logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

J.chellam zarina

சிறுகதை வரிசை எண் # 174


சிறுகதை காற்றுக்கென்ன வேலி..! ******************************************** BY ஜே. செல்லம் ஜெரினா ******************************* ஷவரிலிருந்துத் தாரைதாரையாக நீர் வழிந்தும் அவளின் உடலின் வெம்மை மட்டும் குறையவேயில்லை.'என்ன பேச்சு பேசி விட்டான்? 'இதையும் என் காதாலேயே கேட்க நேர்ந்தது என் அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? குளிர் நீரோடு கண்ணின் சுடுநீரும் கழி விரக்கமும் கூடவே வழிந்தது.கந்தகப்பூக்களுக்கு நடுவே நிற்பது போலே வெம்மை தகித்தது. காலை எழுந்தது முதலே மனம் சரியில்லைதான்! மனதுக்குப்பிடிக்காத விபரீதம் நடக்கப்போவதாய் உள்ளுணர்வு கூவியது. ஆனால் இப்படியோர் மரணஅடி கிடைக்கும் என்று எண்ணத்தானில்லை..... தலையில் கட்டிய துண்டுடன் வந்து அமர்ந்தாள்.'இதோ! இங்கேதான் அவனை முதன்முதலாகப்பார்த்தது. அப்போதே ஒரு மின்னலின் வெளிச்ச அசைவாய் அவளை அவன் ஆகர்ஷித்தான். வசீகரன்! புது இயக்குநன்.கையில் முழு ஸ்கிரிட்டையும் விழிகளில் ஆசையும் நிராசையையயும் ஏந்தியபடி வந்து நின்றவன். நர்த்தனா அப்போது நம்பர் ஒன் நடிகை. தினம் ஆறு ஷிப்ட்டில் நடித்துக்கொண்டிருந்தவள்.அவளைவிட வயதான கிழ ஹீரோக்களுடன் சிணுங்கிச்சிரித்து மரத்தைச்சுற்றி டூயட் பாடி விட்டு பணத்தையும் பேரையும் புகழையும் அள்ளிக்கொண்டிருந்தாள். தன் திறமைக்குத் தீனீ போடுகிற விதமான. ஒரு சப்ஜெக்டுக்காகக் காத்திருந்த நேரம். வசீகரன் வந்து கதை சொன்னான். கனமான தீம். ஹீரோயின் ஓரியண்ட்டட் கதை! சட்டென்று சம்மதித்தவள் மேனேஜரிடம் பேசி தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணிக்கொடுத்தாள்.அவனுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்! அவளுக்கோ ட்ரீம் சப்ஜெக்ட் இரண்டு தண்டவாளமும் இணையாகவே ஓடியது. படமும் சூப்பர் ஹிட்! வசூலோடு பரிசுகளையும் கொண்டு வந்தது. நர்த்தனாவின் திறமை பேசப்பட்டது....கூடவே வசீகரனும் பேசப்பட்டான் அடுத்தடுத்து மூன்று படங்கள் இவளை வைத்தே வித்தியாசமாய்த் தந்தான். குபீரென்று பீய்ச்சியடிக்கும் நீருற்றாய் வசீகரன் பெரிய லெவலுக்குப் போனான். நல்ல நாளும்கிழமையும் பார்த்துக்கொண்டா காதல்வரும்? அது ஒரு பரிசுத்தமான யுகப் புஷ்பம் அல்லவா? நீர் பாய்ந்து நெகிழ்ந்து கிடக்கும் நிலத்தில் விழுந்த விதை காத்திருந்து உயிர்ப்போடு தலையை நீட்டுவது போல காதல் துளிர் விட்டது அவளுக்குள்ளும் மிக இயல்பாக! காதல் சிலுவை மரமா? சந்தன மரமா? தேக்கு