logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

இன்பா

சிறுகதை வரிசை எண் # 161


சலனம் இந்த அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன் அப்பார்ட்மெண்ட்டின், மொட்டை மாடியில் நின்று புதுச்சேரி நகரை பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. நகரின் உயரமான கட்டிங்களில் இதுவும் ஒன்று. மாலைநேர கடல்காற்று முகத்தில் மோதியது. மேகங்கள் சூழுந்திருக்கும் பரந்தவானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாக தோன்றியது. பறவைக்கூட்டம் ஒன்று ஒரு கோலப்புள்ளிகள் போன்ற வடிவத்தில் கூட்டுக்கு திரும்பின. என் கையிலும் உடையிலும் இருக்கும் சிமெண்ட் தூசியை தட்டி விட்டேன். புகை போல் அது பறந்தது. இங்கிருந்து கீழே பார்க்கையில், ஒரு மஞ்சள் நிற ஸ்கூல்வேன் தனியாக கவனம் ஈர்த்தது. செயிண்ட் மேரிஸ் ஸ்கூல் எனும் பெயர் பெரியதாய் எழுதி இருந்தது. "அப்பா, நானும் இந்த வேன்ல ஸ்கூலுக்கு போகணும்" என்று நேற்று செல்வி அடம் பிடித்து அழுதது என் நினைவுக்கு வந்தது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அவளை ஸ்கூலில் சேர்த்தாகவேண்டும். எங்கே, எப்படி சேர்ப்பது…? என் பெண்ணைப் போன்றே மனைவியும். செயிண்ட்மேரிஸ் பள்ளியைத்தான் விரும்புகிறாள். எனக்கும் இஷ்டம்தான். ஆனால், பணம் என்று யோசிக்கும் போது தயக்கம் வருகிறது. அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது?? மொபைல் அடித்தது.. சுந்தரம் என் நெருங்கிய நண்பன் மற்றும் சக தொழிலாளி, எலக்டிரிகல் சூப்பர்வைசர். "ரவி, இன்னும் மாடியிலதான் நிக்கறியா. எம்.டி சார் வந்துட்டாரு. சீக்கிரம் வாப்பா" எட்டி கீழே பார்த்தேன்.. பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் கார் மெதுவாய் அந்தச் சாலையில் வந்தது. ஆம், இது நம்ம எம்.டி கார் தான். அவசரமாய் கீழே வந்தேன். எம்.டி வேணுகோபால் அமைதியாக ஆனால் அங்குமிங்கும் அலையும் கண்களால் அந்த சைட்டை நோட்டம்விட்டபடி நடந்து வந்தார். வழுக்கைத்தலை. சிறிய தொப்பை. குள்ள உருவம். ஆனால், மிகக் கூர்மையான விழிகள். யாரையும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதில் கில்லாடி. "நம்ம கம்பெனி வளர,வளர நான் மட்டும் இல்லை. நீங்களும் சேர்ந்துதான் வளருவீங்க" என்று அடிக்கடி சொல்வார். அவர் சொன்னதுபோலவே எட்டே வருடத்தில் அசுர வளர்ச்சி. இன்று புதுச்சேரியில் முதன்மையான கட்டுமானகம்பெனி என்றால், அது இப்போழுது நான் பணியாற்றிவரும் இந்த வாசன் பில்ட்டெக்தான். டிப்ளமோ படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஒரு பெயிண்டராக தொடங்கி, கஷ்டப்பட்ட போது, என் கை பற்றி தூக்கி விட்டவர் இவர் தான். இதோ இன்று இந்த அரியாங்குப்பம் சைட்டின் பெயிண்டிங் சூப்பர்வைசராக உயர்ந்து இருக்கிறேன். இருபக்கமும் ஊழியர்கள் சூழ்ந்து நிற்க, அங்கே