logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

nalangilli

சிறுகதை வரிசை எண் # 159


இருவர் “அவந்திகா... நீயும் நானும் இப்ப இருக்குற மாதிரியே எப்போதும் ஒண்ணா இருக்கணும். நமக்குள்ள சண்ட வராது. அப்படியே சின்னதா சண்ட வந்நாலும் நானோ இல்லனா... நீயோ முதல்ல பேசிடணும். நமக்கு புடிச்ச மாதிரி நாம வாழணும். கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். ஒன்னையும், என்னையும் இங்க ஒண்ணா சேத்ததுக்கு...” என்றாள் ஐஸ்வர்யா. “நான் உன் கூட இருப்பேன். நீ எதுக்கும் கவல... படாத... எதுக்கு இப்ப திடீர்ன்னு இப்படி பேசுற...” “இல்லடி... நைட்டு ஒரு கெட்ட கனவு கண்டேன்” “என்ன கனவு?” “நமக்குள்ள ஏதோ... சண்ட வந்து நீயும் நானும் பிரியுற போல...” “நிறுத்துடி... அப்படியொன்னு நடக்கவே நடக்காது முதல்ல.... நீ உன்ன நம்பு.” குறைந்த விலையில் கிடைக்கும் தின்பண்டங்கள், சிரிய பரிசு பொருட்கள், சில்லரை காசுகள், உணவு பரிமாற்றம் இதனோடு நிலவும் பள்ளிக்கால அன்பு அலாதியானதே... “எ ஐஸ்வர்யா வர்ற சனிக்கிழம டியூசன் கெடையாது. நாம தஞ்சாவூர் அரண்மனைய சுத்தி பாத்துட்டு வந்திடலாம்”. “வீட்டுல கேக்கனும் டி...” “உங்க அம்மா கிட்ட நான் பேசி கூட்டிட்டு போறேன்...” “அவுங்க தனியா என்ன எங்கேயும் அனுப்பமாட்டாங்க” “உன் கூட தான் நான் வறேனே... அப்புறம் என்ன?” “அத... சொல்லடி நாம ரெண்டு பேரும் பொண்ணா இருக்குறதால தனியா அனுப்பமாட்டாங்க. அப்படி அனுப்பினாலும் துணைக்கு என் தம்பிய கூட அனுப்புவாங்க...” “சரி... அழச்சிட்டு போவோம்” “ஒரு ஆளுக்கு டிக்கெட் எவ்வளவு?” “ஐந்து ரூபா...” “நீ உன் சைக்கிள்ள உன் தம்பிய அழச்சிட்டு வந்திடு... நான் என் சைக்கிள்ள வர்றேன். டிக்கெட் மூணு பேருக்கும் பதினைந்து ரூபாய். அரண்மனைய சுத்தி பாத்துட்டு வெளியில எலந்தப்பழம், வேர்க்கடல, பஞ்சுமிட்டாய், ஐஸ்க்ரீம் விப்பாங்க வாங்கி சாப்பிட்டு பக்கத்துல இருக்குற கிரவுண்ட்டுல பத்து ரவுண்டு சைக்கிள் ஓட்டி முடிச்சி வீட்டுக்கு வந்திடலாம்.” “காசு கேட்டா அம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலயே...” “நீ அவுங்ககிட்ட கேட்க வேணாம். நான் பாத்துகிறேன் வா...” “உனக்கு எதுக்குடி செரமம்” “செரமல்லாம் ஒண்ணுமில்ல...” “சனிக்கிழம ரெடி ஆகிடு போவோம்” “இல்லடி...” “நீ எதுவும் பேசாத, போகலாம் அவ்வளவு தான் சரியா...” “சரி...” இருவரும் பேசிக்கொண்டே பள்ளிக்கூட மைதானத்தின் கீற்று கொட்டகையில் அமைத்திருந்த சைக்கிள் ஸ்டேண்டிலிருந்து தங்களது சைக்கிளை எடுத்துக்கொண்டு அவரவர் வீட்டுக்கு போனார்கள். ஐஸ்வர்யாவின் தந்தை நகை அடகு சீட்டொன்றை தேடிக் கொண்டிருந்தார். அம்மாவோ... பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளுக்கு தேநீரும், பிஸ்கட்டும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள். எஸ்.சி.