மரமா? இல்லையில்லை முழுக்கமுழுக்கவே பாரமா? ஹ்ம்! புதுமையான வலியோடு கூடிய சுகம்! உண்மையான காதலின் புது சுகத்திலும் சோகத்திலும் தத்தளித்தது அவளின் பெண்மனம்! வரிந்துகட்டிக்கொண்டு செய்கிற வேலைகளுக்கிடையிலும்சிறுசிறு புன்னகை பறிமாற்றம் அங்கே நடந்தது. ஒருவர் அறியாமல் ஒருவர் மீது உண்டான நேசத்தின் இழை அது! யாருமற்ற தனிமையில் ஒரு மந்தார மாலையில் "தனும்மா "என்ற அழைப்போடு வசீகரன் தன் காதலை அவளிடம் சமர்ப்பித்தபோது அப்போதுதான் ஏற்றிய அகல் கூட்டம் போல் அவள் மனதில் ஒளிப்பந்தல்கள்! நினைத்துப்பார்த்தால் அதிலும் தனி சுவாரஸ்யமிருந்ததுதான். காத்திருந்த காதல் மனது வசீகரனின் நேசத்தை முழுதாய் அங்கிகரித்து ப்ரிய பூக்களை பூத்துச் சொரிந்தது.அந்த நாளுக்குப்பின்னாக வந்த வேளைகளில் யாருமறியாது தீண்டும் விரல்ஸ்பரிசங்களில் சப்தமிலாது அசையும் இதழசைவில் விழிகளின் இமைநாடகத்தில் ஒரு ரகசிய உவகையின் ஊஞ்சலிருந்ததை மறுக்கவோ மறக்கவோ முடியாதே! அதன்பின்பு.... இருவருமே அறிக்கையிட்டார்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாக.இன்டஸ்ட்டிரீ பொங்கியதுபொறாமையிலும் வேதனையிலும் மகிழ்ச்சியிலும்! புதுப்படங்களைத் தவிர்த்தாள் கையெழுத்திட்டதை வேகவேகமாக முடிப்பதில் முனைந்தாள். வசீகரனின் புதுப்படத்தில் மும்பை ஹீரோயின் வந்தாள் ஏதேதோ கதை உலவியது. இவள் காதுக்கும் வந்தது. ஆனாலும் இவள் அவற்றை மனசில்...... இல்லையில்லை காதில் கூட வாங்கினாள் இல்லை. அவள் பார்க்காத கிசுகிசுவா என்று ஒதுக்கினாள். மனசுக்குள் அவள் காதலின் மீது அத்தனை நம்பிக்கை! மனதளவில் தினந்தினம் புதுமணப்பெண்ணாகத் தயாராகிக் கொண்டிருந்தாள் நர்த்தனா. காதல் அவளின் ஒவ்வொரு செயலிலும் தளும்பிக்கொண்டிருந்தது. புது பங்களாவில் புதுசுபுதிசாய் பொருட்களை ரசனையோடு வாங்கிப்போட்டு வாழப்போகிற வீட்டை கனவுளோடு ஒப்பனை செய்து கொண்டிருந்தாள். இன்று கூட....வசீகரனுக்குப் பிடிக்குமே என்று ஊஞ்சல் ஒன்றை டிசைன் பார்த்துத் தேர்வு செய்துவிட்டு அருகிலிருந்த காபி ஷாப்பில் நுழைந்தாள்.சற்றே மாற்றி செய்து கொண்டிருந்த அலங்காரமும் பாதி முகத்தை மறைத்த குளிர் கண்ணாடியும் மீதியை மறைத்த மாஸ்க்குமாக நர்த்தனாவை யாரும் கண்டு பிடிக்க வில்லைதான். அவள் அமர்ந்திருந்த மேஜைக்குப்பின்னிருந்து வந்த குரல் வசீகரித்தது. ஆம்! அது அவளுடைய வசீகரனின் குரலாயிற்றே! இங்கா....இருக்கிறான்? துள்ளிக்கொண்டெழுந்தவளை துவள வைத்தது அவனுடைய தொடர்ந்தெழுந்த வார்த்தைகள்.! " நான் நர்த்தனாவை கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவில் இல்லைடா? " 'என் காது வேலை செய்யவில்லையா? சரியாகக் கேட்டேனா 'நர்த்தனா குழம்பி இறுகினாள். " இது அநியாயம் டா!