தயாராகவைத்திருந்த சிறிய பிள்ளையார் சிலைக்கு பூஜையை தொடங்கினார் வேணுகோபால். அவருக்கு உதவியாக அருகில், தலைமைப் பொறியாளர் கிருபானந்தம், ஓவ்வொரு வினாயகர்சதுர்த்திக்கும் இப்படித்தான், எங்கள் நிறுவனத்தில் கட்டுமானபணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று தானே பூஜை செய்வார் வேணுகோபால். ஒவ்வொரு ஊழியருக்கும், அடிப்படை தொழிலாளிகளுக்கும் பொரி வகைகள், இனிப்பு, ஒரு பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கியை பையை வழங்குவது அவர் வாடிக்கை. இன்று புதுச்சேரியில் மட்டும் ஐந்து அப்பார்ட்மெண்டுகள், காரைக்காலில் ஒன்று, சென்னையில் ஒன்று என நிறுவனத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூஜைமுடித்து அடுத்த சைட்டுக்கு அவர் கிளம்பியதும் நாங்களும் ஒவ்வொருவராக கிளம்பிவிட்டோம். .. "வாடா. உன்னை டிராப் பண்ணிடுறேன்: என்றான் சுந்தரம். வண்டியில் நான் ஏறிக் கொள்ள, சீரான வேகத்தில் வண்டி ஓடியது. "குழந்தைக்கு அட்மிஷன் என்னாச்சு. செயிண்ட்மேரிசுக்கு போனியா “என்று பைக்கை ஒட்டியபடி கேட்டான் அவன். "ம்..ம்…. குழந்தையை கூட்டிக்கிட்டு போயிருந்தோம். எடுத்த எடுப்பில, உங்க ஒயிப் எதுவும் படிக்கலையே. அவங்க எப்படி குழந்தைக்கு ஹொம்வொர்க்கெல்லாம் சொல்லிக்கொடுப்பாங்கன்னு கேட்டாங்க. நாம சொல்லிகொடுக்கறதுக்கு ஸ்கூல்ல எதுக்குடா சேக்கணும்" “அதான…” "இன்னொரு கொடுமை என்னனா, யு.கே.ஜி படிக்கவந்த குழந்தைக்கு இண்டர்வீயுன்னு ஒரு டீச்சர் தனியா கூட்டிக்கிட்டு போனாங்க. குழந்தை நல்லா பேசறா. ஒன்,டு,திரி எல்லாம் கரெக்டா சொல்றா. செலக்ட் பண்ணியாச்சுன்னு சொன்னாங்க" "சூப்பர்டா. பாண்டில பெஸ்ட் ஸ்கூல்" என்ற சுந்தரத்தின் பேச்சை பாதியிலேயே தடுத்து, "இன்னும் நான் முடிக்கல. உச்சகட்ட கொடுமை இனிமேதான் இருக்கு. முதல்ல, அட்மிஷன் பீஸ் அம்பதாயிரம். அப்புறம் மூணு மாசத்துக்கு ஒரு தடவ இருபதாயிரம். இது தவிர புக் பீஸ், யுனிபாரம் பீஸ் எல்லாம் தனி. கிட்டத்தட்ட ஒரு லட்சம். வருஷாவருஷம் பீஸ் அதிகமாகி கிட்டே போகும்" என் தொனியில் விரக்தி. "ஹூம்.. புரியுது… என்ன செய்யுறது, வேற வழியில்லை. படிப்பு இன்னிக்கு பெரிய வியாபாரம் ஆகிடிச்சி. நானும் என் பொண்னுக்கு ஆயிரக்கணக்கில் பணம்கட்டி, என் சக்திக்கு மீறித்தான் படிக்கவச்சுகிட்டு இருக்கேன். நாமதான் சரியா படிக்கல, நம்ம குழந்தையாவது நல்லாபடிக்கட்டுமே அப்படின்னு நினைச்சுக்கோ" என்றான் அவன். "அடபோடா. என்ன வேணும்னாலும் நினைக்கலாம்.. ஆனா, பணத்துக்கு நான் என்ன செய்யுறது… கொள்ளைதான் அடிக்கணும்" என்று நான் முடிக்கும் முன்பே சிரித்தபடி நாயகன் பட பாணியில் சொன்னான் சுந்தரம். "தப்பில்லை. குழந்தைங்க ஸ்கூல் பீஸ் கட்றதுக்குகொள்ளை அடிச்சாலும் தப்பில்லை" வீட்டுக்குள் நுழைந்து ,சிறிது நேரத்தில், மீண்டும் பள்ளி பற்றிய பேச்சு. இன்னமும் குழந்தையை பள்ளிக்கு