வி சேனலில் நடிகர் மோகனின் பாடல்கள் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது. “ஏ... ஐஸூ..... ஐஸ்வர்யா மாடிக்கு போய் காயப்போட்டிருந்த துணிய எடுத்துட்டு வா” “இப்ப தானம்மா வந்தேன்” “உன்ன இப்ப போக சொல்லல” “மூஞ்சி, கையி, கால கழுவிட்டு, டிரஸ் மாத்திட்டு அப்புறம் போய் எடுத்துட்டு வா” “சரிம்மா...” “டெய்லியும் இந்த பிஸ்கட்தானம்மா... வேற எதுவும் திங்கிறதுக்கு இல்லையாம்மா...” “நான் என்னடா பண்ணுறது... உங்க அப்பா சம்பாரிச்சி கொடுக்குற காசுல இததான்டா வாங்க முடியுது. இன்னைக்கு இத சாப்பிடு... நாளைக்கு உனக்கு வெங்காய பக்கோடா வாங்கி தாறேன்.” “அம்மா... எனக்கு” என்றாள் ஐஸ்வர்யா. “ஏ... அவன் சின்ன புள்ள கேட்குறான். நீயும்மாடி...” “நான் பத்தாவது தானே படிக்கிறேன். நானும் சின்ன பொண்ணுதாம்மா...” “நீ... சின்ன பொண்ணுதான். இருட்டுறதுக்குள்ள மாடியில இருக்குற துணிய எடுத்துக்கிட்டு வா...” “கொஞ்சம் பேசவிடமாட்டிங்களே...” நகை அடகு சீட்டை தேடி கண்டடைந்த ஐஸ்வர்யாவின் தந்தை “ம்மா... ஒரு மாசத்துக்கு நானூற்றி ஐம்பது ரூபாய் வட்டி. அப்ப பன்னிரெண்டு மாசத்துக்கு ஐயாயிரத்து நானூறு ரூபாய் வட்டி வருது. கையில இப்ப அவ்வளவு பணம் இல்லையே சொர்ணம்...” “நான் வேலைக்கு போகட்டான்னா... அதுக்கும் வேணான்னு சொல்றீங்க... நீங்க பாக்குற வேலைக்கு ஒத்த ஆளா நின்னு இந்த குடும்பத்த எப்படி காப்பாத்த முடியும்...” “உனக்கு மூட்டுவலி, மொழங்கால் வலி இருக்கு. கொஞ்ச நேரம் நின்னு சமையகட்டுல வேல செய்யுறப்பவே வலிக்குது... வலிக்குதுங்குற...” “நோய் நொடி இல்லாமிருக்கணும்னு தான் நெனக்கிறேன்... சரி... அந்த அலமாரி உள்ளார கல்லுவெச்ச தோடு இருக்கு அத... அடகு வச்சி இந்த நகைக்கு வட்டி கட்டிட்டு வாங்க.” “கோச்சிக்காத சொர்ணம்... நான் என்ன பண்ணுறது” “போங்க... போங்க... முதல்ல வேலய முடிங்க...” ............... “ஏ... அவந்திகா படிக்கிற வேலய பாக்காம பள்ளிக்கூடத்துலயிருந்து வந்த உடனே இப்படி டி.விய போட்டு உட்காந்திருக்க...” “ஒரு அரை மணி நேரம் பாத்துட்டு படிக்க போயிடுவேன்.” டென்த் படிக்கிற அத மறந்துடாத நானூத்தி ஐம்பதுக்கு மேல மார்க் வாங்கணும். கொறஞ்சதுன்னா... உனக்கு ஒண்ணு கூட வாங்கி தரமாட்டேன்” “வாங்கிடுவேன்” “டியூசன் போகலையா” “மிஸ்..... வெளியூர் போயிருக்காங்க. ரெண்டு நாள் லீவு.” “மாசாமாசம் ஃபீஸ் கரெக்ட்டா கொடுத்துற... நீ தான் சூதானமாயிருந்து படிச்சுக்கணும், தெரியாதத கேட்டு தெரிஞ்சிக்கணும் புரியுதா...” “புரியுதுப்பா...” “அம்மா எங்க?” “கடைக்கு” “நீ கூட போக வேண்யது தானே” “நான் வரேன்னு தான் சொன்னேன்...” “நீ வீட்டிலேயிருந்து டி.வி பாருன்னு சொல்லிட்டு போயிட்டாளா...” “அப்பா.....” “இந்த பையில தேங்கா, வாழப்பழம், அச்சுவெல்லம் இருக்கு. இத எடுத்து உள்ளார வச்சிடு. ஆறு மணி ஆச்சுன்னா வெளக்கு ஏத்தணும்னு தெரியாதா... மதமதன்னு. உட்காந்திருக்க போ... சாமிக்கு பூப்போட்டு வெளக்கேத்து” “இன்னைக்கு டி.