கொஞ்சம் பழசை யோசிச்சுப்பாரு மே மாசம் சென்னை வெயிலிலே ஆஸ்பெஸ்டாஸ் குடிசையிலே வெந்து போனோமே நினைச்சுப்பாரு. இந்த வாழ்க்கை அவங்க தந்தது. " ----- அவனுடைய உயிர்த்தோழன்சிவசுவின் குரல். "அதுக்காக நர்த்தனாவைப்போய்....ச்சீ! ஒரு எச்சில் தட்டுலே என்னை சாப்பிடச் சொல்றியா? " "வசீ! வரம்பு மீறிப் பேசுறடா? " "உண்மைதானேடா? அவ என்ன கைபடாத ரோஜாவா? " "ஓவரா பேசுறடா? உன் காதலைச் சொல்றப்போ இதெல்லாம் தோணல்லையா? அவங்க பாட்டுக்கு நிம்மதியா நடிச்சோமோ போனோமான்னு இருந்தாங்க . நீ அவங்க மனசைக் கலைச்சுட்டு இதெல்லாம் பாவம்டா " "ப்ச்! ஏய் நிறுத்துடா பாவம் புண்ணியம்னு! ஏதோ தோணுச்சு ! புரொப்போஸ் பண்ணினேன். அவளும் ஈ ன்னு இளிச்சுகிட்டு இளிச்சவாயன் கிடைச்சான்னு வந்திட்டா . இவளை கட்டிக்கிட்டா இன்டஸ்ட்டிரிலே நாலு பேர் நாலுவிதமாப் பேச மாட்டாங்களா? " " வசீ! நீ ஒரு மனசைக்கொல்றேடா! வேணாம்டா. அவங்க உன்னைக்கட்டிக்கப்போகிற நினைப்புல புதுப்படத்தையெல்லாம் தவிர்த்துட்டாங்க.எதுக்காக உன் காதலுக்காக . இப்போ உன்னோட மறுப்பினால் தொழிலும் அடிவாங்கும்டா....இந்த பாவம் உன்னைச் சும்மா விடாது தொரத்தி தொரத்தியடிக்கும் டா! " "ஹ்ஹா....அவ பெரீய பத்தினி போடா! இதைப்பத்தி பேச்சை நிறுத்து! " வசீகரன் வேகமாக இருக்கையை உதைத்து த் தள்ளிவிட்டு எழுந்து நடக்க சிவசு பின்னாலேயே ஓடினான். விழியோரம் பிறந்த வைரமணிகள் விடைபெறுவது போல உருண்டது கன்னங்களில். அடித்தப் பெருங்காற்றில் கூடிழந்த பறவையொன்று திரும்பத்தன் பழைய உறைவிடத் தேடி வந்து சுற்றி சுற்றி வருவது போல் அழுகைக்கும் மௌனத்துக்குமிடையே அலைபாய்ந்தன எண்ணங்கள் .. அடுத்து வந்த நாட்கள் கல்லாய் இறுக்கம் தந்து உறைய வைத்தன. மௌனமே திரையாய் வருத்தமே கனமாய் நர்த்தனா பனிக்கட்டியாய் நின்றாள். " ஹேய் தனுக்குட்டி! "அவனுக்கே உரிய ப்ரத்யேக அழைப்பு. ஜிலிரென்று பனிமழையில் நனைத்தெடுக்கும் அழைப்பு! இன்று லாவா துப்பியக்குழம்பில் மூழ்கீ வந்தாற் போலிருந்தது. 'இவளைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான்.? காதல் என்ன கைப்பொருளா கைமாற்றி இடம் மாற்றி வைக்க? ' வெறுமையாய் திரும்பிப் பார்த்தாள். "தனுக்குட்டி என்ன திடீர்னு? மாமனை பார்க்காமல் முடியலையா? " கண்சிமிட்டிச் சிரித்தான். நர்த்தனாவுக்கு வாயெல்லாம் கசந்தது.