, எதுக்கு அழைச்சிட்டு போக? " " என்னப் பண்ணுவிங்களோ தெரியாது. வீட்டுக்கோ, ஓட்டலுக்கோ, பெங்களூருக்கோ எங்கோ ஒரு யடத்தில உங்களோடு எனக்கு ஃபஸ்ட் நைட் நடக்கணும். கன்னிக் கழியாமலே செத்திடுவேனோனு பயமா இருக்கு. நீங்க ஆசைப் பட்ட மாதிரி இல்லற சுகத்த அனுபவிச்சி சாகணும். செத்தப் பிறகு எவனுக்காகவோ போற கற்பு ஆசப் பட்ட உங்களோட போகட்டுமே! " " என்னடி உளர்றே? " " நீங்க தானே சொன்னீங்க… ஆண் பிள்ளையா இர்ந்தா செத்துட்டா வாளால நெஞ்சக் கீறி புதைப்பாங்க; கன்னிப் பொண்ணா இருந்து செத்தா பணங்கொடுத்துக் கூலிக்கு ஆளக் கூட்டி வந்து இருட்டறையில பொணத்துக் கூட படுக்க வச்சித்தான் புதைப்பாங்கன்னு. " " அடி லூசு….அந்தக் காலத்தில தமிழர் மரபா இருந்துச்சி. அதத்தான் வள்ளுவரு கூட திருக்குறள்ல எழுதிருக்காரு. அதுக்கேத்த மாதிரி செத்த பிறகு யார் கூடவோ போற கற்பு எங்கூட போகக் கூடாதா? ஊனமுற்றவன ஏத்துக்க நெனச்ச நீ என்னெ ஏத்துக்க மாட்டியா? ஊனமுற்றவன விட நான் அவ்வளவு கேவலமா? எவனுக்கோ கழுத்த நீட்டற நீ உன் மேல உசிரா இருக்கிற எனக்கு நீட்ட மாட்டியான்னு உன் நல்லதுக்காக, உன் மேல வச்சிருக்கிற ஆசை காதலால், கோபத்துல சொன்னேன். அதுக்கு? " " இப்ப உங்க ஆசய நிறவேத்திக்குங்க. நானும் கன்னிக் கழிஞ்சி சந்தோஷமா சாவேன். " " கலை! உனக்கு ஒன்னுமில்ல. நாம கல்யாணம் செஞ்சிக் கிட்டு சந்தோஷமா வாழலாம். ஏண்டி எப்பப் பாத்தாலும் தப்புத் தப்பா கணக்குப் போடுறே! கணக்குப் போடத் தெரியாத நீ என்னடி கணக்கு வாத்தி?" என்று சொல்லி முதன் முறையாக, இறுக்கமாக அவள் நெற்றியில் முத்தமிட்டேன். முதல் முதலாக ஆம்பளையின் ஸ்பரிசம் பட்டதும், தேய்ந்த பிறைநிலா போல இருந்த கலைமதி மலர்ந்தால் பௌர்ணமி நிலவாய். &&&&&&&&&&&&&&&&& Conduct: Neruppalaiyar Rama Elangovan, No:26, 2nd 'D'cross, Sir. M. V. Nagar, Ramaiah coconut garden, Ramamurthy Nagar, Bengaluru- 560 016. South India. Mobile:98455 26064. Email: neruppalaipaavalar@gmail.com ___________________________

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.