வி பாத்த மாதிரி தான்” “என்ன முணுகுற” “ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல அப்பா...” காமாட்சி விளக்கில் புதிய எண்ணெய் ஊற்றி, திரிமாற்றி தீப்பெட்டியில் நெருப்பு குச்சி உரசி திரியில் பற்றவைக்கிற போது உதயமான சிறு மஞ்சள் வெளிச்சத்தில் பேரழகு பொருந்தியவளாக அவந்திகா இருந்தாள். கம்பியூட்டர் சாம்பிராணி, ஊதுவர்த்தி கொளுத்தி வீடெங்கும் வாசனை புகை பரவ செய்தாள். பிரேம் போட்ட புகைப்படத்திலிருந்த கடவுளையும், குபேரன், சாய் பாபா சிலைகளையும் தொட்டு வணங்கினாள். அவற்றிற்கு பூக்களை வைத்தாள். விபூதி, குங்குமம் எடுத்துக்கொண்டு போய் அப்பாவிற்கு கொடுத்தாள். “அப்பா... அம்மா வந்துட்டாங்க” “அவந்தி... அவந்தி...” “என்னம்மா...” “தோசை மாவு வாங்க மறந்துட்டேன். வாங்கிட்டு வாடா... என் செல்லம்ல...” “அம்மா... நான் படிக்கனும்” “ஐந்து நிமிஷத்துல வந்திடலாம் போடா... என் பட்டுல்ல...” “காசு கொடுங்க” “அக்கவுண்டுல வாங்கிட்டு வா...” ................ சனிக்கிழமை ஐஸ்வர்யா வீட்டுக்கு அவந்திகா வந்தாள். “என்னடி இன்னும் ரெடி ஆகலையா?” “இல்லடி” “ஏன்?” “அம்மா போக வேணாம்னு சொல்லிட்டாங்க” “ஏன்?” “காசு இல்லடி” “அய்யோ... காசும் வேணாம் ஒண்ணும் வேணாம்... நான் முப்பது ரூபாய் வச்சிருக்கேன். வா போகலாம்...” “அம்மா... அம்மா... அவந்திகா அரண்மனைக்கு போக கூப்பிடுறா...” “காசு தான் இல்லன்னு சொன்னேனே” “அவ... வச்சிருக்களாம்” “ஏன்ப்பா... இந்த வெயில் நேரத்துல அரண்மனைக்கு போறீங்க. நம்ம வீட்டுலேயே வெளையாடலாம்ல” “இல்ல ஆண்டி அரண்மனைக்கு போகணும்னு ஆசை. அப்பா அழச்சிட்டு போகமாட்டார். இந்த சான்ஸ்ச விட்டா... திரும்ப போக முடியாது. அடுத்தடுத்து எக்சாம், டெஸ்ட், டியூசன்னு வந்திட்டு இருக்கும்” சாமி மாடத்திலிருந்து பத்து ரூபாய் எடுத்து வந்து ஐஸ்வர்யாவிடம் நீட்டினாள் சொர்ணம். “ஆண்டி... நீங்க வச்சிக்கோங்க என்கிட்ட பணம் இருக்கு” “ஏன்ப்பா... உனக்கு செரமம்” “நான் எங்க அப்பாட்ட கேட்டுத்தான் பணம் வாங்கிட்டு வந்தேன்” “ஓ.....” ஐஸ்வர்யாவும், அவள் தம்பியும் ஒரு சைக்கிளிலும் அவந்திகா அவளது சைக்கிளிலும் புறப்பட்டு தஞ்சை அரண்மனையை வந்தடைந்தார்கள். இருவரும் இவ்வழியே பலமுறை கடந்தாலும் வீட்டில் இருக்கும் நபர்களின்றி இங்கே வருவது இதுவே முதல்முறை. “அக்கா... எனக்கு அந்த மாங்கா வேணும்” “ஆரம்பிச்சிட்டியா... இருடா...” “சொல்லுடா ராஜேஷ் மாங்கா வேணுமா” “ம் ம்ம்...” “வா... வாங்கலாம்” “ஏய்... அவனுக்கு வாங்கி கொடுக்காத...” “ஆசப்பட்டு கேட்டுட்டான்... விடு. இந்தாடா... ராஜேஷ் நல்லாயிருக்கா” “இருக்கு...” “எனக்கு வேணுமான்னு கேட்கமாட்டியா” “இந்தாக்கா... புடி... இந்தாக்கா...” “வேணாம்டா...” “பரவாயில்ல... சாப்பிடுங்க” “அந்த சின்ன மாங்கா மட்டும் குடு” அரண்மனையின் வெளித்தோற்றம் பிரமிக்க வைக்க கூடியதாக இருந்தது. வரலாற்று நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு நிறுத்தியது. வலுவான கட்டிடத்தின் உறுதி தன்மை வியக்க வைத்தது. நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட தஞ்சை அரண்மனை பிறகு மராத்திய அரசின் வசம் போனது. மராட்டியர்களின் கட்டிடக்கலை