அவள் கண்களிலிருந்தது மையலா? வெறுமையா? அவனால் கணிக்க முடியவில்லை சற்றே நெருங்கி கையைப்பிடிக்கப்போனவளை துள்ள வைத்தது அவள் கையில் தோன்றிய துப்பாக்கி " ஏய்! நர்த்தனா! துப்பாக்கி! " " ஆமாம்! துப்பாக்கி! லோடட்! ட்ரிக்கரை அழுத்தினா நேரா " அவளின் ஒரு கை மேலே காட்ட மறுகை ட்ரிக்கரில் இருந்தது. அவனுக்கு நேராக நீட்டியிருந்தாள். "சொன்னாக்கேளு! இதெல்லாம் என்ன விளையாட்டு " அதற்குள் வியர்வை பூத்துவிட்டது பயம் அப்பட்டமாய்த் தெரிந்தது. "ம்! எப்படியெப்படி? நான் எச்சில் தட்டா? என்னைக் கட்டிகிட்டா நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்களா? " 'ஆஹா… அந்த நாய் போட்டுக்கொடுத்திட்டானா. 'வசீகரன் அவன் நண்பனை அர்ச்சித்தான் மனதிற்குள். "என்ன…உனக்கு பைத்தியமா? எவனாவது ஏதாவது சொன்னா நம்பிடுவியா.? என் காதல் மேல அவ்ளோ தான் நம்பிக்கையா" வசீகரன் அவளிடம் தழைந்து போகவும் காரணம் இருந்தது. அவன் அம்மா காலையில் போனில் அழைத்து தங்கையின் திருமணத்துக்கு பட்ஜெட் ஏறிவிட்டதோடு தேதியும் நெருக்கத்தில் குறித்தாகி விட்டது பணம் அவசரத் தேவை என்று ஓதியிருக்க வசீகரனும் உடனே நர்த்தனாவிடம் வந்து விட்டான். தங்கையின் திருமணத்துக்குப் பின்தான் இவர்களின் கல்யாணம் என்று பேச்சு. எனவே கேட்டதும் பணம் கிடைத்து விடும். தங்கையின் திருமணத்துக்குப் பின்னே அம்மா விருப்பப்படவில்லை என்று ட்ராமா பண்ணி நர்த்தனாவை தள்ளி வைப்பதோ உபயோகித்துக் கொள்வதோ அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தான்.இப்போது இவள் பாயவும் தடாலென்று கவிழ்ந்தான். "அப்போ …யார்கிட்டேயோ நீ பேசியிருக்கே அது உண்மைதானே…ஆனால் உன் கெட்ட நேரம் அன்னிக்கு நீ காபிஷாப்புலே பேசினதை என் காதாலே நானே கேட்டுட்டேன். எப்படியெப்படி …நான் எச்சில் தட்டா.? ஆமாம்டா! எச்சில் தட்டுதான். ஆனா எச்சில் படுத்தினவங்க உன்னை விட நல்லவனுங்கடா. என் உடம்பை மோகிச்சானுங்க அனுபவிச்சானுங்க போயிட்டானுங்க. உன்னைபோல மனசாலே சோரம் போகலை. நீ தான்டா எச்சக்கலை நாயீ! காதலோட பவித்திரத்தையே கெடுத்திட்டியேடா? நீ மனுசனா? உடம்பாலே சோரம் போனாலும் மனசாலே சுத்தமானவடா நான் ....நீ காதல் சொன்னதுமே உன்னை மனப்பூர்வமா விரும்பி ஏத்துக்கிட்டேன். நீ நெருங்கி வந்தப்போக்கூட ஒதுங்கி நின்னேன்.திருமணமான ராத்திரி நீ கட்டுன திருமாங்கல்யத்தோட முழுசா உன்னோடு சங்கமமாகனும்னு நினைச்சேன்.என் உடல் பொருள் ஆவியை உனக்கு நிவேதனமாக்கக் காத்திருந்தேன். ஆனா....காதல்னு சொல்லிட்டு பின் வாங்கின கயவன் உன்னைப்போல ஒருத்தனையும் நான் பார்த்ததில்லை. இன்னொரு தடவை நீ கனவுலே கூட காதல்னு பேசக்கூடாது பாரு டா...பார்த்துட்டேயிரு பத்தினி சாபம் பலிக்குதா இல்லையான்னு ....