logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்

மா.பாலசுந்தரம்

சிறுகதை வரிசை எண் # 101


சாமியாடி... ஆ...ஏய்... நான் தாண்டா ஆத்தா வந்திருக்கேன். கண்ணிரண்டும் அகல விரிய கருவிழி சிவப்பாக நாக்கத் துருத்திக்கிட்டு, விரிச்சுப் போட்ட தலைமுடிய ஆட்டிக்கிட்டு வட்டம் போட்டா குப்பாத்தா! இரண்டு கைகளையும் ஒன்றுசேர்த்து உடம்புக்குள்ள அருள் இறக்கி அலறல் சத்தத்துடன் எழுந்து எழுந்து உக்கார்ந்தாள் குப்பாத்தா! வேப்பிலைய கையில் அள்ளி வாய்க்குள் திணிச்சிக்கிட்டு ஊறவைச்ச அரிசியத் தின்கிற மாதிரி மென்று மாவாக்குனா குப்பாத்தா.. விபூதியைக் கையில் அள்ளி ப்பூ என்று ஊதி எங்கும் விபூதி மூட்டத்தை ஏற்படுத்தினாள் குப்பாத்தா... வட்டப் பெரிய பொட்டும் நீட்டிப் போட்ட கண்மையும் அவள ஒரு ஆத்தாவா அடையாளம் காட்டும். ஈரக்குலய நடுங்க வைக்கும் அவளின் அகோரச் சிரிப்பு கேட்பவர் நாக்கு ஈரத்தையும் உலரவைக்கும்.ஐம்பத்தோரு எலுமிச்சம்பழம் கோர்க்கப்பட்ட மாலைய கழுத்துல மாட்டிக்கிட்டு மஞ்சள் சேலய உடுத்திக்கிட்டு மஞ்சத்தண்ணிய அள்ளிக் குடிச்சிக்கிட்டு புலித்தோல் மேல ஒய்யாரமா உட்கார்ந்திருப்பாள். சுடுகாட்டில் எடுத்துவந்த பதினோரு மண்டைஓடு அவளச் சுத்தி அமர்ந்திருக்கும்.அவள் சொல்லப் போகும் குறிக்கு அதுக தான் பாதை சொல்லும். நாயோட கால் எலும்பக் கையில் வைச்சுக்கிட்டு ஒவ்வொரு மண்டைஓடாத் தட்டிக்கிட்டு முன்னால உட்கார்ந்திருக்கும் அரைப்பைத்தியங்களுக்கு அருள்வாக்கு சொல்வா குப்பாத்தா... செவல்பட்டி கிராமத்தில் கண்மாய் கரையோரம் குப்பாத்தா கோடாங்கி ஆபீஸ். ஆபீஸ் முழுவதும் சாமிபடம். ஊரு உறங்குன உடனே அவளோட ஆபீஸத் திறந்திடுவாள்.ஆந்தையின் அலறல் சத்தமும் நாயின் ஊளைச்சத்தமுமே அவ ஆபீஸ் திறந்ததுக்கான அறிகுறி.குப்பாத்தா மாதிரி குறி சொல்ற கோடாங்கி இந்த ஏரியாவிலேயே கிடையாது என்பது கிராமத்து மக்கள் நாக்கில் சுரக்கும் தினசரி செய்தி. டேய்... பாவம் பண்ணிட்ட. ஆத்தாவ மறந்துட்ட. ஆத்தாவுக்கு செய்ய வேண்டியத செய்யல.. அதான். உன் மகளப் பேயா பிடிச்சு ஆட்டுறா. அவள் மனம் குளிர்ந்தாத்தான் உன் மகளுக்கு சரியாகும்.செய்யலைன்னா உன் மகளக் காவு வாங்கிடுவா... அய்யோ.. ஆத்தா எங்கள மன்னிச்சிடு.. நான் என்ன செய்யணும்னு சொல்லு.. உடனே செஞ்சிடறோம் என்றான் அரைப்பைத்தியத்துடன் வந்த முழுப்பைத்தியம்.சரி! ஒரு ஆளுயர மாலை, வெத்தலை பாக்கு, பழம், நாட்டுக்கோழி, அவிச்சமுட்டை இருபத்தொன்னு, ஐநூத்து ஒன்று ரூபா.. இதெல்லாம் எனக்குப் படையலா கொடுக்கணும். .இதையெல்லாம் வர்ற அமாவாசைக்குள்ள செஞ்சே தீரணும். அப்பத்தான் உன் மகளைப் பிடிச்ச பேய் ஓடும் என்றவளாய் சாமியாடி முடித்தாள் குப்பாத்தா... காலை பதினோரு மணியாச்சு... இன்னும் இவங்க கடையத்திறக்க மாட்டேனுங்கறாங்களே... ச! இவங்கள எல்லாம் எண்ணெய் சட்டியில போட்டுத்தான் வறுக்கணும். அப்பத்தான் சரிப்பட்டு வருவானுங்க.