நுட்பம் அங்கே காணப்படும். அரண்மனைக்கு அருகிலயே சரஸ்வதி மஹால் நூலகம் இருக்கிறது. அங்கே பல மொழிகளின் ஓலைச்சுவடிகளும், மருத்துவம், இலக்கணம், சமயம், அறிவியல் சார்ந்த நூல்கள், பல மொழிகளின் கையெழுத்து பிரதிகளும் இருக்கின்றன. மூவரும் டிக்கெட் எடுத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தார்கள். சிற்பங்கள் கண்ணாடி பெட்டிக்குள் இருந்தன. சுவரோவியங்களை புரிந்துக்கொள்ள தாமதமானது. மன்னர்கள் பயன்படுத்திய ஆடை, அணிகலன்கள், மரத்திலான பொருட்கள், பீங்கான்கள், கைவினைப்பொருட்கள் இவற்றை பாதுகாக்க அரசாங்கத்தால் ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவந்திகாவும், ஐஸ்வர்யாவும் வியந்து, வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். “தொடக்கூடாது” என்ற கண்ணாடி பேழையை தொட்டுப்பார்த்தான் ராஜேஷ். அரண்மனையின் முதல்மாடியில் தரங்கம்பாடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொன்னூற்றி ஐந்து அடி நீளமுள்ள ராட்சச திமிங்கலத்தின் எலும்புக்கூடு இருந்தது. கடைசி மாடிப்பகுதியிலிருந்து பார்க்கும் போது தஞ்சை நகரம், பச்சை புல்வெளிக்கு மத்தியில் சிமெண்ட் கட்டிடங்கள், பூத்து குலுங்கி ரம்மியமாக காட்சியளித்தது. “அங்க பாருடி புறா...” “என்ன அழகு?” “நம்ம வீட்டுல எடுத்துட்டு போய் வளக்கணும்” “எங்க அப்பா ஒத்துக்க மாட்டாரே” “எங்க அப்பாவும் தாண்டி...” அரண்மனையை சுற்றி பார்த்து முடித்துவிட்டு சரஸ்வதி மஹால் செல்ல ஆசைப்பட்டாள் அவந்திகா. “இன்னொரு நாள் போலாம்டி... அரண்மனைய பாத்து முடிக்கவே அரை நாள் ஆகிடிச்சி” என்று ஐஸ்வர்யா சொல்ல “சரிடி” என்று கருத்தை ஏற்றுக்கொண்டாள் அவந்திகா. அரண்மனையிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒரு குகை வடிவ வளைவை கடந்த பின்னரே மெயின் ரோட்டுக்கு செல்ல முடியும். அப்படி அந்த குகை வடிவ வளைவை கடக்கும் போது ராஜேஷ் “அவந்தி” என்று கத்தினான். அக்குகையானது “அவந்தி… அவந்தி... அவந்தி...” என்று எதிரொலி ஏற்படுத்தியது. பதிலுக்கு அவந்திகா “ஏன்டா இப்படி பண்ணுற” என்றாள். அது “ஏன்டா இப்படி பண்ணுற... ஏன்டா இப்படி பண்ணுற... ஏன்டா இப்படி பண்ணுற” என்று எதிரொலித்தது. மூவரும் சிரித்துக்கொண்டே அக்குகை வளைவை கடந்தார்கள். ..................... அன்று காலை முதல் வகுப்பாக கணக்கு பாடம் நடந்தது. நேற்று சென்று வந்த அரண்மனை நிகழ்வில் நடந்த ஏதோவொன்றை ஐஸ்வர்யா அவந்திகாவிடம் சொல்ல, அவந்திகா வாய்விட்டு சிரித்துவிட்டாள். இதை கவனித்த ஜான்சி டீச்சர் “எ... பாடத்த கவனிக்காம என்னடி அங்க சிரிப்பு” “சும்மா மிஸ்” “என்ன சும்மா?” எங்க போனாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே போறிங்க, சேர்ந்தே வர்றிங்க... அவந்திகா நீ முத பென்ஜில உட்காரு, ஐஸ்வர்யா நீ மூனாவது பென்ஜில உட்காரு... இனிமே நீங்க சேர்ந்து உட்காரக்கூடாது” அவந்திகா அழ ஆரம்பித்துவிட்டாள். “எதுக்குடி அழற” “இல்ல மிஸ்” “உன்ன நான் அடிக்கவேயில்லையே...” அவந்திகா அழுவதை பார்த்தவுடன் ஐஸ்வர்யாவும் அழ ஆரம்பித்துவிட்டாள். “எ... என்ன பைத்தியக்காரின்னு நெனச்சிட்டீங்களா... எதுக்குடி அழறிங்க... சொல்லுங்க” பதில் கூறாமல் இருந்தார்கள். “ரெண்டு பேரும் கிளாஸ் ரூம விட்டு வெளிய போய் நில்லுங்க...” அச்சமயம் ரவுண்ஸ் வந்த ஹெட்மாஸ்டரிம் ஜான்சி டீச்சர் நடந்ததை விளக்கமாக எடுத்துக்கூறினார். அதை கேட்ட ஹெச்.