சேர்க்கவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அதற்கான செலவுகளும், அது பற்றிய சிந்தனைகளும் ஒரு பெரிய பூதமாய் முன் நின்று இப்படி பயமுறுத்துகின்றன. மேற்கொண்டு அவள் படிக்க,படிக்க வரப்போகும் கல்விக்கான செலவுகளை எப்படி சந்திக்கபோகிறோம் என்று நினைக்கும்போதே இனம் புரியாத ஒரு பயம் அடிவயிற்றில் ஒடியது. "ஏங்க, நகையை வேணா அடகு வச்சுடலாமா". "சரி, இந்த வருஷம் அடகு வைச்சு பணத்தை கட்டிடலாம். அப்புறம்....." என்றேன். அவள் இயலாமையில் தலை குனிந்தாள். என் மனைவி வருந்துவது ஏனோ போல இருந்தது. வீட்டுக்கு ஆகும் செலவை சம்பாதிப்பது தானே புருஷன் கடமை. என் சம்பாத்தியக் குறைவு.. என்னை குடைந்தது. "அது, ஓரு அஞ்சு லட்சம் கிடைச்சா... மூணு, நாலு வருஷத்துக்கு அதை வச்சு மொத்த ஸ்கூல் பீஸையும் கட்டிடலாம். அதுக்குள்ள நானும் தனியா காண்ராக்ட் எடுத்து சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்" சொல்லி முடித்த என்னை பரிதாபமாக பார்த்தாள் அவள். “விடுங்க… நம்ம சக்திக்கு எந்த ஸ்கூல்ல சேக்கமுடியுமோ அங்கேயே சேர்த்துடலாம்". சொல்லிவிட்டு மெல்ல அடுக்களைக்குள் அவள் நகர்ந்தாள். . என்னவென்று சொல்வது?. என்னுடைய மனோநிலையை.தர்மசங்கடம்,வெட்கம்,அவமானம் இவை எல்லாவற்றுக்கும் மேலாக..,,,,,இயலாமை. குழந்தை எதாவது கேட்டால் அதை வாங்கித்தர கையாலாகாதவனாக நிற்பதை நினைத்து, அவமானமாக உணர்ந்தேன். அதுவும் என் குழந்தை ஆசைப்படுவது….கல்விதானே.எங்கள் தெருவில் இருக்கும் மற்ற குழந்தைகள் படிக்கும் நல்ல ஸ்கூலில் சேரவேண்டும் அதுவும் போகவேண்டும் என்று ஆசைப்படுகிறது. அது தவறா…? ஐயோ....அந்த ஆசையை எப்படி நிறைவேற்றுவது....? சின்னஞ்சிறு மனதில் ஏமாற்றத்தை விதைக்க எப்படி முடியும் என்னால்? யோசிக்க,யோசிக்க அயர்ச்சியும், இயலாமையால் கட்டுக்கடங்காத கோபமும் எனக்கும் உருவானது. என் மூர்க்கத்தனம் ஒரு முடிவு எடுத்தது. எப்படியும் பணத்துக்கு ஏதாவது வழியில் ஏற்பாடு செய்தே ஆக வேண்டும் என தீர்மானம் செய்தேன். நானும், சுந்தரமும் கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு பாறையில் அமர்ந்திருந்தோம். இன்று திங்கட்கிழமை என்பதால் அதிக கூட்டம் இல்லை. ஆங்காங்கே சில பெருசுகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கடல்காற்றும், அலைகளின் சத்தமும்.....தூரத்தில் நிலாவெளிச்சத்தில் கடலில் ஒரு பெரிய படகு மிதந்துகொண்டிருந்து. "என்னடா சொல்ற. காமெடி பண்றயா..? என்றேன் சுந்தரத்திடம். "இல்ல. ரொம்ம சீரியசா சொல்றேன். ஆறுமாசாமா நிதானமா யோசிச்சி 'ஸ்கெட்ச் போட்டிருகேன் ரவி" அமைதியாக பதில் சொன்னனான். அவன் முகத்தில் தெரிந்த தெளிவும், குரலில் இருந்த உறுதியும் என்னை ஒரு நிமிடம் உலுக்கிவிட்டது. "இதெல்லாம் நடக்கற கதையா. நம்மால முடியாது" என்றேன் பயத்துடன். "தோ பாரு, உனக்கும் பணம் வேணும், எனக்கும் அவசரமா மூணு லட்சம் தேவைப்படுது. இல்லைன்னா, என்னோட வீட்டை பேங்க்ல் ஜப்தி பண்ணிடுவாங்க. மறுபடி சொல்றேன், அமைதியா நீயே கேளு… "என்றவன் தொடர்ந்தான். "தவளகுப்பத்தில் இருக்கற ஏ.