இனி உனக்கு....நான் சொல்லமாட்டேன். நீயெல்லாம் பூமிக்கு பாரமா எதுக்கு இருக்கனும்.ம்...." விரல் ட்ரிக்கருக்குள் அழுந்தியது "ப்ளீஸ்! என்னை மன்னிச்சுடு என்னைக்கொன்னுடாதே! " வசீகரன் கண்களில் பயம் தாண்டவமாடியது முகம் வியர்வையால் சொதசொதத்திருந்தது. "மன்னிக்கிறதா? நீ செஞ்ச துரோகத்துக்கு ஆயிரம்தடவை கொல்லலாம்டா ...செத்து ஒழி " கோபம் கொப்புளிக்கும் முகத்துடன் ட்ரிக்கரை சுண்டினாள்நர்த்தனா. 'க்ளிக் ' தோட்டா பாயவில்லை.ஆசுவாசப்பெருமூச்சு விட்டான். ஒரு ஸ்டெப் முன்னே எடுத்து வைத்தான். "என்ன பார்க்குறே? வேணும்னுதான் ஒரு குண்டைப்போடாம காலியா வச்சிருந்தேன்.இங்க பாரு" என்று அருகிலிருந்த பூஜாடியை சுட்டாள். சிதறியது. "இப்பக் கன்பார்ம்டா குண்டுஉன்னைத் துளைக்கப் போகுது" ஸ்டெடியாகக் குறி பார்த்தாள். "நோ ! என்னை விட்று ப்ளீஸ் " பயத்துடன் மண்டியிட்டான்.வசதியாய் அருகே வந்து அவன் நெற்றிப்பொட்டில் வைத்து சட்டென்று ட்ரிக்கரை ..அ....ழு...த்...தி...னா...ள். " நோஓஓஓ"கண்களை இறுக மூடிஅலறினான்வசீகரன்.'க்ளிக் ' இம்முறையும்வெடிக்கவில்லைதிக்பிரமையுடன் பார்த்தான். "போட்டிருந்த ஒரே குண்டை பூஜாடியில் வெடிச்சுத் தீர்த்திட்டேன்.இந்தா, துப்பாக்கி நீயே வச்சுக்கோ!" அவன் கையில் துப்பாக்கியைத்தந்து விட்டு சிரித்தாள் நர்த்தனா. எழுந்து நின்று புரியாமல் பார்த்தான். அசராமல் சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தவள் "கன்ல குண்டு போட்டு சுட்டுருந்தா ரொம்ப சுலபமா செத்துருப்ப. ஆனா நான் உன்னைக் கொன்னக் குத்தத்துக்காக என் மிச்ச ஆயுளைஜெயில்ல வேஸ்ட்டாக்கியிருக்கனும். ஆனா இப்ப தோட்டா இல்லாத துப்பாக்கிய வச்சே உன்னை ரெண்டு தடவை கொன்னுட்டேன். இது போதும்டா எனக்குஇனி என் முகத்திலேயே விழிக்காதே. அப்படி கண்ல பட்டேன்னா உன்னைக் கொல்லாம விட மாட்டேன்.போடா வெளியே! இனி…என் மனசிலும் இடமில்லை இந்த வீட்டிலும் இடமில்லை உனக்கு " அவள் கை வாசலைக் காட்டியது. முகம் ரௌத்திரமாய் சிவப்பேறியிருந்தது. சூறாவளியாய் அவன் பேசியவை அவளை இப்போதும் சுழற்றியடித்தது. பெண்ணும் ஒருவகையில் காற்று தான்.காற்றுக்கு வேலி ஏது? தென்றலும் அதுவே ஊழிக்காற்றும் அதுவே. உணர்வைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைத்தவனை சுட்டுப் பொசுக்கிவிடத் துணிந்தது அவளுடைய பெண்மை. அவமானத்தில் முகம் கன்றிப் போய் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியேறினான் வசீகரன். எழுத்தாக்கம் ஜே. செல்லம் ஜெரினா **************

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.