மனுசன் பொழுது விடிஞ்சதுல இருந்து நாயா வந்து காத்துக்கிடப்பானேன்னு அறிவு வேணாம்.. யாரு அது? அப்பா.. சாமி.. வந்துட்டியா...வா! சீக்கிரம் கடையத்திற. உனக்காக ஒரு மனுசன் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்குறது.இந்தா! நூத்திமுப்பது ரூபாய்.ஒரு குவாட்டர் பிராந்தி கொடு என்றான் மாடசாமி... பொழுது விடிஞ்சா போதும்.சூரியன் வருதோ இல்லையோ? நீ வந்துடற. இந்தா உன் சரக்கு.. கொடு.. கொடு! வாங்கிக் கொண்டு அருகிலிருக்கும் ராமுமச்சான் கடைக்கு ஓடினான் மாடசாமி.. சேவல் கொண்டையத் திருகிற மாதிரி பாட்டில் மூடியத் திறந்து சர்பத் கிளாஸில் ஊத்தினான். நைனா கடை சோடா கொடு.அதான் சுர்ருன்னு பிடிக்கும்.தொட்டுக்க மாமியா ஊறுகாய்.. ஆ. அப்படித்தான். என்றவன் வாய்க்குள் வைத்து உறிஞ்சியதில் குவாட்டர் காலியானது. டே! நான் தாண்டா! மாடசாமி வந்திருக்கேன், என்று அலறினான்.இதுவரை மல்லிகையாய் இருந்த அவனது கண்கள் கனகாம்பரமாய் காட்சியளித்தன.போதை தலைக்கேற தலைமுடியச் சிலுப்பிக்கிட்டு ராமுமச்சான் கடைய ஒரு வட்டம் போட்டான். உப்புக்கடலைய வாய்க்குள்ள திணிச்சு அரைச்சு மாவாக்கி தூ எனத் துப்பினான். அவனது சகாக்கள் ஒரு அஞ்சுபேரு. முழு போதையில தலை தொங்க மண்டைஓடாய் காட்சிஅளித்தனர்.அந்த மண்டை ஓடுகள் புடைசூழ பசாருக்குள் நடந்துவந்தான். போதைக்கு அவனது கை கால் கட்டுப்பட இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து ஒரு தள்ளாட்டம் போட்டான் மாடசாமி.தெருவில் எழுந்து எழுந்து உட்கார்ந்தான். வாயில் சிகரட்டை வைத்து ஒரு இழுத்து புகை மூட்டத்தை ஏற்படுத்தினான் மாடசாமி. திடீரென கால் இடறிக் கீழே விழுந்தவன் நெற்றியில் கல் குத்திட ஏற்பட்ட ரத்தக்காயம் பெரிய வட்டப் பொட்டாய் அமைந்தது. தனது இரண்டு செருப்புகளையும் மாலையாக மாட்டிக்கிட்டு ஊருக்குள் நுழைந்தான்.சட்டென தூரத்தில் ஒரு குரல். டேய். மாடசாமி என்கிட்ட ஐநூறு ரூபாய் வாங்கி ஒருவாரமாச்சு.காசு கொடுக்கணும்னு நெனப்பு இல்லை. தினமும் தண்ணி அடிக்கத் தெரியுது. காசக் கொடுக்கத் துப்பு இல்லை.நாளைக்குக் காசு வரலேன்னா உன்னைக் காவு வாங்கிடுவேன்.பாத்துக்கோ! என்றபடி கடந்து சென்றது அந்தக்குரல். போதையில் முழுப் பைத்தியமான .வன் மூளையும் பூச்சியமானது. இடறி விழுந்தவன் மண்ணுல புரண்டு கிடந்தான். "தாயைப் போல பிள்ளை; நூலைப்போல சேலை"! பகலில் மகன் சாமியாடுகிறான். இரவில் ஆத்தா சாமியாடுகிறாள். "சரியான சாமியாடி குடும்பம் டோய்" என்ற வார்த்தை ஊரார் நாக்கில் சுரக்கும் அன்றாடச் செய்தி! *மா.பாலசுந்தரம்*

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.