எம் “இவுங்க படிப்பெல்லாம் எப்படி” என்றார். “நல்லா படிப்பாங்க சார். அதுல குறை சொல்ல முடியாது” என்று ஜான்சி டீச்சர் கூறினார். “அப்புறம் ஏன்? பிரிச்சி உட்கார வைக்கிறிங்க... ஒண்ணாவே உட்கார வையிங்க” என்று ஹெச்.எம் சொல்லிவிட்டு போனார். இரண்டு நாட்களாக வேலை செய்த கூலி வராததால் ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் வறுமை தலைதூக்க தொடங்கியது. “சொர்ணம் காசு கெடைக்கல... ஐம்பது ரூபாய் தான் இருக்கு... இத வச்சிக்கிட்டு இந்த மூணு நாளு குடும்பத்த நவுத்த பாரு” “என்னங்க சொல்றிங்க... புள்ளைங்க ரெண்டு இருக்கு, இந்த பணம் எப்படி பத்தும்?” “மூணு நாள் பொறுத்துக்க... வேற வேலைக்கு போயிடுவேன். சமாளிச்சிடலாம். பசங்ககிட்ட எதுவும் காட்டிக்காத...” “நாளைக்கு அவுங்களுக்கு ஸ்கூலுக்கு சோறு கிண்டி குடுக்க கூட அரிசி இல்லையே...” “லீவு போட சொல்லு...” “பத்தாவது படிக்கிற புள்ளைய எப்படி லீவு போட சொல்லுறது. படிப்பு முக்கியமுன்னு உங்களுக்கு தெரியாதா... இருங்க... சுசிலா அக்காட்ட கேட்டு பாக்குறேன்” “ம்... ம்... சரி கேளு” “யக்கா... யக்கா...” “சொல்லு சொர்ணம்” “அக்கா அது வந்து...” “வந்து... என்ன வந்து?” “யக்கா... அவரு வேலைக்கு போனாரு இன்னும் சம்பளம் தரல... ஒரு இருநூறு ரூபாய கடனா தரமுடியுமா... சீக்கிரம் கொடுத்துடுறேன்” “உள்ள வா” அவள் பீரோவை திறந்து ஐநூறு ரூபாய் கொண்டு வந்து கொடுத்தாள். “அக்கா இருநூறு ரூபாய் போதும்” “வச்சிக்க... உனக்கு காசு வர்றப்ப குடு...” “ரொம்ப நன்றிக்கா... உங்க உதவிய மறக்க மாட்டேன்” “பரவாயில்ல... அத வுடு” ................... அவந்திகா வீட்டில் அன்று புதிதாக தொலைபேசி கனைக்சன் கொடுத்திருந்தார்கள். 253428 என்பதே அந்த தொலைபேசி எண். “எ... மாப்ள வீட்டுல டெலிபோன் வச்சிருக்கேன்டா. இனிமே நீ லெட்டர் எழுதி போட வேணாம்... நாம போன்லையே பேசிக்கலாம்.” “அப்படியா... மாமா... எங்க அக்காட்ட குடு, தம்பிட்ட குடு, அவந்திகாட்ட குடு” என்று பேசினான் அவன். அப்போது அவந்திகாவிற்கு ஐஸ்வர்யாவிடம் போனில் பேச வேண்டும் போல் தோன்றியது. “ஐஸ்வர்யா வீட்டில் போன் இல்லையே.” மறுநாள் பள்ளியில்... “ஐஸ்வர்யா எங்க வீட்டுல போன் வாங்கியிருக்காங்க...” “ஓ... சூப்பர் டி” “உங்கிட்ட போன்ல பேசணும், உன் குரல போன்ல எப்படியிருக்குன்னு கேட்கணும்னு ஆசப்படுறேன்.” “பக்கத்து வீட்டுல போன் இருக்கு அவுங்க நம்பர் 281523. நீ நைட்டு கால் பண்ணு. ஆனா ரொம்ப நேரம் பேச முடியாது. ஒகே வா” “ஒகே” அன்று இரவு எட்டு முப்பது