டி.எம்ல செக்யுரிட்டி யாரும் இல்லை. பக்கத்தில இருக்கற கடையெல்லாம் ராத்திரி பத்துமணிக்கு க்ளோஸ் ஆகிடும். மெயின்ரோட்லேர்ந்து தள்ளி இருக்கறதால, நாம ஈசியா வேலை முடிச்சிடலாம்" என்றவன் தொடர்ந்தான். "இதுக்காக ஆறுமாசமா தயாராகிட்டு இருக்கேன். நான் உள்ளே போனதும் நீ ஷட்டரை அடைச்சிட்டு வெளியே நின்னு பாத்துகிட்டு இருந்தாபோதும். மத்தெல்லாம் நான் பார்த்துப்பேன்". "உள்ளே கேமரா எல்லாம் இருக்கும்டா. மெஷினை எப்படிடா உடைக்கமுடியும்" என்றேன். "மறந்துட்டியா. நான் ஒரு எலக்டிரிஷியன். ஏ.டி.எம் மெஷினோட மெக்கானிசம் பாத்துவெச்சு இருக்கேன். முகத்தை மூடிக்கலாம். ஒரு கத்தி, ஒரு கடப்பாரை, ஒரு ஸ்க்ரூ டிரைவர் போதும். எல்லாம் என் வேலை. நீ பக்கத்துல நின்னு பார்த்துகிட்டா போதும். இருக்கற பணத்துல பாதிக்கு பாதி பிரிச்சுக்கலாம். ஒரு பத்து லட்சம் தேறும்ன்னு நினைக்கிறேன்" நான் அவன் சொன்னதை அமைதியாக யோசித்தேன். ரிஸ்க் இருக்கிறது. ஆனால்...ஒருவேளை இந்த திட்டத்தில் நாம் ஜெயித்துவிட்டால்......நினைக்கவே மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறதே, கடல் அலைகளின் வேகம் அதிகரித்து, அவை கடற்கரையில் இருந்த பாறைகளின் மீது மோத, நீர்த்துளிகள் முகத்தில் தெளித்தன. "என்ன நினைக்கறடா" என் சிந்தனைகளை கலைத்தான் அவன். "கொஞ்சம் பயமா, பதட்டமா இருக்கு. யோசிச்சி சொல்றேன் சுந்தரம்". "நல்லா யோசி. நல்ல முடிவா சொல்லு. இதுல பயப்பட ஒண்ணும் இல்ல. இந்த விஷயம் நாம இரண்டுபேரை தவிர இந்த உலகத்துல இருக்குற வேற யாருக்கும் கடைசிவரை தெரியப்போவதில்ல” என்று நிதானமாகவே பேசினான் சுந்தரம். .”நம்ம ப்ளான் தெளிவா இருந்தா போதும். அடுத்த மாசத்துல கவர்மெண்ட் ஹாலிடே ஒரு புதன்கிழமையில வருது. ஓன்பது மணிக்குமேல ரோட்ல ஒரு ஈ.காக்கா இருக்காது. அந்த நாளைத்தான் நான் செலக்ட் பண்ணி இருக்கேன்" என்றான் சுந்தரம். இறங்கி பார்த்துவிடலாம் என்று தோன்றுகிறது. இது எனக்காக இல்லை...குழந்தையின் கல்விக்காக..,,அவள்.எதிர்காலத்துக்காக.. பணம் வேண்டும், வேறு வழியில்லை. காலை ஏழுமணிக்கெல்லாம் செல்போன் அலறியது. கிருபானந்தம். சைட்ல எதாவது பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தேன். "ரவி வீட்லதான இருக்க. உங்க பக்கத்து தெருவுல இருக்கற முன்சிபாலிட்டி ஸ்கூலுக்கு உடனே கிளம்பி வந்துடுப்பா" என்று அழைத்தார். "ஏன் சார். என்ன விஷயம்" என்றேன். "நானும், நம்ம எம்.டி சாரும் ஸ்கூல்லதான் இருக்கோம். அவர் உன்னை பாக்கனும்னு சொன்னார். சீக்கரமா வா ரவி" என்று அவர் சொன்னதும், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எம்.டி சார் எதுக்கு என்னை பார்க்க அழைக்கிறார்?? என்னவாக இருக்கும்.....?? விரைந்தேன். எம்.டி சாரும், கிருபாவும் ஸ்கூல் வாசலில் நின்றுகொண்டு தீவிரமா ஆலோசனை செய்துகொண்டிருந்தார்கள். என்னை பார்த்தும் "வாங்க ரவி. இங்க பக்கத்துல்தான் இருக்கிங்க இல்லையா" என்றார் எம்.டி. இத்தனை வருட அனுபவத்தில் என் பெயரை சொல்லி அவர் அழைத்ததும் இல்லை. என்னிடம் அதிகம் பேசியதும் இல்லை. என் வேலை எல்லாம் கிருபா சாரோடு முடிந்துவிடும். "வணக்கம் சார். ஆமா சார். பக்கத்து தெருவிலதான் இருக்கேன்" என்றேன் பணிவுடன். "ஒண்னுமில்ல. இந்த ஸ்கூலுக்கு நாம கம்ளிட் பெயிண்டிங் ஒர்க் பண்ணப்போறோம். பத்து நாள்தான் டைம். ஸ்கூல் ஒபன் பண்ணறதுக்குள்ள வேலையை முடிக்கனும்" என்றவர், "கிருபா, ரவிக்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுடுங்க. அவர் பார்த்துப்பார். நீங்க ஜஸ்ட் ஒரு பார்வை பார்த்துக்கோங்க" என்றார்.. எனக்குள் முதல்முறையாக ஒரு பெருமித உணர்வு. "ஒகே சார். அப்புறம் டேபிள்,சேர் பர்னிச்சர்லாம் வாங்கணும்னு சொன்னிங்க சார்" "ஆமா, எல்லா செலவுக்கும் கேஷியர்கிட்ட பணமா வாங்கிகங்க. பில்லை அக்கவுண்ட பண்ணபோறது இல்ல." என்றவர் அந்த பள்ளிக்கூடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு சொன்னார். "கம்பெனி நல்லா வளர்ந்துச்சுன்னா, நான் படிச்ச… இந்த ஸ்கூலுக்கு எதாச்சும் செய்யனும்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். அது இன்னிக்குத்தான் நிறைவேறி இருக்கு" என்றார். ஒரு கணம் தடுமாறிப்போனேன். என்னது...நம்ம எம்.டி இந்த முன்சிபாலிட்டி ஸ்கூல்ல படிச்சாரா... "சார், நீங்க எப்படி இந்த ஸ்கூல்ல...." என்று உணர்வை அடக்க இயலாமல் அவரிடம் கேட்டும் விட்டேன். "ஏப்பா. அதுல என்ன ஆச்சரியம். எங்கப்பா ஒரு கூலி தொழிலாளி. அவரால என்னை இங்கதான் சேர்க்க முடிஞ்சது" என்றவர், "படிக்கறதுக்கும், படிக்கற ஸ்கூலுக்கும் என்னய்யா சம்பந்தம்" என்று சிரித்தார் அவர். சட்டென்று சம்மட்டியில் அடித்தால் போல இருந்தது. "ம்.. என்ன மட்டும் தான தெரியும்.. எங்கூட படிச்ச என் நண்பர்கள் பத்தி சொல்லவா.நீங்க வேலை செய்ற அரியாங்குப்பம் சைட்ல, பீ ப்ளாக்ல இரண்டு ப்ளாட் வாங்கி இருக்கறது யார் தெரியுமா? இதே ஸ்கூல்ல என்னோட படிச்ச சீனுவாசன், ஜப்பான்ல ஒரு டாக்டரா இருக்கான். அப்புறம் ஏ ப்ளாக்ல தேர்டு ஃப்ளோர் யாரு, இன்னைக்கு காரைக்கால் போலிஸ்ல எஸ்.பியா இருக்குற .ராஜ்குமார். அவரும் எங்க செட்டுதான். நாங்க எல்லாரும் இந்த ஸ்கூல் தான்…..