மணியளவில் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். “உன் குரலு நல்லா இருக்குடி போன்ல கேட்குறப்ப...” “உன் குரலு தான் நல்லா இருக்கு...” “ஹோம் ஒர்க் முடிச்சிட்டியா?” “இல்லடி” “நானும் இன்னும் முடிக்கல” “உன் தம்பி எங்க” “தூங்குறான்” “அதுக்குள்ளே வா...” “ஆமாம்... அவன் சாப்பிட்டவுடனே தூங்கிடுவான்” “எப்ப... படிப்பான்?” “காலையில சீக்கிரம் எழுந்திடிச்சி படிக்க ஆரம்பிச்சிடுவான்” “அப்பா எங்க?” “வீட்டுல” “அம்மாவ கேட்டதா சொல்லு” “சொல்றேன்டி” “நாளைக்கு ஸ்கூல பாப்போம்” “ம்... சரி டி” “குட் நைட்” “குட் நைட்” “வச்சிடட்டா” “ம்... வச்சிடு...” அன்று பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி, மேற்படிப்பு மற்றும் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும், அப்படி வெற்றி பெறுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசுவதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் கோபால கிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். அவரின் பேச்சை கேட்டு மாணவிகள் உத்வேகம் அடைய தொடங்கினார்கள். சிறந்த சொற்பொழிவாளரின் உரையை ஒத்ததாக அவரின் பேச்சு இருந்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தோல்வியடைந்த சில மாணவிகள், அடுத்த தேர்விற்கு ஆரோக்கியமாக செயல்பட அவரின் கருத்துரை சிந்திக்க வைத்தது. “தொடர்ந்து முயற்சிப்பதாலே உங்கள் எண்ணம் கைக்கூடும். இலட்சியம் இல்லாத வாழ்க்கை வெறும் வாழ்க்கை. தங்களின் திறமையை வெளிக்கொணர்ந்து நினைத்த இடத்தை அடைந்தவர்களில் உங்களை கவர்ந்த ஒருவரின் ஒழுக்கமான கொள்கைகளை முன் உதாரணமாக எடுத்து நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றால் நீங்கள் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெற்று உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். கல்வியால் நீங்கள் அடைய வேண்டிய இலக்கை சாத்தியமாக்க முடியும். உங்களின் குறிக்கோள் தெளிவாக இருக்க வேண்டும். கடின உழைப்பினால் மட்டுமே யாவும் கைக்கூடும். அதற்கு நேரத்தை சரியாக பயன்படுத்தவேண்டும்” என்று டாக்டர் பேசிய அப்பேச்சில் பல நன்மைகளை அறிந்தவாறு விடை பெற்று விலகினார்கள் மாணவிகள். அவந்திகாவும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக பழகுவதை கண்டவர்கள் பொறாமைப்பட்டார்கள். ஒரு சிறு செடி மெல்ல உயர்ந்து வருவதைப் போல அவர்களின் நட்பு புனிதத்தின் புனிதமாகயிருந்து தனித்துவம் பெற்றது. எதையும் எதிர்ப்பார்க்காத நட்பு. அந்த நட்பிலே மின்னிடும் பேரன்பு. அந்த பேரன்பின் நிழலில் எப்போதும் எந்த நேரத்திலும் இருந்தோங்கும் பாசப்பிணைப்பு. அந்த பாசப்பிணைப்பின் உந்துதலில் உயிர்த்தெழும் உறவு. அந்த உறவிலே கலந்தோங்கும் ஆத்மார்தம் உண்மையின் உண்மையென இருந்தது. “நான் ஒண்ணு கேட்கிறேன். தப்பா நெனைக்க மாட்டல்ல...” “கேளுடி” “நாம திக் ஃபிரண்ட்ஸ்சா இருக்கோம்...” “ஆமாம்...” “உனக்கு எப்ப கல்யாணம் பண்ணுவாங்க...” “இப்ப ஏன் அத