இதான் எங்க க்ளாஸ் ரூம்…” கை நீட்டி, அவர் காண்பித்த வகுப்பறை என்னை ஏளனமாய் பார்த்தது. அவர்கள் அங்கிருந்து கிளம்பியதுகூட தெரியாமல் அசைவற்று அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன். அதன் பிறகு எனக்கு கொடுத்த பணியை குறித்த நேரத்தில் முடிக்கும் வேலையில் முழுவதுமாக மூழகினேன். நடுவே சுந்தரம் போனில் அழைத்தபோது, அவனது திட்டத்தில் இணையும் முடிவை பற்றி சில தினங்களுக்கு பிறகு பேசுவதாக கூறிவிட்டேன். தற்காலிகமாக அந்த சிந்தனைகளுக்கு ஒரு இடைவேளை விட்டேன். "செயிண்ட்மேரிஸ்ல படிச்சாத்தான் டாக்டர் ஆகமுடியுமா அப்பா. என்னை எதுக்கு இந்த ஸ்கூல்ல சேர்த்த" என்ற கேள்வி கேட்ட குழந்தை செல்விக்கு என்ன பதில் சொல்வதென்று திணறினேன். "அப்படின்னு யாரு சொன்னா. எந்த ஸ்கூல்ல படிச்சாலும் டாக்டர் ஆக முடியும். ஆனா, நல்லா படிக்கனும். அவ்வளவுதான்” "ஆமாண்டா செல்லம். நல்லா படிச்சு மார்க் வாங்கி, பெரிய டாக்டராகனும்" என்றாள் லதா. "நல்லா படிப்பியா" என்று கேட்டதற்க்கு சந்தோஷமாக தலையாட்டினாள் செல்வி. அங்கே வந்திருந்த மற்ற குழந்தைகளை பார்த்து அது உற்சாகமாகிவிட்டது. முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை நாங்கள் இருவரும் உச்சி முகர்ந்து முத்தமிட்டோம். அந்த பள்ளிக்கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தேன். 'முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி' - எனது பங்களிப்பில் புதிய வண்ணத்தில் பளிச்சென்று கட்டிடம் மின்னியது. ஒரே வாரத்துக்குள் என்னை நம்பி கொடுத்த வேலையை சிறப்பாக முடித்துவிட்டேன். .என்னை பொருத்தவரை நான் தனியே நின்று செய்த சாதனை இது. வயதான ஒரு ஆசிரியை குழந்தைகளை சாக்லெட் தட்டுடன் வரவேற்க, மற்றோரு ஆசிரியை குழந்தைகளை வகுப்புகளுக்கு அழைத்து சென்றார். என்ன ஒரு அற்புதமான தருணம். ஓரு கணம் சலனப்பட்டிருதால்...ஒரு திருடனாக, குற்றவாளியாக குழந்தை முன் நின்றிருக்க வேண்டும். சே....நினைக்கவே உடல் கூசியது எனக்கு. ஒரு பெரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியதுபோல உணர்ந்தேன். எனக்கு எப்படி அப்படி ஒரு எண்னம் தோன்றியது. உடல் கூசி நடுங்கியது. எந்த பள்ளியில் படித்தால் என்ன?. என் குழந்தையும் எதிர்காலத்தில் கண்டிப்பாக சாதிக்கும். நான் இருக்கிறேன்' என்ற நம்பிக்கையை குழந்தைக்கு கொடுத்துவிட்டால் போதும். ஆம்.....எம்.டி வேணுகோபால் என் மீது வைத்த நம்பிக்கையை போல. அலுவலகத்தில் என்னை அவர் அனைவருக்கும் முன்பாக பாராட்டியபோது, உலகில் நான் எதையோ சாதித்துவிட்ட உணர்வு. அவர் எனது தொழிலின் மீது வைத்த நம்பிக்கை, பொறுப்பு, அது கொடுத்த அபாரமான உத்வேகம்..... என்னை நானே உணர்ந்துகொண்ட பொன்னான நாட்கள். வாழ்க்கைக்கல்வி என்பது பள்ளி,கல்லூரிக்கு அப்பாற்ப்பட்டது என இந்த குறுகிய காலத்துக்குள் எனக்கு புரிந்துவிட்டது. "இன்னிக்கி ஒரு மணி நேரம்தான் க்ளாஸ். அதுக்குள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்துடாலம்ங்க: என்று என் நினைவுகளை கலைத்தாள் லதா. நாங்கள் இருவரும் கோவிலை நோக்கி நடந்தோம். முதல்முறையாக என மனதில் ஒரு பேரமைதி. இனம் புரியாத சந்தோஷமும். - - இன்பா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.