கேட்குற...” “சொல்லுடி...” “தெரியலையே” “உனக்கு?” “எனக்கு மட்டும் எப்படி தெரியும்” “உனக்கு மேரேஜ் ஆகிடிச்சின்னா எங்கிட்ட பேசமாட்டல்ல. என்ன விட்டு பிரிஞ்சி போயிடுவல்ல” “முதல்ல கல்யாணம் ஆகுதான்னு பாப்போம்” “உனக்கு என்னடி கொறச்ச... நீ அவ்வளவு அழகாயிருக்க” “அப்படியா...” “ஆமாம்... டி...” “சொல்லு...” “என்ன சொல்லணும்...” “உனக்கு மேரேஜ் ஆகிடிச்சுன்னா நீ என்ன மறக்காம பேசுவியா?” “பேசுவேண்டி... நான் எப்போதும் போலவே எனக்கு கல்யாணம் ஆகிடிச்சின்னாலும் கண்டிப்பா உங்கிட்ட பேசிக்கிட்டு தான் இருப்பேன். நீ கவலப்படாத...” “என்னாலையும் உங்கிட்ட பேசாம இருக்க முடியாது புரிஞ்சிக்கோ...” “ஹம்...” ஐஸ்வர்யா சிரித்தாள். ................ “அவந்திகா, அவந்திகா, அவந்தி..... எந்திரிடி மணி எட்டு ஆகுது. இன்னுமா தூங்குற...” “இரும்மா... கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்… நைட்டு படிச்சிட்டு ஒரு மணிக்கு தான் படுத்தேன்” “சந்த போட்டுயிருக்காங்க... வா... போய்ட்டு காய்கறி, மளிக சாமான் வாங்கிட்டு வரலாம்...” “அப்பாவ அழச்சிட்டு போம்மா...” “அவரு காலையிலேயே வேலயா வெளியில போயிட்டாரு” “சன்டே கூட இரண்டு மணி நேரம் எக்ஸ்ட்ரா தூங்க விடமாட்டிறியேம்மா...” “ப்ளிஸ் டி... வா... எனக்கு யாரு இருக்கா... எல்லாமே நீ தானே... நீ இப்பவே இப்படி பண்ணுற... வயசான காலத்துல என்ன எப்படி பாத்துப்ப...” “அதெல்லாம் பாத்துப்பேம்மா... என் செல்ல அம்மால்ல நீ...” அவந்திகா வீட்டுக்கு பக்கத்திலேயே ஷேர் ஆட்டோ ஸ்டேண்ட் இருந்தது. ஷேர் ஆட்டோல ஏறி சந்த போட்டியிருக்கும் இடத்தில் இருவரும் இறங்கினார்கள். இரண்டு குச்சி பைகளை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை வாங்கினார்கள். பைகளும் நிறைந்துவிட்டது. “யம்மா... நீங்க வாங்குனது போதும். பை நெறஞ்சிடிச்சி வாங்க போகலாம்.” புதிய, புதிய பொருட்களை பார்க்க, பார்க்க அதை வாங்க வேண்டி வருகின்ற எண்ணம் தவிர்க்க முடியாத ஒன்று தானே... “அம்மா... எனக்கொரு ஹெல்ப்...” “என்னடி? ஏதாவது உனக்கு வேணுமா?...” “இல்ல...” “அப்புறம்...” “நம்ம ஐஸ்வர்யா இருக்கால்ல” “ஆமாம்...” “அவ வீடு இங்க தான் இருக்கு” “அதுக்கு?” “அவள போய் பாத்துட்டு அப்படியே நம்ம வீட்டுக்கு போயிடலாம்...” “இந்த ரெண்டு பைய தூக்கிட்டு எப்படிப்பா... வெயிட் ரொம்ப அதிகமா... இருக்கே...” “உங்களுக்காக... நீங்க சொன்னவுடனே மார்க்கெட் வந்தேல்லம்மா... ப்ளீஸ் மா...” “சரி... வா... எங்க இருக்கு அவுங்க வீடு” “பூ மார்க்கெட் தெருவுல” “நடந்தே போயிடலாம்ல” “போயிடலாம்” ஐஸ்வர்யா வீட்டு வாசலில் அவந்திகாவும், அவள் அம்மாவும் நின்றார்கள். “ஐஸ்வர்யா... ஐஸ்வர்யா...” “ஏய்... வாடி... வாங்கம்மா...” “மார்க்கெட் வந்தோம். அப்படியே உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தோம்” “அம்மா... அம்மா... அப்பா... அவந்திகா வந்திருக்கா...” “வாங்க... வாங்க... உட்காருங்க...” “எப்படியிருக்கிங்க” நல்லாயிருக்கோம்” “டேய்... ராஜேஷ்... ராஜேஷ் கடைக்கு போய் பால் வாங்கிட்டு வா...” “எதுவும் வேணாம்மா... நாங்க இப்ப தான் கரும்பு ஜூஸ் குடிச்சிட்டு வந்தோம்” இரு அம்மாக்களும், ஐஸ்வர்யாவும், அவந்திகாவும் ஒன்று சேர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசுவதை சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யாவின் தந்தை. காஃபி குடித்தார்கள். அவந்திகா... அவள் அம்மாவின் காதில் ஏதோ முணுமுணுத்தாள். “சரி... டி” பதிலுக்கு அவந்திகா அவள் அம்மாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். “எங்க வீட்டுக்கு வாங்க” “வேலயே சரியா இருக்குங்க” நேரம் கெடைக்கிறப்ப வாங்க. ஆனா வராம போயிடாதிங்க...” குச்சி பையிலிருந்த காய்கறிகள், மளிகை சாமான்கள் சிலவற்றை எடுத்து கீழே வைத்தாள் அவந்திகாவின் அம்மா. “அம்மா... எங்களுக்கு இருக்கு... நீங்க வச்சிக்கோங்க” என்றாள் ஐஸ்வர்யா. “பரவாயில்லப்பா வச்சிக்கோங்க, அடுத்த வாரம் சந்தைக்கு நாங்க வரவேண்டியிருக்கு...” “இல்ல.....” “அட புடிங்க...” வாங்கிக்கொண்டார்கள். முழு ஆண்டு தேர்வுகள் நெருங்க ஆரம்பித்தன. முன்பை விட பள்ளி நிர்வாகம் அதிகமான கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மாணவிகளின் முன்னே விதித்தனர். மாதிரி தேர்வுகள் நடந்தன. தீவிரமான முறையில் பாடங்களின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள் அவந்திகாவும், ஐஸ்வர்யாவும். இதனால் அவர்களின் அன்பு ஒருபோதும் ஒடிந்துபோனதில்லை. பத்தாம் வகுப்பில் சரியான மதிப்பெண் பெற்றால் தான் பிற்காலங்கள் நேர்த்தியாக அமையும் என்பதை தினந்தோறும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வந்தார்கள். சில நாட்களில் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகளும், காலை எட்டு மணிக்கு மாதிரி தேர்வுகளும் அதற்கு பின் வகுப்புகளும் நடைபெற்றன. ஒரு வழியாக முழு ஆண்டு தேர்வுகள் முடிந்தன. மே மாதத்தில் வெளியான மதிப்பெண் பட்டியலில் அவந்திகா ஐநூறுக்கு நானூற்றி என்பது மதிப்பெண்ணும், ஐஸ்வர்யா முன்னூற்றி நாற்பத்தி இரண்டு மதிப்பெண்ணும் பெற்றிருந்தனர். கணிதத்தையும், அறிவியலையும் முதற்பாடமாக படிக்க விருப்பப்பட்ட ஐஸ்வர்யாவிற்கு மேக்ஸ் பயாலஜி மற்றும் கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் சேர்க்க அனுமதி மறுத்துவிட்டார்கள். இதனால் ஐஸ்வர்யா வேறு பள்ளியில் கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் சேர முன்வந்தாள். மேக்ஸ் பயாலஜி பிரிவில் சேர மறுத்த அவந்திகாவை கட்டாயப்படுத்தி இதே பள்ளியில் படிக்கச்சொன்னார் அவளின் தந்தை. சந்திப்புகள் குறைந்து போன இருவரின் நட்பு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தொலைப்பேசியிலும் அவ்வப்போது மலர்ந்தது. இவ்வுலகில் நீடித்த அன்பொன்றை காண விருப்பம் இந்த காலங்கள், சூல்நிலைகள், தேவைகள், கனவுகள் நம்மை இடம் மாற, தடுமாற வைத்துவிடுகின்றன. - நலங்கிள்ளி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.